Tuesday 14 February 2017

எலி வளை


நான் எதையெல்லாம் எவ்வளவு பணம் கொடுத்தாலும் செய்யக்கூடாது என்று முடிவு செய்து 2012 ஏப்ரல் மாதம் பெங்களூரை விட்டு கிளம்பி வந்தேனோ அதையெல்லாம் செய்ய வேண்டிய நிலைமைக்கு காலம் என்னை நகர்த்தி கொண்டு வந்திருக்கிறது.

நான் கல்வி கற்ற கல்லூரிகளும், பல்கலைக்கழகமும், அங்கே சந்தித்த நண்பர்களும், தொடர்ந்து வந்த வாசிப்பும் எனது மனநிலையை சராசரிக்கும் மேலானதாக மாற்றி விட்டது என்று நம்புகிறேன். நீங்கள் தாராளமாக அதிகப்பிரசங்கி என்று சொல்லலாம்.

உங்களுக்கு பிடித்த வேலை என்று ஒன்று இருக்கலாம். அந்த வேலையை செய்து வாழ்வை நகர்த்த அதனுடன் உங்களுக்கு பிடிக்காத ஓராயிரம் வேலைகளை செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகலாம்.

சரி என்று அப்படி ஒரு வேலையை பார்த்துக்கொண்டு, சொந்த ஊரில், வீட்டில் இருந்து கொண்டு இருக்கலாம் என்றால் நாம் வேலை பார்க்கும் இடத்தில் நமக்கு குடுக்கும் சம்பளம் வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு இருக்கும். நாம் வாங்கும் சம்பளத்தை விட அதிகமான தொகையை சென்னை போன்ற நகரில் இருக்கும் நண்பர்கள் வீட்டு வாடகையாக கொடுத்து கொண்டிருப்பார்கள்.  உறவுகள் நம்ம ஊர்ல நீ வாங்குறது அதிகம், சொந்த வீடு, வீட்டுச்சாப்பாடு என்று நம் மனதை தேற்றுவது போல ஒரு பாவனையை நிகழ்த்துவார்கள். இந்த சம்பளத்தை கண்டு பொறாமை படும் நண்பர்களை கண்டால் சிரிப்பு தான் வரும்.

உடன் வேலை பார்ப்பவர்கள் ஏன் பெங்களூரு போன்ற நகரத்தை விட்டு வந்தீர்கள் என்கிற ரீதியில் கேட்பார்கள்.

ஒரு சிறிய ஊரில் பிறந்து, வளர்ந்து, படித்து, வேலைக்காக  மாநகரத்திற்கு இடம் பெயருவது அவ்வளவு எளிதல்ல. 99% பேர் நண்பர்கள் அறையை நம்பி தான் ஊரில் இருந்து வேலை தேடி தினம் பேருந்து, ரயில் என்று ஏறிக்கொண்டிருக்கிறார்கள். அந்த அறையில் நண்பன் மட்டுமல்ல நண்பனின் தம்பி, தம்பியின் நண்பன், அந்த நண்பனின் அண்ணன் என்று ஒருத்தனை வைத்து ஒரு டஜன் பேர் வந்து சேர்ந்திருப்பார்கள்.

வேலை கிடைத்துவிட்டது என்றே வைத்து கொள்வோம். காலையில் குளித்து கிளம்புவதில் இருந்து வரிசை, தண்ணீர் காலியாகி விடுமோ என்ற பதட்டம், பேருந்தில் கூட்டம் சேர்ந்து விடுமோ, சாப்பாடு எங்கே சாப்பிடலாம்?! அப்படியே சாப்பிட்டாலும் அது சாப்பிட்ட மாதிரியே இருக்காது. மதியம் ஆனதும் பசிக்குமே, சாப்பிடும் இடத்தில் குடிக்கும் தண்ணீர் ஆரோக்கியமானது தானா?! என்று சோறு சார்ந்த பிரச்சினைகள் ஆயிரம் முளைக்கும். நீ செஞ்சு பழக வேண்டியது தான?! பசங்க ஆளுக்கு ஒரு வேலைய பார்த்தா நிம்மதியா வீட்டுல செஞ்சு சாப்பிடலாம் என்று ஆள் ஆளுக்கு யோசனை சொல்வார்கள். அவனவன் குளிச்சு கிளம்பவே நேரம் இல்லை இதில எங்க சோறு பொங்குறது?!

