Saturday, 7 November 2020

Birds of Passage - ரத்த சரித்திரம்

போதை பொருட்களை விற்று பெரும் பணக்காரர்களாகி பின் அழிந்து போகும் மனிதர்களை பற்றிய கதைகள் எப்போதுமே விறுவிறுப்பானவை. மிக மிக சராசரியான வாழ்க்கை வாழும் பெரும்பாலான மனிதர்களுக்கு இவ்வகை குற்றக்கதைகள் ஒரு வகை vicarious pleasure ஐ அளிக்கின்றன. Breaking Bad series ன் படைப்பாளி Vince Gilligan "Be regular and orderly in your life, so that you may be violent and original in your work" என்று பிரெஞ்ச் எழுத்தாளர் Flaubert சொன்னது தனக்கு பொருந்தும் என்கிறார். 

ஒரு படைப்பாளிக்கு அது பொருந்தும் என்னும் போது வாசகனுக்கும், பார்வையாளனுக்கும் அது பொருந்தும். ஒரே சீராக பயணிக்கும் நவீன வாழ்க்கையில் இது போன்ற கதைகள் கொஞ்சம் சுவாரசியத்தை கொண்டு வருகின்றன. அதே சமயம் நமக்கு பயத்தையும், படப்படப்பையும் நம்முடைய வாழ்க்கை எத்தனை பாதுகாப்பானது என்கிற உணர்வையும் அளிக்க தவறுவது இல்லை. 

The Godfather திரைப்படம் Gangster Genre ல் ஒரு  bench மார்க் படம். அதன் reference இல்லாமல் ஒரு Gangster படம் எடுக்க முடியாது. அதில் போதைப்பொருள் தொழிலில் தனக்கு உடன்பாடு இல்லை என்று அதை செய்ய மறுக்கும் Vito Corleone பல இழப்புகளுக்கு பின் தன்னுடைய குடும்பத்தின் அனுமதியை அத்தொழிலுக்கு  அளிக்கிறார். 

Al Pacino நடித்த Scarface எந்த பாசாங்கும் அற்ற ஒரு Gangster படம். "He loved the American Dream  With a Vengeance" என்பது தான் படத்தின் tag line. கதா நாயகன் கியூபா வில் இருந்து அமெரிக்கா வந்து அங்கே போதைப்பொருள் தொழிலில் பெரும்பணம் ஈட்டி பின் தொழில் தொடர்புகளை பகைத்துக்கொண்டு மாண்டு மறையும் கதை. 

இதை போல எதிர் கதாநாயகனை மையமாக கொண்ட, போதைப்பொருள் விற்பனையை பின்புலமாக கொண்ட பல படங்களை சுட்டிக்காட்ட முடியும். American Gangster முதலில் நினைவுக்கு வரும் படம், Maria Full of Grace, Blow, American Made போன்றவை மற்ற படங்கள். இவற்றுள் பெரும்பாலானவை Based on a True Story என்பது இவற்றுக்கு கூடுதல் கவர்ச்சி தருகிறது.  

Netflix வெளியிட்ட Narcos என்னும் வலைத்தொடர் சர்வதேச பார்வையாளர்களை கொண்டுள்ளது. அதன் முதல் இரண்டு season கொலம்பியா வில் வாழ்ந்த Drug Lord Pablo Escobar பற்றியது. 

போதைப்பொருள் பற்றிய Hollywood படங்களில் அவை கொலம்பியா வில் இருந்து வந்ததாகவே காட்டப்பட்டு வந்தது. பின்னர் Mexico. Breaking Bad TV series ல் அமெரிக்க போதைப்பொருளுக்கு போட்டியாக மெக்ஸிகோ நாட்டு போதைப்பொருள் cartel இருப்பதாக வருகிறது. அல்லது அவர்களுக்கு போட்டியாக இங்கே இவர்கள் கடை திறக்கிறார்கள். 

இப்படி என்றென்றைக்கும் கதைக்கான பின்புலத்தை தரும் போதைப்பொருள் வணிகம் எப்படி தொடங்கியது என்பதை ஒரு ஆவணப்பட தன்மையோடும், பழங்குடி ஆசார, கலை, நம்பிக்கைகளோடும் சொல்லியிருக்கும் படம் தான் Birds of Passage. 

வருடம் 1968. கொலம்பியா வில் உள்ள Wayuu என்னும் பழங்குடி மக்கள் வாழும் பகுதி. வானம் பார்த்த பூமி. நம்ம ஊர் கரிசல் காடு போல இருக்கிறது. மேய்ச்சல் தான் பிரதான தொழில். இங்கே வாழும் மக்களின் ஒரு பண்பாட்டு நிகழ்ச்சியுடன் படம் தொடங்குகிறது. 

