Saturday, 24 December 2016

Wild Tales - கடவுள் பாதி மிருகம் பாதி


Hollywood ல் 3 Act structure என்று திரைக்கதைகான ஒரு இலக்கணம் வைத்திருக்கின்றனர். பெரும்பாலும் இதை அடியொற்றியே திரைக்கதை எழுதப்பட்டு அது படமாகும்.

Richard Linklater, Coen Brothers, Paul Thomas Anderson போன்ற இயக்குனர்கள் விதிவிலக்கு. வணிக வெற்றி தாண்டி யோசிக்கும் போது புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவை பெரிய வெற்றி அடைவதும் உண்டு.

திரைக்கதை எழுதுவதிலும் புதிய புதிய முயற்சிகள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதில் Pulp Fiction ஒரு trend setterபடம். அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள், அவைக்கு பொதுவான ஒரு சரடு என்று non linear பாணி கதை. அதாவது 1,2,3 என்று வரிசையாக கதை நகராமல் 4,2,1,3,7,5  என்று நகரும். சீட்டு கட்டை கலைத்து போட்டு விளையாடுகிறோம். ஆனாலும் நமக்கு விளையாட்டு புரிகிறது தானே, அதே போல் இந்த non linear பாணியும். பார்த்து முடிக்கும் போது ஒரு அனுபவமாக மாறி விடும். எது மாதிரியும் இல்லாத ஒரு அசலான படம் என்று உணர்வோம்.

இப்படி non linear பாணியில், Magnolia, Memento, Amores Perros, Babel போன்றவை உலக புகழ் பெற்ற ஆக்கங்கள்.

இங்கே நாம் பார்க்க போகும் Wild Tales திரைப்படம் இதிலிருந்து ஒரு படி மேலே என்று கூறத்தக்க படம். படத்தில் மொத்தம் 6 குறும்படங்கள் இருக்கின்றன. இவை அனைத்துக்கும் ஒரு பொதுவான மையம் உள்ளது ஆனால் ஒரு கதையில் வரும் கதா பாத்திரங்கள் வேறு எந்த கதையிலும் வர மாட்டார்கள்.  இது linear பாணி கதை என்பது கூடுதல் சிறப்பு.

ஒன்று: Pasternak
ஒரு நவீன உடை அணிந்த பெண் விமானத்திற்கான பயணச்சீட்டு  வாங்கிக்கொண்டு அது தன்னுடைய பயணம் செய்த தூரக் கணக்கில் சேருமா என்று விசாரித்து விட்டு விமானத்தில் சென்று ஏறுகிறாள். அருகில் இருந்த நபருடன் பேசிக்கொண்டிருக்கும் போது தன்னுடைய முன்னாள் காதலன் Gabriel Pasternak குறித்து அவருக்கு தெரியும் என்பதை கேட்டு ஆச்சரிய ப்படுகிறாள். அந்த விமானத்தில் பயணம் செய்யும் மேலும் இருவர் தங்களுக்கும் Pasternak அறிமுகம் தான் என்று சொல்கிறார்கள். மீதியை திரையில் பாருங்கள்.

இரண்டு: The Rats

மழை பெய்யும் ஒரு இரவில் வாடிக்கையாளர் யாரும் இல்லாத உணவு விடுதிக்கு ஒருவர் வருகிறார். பணிப்பெண் ஓடி வந்து வரவேற்கிறாள். என்ன வேணும் என்று விசாரிக்கிறாள். Order எடுத்து கொண்டு உள்ளே செல்கிறாள். ஆனால் இதற்குள் கடைக்கு வந்திருக்கும் அந்த நபர் தனது தந்தை தற்கொலை செய்து கொள்ள காரணமானவர் என்றும் தனது தாயை மான பங்க முயற்சி செய்தவர் என்றும், இவருக்கு பயந்தே இடம் பெயர்ந்து இங்கு வந்ததாகவும் சமையலை கவனிக்கும் நடுத்தர வயது பெண்ணிடம் கூறுகிறாள். வந்தவர் அரசியல் புள்ளி என்றும் கூறுகிறாள். நடுத்தர வயது பெண் அவருக்கு சமைத்து கொண்டே அதில் எலி விசத்தை கலந்து விடவா என்று கேட்கிறாள். அடுத்தவர்களை சுரண்டி வாழும் ஆட்கள் உலகுக்கு தேவை இல்லை என்று தர்க்கத்தை அடுக்குகிறாள்.