மெஸ் என்று பார்த்தாலும் ஒரே வாரத்தில் கசந்து விடும். இந்த சூழ்நிலையில் கல்யாணம் பண்ணிக்கோ என்று master plan போட்டு தருவார்கள். எனக்கு தெரிந்து கல்யாணம் பண்ணவன் எல்லாம் அட்டவணை போட்டு சோறு பொங்குறான், பாத்திரம் விளக்குறான். நாமளும் பழகி வைக்கணும் போல என்று நினைத்து கொள்ள வேண்டியது தான்.

மாநகரத்தில் ஈட்டியத்தில் பாதியை, சில சமயம் அதற்கும் மேலாக வீட்டு வாடகையும், சோற்றுகணக்கும் எடுத்துக்கொள்ள என்னடா வாழ்க்கை என்று ஆகிவிடும். இதில் ஓரு நல்ல நாள் என்றால் ஊருக்கு வர எதிலும் ticket கிடைப்பதில் சிரமம். வருவதற்கு கிடைத்தால் திரும்பி போவதில் சிரமம். இது எல்லாத்தையும் கூட்டி கழித்து சொந்த வீட்டில் இருந்து கிடைக்கிற வேலையை பார்த்துக்கொண்டு சந்தோசமா இருப்போம் என்றால், அரசாங்க வேலை என்னாச்சு என்று வாறவன் போறவன் எல்லாம் கேப்பான்.

நீங்கள் சென்னையிலோ, பெங்களூரு போன்ற ஊரில் வாடகைக்கு குடியிருந்திருக்கிறீர்களா?! எத்தனை மாதத்திற்கு ஒரு முறை அவர்கள் வாடகையை உயர்த்துவார்கள் என்று தெரியுமா?! தண்ணீர், மின்சாரம் என்று தனியாக வசூல் செய்வார்கள், தீடீர் என்று பத்தாயிரம் advance அதிகமாக வேணும் என்பார்கள். நம் சம்பளம் உயரும் வேகத்தை விட அந்த ஊரில் எல்லாம் விரைந்து கொண்டு இருக்கும்.

காய்ச்சல், மண்டையடி என்றால் கூட தீவில் மாட்டியது போல் இருக்கும். விசேச நாளுக்கு ஊருக்கு செல்ல முடியாவிட்டால், உங்களுக்கு சோறு பொங்கி சாப்பிடும் திராணி இல்லா விட்டால் - குறைந்தது இரண்டு நாள் bun, jam என்று வாழத் தெரிய வேண்டும்.

வேலைகள் மாநகரத்தில் குவியும் வண்ணம் செய்தது ஆட்சியாளர்களின் பிழை. சிறிய நகரங்களில் மாநகரத்திற்கு இணையான சம்பளம் இல்லாமல் செய்ததும் இவர்களின் கைவண்ணம் தான். தாராளமயம், உலக மயம் என்று சங்கம் வைத்து செயல்படும் ஆட்களை சோம்பேறி என்று கூறி உழைப்பவனை பாதுகாப்பற்ற ஆளாக மாற்றி விட்டார்கள்.

சென்னை போன்ற ஊருக்கு வருபவர்கள் அந்த ஊரின் மேல் உள்ள காதலாலோ, அன்பாலோ வரவில்லை. பிழைக்க மட்டுமே வருகின்றனர். இது ஒரு மாதிரி விட்டேத்தியான மனநிலையில் கொண்டு விடுகிறது. வேரும் இல்லாமல் விழுதும் இல்லாமல் ஓரு உயிரற்ற வாழ்க்கையை ஏற்று கொண்டு விடுகிறார்கள்.

இங்கே இவ்வளவு தூரம் தத்துவவிசாரம் செய்வது நான் 2017ம் ஆண்டின் முதல் நாள் நான் மீண்டும் வீட்டை விட்டு கிளம்ப வேண்டிய நிலைமை வந்ததால் தான்.

