Saturday 9 December 2017

Ikiru - மீதமிருக்கும் நாட்கள்


ஷெல்லி, கீட்ஸ் போன்ற ஆங்கில கவிஞர்கள் மிக இளம் வயதிலேயே மரணம் அடைந்து விட்டனர். கீட்ஸ் TB காரணமாக மிக அவதிப்பட்டு இறந்து போனார். ஆனால் கீட்ஸ் எழுதிய கவிதைகள் காலத்தின் முன் அழியாது நிற்கின்றன. ஒரு மனிதனுக்கு தான் விரைவில் இறந்து விடுவோம் என்று தெரிந்த பிறகு அவனுடைய வாழ்க்கை அவனுக்கு மேலும் அர்த்தமுடையது ஆகிவிடுகிறது. மரணிப்பதற்கு முன் தன்னுடைய முத்திரையை இந்த உலகில் விட்டு விட்டு போக எத்தனிக்கிறான்.  அவனுடைய படைப்பு நிலை உச்ச கட்டத்தை அடைந்து விடுகிறது. பாரதியோ, கணித மேதை ராமனுஜனோ மிக குறைவான நாட்களே வாழ்ந்து தங்களுடைய பிறவியின் உச்ச பட்ச சாத்தியங்களை நிகழ்த்தி விட்டு போனவர்கள் தான் இல்லையா?

இங்கே குரோசோவா இயக்கிய Ikiru திரைப்படத்தின் முதல் காட்சியில் கதா நாயகனின் X Ray செய்யப்பட்ட வயிறு காண்பிக்க படுகிறது. அதிக பட்சம் 6 மாதம் அல்லது ஒரு வருடம் என்று சொல்லி தான் படம் துவங்குகிறது. Ikiru என்றால் To Live என்று அர்த்தம்.

கதா நாயகன் Watanabe ஒரு பொதுத்துறை ஊழியர். அதில் தலைமை பொறுப்பில் இருக்கிறார். விரைவில் பணி ஓய்வு பெறப்போகிறார். 29 வருடம் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் வேலை செய்த ஊழியர் அவர்.

அரசாங்க வேலையின் சுருதி மாறாத அன்றாடத்தன்மை திரையில் விரிகிறது. அரசாங்க ஊழியர்களுக்கு அத்தனையும் பேப்பரில் உள்ள கணக்கு வழக்குகள் தாம். பேப்பரில் உள்ள விசயம் உண்மையில் இருக்க வேண்டும் என்பது இல்லை. பேப்பர் இருக்கிறது என்றால் அதில் உள்ள விசயம் இருக்கிறது என்றே வாதிடுபவர்கள். இப்படி பேப்பரில் எழுதிய கணக்கு வழக்குகளை வைத்து தான் நாங்கள் வல்லரசு ஆகிவிட்டோம், கருப்பு பணத்தை ஒழித்து விட்டோம், இந்தியாவை சுத்த படுத்தி விட்டோம் என்று நம் அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் கதை விடுகின்றனர். அது பேப்பரில் உள்ள உண்மை. நடைமுறை உண்மை மக்களுக்கு தெரியும் தானே?

இப்படி தனக்கு முன்னால் இருக்கும் பேப்பர்களில் தன்னுடைய முத்திரையை பதித்து அடுத்த இடத்திற்கு அனுப்ப வேண்டியது மட்டுமே Watanabe அவர்களின் வேலை. இந்த குமாஸ்தா தனம் அவர் வாழ்க்கையில் எந்த சுவராசியமும் இல்லாமல் செய்து விட்டது. சக ஊழியர்கள் Mummy என்று பட்ட பெயர் வைக்கும் படி தான் அவரும் நடந்து கொள்கிறார்.

இந்நிலையில் தனக்கு Cancer என்பதை கண்டு அதிர்ந்து போகிறார். மீதமிருக்கும் நாட்களை என்ன செய்வது என்று யோசிக்கிறார். தனக்கென்று தான் எதுவும் செய்து கொள்ளவில்லை என்று உணறுகிறார். ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் 29 வருடம் வேலை செய்ததை எண்ணி கூசுகிறார்.

மனிதன் இதை செய்து தான் மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று நம்பப்படும் விஷயங்களை முயற்சித்து பார்க்கிறார். 50000 yen பணத்தை எடுத்து கொண்டு Club, Strip Tease என்று வலம் வருகிறார். தான் தேடுவது இது அல்ல என்று அவருக்கு புரிகிறது.

