Tuesday, 25 April 2023

The Banshees of Inisherin - Hell is Other People

உங்களிடம் எத்தனை பேரின் தொலைப்பேசி எண் உள்ளது? அதில் எத்தனை பேரை நீங்கள் கடந்த ஒரு வருடத்திற்குள் ஒரு முறையாவது அழைத்து பேசியுள்ளீர்கள்?

முகப்புத்தகத்தில் எத்தனை நண்பர்கள் உள்ளனர்? அவர்களில் எத்தனை பேர் உண்மையில் உங்கள் நண்பர்கள்?

Instagram, Twitter போன்ற தளங்களில் எத்தனை பேரை தொடர்கிறீர்கள்? எத்தனை பேர் உங்களை தொடர்கிறார்கள்?

உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? எத்தனை பத்திரிக்கை அச்சடித்து உறவினர்களை அழைத்தீர்கள்?

தொழில்நுட்பம், வாகனத்தின் வேகம் என கடந்த இருபது ஆண்டுகளில் ஒரு மிகப்பெரிய பாய்ச்சலை நாம் அடைந்திருக்கிறோம். ஆனால் நான் முன்னெப்போதை விடவும் மிகக்குறைந்த அளவிலேயே பயணம் செய்கிறோம் அல்லது புதிய நண்பர்களை சந்திக்கிறோம்.

இப்போது எந்த குழந்தைகள் தாத்தா - பாட்டி, மாமா - அத்தை, சித்தி - சித்தப்பா வீடுகளுக்கு விடுமுறைக்கு செல்கிறார்கள்?

கல்லூரி காலம் முடிந்து, வேலை அமைந்து, திருமணமும் ஆகிவிட்டால் நாம் தினம் ஒரு 100 மனிதர்களுக்குள்ளேயே புழங்க வேண்டியுள்ளது. தினம் புதியவர்களை சந்திக்கும் வாய்ப்போ, 5 வருடங்களுக்கு ஒரு முறை வேலை, ஊர் என அனைத்தையும் மாற்றிக்கொள்ளும் தைரியமோ அனைவருக்கும் வருவதில்லை.

நம் முன் உள்ள எண்ணற்ற சாத்தியங்களை சோதித்து பார்க்காமல் ஊர், குளம், கோத்திரம் என்று உட்கார்ந்து விடுகிறோம். அப்படி அமைந்த பின் அன்றாடம் உரையாடும் ஒரு நண்பர் உண்டு என்று கொள்வோம் அவர் ஒரு நாள் தீடீர் என்று "இன்றிலிருந்து என்னுடன் நீ பேச வேண்டாம், நீ என்னை பேசியே bore அடிக்கிறாய் எனக்கு அது பிடிக்கவில்லை" என்று சொல்கிறார் என்றால் நாம் அதை எப்படி எதிர்கொள்வோம்?

The Banshees of Inisherin படத்தின் ஆதார முரண் அல்லது மையம் இரு நண்பர்களிடைய உருவாகும் இந்த விரிசல் தான். Inisherin தீவில் வாழும் Colm மற்றும் Pádraic என்று இரண்டு நண்பர்கள். இந்த கற்பனை தீவு Ireland அருகில் உள்ளதாக படத்தில் வருகிறது.

இருவர் இடையே இருந்த நட்பை Colm தான் முறிக்கிறார். Colm வயதில் Padraicஐ விட வயதில் பெரியவர். நட்பை முறிப்பதற்கு அவர் சொல்லும் காரணம் அற்பமாக தோன்றும் ஆனாலும் அதன் தீவிரத்தை படம் செல்ல செல்ல அனைவரும் உணர்வோம்.

Padraic மாடுகள் வளர்க்கும் ஒரு விவசாயி, பால் வியாபாரம் செய்கிறான், திருமணம் செய்து கொள்ளவில்லை, அவனுக்கு உலகில் மீதமிருக்கும் ஒரே ரத்த உறவு அவனது சகோதரி மட்டுமே. அவளும் திருமணம் செய்து கொள்ளாததால் இருவரும் அவர்களது பூர்வீக வீட்டில் தான் வசிக்கிறார்கள். செல்லமாக ஒரு கழுதை வளர்க்கிறார்கள்.

Colm ஒரு இசைக்கலைஞன். Fiddle அவர் வாசிக்கும் இசைக்கருவி. அவர் Padraic உடனான நட்பு எந்த வகையிலும் ஒரு கலைஞனாக தனக்கு உதவ வில்லை என்று அறிந்து அவன் நட்பை புறக்கணித்து அந்த நேரத்தில் அழியா இசையை உருவாக்கம் செய்யப் போகிறேன் என்கிறார்.

