Wednesday 20 May 2015

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!


‘தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்’
‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’

என்றெல்லாம் வீர வசனம் பேசுபவர்களிடம் ‘எங்கே ஒரு ஐந்து சமகால தமிழ் எழுத்தாளர்களின் பெயரை சொல்லு’ என்றோ ‘கடைசியாக என்ன தமிழ் புத்தகம் படித்தாய்?’ என்றோ கேட்டால் ‘அதுக்கும் இதுக்கும் என்னையா சம்மந்தம்?’ என்று இடத்தை காலி செய்வார்கள்.

இங்கே தினம் ஒன்றாக தமிழின் சிறந்த சமகால படைப்பாளிகளின் வலைதளங்களை பகிர்கிறேன்.

ஏனென்றால் ஒரு மொழி வாழ்வதும், மேன்மையுறுவதும், நிலைத்து நிற்பதும் அம்மொழியில் படைக்கப்படும் இலக்கியங்களாலேதான்.

சங்க இலக்கியங்களையும், திருக்குறளையும் மேற்கோள் காட்டித்தானே எல்லா இனத்துக்கும் மூத்தவர் என்று பெருமைபட்டுக்கொள்கிறோம்?

இத்தளங்கள் எழுத்தாளரையும் அவருடைய படைப்புகளையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். விருப்பமுள்ளவர்கள் படிக்கலாம். தமிழையும் வாழ வைக்கலாம்!

சமகால தமிழ் எழுத்துக்குள் நுழைய கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பை சொடுக்கவும்.




http://www.amuttu.net/

Monday 18 May 2015

பண்பாடு, கலாச்சாரம், மற்றும் பல கேள்விகள்…

விவசாயத்தை கைவிட்டு பிழைப்புக்காக நகரத்திற்கு வந்து அங்கேயே தங்கி விட்டவர்கள் தங்கள் சொந்த ஊரில் உள்ள கோயிலுக்கு வரி குடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழகத்தில் எந்த பகுதியில் இருந்தாலும் கோயில் கொடைக்கு ஊருக்கு வந்து விடுகிறார்கள். இவர்கள் குடிபெயர்ந்து வசிக்கும் ஊரில் உள்ள பெரிய கோயில் சாமிகளையும் விடுவதில்லை. தங்கள் பகுதியில் உள்ள குறு நில கடவுள்களையும் விடுவதில்லை.

30 வருடங்களுக்கு முன் இருந்ததை விட இன்று தமிழகத்தில் உள்ள மக்களிடம் நிச்சயம் அதிக பணம் புழங்குகிறது. அதனால் கோயில்களுக்கு பணம் செலவு செய்வதெல்லாம் இவர்களுக்கு ஒரு பெரிய விசயமாக தெரிவதில்லை. இவர்கள் உலகமெங்கும் இருந்து உழைத்து அனுப்பிய பணத்தில் அவர்கள் ஊரில் உள்ள சாமிகள் வசதியான கட்டிடங்களுக்கு இடம் பெயர்ந்து இருக்கிறது.

பண்பாடாக கலாச்சாரமாக இவையனைத்தையும் பார்த்தாலும் இந்த கொடைகள் எல்லாம் விவசாயத்தை கைவிட்டுவிட்ட மக்களின் கேளிக்கையாகவும் கொண்டாட்டாமாகவும் இன்று மாறிவிட்டன. என்னதான் மின்சார தட்டுபாடு இருந்தாலும் இவர்கள் ஜெனரேட்டரை வைத்து நாள் முழுவதும் ஒலிபெருக்கியில் காது செவிடாகும் சத்ததில் பக்தி பாடல்களை கதற விடுவார்கள். சீரியல் லைட், ஃபோக்கஸ் லைட் என்று அமர்களப்படுத்துவார்கள்.

