Saturday 30 July 2016

எங்கே எனது இடம்?!!


'திரைகடல் ஓடியும் திரவியம் தேட' வேண்டிய 24 வயதில் வீடு திரும்புவது என்று முடிவு எடுத்த போது அது மிக சரியான முடிவு என்று ஒரு உள்ளுணர்வு. 4 வருடங்களுக்கு பின்னர் அந்த முடிவு சரிதானா என்ற குழப்பம் என்னை ஆட்டுவிக்கிறது.

Hostel, வேலை செய்யும் போது தங்கிய இடங்களில் தான் மிக்க மகிழ்ச்சியாக, சுதந்திரமாக இருந்திருக்கிறேன் என்று எனக்கு தெரியும். இருந்தாலும் வீட்டில் இருந்து வேலை செய்தால் என்ன குறைந்து விடுவோம்?! என்றும், நம்ம சொந்த ஊரில் இருப்பவன் எல்லாம் மனுசன் இல்லையா?!, எதுக்கு வாங்கும் சம்பளத்தில் நான்கில் ஒரு பகுதியை வாடகைக்கு குடுக்க வேண்டும்?! என்று யோசித்து வீட்டுக்கு வந்து விட்டேன்.

இப்பொது சொந்த ஊரில் நண்பர்கள் என்று சொல்லி கொள்ள யாரும் இல்லை. எல்லோரும் பொருள் தேடி பறந்து கொண்டிருக்கின்றனர். தீபாவளி, பொங்கல் என்று ஓரிரு நாள் வந்து விட்டு திரும்பி விடுகிறார்கள்.

கல்லூரி படிக்கும் போது நண்பர்கள் வீட்டில் அமர்ந்து மணிக்கணக்காக அரட்டை அடித்து மகிழ்ந்து இருந்தோம். இப்போது நண்பர்களின் வீட்டிற்கு போனால் அவர்களின் அம்மா, அப்பா கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி முடிவதில்லை.

 'தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சா?', 'உனக்கு இப்போ சம்பளம் எவ்ளோ தாராங்க?', 'வேற வேலைக்கு முயற்சி பண்ணலையா?', 'சென்னை, கோவைன்னு வேலைக்கு try பண்ண வேண்டியது தான?' 'Professor வேலைக்கு 30 லட்சம் கேக்குறானமே?', இது எல்லாம் தெரிந்த பிறகு இறுதி கேள்வி 'உனக்கு கல்யாணம் எப்போ?'

இப்படி கேள்விகளுக்கு பெரும்பாலும் 'ஆமாம்', 'ஹா ஹா,' என்று சிரித்து சமாளித்து விட்டு வர வேண்டி இருக்கும். கல்யாணத்தை பத்தி கேட்பவர்கள் ஒரு 20 லட்சம் பணம் குடுத்து முதலில் வேலை ஒன்றை விலைக்கு வாங்க உதவினால் நல்லா இருக்கும். இவிங்க கேக்குறாங்க அப்டின்னு கல்யாணம் பண்ணா அப்புறம் நம்ம லட்சியம் என்ன ஆகுறது?!:-D

பணம் சம்பாரிக்க ஆரம்பித்த பிறகு குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தண்ணி அடித்து கொண்டு பேசுவது தான் நல்லா இருக்கும் என்று bar பக்கம் வண்டியை விடுகின்றனர். என்னை போன்ற பச்சை மண்ணுகளெல்லாம் என்ன செய்வதென்று அறியாது விழி பிதுங்கி நிற்கிறோம்!!!

மெட்ராஸ், பெங்களூரு, கோவை, மதுரை போன்ற பெரிய ஊர்களில்,  கடற்கரை, பூங்கா, Mall என்று பொது இடங்கள் நிறைய இருக்கும். அங்கே உலாத்தி கொண்டே கதைக்கலாம். ஆனால் கோவில்பட்டி மாதிரி ஒரு ஊரில் பொது வெளி என்பதே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இருக்கும் ஒரு பூங்காவிலும் பாம்புகள் குடியேறி இருக்கும். பெருசுகள் கூடி காரசாரமாக மாலைமுரசு, தினத்தந்தி என்று அரசியல் பேசிக்கொண்டு இருபார்கள்.

கோவில்களில் உண்டியல்களின் எண்ணிக்கை தான் அதிகம் இருக்கிறது. சாமியை தேடத்தான் வேண்டும். இதையும் மீறிய பொது வெளி என்பது 'நவீன பார் வசதி' கொண்ட 'TASMAC' தான். சந்தேகம் இருந்தால் சாயங்காலம் உங்கள் ஊரை கிரிவலம் வாருங்கள். வண்டிகள் எங்கெங்கே அதிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது என்று கவனியுங்கள்.

உறவினர் வீடுகளுக்கு போனாலும் இடைவிடாமல் தொலைக்காட்சி கதறிக்கொண்டிருக்கும். நல்ல நாள் அதுவுமா எல்லா வீட்டிலும் எல்லா பயபுள்ளைகளும் டிவியே கதின்னு தான் கிடக்கிறார்கள்.

படித்த கல்லூரிக்கு போலாம்னா அவிங்க வாசல்ல நிறுத்தி ஆயிரம் கேள்வி கேக்குறாய்ங்க. Alumni meet இருக்கு வான்னு கூப்பிடுவாங்க. வடிவேலுவ ஒரு பொடியன் திட்டி ஓட விட்டு kidneyய எடுத்திட்டு விட்டது கண் முன்னாடி வந்து போகும். பள்ளிக்கூடம் பக்கம் போனால் உடனே donation குடுங்க என்று ஓடி வருவார்கள்.

