தமிழ் நாட்டில் இலக்கியம் என்றால் சங்க இலக்கியம் என்றே பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரின் புரிதலிருக்கிறது. அவர்களிடம் 'உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்' என்ற கேள்வி ஒரு வித நகைப்பை தான் உருவாக்கும். நீங்கள் ஒரு வித தற்கொலை தன்மையுடன் உங்களுக்கு தெரிந்த எழுத்தாளர் பெயரை சொல்லுங்கள் என்று கேட்டால், வள்ளுவர், இளங்கோவடிகள், பாரதி என்று சொல்லுவார்கள். சரி தான், இப்போ எழுதுற யார் பெயராவது தெரியுமா என்று கேட்டால், கலைஞர், கண்ணதாசன், வைரமுத்து, ராஜேஷ் குமார் என்று சொல்வார்கள்.
மனப்பாட போட்டிக்கு மட்டுமே பிறந்ததில் இருந்து படிக்கும் அவர்கள் செய்தி தாள்களை கூட படிப்பதில்லை. ஏன் செய்தி தாள் கூட வாங்குவதில்லை, படிப்பதில்லை என்ற கேள்விக்கு அதான் டிவில நியூஸ் வருதே என்று வேகமான மறுமொழி வரும். இப்படி இருக்கும் நிலைமையில், கடைசியா நீங்க என்ன புத்தகம் வாங்குனீங்க, படிச்சீங்க என்ற கேள்வி மிக அபத்தமான ஒன்று.
ஆனாலும் கடந்த பத்து வருடங்களாக கல்லூரிகளில் தமிழ், ஆங்கில இலக்கிய படிப்புகள் நிரம்பி வழிகின்றன. நீங்கள் தமிழ், ஆங்கில இலக்கிய மாணவ, பேராசிரியர்களிடம் மேற்கண்ட கேள்விகளை கேட்டாலும் மேற்கிடைத்த பதில் தான் கிடைக்கும். ஆங்கில இலக்கியம் படிக்க வருபவர்கள் பக்கத்து வீட்டு அக்கா சொன்னாங்க என்பதில் இருந்து வெளிநாட்டில் இருக்கும் சித்தப்பா சொன்னார் என்று பலரும் சொன்னதாக வந்து சேர்வார்கள். அனைவர் சொன்னதும் இளங்கலை படித்து விட்டு B.Ed படித்தால் வேலை உறுதி என்பதே.
தமிழ் வழி படித்தவர்களுக்கு சிறப்பு சலுகைகள் உள்ளன என்பது தான் தமிழ் இலக்கிய வகுப்பை நிறைய வைக்கிறது. TNPSC தொடங்கி UPSC வரை மனதில் கட்டம் கட்டி படிக்க வருபவர்கள் பலர்.
நிலைமை இப்படி இருக்கும் போது இலக்கியம் படிக்க வருபவர்களிடம் கடைசியா என்ன படிச்சீங்க என்று கேட்டால் அவன் சிரிக்காமல் என்ன செய்வான்??!!!
12ம் வகுப்பு தமிழ் துணை பாட நூலில் உள்ள கதைகள், எழுதியவர் பெயர் கேட்டால் அதெல்லாம் நினைவில் இருப்பதில்லை. அதன் தேவை முடிந்து விட்டதால் மறக்கப்பட்டு விட்டது. புதுமைப்பித்தன் கதை எப்படியும் இருக்கும் என்று அவர் எழுதிய கதையை பற்றி கேட்டால் ஆமாம் என்று பதில் வரும். கதையை வாசித்தவர்கள் அந்த வருடம் கல்லூரியில் நுழைந்த 500 முதலாமாண்டு மாணவர்களில் 10 பேர் இருந்தால் அதிகம்.
ஏன் வாசிக்கவில்லை?! ஆசிரியர் கதையை சொல்லுவார், கட்டுரை எழுத கோனார் உரை - பிறகெதுக்கு தங்களது பொன்னான நேரத்தை கதையை வாசிப்பதில் செலவு செய்ய வேண்டும்?! புதுமைப்பித்தனின் 'பால்வண்ணம் பிள்ளை' பரிந்துரைக்கப்பட்ட கதை. 4 பக்கம் கூட வராது. அதை வாசிக்க வக்கில்லாதவர்கள் கல்லூரி வரை வந்து விட்டார்கள். அதுவும் இலக்கிய வகுப்புக்கு.