இதையெல்லாம் முன்னின்று நடத்துவது யார்?  அந்தந்த ஊர்களில், பகுதிகளில் உள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கங்களும் அந்த நேரத்தில் எது ஆளும் கட்சியோ அதில் ஏதோ ஒரு துக்கடா பொறுப்பில் இருக்கும் உறுப்பினர்களும் தான். இவர்களை நம்பி 500 ரூபாயக்கு குறையாமல் வரி குடுத்து கொண்டிருப்பார்கள் மக்கள். ‘என்னடா இது எலக்சனுக்கு வாங்குனது இப்படி போயிருச்சே’ என்றெல்லாம் இவர்கள் நினைப்பதில்லை. ‘கோயில் காரியம்’ என்று தயங்காமல் செய்வார்கள். வசூல் செய்யப்பட்ட பணத்திற்கு கொடை முடிந்தவுடன் கணக்கு ’காட்டப்படும்’. இதன் உண்மைத்தன்மையை பெரும்பாலும் யாரும் கேள்வி கேட்பதில்லை. சாமி குத்தம் ஆகிவிடக்கூடாதில்லையா?!

சரி இப்படி வசூல் செய்யும் பணத்தில் அப்படி என்ன தான் செய்கிறார்கள்? ஊர் பெண்கள் விரும்பி கேட்டார்கள் என்று ஒன்றுக்கும் மேற்பட்ட முறை சினிமா பாட்டுக்கச்சேரி வைப்பார்கள். இதற்கு பெயர் ‘இன்னிசை நிகழ்ச்சி.’ நிதியைப்பொறுத்து ‘டிவிப்புகழ்’ என்றும் ‘சூப்பர் சிங்கர்’; என்று யாரையாவது பாட அழைத்து வருவார்கள். ஏரியாவில் உள்ள பெரிசுகளை பொறுத்து பழைய புரட்சி மற்றும் நடிகர் திலகங்களின் பாடல்கள் இடம்பெறும். பின்னர் அந்த பகுதியில் அதிகமாக வசிக்கும் சாதியின் புகழ் பாடும் சினிமா பாடல்கள் மற்றும் அந்த சாதியை சேர்ந்த நடிகர் நடித்த படங்களில் இருந்து பாடல்கள். இது போக மற்றவர்கள், குழந்தைகளை குசிப்படுத்த அந்த நேரத்தில் எந்த பாடல்கள் பிரலபமோ அந்த பாடல்கள். நம்முடையது சனநாயக நாடு பாருங்கள்!

முன்னர் திரை கட்டி படம் காட்டிக்கொண்டிருந்தனர் ஆனால் இன்றைய தேதியில் எந்த படமும் மூன்றே நாட்களில் பழசாகிவிடுவதால் மக்களுக்கு சலிப்பாகிவிட்டது போல. கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகளை ஆடல் பாடல் கலைக்குழுக்கள் இல்லாமல் செய்ய, தோல், பாவை கூத்து, விடிய விடிய நடக்கும் நிகழ்த்து கலைகள் நாட்டார் கலைகள் பற்றி அய்யா நாஞ்சில் நாடன் மாதிரி யாராவது விகடனில் எழுதினால் தான் உண்டு. சினிமா நடிகனை தங்கள் இரட்சிப்பராக பார்ப்பவர்கள் பாரம்பரிய கலை நிகழ்த்துபவர்களை அச்சிட தரமற்ற வார்தைகளில் ஏசுகிறார்கள். பின்னர் எப்படி தமிழகத்தின் பாரம்பரிய கலைகள் வாழும்? சினிமாவில் இருந்து வந்து முதல்வர் ஆனவர்களுக்கு என்ன கவலை என்பதை நான் உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்.

தமிழக மக்கள் ஒரு வருடத்திற்கு கோயில் கொடைகென்று செலவு செய்யும் தொகையை கற்பனை செய்து பார்த்தால் எனக்கு மயக்கம் வரும் போல் இருக்கிறது. முதுகலை பொருளாதாரம் படித்த என் நண்பனொருவன் அழகிரி மதுரை குலுங்க பிறந்த நாள் கொண்டாடுவதை சரியென்பான். அது ஏன்டா சரியென்றால், அப்போதுதான் பயன்படுத்த படாமல் இருக்கும் பணம் வெளியே வரும், பேனர், போஸ்டர் அடிப்பவர் முதல் அதை ஒட்டுபவர் வரை பலருக்கும் வேலை கிடைக்கும், அவர்களிடம் பணம் புழங்கும் அவர்கள் அதை செலவு செய்வார்கள் என்று ஒரு கேயாஸ் தியரியை சொல்லி என் வாயை அடைப்பான்.

