இங்கே, தமிழ் நாட்டில் 1988ம் வருடம் பிறந்த நான் விவரம் தெரிந்த நாளில் இருந்து விடுதலை புலிகளின் வீர சாகச கதைகளை கேட்டு வளர்ந்தேன். 5 வயது இருக்கும் போது பள்ளியில் சேட்டை செய்ததாக என்னை அடித்த ஒரு ஆசிரியையிடம் 'இரு வவுனியாவுல இருக்க துப்பாக்கியை எடுத்திட்டு வர சொல்லுதேன், ஒரு குண்டுல இந்த பள்ளிக்கூடம் தரை மட்டம் ஆகிடும்' என்று மிரட்டல் விட பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர், முதல்வர் வரை கூடிவிட்டனர்.
5 வயதுக்கு கொஞ்சம் அதிகமாக தெரிந்தாலும் நான் இப்படி பேசும் அளவுக்கு இங்கே விடுதலை புலிகள் பற்றி குடும்பங்களில் பேசி கொண்டிருந்தனர். இயக்கத்தின் மீது அசைக்க முடியாத பற்று, மதிப்பு, நம்பிக்கை கொண்டிருந்தனர். போர் முடிந்து 7 ஆண்டுகள் ஆன பின்னர் கூட 40, 50 வயதுகளில் உள்ளோர் இயக்கம் மீது எந்த விமர்சனத்தை ஏற்று கொள்ள தயாராக இல்லை.
25 வயதிற்கு கீழ் உள்ளோருக்கு 99% இயக்கம் குறித்தோ அங்கே நடந்து முடிந்த சண்டை குறித்தோ, மரணித்த மக்கள் குறித்தோ கவலையோ, சிந்தனையோ இல்லை. மேலும் ஈழம் குறித்து பேசுபவர்கள் பெரும்பாலும் ஏற்கனவே பல முறை கேட்டு சலித்த விடயத்தை தான் பேசுவார்கள். அங்குள்ள மக்களுக்கு இதனால் புல் முனை அளவு கூட பிரயோசனம் கிடையாது.
தற்செயலாக அ. முத்துலிங்கத்தின் கதைகள் வாசிக்க ஆரம்பித்து, ஷோபா சக்தி, சயந்தன் என்று ஈழ எழுத்தாளர்களின் எழுத்தை தொடர்ந்து வாசிக்கும் பொருட்டு முன்னாள் இயக்க போராளி, தற்போது காலம் சென்ற தமிழினி அவர்களின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' வாசித்தேன்.
அய்யா முத்துலிங்கம் இயக்கம் உருவாகும் முன்பே வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டதால் அவருடைய கதைகளில் பெரும்பாலும் இங்கே நடந்த போர் குறித்த சித்திரம் இருக்காது. ஆனால் புலம் பெயர்ந்த மக்கள் குறித்த கதைகள் அனேகம். ஒரு கதையில் வீட்டை விட்டு இயக்கத்திற்கு செல்லும் மகள் குறித்து எழுதிய நினைவு. தலைப்பு நினைவில் இல்லை.
ஷோபா சக்தியின் கொரில்லா, ம் நாவல்களும், சிறுகதைகளும் இயக்கம் மீது விமர்சனம் வைக்க தவறுவதில்லை. அதே சமயம் இலங்கையின் அரச பயங்கரவாதத்தை வெளிக்கொணராமலும் இல்லை.
சயந்தனின் ஆறா வடு மற்றும் பெயரற்றது மட்டுமே வாசித்துள்ளேன். ஆதிரை வாங்கியாகி விட்டது வாசிக்க தொடங்க வேண்டும்.
மேற்சொன்ன மூவரும் புனைவு எழுத்தாளர்கள். அவர்கள் எழுத்தில் நான் காணும் ஒற்றுமை அங்கதமும் அபத்தமும். ஷோபா சக்தியின் சமீபத்திய சிறுகதை 'மிக உள்ளக விசாரணை' சிறந்த உதாரணம்.
நான் பெரும்பாலும் சுய சரிதை வாசிப்பதை தவிர்த்து விடுவேன். காந்தியின் சுய சரிதை வாங்கி பத்து வருடம் ஆகிறது. ஒவ்வொரு முறையும் 10 அத்தியாயம் தாண்டாது. பிறகு கிடப்பில். The Diary of Anne Frank அதனாலேயே வாங்கவே இல்லை. The Story of Helen Keller மட்டும் வாங்கி வாசித்தும் விட்டேன்.