இதற்கிடையில் மகனுக்கு தந்தையின் ஓய்வு பணத்தில் தனியாக வீடு கட்ட வேண்டும் என்ற நினைப்பு இருக்கிறது. அலுவலகத்தில் வேலையில் இருக்கும் இளம் பெண் ஒருத்தி Watanabe வை தேடி வருகிறாள். அந்த வேலை பிடிக்கவில்லை என்றும் அதை விட்டு வெளியேற அவருடைய கையெழுத்து தேவை என்றும் கூறுகிறாள்.

அந்த பெண்ணிடம் உள்ள அந்த துடிப்பு Watanabe வை ஈர்க்க அவளை அழைத்து சென்று கேளிக்கையில் ஈடுபடுகிறார். அவளுக்கு stockings வாங்கி கொடுக்கிறார். உணவருந்த அழைத்து செல்கிறார். அந்த பெண் இரண்டாவது நாளில் இது தனக்கு பிடிக்கவில்லை என்று சொல்ல அவளிடம் உண்மையை சொல்லி அவளை போல் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்று கேட்கிறார். அவள் கூறும் பதில் அவருக்கு ஒரு கதவை திறந்து வைக்க அங்கிருந்து கிளம்புகிறார்.

2 மணி நேரம் 23 நிமிடம் ஓடும் இப்படத்தின் 1 மணி நேரம் 20வது நிமிடத்தில் Watanabe இறந்து அவருடைய ஈமச் சடங்குகள் காட்சி ஆரம்பிக்கிறது. இதன் பின் வரும் காட்சிகள் தான் ஏன் குரோசோவாவை உலகமெங்கும் உள்ள சினிமா காதலர்கள் கொண்டாடுகிறார்கள் என்பதை நியாயம் செய்யும் பகுதி.

இந்த பின்பாதி Rashomon  படத்தின் பாணியில் அமைந்துள்ளது. Sidney Lumet இயக்கிய 12 Angry Men படத்தில் Ikiruவின் பாதிப்பு இருப்பதை இரண்டாம் பாதி முழுவதும் காணலாம்.

சராசரி மனிதர்கள் படிப்பிற்கு பின் வேலை, திருமணம், குழந்தை, பின்னர் அவர்களை வளர்த்து ஆளாக்கி விடுவது என்று வாழ்ந்து விட்டு போய் விடுகிறார்கள். அவர்களுக்கென்று பெரிய ஆசைகளோ, விருபங்களோ இருப்பதில்லை. இப்படி தனக்கென்று ஒரு passion, hobby இல்லாதவர்கள் பெரும் பணம் ஈட்டி ஓய்வு பெறும் போது சூன்யமும் வந்து சூழ்ந்து கொள்கிறது.

சம்பாதித்த காலத்தில் எந்த ஒரு அனுபவத்திற்கும், பயணத்திற்கும் பணம் செலவு செய்யாதவர்கள் அந்திம காலத்தில் எப்படி செய்வார்கள்? அப்படி பயணம் போனாலும் புண்ணியம் தேடி போறேன் என்று கோவில் கோவிலாக சுற்றுவார்கள். ஏற்கனவே மாசு பட்ட நதியில் இவர்களுடைய மாசுகளை சேர்த்து விட்டு வருவார்கள்.

அரசாங்கம் 58 வயதில் ஓய்வும் பென்சனும் கொடுத்து அனுப்புவது மீதி வாழ்க்கையை நிம்மதியாக வாழட்டும் என்று தான். ஆனால் பெரும்பாலானோருக்கு எந்த திட்டமிடலும் இருப்பதில்லை. TV பார்த்து கொண்டு, பூங்காக்களில் சக வயதினருடன் அரசியல், உடல் உபாதைகள் குறித்து பேசிக் கொண்டு, புலம்பிக்கொண்டு இருந்து விடுகிறார்கள். சிலர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர், சத் குரு ஜக்கி வாசு தேவ், ஓம் சக்தி, அம்மா, பிரம்ம குமாரிகள் என்று தங்கள் சக்திக்கு ஏற்ப ஏதோ ஒரு போலி அமைப்பிடம் மாட்டிக் கொள்கிறார்கள்.

