Monday, 25 December 2023

The Element Chapter 4 - The Deluge

The Element


Chapter 4 - The Deluge 


தூங்கிய பின் எத்தனை முறை மின் வெட்டு ஏற்பட்டது என்று தெரியவில்லை. அல்லது வெட்டப்பட்ட இணைப்பு மீளவில்லையா என்றும் தெரியவில்லை. இரவில் முழிப்பு வந்த போது மழை ஒரே ராகத்தில் பாடிக்கொண்டிருந்தது. 


காலை 5 மணி அளவில் house owner கீழே ஏதோ பேசிக்கொண்டிருப்பது கேட்டது. அப்போதும் மழை பெய்துகொண்டிருந்தது. 


நான் கீழே சென்று பார்த்தேன். ஒரு மணி நேரத்திற்கு முன் இந்த கோட்டில் கிடந்தது இப்போது இந்த கோட்டில் கிடக்கிறது என்று மழை நீரின் அளவை காலை வைத்து தொட்டு காட்டினார். 


அடுத்த கோடு தாண்டினால் தண்ணீர் வண்டிகளை நிறுத்தி வைத்திருக்கும் இடத்திற்கு வந்து விடும். 18ம் தேதி காலையில் இருந்து மழை அருவி மாதிரி இறைந்து கொண்டிருந்தது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சென்று தண்ணீரின் அளவை பார்த்துவிட்டு வண்டிக்கு பிரச்சினை இல்லை என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிவிட்டு வீட்டிற்குள் வந்துவிடுவேன். 


Cricket Score, பங்குச்சந்தை நிலவரம் பார்ப்பது போல மழை அளவை குறித்து கொண்டிருந்தேன். 


குடை பிடித்துக்கொண்டு வீட்டின் மாடியில் இருந்து சுற்றி பார்த்தால் நீர் அனைத்து குழிகளையும் நிரப்பி சாலையை நிரப்பி வீடுகளை நிரப்பிக் கொண்டிருந்தது. 


சிறு துளி பெருவெள்ளம் என்பது இது தானா? என்று மண்டைக்குள் சிந்தனை வேறு ஓடிக்கொண்டிருந்தது. கடல் கிழக்கே இருக்கிறது. இந்த தண்ணீர் மேற்கில் இருந்து தானே வருகிறது. அப்படியென்றால் கடல் நீர் ஊருக்குள் வந்துவிடவில்லை. ஆனாலும் ஓரிரவில் பெய்த மழைக்கு இப்படி தாமிரபரணி தெருவில் ஓடும் என்பது நம்ப முடியாததாகவும் இருந்தது. 


கொரோனா காலத்தின் ஆரம்பத்தில் மக்கள் ஒரு வித  கொண்டாட்ட மனநிலையில் இருந்தனர். கறி சாப்பிட்டு, கதை பேசி, இணையத்தில் அளவளாவி என்று குஷியாக இருந்தனர். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கதி கலங்கிப்போய் கிடந்தனர். 


அது போல 18ம் தேதி காலை முதல் அக்கம் பக்கத்தினர் மழையில் நனைந்தபடி முழங்காலுக்கு மேலே ஓடிய தண்ணீரில் வடக்கு தெற்காக தெருவில் நடந்து கொண்டிருந்தனர். என்னது இவனுங்க theme park வந்த மாதிரி இவ்வளவு jollyயா இருக்காங்க என்று பயந்தபடி பார்த்துக்கொண்டிருந்தேன். 


No comments:

Post a Comment