Wayuu இனத்தின் Pushaina எனும் கிளை பிரிவை சேர்ந்த Ursula எனும் பெண்ணின் மகள் Zaida பருவமடைந்து திருமணத்திற்கு தயாராக இருக்கிறாள் என்பதை அறிவிக்கும் சடங்கு அது. கதையின் நாயகன் Rapayet அதில் கலந்து கொள்கிறான். Zaida வுடன் நடனமாடி தன்னுடைய விருப்பத்தை தெரிவிக்கிறான். Rapayet குடும்பம் தன்னுடைய குடும்பத்திற்கு நிகரான மதிப்பு கொண்டதில்லை என்று Ursula பெண் தர மறுக்கிறாள். Rapayet ன் மாமா சமரசம் செய்கிறார். பின்னர் Rapayet 5 மாடு, 30 ஆடுகள், 5 necklace வரதட்சிணை கொடுத்து Zaida வை திருமணம் செய்து கொள்ளலாம் என்கிறாள். 

Rapayet த்திடம் அவ்வளவு பணம் இல்லை என்பது Ursula விற்கு தெரியும். Rapayet பணம் சம்பாரிக்கும் முனைப்போடு இருக்கையில் ஒரு வாய்ப்பு அவனைத்தேடி வருகிறது. 

இரண்டாம் உலகப்போருக்கு பின் அமெரிக்கா மொத்த உலகத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்றது. பொருளுதவி, ஆயுத உதவி என்று கொடுத்த அந்த நாடுகளை தனது வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தி கொண்டது. இதில் ரஷ்ய தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்வது, அப்படி ரஷ்யாவிடம் உதவி பெரும் நாடுகளை communist நாடுகள் என்று குற்றம் சாட்டி அங்கே உள்நாட்டு கிளர்ச்சி கலவரம் என்று ஏற்படுத்தி தனக்கு சாதகமான ஒரு அரசை கொண்டு வருவது, இப்படி தென் அமெரிக்காவில் பல banana republic களை அன்று அமெரிக்கா உருவாக்கியது. அதில் கொலம்பியாவும் ஒன்று. 

அப்படி நாடுகளில் அமெரிக்க Peace Corps ஐ சேர்ந்தவர்கள் communist aggression னுக்கு எதிராக பிரச்சாரம் செய்யவார்கள். அப்படி பிரச்சாரம் செய்ய வந்தவர்களில் சிலர் கொலம்பிய Marijuana அல்லது கஞ்சா கிடைக்குமா என்று பார்க்கிறார்கள். அவர்களுக்கு Rapayet கஞ்சா வாங்கி  கொடுத்து பணம் ஈட்டுகிறான். அந்த பணத்தை வைத்து Zaida வை மணம் புரிய தேவையான வரதட்சிணை கொடுத்து அவளை தனதாக்கி கொள்கிறான்.  


Bill என்னும் அமெரிக்கன் மேலும் கஞ்சா கொண்டு வந்து தந்தால் அதிக பணம் தருவதாக சொல்கிறான். இப்படியாக அமெரிக்காவுடனான கொலம்பிய போதைப்பொருள் வணிகம் தொடங்குகிறது. Rapayet ன் நண்பன் Moises alijuna என்னும் பழங்குடி இனத்தை சேர்ந்தவன். அவனுடன் சேர்ந்து Rapayet தொழில் செய்வது Rapayet ன் மாமியார் Ursula விற்கு பிடிக்கவில்லை. 

Ursula ஒரு Matriarch. அவள் Rapayet மீது முற்றதிகாரம் செலுத்துகிறாள். தன்னிடம் கஞ்சா வாங்கும் அமெரிக்கர்கள் அங்கே உள்ள வேறு சிலரிடமும் வாங்குகிறார்கள் என்று தெரிந்து  Bill ஐ வர சொல்லுங்கள் பிறகு தொழில் செய்வதை பற்றி பேசுவோம் என்கிறான் Rapayet. இங்கே Rapayet ன் நண்பன் Moises ஒரு தவறு செய்கிறான். அதை Rapayetத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

கஞ்சா தொழில் செய்து தங்கள் முன்னோர்கள் யாரும் சேர்த்திடாத அளவு பணம் சேர்த்து விட்டாலும் அவர்கள் கடைபிடித்த அறம், தர்மங்களை கைவிட Rapayet தயாராக இல்லை. ஆனால் Moises அப்படி இல்லை. பணம், குடி, கேளிக்கை தான் அவன் வாழ்க்கை. அவனுக்கென்று எந்த கொள்கையும் இல்லை. 

இந்நிலையில் Moises தொழிலை விட்டு விலக்கப்படுவதாக Rapayet அறிவிக்கிறான். இதிலிருந்து படம் இருண்ட திசையில் செல்கிறது. ஒரு புறம் நிறைய பணம் சம்பாதித்து நிறைய வசதி வாய்ப்புகளை பெற்றாலும் தாங்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையில் இருந்து மிக விலகி வந்துவிட்டதாக அனைவரும் உணர்கிறார்கள். 

பழங்குடிகளாக இருந்த போது அவர்கள் உள்ளுணர்வு விழிப்பு நிலையில் இருந்தது. ஒவ்வொரு மாற்றத்தையும் நுட்பமாக புரிந்து கொள்ளுமிடத்தில் இருந்தார்கள். முக்கியமாக பறவைகைளிடம் இருந்து வரும் சமிஞ்கை. அதிலிருந்து அந்நியப்பட்டு வந்து விட்ட பிறகு அதை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க தொடங்குகிறார்கள். பறவைகளை வைத்து படத்தில் பல காட்சிகள், கனவுகள், உரையாடல்கள் உள்ளன. Hence, Birds of Passage எனும் Title. 