நண்பனுக்கு கல்யாணம் என்று நண்பர்கள் ஒண்ணு கூடினாலும் முதல் நாள் தண்ணி போட்டு விட்டு ஒரு அணி மல்லாந்து விடும். மண்டபத்தில் loud speaker கதறும். அட அமத்தி போடுங்கன்னா கேக்க மாட்டாய்ங்க. இதுக்கு மேல photo எடுத்து, Selfie எடுத்து FB, Whatsapp group என்று பதிவேற்றுவதில் நேரம் போகும்.

அட படிக்கும் போது அர்த்தமே இல்லாம பேசி அரட்டை அடிச்ச மாதிரி இனிமே நடக்காது போல அப்டின்னு நினைச்சுகிட்டு வீட்டுக்கு கிளம்பிட வேண்டியது தான்.

வீட்டுக்கு வந்தா டிவில அன்னைக்கு பரபரப்பான விசயம், அப்டி எதுவும் இல்லாட்டினாலும் இவிங்களே பரபரப்பா ஆக்கி ஊளை விட்டு, பாருங்க மக்களே பாருங்க என்று ஒப்பாரி வைத்து கொண்டு இருப்பார்கள்.

இந்த டிவிஇறைச்சல் இல்லாம இருக்கிற வீடு எங்கையாவது இருக்கா?!! அப்டி இருந்தா அந்த வீடு வேண்டாம் அது பக்கத்துல உள்ள வீடு வாடகைக்கு கிடைச்சா போதும்.

வேலை பாக்குற இடத்தில தினமும் சொம்பைகளை சமாளித்து விட்டு வீட்டுக்கு வந்தால் டிவியில் வரும் பைத்தியங்கள் போலியாக வியந்து, சிரித்து, கோபப்பட்டு, நெகிழ்ந்து என்று வெறுப்பு ஏத்துவார்கள்.

எதனால தமிழ் சமூகம் இப்படி இறைச்சல் மிகுந்த சமூகமா இருக்கு?!

இதிலிருந்து எப்படி தப்பிப்பது?!!

எதிர்பார்க்கும் அமைதி வீட்டில் இல்லாவிட்டால் வேறு எங்கே போவது?!

ஜெயகாந்தன் எழுதின ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் படித்தது இல்லை ஆனா தலைப்பு மட்டுமே போதுமானதா இருக்கு. இந்த வீட்டிற்குள் உள்ள உலகம் நம் விருப்பப்படி, கனவுப்படி இல்லை என்று தெரிந்த பிறகு வீடு அந்நியமாக ஆகி விடுகிறது.

கூட்டுக்குடும்பம் என்கிற கோட்பாடு, வாழ்க்கை முறை விவசாயம், தொழில் என்று குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஏதாவது பொறுப்பு இருந்த போது செல்லுபடி ஆகி இருக்கலாம். அங்கே தனி மனிதன் என்பது இல்லை. குடும்பமாக இணைந்து தான் அனைத்தையும் செய்ய முடியும்.

ஆனால் இந்த 21ம் நூற்றாண்டில்... தனி மனிதன், அவனுடைய கொள்கைகள், லட்சியம், கனவு என்று திட்டமிடும் போது அது இயல்பாகவே குடும்பத்தில் முரண் பாடுகளை கொண்டு வருகிறது. கனவு கண்ட படி வாழ்க்கை வாழ சூழ்நிலை இடம் குடுக்க மறுக்கும் போது சமரசம் கசப்புகளை அளித்து வெறுமையால் உள்ளத்தை நிறப்புகிறது. பின்னர் கூட்டு குடும்பம் என்ன?! கணவன் மனைவி என்று சேர்ந்து வாழ்வதே பெரும்பாடாகி விடுகிறது.

இங்கே கனவு என்பது சிகப்பான மனைவி, குளிரூட்டப்பட்ட அறைகள் கொண்ட வீடு, கார் என்று செட்டில் ஆவது அல்ல.

எனக்கே எனக்கு என்று ஒரு அமைதியான இடம்!!! பக்கத்து வீட்டு டிவி சத்தம் கேக்காத, கோவில் திருவிழான்னு loud speaker கத்தாத, எனக்கு ஓட்டு போடுங்கன்னு சத்தமா பிச்சை கேக்காத, roadல போறவன் வாறவன் சும்மா horn அடிக்காத, பக்கத்துல நாலு மரம், செடின்னு உள்ள ஒரு அமைதியான இடம்.

நண்பர்கள் வந்தால் அமர்ந்து கதைப்பதற்கு, புத்தகம் படிப்பதற்கு, நல்ல திரைப்படத்தை பார்ப்பதற்கு, மென்மையான பாட்டு கேட்பதற்கு, நிம்மதியாக உறங்குவதற்கு, கொஞ்சம் சிந்திப்பதற்கு, கொஞ்சம் எழுதுவதற்கு, இதுக்கெல்லாம் ஒரு இடம்.

நான் கேட்பது அதிகப்பிரசங்கிதனமா இருக்கா?!

இந்த 21ம் நூற்றாண்டுல கூட ஒரு அமைதியான இடத்தை உருவாக்க வாய்ப்பு இல்லையா என்ன?!

