Sunday 27 August 2017

Ulidavaru Kandante - Once Upon a Time in Udupi

இந்தியாவில் அதுவும் தமிழில் வெற்றியடையும் ஒரு சினிமா, அது போல கதை, பின்னணி உடைய சினிமா மற்ற மொழிகளில் உருவாக ஒரு தொடக்கமாக அமைந்து விடுவது உண்டு. இது பெரும்பாலும் வணிக வெற்றி படங்களுக்கே நடக்கும் (கஜினி, பொல்லாதவன், சிங்கம்) என்றாலும் சுப்ரமணியபுரம் போல ஒரு period film ஆக எடுக்க பட்டு அது வணிக வெற்றியும் அடையும் போது அது போலவும் முயற்சிகள் உறுதியாக நடக்கும்.

அனுராக் கஷ்யப் தன்னுடைய Gangs of Wasseypur படத்தை தமிழ் இயக்குனர்கள் பாலா, அமீர், சசிகுமார் போன்றவர்களுக்கு வணக்கம் வைத்தே ஆரம்பிக்கிறார். தெலுங்கில் ரத்த சரித்திரம், மலையாளத்தில் கம்மட்டிபாடம், அங்கமாலி டைரிஸ் கொஞ்சம் தேடினால் மராட்டி, வங்காளி என்று நிச்சியம் இது போல படங்கள் இருக்கும்.

இங்கே நாம் பார்க்க போகும் Ulidavaru Kandante ஒரு கன்னட Period Film. ஒரு noir, crime thriller என்றும் சொல்லலாம்.  சசிகுமார் போலவே தன்னுடைய முதல் படத்தை எழுதி, இயக்கி, நடித்தும் இருக்கிறார் ரக்ஷித் ஷெட்டி என்கிற 30 வயது இளைஞர்.

இதை தொடர்ந்து பேசுவதற்கு முன்...

Akira Kurosowa, Sergio Leone, Quentin Tarantino போன்ற இயக்குனர்களின் தாக்கத்தில் படம் எடுப்பவர்கள் பெரும்பாலும் சொதப்பி விடுகிறார்கள் அல்லது over do செய்து விடுகிறார்கள். Ulidavaru Kandante வில் மூன்று இயக்குனர்களின் பாதிப்பும் காட்சிக்கு காட்சி உண்டு ஆனாலும் படம் புதுமையானதாகவே இருக்கிறது.

குரோசோவாவின் Rashomon போல பல கதாபாத்திரங்களின் பார்வையில் திரைக்கதை விரிகிறது. இதற்கு Tarantino பாணி வசனங்கள், Leone பாணி காட்சியமைப்புகள் மற்றும் இசை என்று படம் பட்டாசாக இருக்கிறது.

சில படங்களை பார்ப்பதற்கு ஒரு முன் தயாரிப்பு வேண்டும். Ulidavaru Kandante அது போல ஒரு படம். Rashomon தொடங்கி, Once Upon a Time in the West, Scarface, Pulp Fiction என்று ஏகப்பட்ட படங்களின் reference இருப்பதால் இது பற்றி தெரியாத ஒரு நபர் படம் குழப்பமாக இருக்கிறது என்று சொல்லவே வாய்ப்பு அதிகம். Reference படங்களை ஏற்கனவே பார்திருந்தவர் Ulidavaru Kandante வை பார்க்கும் போது நிச்சியம் 'அட என்னமா எடுத்திருக்கான்' என்றே சொல்லுவார்.

படத்தில் மொத்தம் ஆறு அத்தியாயங்கள். உடுப்பி அருகே இருக்கும் கடற்கரை கிராமமான Malpeவில் ஒரு கொலை விழுகிறது. அதை பற்றி விசாரித்து எழுதும் பத்திரிகையாளர் அந்த கொலையுண்ட நபருடன் சம்மந்த பட்ட நபர்களை விசாரிக்கிறார் அதில் பல கிளைக்கதைகள் இருக்கவே ஒவ்வொரு கதையை தனித்தனி அத்தியாயமாக எழுதி அவை இறுதி அத்தியாயத்தில் வந்து முடியுமாறு எழுதுகிறார். அதையே நாம் திரையில் காண்கிறோம்.

இதற்கு மேல் வாசிக்கும் முன் படத்தின் ட்ரைலரை ஒரு முறை பாருங்கள்.

Trailer

https://m.youtube.com/watch?v=POJ_6EtGeMw

படத்தின் கதையை சுருக்கமாக சொல்வது என்பது கூட இந்த படத்தின் spirit ற்கு எதிராக திரும்ப வாய்பிருப்பதால் சிறப்பம்சங்களை மட்டும் இங்கே சொல்கிறேன்.