ஒரு சுயநிதி கலைக்கல்லூரியில் கூலிக்கு மாரடித்து கொண்டிருந்த போது கொஞ்சம் பிரபலமான பொறியியல் கல்லூரியில் நியாயமான சம்பளத்தில் வேலை கிடைக்க கலைக்கல்லூரிக்கு ரூபாய் 35052 தண்டமாக கட்டி வெளியே வந்துவிட்டேன்.

அந்த கல்லூரியில் வேலை பார்த்ததற்கு பணம், நேரம், நஷ்டமானது தான் மிச்சம். இத்தனைக்கும் அரசு உதவி பெறும் பிரிவுக்கு பணம் வாங்காமல் தான் நியமனம் செய்வோம் என் பத்தாண்டுகளாக கம்பு சுத்தி கொண்டிருப்பவர்கள் சுயநிதியில் கடலை மிட்டாய் வாங்க கூட வசதியில்லாத மாதிரி சம்பளத்தில் வேலை பார்த்தவனிடம் பணம் புடுங்குவது என்ன மாதிரியான கொள்கைச்செயல்பாடு என்று தெரியவில்லை.

'என்ன சார், பணம் கொஞ்சம் அதிகமாக இருக்கே, ஒரு மாசத்துக்கு அப்டின்னா குடுத்திடலாம்' என்று பேசினால், "அய்யாவை பத்தி எல்லாருக்கும் தெரியும், எல்லாருக்கும் ஓரே மாதிரி தான் வாங்குவோம், நீங்க நல்லா தான் work பண்ணுனீங்க, வேணும்னா Office சூப்பிரண்டு கிட்ட கேளுங்க" என்று இயக்குனர் நம் முகத்தை பார்த்து பேசாமல் டேபிள் மேல் இருக்கும் பேப்பர் வெயிட்டை உருட்டி கொண்டே பேசுவார். ஒரு நொடி கூட நம் கண் பார்வையை சந்திக்க மாட்டார். ஆபீஸில் கேட்டால் இயக்குனர் சொல்றது தாம் என்பார்கள். சரி போங்கடா என்று காசை விட்டெரிய வேண்டியது தான்.

இப்போது புதிய கல்லூரியில் வேலைக்கு சேர்ந்தாயிற்று. இந்தியாவில் கல்லூரிகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை என்று முதல் நாளிலேயே தெரிந்த நிமிடம் 'பணத்திற்காக தானே இந்த வேலையை ஒப்புக்கொண்டோம்' என்று சமாதானம் செய்து கொண்டு வீட்டில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த கல்லூரிக்கு தினம் வந்து போனால் ஒரு வாரத்தில் ICU வில் வைக்க வேண்டிய அளவுக்கு என் உடல் நிலை மோசமாகி விடும் என்று எனக்கே தெரியும். அதனால் கல்லூரியில் உள்ள விடுதி பற்றி தெரிந்து கொள்ளலாம் என்றால் அதே ஊரில் குடியிருக்கும் அருமை நண்பன் "ஹாஸ்டல் தலைவலி மாப்ள, நம்ம வீட்டுக்கு கீழ ஒரு room இருக்கு அத பாரு, பிடிக்காட்டி வேற பாத்துருவோம்" என்று என் வேலையை எளிதாக்கினான்.

அவன் வீட்டில் காலை சப்பாத்தி சாப்பிட்டு விட்டு அறையை சென்று பார்த்தால் அது அப்படி ஒன்றும் சிலாக்கியமாக இல்லை. நான் பெங்களூரில் தங்கியிருந்த அறையை 'hole in a wall' என்று கேலியாக சொல்வேன். இந்த அறை அதை விட சிறிது. எலி வளை என்று சொல்லலாம். அந்த அறைக்கு இரண்டு கதவுகள். ஒன்று வெளியில் இருந்து வீட்டிற்குள் நுழையும் கதவு. இன்னொன்று அறையில் இருந்து வீட்டு முதலாளியின் வீட்டிற்குள் நுழையும் கதவு. ஒரு அறைக்கு ரெண்டு சன்னல் இருக்கலாம் ஆனால் இரண்டு கதவு கூடாது என்று மனதில் நினைத்து கொண்டு வெளியே வந்து விட்டேன்.