ஒரு மோதலுக்கு பிறகு சமரசம் ஏற்பட்டு ஒரு 7 வருடங்கள் பிரச்சினை இல்லாமல் போகும் போது வாலிபனாக வளர்ந்து நிற்கும் Zaida வின் தம்பியால் பிரச்சினை வருகிறது. Leonidas எனப்படும் அவன் கஞ்சா விற்று வந்த பணத்தில் செழிப்பாக வளர்ந்தவன். அவனுக்கு வாழ்வில் எந்த நோக்கமும் கிடையாது. தான் வேண்டியது வேண்டும். இல்லாவிட்டால் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்கிற ஆள். 

Ursula குடும்பத்தின் இறுதி அத்தியாயம் Leonidasஆல் தொடங்கி வைக்கப்படுகிறது. போதைப்பொருள் வணிகத்தின் details படத்தின் பிரதானம் அல்ல. அதன் மூலம் வரும் வருமானம் என்ன மாதிரி அந்த மனிதர்களை மாற்றி அமைக்கிறது என்பது தான். பணத்தின் மூலம் கிடைக்கும் பலம், அகங்காரம் எப்படி அவர்களின் அழிவிற்கு இட்டு செல்கிறது என்று காண்கிறோம். 

தென் அமெரிக்க இலக்கியம் கதை சொல்லும் முறையில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. கொலம்பிய நாட்டு எழுத்தாளர் Gabriel Garcia Marquez அதன் பிதாமகர். அவருடைய தாய் வழி பாட்டி இந்த படத்தில் காட்டப்படும் Wayuu Tribe ஐ சேர்ந்தவர் என்பது இணையத்தில் கண்ட தகவல். மாய யதார்த்தம் (magical realism) என்று அழைக்கப்பட்ட அவருடைய கதை சொல்லல் தன்மையை நீஙகள் Birds of Passage படத்திலும் காணலாம். Pan's Labyrinth மற்றும் The Shape of Water போன்றவை magical realist படங்களே. 

Birds of Passage வணிக நோக்கம் தாண்டி படம் கலைப்படைப்பாகவே உருவாக்க பட்டிருக்கிறது. பல விருதுகளையும் வென்றுள்ளது. படத்தின் இசை, அதன் காட்சி வெளி, அதன் மனிதர்கள் அனைத்தும் அந்த Wayuu இன மக்களின் வாழ்க்கை பதிவாக இருக்கிறது. 


 நாம் அதிகமும் சினிமாவில் காண்பது 1980களுக்கு பிறகான குற்ற உலகையே. Birds of Passage அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னால் அந்த உலகம் எப்படி உருவாகியது என்று பதிவு செய்திருக்கிறது. 


Saturday, 3 October 2020

மொஸாட் - என். சொக்கன்

Whatsapp ல் வரும் பெரிய பதிவுகளை அசராமல் படிப்பவரா நீங்கள்?! உங்களுக்கானது தான் இந்த புத்தகம். 

கிழக்கு பதிப்பகத்தின் அபுனைவு நூல்களின் வெற்றி இப்படி நூல்களை பதிப்பிக்கும் பதிப்பகங்களின் எண்ணிக்கையை அதிகம் ஆக்கியிருக்கிறது என்று நினைக்கிறேன். ஒரு புத்தக கண்காட்சிக்கு சென்றால் அங்கே இது போன்ற நூல்களை கிட்ட தட்ட அனைத்து பதிப்பகங்களும், புத்தகம் வாங்கி விற்கும் கடைகளும் விற்பதை காணலாம். 

படிப்பதற்கு மிக எளிதானது. தினத்தந்தி தவிர, ஏன் தமிழில் வேறு எதையுமே வாசித்திருக்காதவர் கூட எளிதில் வாசிக்கும் படியான ஒரு மொழியில், நடையில் எழுதப்பட்ட புத்தகம். ஒவ்வொரு பத்தியும் மூன்றிலிருந்து ஐந்து வரிகள் தான். 

நான் நாவல்கள், சிறுகதைகள் தான் வாங்குவேன். இலக்கிய எழுத்தாளரின் கட்டுரை, அபுனைவு வாங்குவேன். Mossad போன்ற புத்தகம் ஒரு முறைக்கு மேல் வாசிக்க தேவையிருக்காது என்பதால் தவிர்த்து விடுவேன். மேலும் இப்படி புத்தகங்கள் சினிமா பார்த்து, ஆவண படங்கள் பார்த்து எழுதப்பட்டது போல் இருக்கும். 

Mossad வாசிக்கும் போது அங்கங்கே சுஜாதா வாடை அடித்தது. முதல் சில அத்தியாயங்கள் 1972ம் ஆண்டு ஒலிம்பிக்கின் போது கொல்லப்பட்ட இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களுக்காக இஸ்ரேல் எப்படி பழி வாங்கியது என்பதை பற்றியது. இந்த சம்பவங்களை வைத்து Steven Speilberg Munich என்றொரு சினிமா எடுத்திருக்கிறார். அற்புதமான படமது. 

