Saturday, 3 October 2020

The Harmonium in My Memory - அழியாத கோலங்கள்


நீங்கள் கொரியன் படங்களை தொடர்ந்து பார்பவராக இருந்தால் நிச்சயம் thriller, murder mystery, serial killer, gangster வகை படங்களை பார்த்திருப்பீர்கள். அதீத வன்முறை காட்சிகள், உணர்ச்சி கொந்தளிப்பான நடிப்பு போன்றவையே கொரிய படங்கள் உலக அளவிலான கவனம் ஈர்ப்பதற்கு பிரதான காரணங்கள். 

அத்தகைய கொரிய சினிமாவில்  feel good படங்களும் அவ்வப்போது வருவதுண்டு. முதலில் நினைவுக்கு வருவது பாட்டிக்கும் பேரனுக்குமான உறவை சொல்லும் The Way Home படம் தான். 

மெல்லுணர்வு என்பது பெரும்பாலும் பதின் பருவத்தின் காதலை, மையலை சொல்லும் படமாக தானே இருக்க முடியும்?! The Harmonium in My Memory  அத்தகைய படம் தான். தமிழில் உடனே நினைவுக்கு வருவது பாலு மகேந்திராவின் அழியாத கோலங்கள். இது வரை பார்க்கவில்லை என்றால் படம் Youtubeல் இருக்கிறது பார்த்து விடுங்கள். 

படம் 70, 80களில் நடக்கிறது என்று யூகிக்கலாம். ஒரு கொரிய மலைக்கிராமம். அங்கே வரும் ஒரு இளம் பள்ளி ஆசிரியர். ஆசிரியராக அவருடைய முதல் பணியை அந்த பள்ளியில் தான் துவக்குகிறார். அவரின் பெயர் Mr. Kang.

கொரிய கிராமம் என்றாலும் அது தமிழக கிராமத்தை நினைவுபடுத்தும் கிராமம் போல தானிருக்கிறது. மேலும் ஆசிரியர் வந்து இறங்கும் காட்சியை கண்டவுடன் எனக்கு முந்தானை முடிச்சு படமும் நினைவிற்கு வந்தது. 

பள்ளியில் பல வித குணாம்சங்களுடன் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். Mr.Kang தான் அதில் இளையவர். அவர் வேலைக்கு சேரும் அன்றே Miss Yang என்ற இளம் பெண்ணும் ஆசிரியராக பணியில் சேர்கிறார். 

நாட்டின் தலை நகரில் இருந்து மிகவும் தள்ளி, அரசியல் அதிகாரம், பொருளாதார நலன்கள் என்று  எதுவும் வந்து சேர பல ஆண்டுகள் ஆகும் கிராமத்தில் மனிதர்கள் எப்படி இருப்பார்களோ அப்படி இருக்கிறார்கள். பெருநகரத்தில் நவீன கல்வி கற்று வந்த Kang மற்றும் Yangகிற்கு அங்கே உள்ள பல கட்டுப்பெட்டித்தனங்கள் பிடிக்கவில்லை எனினும் தங்கள் பணியை சிறப்பாக செய்கிறார்கள். 

சக ஆசிரியர் "அடிச்சு வளர்க்காத பிள்ளையும், ஒடிச்சு வளர்க்காத முருங்கையும்" என்கிற ரீதியில் மாணவர்களை அடிப்பதை பற்றி ஒரு பழமொழி சொல்ல Kang அது அவசியமற்றது என்றும் மாணவர்களை கண்ணியமாக நடத்தியே நல்வழிப்படுத்த முடியும் என்று சொல்கிறார். 

மாணவர்களின் வாசிப்பு, எழுதும் திறனை மேம்படுத்த தினம் ஒரு பக்கம் தங்கள் வாழ்க்கையில் நடப்பவவற்றை எழுத வேண்டும் என்று சொல்கிறார். முரண்டு பிடிக்கும் மாணவர்களை அன்பால் பணிய வைக்கிறார். 

மாநகரத்தில் இருந்த வந்த ஆசிரியர் மீது ஒரு கிராமத்து பள்ளி மாணவிக்கு மையல் இல்லாமலா இருக்கும்?! இருக்கிறது. அது தான் இந்த படத்தை ஒரு feel good படமாக ஆக்குகிறது. 

Hongyeon என்கிற அந்த மாணவி வயதிற்கு மீறிய உருவம் கொண்டவள். அல்லது சில ஆண்டுகள் தேர்வில் தோற்று ஒரே வகுப்பில் படிப்பவளாக கூட இருக்கலாம். ஆனால் குழந்தையும் அல்லாத இளம் பெண்ணும் அல்லாத ஒரு இரண்டும் கெட்டான் பருவத்தில் இருக்கிறாள். 

கிராமத்திற்கு வந்து இறங்கும் Kang முதலில் சந்திப்பது Hongyeon தான். பார்ப்பதற்கு பெரிய பெண் போல இருப்பதால் Miss என்று மரியாதையாக அழைக்க அது அவளுக்கு ஒரு குறுகுறுப்பான மகிழ்ச்சியை தருகிறது. அதிலிருந்தே அவளுடைய மையலும் துவங்குகிறது. 

Kangற்கு Miss Yangன் மீது மையல். இப்படி முக்கோண மையல் கதையில் ஒரு வருடத்திற்கு பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சிகளும் இணைந்து இதை ஒரு மறக்க முடியாத Campus cum coming of age film ஆக மாற்றுகின்றன. 

Hongyeon தனது மனவோட்டங்களை Kangற்கு தெரியப்படுத்திக்கொண்டே இருக்கிறாள். Kang தன்னுடைய பொறுப்பு, கடமை உணர்ந்து அதை எவ்வகையிலும் உடைத்து விடாமல் இருக்க கண்ணியமாக நடந்து கொள்கிறார். 

நாம் பெரும்பாலான உணர்ச்சிகளை, எண்ணங்களை வெளியே சொல்வதில்லை. பள்ளிப்பருவத்தில் நிச்சியம் நமக்கே உரிய மையல் கதைகள் இருக்கும். அவை இன்று நகைப்பிற்குரியனவாக நமக்கே தோன்றும் ஆனாலும் அது போன்ற உண்மையான உணர்ச்சிகளுக்கு நாம் மீண்டும் ஆளாகவே இல்லை என்றும் தோன்றும். அத்தகைய உணர்ச்சிகளை மிக யதார்த்தமாக சொல்லும் படம் தான் The Harmonium in My Memory. 





No comments:

Post a Comment