Friday, 30 June 2017

இட்லி என்ன விலை?!


வாரத்திற்கு இரண்டு நாட்களுக்கு மேல் வீட்டில் இட்லி சாப்பிட நேரும் போது 'நான் என்ன காய்ச்ச காரனா, எப்ப பாத்தாலும் இட்லி செஞ்சுக்கிட்டு' என்று மனது உறுமும். உண்மையில் உறுமினால் அந்த இட்லியும் கிடைக்காமல் போக வாய்ப்பு இருப்பதால் போட்டதை சாப்பிட்டு விட்டு இடத்தை காலி செய்ய வேண்டும்.

பிறந்ததில் இருந்து அதிகமாக சாப்பிட்ட உணவு வகை இட்லியாகதான் இருக்கும். அது என்னமோ கிராமத்தில் வாழ்க்கையின் முதல் முப்பது வருடங்கள் இருந்து விட்டு நகரத்திற்கு இடம் பெயர்ந்த என்னை பெற்ற அம்மாவிற்கு, பிள்ளைகளுக்கு இட்லியும் தோசையும் கொடுத்து வளர்க்க வேண்டும் என்று தோன்றியிருக்கும் போல. 1992ல் Grinder வாங்கிய பிறகு அப்படி தோன்றா விட்டால் தான் ஆச்சரியம். வளரும் பையனுக்கு மதியமும் இட்லி தோசையாக கொடுத்ததால் எனது வளர்ச்சி பாதிக்கப்பட்டது என்பது எனது கண்டு பிடிப்பு.

Fridge வந்த பிறகு வீட்டில் செய்யும் இட்லி தோசையின் சுவை குறைந்து விட்டது என்று என் நாக்கு சொல்கிறது. Grinder வந்த போதே அது போய் விட்டது என்று என் தந்தை சொல்லக்கூடும். மாதத்தில் ஒரு நாளோ இரண்டு நாளோ இட்லி நன்றாக சுவைப்பதும் உண்டு. ஆனால் இந்த தோசை தான் non stick tawa என்ற பெயரில் எண்ணெய் இல்லாமல் சுடலாம் என்று இன்னும் சுவையிழந்து விட்டது. வீட்டில் சுடும் தோசை நாம் கடையில் சாப்பிடும் தோசை போல சுருட்டி ஒரே வாயில் சாப்பிடலாம் என்பது போல இருப்பதில்லை. தோசை கல் மேல் இன்னொரு கல் வைத்த மாதிரி தான் இருக்கும். அந்த ஒரு தோசைக்கு செலவு செய்யப்பட்ட மாவில் கடையில் 'நாலு nice' சுடுவார்கள்.

எனினும் கடைகளில் சாப்பிட நேரும் போது இட்லிக்கு தான் முதல் சலுகை. கடைகளில், அதாவது "உயர் தர சுத்த சைவ" உணவகங்களில்.

புரோட்டா கடைகளிலும் இட்லி செய்வது உண்டு. ஆனால் அங்கே சென்று இட்லி சாப்பிட்டால் நம்மை கோட்டிக்காரன் என்று கடை நடத்துபவனும், சாப்பிட வருபவனும் நினைக்க கூடும். புரோட்டா கடை என்பதே ஊரில் உள்ளவர்களின் பற்களையும், வயிற்றையும் சோதிக்கும் பொருட்டு தொடங்க பட்டது தானே!!

இட்லிக்கு திரும்புவோம். சைவ கடைகளில் இட்லி சாப்பிட்டாலும் நம்மை கஞ்சன் என்று முடிவு செய்து விட்டு தான் பரிமாறுவார்கள். ஏனென்றால் விலை குறைவானது. நாலு இட்லிக்கு மேல் முயன்றாலும் சாப்பிட முடியாது. மேலும் பெரிய 'உயரதர சுத்த சைவ உணவகங்களில்' இட்லி எப்போதும் ஆறிப்போய் தான் இருக்கும். பரிசாராகர் நமக்கு ரெண்டு இட்லி வைத்து விட்டு கொஞ்சம் விலை கூடிய ஒரு மசாலா தோசை, ரவா தோசை என்று வேறெதாவது பதார்தத்தை நம்மை சாப்பிட வைப்பதில் குறியாக இருப்பார். வேண்டாம் என்றாலும், 'வெறும் இட்லி மட்டும் தானா?!' என்று நம்மை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குவார்.

