Thursday, 29 November 2018

வடசென்னை - யுத்தம் செய்


பொல்லாதவன் மூலம் வெற்றிகரமான இயக்குனராக அறிமுகமான நாளில் இருந்து வட சென்னை படத்தை பற்றி வெற்றி மாறன் பேசிக்கொண்டிருக்கிறார். அதை அவருடைய Bible என்கிறார். வட சென்னைக்கு இது வேண்டாம் என்று எடுத்து வைத்த பகுதிகளையே பொல்லாதவன், ஆடுகளம் படங்களுக்கு பயன்படுத்தியதாகவும் சொல்கிறார்.

இன்று தமிழில் இயங்கும் இயக்குனர்களில் சந்தேகம் இல்லாமல் வெற்றி மாறனை முதன்மையான படைப்பாளி என்று சொல்லலாம். அவர் வாங்கிய விருதுகளை வைத்து அல்ல. அவர் ஆடுகளம் போன்ற படத்தை இயக்க மதுரையில் இரண்டு ஆண்டுகள் தங்கி வட்டார மொழியை அறிந்து கொண்டு படத்தை எடுக்கிறார். விசாரணை படத்தை எடுக்கும் போதே மனித உரிமைகள் குறித்த புத்தகங்களை படித்து தன்னை தயார்படுத்தி கொள்கிறார். அதிகபட்ச சாத்தியமான அளவிற்கு சமரசம் செய்து கொள்ளாமல் படங்களில் அரசியல் பேசுகிறார்.

கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் பட உருவாக்கத்தில் இருந்த வட சென்னை அக்டோபர் மாதம் 17ம் தேதி பூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியானது. வெற்றி மாறன் பேட்டிகளில் தவறாமல் குறிப்பிடும் விஷயம் ஒரு படத்திற்கு முதலீடு செய்த பணம் தயாரிப்பாளருக்கு லாபம் ஈட்டி தர வேண்டுமென்பது. திரைப்படம் என்பது science, commerce பின்னரே art என்றும் சொல்கிறார்.

வட சென்னை வெளியான நாளன்று மாலை காட்சியே நான் பார்த்து விட்டேன். இடைவேளையின் போது இந்த படம் நம்ம மக்களுக்கு எங்க புரியப்போகுது?! தேறாது என்றே நினைத்தேன். ஆனால் தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த படத்தை கை விடவில்லை என்றே நினைக்கிறேன். படம் லாபம் ஈட்டியதா என்று தெரியவில்லை ஆனால் விமர்சனங்கள் பெரும்பாலும் பாராட்டி, கொண்டாடி தீர்த்து விட்டன.

பொல்லாதவன் ஒரு action படம் என்றாலும் அந்த படத்தின் பாடல் பகுதிகளை நீக்கி விட்டு பார்த்தால் அதை ஒரு கச்சிதமான படம் என்றே சொல்லலாம். தர்க்க பிழைகள் இருந்தாலும் சிறப்பான நடிப்பு, பின்னணி இசை, ஒளிப்பதிவு, புதிய பின்புலம் என்று படம் இன்றும் விரும்பி பார்க்கப்படும் படமாக இருக்கிறது.
ஆடுகளம் ஒரு character studyஆக அமைந்து விட்ட படம்.  மனிதர்கள் சட்டென தடுமாறும் கணத்தில் செய்யும் தவறுகள் அவர்களின் வாழ்க்கையை, அவர்களை சார்ந்தவர்களை எப்படி பாதிக்கிறது என்பதை சொல்லும் படம்.

மனிதர்கள் 100 சதவீதம் நல்லவர்களாகவோ கெட்டவர்களாவவோ இருப்பதில்லை. தன்னை காப்பாற்றிக்கொள்ள, முன்னிறுத்துக்கொள்ள தன்னுடன் இருப்பவர்களை பலி கொடுக்க முடிவெடுக்கும் அந்த தருணத்தை திரையில் கொண்டு வருவதை அவர் நான்கு படங்களிலும் செய்திருக்கிறார்.

