Sunday 25 August 2019

The Lives of Others - திரைகளுக்கு அப்பால்

நீங்கள் என்றாவது உங்கள் நண்பரின் முகப்புத்தக கணக்கு வழியாக உங்கள் முகப்புத்தக கணக்கை பார்த்து இருக்கிறீர்களா? ஒரு பொய் கணக்கை தொடங்கி அதன் வழியாக உங்கள் கணக்கை சென்று பார்த்து இருக்கிறீர்களா? அப்படி செய்வது ஒரு வகையான குறுகுறுப்பை அளிப்பதை உணர்ந்து இருக்கிறீர்களா?

மனிதர்களை வேடிக்கை பார்ப்பது, ஊன்றி கவனிப்பது எல்லாம் சுவாரசியமான பொழுது போக்குகள் தான். ஆனால் வேவு பார்ப்பது, அவர்கள் மீது சந்தேகம் கொண்டு அவர்களே அறியாமல் அவர்களை 24 மணி நேரமும் கண்காணிப்பது என்பது உச்சபட்ச வன்முறை.

சமூக ஊடக காலத்தில் நாமே நம்மை பற்றிய பல தகவல்களை இணையத்தில் ஏற்றி வைத்திருக்கிறோம். கடந்த ஒரு மாதத்தில் நீங்கள் எங்கே சென்றீர்கள், என்ன பொருள் வாங்கினீர்கள், எங்கே சாப்பிட்டீர்கள்? என்று உங்களை உங்கள் இணைய வாழ்க்கை, இணைய பயன்பாடு, இணைய பரிவர்த்தனை வழியே வேவு பார்க்க முடியும்.

BJP இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்த பிறகு மாணவர்களின் சமூக ஊடக கணக்கை கண்காணிக்க அவர்களை மனித வள மேம்பாட்டு துறை அமைச்சக இணையதளத்தோடு இணைக்க சொல்லி ஒரு செய்தி வந்தது.  எதிர்ப்பு வலுத்தவுடன் கட்டாயம் இல்லை என்று சொல்லி விட்டார்கள்.

அவர்களே 2014ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆதார் வாங்க சொல்லி கட்டாய படுத்தினார்கள். பின்னர் ஆதார் எண்ணை வங்கி, சமையல் ஏரி வாயு, வாகன பதிவு என்று அனைத்திலும் இணைக்க சொன்னார்கள். ஆதார் என்பது மக்களை கண்காணிக்க, அவர்களின் வரவு செலவு என்னவென்று பார்க்க அரசு பயன்படுத்துகிறது என்பது கண்கூடு.

ஆங்கிலத்தில் Vicarious Experience/pleasure என்று சொல்வார்கள். Second hand experience. புத்தக வாசிப்பு, சினிமா பார்ப்பது மூலம் நமக்கு கிடைப்பது அத்தகைய அனுபவம் தான். 2006 ஆண்டு வெளியான German நாட்டு திரைப்படமான The Lives of Others என்கிற இந்த படம் ஒரு அரசாங்கம் மக்களை வேவு பார்த்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை நமக்கு ஒரு second hand experienceஆக அளிக்கிறது.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் இரண்டாக உடைந்த Germanyயின் கிழக்கு பகுதி ரஷ்ய ஆதரவுடன் German Democratic Republic என்ற தனி நாடாக மலர்ந்தது. 1990ல் பெர்லின் சுவர் வீழும் வரை ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்தது என்றே சொல்லலாம். Hitlerன் Fascist Agendaவில் இருந்து தப்பித்து ரஷ்ய Socialist Agendaவில் சிக்கிக்கொண்ட மனிதர்களின் கதை.

1984ல் ஆரம்பிக்கும் கதை பெர்லின் சுவர் வீழ்ந்து ஜெர்மனி ஒரே நாடாக மாறிய பின் இரண்டு ஆண்டுகள் கழித்து நிறைவுபெறுகிறது. இந்தப் படத்தை புரிந்து கொள்ள, இதன் தீவிரத்தன்மையை உணர்ந்து கொள்ள கொஞ்சம் அரசியல், வரலாற்று அறிவும், உணர்வும் தேவை. நுண்ணுணர்வு உள்ளவர்கள், நல்ல சினிமா ரசிகர்கள் இதை அவசியம் காண வேண்டிய படமென்றே சொல்வார்கள்.