பின்னர் நாம் சாப்பிட்ட இட்லிக்கு விலையுடன் சேர்ந்து tips குடுக்க வேண்டும் என்று எதிர்பார்பார். சரி அம்மா உணவகம் என்று சொன்னார்களே அங்கே செய்யப்படும் இட்லி எப்படி சுவைக்கிறது என்று பார்க்க ஒரு நாள் சென்றேன். நான் எத்தனை குறைவாக சொல்கிறேனோ அத்தனை நல்லது. இட்லி 1 ரூபாய்க்கு தருவதனால் அதில் எந்த தரமும் இருக்க கூடாது என்பது தான் கொள்கை முடிவு போல. ஆனாலும் அதை பாத்திரங்களில் வாங்கி செல்பவர்கள் அனேகம். 5 ரூபாய் குடுத்து 5 இட்லி வாங்கினேன். ஒரு இட்லியை கூட சாப்பிட முடியவில்லை. இதெல்லாம் சாப்பிட்டு இத்தனை பேர் உயிர் வாழ்கிறார்கள் என்று அங்கே சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை பார்த்தேன். மனதை அந்த இட்லியை போல கடினமானதாக மாற்றிக்கொண்டு பற்களால் அதை நொறுக்கி முழுங்கி விட்டு, மீதியை கொட்டி விட்டு அங்கிருந்து எடுத்தேன் ஓட்டம்.

இட்லி, இடியாப்பம் போன்றவை எல்லாம் நாளும் சாப்பிடுவதற்கான ஒரு தேவையும் நியாமும் இல்லை தான். வாரத்தில் நான்கு வேளை என்பது அதிக பட்சம். ஆனாலும் நம்மூரில் இவர்கள் hotel நடத்தும் லட்சணத்திற்கு இட்லியை தான் நம்பி சாப்பிட முடியும். அது ஏன் அப்படி என்றால்?! அந்த இட்லி குழந்தைகளுக்காக வாங்கப்படலாம் என்ற நம்பிக்கையில் கலப்படம் இல்லாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதை கடை சாம்பாருக்கு சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

புரோட்டா திண்பவன் இட்லி திண்பவனை ஏளனமாய் பார்க்க எல்லா நியாமும் இருக்கிறது. ஆனாலும் இட்லி போல வருமா?!

இந்த நல்ல இட்லி தேடும் பயணத்தில் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரு கடையில் இட்லி சாப்பிட வாய்த்தது. கடை என்று சொல்ல முடியாது. நடைபாதை மேல் ஒரு மர மேசை, அதன் மேல் ஒரு pump செய்யக்கூடிய மண்ணெண்னை அடுப்பு. காற்று நெருப்பை அணைக்காமல் இருக்க சுற்றிலும் காலண்டர் அட்டை கொண்டு ஏற்படுத்த பட்ட தட்டி, தட்டியை காற்று நகர்த்தாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பாக தகர தட்டி, அடுப்பின் மேல் இட்லி கொப்பரை மற்றும் தோசை கல்.

அந்த கடையை நடத்தும் அக்காவிற்கு 2 அல்லது 3 பிள்ளைகள் இருக்கலாம். கணவர் இல்லை என்பது அவரை பார்த்த உடன் தெரிந்து விடும். நான் தினம் அவர் கடையை தாண்டி தான் நடந்து செல்வேன். கடைக்கு வரும் ஆண்கள் அனைவரையும் 'அண்ணே' என்றே அழைப்பார். மனம் கோணாமல் சட்னி, சாம்பார் என்று அள்ளி வைப்பார். பெரிய கடைகளில் கூட ஒரு தடவை கேட்டால் கொஞ்சம் முறைத்து கொண்டு வந்து வைப்பார்கள். இங்கே தேங்காய், தக்காளி சட்னி மற்றும் ஆவி பறக்கும் சாம்பார் கேட்கும் போதெல்லாம் வழங்கப்படும்.

அந்த சாலையில் மட்டும் இது போல 4 இட்லி கடைகள். அதில் இரண்டு பாட்டிகள் நடத்துபவை. சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் சுத்தம் பார்த்து விட்டு தவிர்த்து விட்டேன். ஒரு நாள் மட்டும் பணியாரம் வாங்கினேன். அதற்குள் அந்த பாட்டி சொந்த பேரனிடம் பேசுவது போல 'என்னய்யா 5 ருவாய்க்கு போதுமா?' என்று அக்கறையாக கேட்டார்.

மற்ற கடைகள் சலித்து விட, college கேன்டீன் வெறுத்தே விட்டது. Plastic paper ல் வைத்து தந்தாலும் பரவா இல்லை என்று இந்த அக்காவின் கடைக்கு சாப்பிட போனேன்.

தட்டில் இருந்து சுட சுட எடுத்து தந்தார். பசியில் 5 இட்லி சாப்பிட்டேன். உயர் தர சைவ உணவகத்தில் செய்யும் இட்லியின் அளவை விட பெரிதாகவே இருந்தது. அங்கே ரெண்டு சாப்பிடவே கண்ணு முழி பெரிதாகும் போது இங்கே 5 சாப்பிட்டு விட்டேன்.