கோயில் கொடைகளுக்கு செலவு செய்யப்படும் பணத்தையும் இப்படி ஒரு கோட்பாடை கொண்டு நியாயப்படுத்த முடியவில்லை. கோயிலுக்கென்று பணம் வசூல் செய்ய வரும் கூட்டம் ஊரில் உள்ள வேறெந்த பிரச்சினைகளையும் கையில் எடுக்க மாட்டார்கள். சாலை வேண்டும், வாறுகால் வசதி வேண்டும் தண்ணீர் வேண்டும் என்று அந்தந்த பகுதி பெண்கள் வீதியில் உருண்டு, மறியில் செய்து அவற்றை பெற்றால் தான் உண்டு. தங்கள் ஊரில் தண்ணிப்பஞ்சம் தலைவிரித்தாடினாலும், நிலத்தடி நீர் வற்றிப்போனாலும் அது குறித்து எந்த கவலையும் இல்லாமல் தங்கள் சாதிப்பெருமையை காப்பாற்ற நீர் வரும் வழிகள் அடைக்கப்பட்டு காய்ந்து போன தெப்பக்குளத்தில் தெப்ப தேர் விழா நடத்த 2 லட்சம் செலவு செய்து பக்கத்து ஊர்களில் இருந்து தண்ணீரை லாரிகளில் கொண்டு வந்து அந்த பாடாவதி குளத்தில் நிரப்புவதை என் நண்பன் சொன்ன பொருளாதார தத்துவத்தின் கீழ் புரிந்து கொள்ள என் மனம் மறுக்கிறது.

தாங்கள் வசிக்கும் ஊரில் ஒரு நல்ல நூலகம் இல்லை, பேருந்து நிலையம் இல்லை, அங்கே நல்ல கழிப்பிட வசதியில்லை, ஊரை உரசிக்கொண்டு போகும் தேசிய நெடுஞ்சாலையின் தரம் ஊரில் உள்ள எந்த சாலையிலும் இல்லை. இது எதுவுமே இவர்கள் சிந்தனைக்கு செல்லாதா? இல்லை இவர்கள் இதெல்லாம் அரசாங்கத்தின் கடமை என்று நினைக்கிறார்களா? கல்வி, மருத்துவம், தண்ணீர் என்று எல்லாத்தையும் கை கழுவிக்கொண்டிருக்கும் அரசாங்கம் செயல் படும் விதம் இவர்களுக்கு ஏன் உறைக்கவில்லை? பிச்சையெடுத்து சேர்த்த பணத்தில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு குடி தண்ணீர் கிணறு வெட்டி வைத்தவர்கள் வாழ்ந்த நாடு இது. அவர்களின் மனதும் சிந்தனையும்; தண்ணீரை காசு குடுத்து வாங்கும் நமக்கு புரியப்போவதில்லை.

சரி கோயில் கொடையாவது அந்த பணத்தில் உருப்படியாக நடக்கிறதா? பாரம்பரிய கலையை, கலையை நிகழ்த்தும் கலைஞர்களை வாழ வைக்கிறதா என்றால் அதற்கு பதிலாக வெறுமையே எஞ்சுகிறது. வீட்டுக்கு ஒரு ரத்தக்கொதிப்பு பாதிப்பு உள்ள நபர் இருக்கும் இந்நாளில் நாளெல்லாம் ஒரு வாரத்திற்கு ஒலிப்பெருக்கியில் உச்ச சத்ததில் பக்தி பாடல் இறைந்து கொண்டிருந்தால் பாதிக்கப்பட்டவருக்கு பக்தி எப்படி வரும்? கைக்குழந்தைகள், விளையாட்டு பிள்ளைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் போக அந்த பகுதியில் சுற்றுத்திரியும் வாயில்லா சீவன்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையாக இது யாருக்கும் தெரியவில்லையா? இந்த சத்தத்தில் எப்படி சாமி உறவினர்கள் உரையாடுவார்கள்?

