ஆய்த எழுத்து படத்தில் பாரதி ராஜா நடித்த அரசியல் வாதி கதா பாத்திரம் இந்தியா ஏன் வடக்கு பக்கம் வீங்கியும் தெற்கு பக்கம் சுருங்கியும் இருக்குன்னு தெரியுமா? என்று கேட்கும். அது வரை படத்தின் கோளாரோ பூகோள கோளாரோ அல்ல. பொருளாதார கோளாறு என்று ஒரு தர்க்கத்தை சொல்லும்.
ஆனால் கொஞ்சம் விவரம் அறிந்தவர்களுக்கு தெரியும். நான்கு தென்னக மாநிலங்களும் பல வகையிலும் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட பல மடங்கு சிறந்தவை என்று. இந்த நான்கு மாநிலங்கள் கட்டும் வரியில் பெரும்பகுதி வட இந்திய மாநிலங்கள் நலனுக்கு செலவிடப்படுகின்றன என்பதை பார்த்தால் அந்த அரசியல் வாதி கதா பாத்திரம் சொல்வது உண்மை தானோ என்றும் தோன்றும்!
2019ம் ஆண்டில் உலகமே பொருளாதார சரிவை சந்தித்துக்கொண்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன. திருப்பூர் பின்னலாடை, வாகன உற்பத்தி தொழில் நசிந்து விட்டதாக அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. அரசாங்கம் Reserve வங்கி பணத்தை எடுத்து செலவழிப்போம், முதலீடு செய்வோம் என்று சொல்கிறார்கள். விதை நெல்லை எடுத்து விதைக்கலாம், விற்று திங்கப்போகிறேன் என்றால் என்ன அர்த்தம்? என்று எந்த ஊடகமும் கேட்கவில்லை.
வேலை இழந்தவனின் நிலை என்ன? அவனுடைய குடும்பத்தின் நிலை என்ன? அவர்கள் சேமிப்பு எத்தனை நாள் அவர்களை காப்பாற்றும்? இப்படி வேலையில்லாத ஒரு குடும்பத்தலைவர், அவருடைய குடும்பத்தை பற்றிய கதையே Parasite என்னும் South Korea திரைப்படம்.
Snow Piercer, Okja என்று இரண்டு சர்வதேச படங்களை இயக்கி விட்டு மீண்டும் ஒரு முழுநீள Korean படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் Bong. இவருடைய Memories of Murder உலக பிரபலம். Hollywoodற்கு இரண்டு படங்களை எடுத்திருந்தாலும் அதில் அவர் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை. அதனாலேயே அந்த படங்கள் Studio முதலாளிகளால் பெரிய அளவிற்கு விளம்பரம் செய்யப்படவில்லை என்று நினைக்கிறேன். Netflix காக Okja எடுத்து Netflix Cinema trendஐ தொடங்கியவரும் இவர் தான்.
Parasite என்பது இங்கே ஒன்று/ஒருமை அல்ல. ஒற்றை மைய கதா பாத்திரத்தை சுற்றி எடுக்க பட்ட படமல்ல. ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் அவர்கள் பிழைப்பிற்காக செய்யும் தகிடு தத்தங்கள் தான் படம்.
கொரியா அல்லது உலக அளவில் உள்ள சமூக ஏற்றத் தாழ்வு என்பது எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை படத்தில் காணும் நாம் கொஞ்சம் அரண்டு தான் போவோம்.
படத்தின் முதல் காட்சியில் wifi தேடி வீட்டின் மூலை முடுக்கெல்லாம் அலைகிறான் Kevin. அப்பா சொல்லும் யோசனையை தொடர்ந்து Toilet இருக்கும் அறையில் wifi கிடைப்பதை கண்டு பிடிக்கிறான்.
இந்தியாவில் data மிக மலிவாக கிடைப்பதாக பிரதான சேவகன் புருடா விட்டுக்கொண்டிருக்கிறார். அதற்கு பின்னால் உள்ள அரசியல் என்றாவது ஒரு நாள் வெளியே வரத்தான் போகிறது. Parasite படத்தில் எல்லோரும் நல்ல phone வைத்திருக்கிறார்கள் ஆனால் data card போட பணம் இல்லை அல்லது இருக்கும் பணத்தை அதற்கு செலவழிக்க முடியாது என்னும் நிலை.