பொல்லாதவன் படத்தில் ரவி தன் அண்ணன் செல்வத்தை கொல்கிறான். ரவி அறிமுக காட்சியிலேயே தனக்கு தன் அண்ணனை போல் ஆக வேண்டும் என்று ஆசை என்று சொல்கிறான். தன் தம்பியின் துரோகத்தை ஒரு கணம் நம்ப முடியாமல் தான் இல்லாவிட்டால் அவனை கொலை செய்துவிடுவார்கள் என்று சொல்லிவிட்டே விழுந்து உயிர் விடுகிறான்.

ஆடுகளத்தில் பேட்டைக்காரனின் சிஷ்யனான கருப்பு தனது குரு கழுத்தருத்து போட சொன்ன சேவைலை அவருக்கு தெரியாமல் வளர்த்து 2000 ரூவாய் காசுக்காக சண்டைக்கு விடுகிறான். சேவல் சண்டை தாண்டி தனக்கும் ரத்தினசாமிக்கும் இடையில் உள்ள சவாலை பேட்டைக்காரன் நியாபகப்படுத்துகிறார். முதலில் சேவலை பார்த்து விட்டு சொல்லுமாறு கெஞ்சும் கருப்பு தன்னுடைய சுயம் சீண்டப்பட அப்படித்தான் சண்டைக்கு விடுவேன் என்கிறான்.

பேட்டைக்காரன் ஒலிப்பெருக்கியில் தனக்கும் கருப்புவிற்கும் அவனுடைய சேவலுக்கும் சம்மந்தமில்லை என்று அறிவித்து விடுகிறார். எதிர்பாராத விதமாக அந்த சேவல் வென்று விடுகிறது. பேட்டைக்காரன் கருப்புவை யோகக்கார பயல் என்கிறார். ரத்தினசாமி பிரிவினர் கருப்புவை தூண்டி விட்டு சேவலை மீண்டும் சண்டைக்கு விடுமாறு அழைக்கின்றனர். கருப்பு வென்றால் பத்தாயிரம் தருவதாகவும் தோற்றால் 1 ரூவாய்கொடுத்தால் போதும் என்கிறார்கள். கருப்புவும் சம்மதித்து விடுகிறான். இது பேட்டைக்காரனை மேலும்கோபப்படுத்துகிறது.

பேட்டைக்காரன் சேவல் சண்டையில் உள்ள தன்னுடைய ஆளுமை, authority, expertise கேள்விக்குள்ளாக்காப்படுவதாக உணர்கிறார். அவர் கழுத்தருத்து போட சொன்ன சேவல் மூன்று முறை வென்று ரத்தினசாமியை நிரந்தரமாக சேவல் சண்டையை விட்டு போக வைக்கிறது. கருப்பு ஒரே நாளில் பேட்டைக்காரன் அளவிற்கு பிரபலம் ஆகிவிடுகிறான். அவனை அடுத்த பேட்டைக்காரன் என்று அறிவிக்கிறார்கள்.

இப்போது சேவல் சண்டையில்  பேட்டைக்காரனுக்கு சரிக்கு சமமான போட்டியோ, எதிரியோ இல்லை. தான் பார்த்து வளர்ந்த கருப்பு சேவல் சண்டையில் புதிய போட்டியாக வளர்ந்து நிற்பதாக கருதுகிறார். ரத்தினசாமியை கருப்பு தான் சேவல் சண்டையை விட்டு விரட்டியதாக பேசிக்கொள்கிறார்கள் என்று சொல்லும் அவருடைய நண்பர் அவர்களுடைய காலம் முடிந்து விட்டதெனவும் இனி கருப்புவின் காலம் என்றும் கூறுகிறார்.

தான் பார்த்து வேண்டாம் என்று சொன்ன சேவல் எப்படி மூன்று முறை வென்றது என்று அவருக்கு கோபம். தான் அவமானப்படுத்தப்பட்டு விட்டதாக குமைகிறார். தன்னுடைய கணிப்பு தவறாக போனதில் அவருடைய கர்வம், அகம் காயப்பட்டு விடுகிறது.  பேட்டைக்காரன் சேவல் சண்டை கலையில் தன் சொல் எடுபடும் வரையில் தான் அவருடைய வாழ்க்கை  நடக்கும் என்றும் கருப்பு இருந்தால் போட்டியாக உருவெடுப்பான் என்று கருப்புவின் வாழ்க்கையை வஞ்சத்தால் வீழ்த்த முடிவெடுக்கிறார்.