தமிழில் ஒரு நாவலை கூட வாசிக்காமல் தமிழ் ஆசிரியர் ஆகி விட முடியும்; உபயம் - உரை நூல்கள். ஆங்கிலத்திற்கும் அவ்வண்ணமே.
இது ஏன் இப்படி நடக்கிறது?!
தமிழ் சமூகத்திற்கு கல்வி என்பது வேலைக்கான துருப்புச்சீட்டு. வேறெதையும் வாசிப்பது மகா பாவம். ஆனால் இந்த சமூகம் எடுத்ததுக்குகெல்லாம் கல் தோன்றி, மண் தோன்றி என்று பிதற்றும். நிலைமை இப்படி இருக்கும் போது ஆங்கிலம் படிக்க வருப்பவனிடம் Social History of England, History of English Literature, Literary Forms, Chaucer, Shakespeare, phonetics என்றால் அவன் என்ன செய்வான்?!
தமிழிலும் இதே நிலவரம் என்று நினைக்கிறேன். தமிழ் சிறுகதை, நாவல்கள் வாசித்த, வாசிக்கும் ஒரு பள்ளி, கல்லூரி தமிழ் ஆசிரியரை நான் சந்திக்க காத்து கொண்டிருக்கிறேன்.
இப்படி தமிழனுக்கு தமிழ் எழுத்து உலகம் குறித்து எதுவுமே தெரியாத போது, பள்ளியில் இலக்கியத்தை அறிமுக படுத்தாமல் விட்டு விட்டு, வீடுகளில் பிறந்ததில் இருந்து டிவி பார்த்து வளர்ந்து இப்போது இணைய அடி தடிகளில் இறங்கும் இளைய தலைமுறையிடம் இலக்கியத்தை எப்படி அறிமுக படுத்த முடியும்?!
இது அவசியம் தானா?!
பாரதியார் பிறந்த நாளுக்கு நமது பிள்ளைகளுக்கு பாரதியார் வேசம் கட்டுபவர்கள் நாம். எட்டயபுர மாணவர்கள் ஒருவரிடம் கூட பாரதியார் கவிதை புத்தகம் கிடையாது என்பது அதிர்ச்சி அடைய வேண்டிய ஒன்று அல்ல. ஆனால் திருநெல்வேலியில் இருந்து கொண்டு அல்வா சாப்பிடாமல் இருப்பது கண்டிக்க பட வேண்டிய செயல் இல்லையா?!
இனி வரும் வருடங்களில் இவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அப்துல் கலாம் வேசம் போடுவார்கள்.
எதற்காக இலக்கியம் படிக்க வேண்டும்?! என்ற கேள்வி மிக விரைவாக வந்து விழும். நாம் பதிலுக்கு எதுக்காக பொறியியல், மருத்துவம் என்று ஆரம்பிக்க கூடாது. வயிற்று வாதிகள் அசிங்கத்திற்கு அஞ்சாதவர்கள்.
எதற்காக ஒரு நாளைக்கு 5 மணி நேரம் டிவி பார்க்க வேண்டும்?! மாசம் 250 ரூபாய்க்கு net card போட்டு fb, whatsapp, hike, instagram என்று நாள் ஒன்றுக்கு விழித்திருக்கும் நேரம் முழுதும் இணையத்தில் வாழ வேண்டும்? என்று பதில் கேள்வி எழுப்ப வேண்டும்.
எப்போதும் இந்த மாதிரி கேள்விக்கான பதில் இன்னொரு கேள்வியிலேயே இருக்க முடியும். யாரும் சொல்லி தராமலேயே சராசரி கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் சினிமா சமாசாரம் எல்லாம் தெரிகிறது!!! ஆனா இலக்கியம்?!