எல்லாம் யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாய் முடியும் என்று தாயுமானவர் சொன்னதாக ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, மற்றும் கடலுக்கு அப்பால் நாவலில் வரும் கதா பாத்திரங்கள் மீண்டும் மீண்டும் சொல்கின்றன, அது உண்மை தான?!!

கீழ உள்ள மூணு வரி கவிதை மாதிரி தெரியுதா??!! நானே எழுதினேன். :-)

வழி தவறிய எறும்பை போல
நானும் தேடிக்கொண்டிருக்கிறேன்
எங்கே என் இடம் என்று!

பி.கு.

தேடுபவன் கண்டடைவான் அப்டின்னு ஜெயமோகன் சொல்லி இருக்கார்.

நல்லா படிங்க...

ஜெயகாந்தன் இல்ல ஜெயமோகன்... ;-)















Sunday 17 July 2016

கடிதம் எழுதுவது எப்படி?!





இந்த கட்டுரையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல. படித்து மனம் புண்பட்டால் எழுதியவர் பொறுப்பு அல்ல. கட்டுரை பிடித்திருந்தால் தாராளமாக பாராட்டலாம். காசு, பணம் குடுத்தாலும் சந்தோசம் தான். ;-) :-D :-P

'காதல் கடிதம் எழுதுவது எப்படி?!' அப்டின்னு தான் தலைப்பு வச்சேன். அப்புறம் Professor ஒருத்தன் Love Letter எழுத மாணவர்களுக்கு சொல்லிக்குடுக்கிறான்னு கலாச்சார காவலர்கள் கிளம்பி வந்து விடுவார்கள் என்று தான் தலைப்பை மாத்தி விட்டேன்.

இந்த கலாச்சார காவலர் புண்ணாக்குகள் தலைப்பை தாண்டி படிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை தான்.

எனக்கு 28 வயசு ஆச்சு.

இது வரை ஒருத்தருக்கு கூட காதல் கடிதம் என்ன, கடிதமே எழுதியது இல்லை.

பள்ளிகளில் கற்பனையில் உதித்த நண்பர்களுக்கு, சுற்றுலா குறித்து, கோடை விடுமுறை குறித்து கடிதம் எழுத சொல்லி பயிற்சி கொடுப்பார்கள். தேர்வில் எழுதி தேறுவதற்கு.

அப்புறம் விடுமுறை கேட்டு விண்ணப்பம், Englishல என்னன்னு கேட்கவா வேணும்?!?!

Email id தொடங்கிய பின்னர், எனது Professor ஒருவருக்கு அவ்வப்போது mail அனுப்பிக்கொண்டிருந்தேன். FB வந்த பிறகு அதிலே message அனுப்பி கேட்டு கொள்வது.

பள்ளியில் இருக்கும் போது வீட்டுக்கு எழுதுவது போல சொல்லி தந்த கடிதம் பெரும்பாலும் சுற்றுலா செல்வதற்கு பணம் கேட்டு எழுதியதாகவே இருக்கும்.

கல்லூரி சென்ற பிறகு free sms அப்புறம் காசு குடுத்து sms என்று காலம் ஓடியது. கடிதம் எழுத வேண்டிய தேவையே இல்லை.

சூழல் இப்படி இருக்கும் போது காதல் கடிதம் எழுத வேண்டிய தேவை என்ன?!!

அதற்கான பொறுமை யாருக்கு இருக்கிறது?!!

காதலிப்பவர்கள் மட்டும் அல்ல, கணவன்-மனைவி, பெற்றோர், பிள்ளைகள் என கொஞ்சம், இல்லை இல்லை ஒரு 15 முதல் 20 வருடத்துக்கு முன்பு வரை எல்லாரும் கடிதம் எழுதி கொண்டு தானே இருந்தோம்.

இந்த Whatsapp Instant Messenger யுகத்தில், யுவனும், யுவதியும் Smiley அனுப்பியே பேசி முடித்து விடுகிறார்கள்.

Phone பேசும் போது அப்புறம் அப்புறம் என்று பேச விசயமில்லாமல் முழிக்கிறார்கள்.

கடிதம் கொஞ்ச நேரம் எடுத்து பொறுமையாக எழுதி, அதை அனுப்பி அதற்கான பதிலுக்கு காத்திருப்பது என்பது ஒரு மாதிரி கலவையான உணர்ச்சி தான்.

நீங்கள் 5 பக்கம் உங்கள் மனதில் உள்ளதை கொட்டி காதல் கடிதம் எழுதி அதற்கு வெறும் K என்று பதில் வந்தால் அப்படி பையனையோ, பெண்ணை கண்டிப்பா காதலிக்கணுமா என்ன?!!

30, 40 வருடங்களுக்கு முன்பெல்லாம் பெண் பார்க்கும் போது மாப்பிள்ளை முன்வைக்கும் ஒரேயொரு கேள்வி பொண்ணுக்கு எழுத படிக்க தெரியுமா என்பதாக தான் இருந்திருக்க வேண்டும்.

Land Line Phone கூட ஊருக்கு ஒன்று என்று இருந்த அந்த காலத்தில், வெளியூரில் வேலையில் இருக்கும் கணவர் மனைவியுடன் அனைத்தையும் பகிர்ந்து கொள்வது கடிதம் மூலமே சாத்திய பட்டிருக்கும்.