தமிழ் இலக்கியத்தில் அகம், புறம் என்று பிரித்து வைத்திருக்கிறோம். புறவயமான விஷயங்களில் அதிக கவனம் செலுத்துகிறோம். ஆனால் அகவயமான வாழ்க்கை என்ற ஒன்றே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சட்டென வாழ்க்கை ஓடி விட பெரும் மன சுமையுடன் வாழ்ந்து விட்டு நீங்குகிறோம்.

Ikiru மனித வாழ்க்கையின் அர்த்தம் என்ன? என்ற ஆதாரமான கேள்வியை சுற்றியே உருவாக்கப்பட்டிருக்கிறது. Watanabe தனக்கு எது மகிழ்ச்சியளிக்கும் என்று கண்டு கொள்கிறார். அதை செய்து முடிக்க தனக்கு மீதமிருக்கும் வாழ்நாளை பயன்படுத்துகிறார்.

மனிதர்கள் மண்ணில் பிறப்பது மகிழ்ந்திருக்கவே. ஆனால் பொருள் தேடி அலையும் இவ்வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு அத்தனை பொருட்கள் தேவை இல்லை என்பதை மறந்து விடுகிறோம்.

நாம் சென்ற பிறகு நம்மை பற்றி நம் நண்பர்கள், உறவினர்கள் எப்படி பேசுகிறார்களோ அப்படித்தான் நாம் இந்த உலகத்தில் எஞ்ச போகிறோம் இல்லையா? அதை முற்றிலும் தீர்மானிக்க வேண்டியது நாம் தான். விதியின் வசம் விடலாகாது என்பதே Ikiru உணர்த்துவது.

Monday 11 September 2017

எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அய்யா அவர்களுக்கு எழுதிய கடிதம்.

எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அய்யா அவர்களுக்கு,

நான் தமிழ் நாட்டில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வாழும் உங்களின் வாசகன். என் பெயர் மருது. எங்க வீட்டில் 4 பேர். அதில் நான் மட்டுமே உங்கள் எழுத்துகளை வாசித்து இருக்கிறேன். என் தங்கை படித்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ஒரு நாளும் கேட்டுக் கொண்டதில்லை.

ஆனால் என் மாணவிகள் உங்கள் எழுத்தை வாசிக்க ஆரம்பித்து சயந்தனின் ஆதிரை வாசிக்கும் அளவிற்கு வாசிப்பில் தேர்ந்து விட்டார்கள்.

நான் ஆங்கிலப் பேராசிரியராக மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் வேலை பார்க்கிறேன். அது பொறியியல் கல்லூரி என்பதால் அங்கே இலக்கியத்திற்கு வேலை இல்லாமல் செய்து விட்டார்கள்.  கடந்த டிசம்பர் வரை என் ஊரில் உள்ள ஒரு ஒரு கலைக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயிற்றுவிக்கும் பேராசிரியராக இருந்தேன்.

உங்களுக்கு தெரியும். தமிழ் செம்மொழியாக இருந்த போதும் நமது அன்றாட வாழ்க்கையில் இலக்கியம் வாசிக்கும் சூழ்நிலை இல்லாமல் போய் விட்டது. தமிழ் பெருமை பேசுவதில் ஒரு குறை இல்லையென்றாலும் இலக்கியம் என்று வரும் போது சங்கம் சிங்கம் என்று எதுகை மோனையாக புரிந்து கொண்டு விடுவார்கள்.

ஆங்கில இலக்கியம் படிக்க வரும் மாணவர்கள் பெரும்பாலும் வேற எந்த மேல் படிப்பிற்கும் போதுமான மதிப்பெண் இல்லாமல் போகவே இங்கே வருவார்கள். தமிழ் இலக்கியத்திற்கும் அதே நிலைமை.

இயற்பியல், வேதியல், கணிப்பொறி படிப்பிற்கு எப்படி lab work இருக்கிறதோ அது போல நமக்கு வாசிப்பு என்று முதலாமாண்டு மாணவர்களுக்கு சொல்லுவேன். அவர்கள் படித்து முடித்து போகும் வரை நானும் சொல்லிக்கொண்டே இருப்பேன்.

ஆங்கில இலக்கியம் படிக்க வந்தவர்களிடம் எப்படி தமிழில் வாசிக்க சொல்வது என்று முதலில் ஒரு தயக்கம் இருந்தது. அதை கடக்க 3 வருடம் ஆனது. சொந்த மொழி இலக்கியம் எதுவும் தெரியாதவன் எப்படி ஆங்கிலம் படிப்பான் என்ற முடிவிற்கு வந்துவிட்டேன். இந்த முடிவிற்கு வரும் போது உங்கள் தளத்தில் தினம் ஒரு கதை, கட்டுரை என்று வாசித்து கொண்டிருந்தேன்.

