Thursday, 24 October 2019

என்ன சத்தம் இந்த நேரம்?!

ஒரு மூன்று அல்லது நான்கு நாட்களாக எனது ஹோண்டா வண்டியில் இருந்து ஒரு கீச்சொலி சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. முதலில் மழையில் நனைந்த பிறகு disc brake உராயும் சத்தம் தான் என்று நினைத்தேன். ஆனால் வண்டி சும்மா நிற்கும் போதும் அந்த சத்தம் கேட்க ஆரம்பித்ததால் கொஞ்சம் கலவரமடைத்தேன்.

அன்டன் செக்கோவ் எழுதிய Gooseberries கதையின் இறுதியில் கதை சொல்லியின் நண்பன் சுருட்டில் இருந்து எழும் புகை தொந்திரவு செய்ய அந்த புகைமணம் எங்கே இருந்து வருகிறது என்று தெரியாமல் தூங்க முடியாமல் உழன்று கொண்டிருப்பான்.

என்னுடைய வண்டியில் இருந்து கேட்க ஆரம்பித்த அந்த கீச்சொலி நாலாவது நாளில் என் தூக்கத்தை கெடுக்க ஆரம்பித்திருந்தது.

முதலில் வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது தான் அந்த சத்தத்தை கவனித்தேன். நிச்சயம் disc brake எழுப்பும் ஒலி தான் என்று நினைத்தேன். ஏற்கனவே இது போல ஒரு முறை சத்தம் கேட்க அதை service centreக்கு எடுத்து சென்று சரி பார்த்திருந்தேன்.

மதியம் மொத்த ஊரும் அரை மயக்கத்தில் இருக்கும் போது வண்டியை வீட்டின் முன் நிறுத்தி விட்டு காலணிகளை கழட்டி கொண்டிருக்கும் போது அந்த சத்தம் மீண்டும் வந்தது. எப்போதும் என்ஜினை அணைத்த பிறகு நெருப்பின் மேல் அல்லது சூடாக இருக்கும் இரும்பின் மேல் நீர் சொட்டு தொடர்ந்து விழுந்தால் எழும் சத்தம் போல ஒரு சத்தம் வரும். அது என்ஜின் கொஞ்சம் கொஞ்சமாக தனது சூட்டினை இழக்கும் சத்தம்.

இந்த சத்தம் அதுவல்ல. மழையில் நனைந்த பிறகு வயரிங் பிரச்சினையில் வண்டி ஒலிப்பான் தான் அப்படி சத்தம் கொடுக்கிறதோ என்று யோசித்தேன்.

எதுவாக இருந்தாலும் உடனே பழுது பார்க்கும் இடத்திற்கு கொண்டு போக மனம் தயாராகவில்லை. ஒரு வேளை காட்டு பாட்ச்சா எனப்படும் கருப்பு நிற விட்டி அல்லது grass hopper வண்டியின் உள்ளே எங்கோ மாட்டிக்கொண்டு சத்தம் போட்டு கொண்டிருக்கிறது என்று நினைத்தேன்.

ஒரு சிறு மழை பெய்து நின்றாலே எங்கள் வீட்டிற்கு மிகப்பெரிய அளவில் பூச்சி பட்டாளம் படையெடுத்து வரும். அதில் ஏதோ ஒன்று தன்னுடைய வழியில் இருந்து தவறி வண்டியினுள் ஏறி இப்போது வெளியேற வழி தெரியாமல் சத்தம் போட்டு உதவிக்கு ஆள் தேடுகிறது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

வேலைக்கு செல்லும் போது வண்டியை நிறுத்தி விட்டு போகும் இடத்தில் நிறைய மரங்கள் உண்டு. செடி செத்தைகள் முளைத்து கிடக்கும். அதில் இருந்து தேரை போன்ற உயிரினம் ஏதேனும் ஏறியிருக்க வாய்ப்பு உண்டு தான். தவளை எப்படி கத்தும் என்று நமக்கு தெரியும். ஆனால் தேரை இப்படி சத்தம் போட வாய்ப்பு உண்டு என்று நானே கற்பனை செய்தேன்.