Weisler என்பவர் தனியாக வாழும் ஒரு நடுத்தர வயது ஆள். அவர் Stasi எனப்படும் போலீஸ் பிரிவில் விசாரணை செய்யும் அதிகாரியாக இருக்கிறார். இந்த பிரிவு  மக்களை வேவு பார்ப்பதையே முழு நேர வேலையாக கொண்டிருந்தது. அல்லது அதற்காகவே உருவாக்கப்பட்ட பிரிவு. Weisler விசாரணை செய்யும் காட்சியில் நமக்கு Inglourious Basterdsல் வரும் Hans Landaவை நியாபக படுத்துகிறார். ஆனால் இது 2006ல் வெளியான படம் என்பது குறிப்பிட தக்கது.   

Weislerக்கு உறவினர் என்று யாரும் இல்லை. இளமை வேகத்தில், கொள்கை மீது கொண்ட பற்று காரணமாக தனியாக இருந்து விட்டார் என்பதை நாம் படம் பார்க்கும் போது புரிந்து கொள்கிறோம். அவருக்கென்று பொழுதுபோக்குகள் எதுவும் இல்லை. அனைத்தையும், அனைவரையும் சந்தேக கண்கொண்டு பார்க்க அவருடைய வேலை அவரை பழக்கி விட்டது.

வகுப்பு தோழனும் இந்நாளில் அரசில் செயலர் பதவியில் இருக்கும் நண்பன் ஒருவர் Weislerஐ கொஞ்சம் சீண்டுகிறார். பின்னர் நாடகத்துக்கு அழைத்து செல்கிறார். நாடக ஆசிரியரை  Weisler சந்தேகிக்கிறார். கலாச்சார துறை அமைச்சருக்கு நாடக ஆசிரியரின் காதலி மீது ஒரு கண். ஆசிரியரை எதிலாவது சிக்க வைக்காமல் அவளை அடைய முடியாது என்று புரிந்து கொள்ளும் அமைச்சர் அவர்களுடைய வீட்டை 24 மணி நேரமும் கண்காணிக்க, ஒட்டு கேட்க உத்தரவிடுகிறார்.

மேலிடத்தில் இருந்து வரும் உத்தரவை திறம்பட நிறைவேற்றும் Weisler கச்சிதமாக ஒட்டு கேட்பு கருவிகளை நாடக ஆசிரியர் Georg வீட்டில் பொருத்தி விட்டு கண்காணிப்பை அவரே நேரடியாக செய்கிறார்.

எதன் மேலும் பற்றோ, பிடிப்போ இல்லாமல் வாழும் Weislerக்கு எழுத்தாளர் மற்றும் அவருடைய காதலி Maria விடம் உள்ள உயிர்ப்பு அதிசயமாக படுகிறது. அவர்களுடைய ரகசியங்களை தெரிந்து கொள்கிறார். Mariaவின் துரோகத்தை Georgக்கு காட்டிக்கொடுக்கிறார். அவர்களுடைய இடத்தில் இருந்து அவர்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கிறார். அவர்களுடைய இன்ப துன்பங்களை புரிந்து கொள்கிறார்.

இது வரை குற்றம் செய்தவர்களையே விசாரித்த Weisler குற்றம் செய்வார்கள் என்கிற அனுமானத்தில் இவர்களை வேவு பார்க்க அது அவர்கள் மீது பரிவு ஏற்பட வழி வகுக்கிறது.

Ray Bradbury எழுதிய Fahrenheit451 என்கிற நாவலை மையமாக கொண்டு அதே தலைப்பில் Francious Truffaut இயக்கிய படத்தில் நாயகன் ஒரு வித்தியாசமான பணியில் இருக்கிறான். ஒரு Dystopian காலத்தில் நடக்கும் அந்த கதையில் புத்தகங்களை நெருப்பு வைத்து அழிக்கும் துறையில்  நாயகன் வேலையில் இருக்கிறான். தற்செயலாக ஒரு புத்தகம் அவனிடம் வந்து சேர அதை வாசித்து பார்த்து தான் மனித குலம் சேர்த்து வைத்த அறிவு செல்வத்தை அழிக்கும் மாபாதக செயலை  இத்தனை நாள் செய்ததை எண்ணி வருந்துகிறான்.