நான் வேலைக்கு சேர்ந்த நாளில் இருந்து எனது மாணவர்களுக்கு கி.ரா, சுஜாதா, நாஞ்சில் நாடன் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் அப்புறம் உங்களின் கதைகளை வகுப்பில் அவ்வப்போது சொல்லுவேன்.  உங்களின் கோப்பைகள் கதையை நான் சொல்லி முடித்த உடனே என்ன கதையின் முடிவில் ஒரு தெளிவு இல்லையே என்று எதிர் கேள்விகள் வரும். His life goes on அப்டின்னு சொல்லி சமாளிப்பேன். Website ல படிச்சுக்கோங்க அப்டின்னு நான் சொல்லிட்டு அடுத்த வேலையை பார்க்க போய் விடுவேன்.

பின்னர் அதை Word Document ல் copy paste செய்ய முடியும் என்றும் அதை print out எடுக்க முடியும் என்றும் தெரிந்து கொள்ளும் போது பணிக்கு சேர்ந்து 3 வருடங்கள் முடிந்திருந்தன. (என்னுடைய வயது 29. JULY 2012ல் இருந்து ஆசிரியர் பணியில் இருக்கிறேன்)

உங்களுடைய கதை மற்றும் கட்டுரைகளை பழைய assignment paper ல் print out எடுத்து மாணவர்களிடம் வாசிக்க குடுக்க ஆரம்பித்தேன். மாணவிகளிடம் தான் சரி. பையன்கள் அவ்வளவாக ஆர்வம் காட்ட வில்லை. பெண் பிள்ளைகளுக்கு உங்கள் எழுத்துகள் மிகவும் பிடித்து விட்டன. புது பெண்சாதி, குற்றம் கழிக்க வேண்டும், பாதிக் கிணறு, சுவருக்குள்ளே மறையும் படுக்கை, என் குதிரை நல்லது போன்ற கதைகள் அவர்களை வெகுவாக பாதித்து விட்டது. அதை பற்றி அவர்களுக்குள்ளே பேசிக்கொள்ள தொடங்கி விட்டனர். மொத்த கதையையும் copy செய்து mail drafts ல் வைத்திருப்பேன். பின்னர் அங்கிருந்து whatsapp க்கு copy செய்து மாணவர்கள், நண்பர்கள் அனைவருக்கும் forward செய்து விடுவேன். Link copy paste செய்தால் போதும் அதை சொடுக்கி உங்கள் தளத்தில் சென்று வாசிக்க முடியும் என்று தெரிந்து கொள்ள மேலும் 6 மாசம் ஆனது.

சில கதை, கட்டுரைகள் தவிர்த்து உங்கள் வலைதளத்தில் இருந்த அத்தனை கதை கட்டுரைகளையும் அச்செடுத்து தினம் ஒன்றாக ஒரு semester முழுவதும் வாசிக்க கொடுத்து கொண்டிருந்தேன். என்னிடம் உங்களின் புத்தகம் ஒன்றும் அப்போது இல்லை.  புத்தகம் வாங்க மதுரைக்கு போக வேண்டும். எங்கள் ஊரில் இருந்து 100 kilometre. மேலும் பணமும் வேண்டுமே.

உங்கள் கதை கட்டுரைகளை வாசித்து விட்டு மாணவிகள் என்னை கேள்வியால் துளைப்பார்கள். அதெப்படி இவரால் இலங்கை, பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் குறித்தெல்லாம் எழுத முடிகிறது.

இவையெல்லாம் உண்மையா?!

கதைக்கும் கட்டுரைக்கும் என்ன வித்தியாசம்?

இவர் எல்லா ஊருக்கும் போனாரா?!

இப்படி கேள்விகளை அடுக்குவார்கள். பின்னர் நான் உங்களை பற்றி சொல்லுவேன். வேலை நிமித்தமாக பல நாடுகளில் இருந்ததால் அவரால் இப்படியெல்லாம் எழுத முடிகிறது என்று. பின்னர் ஒரு நாள் whatsapp group ல் உங்கள் பிறந்த நாளை கொண்டாடி கொண்டிருந்தார்கள்.