விசாரணை படத்தில் முத்து வேல் என்கிற போலீஸ் அதிகாரி மேல் அதிகாரிகள் ஆடும் அரசியல் ஆட்டத்தில் ஒரு பகடையாக சிக்கி தன்னை நம்பி வந்த 3 இளைஞர்களின் வாழ்க்கையையும் தன்னையறியாமல் கேள்விக்குறியாக்குகிறார்.

வெற்றி மாறனின் நான்காவது படமான வட சென்னை மற்ற 3 படங்களுக்கு தேவைப்பட்ட உழைப்பு, பணம் அனைத்தையும் கோரி உருவான படம்.
பொல்லாதவன், ஆடுகளம் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி திரைக்கதை pattern உள்ள படங்கள். in media res (in the middle of the action) என்று சொல்லப்படும் 2000 வருட பழைமையான கதை சொல்லல் முறை தான். அதாவது கதையின் முடிவிற்கு அருகிலிருந்தோ அல்லது இடையில் இருந்தோ நாடகத்தை/ கதையை துவக்குவது. 

விசாரணை நேரடியான படம். இந்த 3 படங்களுக்கும் எந்த குழப்பமும் இல்லாமல் படம் தொடங்கிய வுடன் பார்வையாளர்களை தன்பால் ஈர்த்து விடக்கூடிய படங்கள்.
வட சென்னை non-linear cum circular narration உள்ள படம். படம் நேர்கோட்டில் பயணிக்காமல் இருப்பது, அப்படி பயணிக்கும் கதை ஆரம்பித்த இடத்திற்கு மீண்டும் வருவது என்று Pulp Fiction மற்றும் Amorres Perros படத்தை நினைவுபடுத்தும் திரைக்கதை அமைப்பு. Tarantino பாணியில் Chapter Title வேறு வைத்திருக்கிறார். அது ஒரு வகையில் படத்திற்கு உதவி செய்திருக்கிறது என்றே சொல்லலாம்.

வெற்றி மாறனின் படங்களில் மற்ற தமிழ் சினிமாக்களில் காணக்கிடைக்காத ஒரு dramatic element இருக்கிறது. ஆடுகளம் மொத்தமாக ஒரு Shakespeare துன்பியல் நாடகம் போன்ற கதை அமைப்பு உள்ள படம். வட சென்னை வெளியாவதற்கு முன்னோட்டமாக வெற்றி மாறன் அளித்த பேட்டிகளில் வட சென்னையில் Macbeth நாடகத்தில் வரும் 3 witches, Hamletன் குழப்பம் ஆகிய நாடகீய அம்சங்கள் இருப்பதாக கூறியிருந்தார். மேலும் வட சென்னை ஒரு epic என்றே கூறினார்.

வெற்றி மாறன் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றவர். தீவிரமான வாசகர். அதனாலேயே அவருடைய படங்களில் இத்தகைய நாடகீய அமசங்களை மிக நேர்த்தியாக பயன்படுத்துகிறார் என்று நினைக்கிறேன்.

வட சென்னை படத்தின் one line அல்லது premiseஐ இப்படி சொல்லலாம். தன்னுடைய சொந்த லாபம் தாண்டி தான் வாழும் ஊரின் பொது நலனை கருத்தில் கொள்ளும் இருவர் அதனால் அவர்களுக்கு நேர்ந்தது என்ன?  அவர்களுக்கிடையான கால இடைவெளி அந்த ஊரை, மக்களை, அரசியலை எப்படி மாற்றியிருக்கிறது என்பது பின்புலம். 

1980களில் ஊரின் பால் ஒரு அரசியல்வாதியை எதிர்த்து சதிக்கு பலியாகும் ராஜன் விட்ட இடத்தில் இருந்து அன்பு தொடர்கிறான். தொடர் ஓட்டத்தில் baton கை மாறுவது போல ராஜனிடம் இருந்து அது அன்புவிடம் வருகிறது.

