Monday 2 March 2020

புயலில் சிக்கிய தோணிகள்

அக்னி நதி - குர் அதுல் ஜன் ஹைதர்


நீங்கள் 30 வயதை கடந்தவராக இருந்தால் இதை நன்கு உணர முடியும். பள்ளி கல்லூரி காலங்களில் நீங்கள் நண்பர்களிடம், உறவினர்களிடம் என்னவாக போவதாக சொல்லிக்கொண்டிருந்தீர்கள் இப்போது என்னவாக ஆகியிருக்கிறீர்கள்/  மாறியிருக்கீர்கள்?

வாழ்க்கையும் நதியை போல தான். அது அதன் வழியை தேடி செல்லும் நாம் நினைத்த படி அதை வளைக்க முடியாது. அணை போட்டு தடுக்க முடியாது. வாழ்க்கையின் முன்னால் நாம் மண்டியிட்டு அது நம்மை இழுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும் அல்லது அது அந்த பிரவாகம் நம்மை ஓரங்கட்டிவிட்டு முன்னேறி செல்லும்.

அக்னி நதி நாவலை நான் முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்கும் போதே பார்த்திருக்கிறேன். பாட திட்டத்தில் இல்லை ஆனால் நூலகத்தில் அழகான அட்டை படத்துடன் இருந்தது. ஆங்கில மொழியாக்கத்தை அதன் ஆசிரியரே செய்திருக்கிறார். முதலில் உருதுவில் எழுதப்பட்ட நாவல் பின்னரே அங்கிலத்திற்கும் மற்ற இந்திய மொழிகளுக்கும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. தமிழில் சௌரி செய்திருக்கிறார். 1971ம் ஆண்டே National Book Trust இதை வெளியிட்டு இருக்கிறது. அதன் பிறகு 1997 மற்றும் 2018ல் அடுத்த பதிப்புகள் வந்துள்ளன. என்னிடமுள்ளது 2018 ஆண்டு பதிப்பு. தூத்துக்குடி புத்தக கண்காட்சியில் வாங்கியது. மதுரையில் இரண்டு ஆண்டுகள் தேடி பதிப்பில் இல்லை என்று தெரிந்து பின்னர் 2019 ஆகஸ்டில் வாங்கினேன்.

இந்திய பெரு நாவல்கள் என்று எழுத்தாளர் ஜெயமோகன் கொடுத்திருந்த பட்டியலில் இந்நாவலும் உண்டு. அந்த பட்டியலில் இருந்து ஏற்கனவே ஆரோக்கிய நிகேதனம், மண்ணும் மனிதரும் வாசித்திருக்கிறேன். அதன் பிறகு அக்னி நதி என்கிற தலைப்பே இந்த நாவலை வாசிக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட காரணம்.

நாவல் கடைசி பகுதிக்கு வரும் போது தான் உணர்ந்தேன் அமைப்பில் இது போலவே உள்ள David Mitchell எழுதிய Cloud Atlas என்கிற நாவலின் சினிமா பதிப்பை நான் பார்த்திருக்கிறேன் என்று.

நாவல் 4 கால கட்டங்களில் நடக்கிறது. நான்கிலும் வரும் கதா பாத்திரங்களுக்கு பெயர் ஒன்று  தான், வாழ்க்கை அனுபவம், தரிசனம் எல்லாமே ஒன்று தான். வரலாறு அல்லது வாழ்க்கை முன்னால் மனிதன் எப்படி அடித்து செல்லப்படுகிறான் என்பதையே நாம் மீண்டும் மீண்டும் காண்கிறோம்.

History repeats itself, first as tragedy and second as farce. ஆனால் வரலாறு இங்கே நான்கு முறையும் உக்கிரம் குறையாமல் தன்னை நிகழ்த்துகிறது. Men may come and Men may go but the institution is everlasting என்று எனக்கு தெரிந்த ஒருவர் அடிக்கடி சொல்வார். அந்த Institution எனும் அமைப்பை சார்ந்து வாழும், மாற்ற நினைக்கும், அதில் இருந்து வெளியேறி செல்லும் மனிதர்களின் கதை இது.

Ideology க்காக, கொள்கைக்காக, கருத்தியலுக்காக தன்னை அடகு வைக்கும் மனிதர்கள் பின்னர் அதில் இருந்து வெறுத்து ஒதுங்குவதை நாம் தினம் காண்கிறோம்.

புயலிலே ஒரு தோணி நாவலில் இந்திய தேசிய ராணுவம், பின்னர் இந்தோனேசியா விடுதலை இயக்கத்தில் சேர்ந்து போர்புரியும் பாண்டியன் பின்னர் அதில் இருந்து விலகி ஊர் வந்து நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என நினைக்கிறான். ஆனால் திரும்பி செல்வதற்கான பாலங்களை எரித்த விட்ட பிறகே அவனுக்கு அது தோன்றுகிறது.

Madness is like gravity. All it takes is a little push என்று The Dark Knight படத்தில் வரும் Joker கதா பாத்திரம் சொல்லும். எண்ணிப்பாருங்கள் சமநிலை உள்ள மனிதர்கள் கொஞ்சம் பைத்தியம் ஆகாமல் Hitler, Stalin போன்ற நபர்களை ஆதரித்து இருப்பார்களா? அதனால் அவர்களே மிகப்பெரிய அழிவை தங்களுக்கும் தான் வாழும் நாட்டிற்கும் தேடிக்கொண்டர்கள்.