ஏதோ ஒரு உந்துதலில் 'ஒரு கூர்வாளின் நிழலில்' ஒரு சுய சரிதை என்று தெரிந்தும் வாசிக்க எடுத்து விட்டேன். வாசித்தும் விட்டேன். நான் புனைவில் வாசித்தது எந்த அளவு உண்மை என்று அறிய விரும்பினேனா? இயக்க தலைவருக்கு என்ன ஆனது என்று அறியும் ஆவலா? இலங்கை ராணுவம் குறித்து என்ன சொல்லி இருக்கிறார் என்று பார்க்கவா? இது எல்லாம் சேர்ந்தா இல்லை ஒரு வீர சாகச கதையை எதிர் பார்த்தேனா என்று தெரியவில்லை.
ஆனால் ஈழம் குறித்த எழுத்துக்களை வாசிக்க தொடங்கிய பின் இயக்கம் மீது உள்ள விமர்சனங்களின் நியாமும் புரிகிறது. இதை சொன்னதற்கு என் மீது நீங்கள் கல்லெறியும் முன் இயக்கம் குறித்து அன்ரன் பால சிங்கம் என்ன சொன்னார் என்று புத்தகத்தில் ஒரு இடத்தில் தமிழினி சொல்கிறார், அதை வாசித்து விட்டு வாருங்கள்.
தமிழினி இந்திய படைகள் இலங்கையில் இருந்து வெளியேறிய பிறகு இயக்கத்தில் இணைகிறார் 2009ல் போர் முடியும் வரை இயக்கத்தில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்திருக்கிறார். ஆனால் நேரடியாக யுத்தத்தில் கலந்து கொண்ட அனுபவம் மிக குறைவே. அரசியல் பிரிவில் அதிகமும் பணியாற்றியிருக்கிறார்.
சமாதான பேச்சு வார்த்தைக்கு முன்பாக புலிகள் மிக வலுவான நிலையில் இருந்தது தெரிகிறது. ஆனாலும் இழப்புகள் ஏராளம் தான். 2001 இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு உலக நாடுகள் போராளிகள், தீவிரவாதிகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை கண்டு கொள்ள மறுத்ததால் சமாதான பேச்சு வார்த்தை 2006ல் முறிந்த போது புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டது.
தமிழினி இதற்கு இயக்க தலைவர் புரிந்த எதிர்வினை பற்றி புத்தகத்தில் குறிப்பிடுகிறார். அதை வாசிக்கும் நமக்கு அதில் இருந்தே இயக்கம் தோல்வியை நோக்கி நகர்ந்தது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
அரசியல் பேசி சாதிக்க வேண்டியதை துப்பாக்கியால் சாதிக்க முயன்றதன் பின்னால் மாண்ட மக்கள் எத்தனை? இதை இயக்க தலைவருக்கு எடுத்துரைக்க ஆட்கள் யாரும் இல்லை. அன்ரன் பாலசிங்கம் தவிர்த்து வேறு எவரும் தலைவர் சொல்லுக்கு மறுப்பேதும் பேசாமல் அவரை சர்வாதிகாரி போல ஆக்கி விட்டனர் என்பது தெரிகிறது.
2006க்கு பின்னர் இருந்த இயக்கம் என்பது ஒரு இயக்கமாக இல்லாமல் ஒரு கட்டு பெட்டி தனமான ராணுவ அமைப்பாக மாறிவிட்டதென்பது புத்தகத்தை வாசிக்கும் போது உணர முடிகிறது. முன்னைய வெற்றிகள் தந்த மிதப்பு நடைமுறையை புரிந்து கொள்ள விடாமல் அவர்களை தடுத்து விட்டது.
கருணா போன்ற போராளிகள் விலகி சென்றது இயக்கத்தை வலுவிழக்க செய்தது. மேலும் ராணுவம் புலிகளின் போர் முறை, ஆயுதம் பொருத்திய இடங்கள், அவர்களின் நிலைகள் என அனைத்தையும் நவீன கருவிகள் மூலமாக கண்டு கொண்டதாக தமிழினி சொல்கிறார். அது எந்த அளவுக்கு உண்மை என்பதை ராணுவ தரப்பில் யாராவது எழுதினால் தான் தெரியும்.