ஆளுங்கட்சி அமைச்சர்கள், ச ம உக்கள் எதிர் கால அனுகூலம் கருதி காது குத்துலாம், காவடி எடுத்கலாம், மொட்டை போடலாம், மண் சோறு திங்கலாம், முளைப்பாரி சுமக்கலாம், பால் குடம் எடுக்கலாம், தீச்சட்டி தூக்கலாம், பூக்குழி இறங்கலாம், கோயில்ல உருளலாம் ஆனால் இதையெல்லாம் வருசம் தவறாமல் கோயில் கொடைகளில் செய்யும் மக்கள் வாழ்க்கையில் என்னத்தை கண்டார்கள்? நான் பெரியாரியம் எல்லாம் பேசவில்லை. இவ்விழாக்களை, கொடைகளை எளிமையாக மாற்றி அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பவர்கள் அதை முதலில் நிறைவேற்றிக்கொண்டால் என்ன? என்று தான் கேட்கிறேன். ஒரு வேளை ‘சாமிக்கு செய்தால் தனக்கு தன் குடும்பத்தாருக்கு திரும்பி வரும் ஊருக்கு செய்தால் என்ன கிடைக்கும்’ என்று நினைக்கிறார்களோ? இல்லை இது நடக்காது என்று சொல்வீர்களேயானால் ‘குடிக்கிறது கூழு வாய் கொப்பளிக்கிறது பன்னீரு’ என்ற பழமொழி; தோன்றியதற்கான பண்பாட்டுக் காரணங்களை புரிந்து கொண்டவன் ஆகிறேன்.

மேற்சொன்ன பழமொழி உதித்த பண்பாட்டில் இருந்து வந்தவர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மேற்கோளையும் புரிந்து கொள்வார்கள்.

ஏழைகளின் கோபத்திலிருந்து பணக்காரர்களை காப்பாற்றும் எளிய தந்திரத்தின் பெயர்தான் மதம்.
                                                                                    - ஆஸ்கார் ஒயில்ட்

Friday 15 May 2015

விளையாட்டாக மாறுவது!

குழந்தைகள் கோயிலுக்கு சென்று வந்த உடன் பூசாரி வேடம் கட்டுகிறார்கள். ஒரு தட்டில் திருநீறு, குங்குமத்தை அள்ளிப்போட்டு வீட்டில் உள்ளவர்களை குனிந்து கும்பிடச்சொல்லி தங்களது பிஞ்சு விரல்களில் கொஞ்சமே கொஞ்சமாக திருநீறை எடுத்து குனிந்திருப்பவர்களின் தலை மேல் கொஞ்சம் தூவி மிச்சத்தை அவர்கள் நெற்றியில் ஒற்றியெடுக்கிறார்கள்.

குழந்தைகள் ஏன் சாமி வேசம் போடவில்லை என்று உங்களுக்கு கேள்வி எழுந்தால் நீங்கள் உங்களுக்குள் உள்ள குழந்தையை தொலைத்து விட்டீர்கள். கோயிலில் சாமி அசையாமல்ல இருக்கு? குட்டி பாப்பாவோ தம்பியோ எப்படி அசையாமல் இருப்பார்கள்?! அது போக சாமி வேசம் கட்ட ஊரில் நிறைய பேர் இருக்கிறார்கள். 

பள்ளிக்கு சென்று வந்த முதல் நாள் வீட்டில் உள்ளவர்களுக்கு பாடம் எடுக்கிறார்கள்.

பேருந்தில் சென்று வந்தால் பென்சிலை காதில் சொருகிகிகொண்டு, ஒரு நோட்டை கைக்கிடையில் வைத்து கொண்டு டிக்கெட் கொடுக்கிறார்கள்.

பெரியவர்கள் இந்த விளையாட்டில் பார்வையாளராகவோ பங்கு பெறுபவராகவோ இருக்க முடியுமே தவிர ஒரு போதும் விளையாட்டாக ஆக மாற முடிவதில்லை.

அப்புறம்‬ ஏன்?!!!