கையை கழுவி விட்டு எவ்ளோ என்று கேட்டேன். 15 ரூபாய் என்றார். நான் மீண்டும் எவ்ளோ என்று கேட்டேன். என்னால் நம்ப முடியவில்லை. இந்நேரம் கடை போட்டு இலையில் பரிமாறியிருந்தால் இட்லிக்கு 10 ரூபாய் தாராளமாக வாங்கலாம்.

ஒரு இட்லி 3 ரூபாய்க்கு கிடைக்கிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அத்தனை சுவையாக, சூடாக. Plastic paper ல் தருவது தான் ஒரே குறை. எந்த கலப்படமும் இருந்தது போல தெரியவில்லை. இது எப்படி சாத்தியம்?! இவருக்கு லாபம் என்று ஏதேனும் இருக்குமா? இவருடைய உழைப்புக்கு ஊதியம் என்று இதில் எடுத்து வைக்க இருக்குமா? என்றெல்லாம் மனதில் கேள்விகள்.

கடையில் அவருடைய பிள்ளைகள் கூட உதவிக்கு நிற்பது இல்லை. தனியாக பரிமாறுவது, parcel கட்டி தருவது என்று அனைத்து வேலைகளையும் செய்வார். இதில் யாராவது 5 இட்லி சாப்பிட்டு விட்டு 100 ரூபாய் கொடுத்தால் அதற்கு சில்லறை மாற்ற அவரே செல்வார். முட்டை தோசை கேட்டால் பக்கத்தில் உள்ள கடைக்கு சென்று ஒரு முட்டை மட்டும் வாங்கி வருவார்.

காலை, மாலை இரண்டு வேளையும் கடை இருக்கும். எப்போது மாவு அரைப்பார், சட்னி, சாம்பார் எப்போது தயார் செய்வார், கடை எடுத்து வைத்து பாத்திரம் எப்போது கழுவி வைப்பார், பிள்ளைகள் உதவி செய்வார்களா, அல்லது ஏய்த்து விடுவார்களா? இப்படி கேள்விகள் தினம் ஒன்றாக மனதில் உதித்து கொண்டே இருக்கும்.

அடுத்த நாளும் சென்றேன். நம் வீடுகளில் இட்லி தட்டை எடுத்து அதை கவிழ்த்து தண்ணியை கோரி ஊத்தி கொண்டிருப்பார்கள். துணியையும் இட்லியையும் பிரிப்பதற்கு. ஆனால் இவர் அப்படி ஒன்றும் செய்யவில்லை. தட்டை கவிழ்த்து தனியாக எடுத்து விட்டார். இட்லி துணியை பிரித்து எடுக்கும் போது இட்லிகள் தட்டில் ஆவி பறக்க சுற்றி இருப்பவர்களை பார்த்து கொண்டிருந்தன.

இது எப்படி சாத்தியம்? எந்த அளவில் எதை கலந்து மாவு அரைத்தால் இப்படி இட்லி சுடலாம்? இல்லை இது என்ன அரிசி, உளுந்தின் கலவை? இப்படி தினம் கேள்விகள்.

கேள்விகளை பின்னர் மூட்டை கட்டி வைத்து விட்டு இட்லிகளை ருசிக்க ஆரம்பித்தேன். Plastic தாளில் தொடர்ந்து சாப்பிடுவது உறுத்தவே வீட்டில் இருந்து ஒரு tiffin box எடுத்து செல்ல ஆரம்பித்தேன். வாரத்திற்கு எப்படியும் இரண்டு நாளாவது அங்கே சாப்பிடுகிறேன். பணம் மிச்சமாவது மட்டுமல்ல நிறைவாக சாப்பிட்ட உணர்வும் இருக்கும். சில நாட்கள் tiffin box சகிதமாக கடை வரை சென்ற பின் கடை இல்லை என்று தெரிய வரும் போது ஊருக்கு போகும் கடைசி பேருந்தை விட்டது போல இருக்கும். சரி நாளைக்கு வருவோம் என்று சமாதானம் செய்து கொண்டு திரும்புவேன்.

நான் வேறே எங்கே இட்லி சாப்பிட்டாலும் மனம் ஒரு முறை அந்த இட்லியை இந்த அக்கா கடை இட்லியுடன் ஒப்பிட்டு கொள்கிறது. இந்த இட்லி கடை அனுபவத்தை சமூக, பொருளாதார, அரசியல் பார்வைகளில் எல்லாம் ஆராய்ச்சி பண்னுவது எப்படி என்று தெரியவில்லை. கடை இருக்கும் வரை பலரின் பசியை ஆகக்குறைந்த விலைக்கு ஆற்றுவார் என்பது மட்டும் புரிகிறது.

இட்லி நல்லது.

No comments:

Post a Comment