Padraic இதை மிக புதிராக உணர்கிறான். அவனுக்கு பெரிய லட்சியங்களோ, கனவுகளோ, ஆசைகளோ இல்லை. கதை நடக்கும் காலம் 1923. 100 வருடங்களுக்கு முன்னர் கூட மிக நிதானமான வேகத்தில் இன்றைய பரபரப்பு எதுவும் இல்லாமல் வாழ்ந்த்திருக்கிறார்கள்.

Colm இனி தான் எத்தனை ஆண்டுகள் வாழ்வோம் என்று தெரியாது என்றும் அதனால் Padraic தன்னை தொந்திரவு செய்யாமல் விட்டு விட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். Padraic உடன் செலவிடும் நேரம் வீண் என்றும் தான் காலம் தாண்டி நிற்கும் இசையை உருவாக்க விரும்புவதாகவும் சொல்கிறார்.

தீவில் உள்ள சில நூறு பேர் மத்தியில் அனைத்தும் காட்டு தீயென பற்றி விடுகிறது. இந்த  நட்பு முறிவு பேசு பொருளாகிறது.

Padraic தீவில் உள்ள மற்ற நண்பர்கள் மூலம் நிலைமையை சரி செய்ய முயல்கிறான் ஆனால் நிலைமை கையை மீறி செல்கிறது.

Colmன் தீவிரத்தன்மை கண்டு அனைவரும் கொஞ்சம் மிரண்டு போகிறார்கள். இந்த உச்ச நிலைக்கு Colmஐ தள்ளியது எது என்று குழம்புகிறார்கள்.

மிக குறைந்த உறவே மிக நல்ல உறவு என்று சொல்வார்கள். எந்த ஒரு உறவிலும் ஒருவர் எல்லை உணர்ந்தே பழக வேண்டும். ஒவ்வொரு நபரும் தனக்கான அந்தரங்க வாழ்க்கை உண்டு அதில் யாரையும் ஈடுபடுத்தக் கூடாது என்பதையும் உணர வேண்டும்.

மனிதன் இசை, ஓவியம், இலக்கியம் என்று பலவிதமாக வெளிப்படுவது அவனது தனிமையை வெல்ல தான். உடனிருக்கும் மனிதர்கள் உடனான உரையாடல் போதாமல் தான் அவன் புதிதாக படைக்க விழைகிறான். அத்தகைய படைப்பு மனம் கொண்ட ஒருவன் மிக சராசரியான ஒருவரை தொந்திரவாக கருத்தக்கூடும். இது அந்த சராசரி மனிதருக்கு புரியாமல் போகும் போது நடக்கும் சம்பவங்கள் தான் திரைப்படம்.

படத்தில் உள்ள தீவிரத்தன்மைக்கு இணையாக தீவிரமான நகைச்சுவை பகுதியும் உள்ளது. Desperate Dark Comedy வகை.

உறவை வேண்டாம் என்று சொல்லும் மனிதர்களை போல புதிய உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள முயற்சி செய்யும் மனிதர்களும் அந்த தீவில் இருக்கிறார்கள். இந்த தீவை விட்டு வெளியேறாமல் வாழ்க்கை இல்லை என்று வெளியேறி செல்பவர்களும் இருக்கிறார்கள்.

மனிதர்களின் இருப்பிற்கு என்ன தேவை? எனும் கேள்வியை இந்த படம் எழுப்புகிறது. மனிதர்கள் எந்த அளவிற்கு வெளிப்படையாக இருக்கலாம்? எங்கே மனதில் உள்ளதை வெளியே சொல்லக்கூடாது என்று ஒரு simulator அனுபவத்தை அளிக்கிறது.

படம் நடக்கும் காலத்தில் உள்ள அரசியல் சூழ்நிலை, இரு நண்பர்கள் வாழ்வில் உள்ள விலங்குகள், கதையில் வரும் மற்ற கதா பாத்திரங்கள் என்று அனைத்தும் மிக நுட்பமாக காட்சி படுத்தப்பட்டுள்ளன. பின்னணி இசை மிக சிறப்பாக அமைந்துள்ளது.

மனித வாழ்வின் முரண்களை திரைப்படமாக பார்க்க விரும்புபவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படமிது. மிக நிதானமாக தொடங்கி நம் மனதில் ஆழமாக செல்லக்கூடிய ஒரு கதை.