Benefit of hind sight என்று ஆங்கிலத்தில் ஒரு expression உண்டு. இன்று நாம் எடுக்கும் ஒரு முடிவு எந்த அளவிற்கு சரியானது என்று இன்றே சொல்ல முடியாது. அது காலத்தால் தீர்மானிக்கப்படுவது.

இளைஞர்களாக, இளம் பெண்களாக அறிமுகமாகும் இந்நாவலின் கதா பாத்திரங்கள் தங்களுக்குள் ஓயாமல் விவாதிக்கிறார்கள். தங்களுடைய கருத்துக்களை, நிலைப்பாட்டை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். Going against grain ஆக இருக்கும் அவர்கள் தாங்கள் வாழும் காலம் தாண்டி சிந்திக்கிறார்கள். ஆனால் அப்படி சிந்திப்பவர்கள் அதை வாழ்க்கையாகவும் விரித்துக்கொள்ள முடியுமா?

இன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கும் போராட்டங்கள் நடக்கின்றன. நாம் சுதந்திர பெற்ற போது நாடு இரண்டாக பிரிந்தது. அப்போது மக்களின் மனநிலை என்னவாக இருந்தது? பாகிஸ்தான் செல்லாமல் இந்தியாவில் இருந்தவர்களின் மன நிலை என்ன? பாகிஸ்தானை தேர்தெடுந்த மக்களின் எண்ணங்கள் என்ன? இப்படி அன்றைய இந்தியாவின் அரசியல், சமூக மாற்றங்கள், இந்தியர்களின் மனக்குழப்பங்கள் என்று அத்தனையும் இந்நாவலில் காணக்கிடைக்கிறது.

மத வேறுபாடு இல்லாமல் பழகும் நண்பர்கள் எப்படி அரசியல் நிலைப்பாடு காரணமாக விலகி செல்கிறார்கள் என்று காணும் நாம் எக்காலத்திலும் அரசியல் சார்பு, கட்சி சார் கொள்கை என்று ideology சார்ந்த விஷயங்கள் நெருக்கமான உறவினர், நண்பரிடையே கூட பிரிவை ஏற்படுத்துவதை காண்கிறோம்.

இப்போது குடியுரிமை திருத்த சட்டத்தை முன் வைத்து நடக்கும் விவாதங்களில் முழு சித்திரமும் தெரியாமல் மக்கள் மூர்க்கமான ஆதரவு, எதிர்பு என்று பிளவு பட்டு நின்று விவாதித்து, பூசலிட்டு கொண்டிருக்கிறார்கள். இப்படி இவர்கள் மல்லுகட்டிய இன்றைய அரசின் பல நடவடிக்கைகள் மிகப்பெரிய தோல்வியடைந்தன. உதாரணம் பணமதிப்பு நீக்கம். ஆனாலும் அதை செயல்படுத்திய கட்சியை ஆதரிப்பவர்கள் பின் வாங்குவதில்லை.

இப்படி இந்த நாவலின் கதா பாத்திரங்கள் தாங்கள் சார்ந்த கொள்கைக்காக வாதாடி பின்னர் அதில் இருந்து பிரிந்து, விலகி சொந்த வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்தால் போதும் என்கிற நிலைமைக்கு வருகிறார்கள்.

நான்கு பகுதிகளாக உள்ள நாவலில் நாலாவது பகுதியே மிக விரிவானது. அதனுடன் இன்றைய எந்த இளைஞனும், இளம் பெண்ணும் தன்னை கண்டுகொள்ள முடியும்.

இன்றைய கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலையில் ஒவ்வொரு இந்தியனும் வாசிக்க வேண்டிய நாவல்.


ஆதலினால் - எஸ். ராமகிருஷ்ணன்


Discovery Book Palace வெளியீடு

விலை -ரூபாய் 140/-

எஸ். ராமகிருஷ்ணன் எழுதும் ஒவ்வொரு கட்டுரையிலும் நாமறியாத ஒரு புது தகவல், பார்வை, பரிமாணம் இருக்கும். 

ஆதலினால் என்கிற இந்த கட்டுரை தொகுப்பு முழுக்க அத்தகைய கட்டுரைகளே உள்ளன. 

சாலை அமைப்பவர்கள் பற்றிய கட்டுரை நால் வழி சாலைகளை கண்டு வியக்கும் நாம் அதற்கு பின்னால் உள்ள மனிதர்களின் உழைப்பை பற்றி ஒரு நாளும் எண்ணி பார்ப்பது இல்லையே என்று தோன்ற செய்கிறது. 

இந்நூலில் உள்ள 25 கட்டுரைகளும் அப்படி புதிய சிந்தனையை நம்முள் தோன்ற செய்பவையே. 

நாம் அன்றாட வாழ்வில் தினம் சந்திக்கும் ஆனால் பொருட்படுத்தாமல் கடந்து போகும் மனிதர்களை பற்றிய கதைகளை, அவர்களின் வாழக்கையை எஸ். ரா இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். 

எஸ். ரா கூர்கா பற்றி எழுதியிருப்பதை நாஞ்சில் நாடன் அவர்களின் தன் ராம் சிங் கதையுடன் சேர்ந்து வாசிக்கலாம். 

அவர் சொந்த பதிப்பகம் தொடங்கிய பிறகு இப்புத்தகம் அதில் இருந்து வெளிவருகிறதா என்று தெரியவில்லை. 

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய துணையெழுத்து, சிறிது வெளிச்சம், தேசாந்திரி போன்ற மிக சுவாரசியமான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. 

ஆரம்பகட்ட வாசகர்களுக்கு உகந்தது. பரிசாகவும் அளிக்கலாம்.