பிறகு Mossad எப்படி உருவானது?, அதற்கான வரலாற்று காரணங்கள், யூதர்கள் காலம் நெடுகிலும் அனுபவித்த துன்பங்கள், Mossad ன் சாகசங்கள் என்று இது Mossad ன் புகழ் பாடும் ஒரு புத்தகம். 

இதை ஒரு மாணவ நண்பர் எனக்கு வாசிக்க அளித்தார். அவர் ஒரு நண்பரின் வீட்டில் இருந்த புத்தக அலமாரியில் இதைக்கண்டு ஆர்வமாக வாசிக்க எடுத்து வந்திருக்கிறார். அடுத்த சில மணிநேரங்களில் வாசித்து முடித்து விட்டார். என்னிடம் வாசித்து பாருங்கள் என்று கொடுத்தார் நான் நாளுக்கு கொஞ்சமாக 4 நாளில் வாசித்தேன். 

முதல் முதலாக வாசிக்க வருபவர்கள் இப்படி நூல்களை வாசிப்பது வாசிப்பின் மீதான ஆர்வத்தை வளர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை. வாசிப்பு என்பது கடினமானது அல்ல, பரீட்சைக்கு படிப்பது போல அல்ல சுவாரசியமான ஒன்று என்கிற எண்ணத்தை அது வளர்க்கும். மேலும் reading for pleasure எனப்படும் வாசிப்பின்பம் கிடைக்க பெறுபவர்கள் தொடர்ந்து வாசிப்பார்கள். தமிழில் வாசித்தால் தமிழ் எழுத்துலகமும் வாழும். 

மதி நிலையம் வெளியிட்டிருக்கும் இந்நூலின் விலை 150 ரூபாய். 

சொல்ல மறந்துவிட்டேன். Mossad என்பது இஸ்ரேலிய உளவுத்துறையின் பெயர். 

(29 Feb 2020 எழுதப்பட்ட பதிவு)


Ash is Purest White - இவள்


ஒரு பெண்ணை முதன்மை கதா பாத்திரமாக கொண்ட ஒரு திரைப்படத்தை கடைசியாக எப்போது பார்த்தீர்கள்? அதாவது ஒரு கதா நாயகி நாயகனுக்கு இணையாக சண்டை காட்சிகளில் நடித்து, வசனம் பேசி நடிக்கும் படங்கள் அல்ல. கதையே பெண் எடுக்கும் முடிவுகளால் நகரும் திரைப்படம்? 

எனக்கு French படமான Amelie மற்றும் Almodavar எடுத்த All About My Mother என்று இரண்டு படங்கள் நினைவுக்கு வருகின்றன. 

Ash is Purest White சர்வதேச கவனம் பெற்ற சீன இயக்குனர் Jia Zhanke வின் படம். சமகால சீன மக்களின் வாழ்க்கையை மாற்றிய விஷயங்களை, அரசியலை சத்தமில்லாமல் சொல்பவர். 

சீனாவின் Shanxi என்கிற பகுதியில் கதை நடக்கிறது. Qiao என்னும் இளம் பெண் உள்ளூர் Gangster மற்றும் Night Club நடத்தும் Guo Bin உடன் காதலில் இருக்கிறாள். Qiaoவின் தந்தை அங்கே உள்ள நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்க்கிறார். 

ஆண்டு 2001. சீனா புதிய நூறாண்டின் புதிய பாய்ச்சலுக்கு தயராகிக்கொண்டிருக்கிறது. புதிய தொழில்கள், புதிய ஊர்கள் வளர்ச்சியடைகின்றன. Qiao வின் ஊரில் உள்ள சுரங்கம் மூடப்பட போவதாக வதந்தி பரவுகிறது. 

Qiao விரும்புவது எல்லாம் அங்கிருந்து கிளம்பி சென்று Bin னுடன் சேர்ந்து ஒரு புதிய, அமைதியான வாழ்க்கையை தான். ஆனால் Bin உள்ளூரில் ஒரு established ஆன ஆள். ஊருக்கு வெளியே அவன் செல்லாக்காசு, அதனால் அவன் தயங்குகிறான். 

இந்நிலையில் Binனின் குருநாதர் இடத்தில் இருக்கும் Real Estate அதிபரான Eryogan கொல்லப்படுகிறார். பின்னர் Binனும் தாக்க படுகிறான். 

Qiao விற்கு துப்பாக்கி சுட கற்றுத்தரும் Bin "Kill or get killed" இது தான் எங்கள் முன் இருக்கும் இரண்டே வாய்ப்புகள் என்கிறான். 

இதற்கு அடுத்த காட்சியில் Binனை உள்ளூர் சோட்டா Gangsterகள் சூழ்ந்து கொண்டு தாக்குகிறார்கள். Binனும் திருப்பி அடிக்கிறான். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் Qiao துப்பாக்கியுடன் காரிலிருந்து இறங்குகிறாள். 