இப்படி பொருளாதார மந்த நிலை ஏற்படுவதற்கு காரணம் என்ன? அடித்தள மக்கள் மிக அதிக பட்ச உடல் உழைப்பை அளித்தும் ஏன் அவர்களின் பொருளாதார நிலை தலைமுறைகளாக மாற்றம் இல்லாமல் இருக்கிறது? அம்பானி, அதானி வாழும் இதே நாட்டில் தான் நாமும் வாழ்கிறோம் ஆனால் கடந்த 30 ஆண்டுகளில் அவர்களின் சொத்து மதிப்பு எத்தனை மடங்கு வளர்ந்திருக்கிறது நம்முடைய சொத்து மதிப்பு எத்தனை உயர்ந்திருக்கிறது? அப்படியென்றால் நாம் உழைக்க வில்லையா? பணம் வைத்திருப்பவரிடம் மேலும் பணம் சேரும் இந்த பொருளாதார அமைப்பு யாருடைய ஏற்பாடு?
கால் காசு வருமானமாக இருந்தாலும் கவர்மெண்ட் காசு ஆக இருக்க வேண்டும் என்று ஒரு மக்கள் மொழி உண்டு. இந்தியா போன்ற நாட்டில் அரசு வேலைகளை மக்கள் பெரிதும் விரும்புவதற்கு காரணம் அதில் உள்ள உத்திரவாதம், சலுகைகள் தான். பணியின் போது உயிரை விட்டால் குடும்பத்தில் வேறொரு நபருக்கு பணி வழங்கப்படும். இது போல நிறைய.
தனியார் துறையில் வேலைக்கு உத்திரவாதம் இல்லை. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டியது தான். இது எதுவும் இல்லாமல் கொத்த வேலை, சமையல் வேலை என்று இது போல ஆயிரக்கணக்கான வேலை செய்பவர்கள் வெறும் உதிரிகள் ஆக்கப்படுகிறார்கள். போதிய வருமானம், சேமிப்பு எதுவும் இல்லாமல் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக அவர்கள் வாழ்க்கை அமைந்து விடுகிறது.
Parasite படத்தில் இப்படி வறுமையில் இருக்கும் குடும்பம் கிடைத்த வேலையை செய்துகொண்டு காலம் தள்ளிக்கொண்டிருக்கிறது. அதில் இளைய மகனுக்கு ஒரு பணக்கார வீட்டு பெண்ணிற்கு ஆங்கிலம் சொல்லித்தரும் வாய்ப்பு நண்பனின் மூலமாக கிடைக்கிறது. வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளும் Kevin அந்த வாய்ப்பை குடும்பத்தின் வாய்ப்பாக மாற்றுகிறான்.
இது போன்ற கதை தமிழ் சினிமாவில் கூட வந்திருக்கிறது. எனக்கு Borgman என்ற ஐரோப்பிய சினிமாவும் நினைவிற்கு வந்தது. Kevinனின் குடும்பம் பொய் சொல்லாமல், நேர்மையாக தான் வாழ வேண்டும் என்றால் பட்டினியால் தான் சாக வேண்டும். இங்கே அவர்கள் சில பொய்களை சொல்லி வருமானத்திற்கு வழி செய்கிறார்கள். சில சதிகளை செய்து வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள்.
நம்மூரில் Caste Conflict பற்றி மட்டுமே பேசுகிறோம். ஆனால் இப்போது அதை விடவும் Class Conflict தான் அதிகம். நம்புவதற்கு கொஞ்சம் கடினமாக தான் இருக்கும். ஒரு சூப்பர் மார்க்கெட், ஜவுளி கடை, தொழிற்சாலை வைத்திருக்கும் முதலாளி அவருடைய சாதி ஆட்களை வேலைக்கு வைப்பார் ஆனால் சமமாக மதிக்க மாட்டார். எக்காரணம் கொண்டும் அவருடைய பண வசதியை விட குறைவான வசதியுடைய தன்னுடைய சாதியில் திருமண உறவை ஏற்படுத்திக்கொள்ள மாட்டார்.
மேலே செல்ல செல்ல சாதி இல்லை என்பார்கள் ஆனால் நுட்பமாக இந்த class conflict இருந்து கொண்டு தான் இருக்கும். அது பல வகைகளில் வெளிப்படும். Parasite படத்தில் அது காணக்கிடைக்கிறது. பணக்கார வீட்டின் நால்வரும் Kevin வீட்டை சேர்ந்த நால்வருக்கும் இடையில் வரும் முரண்பாடுகள் அதை காட்டிக்கொண்டே இருக்கின்றன.