ராணுவத்திடம் சரண் அடைந்து அவர்கள் விடுவிக்கும் வரை சிறை வாழ்க்கையில் தன்னுடைய நம்பிக்கை சிதைந்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு வரும் தமிழினி, ராணுவம் மற்ற போராளிகளை நடத்திய விதம் குறித்து எதுவுமே சொல்ல வில்லை.
இலங்கை மீது எந்த புகாரையும் வைக்க வில்லை. ராணுவம் குறித்து மிக குறைவாகவே கூறுகிறார். தன்னுடன் நல்ல விதத்தில் பழகிய சிங்கள அதிகாரிகள் குறித்து நினைவு கூறுகிறார். ஆனால் குற்றம் இழைத்த அதிகாரிகள் குறித்து எதையும் சொல்ல வில்லை.
போர் இறுதி கட்டத்தை நெருங்கிய பின் புலிகள் செய்ததாக தமிழினி சொல்லும் விடயங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. இயக்கத்தின் தவறுகளை பற்றிய பதிவுகளில் தயக்கம் இல்லாத போது ராணுவம் குறித்த பதிவுகள் censor செய்ய பட்டது போல் தெரிகிறது.
இறுதியாக முள்ளிவாய்க்கால் வரை வந்தே சரண் அடைகிறார். ஆனால் முள்ளிவாய்க்கால் குறித்து உலகமே பேசிக்கொண்டிருக்கும் போது அதை பற்றி மிக குறைவாக கூறி கடந்து செல்கிறார்.
ஜனநாயக தன்மை இல்லாத ஒரு அமைப்பு நாளடைவில் எப்படி நொறுங்கும் என்பது புத்தகத்தை வாசிக்கும் போது தெரிகிறது. தமிழினம் அனுபவித்த இந்த பெருந்துயருக்கு இயக்கத்தில் ஜனநாயக தன்மை இல்லாதது முக்கிய காரணம்.
இயக்கத்தில் நிலவிய சாதி வேறுபாடுகள் அல்லது ஈழ சமூகத்தில் நிலவிய வேறுபாடுகள் குறித்து ஒன்றும் அறிய முடியவில்லை. ஷோபா சக்தி, சயந்தன் எழுத்துக்களில் இயக்கம் மற்றும் சமூகத்தில் நிலவிய சாதிய படிநிலைகள் சரிந்து விடாமல் இருக்க மக்கள் செய்யும் செயல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புத்தகம் மீதும், தமிழினி மீதும் பெரும்பாலும் எதிர் மறையான விமர்சனங்கள் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்த சுய சரிதை நிச்சியம் முக்கியமான ஆக்கம். புலிகள் தரப்பு குறித்தும், அமைப்பு உருவாகிய பின் ஈழ மக்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விமர்சனத்தோடு பலரும் எழுதும் போது நாம் இன்னும் இந்த போராட்டத்தை பற்றி புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். போலவே இலங்கை ராணுவத்தில் பணியாற்றிய மனசாட்சி உள்ள ஆட்களை வைத்து அவர்கள் தரப்பு உண்மைகளை வெளிக்கொணர வேண்டும்.
ஆமாம் சரத் பொன்சேகா என்ன ஆனார்?! இறுதி யுத்தத்தில் நடந்ததை அவர் வெளிய சொல்லி விடுவார் என்று தான் அவரை சிறையில் அடைத்தவர் ராஜ பக்ச?
ராஜீவ் கொலை குறித்தும், அதற்காக சிறை வைக்க பட்டிருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி குறித்தும் தமிழினி ஒன்றும் சொல்ல வில்லை. மேலும் ராஜீவ் கொலைக்கு புலிகள் இயக்கம் பொறுப்பேற்று கொண்டதா என்ன?