ஆங்கில இலக்கியம் படிக்க வந்தவர்கள் தமிழில் வாசிக்க ஆரம்பித்து விட்டார்கள். வாசிப்பு பழகிய பின்னர் ஆங்கில வாசிப்பும் கை கூடும் என்ற நம்பிக்கையில் நானும் தொடர்ந்து கோபல்ல கிராமம், பனி மனிதன், கடவுள் தொடங்கிய இடம் என்று ஆரம்ப கட்ட வாசகர்களுக்கு என்று வாசிப்பு வரைபடம் ஒன்று தயாரித்தேன்.

என்னிடமிருந்த காடு,  ஆழி சூழ் உலகு, புயலிலே ஒரு தோணி, கொரில்லா, ஆறா வடு, ஆதிரை என்று புத்தகங்களை வாசிக்க கொடுக்க ஆரம்பித்தேன். இதற்குள் வாசிப்பில் விருப்பமுள்ள மற்றொரு பேராசிரியர் அவரின் புத்தகங்களை கொண்டு வந்து கொடுத்தார். மாணவிகளும் pocket money, வீட்டில் கேட்டு வாங்கியது என்று புத்தகம் வாங்க ஆரம்பித்து விட்டனர். 2016ம் ஆண்டு மதுரை புத்தக காட்சிக்கு ஒரு குழுவாக சென்று வந்தனர்.

வாழ்க்கையில் ஒரு சிறுகதை கூட வாசித்திருக்காத 18 வயது கல்லூரி மாணவருக்கு எப்படி  இலக்கியத்தை அறிமுக படுத்துவது என்று ஒரு புரிதல் உண்டாகியிருக்கிறது.

உங்கள் கதைகளில் உள்ள கதை சொல்லியின் குரல் எல்லோருக்கும் பிடிக்கிறது. அங்கதம், பகடி எல்லாம் ஒரு கணம் கை நழுவி பிடிபடுகிறது. காலுக்கு கீழ் உள்ள கடல் மண்ணை கடல் அலை அரித்து செல்லும் போது உண்டாகும் ஒரு பரவசம். வாசிப்பது மகிழ்ச்சியான ஒரு காரியம் என்ற மனநிலையை கொடுக்கிறது. தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்ற தூண்டலை அளிக்கிறது.

இப்போது அந்த batch மாணவிகள் இளங்கலை முடித்து செல்கிறார்கள். நானும் அங்கிருந்து வேறு கல்லூரிக்கு மாறி சென்று விட்டதால் அவர்களுக்கு நினைவுப்பரிசாக உங்களின் புத்தகங்களை வாங்கி அளிக்க முடிவு செய்தேன். மதுரை நற்றினையில் ஆட்டுப்பால் புட்டு 10 பிரதி மற்றும் தோற்றவர் வரலாறு 1 பிரதி மட்டுமே கிடைத்தது. மற்றவர்களுக்கு நற்றிணை பதிப்பக வெளியீடாக வந்துள்ள மற்ற புத்தகங்களை வாங்கி அளித்தேன்.

ஈழத்தை சேர்ந்த 3 தமிழ் எழுத்தாளர்களின் (நீங்கள், ஷோபா சக்தி, சயந்தன்) எழுத்துகளை அதிகம் வாசித்த தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவிகள் இவர்கள் தாம்.

உங்கள் எழுத்தில் இருந்து ஆரம்பித்திருக்கா விட்டால் இவர்கள் வாசிக்க விரும்பியிருப்பார்களா என்ற சந்தேகம் எனக்கு இன்றும் உண்டு.  மாணவிகளிடம் நாம் அனைவரும் எழுத்தாளர் முத்துலிங்கம் அய்யா அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்று சொன்னேன். சொன்ன கையோடு தான் இந்த கடிதத்தை எழுத ஆரம்பித்தேன்.

உங்களின் எழுத்துகள் ஒரு உலக பார்வையை அளிக்கின்றன. உலக நாட்டு சினிமாக்களை ஓடி ஓடி பார்க்கும் நண்பர்கள் எனக்கு உண்டு. ஆனால் உங்கள் கதைகளை வாசித்து எனது மாணவிகளிடம் ஏற்பட்ட ஒரு புரிதல், பார்வை அந்த நண்பர்களிடம் இல்லை என்பதை காண்கிறேன்.