மனைவிக்கு எழுத படிக்க தெரியாது என்றால் இவருடைய கடிதம் மற்றொருவர் படித்து மனைவியிடம் சொல்வது போல் ஆகிவிடும். அதே போல் மனைவியும் இன்னொருவர் உதவியுடன் கடிதம் எழுதி அனுப்ப வேண்டி வரும்.

காதலர் இடையில் காற்று நுழைவது கூட அவர்களுக்கு துன்பத்தை தரும் என்று சங்க கவிதை எல்லாம் இருக்கு. அப்டி இருக்கும் போது இந்த கடிதம் newspaper மாதிரி எல்லாரும் படிக்க போறாங்க அப்டீன்னா மனுஷன் எப்படி அன்பை, காதலை, ஏக்கத்தை, தவிப்பை வெளிப் படுத்துவான். இவர்கள் பேசுவது எல்லாமே புற வயமான விஷயமாக தான இருக்கும்.

அப்படி இருப்பது அகச்சிக்கல்களுக்கு இட்டு செல்லாத?!!

ஒவ்வொரு மனுசனுக்கும் கடிதம் எழுத ஒரு உறவு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்டி எழுத யாரும் இல்லையென்றால் ஒவ்வொருவரும் கற்பனையாக ஒரு காதலன், காதலியை உருவாக்கி மனதில் உள்ளதை அந்த கடிதத்தில் இறக்கி வைக்கலாம் என்று நினைக்கிறேன்.

 (இங்கே மனுசன் என்பது ஆண், பெண் இருவரையும் சேர்த்து தான் (பெண்ணியவாதிகள் கிட்டயும் சண்டை போட்டு முடியாது, அதான் இந்த 'பொறுப்பு துறப்பு'))

அது ஏன் கற்பனை காதலன், காதலி என்று கேள்வி எழுந்தால், இங்கே தமிழ்ச்சமுகத்தில் உறவுகளுக்கும், நட்புக்கும் பஞ்சம் இல்லை. இந்த 4G யுகத்தில் சுற்றமும், நட்பும், அனைத்தையும் மொண்ணையான கண்ணோட்டத்தில் பார்க்க பழகிக்கொண்டிருக்கிறது. போக நம்ம call பண்ணும் போது attend பண்ணாம விட்டுட்டு பிறகு பார்த்து திருப்பி கூப்பிடாத பக்கிக நமக்காக கடிதம் எழுதுவாய்ங்க??!!ம்ஹூம், எனக்கு நம்பிக்கை இல்லை.

ஆண், பெண் நட்பே குதிரை கொம்பு என்று ஆகும் போது, காதல் என்பது எல்லாருக்கும் எங்கே வாய்க்க போகிறது. காதலை பற்றி தெரிந்த பெற்றோர், ஆசிரியர் இல்லவே இல்லை என்றே நினைக்கிறேன்.

இந்த சூழலில் ஒரு பெண் ஒரு பையனிடம் பென்சில் கேட்டால் கூட பையன் காதலுக்கான அறிகுறி என்று கனவு காண ஆரம்பித்து விடுகிறான். Propose பண்ணி bulb வாங்குகிறான்.

ஒரு பெண்ணை, பையனை பிடித்து விட்டது என்றால் உங்கள் மனதில் உள்ளதை ஒரு கடிதமாக எழுதுங்கள். மிகை உணர்ச்சிக்கு இடம் கொடுக்காமல் எழுதுங்கள். யார் கண்ணிலும் படாமல் பத்திரமாக வையுங்கள். ஒரு 10 நாள் கழித்து எடுத்து மீண்டும் படியுங்கள். உங்கள் மனசை அலை பாய வைத்த விசயத்திற்கு விடை கிடைத்திருக்கும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

எனது நண்பர்கள், resignation, grievance முதல் explanation letter வரை ஆங்கிலத்தில் எழுத என்னை அவ்வப்போது தொடர்பு கொள்வர்.

MBA, MA என்று படித்த நண்பர்களால் ஏன் ஒரு கடிதம் கூட எழுத முடியவில்லை என்ற கேள்வி எனக்குள் நீண்ட நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மனப்பாடம் பண்ணி எழுத சொல்லி குடுத்த நேரத்தில் மனதில் உள்ளதை எழுதி படித்து பார்க்க சொல்லி கொடுத்திருந்தால் நாம் ஓர் சிந்திக்கும் சமூகமாக மாறி இருப்போம்.

கல்லூரியில் பின்னூட்டம் எழுதி வாங்கும் போது நூறில் ஒருவர் தான் மனதில் உள்ளதை உள்ள படி எழுதி கொடுக்கின்றனர். அந்த பின்னூட்டம் எழுதிய நபர் மிகவும் உறுதியானவர் என்பதை சொல்லும். அந்த கடிதம் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

Proposal வரும் போது (இதுக்கு நல்ல தமிழ் வார்த்தை இல்லையா?!) பையனோ, பெண்ணோ,  'உன் மனசில் உள்ளதை கடிதமா எழுதி கொண்டு வா, படிச்சுட்டு சொல்றேன்' என்று சொன்னால் போதும், தொல்லை தருபவர்கள் ஓடி விடுவார்கள்.

எழுதிக்கொண்டு வருபவரை பிடிக்காத பட்சத்தில் விவரமாக மறுப்பு கடிதம் எழுதி விசயத்தை முடித்து கொள்ளலாம்.

இதற்க்கு சில விதிகளை கடை பிடிக்கலாம்.

1. கடிதம் தங்கிலத்தில் இருந்தால் நிராகரிக்கலாம்.