தமிழில் வட சென்னை போன்ற அரசியல் படங்கள் வருவது மிக அபூர்வம். வட சென்னை துன்பியல் நாடகீய அம்சங்களுடன் ஒரு இதிகாசத்தை உருவாக்கும் எண்ணத்துடன் எடுக்கப்பட்டிருந்தாலும் படத்தில் வலுவாக பேசப்பட்ட அரசியலை நாம் கவனிக்க வேண்டும்.
சுப்ரமணியபுரம், மெட்ராஸ் போன்ற படங்களுடன் வட சென்னைக்கு பல ஒற்றுமைகள் இருந்தாலும் அவை இரண்டும் அரசியல் பேசும்போது கதைக்காக தமிழ் நாட்டில் இல்லாத பொய்யான கட்சிகளை உருவாக்கி படத்தில் உள்ள அரசியலின் வீரியத்தை குறைத்து விட்டனர். படத்தில் வரும் கட்சிகள் தமிழகத்தில் உள்ள எந்த கட்சிகளை குறிக்கின்றன என்று உணர்ந்தாலும் அது கட்சிகளுடன் முரண்பாடுகளை தவிர்ப்பதற்காக செய்யப்பட்ட உத்தி என்றே கொள்ள வேண்டியிருக்கிறது. ரஞ்சித் அதை காலாவிலும் செய்திருக்கிறார்.அவர் மோடியை தான் கிண்டல் செய்கிறார் ஆனால் அதைநேரடியாக செய்ய முடியாது. இந்தியாவின் தற்போதைய அரசியல் கலாச்சாரம் அப்படி.

வட சென்னையில் MGRன் மரணத்தை தொடர்ந்து நடக்கும் அதிகார போட்டியில் ஏற்பட்ட மாற்றங்களின் போதே ராஜன் கொலை செய்யப்படுவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. முத்து என்கிற அதிமுக கட்சிக்காரர் ராஜன் வாழும் ஊரை காலி செய்து தருமாறு கேட்கிறார். வளர்ச்சி, முன்னேற்றம் என்று இப்போது குஜராத்தி மாபியா வகையறா பேசும் அதே வார்த்தைகள். ராஜன் தொழில் ஓரிடத்திலும் வீடு ஓரிடத்திலும் என்றால் கடல் தொழில் பார்க்கும் மக்கள் எப்படி பிழைப்பார்கள் என்கிறான்.

ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவில் நடந்த அதிகார போட்டியை நினைத்து பாருங்கள். OPS, EPS, TTV, சசிகலா ஆகியவை நமக்கு தெரியும் முகங்கள். இவர்களை ஆட்டுவிப்பது யார்? இவர்களை அண்டிப்பிழைப்பவர்கள் நிலையென்ன? எதற்காக அவசர அவசரமாக சேலம் to சென்னை சாலை போட அனுமதி வழங்குகிறார்கள்? கையில் அதிகாரம் இருக்கும் போதே துட்டு பார்த்து settle ஆக வேண்டும் என்று தானே? EPSன் உறவினர் வீடுகளில் நடந்த raid நினைவிருக்கிறதா?

அதிகார சங்கிலியில் மேலே இருப்பவர்களை பற்றிய செய்திகள் நமக்கு வருகின்றன ஆனால் இந்த அதிகார போட்டியில் நடக்கும் அரசியல் கொலைகளால் நடக்கும் மாற்றங்கள் நமக்கு தெரிவதில்லை. அப்படி ஒரு கொலையை microscope வைத்து நமக்கு காட்டுகிறார் வெற்றி மாறன். அது எத்தனை பேரின் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றி அமைகிறது என்று.

உடைந்து விட்ட கட்சியில் தன் இடத்தை தக்க வைக்க பண பலம் தேவை. ராஜன் வாழும் ஊரை தனியாருக்கு வாங்கிக்கொடுத்தால் அதன் மூலம் முத்து பெரும் பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு தேர்தல் செலவுக்கு பணம் வழங்குவதாக கூறி ஒரு MLA seat உறுதி செய்து கொண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைச்சர் பதவி வேண்டும் என்று demand செய்யலாம். இப்படி ஒரு தனி நபரின் அதிகாரப்பசியே வட சென்னையின் தொடக்க புள்ளி.

ஆடுகளம் படத்தில் subtextஆக சேவல் சண்டை பயன்படுத்தப்பட்டது போல இங்கே Carrom பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்தில் அன்பு ஒவ்வொருவராக pocket செய்கிறான். தன்னை காப்பாற்ற ஜாவா பழனியை குத்தும் அன்பு விசுவாசத்தை காட்ட செந்திலை  குத்துகிறான்.

