எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அய்யா அவர்களுக்கு,
நான் தமிழ் நாட்டில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வாழும் உங்களின் வாசகன். என் பெயர் மருது. எங்க வீட்டில் 4 பேர். அதில் நான் மட்டுமே உங்கள் எழுத்துகளை வாசித்து இருக்கிறேன். என் தங்கை படித்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ஒரு நாளும் கேட்டுக் கொண்டதில்லை.
ஆனால் என் மாணவிகள் உங்கள் எழுத்தை வாசிக்க ஆரம்பித்து சயந்தனின் ஆதிரை வாசிக்கும் அளவிற்கு வாசிப்பில் தேர்ந்து விட்டார்கள்.
நான் ஆங்கிலப் பேராசிரியராக மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் வேலை பார்க்கிறேன். அது பொறியியல் கல்லூரி என்பதால் அங்கே இலக்கியத்திற்கு வேலை இல்லாமல் செய்து விட்டார்கள். கடந்த டிசம்பர் வரை என் ஊரில் உள்ள ஒரு ஒரு கலைக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயிற்றுவிக்கும் பேராசிரியராக இருந்தேன்.
உங்களுக்கு தெரியும். தமிழ் செம்மொழியாக இருந்த போதும் நமது அன்றாட வாழ்க்கையில் இலக்கியம் வாசிக்கும் சூழ்நிலை இல்லாமல் போய் விட்டது. தமிழ் பெருமை பேசுவதில் ஒரு குறை இல்லையென்றாலும் இலக்கியம் என்று வரும் போது சங்கம் சிங்கம் என்று எதுகை மோனையாக புரிந்து கொண்டு விடுவார்கள்.
ஆங்கில இலக்கியம் படிக்க வரும் மாணவர்கள் பெரும்பாலும் வேற எந்த மேல் படிப்பிற்கும் போதுமான மதிப்பெண் இல்லாமல் போகவே இங்கே வருவார்கள். தமிழ் இலக்கியத்திற்கும் அதே நிலைமை.
இயற்பியல், வேதியல், கணிப்பொறி படிப்பிற்கு எப்படி lab work இருக்கிறதோ அது போல நமக்கு வாசிப்பு என்று முதலாமாண்டு மாணவர்களுக்கு சொல்லுவேன். அவர்கள் படித்து முடித்து போகும் வரை நானும் சொல்லிக்கொண்டே இருப்பேன்.
ஆங்கில இலக்கியம் படிக்க வந்தவர்களிடம் எப்படி தமிழில் வாசிக்க சொல்வது என்று முதலில் ஒரு தயக்கம் இருந்தது. அதை கடக்க 3 வருடம் ஆனது. சொந்த மொழி இலக்கியம் எதுவும் தெரியாதவன் எப்படி ஆங்கிலம் படிப்பான் என்ற முடிவிற்கு வந்துவிட்டேன். இந்த முடிவிற்கு வரும் போது உங்கள் தளத்தில் தினம் ஒரு கதை, கட்டுரை என்று வாசித்து கொண்டிருந்தேன்.
நான் வேலைக்கு சேர்ந்த நாளில் இருந்து எனது மாணவர்களுக்கு கி.ரா, சுஜாதா, நாஞ்சில் நாடன் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் அப்புறம் உங்களின் கதைகளை வகுப்பில் அவ்வப்போது சொல்லுவேன். உங்களின் கோப்பைகள் கதையை நான் சொல்லி முடித்த உடனே என்ன கதையின் முடிவில் ஒரு தெளிவு இல்லையே என்று எதிர் கேள்விகள் வரும். His life goes on அப்டின்னு சொல்லி சமாளிப்பேன். Website ல படிச்சுக்கோங்க அப்டின்னு நான் சொல்லிட்டு அடுத்த வேலையை பார்க்க போய் விடுவேன்.
பின்னர் அதை Word Document ல் copy paste செய்ய முடியும் என்றும் அதை print out எடுக்க முடியும் என்றும் தெரிந்து கொள்ளும் போது பணிக்கு சேர்ந்து 3 வருடங்கள் முடிந்திருந்தன. (என்னுடைய வயது 29. JULY 2012ல் இருந்து ஆசிரியர் பணியில் இருக்கிறேன்)
உங்களுடைய கதை மற்றும் கட்டுரைகளை பழைய assignment paper ல் print out எடுத்து மாணவர்களிடம் வாசிக்க குடுக்க ஆரம்பித்தேன். மாணவிகளிடம் தான் சரி. பையன்கள் அவ்வளவாக ஆர்வம் காட்ட வில்லை. பெண் பிள்ளைகளுக்கு உங்கள் எழுத்துகள் மிகவும் பிடித்து விட்டன. புது பெண்சாதி, குற்றம் கழிக்க வேண்டும், பாதிக் கிணறு, சுவருக்குள்ளே மறையும் படுக்கை, என் குதிரை நல்லது போன்ற கதைகள் அவர்களை வெகுவாக பாதித்து விட்டது. அதை பற்றி அவர்களுக்குள்ளே பேசிக்கொள்ள தொடங்கி விட்டனர். மொத்த கதையையும் copy செய்து mail drafts ல் வைத்திருப்பேன். பின்னர் அங்கிருந்து whatsapp க்கு copy செய்து மாணவர்கள், நண்பர்கள் அனைவருக்கும் forward செய்து விடுவேன். Link copy paste செய்தால் போதும் அதை சொடுக்கி உங்கள் தளத்தில் சென்று வாசிக்க முடியும் என்று தெரிந்து கொள்ள மேலும் 6 மாசம் ஆனது.