2. இலக்கணப்பிழை, எழுத்துப்பிழை, சந்திப்பிழை இருந்தால் பிழைத்து போகட்டும் என்று மறுவாய்ப்பு தரலாம்.

3. கடிதம் நன்றாக இருந்தால் 10 நாள் அவகாசம் கேட்டு 10 நாளுக்கு பிறகும் பட்டாம்பூச்சி பறக்கிறதா என்று பார்க்கலாம்.

4. இப்படி கடுமையான வரைமுறைகளை கடைபிடிக்கும் போது தமிழில் எழுதுபவர்களுக்கு தான் காதலிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை உருவாகும். இதனால் தமிழ் வாழும்.

5. இதயங்கள் இணைந்துவிட்டால் காதல் கடிதம் எழுத தனி நோட்டுப்புத்தகம் ஒன்றை போட்டு, தினசரி எழுதி பரிமாறிக்கொள்ளலாம். எப்படியும் தேவைக்கு அதிகமாக பள்ளி கல்லூரிகளில் நோட்டுப்புத்தகம் தருவார்கள். அதை ஏன் வீணாக்க வேண்டும்?!?!

6. இப்படி காதலித்தால் காந்திய பொருளாதார விதிகள் படி செலவு மிச்சமாகும்.

7. வகுப்பில் ஆசிரியர் விடும் கதை பிடிக்க வில்லை என்றால் நீங்கள் குறிப்பு எடுப்பது போல் கடிதம் எழுதுவதை தொடரலாம்.

8. ஊடல் வரும் போது பழைய கடிதங்களை படித்து பார்த்து மனம் திரும்பலாம்.

இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

இதுக்கு மேல் என்ன எழுதுவது என்று தெரியவில்லை அதனால் இந்த கட்டுரை இதோடு நிறைவு பெறுகிறது. ;-)









Saturday 2 July 2016

The Godfather கோவில்பட்டிக்கு வந்த கதை...



1999 அல்லது 1998ம் வருட Manorama Year Book. அது ஒரு குட்டி கலைக்களஞ்சியம். அதில் சுவாரசியமான பல செய்திகள் அங்கங்கே சின்ன பெட்டிகளில் குடுக்க பட்டிருக்கும். மற்ற கட்டுரைகள், தகவல்கள் படிக்கும் அளவுக்கு அப்போது மன முதிர்ச்சி இல்லை.

Greatest 10 films of Hollywood என்று ஒரு பெட்டி செய்தி.

அதில் Casablanca முதல் இடத்திலும், Citizen Kane 2வது இடத்திலும், The Godfather 3வது இடத்திலும் இருந்தது. Gone With the Wind, Lawrence of Arabia, The Wizard of Oz, The Graduate, On the Waterfront, Schindler's List Singing in the Rain ஆகியவை மற்ற படங்கள்.

The Godfather பேரை பார்த்த பிறகு, தலைப்பு நல்லா இருக்கே இது தான முதல் இடத்துல இருக்கணும், ஆனா Casablanca அப்டின்னு ஏதோ பேர் சரியில்லாத படம்ல இருக்குன்னு யோசிச்சேன்.

அந்த 10 வயதில் The Godfather அப்படிங்கிற தலைப்பு மீது அப்டி ஒரு ஈர்ப்பு. அந்த வயதில், தினத் தந்தியில் வரும் கன்னித்தீவு, தங்க மலர், வெள்ளி மலர் சினிமா செய்திகள் என்று நாள், வாரம் தவறாமல் படிப்பேன். அப்டி ஒரு நாள் படிக்கும் போது The Godfather பாதிப்பில் தான் நாயகன் படம் எடுக்க பட்டது என்று படித்தேன்.

அடடே நமக்கு தெரிஞ்ச படம் பார்த்து தான எடுத்திருக்காங்க என்று மனமெல்லாம் பெருமை. இத என் நண்பர்கள் கிட்ட சொல்லலாம்னா அவிங்க அப்போ தான் Cartoon ல இருந்து WWFக்கு முன்னேறிட்டு இருக்காங்க.

இதன் பிறகு கோடை விடுமுறைகளில் ஒன்று விட்ட அண்ணன், அவனுடைய எல்லாம் தெரிஞ்ச நண்பன் என்று அவர்களுடன் Onida TVயில் (Neighbour's envy Owner's Pride) Hollywood படங்கள் பார்க்க ஆரம்பித்தேன், Rocketeer, Judgement Day ஆகியவை முதன் முதலாக பார்த்த படங்கள். அப்போது subtitle எல்லாம் கிடையாது, அவிங்க கதைன்னு சொல்றத நம்பிட்டு visuals பாத்து மிரண்டு போய் உக்காந்து இருப்பேன்.

பிறகு teenageல Star Moviesல புரியுதோ புரியலையோ படங்கள் பார்ப்பது என்பது ஒரு பழக்கமாக ஆகி விட்டது. இடையிடையே வரும் காதல் காட்சிகள் முக்கிய காரணம் என்றாலும் action காட்சிகள் வரும் போது channelலை மாற்றியது இல்லை.

அப்போது தான் Misson Impossible II போன்ற படங்கள் dub செய்யப்பட்டு வெளியாகின. வீட்டுல இந்த மாதிரி படத்துக்கு எங்க கூட்டிட்டு போக போறாங்க?! அதனால படத்தின் poster பார்த்து மகிழ்ந்து கொள்வது.