தமிழினியின் சுய சரிதையில் இதையெல்லாம் தேடக்கூடாது என்று நினைக்கிறேன். ஆனால் இயக்கத்தில் பெண்களுக்கு கொடுக்க பட்ட பொறுப்புகள், அவர்களை தலைவர் நடத்திய விதம் பற்றி நிறைய தகவல்களை தருகிறார். ஆனாலும் இயக்கத்தில் இருந்த முக்கியத்துவம் தமிழ் சமூகத்தில் பெண்களுக்கு இல்லாமல் போனதையும், போர் முடிந்து எஞ்சிய பெண்போராளிகள் அனுபவித்த துன்பத்தையும், சமூகம் அவர்களை நடத்திய விதத்தையும் சொல்கிறார். பெண்கள் சமாதான பேச்சு வார்த்தையில் அதிகமாக பங்கெடுக்கும் போது சுமூகமான தீர்வுகள் சீக்கிரமே எட்டப்படும் என்றும் நினைக்கிறார்.
இந்த சுய சரிதையை அனைத்து தமிழ் பெண்களும் வாசிக்க வேண்டும். தமிழ் இளைஞங்கர்களும் தான். புத்தியை தீட்டுவதை விட்டு விட்டு எல்லா வெட்டி வேலையும் செய்வதில் நிபுணர்கள் ஆகி கொண்டிருக்கும் ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது.
அரசியல் என்றால் வாக்களிப்பது மட்டுமே என்றும் அதையும் செய்ய தேவை இல்லை என்றும் நினைக்க ஆரம்பித்து விட்ட ஒரு தலைமுறை.
தமிழக மக்கள், இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வு அற்றவர்கள் என்பது இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு வசதியாக போய் விட்டது. ஈழத்தில் நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்து விட்டனர். இங்குள்ள அரசியல் தலைவர்கள் ஈழ மக்களுக்காக செய்தது என்ன என்பதும் விரிவாக எழுதப்பட வேண்டும்.
இரண்டாம் உலக போருக்கு பின்னர் யூதர்கள் தங்களை ஒரு சக்தி மிகுந்த சமூகமாக உருவாக்கி கொண்டனர். தாங்கள் அனுபவித்த துயரத்தை இலக்கியத்தில் பதிவு செய்தனர், திரைப்படங்கள் ஆக்கினர். இன்று வருடத்திற்கு ஒரு படமாவது போரில் அவர்கள் அனுபவித்த கொடுமைகள் குறித்து வருகிறது. இந்த இலக்கிய கலாச்சார பின்புலம் அவர்களை சர்வதேச அரங்கில் வலிமையுடைய மக்களாக நிறுவி இருக்கிறது.
தமிழினத்திற்கு இலக்கிய கலாச்சார பின்புலத்திற்கு ஒரு குறைவும் இல்லையென்றாலும் ஈழம் குறித்த எழுத்துக்கள் தமிழ் மக்களிடமும் (தன் மொழியில் தற்காலத்தில் எழுதப்படும் எது குறித்தும் எதுவும் அறியாத அப்பாவி இனம் தமிழினம்) மொழிபெயர்த்து உலக வாசகர்களிடமும் எடுத்து செல்ல பட வேண்டும். விமர்சிக்க பட வேண்டும். விமர்சனம் செய்து மேலும் முன்னகர வேண்டும். தமிழ் மொழிக்கான இருக்கைகளை சர்வேதச பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்த வேண்டும். ஒரு அறிவு சார்ந்த, பொருளியல் சக்தியாக தமிழ் மக்கள் எழுந்து நிற்கும் போது நமக்குறியதை யாரும் மறுக்க முடியாது.
பின் குறிப்பு:
அங்கங்க ரெம்ப உணர்ச்சி வச படுற மாதிரி தெரிஞ்சா அது தான் தமிழ் பேசும் மக்களை வாழ வைக்குது இல்லாட்டி லத்தீன், கிரேக்க கலாச்சாரத்துல தமிழும் சேர்ந்திருக்கும்.
5 வயது இருக்கும் போது பள்ளியில் சேட்டை செய்ததாக என்னை அடித்த ஒரு ஆசிரியையிடம் 'இரு வவுனியாவுல இருக்க துப்பாக்கியை எடுத்திட்டு வர சொல்லுதேன், ஒரு குண்டுல இந்த பள்ளிக்கூடம் தரை மட்டம் ஆகிடும்' என்று மிரட்டல் விட பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர், முதல்வர் வரை கூடிவிட்டனர். It's really unbelievable.
ReplyDelete