Friday, 15 May 2015

விளையாட்டாக மாறுவது!

குழந்தைகள் கோயிலுக்கு சென்று வந்த உடன் பூசாரி வேடம் கட்டுகிறார்கள். ஒரு தட்டில் திருநீறு, குங்குமத்தை அள்ளிப்போட்டு வீட்டில் உள்ளவர்களை குனிந்து கும்பிடச்சொல்லி தங்களது பிஞ்சு விரல்களில் கொஞ்சமே கொஞ்சமாக திருநீறை எடுத்து குனிந்திருப்பவர்களின் தலை மேல் கொஞ்சம் தூவி மிச்சத்தை அவர்கள் நெற்றியில் ஒற்றியெடுக்கிறார்கள்.

குழந்தைகள் ஏன் சாமி வேசம் போடவில்லை என்று உங்களுக்கு கேள்வி எழுந்தால் நீங்கள் உங்களுக்குள் உள்ள குழந்தையை தொலைத்து விட்டீர்கள். கோயிலில் சாமி அசையாமல்ல இருக்கு? குட்டி பாப்பாவோ தம்பியோ எப்படி அசையாமல் இருப்பார்கள்?! அது போக சாமி வேசம் கட்ட ஊரில் நிறைய பேர் இருக்கிறார்கள். 

பள்ளிக்கு சென்று வந்த முதல் நாள் வீட்டில் உள்ளவர்களுக்கு பாடம் எடுக்கிறார்கள்.

பேருந்தில் சென்று வந்தால் பென்சிலை காதில் சொருகிகிகொண்டு, ஒரு நோட்டை கைக்கிடையில் வைத்து கொண்டு டிக்கெட் கொடுக்கிறார்கள்.

பெரியவர்கள் இந்த விளையாட்டில் பார்வையாளராகவோ பங்கு பெறுபவராகவோ இருக்க முடியுமே தவிர ஒரு போதும் விளையாட்டாக ஆக மாற முடிவதில்லை.

No comments:

Post a Comment