பின்னர் ஒரு 2 வருடம் கழித்து Spider Man படம் வந்தது. அப்போ 9ம் வகுப்பில் இருந்தேன். (படிச்சேன்லாம் சொல்ல முடியாது)
15 ரூபாய் கட்டணம். இதற்கு முன்னாடி ஆளவந்தான் மாதிரி படங்களை அரை trouser அணிந்து சென்று பெண்கள் பகுதியில் ticket வாங்கி, தீபாவளி அன்று முதல் show பார்த்த சாகசங்கள் எல்லாம் செய்த அனுபவம்.

தனியாக கிளம்பி விட்டேன். Spider Man மிகவும் பிடித்திருந்தது, போக பயபுள்ள நமக்கு தெரிஞ்ச, புரிஞ்ச மொழியில் பேசுறானே. அப்புறம் தமிழ் சினிமாவில் சாத்தியம் இல்லாத கொஞ்சல் காட்சிகளும் உண்டே!!!

இதன் பிறகு 1 ரூபாய், 2 ரூபாய் என்று சேர்த்து வைத்து அத்தனை dubbing படங்களையும் பார்ப்பது. குறிப்பாக Jackie Chan, Jet Li படங்கள்.

இதற்கிடையில் The Godfather படம் பற்றி அவ்வப்போது கேள்வி பட்டும், படித்து கொண்டும் தான் இருக்கிறேன். Star Movies ல் போட்டாலும், Judgement Day, Jurassic Park, Godzilla, Shanghai Noon, Rush Hour, James Bond படங்கள் பார்க்க முடிந்த அளவுக்கு The Godfather படத்தை பார்க்க முடியவில்லை. புரியவில்லை. Santino Corleone தனது தங்கை கணவனை அடித்து நொறுக்கும் காட்சியை 2 முறை பார்த்ததாக நியாபகம்.

Higher Secondary படிக்கும் போது சினிமா செய்திகள் படிப்பது பாட புத்தகத்தை விட முக்கியமாக மாறி விட்டது. The Hindu Paper படிச்சா English Knowledge improve ஆகும்னு எங்க அப்பா வாங்கிட்டு வருவார். அதுல எப்பவுமே முதல்ல எந்த channelல எந்த படம்னு தான் பாக்கிறது. அப்புறம் Friday Reviewல உள்ள சினிமா செய்திகள்.

அப்போ Sliver, Species
 போன்ற படங்கள் எப்போ போடுறான் என்று wait பண்ணி night படிக்க போறேன் என்று சொல்லி விட்டு படம் பார்ப்பது, மறுநாள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது என்று நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன.

இயக்குனர் பாலா, செல்வ ராகவன், கவுதம் மேனன் என்று அவர்கள் படங்கள் வந்தால் theater போவோம் அப்படிங்கிற அளவுக்கு வந்தாச்சு. வளர்ந்தாச்சு.

2006ல், VCR, CD Player என்று எதுவுமே பயன்படுத்தி இருக்காத எங்கள் வீட்டில் ஒரு DVD player வாங்கினோம்.

அந்த மனோரமா புத்தகம் அப்போதும் என்னிடம் இருந்தது. அந்த 10 படங்கள் என் மனதில் இருந்தாலும் மீண்டும் ஒரு முறை பார்த்து கொண்டேன்.

கோவில்பட்டியில் இருந்து மதுரைக்கு 100 கிலோமீட்டர் இருக்கும். ரயிலில் 15 ரூபாய் கட்டணம். 200 ரூபாய் இருந்தால் மதுரை கிளம்பி விடுவோம். ஒரு DVD 20 ரூபாய்.

மதுரை மீனாட்சி பஜாரில் DVD கடையில் The Godfather படத்தை வாங்கி விட்டேன். Godfather படம் மூன்று பகுதிகள் கொண்டது என்பது எனக்கு அப்போது தான்  தெரியும்.

Casablanca, Gone With The Wind, Singing in the Rain, Lawrence of Arabia, Schindler's List, The Sound of Music ஆகிய படங்களும் வாங்கினேன். இதில் The Sound of Music இன்னும் பார்த்து முடிக்கவில்லை.

வீட்டிற்கு வந்து ஆர்வமாக படத்தை DVD யில் போட்டேன். 'I believe in America'என்று படம் ஆரம்பித்தது.

இந்த முதல் காட்சியே நாயகன் படத்தில் எப்படி உருமாற்றம் பெற்றிருந்தது என்று கண்டு கொண்டேன்.

Vito Corleone பேசும் போது DVD யில் எதுவும் பிரச்சினையா என்று பயந்து விட்டேன். என்னடா பெரிய Don என்று பார்த்தால் குரல் சரியாக இல்லையே என்று வருத்தம்.

Marlon Brando பெரிய நடிகர், சிவாஜி அவரை சந்தித்து இருக்கிறார், 2 முறை Oscar வாங்கியிருக்கிறார், அதில் Godfatherக்கு ஒன்று என்று தினத் தந்தியில் படித்தோமே என்று மனசு ஓடிக்கொண்டிருந்தது.

நான் அப்போது BA ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு மாணவன், கல்லூரியில் பக்கா ஆங்கிலத்தில் வகுப்பு எடுக்கும் Professors அரை dozen பேர் இருந்ததார்கள், அவர்கள் ஆங்கிலம் பேசி கேட்டு பழகி இருந்ததாலும், subtitle இருந்ததாலும் படம் புரிவதில் ஒரு குழப்பமும் இல்லை.