வட சென்னையில் பொறுமையை சோதிக்கும் விதமாக அமைந்து விட்டது சிறையில் நடக்கும் காட்சிகள் தான். அதில் உள்ள ஒரு documentary தன்மை கொஞ்சம் சலிப்பை கொடுத்தது. சமீபத்தில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக வந்த செய்திகள் இந்தப்பகுதியை ஒரு வகையில் சுவாரசியமாகவும் ஆக்கிவிட்டன. மேலும் படத்தை ஒன்றிற்கு மேற்பட்ட தடவை பார்க்கும் போது சிறைச்சாலை காட்சிகளின் தனித்துவம் புரியும்.

The Godfather படத்தில் Don Corleoneனின் Consigliere (Lawyer) Tom Hagen போதை பொருள் தொழிலில் அவர்கள் இறங்கா விட்டால் எதிர் தரப்பு இறங்கும் என்றும் அதன் மூலம் ஈட்டும் பணத்தை வைத்து அதிக அரசியல் பலம் பெற்று அவர்களுடைய மற்ற தொழிலுக்கும் பெரிய போட்டியாக உருவெடுப்பார்கள் என்று சொல்கிறார்.

ராஜன் காலத்தில் ஊக்கெடுப்பது (smuggling) அவர்களின் வாழ்வாதாரம் என்றால் 90களில் பொருளாதார கொள்கைகளில் மாற்றம் வந்த பின்னர் வெளிநாட்டு பொருட்கள் உள்ளூர் சந்தையில் விற்பனைக்கு வந்து விட ராஜனை கொலை செய்து அந்த தொழிலை செய்ய நினைத்தவர்கள் போதைப்பொருள் தொழிலில் இறங்குகிறார்கள். அதில் கிடைக்கும் பணத்தை வைத்து அரசியல் அதிகாரம் பெற துடிக்கிறார்கள். செந்தில் முத்துவிடம் தேர்தல் செலவுக்கு பணம் தருவதாகவும் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்கிறான்.

ராஜனை கொன்ற பின் செந்திலிடம் இருந்து பிரிந்துவிட்ட குணா பல வருடங்கள் கழித்து செந்திலை கொலை செய்ய அன்புவை அனுப்புகிறான். செந்தில் இல்லாத இடத்தில் தானே ஒற்றை அதிகாரப்புள்ளி என்றும் அன்புவிடம் சொல்கிறான். Contract, Sub lease எல்லாம் தன் கண் பார்வையின் கீழ் நடக்கும் என்றும் அன்பு வாழ்க்கையில் settle ஆக தன்னுடன் இருக்குமாறும் கூறுகிறான்.

சிறுவனாக ராஜனை பார்த்த அன்பு பதின் பருவத்து பையனாக தம்பியண்ணன், செந்தில், குணா, பழனி மற்றும் வேலுவை தெரிந்து கொள்ள நேர்கிறது. வாலிபனாக பழனியை கொலை செய்கிறான் செந்திலை கொல்லும் முயற்சியில் முடமாக்கி விடுகிறான். இளைஞனாக குணாவை எதிர்த்து நிற்கிறான் என்பதாக படம் நிறைவு பெறுகிறது.

ராஜனை கொலை செய்த நால்வரில் இருவர் தாங்கள் செய்த கொலைக்கான தண்டனையை fair and squareஆக பெற்று விடுகிறார்கள். Poetic Justice என்பது இதுதான். மற்ற இருவரும் அதை பெறுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் அடுத்த பகுதியை சினிமாவாக  நாம் காண சில வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

Hollywoodல் Epic என்று சொல்லக்கூடிய படங்கள் அனைத்தும் 3.30 மணி நேரத்தை தாண்டி நீளும் படங்கள். Once Upon A Time in America படத்தின் நீளம் 3 மணி நேரம் 49 நிமிடங்கள். 8 முதல் 10 மணி நேரம் இருந்த படத்தை 6 மணி நேரமாக குறைத்து இரண்டு மூன்று மணி நேர படமாக வெளியிட வேண்டும் என்று Sergio Leone கேட்டு கொண்டாராம். ஆனால் தயாரிப்பு தரப்பு மொத்த படத்தை 2மணி நேரம் 45 நிமிடமாக குறைத்து வெளியிட்டது.