மூன்று: Road to Hell

நீங்கள் Speilberg இயக்கிய Duel படம் பார்த்திருக்கிறீர்களா?! அதனுடைய 20 நிமிட பிரதி தான் இந்த மூன்றாவது கதை. Audi Car, Suit, Boot என்று பணக்கார ஆள் ஒருவர் சாலையில் தனக்கு வழிவிட தாமதம் ஆக்கிய நபரை கெட்ட வார்த்தையில் திட்டி விட்டு விரைந்து செல்கிறார். வண்டி puncture ஆகி விடுகிறது. வசவுகளை வாங்கிய நபர் அங்கு வந்து சேர்கிறார். அதன் பின் நடப்பவை ரணகளம், அதகளம்.

நான்கு: Bombita

இது வரை மனிதனுக்கும் மனிதனுக்குமான முரண் பாடு, பகை, வன்மம், குரோதம், பழிவாங்கும் உணர்ச்சி என்று பேசிய கதைகள் இங்கே ஒரு தனி மனிதனுக்கும் அமைப்புக்கும் ஏற்படும் முரண்பாட்டை முன்வைக்கிறது. ஒரு வகையில் இந்தியன், அந்நியன், எவனோ ஒருவன் பாணி என்று எளிமை படுத்தி சொல்லலாம்.

இதன் நாயகன் பழைய கட்டிடங்களை வெடி வைத்து தகர்க்கும் நிபுணன். அவர் எதையும் ஒரு கச்சித தன்மையோடு செய்பவர். அன்று பிறந்த நாள் கொண்டாடும் மகளுக்கு cake வாங்க கடைக்கு செல்கிறார். திரும்பி வரும்போது தன்னுடைய car, towing vehicle மூலம் அகற்ற பட்டிருப்பது கண்டு சினம் கொள்கிறார். அபராதம் கட்ட வேண்டிய இடத்தில் விளக்கம் கோருகிறார். மரியாதையாக நடத்த வேண்டுகிறார். எல்லாம் முடிந்து பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு தாமதமாக செல்கிறார். இது மனைவியுடன் ஒரு கசப்புணர்வான ஒரு உரையாடலுக்கு இட்டு செல்கிறது. மறுநாள் அபராதம் கட்ட போகும் போது மேலும் விளக்கம் கேட்டு தன்னுடைய boiling point யை அடைந்து விடுகிறார். எதிர்வினையாற்றுகிறார்.

ஐந்து: The Deal

முன்பாகம் சேதமடைந்த ஒரு BMW கார். நகரின் பணக்காரர் ஒருவரின் மகனுடையது. ஒரு கர்ப்பிணி பெண்ணை இடித்து விட்டு நிறுத்தாமல் வந்து விட்டான். ஆயிரம் இருந்தாலும் மகன் இல்லையா?!! அவனது அப்பா மகனை காப்பாற்ற தனது வக்கீலை அழைக்கிறார். பேரங்கள் ஆரம்பிக்கின்றன. 15 வருடமாக தன்னிடம் வேலை பார்க்கும் தோட்டக்காரரை பழியை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கிறார். எரிகிற வீட்டில் பிடிங்கின வரை லாபம் என்று பல கணக்குகள் முளைக்கின்றன.

ஆறு: Till Death Us Do Part

மிக கலகலப்பாக ஆரம்பிக்கும் இந்த பகுதி புதிதாக திருமணம் ஆன தம்பதியின் விருந்து நிகழ்ச்சி கொண்டாட்டங்களை காட்டுகிறது. விருந்திற்கு வந்திருக்கும் ஒரு பெண்ணுடன் தன்னுடைய கணவருக்கு தொடர்பு இருக்கிறது என்று மனைவி கண்டுபிடிக்கிறாள். ஒரு பெண்ணின் சமநிலை குலையும் போது...