Sollozo விடம் Don business பேசும் காட்சியை பார்த்த பிறகு, இது வரை நாம பார்த்த படங்கள், அதுல உள்ள நடிப்பு எல்லாம் ஒண்ணுமே இல்லை அப்டின்னு புரிஞ்சுட்டு. Marlon Brando ஏன் உலகம் முழுதும் கொண்டாடப்படும் ஒரு நடிகராக இருக்கிறார் என்பது படம் தொடங்கி 40 நிமிடத்தில் எனக்கு விளங்கி விட்டது.

அடுத்த 5 நிமிடத்தில் அவர் துப்பாக்கியால் சுடப்பட, என்னடா Climax அதுக்குள்ள வந்துட்டா என்று பார்த்தேன். பிறகு தான் தெரிந்தது படம் 3 மணி நேரம் என்று.

'It's my family kay, not me' என்று தனது குடும்பத்தின் இன்னொரு முகத்தை பற்றி காதலியிடம்  சொன்ன Mike Corleone, அப்பாவை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை உணர்ந்து உடனே செயல் படுகிறான்.

என்ன தான் சட்டத்திற்கு புறம்பான தொழில் செய்தாலும் அவர்களுக்கு என்று சில தர்மங்கள், அறங்களை கடை பிடிக்கும் கதாபாத்திரங்கள் Godfather ஏன் Gangster படங்களில் முதன்மையான ஒன்றாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள உதவுகிறது.

நம்மூர்ல வில்லன் கதாநாயகன் கூட சண்டைனா நேர போய் நாயகனோட குடும்பத்தை தான் கை வைப்பான். ஆனா இங்க Civilian, part of the Family என்று பிரித்து பார்க்கும் விதத்தை கண்டு, அதுவும் சரி தான சம்பந்த பட்டவனை தான அடிக்கணும், அவன் பொண்டாட்டி, பிள்ளைகளை அடிக்கிறது என்ன நியாயம்ன்னு நினைச்சேன்.

 பின்னர் இதே Principle பற்றி பொல்லாதவன் படத்தில் செல்வம் பேசுவதை கண்டு தமிழ் சினிமா மேலோட்டமான காட்சிகள் தாண்டி பிறிதொரு ஆங்கில அல்லது வேற்று மொழி படத்தின் உள்ளடக்கத்தை பயன்படுத்தும்  அடுத்த கட்ட முயற்சிக்கு அடித்தளம் போட ஆர்மபிச்சாச்சு போல என்று நினைத்தேன்.

வேற வழியில்லாமல் Civilian Mike Corleone இந்த ஆட்டத்தில் இறங்குகிறான். அதன் மூலம் part of the Family ஆகிறான்.

 காதலியின் மீண்டும் எப்போது சந்திப்பது என்ற கேள்விக்கு ஒரு உறுதியான பதில் கூற முடியாமல் பிரிகிறான்.

இதன் பிறகு Mike Corleone இரண்டு பேரை கொலை செய்து விட்டு Sicily செல்வது அங்கே ஒரு பெண் மீது காதல் கொண்ட பிறகு அவளுடைய தகப்பனிடம் பேசி பெண் கேட்கும் காட்சியை அப்போதே மிகவும் ரசித்தேன். Rewind செய்து மறுபடியும் பார்த்தேன். அந்த பெண்ணுடைய பெயர் Apollonia. ஏதோ கிரேக்க கடவுள் பேர் போல இருக்கே என்று நினைத்தேன்.

மீண்டும் America வரும் Mike தனது தந்தை காயத்தாலும், உடல் நலக்குறைவால் இழந்த அதிகாரத்தை எப்படி மீட்டு தனதாக்கி கொள்கிறான் என்று படம் விவரிக்கிறது.

மீண்டு வரும் Mikeன் குரல், நடை, தலை அலங்காரம், பார்வை அவன் Familyயை பாதுகாக்க எதுக்கும் தயாராகி விட்டான் என்பதை உணர்த்துகிறது. War Veteran and Lover Boy Mikeஆக அறிமுகமாகி மெதுவாக Corleone Familyயின் Don ஆக பொறுப்பு எடுத்து கொள்கிறான்.

இதன் பின்னர் ஓய்விலிருக்கும் Vito Corleone மகன் Mike உடன் பேசும் காட்சி எப்படி தேவர் மகன் படத்தில் பயன்படுத்த பட்டிருந்தது என்று எளிதாக கண்டு கொள்ள முடிந்தது.

'I told you. I can handle it, I'll will handle it.'  என்று அதிகமாக கவலை கொள்ளும் தந்தையை சமாதானம் செய்கிறான் Mike. 'Santino, Fredo... but I never wanted you for this.' 'Senator Corleone, Governor Corleone' என்று Corleone Familyயை legitimate ஆக ஆக்குவதற்கான கனவை விட்டு செல்கிறார் Don Vito Corleone.

தந்தையின் மறைவுக்கு பின்னர் வரும் காட்சிகள் என்னற்ற தமிழ் மற்றும் பிற இந்திய மொழி படங்களில் அப்டியே பயன்படுத்த பட்டுள்ளன. அது Al Capone உத்தரவில் உண்மையில் அமெரிக்காவில் நடந்த St. Valentine's Day Massacre சம்பவத்தின் தழுவல்.