Qiao நமக்கு அறிமுகம் ஆகும் போது Barbie பொம்மையை பிரதி செய்யும் ஒரு make upல் இருக்கிறாள். அது அவளுக்கு பொருந்தவில்லை. கொஞ்சம் அவலட்சணம் போலவும் தெரிகிறாள். ஆனால் அவள் புழங்கும் சூழலில் அப்படி ஒரு தேர்வு அவசியப்பட்டிருக்கும். அது ஒரு விதமான பாதுகாப்பு அம்சமாக கூட இருந்திருக்கும். எதற்கும் துணிந்தவள், ஒரு no nonsense person என்பதாக. 

பின்னர் நாம் Qiao வை 2006ம் ஆண்டு சந்திக்கிறோம். இப்போது Qiao மாநகரத்தில் வாழும் ஒரு சாதாரண பெண் போல இருக்கிறாள். பணத்தை திருடுகொடுத்துவிட்டு தேடி அலைகிறாள். கல்யாண வீட்டில் gate crash செய்கிறாள். பணக்காரர்களிடம் வில்லங்கமாக பொய் பொய் சொல்லி பணம் பறிக்கிறாள். பின்னது இரண்டும் படத்தில் உள்ள கொஞ்சம் நகைச்சுவை கலந்த பகுதிகள். 

மீண்டும் 10 ஆண்டுகள் கழித்து நாம் Qiaoவை சந்திக்கிறோம். Coming of age Genre போல, ஒரு தனி நபரின் வளர்சிதை மாற்றத்தையே நாம் Qiaoவில் பார்க்கிறோம். இது ஒரு வகையான உருமாற்றம். இளம்பெண்ணாக அறிமுகம் ஆகும் Qiao தான் எடுத்த முடிவுகளால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு எழுந்து வரும் சித்திரமே Ash is Purest White.

துப்பாக்கி சுட பயிற்சி அளிக்கும் போது பின்னணியில் உள்ள எரிமலையை காட்டி Binனிடம் Qiao சொல்கிறாள். எரிமலை குழம்பில் இருந்து உருவாகும் சாம்பல் சுத்தமானதாக, தூய்மையானதாக இருக்கும் என்று. ஒரு மனிதன் பண்படுவதற்கு அத்தகைய கொதிநிலையை அடைந்து மீள வேண்டும் என்கிறாள். அதை சொல்லும் அவளுக்கு தெரியாது அது தனக்கே நடக்கும் என்று. 

சீனாவில் இருந்து வரும் அனைத்தும் low quality, cheap and duplicate அல்ல. இப்படி சிறந்த படங்களை அவர்கள் எடுக்கிறார்கள் என்பதே அவர்களின் படைப்பு திறனுக்கு சான்று. 

The Harmonium in My Memory - அழியாத கோலங்கள்


நீங்கள் கொரியன் படங்களை தொடர்ந்து பார்பவராக இருந்தால் நிச்சயம் thriller, murder mystery, serial killer, gangster வகை படங்களை பார்த்திருப்பீர்கள். அதீத வன்முறை காட்சிகள், உணர்ச்சி கொந்தளிப்பான நடிப்பு போன்றவையே கொரிய படங்கள் உலக அளவிலான கவனம் ஈர்ப்பதற்கு பிரதான காரணங்கள். 

அத்தகைய கொரிய சினிமாவில்  feel good படங்களும் அவ்வப்போது வருவதுண்டு. முதலில் நினைவுக்கு வருவது பாட்டிக்கும் பேரனுக்குமான உறவை சொல்லும் The Way Home படம் தான். 

மெல்லுணர்வு என்பது பெரும்பாலும் பதின் பருவத்தின் காதலை, மையலை சொல்லும் படமாக தானே இருக்க முடியும்?! The Harmonium in My Memory  அத்தகைய படம் தான். தமிழில் உடனே நினைவுக்கு வருவது பாலு மகேந்திராவின் அழியாத கோலங்கள். இது வரை பார்க்கவில்லை என்றால் படம் Youtubeல் இருக்கிறது பார்த்து விடுங்கள். 

படம் 70, 80களில் நடக்கிறது என்று யூகிக்கலாம். ஒரு கொரிய மலைக்கிராமம். அங்கே வரும் ஒரு இளம் பள்ளி ஆசிரியர். ஆசிரியராக அவருடைய முதல் பணியை அந்த பள்ளியில் தான் துவக்குகிறார். அவரின் பெயர் Mr. Kang.

கொரிய கிராமம் என்றாலும் அது தமிழக கிராமத்தை நினைவுபடுத்தும் கிராமம் போல தானிருக்கிறது. மேலும் ஆசிரியர் வந்து இறங்கும் காட்சியை கண்டவுடன் எனக்கு முந்தானை முடிச்சு படமும் நினைவிற்கு வந்தது. 

பள்ளியில் பல வித குணாம்சங்களுடன் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். Mr.Kang தான் அதில் இளையவர். அவர் வேலைக்கு சேரும் அன்றே Miss Yang என்ற இளம் பெண்ணும் ஆசிரியராக பணியில் சேர்கிறார். 