நாம் நாகரீகம் கருதி பல சமயங்களில் பல விசயங்களில் விட்டு கொடுத்து விடுகிறோம். சில சமயம் எதிர்கால நலன் கருதி யாரையும் பகைக்க கூடாது என்று தெளிவாக ஒரு கோட்பாட்டை உருவாக்கி செயல்படுகிறோம். பொய்யாக கோபப்படுவது ஒரு கலை. அதை சிறப்பாக செய்பவர்கள் நம்மூரில் ஆட்சியாளர்களாக இருப்பார்கள். ஆறுவது சினம் என்பது அவ்வை. ரௌத்திரம் பழகு என்பது பாரதியார் வாக்கு. எங்கே நம் சினம் செல்லுபடி ஆகுமோ அங்கே தான் காட்ட முடியும். வேண்டும். இது வள்ளுவர்.

இந்த 21ம் நூற்றாண்டு மனித உரிமைகளை முன்னிறுத்தும் நூற்றாண்டு என்றாலும் நமக்குள் இருக்கும் மிருகம் விழித்துக்கொள்ள ஒரு சிறு பொறி போதுமானதாக இருக்கிறது.

70 வருடம் வாழ்ந்த மனிதனிடம் அவருடைய வாழ்க்கையை பத்தி கேட்டால் அவர் ஒரு மணி நேரத்தில் சொல்லி விடுவார் என்று ஓஷோ சொல்வாராம். வெவ்வெறு மனிதர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் உச்சகட்ட கோபம், பயம், சினம், எரிச்சல், பழி வாங்கும் உணர்ச்சி, துரோகம் என்று எதிர்மறை குணங்களை வெளிப்படுத்தம் நிமிடங்கள் இங்கே ஆறு கதைகளில் விரிகின்றன.

இந்த கதைகளில் அங்கதத்திற்கும் குறைவில்லை. Ensemble Cast என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். Argentina நாட்டு திரைப்படமான இதில் Ricardo Darin போன்ற புகழ் பெற்ற நடிகர்களும் இருக்கிறார்கள். அனைத்து கதையிலும் அனைத்து நடிகர்களும் சிறப்பான ஒரு வெளிப்பாட்டை நிகழ்த்துகின்றனர்.  எழுத்தாளர்கள் சிறுகதை தொகுப்பு வெளியிடுவது போல இங்கே இயக்குனர் ஆறு குறும்படங்கள் எழுதி அதை இயக்கி ஒரே படமாக தொகுத்து வெளியிட்டு இருக்கிறார். இது போல முயற்சிகள் உலகெங்கும் நடக்கின்றன. பல இயக்குனர்கள் இணைந்து உருவாக்குவார்கள். தமிழில் கார்த்திக் சுப்பாராஜ் முயன்றார். ஆனால் Wild Tales ஒரே இயக்குனரின் கைவண்ணம்.

படத்தின் titles ரகளையான பின்னணி இசையுடன் அசரடிக்கும் visuals உடன் வரும் போது 'இது ஏதோ புதுசான படமா இருக்க போது போல' என்று மனம் எதிர்பார்க்க தொடங்கி விடும்.

ஒவ்வொரு கதைக்கும் வித விதமான நிறம், பின்புலம், இசை என்று விருந்து படைக்கிறார்கள். ஒரு கதை ஆகாயத்தில் என்றால், அடுத்த கதை இரவில், மழை நாளில். அடுத்த கதை பாலைவனம் போன்ற வறண்ட நிலத்தில். குடும்பம் சார்ந்து இரண்டு கதைகள். இறுதியாக திருமண விழா விருந்து பின்புலத்தில் ஒன்று.

மனிதர்கள் உணர்ச்சிகளை, கோபத்தை, சினத்தை, அறச்சீற்றத்தை அடக்கி கொள்ள நிர்ப்பந்திக்க படுகிறார்கள். சமூக அமைப்பு கோபப்படுபவனை, உண்மை பேசுபவனை, கொஞ்சம் தள்ளி வைத்தே பார்க்கிறது. காரியம் ஆக வேண்டும் என்றால் சினம் தவிர் என்கிறது. அதில் சில வெடிப்புகள், உடைப்புகள் ஏற்படும் போது அவை Wild Tales ஆகும்.

No comments:

Post a Comment