ஸ்டீவ் ஜாப்ஸ் சரிதை தமிழில் கிடைக்கிறது. கோபிநாத்தின் ‘ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க’ ஆங்கிலத்தில் கிடைக்கிறது. ஆப்பிள் ஃபோன் வாங்கிறவன், வாங்கணும்னு நினைக்கிறவன் எல்லாம் ஸ்டீவ் ஜாப்ஸ் சரிதை வாங்கி படிக்க போறதில்லை. வெள்ளக்காரன், வெளியூர்காரன் எவனும் கோபிநாத் புஸ்தகத்தை வாங்குவான்னு சொல்ல முடியாது.

‪#‎அப்புறம்‬ ஏன்?!!!

அசைவம்

நான் அசைவம் விரும்பி சாப்பிடுவேன் என்றாலும் எல்லா ஞாயிறும் கட்டாயம் வேண்டும் என்றெல்லாம் கேட்பதில்லை. கறிக்கடையில் வெட்டப்படும் கறி நமக்கானது என்று தெரியும் போது என் நாக்கில் நீர் ஊறியது உண்டு.

சிறு வயதில் கோயில் கொடையின் போது மொத்தமாக வெட்டப்பட்டு பலி கொடுக்கப்பட்ட ஆடுகளை கண்ட போது கூட நான் பயந்ததில்லை. ஆனால் அந்த ரத்த வாடை ஒரு மாதிரி என்னை தடுமாற செய்தது நினைவிருக்கிறது.
என்னடா இது கொஞ்சம் கூட இந்த ‘உயிர்களிடத்தில் அன்பு வேணும்’ அப்படிங்கிற தத்துவம் வேலை செய்யாத ஆளா இருக்கனே என்று என்னைப்பற்றி ஒரு வருத்தமும் எனக்கு உண்டு. 

பூகம்பம், சுனாமி, குண்டு வெடிப்பு, கொலை, விபத்துகள் இதையெல்லாம் செய்தியா பார்த்து பார்த்து இரக்கம், பரிவு போன்ற உணர்ச்சிகளை கையாளும் ழூளையின் பகுதி மழுங்கிருச்சோ என்று ரெம்ப நாளாக எனக்கு ஒரு சந்தேகம் இருந்து கொண்டிருக்கிறது.

மழை பெய்து கண்மாய் நிரம்பும் காலங்களில் 7,8 வயது சிறுவனோ சிறுமியோ நீச்சல் பழக போய் உயிர் விட்ட செய்திகளை படிக்கும் போது எனக்கு அவர்களை பெற்றவர்கள் மீது தான் கோபம் வரும். பிள்ளைக்கு நீச்சல் சொல்லி தர்றத விட இவர்களுக்கு என்ன வேலை? கூடவே என் அப்பா நான் ஒழுங்காக தமிழ் எழுத படிக்க பழகுறதுக்கு முன்னாடியே எனக்கு சைக்கிள் மிதிக்கவும் நீச்சல் அடிக்கவும் கற்றுக் கொடுத்தது நினைவுக்கு வரும்.

சமீபத்தில் பெய்து ஒய்ந்த மழையில் எங்களது வீட்டிற்கு வெளியே மழைத்தண்ணி தேங்கிவிட்டது. மழை வெறித்த அந்த சாயங்காலம் என் அப்பா எதிர் வீட்டுக்காரரிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருப்பது கேட்டு என்ன என்று கேட்க வெளியே வந்தேன்.

எதிர்வீட்டுக்காரர் நிறைய கோழிகள் வளர்க்கிறார். அவரது வீட்டுக்கோழிகள் எப்போதும் புதிதாக இவ்வுலகத்திற்கு வந்த குஞ்சுகளுடன் வலம் வந்து கொண்டிருக்கும். 7,8 குஞ்சுகள் தாய்க்கோழி பாதுகாப்புடன் விளையாடிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடி ஓடி மண்ணை கொத்துவது பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

என் அப்பா எதிர்வீட்டுக்காரரிடம் சொன்னது இது தான், ‘மழைக்கு கோழியெல்லாம் சுவர்ப்பக்கம் ஒதுங்கி அதுல ரெண்டு கோழிக்குஞ்சு தண்ணில முங்கி செத்து போச்சு.’ மேற்கொண்டு கேட்க என்னால் முடியவில்லை. என் அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டேன்.