இப்போது மீண்டும் உங்கள் கதை, கட்டுரைகளை Whatsapp ல் share செய்கிறேன். கதை அல்லது கட்டுரையில் இருந்து மிக சுவாரசியமான ஒரு பகுதியை copy செய்து அதை மேற்கோளுக்குள் அடைத்து விட்டு அதன் இணைய பக்கத்தின் link, கதை அல்லது கட்டுரையின் பெயர் சேர்த்து முழுதும் வாசிக்க விரும்புபவர்கள் மேலே உள்ள சுட்டியை சொடுக்கவும் என்று சொல்லி விடுவேன். இது சினிமாக்களுக்கு வெளியிடப்படும் teaser போல. இப்போது இரண்டு மாணவர்களும் வாசிக்கின்றனர்.

பொருள் தேடி அலையும் இந்த வாழ்வில் உங்கள் எழுத்துக்கள் எனக்கு அமைதியை தருகிறது. தனிமையை நிரப்ப உதவுகிறது. தூங்கும் முன்னோ இல்லை காலை எழுந்த உடனோ உங்கள் எழுத்தோடு நாளை தொடங்க வேண்டும் என்று நினைப்பேன். சமீபத்தில் ஆதிப்பண்பு கதையை மீண்டும் மீண்டும் வாசித்தேன். பின்னர் வால்காவிலிருந்து கனடா வரை. அனைத்து கதை கட்டுரைகளும் எனக்கு மிகவும் பிடித்தவையே.

விகடன் தடத்தில் நீங்கள் தொடர்ந்து செய்யும் நேர்முக எழுத்துக்களை முதலில் வாசிப்பேன். இந்த மாதம் உங்களின் நேர்முகம் இடம் பெற்று இருக்கிறது. அதை வாசித்து விட்டு உண்மை கலந்த நாட்குறிப்புகள் தேடினேன் ஆனால் நாடற்றவன் தான் கிடைத்தது வாங்கி வந்து வாசித்து கொண்டிருக்கிறேன். அதில் நானும் மகளும் என்னை உருக்கி விட்டது.

கதை, கட்டுரை இரண்டு வடிவிலும் ecology பற்றிய அக்கரையுடன் எழுதுபவர் நீங்கள். எனக்கு அத்தகைய கதைகள் மூலம் சுற்று சூழல் குறித்து பல புரிதல்கள் உண்டாகி உள்ளது. அது பூமா தேவி கதையானாலும், எட்டாவது சிகரம் கட்டுரையனாலும் சரி படித்து வியந்து விட்டு நம்முடைய நுகர்வை குறைப்பது எப்படி என்று யோசிப்பேன். நீங்கள் Ramachandra Guha எழுதிய How Much Should a Person Consume? என்ற புத்தகம் வாசித்திருக்கிறீர்களா? நான் அதை வாசித்த பிறகு தான் உங்கள் கதைகளை வாசிக்க தொடங்கினேன். சூழியல் குறித்து அதில் திரட்டிய தகவல்களை எப்படி மாணவருக்கு Environmental Science (இது சும்மா கணக்கிற்கு சொல்லி தரப்படும் ஒரு பாடம், ஆனாலும் நான் இது குறித்து வாசித்து மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டேன்) வகுப்பில் சொல்லி தருவது என்று யோசித்து கொண்டிருந்த போது உங்கள் கதைகள், கட்டுரைகள் பக்க பலமாக வந்து கை கொடுத்தன.

இன்னும் நிறைய எழுத வேண்டும் என்று நினைக்குறேன். இன்னும் நிறைய வாசித்து விட்டு எழுதுகிறேன்.

மிக்க அன்புடன்

மருது

Sunday 27 August 2017

Ulidavaru Kandante - Once Upon a Time in Udupi

இந்தியாவில் அதுவும் தமிழில் வெற்றியடையும் ஒரு சினிமா, அது போல கதை, பின்னணி உடைய சினிமா மற்ற மொழிகளில் உருவாக ஒரு தொடக்கமாக அமைந்து விடுவது உண்டு. இது பெரும்பாலும் வணிக வெற்றி படங்களுக்கே நடக்கும் (கஜினி, பொல்லாதவன், சிங்கம்) என்றாலும் சுப்ரமணியபுரம் போல ஒரு period film ஆக எடுக்க பட்டு அது வணிக வெற்றியும் அடையும் போது அது போலவும் முயற்சிகள் உறுதியாக நடக்கும்.