மேலும் எங்கள் வீட்டில் ஒரு தேரை வாழ்கிறது. அது 9 மணிக்கு மேல் இரை தேட கிளம்பி தாவிப்பறந்து வீட்டின் பின்னால் இருக்கும் சிறிய அளவினால செடிகள், கறிவேப்பிலை மரம் இருக்கும் இடத்திற்கு செல்லும். காலையில் 5 மணிக்கு மீண்டும் தன்னுடைய பதுங்கு குழிக்கு அதாவது வராண்டாவில் போட்டு வைத்திருக்கும் பல அட்டை பெட்டிகளில் ஒன்றிற்க்கு திரும்பி விடும். அதை சமீபத்தில் கண்ணில் காணவில்லை. அதனால் அது தான் சத்தம் கொடுக்கிறது என்று சமாதானம் செய்து கொண்டேன்.

பாம்பு ராணி (இதற்கு ஆங்கிலத்தில் skink என்று பெயர்) எனப்படும் பல்லி வகை உயிரினம் ஒன்றும் எங்கள் வீட்டு முற்றத்தில் அடிக்கடி நடமாடும். வண்டியில் இருந்து எழும் சத்தம் உறுதியாக பாம்பு எழுப்பும் சத்தம் அல்ல என்று நன்றாக தெரியும். வாலில் இருந்து சத்தம் எழுப்பும் வகை பாம்புகள் இந்தியாவிலே அரிது. அதானால் பாம்பு எதுவும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் பாம்பு ராணி? அது நாக்கை நீட்டி கரப்பான் பூச்சியை பிடித்து சாப்பிடுவதை பார்த்து இருக்கிறேன். ஆனால் அது பல்லி போல சத்தம் எழுப்புமா? அது எழுப்பும் சத்தம் எப்படி இருக்கும்? தெரியாது.

எனது அப்பா ஒரு வாரத்திற்கு முன் தான் முற்றத்தை சுத்தம் செய்து எறும்பு, பூச்சிகள் வராமல் இருக்கு மருந்து பொடியை போட்டு வைத்தார். அதன் பிறகு தேரை, பாம்பு ராணி இரண்டும் கண்ணில் படவில்லை. மருந்து வாடை ஆகாமல் வேறு இடம் தேடி போயிருக்க வேண்டும். இரண்டில் ஏதோ ஒன்று எனது வண்டியினுள் ஏறி இருந்தால்?

இந்த வாரம் கொஞ்சம் வேலைப்பளு அதிகமாகிவிட்டது.  அப்படி என்ன வேலை என்று கேட்டால் அதற்கான பதிலில் அந்த வேலையினால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை என்பது தெளிவாகும்.

வேலையில் இருந்து திரும்பிய பிறகு வண்டியை மீண்டும் எடுத்துக்கொண்டு வெளியே செல்வது "லஜ்ஜை பிடிச்ச" வேலை. நான் வேலைக்கு சென்று வரும் நேரம் காக்கிகள் ஓய்வெடுக்கும் நேரம். அதனால் தலைக்கவசம் பற்றி கவலை இல்லாமல் சென்று வருவேன்.

மாலையில் கவசம் அணிந்து அந்த 150 கிலோ வண்டியில்  மார்கெட், பஜார் என்று எங்காவது சென்று வரவேண்டுமென்றால் அந்த நினைப்பே அயர்ச்சி தரக்கூடியது. வண்டியை நிறுத்துவதும், எடுப்பதும் கூட்டம் நிறைந்த இடத்தில் அத்தனை எளிதல்ல.

மழை பெய்து சாலையை மூடியிருந்ததால் மிக கவனமாக செல்ல வேண்டும். எங்கே எத்தனை பெரிய குழி தோண்டியிருக்கிறார்கள் என்று யாருக்கு தெரியும்.