The Lives of Others படத்தில் இதே போல ஒரு புத்தகத்தை Weisler வாசிக்க நேர்கிறது. அது Georg வீட்டில் இல்லாத நேரத்தில் Weisler அங்கே சென்று திருடி வந்தது. Bertolt Brecht என்கிற கவிஞர், நாடக ஆசிரியரின் கவிதை புத்தகம் அது. அந்த புத்தகம் Weislerன் தன்னை சுற்றி ஏற்படுத்தி உள்ள கவசத்தில் உள்ள ஓட்டை வழியாக அவரின் இதயத்தை சென்று தொடுகிறது. Georg வாசிக்கும் இசை அவரை உன்னதமாக உணர வைக்கிறது.
ஓநாயாக இருந்தாலும் Weisler ஆட்டுக்குட்டியான Georg மற்றும் Mariaவின் நியாயத்தை புரிந்து கொள்கிறார். தன் அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை இரும்பு கரங்களில் இருந்து தப்பிக்க செய்கிறார்.

Weisler ஒரு Inspector Rankல் இருக்கும் அதிகாரி. அவருக்கு மேல் அதிகாரம் உள்ளவர்கள் ஆயிரம் பேர் இருக்கும் போது எத்தனை நாள் Georg மற்றும் Mariaவை காப்பாற்ற முடியும்? அவர்களை தண்டிக்க வேண்டும் என்கிற முடிவில் தானே அமைச்சர் வேவு பார்க்க உத்தரவிட்டார்? ஆதாரம் கிடைக்க விட்டால் போலியான ஆதாரம் கொண்டு வேண்டாதவர்களை முட்டி போட வைத்து விட மாட்டார்களா?!

இரண்டாம் உலக போரின் போது வதை முகாம்களில் அடைபட்டு சித்திரவதை அனுபவித்த யூதர்களை பற்றிய படங்கள் வருடத்திற்கு ஒன்றாவது வருகிறது. Schindler's List, Life is Beautiful, The Pianist, The Boy in the Striped Pajamas, The Counterfeiters, Son of Saul போன்ற படங்கள். இத்தகைய படங்கள் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு எத்தகைய தீங்கை செய்யவும் சாத்தியம் உள்ளது என்பதை நமக்கு நினைவு படுத்தி கொண்டே இருக்கின்றன. அதற்கு மதம், இனம், மொழி, அரசியல், கொள்கை என்று ஆயிரம் காரணம் கற்பிப்பார்கள் என்றும் சொல்கின்றன.

யூதர்கள் அனுபவித்த அவலத்தை சொல்லும் படங்கள் Holocaust Films என்று வகைப்படுத்த படுகின்றன. அது போல Communism, Socialism என்கிற பெயரில் அரசுகள் அதன் மக்களுக்கு செய்த துரோகங்கள் திரைப்படங்களாக, இலக்கியமாக வந்து கொண்டு இருக்கின்றன. The Lives of Others  அத்தகைய ஒரு படம் தான். 4 Months, 3 Weeks and 2 Days கிட்ட தட்ட The Lives of Others படம் அளிக்கும் உணர்வை அளிக்கும் மற்றொரு கிழக்கு ஐரோப்பிய படம்.

இன்று உலகம் வலது சாரிகளின் வசம் சென்று கொண்டு இருப்பதாக ஒரு உணர்வை அனைவரும் கொண்டிருக்கிறோம். இந்தியாவில் இன்னும் என்னவெல்லாம் காணப் போகிறோம் என்று தெரியவில்லை. சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி Communism, இடது சாரி தத்துவத்தின் மீது மக்கள் கொண்டிருந்த பற்றை சிதைத்து விட்டது. இடதோ, வலதோ  எதிர்தரப்பு இல்லாத, விரும்பாத அரசாங்கம் மக்களை கண்காணிப்பில் வைத்து, கொடுமை செய்து அதை அவர்கள் நல்லத்துக்கு செய்வதாக அவர்களையே நம்ப வைக்கும் என்பது தான் வரலாறு நமக்கு சொல்வது.

எந்த சாம்ராஜ்யமாக இருந்தாலும் அதுவும் ஒரு நாள் வீழும் என்பது வரலாறு நமக்கு அளிக்கும் ஆறுதல்.