வேறெதுவும் கிடைக்காமல் அல்லது வேலையை மட்டுமே மனதில் வைத்து வந்து தமிழ், ஆங்கில இலக்கியம் படித்து ஆசிரியர் ஆனவர்கள் தான் தமிழ் நாட்டில் இப்படியொரு இலக்கிய வாசிப்பு இல்லாமல் செய்தது. அவர்களே படிக்காத போது மாணவர்கள் எப்படி படிப்பார்கள்?!
இந்நிலையில் எதன் பொருட்டு மாணவனை இலக்கியம் வாசிக்க வைப்பது?! கல்லூரியில் படிக்கும் ஆயிரம் பேரை வாசிக்க வைக்க முடியுமா?! ஆனால் தமிழில் இலக்கியம் என்ற ஒன்று இன்னும் எழுத படுகிறது என்பதை சொல்ல முடியும். அந்தந்த ஊர்களில் உள்ள எழுத்தாளர் குறித்து அறிமுகம் செய்து வைக்க முடியும். வாசிப்பது அவரவர் விருப்பம்.
நான் புதிதாக செல்லும் அனைத்து வகுப்புகளிலும் கி. ராஜநாராயணன் எழுதி தொகுத்த நாட்டு புற கதைகளில் இருந்து நாளுக்கு ஒன்று என்று முதல் மூன்று நாட்கள் கதைகளை சொல்லுவேன். பின்னர் நாஞ்சில் நாடனின் தன் ராம் சிங், எஸ். ராமகிருஷ்ணனின் குதிரைகள் பேச மறுக்கின்றன, ஜெயமோகனின் சோற்றுக்கணக்கு, மாடன் மோட்சம், சுஜாதாவின் நகரம், அ. முத்துலிங்கத்தின் கோப்பைகள் என்று முதல் 10 வகுப்புகளில் கடைசி 15 நிமிடத்தை கதை சொல்ல பயன் படுத்துவேன்.
கதையை கூர்ந்து கவனிக்காத ஆள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சினிமா நடிகரின் விசிறியாக இருப்பார். அவர்களுக்கு எதுவும் ஏறாது. மற்ற படி அனைவரும் தினம் என்ன நாள் முழுதும் கதை கேட்க தயாராகவே இருப்பர்.
பின்னர் நான் சொன்ன கதைகளை print out எடுத்து வாசித்து பாருங்கள் என்று கொடுக்கும் போது தான் எத்தனை பேர் உண்மையில் வாசிக்க விரும்புகின்றனர் என்று தெரியும். என்னடா ஆங்கிலம் படிக்க வந்த இடத்தில் தமிழ் வாசிக்க சொல்கிறான் இந்த ஆள் என்று மண்டையை குழப்புகிறவர்கள் அனேகம்.
சரி இதை ஏன் செய்ய வேண்டும்?!
தமிழ் நாட்டில் இருந்து கொண்டு, உலக சினிமாக்களை ஆராய்ச்சி செய்கிறோம், Oscar விருது குறித்து மாய்ந்து மாய்ந்து பேசுகிறோம், அமெரிக்கா தேர்தல் குறித்தெல்லாம் கவலை படுகிறோம். அப்படி இருக்கும் போது தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தமிழ் இலக்கியம் வாசிப்பது அப்படி ஒண்ணும் பாவமான, இழிவான செயல் இல்லையே!!! மேலும் தமிழில் எழுதப்படும் எது குறித்தும் எதுவும் தெரியாத நாம் எப்படி உலக ஞானத்தை உள் வாங்கி கொள்வோம்.?!
தாய்மொழி வழிக் கல்வி தான் சிறந்தது என்று பேசுபவர்கள் எவரும் ஒரு நாளும் தமிழ் மொழியில் கடந்த 100 வருடங்களாக எழுத பட்டு வரும் எது குறித்தும் வாய் திறந்து பேசுவதில்லை. அவர்கள் வெறும் அரசியல் கூலிகள் தானே!!??
நான் என் மாணவர்களிடம் முதலில் உள்ளூர் எழுத்தாளர் நாலு பேரையாவது வாசியுங்கள் பின்னர் ஆங்கிலத்தில் எங்கிருந்து தொடங்குவது என்று சொல்கிறேன் என்று சொல்லுவேன்.
இலக்கியத்தில் ஏடு தொடங்குதல்...