அனுராக் கஷ்யப் தன்னுடைய Gangs of Wasseypur படத்தை தமிழ் இயக்குனர்கள் பாலா, அமீர், சசிகுமார் போன்றவர்களுக்கு வணக்கம் வைத்தே ஆரம்பிக்கிறார். தெலுங்கில் ரத்த சரித்திரம், மலையாளத்தில் கம்மட்டிபாடம், அங்கமாலி டைரிஸ் கொஞ்சம் தேடினால் மராட்டி, வங்காளி என்று நிச்சியம் இது போல படங்கள் இருக்கும்.

இங்கே நாம் பார்க்க போகும் Ulidavaru Kandante ஒரு கன்னட Period Film. ஒரு noir, crime thriller என்றும் சொல்லலாம்.  சசிகுமார் போலவே தன்னுடைய முதல் படத்தை எழுதி, இயக்கி, நடித்தும் இருக்கிறார் ரக்ஷித் ஷெட்டி என்கிற 30 வயது இளைஞர்.

இதை தொடர்ந்து பேசுவதற்கு முன்...

Akira Kurosowa, Sergio Leone, Quentin Tarantino போன்ற இயக்குனர்களின் தாக்கத்தில் படம் எடுப்பவர்கள் பெரும்பாலும் சொதப்பி விடுகிறார்கள் அல்லது over do செய்து விடுகிறார்கள். Ulidavaru Kandante வில் மூன்று இயக்குனர்களின் பாதிப்பும் காட்சிக்கு காட்சி உண்டு ஆனாலும் படம் புதுமையானதாகவே இருக்கிறது.

குரோசோவாவின் Rashomon போல பல கதாபாத்திரங்களின் பார்வையில் திரைக்கதை விரிகிறது. இதற்கு Tarantino பாணி வசனங்கள், Leone பாணி காட்சியமைப்புகள் மற்றும் இசை என்று படம் பட்டாசாக இருக்கிறது.

சில படங்களை பார்ப்பதற்கு ஒரு முன் தயாரிப்பு வேண்டும். Ulidavaru Kandante அது போல ஒரு படம். Rashomon தொடங்கி, Once Upon a Time in the West, Scarface, Pulp Fiction என்று ஏகப்பட்ட படங்களின் reference இருப்பதால் இது பற்றி தெரியாத ஒரு நபர் படம் குழப்பமாக இருக்கிறது என்று சொல்லவே வாய்ப்பு அதிகம். Reference படங்களை ஏற்கனவே பார்திருந்தவர் Ulidavaru Kandante வை பார்க்கும் போது நிச்சியம் 'அட என்னமா எடுத்திருக்கான்' என்றே சொல்லுவார்.

படத்தில் மொத்தம் ஆறு அத்தியாயங்கள். உடுப்பி அருகே இருக்கும் கடற்கரை கிராமமான Malpeவில் ஒரு கொலை விழுகிறது. அதை பற்றி விசாரித்து எழுதும் பத்திரிகையாளர் அந்த கொலையுண்ட நபருடன் சம்மந்த பட்ட நபர்களை விசாரிக்கிறார் அதில் பல கிளைக்கதைகள் இருக்கவே ஒவ்வொரு கதையை தனித்தனி அத்தியாயமாக எழுதி அவை இறுதி அத்தியாயத்தில் வந்து முடியுமாறு எழுதுகிறார். அதையே நாம் திரையில் காண்கிறோம்.

இதற்கு மேல் வாசிக்கும் முன் படத்தின் ட்ரைலரை ஒரு முறை பாருங்கள்.

Trailer

https://m.youtube.com/watch?v=POJ_6EtGeMw

படத்தின் கதையை சுருக்கமாக சொல்வது என்பது கூட இந்த படத்தின் spirit ற்கு எதிராக திரும்ப வாய்பிருப்பதால் சிறப்பம்சங்களை மட்டும் இங்கே சொல்கிறேன்.