நாட்டின் தலை நகரில் இருந்து மிகவும் தள்ளி, அரசியல் அதிகாரம், பொருளாதார நலன்கள் என்று  எதுவும் வந்து சேர பல ஆண்டுகள் ஆகும் கிராமத்தில் மனிதர்கள் எப்படி இருப்பார்களோ அப்படி இருக்கிறார்கள். பெருநகரத்தில் நவீன கல்வி கற்று வந்த Kang மற்றும் Yangகிற்கு அங்கே உள்ள பல கட்டுப்பெட்டித்தனங்கள் பிடிக்கவில்லை எனினும் தங்கள் பணியை சிறப்பாக செய்கிறார்கள். 

சக ஆசிரியர் "அடிச்சு வளர்க்காத பிள்ளையும், ஒடிச்சு வளர்க்காத முருங்கையும்" என்கிற ரீதியில் மாணவர்களை அடிப்பதை பற்றி ஒரு பழமொழி சொல்ல Kang அது அவசியமற்றது என்றும் மாணவர்களை கண்ணியமாக நடத்தியே நல்வழிப்படுத்த முடியும் என்று சொல்கிறார். 

மாணவர்களின் வாசிப்பு, எழுதும் திறனை மேம்படுத்த தினம் ஒரு பக்கம் தங்கள் வாழ்க்கையில் நடப்பவவற்றை எழுத வேண்டும் என்று சொல்கிறார். முரண்டு பிடிக்கும் மாணவர்களை அன்பால் பணிய வைக்கிறார். 

மாநகரத்தில் இருந்த வந்த ஆசிரியர் மீது ஒரு கிராமத்து பள்ளி மாணவிக்கு மையல் இல்லாமலா இருக்கும்?! இருக்கிறது. அது தான் இந்த படத்தை ஒரு feel good படமாக ஆக்குகிறது. 

Hongyeon என்கிற அந்த மாணவி வயதிற்கு மீறிய உருவம் கொண்டவள். அல்லது சில ஆண்டுகள் தேர்வில் தோற்று ஒரே வகுப்பில் படிப்பவளாக கூட இருக்கலாம். ஆனால் குழந்தையும் அல்லாத இளம் பெண்ணும் அல்லாத ஒரு இரண்டும் கெட்டான் பருவத்தில் இருக்கிறாள். 

கிராமத்திற்கு வந்து இறங்கும் Kang முதலில் சந்திப்பது Hongyeon தான். பார்ப்பதற்கு பெரிய பெண் போல இருப்பதால் Miss என்று மரியாதையாக அழைக்க அது அவளுக்கு ஒரு குறுகுறுப்பான மகிழ்ச்சியை தருகிறது. அதிலிருந்தே அவளுடைய மையலும் துவங்குகிறது. 

Kangற்கு Miss Yangன் மீது மையல். இப்படி முக்கோண மையல் கதையில் ஒரு வருடத்திற்கு பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சிகளும் இணைந்து இதை ஒரு மறக்க முடியாத Campus cum coming of age film ஆக மாற்றுகின்றன. 

Hongyeon தனது மனவோட்டங்களை Kangற்கு தெரியப்படுத்திக்கொண்டே இருக்கிறாள். Kang தன்னுடைய பொறுப்பு, கடமை உணர்ந்து அதை எவ்வகையிலும் உடைத்து விடாமல் இருக்க கண்ணியமாக நடந்து கொள்கிறார். 

நாம் பெரும்பாலான உணர்ச்சிகளை, எண்ணங்களை வெளியே சொல்வதில்லை. பள்ளிப்பருவத்தில் நிச்சியம் நமக்கே உரிய மையல் கதைகள் இருக்கும். அவை இன்று நகைப்பிற்குரியனவாக நமக்கே தோன்றும் ஆனாலும் அது போன்ற உண்மையான உணர்ச்சிகளுக்கு நாம் மீண்டும் ஆளாகவே இல்லை என்றும் தோன்றும். அத்தகைய உணர்ச்சிகளை மிக யதார்த்தமாக சொல்லும் படம் தான் The Harmonium in My Memory. 





Monday, 2 March 2020

புயலில் சிக்கிய தோணிகள்

அக்னி நதி - குர் அதுல் ஜன் ஹைதர்


நீங்கள் 30 வயதை கடந்தவராக இருந்தால் இதை நன்கு உணர முடியும். பள்ளி கல்லூரி காலங்களில் நீங்கள் நண்பர்களிடம், உறவினர்களிடம் என்னவாக போவதாக சொல்லிக்கொண்டிருந்தீர்கள் இப்போது என்னவாக ஆகியிருக்கிறீர்கள்/  மாறியிருக்கீர்கள்?

வாழ்க்கையும் நதியை போல தான். அது அதன் வழியை தேடி செல்லும் நாம் நினைத்த படி அதை வளைக்க முடியாது. அணை போட்டு தடுக்க முடியாது. வாழ்க்கையின் முன்னால் நாம் மண்டியிட்டு அது நம்மை இழுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும் அல்லது அது அந்த பிரவாகம் நம்மை ஓரங்கட்டிவிட்டு முன்னேறி செல்லும்.