மழைக்காலம் முடியவும் service விடும் போது பார்த்துக்கொள்ளலாம் என்று நாட்களை தள்ளிப்போட்டு கொண்டேஇருந்தேன். இப்படி சத்தம் எழுப்பும் உயிரினம் எத்தனை நாள் உணவில்லாமல் வாழும்? அதுவே உயிரை விடட்டும் என்று கூட நினைத்தேன். ஆனாலும் அந்த சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக என்னை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தது.

சனிக்கிழமை காலையில் அந்த சத்தத்தை எனது அப்பாவும் அம்மாவும் கேட்டனர். அப்போ இது பிரமை இல்லை. நானாக கற்பனை செய்து கொள்ளவில்லை. வீட்டில் உள்ளவர்களுக்கும் அந்த சத்தம் கேட்கிறது. எனது அப்பா வண்டியை அங்குமிங்கும் தட்டி விட்டு சீட்டின் கீழ் இருந்து தான் சத்தம் வருகிறது என்றார்.

நான் அந்த சீட்டை கழட்டுவதே கிடையாது. Service விடும் நாட்களில் அவர்கள் கழட்டி சோதித்தால் தான் உண்டு. அதன் உள்ளே ஒன்றும் வைக்க முடியாது. வண்டியுடன் கொடுத்த spanner set, first aid kit இருக்கும். RC Book, Insurance Copyயை வைக்கலாம் தான். ஆனால் காக்கிகள் நிறுத்தி அந்த நேரத்தில் சீட்டை கழட்ட முடியவில்லை என்றால் அவர்கள் தரும் உபதேசத்தை கேட்க நேரும் என்பதால் அதை petrol tank கவரில் தான் வைத்திருக்கிறேன்.

இதற்கு மேல் காத்திருக்க கூடாது என்று வண்டியை எடுத்துக்கொண்டு பழுதுபார்க்கும் கடைக்கு சென்றேன். வழக்கம்போல பழுதுபார்க்கும் தம்பி கடையில் இல்லை. ஒரு scooty கிட்டதட்ட மொத்த வண்டியும் பிரிக்கப்பட்டு கிடந்தது. சரி சாயங்காலம் பார்ப்போம் என்று கிளம்பி வந்து விட்டேன்.

வீட்டிற்கு வந்த பிறகு நானே சாவியை சீட்டின் கீழ் உள்ள சாவி துவாரத்தில் செலுத்தி சீட்டை கழட்ட முயற்சி செய்தேன். பின்னர் திருப்பு உளி (screw driver தான்) கொண்டு இரண்டு screwஐ கழட்டினேன். அது சீட்டிற்கு கீழ் உள்ள battery guard பகுதி. அந்த screwவை எடுத்த பிறகும் battery guard பகுதியை தனியே எடுத்து சீட்டிற்கு கீழ் பார்க்க முடியவில்லை.

வீட்டின் அருகில் இருக்கும் அக்கா வீட்டிற்கு சென்று மச்சானிடம் விஷயத்தை சொன்னேன். அவர் Mechanical Engineering படித்தவர். இரு மாப்ள வாறேன் என்றவர் நீ இங்கே வண்டியை எடுத்துட்டு வாயேன் என்று சொல்லி விட்டார். வண்டியை எடுத்து கொண்டு அங்கே சென்றேன். அவரும் முயற்சி செய்து விட்டு பழுது பார்க்கும் கடைக்கு போவோம் என்று அழைத்துச்சென்றார்.

அங்கே சென்றவுடன் அந்த mechanic மச்சானிடம் வாங்க அண்ணே என்றார். வண்டியை காமித்து சத்தம் வருகிறது என்றவுடன் நீண்ட நாட்கள் ஒரே இடத்தில் நின்றதா என்றார். பின்னர் சாவியை சீட்டின் கீழே உள்ள துவாரத்தில் செலுத்தி திருக்கி சீட்டின் மேல் தனது பலம் அனைத்தும் திரட்டி ரெண்டு தட்டு தட்டினார். இடது கையில் கம்பு வைத்திருந்தார். பெருச்சாளி அல்லது எலி ஏதும் இருக்க வாய்ப்பு உண்டு என்றார்.