முதலில் படத்தின் பின்புலம். கதை 1990களில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. மாநகரம், இயற்கை அழகு கொஞ்சம் இடம் என்றெல்லாம் இல்லாமல் ஒரு கடற்கரை கிராமம்/நகரத்தில் நடைபெறுகிறது. வள்ளம், தோணி கட்டும் தளம், மீன் சந்தை, என்று detailing பிரமிக்க வைக்கிறது. வட்டார மொழியில் தான் கதா பாத்திரங்கள் பேசிக்கொள்கிறார்கள். அங்கே உள்ள மொழி சிறுபான்மையினர் பேசிக்கொள்ளும் போது கன்னடத்தில் subtitle வருகிறது. கடற்கரை பகுதியை சேர்ந்தவர்கள் மலைப்பகுதியில் இருந்து அங்கே பிழைக்க வந்தவர்களை கேலி செய்கிறார்கள். இப்படி நுணுக்கமான விசயங்கள் தான் வழக்கமான மசாலா படங்களில் இருந்து இப்படத்தை கவனிக்க வேண்டிய படமாக மாற்றுகிறது.

இரண்டாவது நடிகர்கள். கிஷோர் பின்னர் மாற்றான் படத்தில் சூர்யாவிற்கு அம்மாவாக நடித்த நடிகை மட்டுமே நமக்கு தெரிந்த முகங்கள். அத்தனை பேரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். Democracy என்றொரு சிறுவன் கதாபாத்திரம். அவன் காந்திஜியின் மூன்று குரங்குகள் என்று விளக்கம் சொல்லும் காட்சிகள் அங்கத சரவெடி. கதாநாயகன் ரிச்சி யாக ரக்ஷித் ஷெட்டி. "As the Cuban kid always said, Here we meet once again" என்று கதாநாயக buildup கொடுத்து அறிமுகம் ஆகிறார். பின்னர் Lucia படத்தில் theatre owner ஆக நடித்த நடிகர்.

மூன்றாவதாக உள்ளூர் கலைகள். Yakshagaana, புலி ஆட்டம் அதற்கான தயாரிப்பு என்று மிக விரிவாகவே அவர்களை படம் பிடித்திருக்கிறார். Yakshagaana வில் சொல்லப்படும் கதைக்கும் படத்தின் மையதித்திற்கும் உள்ள தொடர்பை கவனியுங்கள். புலி ஆட்டக் காட்சிகள் புல்லரிக்க செய்யும். கதை உள்ளூரில் நடைபெறும் திருவிழா நாளில் நடப்பதால் இவையெல்லாம் இடம் பெற வேண்டும் என்று ரக்ஷித் ஷெட்டி முடிவு செய்தாராம்.

நான்காவதாக இசை. பாடல்கள், பின்னணி இசை இரண்டும் தமிழ், ஆங்கில படங்கள் மட்டுமே பார்க்கும் ரசிகர்களுக்கு புது விருந்தாக இருக்கும். சிறுவர்களின் ஜாலியான பாடல் ஒன்றும் உண்டு, மகன் வருகைக்காக காத்திருக்கும் அம்மா, காதலியை பின் தொடரும் நாயகன் என்று பின்னணியாக வரும் பாடல்களும் காட்சிகளை மெருகேற்றுகின்றன. இறுதியாக புலி ஆட்ட பாடலும், புலி வேடமிட்ட கலைஞர்களுடன் ரக்ஷித் ஷெட்டி ஆடுவதும் அதில் உள்ள பழங்குடி தன்மையும், அந்த மயக்கும் இசையும் இப்படியெல்லாம் இசை அமைக்க முடியுமா என்றே ஆச்சரியப்பட வைக்கும்.

ஒளிப்பதிவும் சிறப்பானதாகவே இருந்தது. படத்தில் குழப்பம் விளைவிப்பது journalist கதா பாத்திரம் தான். அவர் அத்தனை time line லும் வருகிறார். நல்ல வேளை இவருக்கு duet வைக்காமல் விட்டார்கள்.

இந்த படத்தை பார்ப்பதற்கு முன்னால் Pulp Fiction படத்தை மட்டுமாவது ஒரு முறை பாருங்கள். ஏன் என்று Ulidavaru Kandante பார்க்கும் போது புரியும்.

8 தோட்டாக்கள் படத்தின் இறுதியில் filmography என்று ஒரு பட்டியல் இருக்கும். அதில் உள்ள எந்த படத்தை பார்க்காதவர்களுக்கும் 8 தோட்டாக்கள் பிடித்திருக்கவே செய்தது. அது போலவே Ulidavaru Kandante ஒரு must see film. இங்கே reference படங்களாக சொல்லப்பட்ட படங்களை பார்க்காமலும் நீங்கள் பார்க்கலாம். ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.