அக்னி நதி நாவலை நான் முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்கும் போதே பார்த்திருக்கிறேன். பாட திட்டத்தில் இல்லை ஆனால் நூலகத்தில் அழகான அட்டை படத்துடன் இருந்தது. ஆங்கில மொழியாக்கத்தை அதன் ஆசிரியரே செய்திருக்கிறார். முதலில் உருதுவில் எழுதப்பட்ட நாவல் பின்னரே அங்கிலத்திற்கும் மற்ற இந்திய மொழிகளுக்கும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. தமிழில் சௌரி செய்திருக்கிறார். 1971ம் ஆண்டே National Book Trust இதை வெளியிட்டு இருக்கிறது. அதன் பிறகு 1997 மற்றும் 2018ல் அடுத்த பதிப்புகள் வந்துள்ளன. என்னிடமுள்ளது 2018 ஆண்டு பதிப்பு. தூத்துக்குடி புத்தக கண்காட்சியில் வாங்கியது. மதுரையில் இரண்டு ஆண்டுகள் தேடி பதிப்பில் இல்லை என்று தெரிந்து பின்னர் 2019 ஆகஸ்டில் வாங்கினேன்.

இந்திய பெரு நாவல்கள் என்று எழுத்தாளர் ஜெயமோகன் கொடுத்திருந்த பட்டியலில் இந்நாவலும் உண்டு. அந்த பட்டியலில் இருந்து ஏற்கனவே ஆரோக்கிய நிகேதனம், மண்ணும் மனிதரும் வாசித்திருக்கிறேன். அதன் பிறகு அக்னி நதி என்கிற தலைப்பே இந்த நாவலை வாசிக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட காரணம்.

நாவல் கடைசி பகுதிக்கு வரும் போது தான் உணர்ந்தேன் அமைப்பில் இது போலவே உள்ள David Mitchell எழுதிய Cloud Atlas என்கிற நாவலின் சினிமா பதிப்பை நான் பார்த்திருக்கிறேன் என்று.

நாவல் 4 கால கட்டங்களில் நடக்கிறது. நான்கிலும் வரும் கதா பாத்திரங்களுக்கு பெயர் ஒன்று  தான், வாழ்க்கை அனுபவம், தரிசனம் எல்லாமே ஒன்று தான். வரலாறு அல்லது வாழ்க்கை முன்னால் மனிதன் எப்படி அடித்து செல்லப்படுகிறான் என்பதையே நாம் மீண்டும் மீண்டும் காண்கிறோம்.

History repeats itself, first as tragedy and second as farce. ஆனால் வரலாறு இங்கே நான்கு முறையும் உக்கிரம் குறையாமல் தன்னை நிகழ்த்துகிறது. Men may come and Men may go but the institution is everlasting என்று எனக்கு தெரிந்த ஒருவர் அடிக்கடி சொல்வார். அந்த Institution எனும் அமைப்பை சார்ந்து வாழும், மாற்ற நினைக்கும், அதில் இருந்து வெளியேறி செல்லும் மனிதர்களின் கதை இது.

Ideology க்காக, கொள்கைக்காக, கருத்தியலுக்காக தன்னை அடகு வைக்கும் மனிதர்கள் பின்னர் அதில் இருந்து வெறுத்து ஒதுங்குவதை நாம் தினம் காண்கிறோம்.

புயலிலே ஒரு தோணி நாவலில் இந்திய தேசிய ராணுவம், பின்னர் இந்தோனேசியா விடுதலை இயக்கத்தில் சேர்ந்து போர்புரியும் பாண்டியன் பின்னர் அதில் இருந்து விலகி ஊர் வந்து நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என நினைக்கிறான். ஆனால் திரும்பி செல்வதற்கான பாலங்களை எரித்த விட்ட பிறகே அவனுக்கு அது தோன்றுகிறது.

Madness is like gravity. All it takes is a little push என்று The Dark Knight படத்தில் வரும் Joker கதா பாத்திரம் சொல்லும். எண்ணிப்பாருங்கள் சமநிலை உள்ள மனிதர்கள் கொஞ்சம் பைத்தியம் ஆகாமல் Hitler, Stalin போன்ற நபர்களை ஆதரித்து இருப்பார்களா? அதனால் அவர்களே மிகப்பெரிய அழிவை தங்களுக்கும் தான் வாழும் நாட்டிற்கும் தேடிக்கொண்டர்கள்.

Benefit of hind sight என்று ஆங்கிலத்தில் ஒரு expression உண்டு. இன்று நாம் எடுக்கும் ஒரு முடிவு எந்த அளவிற்கு சரியானது என்று இன்றே சொல்ல முடியாது. அது காலத்தால் தீர்மானிக்கப்படுவது.