வீட்டு முதலாளி உடல் நலக்குறைவால் கை கால் நடுக்கத்துடன் குழறிக்குழறி பேசியபடி இருந்தார். அந்த அறையில் IT கம்பெனியில் வேலை பார்த்தவர் தங்கியிருந்தார் என்ற வரலாறு எனக்கு சொல்லப் பட்டது. 'அதனால அந்த அறை சிறப்பு மிக்கதாக ஆகி விடுமா?!' என்று நினைத்து கொண்டு அந்த அறையில் கிடந்த சாமான்களை நோட்டம் விட்டு விட்டு சத்தியமா இது தேறாது என்று மனதிற்குள் நினைத்து கொண்டேன்.

வேலைக்கு சேர்ந்த இடத்தில் துறை தலைவரிடம் இது குறித்து கேட்டால் "பழக்கடை பாண்டி நிறைய வீடு கட்டி வாடகைக்கு விட்டிருக்காறாம், கேட்டு பாருங்க" என்று பனங்காய் தலையை இடம் வலமாக ஆட்டியபடி பேசி விட்டு சென்றார்.

விடுதி காவலரிடம் பேச்சு குடுத்து அவர் என் சாதி வரை விசாரித்து, 'ஹாஸ்டல்ல இருந்தா 5000 ருவாய்க்கு மேல உங்களுக்கு மிச்சம் தான' என்று இலவச ஆலோசனை சொன்னார். இந்த உலகத்தில் இலவசமன்னு எதுவுமே இல்லை. இதை குடுத்திட்டு வேற வேலை நிச்சியம் வாங்குவாங்க என்று தெரியும்.

இப்ப என்ன?! புத்தகம் படிக்கவோ, சினிமா பார்க்கவோ, துணி துவைக்கவோ, நண்பர்கள் அழைத்தால் போகவோ முடியாது. ஒரு நாளைக்கு 5 மணி நேரத்திற்கும் மேலாக பயண நேரம். இரண்டு வேளை கடைச் சாப்பாடு. வீட்டில் இருந்து வந்துட்டு போனா என்ன?! கொஞ்சம் பைத்தியகரத்தனமாக தோன்றினாலும் நாஞ்சில் நாடனின் 'வீடென்பது ஒரு ஆசுவாசம் அல்லவா' என்ற வரி மனதில் அமர்ந்து விட்டது.

அருவியில் இருந்து நீர் ஆர்ப்பரித்து விழுவது போல மனதிற்குள் இந்த யோசனை வேகமாக விழுந்து கொண்டு இருந்தது. ஒரு வாரம் முயற்சி செய்து பார்த்தால் என்ன என்று ஒரு அசட்டுத்தனமான முடிவொன்றை எடுத்தும் விட்டேன். முதல் வேலை நாள் முடிந்து விரைவாக கல்லூரியை விட்டு பேருந்தை பிடிக்க ஓடிக்கொண்டிருந்தேன்.

யாரிடமாவது lift கேட்போம் என்று ஒருவரிடம் 'என்னை அங்க இறக்கி விட முடியுமா என்று கேட்டேன்' 'வாங்க வாங்க' என்று அவர் என்னை அழைத்து கொண்டார். பின்னால் அமர்ந்து அவரிடம், நான் வேலைக்கு சேர்ந்தது, தங்குவதற்கு இடம் தேடுவது என்று சகலத்தையும் சொன்னேன். அவர் 'அதெல்லாம் நிறைய நல்ல room கிடைக்கும், நான் வேணா காட்டுறேன்' என்று சொன்னார். வண்டியை பாலத்தின் மத்தியில் நிறுத்தி, தூரத்தில் கையை காட்டி, 'அந்த கட்டிடத்துல கேட்டு பாருங்க' என்றார். என்னை அங்கே கூப்பிட்டு போக முடியுமா என்று நான் கேட்க அங்கே அழைத்தும் சென்றார். கதவில் மாட்டப்பட்டிருந்த விளம்பரத்தில் உள்ள எண்ணை பார்த்து வீட்டின் முதலாளியை அழைத்தேன். அவர் ஐந்து நிமிடத்தில் வருவதாக கூறினார். என்னை அழைத்து வந்த அந்த நண்பர் அவருடைய தொடர்பு எண்ணை குடுத்து தெரிஞ்ச ஆள் பக்கத்துல யாரும் சொன்னா தான் தருவேன் அப்டின்னு சொன்னா எனக்கு கூப்பிடுங்க என்று சொல்லி விட்டு சென்றார்.