முதலில் படத்தின் பின்புலம். கதை 1990களில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. மாநகரம், இயற்கை அழகு கொஞ்சம் இடம் என்றெல்லாம் இல்லாமல் ஒரு கடற்கரை கிராமம்/நகரத்தில் நடைபெறுகிறது. வள்ளம், தோணி கட்டும் தளம், மீன் சந்தை, என்று detailing பிரமிக்க வைக்கிறது. வட்டார மொழியில் தான் கதா பாத்திரங்கள் பேசிக்கொள்கிறார்கள். அங்கே உள்ள மொழி சிறுபான்மையினர் பேசிக்கொள்ளும் போது கன்னடத்தில் subtitle வருகிறது. கடற்கரை பகுதியை சேர்ந்தவர்கள் மலைப்பகுதியில் இருந்து அங்கே பிழைக்க வந்தவர்களை கேலி செய்கிறார்கள். இப்படி நுணுக்கமான விசயங்கள் தான் வழக்கமான மசாலா படங்களில் இருந்து இப்படத்தை கவனிக்க வேண்டிய படமாக மாற்றுகிறது.

இரண்டாவது நடிகர்கள். கிஷோர் பின்னர் மாற்றான் படத்தில் சூர்யாவிற்கு அம்மாவாக நடித்த நடிகை மட்டுமே நமக்கு தெரிந்த முகங்கள். அத்தனை பேரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். Democracy என்றொரு சிறுவன் கதாபாத்திரம். அவன் காந்திஜியின் மூன்று குரங்குகள் என்று விளக்கம் சொல்லும் காட்சிகள் அங்கத சரவெடி. கதாநாயகன் ரிச்சி யாக ரக்ஷித் ஷெட்டி. "As the Cuban kid always said, Here we meet once again" என்று கதாநாயக buildup கொடுத்து அறிமுகம் ஆகிறார். பின்னர் Lucia படத்தில் theatre owner ஆக நடித்த நடிகர்.

மூன்றாவதாக உள்ளூர் கலைகள். Yakshagaana, புலி ஆட்டம் அதற்கான தயாரிப்பு என்று மிக விரிவாகவே அவர்களை படம் பிடித்திருக்கிறார். Yakshagaana வில் சொல்லப்படும் கதைக்கும் படத்தின் மையதித்திற்கும் உள்ள தொடர்பை கவனியுங்கள். புலி ஆட்டக் காட்சிகள் புல்லரிக்க செய்யும். கதை உள்ளூரில் நடைபெறும் திருவிழா நாளில் நடப்பதால் இவையெல்லாம் இடம் பெற வேண்டும் என்று ரக்ஷித் ஷெட்டி முடிவு செய்தாராம்.

நான்காவதாக இசை. பாடல்கள், பின்னணி இசை இரண்டும் தமிழ், ஆங்கில படங்கள் மட்டுமே பார்க்கும் ரசிகர்களுக்கு புது விருந்தாக இருக்கும். சிறுவர்களின் ஜாலியான பாடல் ஒன்றும் உண்டு, மகன் வருகைக்காக காத்திருக்கும் அம்மா, காதலியை பின் தொடரும் நாயகன் என்று பின்னணியாக வரும் பாடல்களும் காட்சிகளை மெருகேற்றுகின்றன. இறுதியாக புலி ஆட்ட பாடலும், புலி வேடமிட்ட கலைஞர்களுடன் ரக்ஷித் ஷெட்டி ஆடுவதும் அதில் உள்ள பழங்குடி தன்மையும், அந்த மயக்கும் இசையும் இப்படியெல்லாம் இசை அமைக்க முடியுமா என்றே ஆச்சரியப்பட வைக்கும்.

ஒளிப்பதிவும் சிறப்பானதாகவே இருந்தது. படத்தில் குழப்பம் விளைவிப்பது journalist கதா பாத்திரம் தான். அவர் அத்தனை time line லும் வருகிறார். நல்ல வேளை இவருக்கு duet வைக்காமல் விட்டார்கள்.

இந்த படத்தை பார்ப்பதற்கு முன்னால் Pulp Fiction படத்தை மட்டுமாவது ஒரு முறை பாருங்கள். ஏன் என்று Ulidavaru Kandante பார்க்கும் போது புரியும்.

8 தோட்டாக்கள் படத்தின் இறுதியில் filmography என்று ஒரு பட்டியல் இருக்கும். அதில் உள்ள எந்த படத்தை பார்க்காதவர்களுக்கும் 8 தோட்டாக்கள் பிடித்திருக்கவே செய்தது. அது போலவே Ulidavaru Kandante ஒரு must see film. இங்கே reference படங்களாக சொல்லப்பட்ட படங்களை பார்க்காமலும் நீங்கள் பார்க்கலாம். ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.