சில கதை, கட்டுரைகள் தவிர்த்து உங்கள் வலைதளத்தில் இருந்த அத்தனை கதை கட்டுரைகளையும் அச்செடுத்து தினம் ஒன்றாக ஒரு semester முழுவதும் வாசிக்க கொடுத்து கொண்டிருந்தேன். என்னிடம் உங்களின் புத்தகம் ஒன்றும் அப்போது இல்லை. புத்தகம் வாங்க மதுரைக்கு போக வேண்டும். எங்கள் ஊரில் இருந்து 100 kilometre. மேலும் பணமும் வேண்டுமே.
உங்கள் கதை கட்டுரைகளை வாசித்து விட்டு மாணவிகள் என்னை கேள்வியால் துளைப்பார்கள். அதெப்படி இவரால் இலங்கை, பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் குறித்தெல்லாம் எழுத முடிகிறது.
இவையெல்லாம் உண்மையா?!
கதைக்கும் கட்டுரைக்கும் என்ன வித்தியாசம்?
இவர் எல்லா ஊருக்கும் போனாரா?!
இப்படி கேள்விகளை அடுக்குவார்கள். பின்னர் நான் உங்களை பற்றி சொல்லுவேன். வேலை நிமித்தமாக பல நாடுகளில் இருந்ததால் அவரால் இப்படியெல்லாம் எழுத முடிகிறது என்று. பின்னர் ஒரு நாள் whatsapp group ல் உங்கள் பிறந்த நாளை கொண்டாடி கொண்டிருந்தார்கள்.
ஆங்கில இலக்கியம் படிக்க வந்தவர்கள் தமிழில் வாசிக்க ஆரம்பித்து விட்டார்கள். வாசிப்பு பழகிய பின்னர் ஆங்கில வாசிப்பும் கை கூடும் என்ற நம்பிக்கையில் நானும் தொடர்ந்து கோபல்ல கிராமம், பனி மனிதன், கடவுள் தொடங்கிய இடம் என்று ஆரம்ப கட்ட வாசகர்களுக்கு என்று வாசிப்பு வரைபடம் ஒன்று தயாரித்தேன்.
என்னிடமிருந்த காடு, ஆழி சூழ் உலகு, புயலிலே ஒரு தோணி, கொரில்லா, ஆறா வடு, ஆதிரை என்று புத்தகங்களை வாசிக்க கொடுக்க ஆரம்பித்தேன். இதற்குள் வாசிப்பில் விருப்பமுள்ள மற்றொரு பேராசிரியர் அவரின் புத்தகங்களை கொண்டு வந்து கொடுத்தார். மாணவிகளும் pocket money, வீட்டில் கேட்டு வாங்கியது என்று புத்தகம் வாங்க ஆரம்பித்து விட்டனர். 2016ம் ஆண்டு மதுரை புத்தக காட்சிக்கு ஒரு குழுவாக சென்று வந்தனர்.
வாழ்க்கையில் ஒரு சிறுகதை கூட வாசித்திருக்காத 18 வயது கல்லூரி மாணவருக்கு எப்படி இலக்கியத்தை அறிமுக படுத்துவது என்று ஒரு புரிதல் உண்டாகியிருக்கிறது.
உங்கள் கதைகளில் உள்ள கதை சொல்லியின் குரல் எல்லோருக்கும் பிடிக்கிறது. அங்கதம், பகடி எல்லாம் ஒரு கணம் கை நழுவி பிடிபடுகிறது. காலுக்கு கீழ் உள்ள கடல் மண்ணை கடல் அலை அரித்து செல்லும் போது உண்டாகும் ஒரு பரவசம். வாசிப்பது மகிழ்ச்சியான ஒரு காரியம் என்ற மனநிலையை கொடுக்கிறது. தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்ற தூண்டலை அளிக்கிறது.
இப்போது அந்த batch மாணவிகள் இளங்கலை முடித்து செல்கிறார்கள். நானும் அங்கிருந்து வேறு கல்லூரிக்கு மாறி சென்று விட்டதால் அவர்களுக்கு நினைவுப்பரிசாக உங்களின் புத்தகங்களை வாங்கி அளிக்க முடிவு செய்தேன். மதுரை நற்றினையில் ஆட்டுப்பால் புட்டு 10 பிரதி மற்றும் தோற்றவர் வரலாறு 1 பிரதி மட்டுமே கிடைத்தது. மற்றவர்களுக்கு நற்றிணை பதிப்பக வெளியீடாக வந்துள்ள மற்ற புத்தகங்களை வாங்கி அளித்தேன்.