நான் அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியம் சேர்ந்து விட்டு ஒரு நோக்கமில்லாமல் சுத்தி கொண்டிருந்த போது என்னுடைய senior ஒருவர் நூலகத்திற்கு அழைத்து சென்று Paulo Coelho எழுதிய The Alchemist புத்தகத்தை எடுத்து தந்து வாசிக்க சொன்னார். புத்தகம் சுவாரசியமாக இருக்கவே மூன்று நாளில் படித்து விட்டேன். பின்னர் இவன் தான் பாலா, Jeffery Archer கதைகள் என்று எடுத்து தந்தார். அதில் இருந்து நானே தேடி வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.
இங்கே The Alchemist என்றால் பையன் நம்மை சந்திப்பதை தவிர்த்து விடுவான். அதனால் இவன் தான் பாலாவில் இருந்து தொடங்குவது. நமக்கு எதுவும் சினிமாவாக இருக்க வேண்டும். சினிமா ஆளின் புத்தகத்தை படிக்க திராணியற்றவர்களும் உண்டு. அவர்கள் விதி படி நடக்கட்டும்.
பின்னர் ஜெயமோகனின் பனி மனிதன், கி. ராவின் கோபல்ல கிராமம், அ. முத்துலிங்கத்தின் கடவுள் தொடங்கிய இடம், ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு என்று வாசிக்க சுவாரசியமான ஆனால் இலக்கிய தரம் மிகுந்த புத்தகங்களை குடுத்து அவர்கள் வாசித்து விட்டால் பின்னர் அவர்களுடைய பாதையை அவர்களே கண்டடைந்து விடுவார்கள்.
இதனால என்ன பயன்?! இது உனக்கு சோறு போடுமா?! என்று Practical ஆன ஆட்கள் கேட்பார்கள்.
அவர்கள் கேள்வி 100% சரி. பாரதியார், புதுமைப்பித்தன் தொடங்கி இன்றும் தமிழ் கவிஞர், எழுத்தாளர் யாரும் வாழ்வாங்கு வாழ்ந்து விடவில்லை. எழுதுபவன் பிச்சை எடுக்கும் நிலைமையில் இருக்கும் போது வாசிப்பவன் குறித்து கவலை எழவே செய்யும்.
அவர்களிடம் நீங்கள் பார்க்க தான் வாரம் நாலு சினிமா வெளியாகிறது. IPL,TV சீரியல், Dubbing சீரியல், திரைப்படம், திரையிசை பாடல் சேனல் எல்லாம் இருக்கிறது. உண்டு , உழைத்து, உறங்கிய நேரம் போக ஆக்க பூர்வமாக tv பாருங்கள் என்று சொல்லி அவர்கள் கைப்பேசி எண்ணை நமது கைப்பேசியில் இருந்து அழித்து விட்டு அடுத்த வேலையை பார்க்க வேண்டும்.
வாசிப்பவர்கள் பாடு பெரும் திண்டாட்டம் தான். தமிழ் சூழலில் அமைதியாக அமர்ந்து வாசிக்க ஒரு இடம் கிடைப்பது பாலைவனத்தில் நீர் ஊற்றை காண்பது போல அரிதானது. வாசிப்பவர்களிடம் வாசிப்பை ஒரு hobby யாக தொடருங்கள். TV, சினிமாவிற்கு செலவு செய்யும் பணத்தை, நேரத்தை புத்தகம் வாங்க, வாசிக்க செலவு செய்யுங்கள். அப்படி செய்யும் போது தமிழ் மொழியின் மரணத்தை நீங்கள் தள்ளி போடுகிறீர்கள் என்று சொல்ல வேண்டும்.
செம்மொழி, இரண்டாயிரம் வருட பாராம்பரியம் மிக்க மொழி, இலக்கிய வளம் நிறைந்த மொழி என்று மேடையில் உளறினால் ஆச்சா?! தமிழுக்காக என்ன செய்தோம்?!
This comment has been removed by the author.
ReplyDeleteமனதில் தோன்றி பதிந்துகிடந்த என் எண்ணங்கள் இக்கட்டுரையில் எழுத்துக்களாக உருவம் பெற்றிருப்பதை கண்டேன்.
Delete