Kevin வீட்டை சேர்ந்த நால்வரும் எத்தனை நடித்தாலும் அவர்களிடம் உள்ள சில விஷயங்களை மாற்ற முடியவில்லை. இதில் அதிகம் பாதிக்கப்படுவது Kevinனின் தந்தை தான். அவர் ஏழை தான் ஆனால் அவருக்கு இருக்கும் ஒரு fine sensibility தொடர்ந்து அவமதிக்கப்படும் போது அவர் தன்னிலையை இழந்து விடுகிறார்.
இந்த Class Conflict என்பது உணவு, பழக்க வழக்கம், ரசனை, பயன்படுத்தும் மொழி, ஏன் perfume வரை நீள்கிறது. இது ஒரு வகையான நவீன தீண்டாமை. Branded பொருட்கள் மட்டுமே பயன்படுத்துவோர் vs இந்த பொருளுக்கு இவ்வளவு தான் செலவு செய்ய முடியும், இந்த பொருளுக்கு பணம் செலவு செய்ய முடியாது என்று வாழ்வோர் என்று ஒப்பிட்டு பார்க்கலாம்.
Parasiteல் அவல நகைச்சுவை அல்லது அபத்த நகைச்சுவை காட்சிகள் அபாரமாக அமைந்துள்ளன. கரப்பான், எலி போன்ற உயிரினங்கள் மனிதர்கள் நடமாட்டம் குறைந்த உடன் சுதந்திரமாக தெருக்களில், வீடுகளில் வலம் வரும். அது போல Kevin குடும்பத்தை சேர்ந்த நால்வரும் ஒரு இரவில் கூடி அரட்டை அடிக்கும் போது அவர்களுடைய பகற்கனவுகள் என்னென்ன என்பதை பகிர்ந்து கொள்கிறார்கள்.
இப்படி சுதந்திரமாக உலாவும் கரப்பான், எலி போன்றவை மனித காலடி சத்தம் கேட்டவுடன் ஓடி ஒளிந்து கொள்ளும். அவற்றின் மறைவிடத்தை அத்தனை எளிதில் கண்டு பிடிக்க முடியாது. அது போன்ற ஒரு மறைவிடம் தான் Parasite படத்தின் இரண்டாம் பாதியை ஒரு surrealistic படமாக மாற்றுகிறது.
Parasite என்று நாம் Kevin குடும்பத்தை மட்டும் அழைக்க முடியாது. அவர்கள் வேலை பார்க்கும் Park குடும்பமும் ஒரு வகையில் Parasite குடும்பம் தான். இவர்கள் எந்த அளவிற்கு அவர்களை சார்ந்து வாழ்கிறார்களோ அதே அளவிற்கு அவர்கள் இவர்களை அல்லது உழைக்கும் மக்களை சார்ந்து வாழ்கிறார்கள்.
கடன் வாங்கி திருப்பி செலுத்தாத நபர்களை Debtor's Prisonல் அடைத்ததாக British History படிக்கும் போது தெரிய வருகிறது. எனக்கு தெரிந்த யாரும் கடனை செலுத்தாமல் சிறைக்கு சென்றது இல்லை ஆனால் மல்லையா போன்ற நபர்கள் கடனை திருப்பி செலுத்தாமல் சொகுசு வாழ்க்கையில் நீடிக்கிறார்கள் என்பது கண்கூடு.
Kevin குடும்பத்தின் ஆதார சிக்கல் Kevinன் தந்தை கடன் வாங்கி செய்த தொழில் தோற்று போனதில் தான் இருக்கிறது. ஆனால் அரசு மற்றும் வங்கிகள் இப்படி குருங்கடன் வாங்கியவர்களிடம் காட்டும் கண்டிப்பை பெருங்கடன் வாங்கியவர்களிடம் காட்டுவதில்லை. Reserve வங்கி பணத்தை எடுத்து மேலும் கடன் கொடுக்கவும் தயாராக உள்ளனர்.
இப்படி பல விஷயங்களை விவாதிக்க இடைவெளி உள்ள படம் Parasite. இந்த அரசியல், பொருளாதார ஏற்றத்தாழ்வு, வர்க்க பேதம் என்று விவாதிக்க தெரியாத ஒரு சினிமா பிரியர்க்கு மிகவும் பிடித்த படமாக இருப்பதற்கான அத்தனை சுவாரசியமான அம்சங்களும் படத்தில் உள்ளன.