இளைஞர்களாக, இளம் பெண்களாக அறிமுகமாகும் இந்நாவலின் கதா பாத்திரங்கள் தங்களுக்குள் ஓயாமல் விவாதிக்கிறார்கள். தங்களுடைய கருத்துக்களை, நிலைப்பாட்டை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். Going against grain ஆக இருக்கும் அவர்கள் தாங்கள் வாழும் காலம் தாண்டி சிந்திக்கிறார்கள். ஆனால் அப்படி சிந்திப்பவர்கள் அதை வாழ்க்கையாகவும் விரித்துக்கொள்ள முடியுமா?

இன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கும் போராட்டங்கள் நடக்கின்றன. நாம் சுதந்திர பெற்ற போது நாடு இரண்டாக பிரிந்தது. அப்போது மக்களின் மனநிலை என்னவாக இருந்தது? பாகிஸ்தான் செல்லாமல் இந்தியாவில் இருந்தவர்களின் மன நிலை என்ன? பாகிஸ்தானை தேர்தெடுந்த மக்களின் எண்ணங்கள் என்ன? இப்படி அன்றைய இந்தியாவின் அரசியல், சமூக மாற்றங்கள், இந்தியர்களின் மனக்குழப்பங்கள் என்று அத்தனையும் இந்நாவலில் காணக்கிடைக்கிறது.

மத வேறுபாடு இல்லாமல் பழகும் நண்பர்கள் எப்படி அரசியல் நிலைப்பாடு காரணமாக விலகி செல்கிறார்கள் என்று காணும் நாம் எக்காலத்திலும் அரசியல் சார்பு, கட்சி சார் கொள்கை என்று ideology சார்ந்த விஷயங்கள் நெருக்கமான உறவினர், நண்பரிடையே கூட பிரிவை ஏற்படுத்துவதை காண்கிறோம்.

இப்போது குடியுரிமை திருத்த சட்டத்தை முன் வைத்து நடக்கும் விவாதங்களில் முழு சித்திரமும் தெரியாமல் மக்கள் மூர்க்கமான ஆதரவு, எதிர்பு என்று பிளவு பட்டு நின்று விவாதித்து, பூசலிட்டு கொண்டிருக்கிறார்கள். இப்படி இவர்கள் மல்லுகட்டிய இன்றைய அரசின் பல நடவடிக்கைகள் மிகப்பெரிய தோல்வியடைந்தன. உதாரணம் பணமதிப்பு நீக்கம். ஆனாலும் அதை செயல்படுத்திய கட்சியை ஆதரிப்பவர்கள் பின் வாங்குவதில்லை.

இப்படி இந்த நாவலின் கதா பாத்திரங்கள் தாங்கள் சார்ந்த கொள்கைக்காக வாதாடி பின்னர் அதில் இருந்து பிரிந்து, விலகி சொந்த வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்தால் போதும் என்கிற நிலைமைக்கு வருகிறார்கள்.

நான்கு பகுதிகளாக உள்ள நாவலில் நாலாவது பகுதியே மிக விரிவானது. அதனுடன் இன்றைய எந்த இளைஞனும், இளம் பெண்ணும் தன்னை கண்டுகொள்ள முடியும்.

இன்றைய கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலையில் ஒவ்வொரு இந்தியனும் வாசிக்க வேண்டிய நாவல்.


ஆதலினால் - எஸ். ராமகிருஷ்ணன்


Discovery Book Palace வெளியீடு

விலை -ரூபாய் 140/-

எஸ். ராமகிருஷ்ணன் எழுதும் ஒவ்வொரு கட்டுரையிலும் நாமறியாத ஒரு புது தகவல், பார்வை, பரிமாணம் இருக்கும். 

ஆதலினால் என்கிற இந்த கட்டுரை தொகுப்பு முழுக்க அத்தகைய கட்டுரைகளே உள்ளன. 

சாலை அமைப்பவர்கள் பற்றிய கட்டுரை நால் வழி சாலைகளை கண்டு வியக்கும் நாம் அதற்கு பின்னால் உள்ள மனிதர்களின் உழைப்பை பற்றி ஒரு நாளும் எண்ணி பார்ப்பது இல்லையே என்று தோன்ற செய்கிறது. 

இந்நூலில் உள்ள 25 கட்டுரைகளும் அப்படி புதிய சிந்தனையை நம்முள் தோன்ற செய்பவையே. 

நாம் அன்றாட வாழ்வில் தினம் சந்திக்கும் ஆனால் பொருட்படுத்தாமல் கடந்து போகும் மனிதர்களை பற்றிய கதைகளை, அவர்களின் வாழக்கையை எஸ். ரா இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். 

எஸ். ரா கூர்கா பற்றி எழுதியிருப்பதை நாஞ்சில் நாடன் அவர்களின் தன் ராம் சிங் கதையுடன் சேர்ந்து வாசிக்கலாம். 

அவர் சொந்த பதிப்பகம் தொடங்கிய பிறகு இப்புத்தகம் அதில் இருந்து வெளிவருகிறதா என்று தெரியவில்லை. 

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய துணையெழுத்து, சிறிது வெளிச்சம், தேசாந்திரி போன்ற மிக சுவாரசியமான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. 

ஆரம்பகட்ட வாசகர்களுக்கு உகந்தது. பரிசாகவும் அளிக்கலாம்.