ஈழத்தை சேர்ந்த 3 தமிழ் எழுத்தாளர்களின் (நீங்கள், ஷோபா சக்தி, சயந்தன்) எழுத்துகளை அதிகம் வாசித்த தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவிகள் இவர்கள் தாம்.
உங்கள் எழுத்தில் இருந்து ஆரம்பித்திருக்கா விட்டால் இவர்கள் வாசிக்க விரும்பியிருப்பார்களா என்ற சந்தேகம் எனக்கு இன்றும் உண்டு. மாணவிகளிடம் நாம் அனைவரும் எழுத்தாளர் முத்துலிங்கம் அய்யா அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்று சொன்னேன். சொன்ன கையோடு தான் இந்த கடிதத்தை எழுத ஆரம்பித்தேன்.
உங்களின் எழுத்துகள் ஒரு உலக பார்வையை அளிக்கின்றன. உலக நாட்டு சினிமாக்களை ஓடி ஓடி பார்க்கும் நண்பர்கள் எனக்கு உண்டு. ஆனால் உங்கள் கதைகளை வாசித்து எனது மாணவிகளிடம் ஏற்பட்ட ஒரு புரிதல், பார்வை அந்த நண்பர்களிடம் இல்லை என்பதை காண்கிறேன்.
இப்போது மீண்டும் உங்கள் கதை, கட்டுரைகளை Whatsapp ல் share செய்கிறேன். கதை அல்லது கட்டுரையில் இருந்து மிக சுவாரசியமான ஒரு பகுதியை copy செய்து அதை மேற்கோளுக்குள் அடைத்து விட்டு அதன் இணைய பக்கத்தின் link, கதை அல்லது கட்டுரையின் பெயர் சேர்த்து முழுதும் வாசிக்க விரும்புபவர்கள் மேலே உள்ள சுட்டியை சொடுக்கவும் என்று சொல்லி விடுவேன். இது சினிமாக்களுக்கு வெளியிடப்படும் teaser போல. இப்போது இரண்டு மாணவர்களும் வாசிக்கின்றனர்.
பொருள் தேடி அலையும் இந்த வாழ்வில் உங்கள் எழுத்துக்கள் எனக்கு அமைதியை தருகிறது. தனிமையை நிரப்ப உதவுகிறது. தூங்கும் முன்னோ இல்லை காலை எழுந்த உடனோ உங்கள் எழுத்தோடு நாளை தொடங்க வேண்டும் என்று நினைப்பேன். சமீபத்தில் ஆதிப்பண்பு கதையை மீண்டும் மீண்டும் வாசித்தேன். பின்னர் வால்காவிலிருந்து கனடா வரை. அனைத்து கதை கட்டுரைகளும் எனக்கு மிகவும் பிடித்தவையே.
விகடன் தடத்தில் நீங்கள் தொடர்ந்து செய்யும் நேர்முக எழுத்துக்களை முதலில் வாசிப்பேன். இந்த மாதம் உங்களின் நேர்முகம் இடம் பெற்று இருக்கிறது. அதை வாசித்து விட்டு உண்மை கலந்த நாட்குறிப்புகள் தேடினேன் ஆனால் நாடற்றவன் தான் கிடைத்தது வாங்கி வந்து வாசித்து கொண்டிருக்கிறேன். அதில் நானும் மகளும் என்னை உருக்கி விட்டது.
கதை, கட்டுரை இரண்டு வடிவிலும் ecology பற்றிய அக்கரையுடன் எழுதுபவர் நீங்கள். எனக்கு அத்தகைய கதைகள் மூலம் சுற்று சூழல் குறித்து பல புரிதல்கள் உண்டாகி உள்ளது. அது பூமா தேவி கதையானாலும், எட்டாவது சிகரம் கட்டுரையனாலும் சரி படித்து வியந்து விட்டு நம்முடைய நுகர்வை குறைப்பது எப்படி என்று யோசிப்பேன். நீங்கள் Ramachandra Guha எழுதிய How Much Should a Person Consume? என்ற புத்தகம் வாசித்திருக்கிறீர்களா? நான் அதை வாசித்த பிறகு தான் உங்கள் கதைகளை வாசிக்க தொடங்கினேன். சூழியல் குறித்து அதில் திரட்டிய தகவல்களை எப்படி மாணவருக்கு Environmental Science (இது சும்மா கணக்கிற்கு சொல்லி தரப்படும் ஒரு பாடம், ஆனாலும் நான் இது குறித்து வாசித்து மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டேன்) வகுப்பில் சொல்லி தருவது என்று யோசித்து கொண்டிருந்த போது உங்கள் கதைகள், கட்டுரைகள் பக்க பலமாக வந்து கை கொடுத்தன.
இன்னும் நிறைய எழுத வேண்டும் என்று நினைக்குறேன். இன்னும் நிறைய வாசித்து விட்டு எழுதுகிறேன்.
மிக்க அன்புடன்
மருது