Wednesday, 27 December 2023

The Element Chapter 10 - House Owner

The Element 


Chapter 10 - House Owner


நான் இருக்கும் வீட்டின் உரிமையாளர் குறித்து மற்ற நண்பர்களிடம் சொல்லும் போது இவ்வளவு நல்லவங்க ஊருக்குள்ள இருக்காங்களா என்று தான் எதிர்வினை வரும். 


ஒரு உதாரணம். Corona காலத்தில் நாங்கள் அங்கே தங்கவில்லை என்பதால் வாடகை வேண்டாம் என்றார். ஒரு மாதம் வாங்கவே மாட்டேன் என்று சொல்லிவிட்டார். எனக்கு சம்பளம் வருகிறது ஒன்றும் பிரச்சினை இல்லை என்ற போதும் வேண்டவே வேண்டாம் என்று விட்டார். 


அதிகம் படிக்காதவர். வேலை என்று ஒன்று பார்க்க தொடங்கிய காலத்தில் இருந்து ஒரே நிறுவனத்தில் பணிபுரிகிறார். செயல் வீரன். நான் வெள்ள நீருக்குள் கால் வைக்க யோசித்துக்கொண்டிருக்கும் போது அவர் இறங்கி சென்று நாலா புறமும் பார்த்துவிட்டு நிலவரம் என்னவென்று வந்து சொன்னார். 


அவருடைய முதலாளி வீட்டுக்கு பொருட்கள் வாங்க இவர் தான் செல்ல வேண்டும். தண்ணீர் காலை இழுக்கிறது ஆனாலும் போய் தான் ஆக வேண்டும் என்று சொல்லி விட்டு கிளம்பிச் சென்று விட்டார். போகும்போது தெருவில் மிக வரிய நிலைமையில் உள்ள ஒரு முதிய தம்பதிக்கு அவரது மனைவியிடம் சொல்லி உணவளிக்க சொன்னார். 

ஊர் இருந்த நிலைமைக்கு மக்கள் உயிர் பிழைத்து இருப்பதே சாதனை என்பதாக தான் இருந்தது. 


18 அன்று இரவு வரை signal இருந்தது. ஒரு நண்பன் phone செய்து என்ன இருக்கியா, போய்ட்டியா? என்று கேட்டான். அப்படியேதான் இருக்கேன் என்று பேசிக்கொண்டிருந்தேன். இப்போதைக்கு செய்யக்கூடுவது, புத்திசாலித்தனமானது ஒன்றும் செய்யாமல் வீட்டிற்குள் காத்திருப்பது தான் என்று பதிலுரைத்தேன்.  


இப்படி சூழ்நிலைகளில் உதவுகிறேன் பேர்வழி என்று போய் தன் திறன் அறியாமல் உயிர் விட்டவர் பலர். அதனால் கதா நாயகத்துவதுக்கு நேரமோ, விருப்பமோ இல்லை என்று கன்னத்தில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். எங்களுக்கு வழக்கமாக பசும்பால் கொண்டு வரும் அண்ணனால் அன்று வர இயலவில்லை. அப்போது House Owner எங்கேயோ தேடி என் மகனுக்கு ஒரு ஆவின் பால் பாக்கெட் வாங்கிக்கொண்டு வந்தார்.

No comments:

Post a Comment