அவர் வளர்க்கும் இரண்டு நாய்கள் வண்டியை வட்டமிட ஆரம்பித்தன. ஏய் பொட்ட அங்கிட்டு போ என்று நாயை விரட்டினார். சீட்ட எடுக்கட்டுமா என்று நிமிர்த்தினார். உள்ளே மென்மையாக மாற்றப்பட்ட தேங்காய் நார் கொண்டு அணில் கூடு கட்டி வைத்திருந்தது. நான் திகைத்து விட்டேன். தினம் பயன்படுத்தும் வண்டி தானே?! ரெண்டு நாள் சும்மா நின்றாலே அதிகம்.

வெயில் நேரே விழவும் கூட்டின் உள்ளே இருந்து கீச்சொலி எழுந்தது. இந்த கீச்சொலி எத்தனை கற்பனை செய்ய வைத்தது! நாய் வண்டியை சுற்றியது. விரைவில் அப்புறப்படுத்தாவிட்டால் நாய் கவ்வி விடும் என்று அவர் சொன்னார். கூட்டின் உள்ளே மூன்று அணில் குஞ்சுகள் இருக்கிறது என்று மச்சான் சொன்னார்.

மச்சான் தன்னுடைய கையில்  அந்த கூட்டை மெல்ல எடுத்தார்.  அருகில் நின்றவர் ஒரு carry bag எடுத்து அதை கூட்டிற்கு அடியில் வைக்க சொல்லி பிடிக்க சொன்னார். மச்சான் அது போலவே செய்து இரண்டு கையில் கூட்டை ஏந்தியபடி நின்றார். வண்டியை தினம் நிறுத்துமிடத்திற்கு சென்று விட்டு விடலாம் என்று நான் சொன்னேன். பின்னர் வேண்டாம் காக்கிகள் நிறுத்தினால் கையில் licence கூட இல்லை என்று அருகில் ஏதாவது மரத்தில் வைப்போம் என்றேன்.

நானும் அவரும் அங்கே இருந்து கிளம்பினோம். எப்படி இது நடந்தது? இந்த கூட்டை அமைக்க அதற்கு எத்தனை நாள் ஆகியிருக்கும்? இந்தகுட்டிகளை ஈன்று விட்டு அது எங்கே சென்றது? நான் வண்டியை வீட்டிற்கு எடுத்து வந்த பின்னர் அது ஓடி ஓடித்தேடியிருக்கும் தானே? அங்கே எத்தனை வண்டிகள் தினம் நிற்கின்றன அது ஏன் என் வண்டியை தேர்ந்தெடுத்தது? இப்படி பல கேள்விகள். அனைத்திற்கும் பதில். தெரியாது!

நாய், காக்கா என்று எதுவும் அண்டாமல் மரத்தில் வைக்க வேண்டும். வீட்டின் அருகே இருக்கும் மாடன் கோவிலில் ஆல மரங்களுண்டு. அங்கே வண்டியை விட்டேன். அணில்கள் சத்தம் நிறைய கேட்டது. நான் குஞ்சு அணில்களை அதிகம் பார்த்தது இல்லை. மச்சானிடம் ஒரு முறை கையை தாழ்த்த சொல்லி நன்றாக பார்த்தேன். கண் திறக்காத 3 குஞ்சுகள். கீச்சொலி.

மச்சான் நல்ல உயரம். அவர் உயரம் எட்டும் இடத்தில் கூட்டை வைத்தார். கீழே விழுந்து விடாதே என்றேன். அதெல்லாம் விழாது மாப்ள என்றார். கூட்டை வைத்த கிளையில் இருந்து மேலே பிரிந்து செல்லும் இன்னொரு கிளையில் இருந்து ஒரு அணில் தலை கீழாக நின்றபடி என்னை பார்த்தது.

1 comment:

  1. அந்த சத்தம் என்னவாக இருக்கும்? என்னவாக இருக்கும்? என்று தலைப்பு முதல் அணில் கூடு வரை suspense கூடி கொண்டே போனது. Enjoyed reading it.

    ReplyDelete