படம் நாவலை தழுவி எடுக்க பட்டது என்று அறிந்து நாவலை படிக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தேன். 2008ல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கே ஆங்கிலத்துறைக்கு இருந்த நூலகத்தை கண்டு நிச்சியம் The Godfather புத்தகம் அங்கே இருக்கும் என்று நினைத்தேன்.

ஆனால் Godfather எழுதிய Mario Puzoவின் மற்றொரு நாவலான Omerta இருந்தது, அதை வாசித்தேன். நம்மூர் R K Narayanனின் Malgudi போல இவருக்கு Sicily, Italian Mafia தான் கச்சா பொருள் என்று புரிந்து கொண்டேன்.

அதே வருடம் நடந்த புத்தக காட்சியில் The Godfather வாங்கி படித்தும் விட்டேன். ஒரே நாவல் The Godfather I & II என்று இரண்டு படங்கள் ஆகியிருப்பது கண்டு அசந்து விட்டேன்.

பொதுவாக படம் எப்போதுமே நாவல் போல இருப்பதில்லை. Life of Pi ஒரு உதாரணம். என்ன தான் graphics எல்லாம் இருந்தாலும் புத்தகம் படித்தவர்கள் படம் சுமார் தான் என்று சொல்லுவார்கள்.

ஆனால் The Godfather படம் நாவலை விட மிக கச்சிதமாக இருந்தது. அதற்கு Marlon Brando, Al Pacino என்ற ஆளுமைகளும், இயக்குனரின் இத்தாலியா பின்புலமும் காரணம் என்று நினைக்கிறேன்.

நான் The Godfather படம் முதல் முறை பார்த்து 10 வருடம் ஆக போகிறது. இந்த 28 வருட வாழ்க்கையை படம் பார்ப்பதற்கு முன், பார்த்த பின் என்று இரண்டாக பிரிக்கும் அளவுக்கு இப்படம் என்னை முற்றிலும் புதிய ஆளாக மாற்றி விட்டது.

கல்லூரி படிக்கும் போது Brando போலவும், Pacino போலவும் ஆங்கிலம் பேசி பார்ப்பேன். ஒரு செயல் வீரனாக இருக்க வேண்டும் என்று பொது பிரச்சினையில் தலையிட்டு வில்லங்கத்தை இழுத்து வருவேன். ஒரு குட்டி Don ஆக என்னை கற்பனை செய்து கொள்வேன். நட்பு வட்டாரமும் எனக்கு உறுதுணையாக இருந்தது.

அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும் போது விடுதியில் ஒரு வருடம் பொது செயலாளராக இருந்தேன். அது Election நடக்காமல் unopposed ஆக கிடைத்த பதவி. இதெல்லாம் The Godfather பார்த்தும், படித்தும் என் ஆளுமையில் ஏற்பட்ட மாற்றத்தால் இந்த மாதிரி பொறுப்புகள் தேடி வரும் அளவுக்கு வளர்ந்தேன் என்பதில் எனக்கு சந்தேகமும் இல்லை.

இந்த ஆளுமை உருமாற்றத்தால் என்னை தேடி வருபவர்களுக்கு உதவி  செய்கிறேன் பேர் வழி என்று நானே பிரச்சினைகளை தலையில் தூக்கி வைத்து கொள்கிறேன். என்னை சுற்றி இருப்பவர்கள், எனக்கு நெளிவு, சுளிவு தெரியவில்லை, சூது வாது காணாது என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்களில் யார் கூட்டத்தோடு ஆமாம் சாமி போடுவா, யார் விலகி நிப்பா என்பதை என் உள்ளுணர்வு சொல்லி விடும்.

அதாவது The Godfather போன்ற ஒரு படத்தை பார்த்து புரிந்து கொள்ள திராணி இல்லாதவர்கள். அதனால் தனக்கென ஒரு ஆளுமையை உருவாக்கி கொள்ள முடியாதவர்கள் தான் மந்தையாடு போல இருப்பார்கள்.

இன்று நூற்றுக்கணக்கான புத்தகங்கள் படித்து விட்டேன், ஆயிரக்கணக்கான சினிமாக்கள் பார்த்து விட்டேன், அத்தனைக்கும் அடித்தளம் நான் மதுரையில் 20 ரூபாய்க்கு வாங்கிய The Godfather DVD தான்.

ஆனால் அதற்கு முன்னால் 10 வயசு பையனுக்கு எதுக்கு Manorama Year Book என்று பெரிய மனுஷ தனமாக சிந்திக்காமல் அதை வாங்கி கொடுத்து என்னை அவையத்து முந்தியிருக்க செய்த எனது அப்பாவை நினைத்து பெருமை படுகிறேன்.

பின் குறிப்பு:

என் நண்பர்களை நான் எப்போதும் இரண்டாக பிரிக்கிறேன். The Godfather படம் பார்த்த நண்பர்கள், பார்க்காத நண்பர்கள். பார்த்த நண்பர்கள் நான் சொல்லும் விசயத்தை தெளிவாக புரிந்து கொள்வர். பார்க்காத நண்பர்கள் நான் ஏதோ நடைமுறை சாத்தியம் இல்லாத விசயத்தை பற்றி பேசிகிட்டு இருக்கேன் என்பார்கள்.

இப்போ நம்ம ஊர்ல யாருக்கிட்டாயவது Godfather படம் பாத்திருக்கியான்னு கேட்டா, 'அஜித் படம் வரலாறு, அத தான சொல்றீங்க' அப்டிம்பாங்க.

சந்தேகம்னா try பண்ணி பாருங்க.