முதலாளி 65 வயது மதிக்கத்தக்க ஒரு நபர். வெளியே இரண்டு கடைகள், பெரிய கதவிற்கு பின்னால் Qualis வண்டி, ஒரு ஆள் மட்டுமே நடந்து செல்லும் அளவிற்கு இடம் மீதி இருந்தது. வீட்டிற்கு பின்புற கதவு வழியே இரு சக்கர வாகனத்தை கொண்டு வர இடம் இருந்தது. அவர் என்னை உள்ளே அழைத்து சென்றார்.

கிட்டத்தட்ட 1000 ரூபாய்க்கும் மேலாக அங்கே மருந்து கொண்டு வந்து தந்த நபரிடம் அவர் கொடுத்தார். ஒரு மாதத்திற்கு மொத்தமாக வாங்கி வைத்து கொள்வேன் என்றார். இரண்டு நாளுக்கு பின்னர் இவர் மருந்து கையாளும் துறையில் இருந்து ஓய்வு பெற்றவர் என்று எனக்கு தெரிய வரும்.

நான் கடவுள் படத்தில் உருப்படிகளை பாதாளத்தில் அடைத்து வைத்தது போல ஒரு இருட்டான பாதையில் மின் விளக்கை ஏற்றி வெளிச்சமாக்கி கொண்டு மாடிப்படி ஏறி சென்றார். செருப்பை கழட்டி விட சொன்னார். என்ன இந்த ஆள் செருப்பை கழட்ட சொல்றான், இது சரி வராது என்று நினைத்து கொண்டு தொடர்ந்தேன்.

எலிகளை பார்த்து வீடுகளை கட்ட முடியும் என்று அவர் காட்டிய அறைகளை பார்த்தவுடன் மனதில் தோன்றியது. ஒருவர் தாராளமாக இருக்கலாம் என்பது மாதிரியான அறை. இன்னொருவர் வேண்டுமானாலும் தங்கி கொள்ளலாம் எக்ஸ்ட்ரா 300 ரூபாய் குடுத்திருங்க என்றார். ஒவ்வொரு அறைக்கும் தனியாக அதன் எதிரிலே குளியலறை. நீங்கள் சமைக்க வேண்டும் என்றால் என்று ஒரு அறையை காட்டினார். அதற்கும் குளியலரைக்கு பயன்படுத்திய பிளாஸ்டிக் கதவையே பயன்படுத்தியிருந்தார்.

இங்க tea போட்டுக்கலாம், காலைல breakfast கூட பண்ணிக்கலாம் என்று அடுக்கி கொண்டே போனார். உள்ளே gas stove வைக்கும் அளவுக்கு கூட அதன் மேடையின் நீளம் இல்லை. Induction stove வைத்து வெண்ணி வேணா வைக்கலாம் என்று நினைத்து கொண்டேன்.

எப்படி பார்த்தாலும் வேலை பார்க்கிற இடத்துக்கு பக்கத்துல. பல்லை கடிச்சுக்கொண்டு நாலு நாள் தூங்கி எந்திருச்சு வெள்ளி சாயங்காலம் ஊருக்கு ஓடிட வேண்டியது தான் என்று திட்டம் வகுத்து விட்டு ஞாயிறு மாலை வருவதாக சொல்லி விட்டு வந்தேன்.

மறுநாள் மீண்டும் வீட்டிற்கு வெளியே வாழ்வதற்காக என்னை தயார்படுத்திக் கொண்டிருந்தேன். எவ்ளோதான் முயன்றாலும் துக்கம் தொண்டையை இறுக்குவதை உணராமல் இல்லை. போன வாரம் வரை வீட்டில் உதிக்கும் முரண்பாடுகளுக்கெல்லாம் ஒரே தீர்வு வீட்டை விட்டு வெளியே சென்று தங்குவது தான் நினைத்து கொண்டிருந்த நான், அந்த வாய்ப்பு வந்த உடன் அதை தள்ளி போட முடியாதா என்று தான் யோசித்து கொண்டிருந்தேன்.

எனக்கு வேற வேலை கிடைக்கவும் இந்த வீட்டை விட்டு போய்டுவேன். அப்புறம் வரவே மாட்டேன் என்று பல முறை என் அப்பாவிடம் சொல்லி இருக்கிறேன். வெளிநாடு வாய்ப்பு வந்தால் அப்டியே போய் செட்டில் ஆகிடணும். இந்த நாடே வேண்டாம் என்றெல்லாம் கற்பனை செய்திருக்கிறேன்.

இப்பொது வீட்டை விட்டு மீண்டும் ஒரு முறை வெளியே சென்று வாழும் வாய்ப்பு தேடி வந்திருக்கிறது, ஆனால் மனசு அதை ஏற்றுக்கொள்ளாமல் தள்ளி போடுவதிலேயே குறியாக இருக்கிறது.

ஒரு வழியாக வேண்டியவற்றை மூட்டை கட்டி விட்டேன். 5 நாள் tour போற மாதிரி தான். Room காலி பண்ணுனா கைலையே எல்லாத்தையும் எடுத்துட்டு வார மாதிரி இருக்கணும் அப்டிங்கிறது முதல் விதி. தேவைக்கு அதிகமா எதையும் வச்சிருக்க கூடாது. ரெண்டு புத்தகம் போதும். Dictionary phone ல பாத்துக்கலாம்னு 5 நாளுக்கு தேவையான துணி மற்ற பொருட்களுடன் ஞாயிறு மதியம் அப்பாவை அழைத்து கொண்டு வண்டி ஏறி விட்டேன்.

தனியாக சென்று அறையை பேசி தங்கி விடலாம் என்று தான் முதலில் நினைத்தேன். இதை நண்பனிடம் சொன்ன போது. 'அப்பாவை கூட்டிட்டு போடா, எங்க தங்கி இருக்க அப்டின்னு வீட்டுல தெரியணும்ல' என்று சொன்னான். இது ஏன் எனக்கு தோணவில்லை என்று மனதில் ஓடியது. பிறகு அப்படியே செய்தேன்.

பேருந்தில் செல்லும் போது 'Leaving the comforts of home, Once again' என்று whatsapp status வைத்தேன். அந்த வரி சிந்தனையில் ஒட்டிக்கொண்டு கண்ணீரை இறைக்க முயன்று கொண்டு இருந்தது. நான் கட்டு படுத்திக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். அழுது விட்டால் எல்லாம் சரி ஆகி விடும் போல் இருந்தது.

அறை இருந்த இடத்தை அடைந்து முதலாளியிடம் முன்பணம் எல்லாம் குடுத்து அறையை அப்பா தூசி தட்ட ஆரம்பித்து விட்டார். நான் அமைதியாக நின்று கொண்டிருந்தேன். பின்னர் fan ல் இருந்த தூசியை துடைக்கிறேன் என்று கட்டில் மேல் ஒரு stool போட்டு அதை துடைத்தேன்.

இது முடியவும், நானும் வீட்டுக்கு திரும்பி வந்துட்டு நாளைக்கு காலைல college வந்திடுறேன் என்று அப்பாவிடம் சொல்ல, 'அதெல்லாம் வேண்டாம், சும்மா அலைய வேண்டாம், நல்லா தூங்கி எந்திருச்சு வேலைக்கு போ' என்று சொல்லி விட்டார்.

நான் பல்லைக் கடித்துக்கொண்டு துணி துவைக்கும் இடத்தை பார்த்து விட்டு வாறேன் என்று மாடிக்கு சென்றேன். எலி வளைக்கு மேலும் ஒரு வானம் உண்டு.  நாலரை வருடங்களாக வீட்டில் இருந்ததால் இல்லாமல் போய் விட்டதாக நான் நினைத்த சிறகு வானத்தை பார்த்த உடன் உயிர் பெற்று விட்டது. அருகே யானை சரிந்து படுத்திருப்பது போல ஒரு குன்று அமைதியாக மாலை வெயிலில் நனைந்து கொண்டு இருந்தது.