Hollywoodல் உள்ள சிறப்பம்சம் அவர்கள் Director's Cut என்று DVD வெளியிடுவார்கள். Theatrical releaseஆக தோல்விப் படமான Once Upon A Time in. America பின்னர் VHS, CD, DVDயாக வெளியாகி லாபம் ஈட்டியது வரலாறு.

இந்தியில் Anurag Kashyap அவருடைய Gangs of Wasseypur படத்தை இரண்டு பாகமாக வெளியிட்டார். The Godfather படத்துடன் பல ஒற்றுமையுள்ள Gangs of Wasseypur தனித்தன்மை பெறுவது அது நடைபெறும் மண்ணில் உள்ள நிலக்கரி  மாபியாவை பின்னணியாக கொண்டதில் தான். Kashyap படத்தை அவரே தயாரிக்கவும் செய்வதால் அவர் மனம் போல வெளியிட முடிகிறது.

ஒரு நாவல் அது சொல்ல வரும் கதையை சொல்ல எத்தனை பக்கங்களை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். இன்றும் War and Peace, Karamazov Brothers போன்ற 1000 பக்கங்களை தாண்டும் ருஷ்ய நாவல்களை வாசிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சினிமா என்பது 3 மணி நேர கால அளவிற்குள் இருந்தாக வேண்டி இருக்கிறது. ஒரு படத்தை இரண்டு அல்லது மூன்று 3 மணி நேர படமாக வெளியிடும் போது அவை வெற்றியும் பெற்றிருக்கின்றன தோல்வியும் அடைந்திருக்கின்றன. பெரும்பாலும் 3வது பாகம் தோல்வியடைந்து விடும்.  The Godfather Trilogyயே ஒரு சிறந்த உதாரணம்.

வட சென்னை போன்ற இதிகாச குணாம்சங்கள் உள்ள கதையை நிச்சயம் 2.45 மணி நேர படமாக சொல்ல முடியாது. வெற்றி மாறன் web series எடுக்கும் திட்டம் இருப்பதாகவும் சொல்கிறார். ஆனால் பெரிய திரையில் பார்க்கும் அனுபவம் போல் இருக்காது. Fargo போன்ற web series பார்க்கும் போது 10 அத்தியாயங்களாக அவர்கள் சொல்லும் கதை மிக சிறப்பாக உள்ளதாகவும் தோன்றுகிறது.

இதிகாச இயல்புகள் உள்ள படத்தில் ஒரு characterன் metamorphosis நம் கண் முன் நிகழ்வதை நாம் உணர முடியும். மேலும் ஒரு omniscient narrator கதையை நமக்கு சொல்லி நம்மை வழிகாட்டி அழைத்து செல்வார். வட சென்னையில் வெற்றி மாறனின் குரலில் நாம் கதையின் பின்னணியை அறிந்து கொள்கிறோம்.

அன்புவில் இருந்து தொடங்கினால் அவனுடைய நான்கு பரிமாணங்களை நாம் திரையில் காண்கிறோம். அவை 91, 96, 2000, 2003 வருடங்களில் அவன் எப்படி இருந்தான் என்று நமக்கு சொல்கின்றன. ஒவ்வொரு காலத்திற்கும் நடை, குரல், உடல் மொழி என அத்தனை மாற்றம். 1996ல் பழனியிடம் அடி வாங்கி விட்டு பின்னர் கத்தியுடன் மிரட்ட வந்து பயந்து அங்குமிங்கும் ஓடி கத்தியால் குத்தும் அன்பு அல்ல நாம் 2003ல் காண்பது. 96ல் தன்னை காப்பாற்றுமாறு குணாவிடம் சரணடையும் அன்பு 2003ல் தன்னையும் தன் ஊரையும் காப்பாற்றிக்கொள்ள குணாவை எதிர்த்து நிற்கிறான்.

இந்த metamorphosis எல்லா கதா பாத்திரங்களுக்கும் நேர்கிறது. ராஜனின் மனைவியான சந்திரா helpless woman என்கிற நிலைமையில் இருந்து vengeful, cunning womanனாக பரிணமிக்கிறார். திட்டமிட்டு ராஜனை கொலை செய்தவர்களுக்குள் மோதலை உருவாக்குகிறார். அவர்களுக்குள் சமரசம் பேச முற்படும் போதெல்லாம் சதி செய்து அதை முறியடிக்கிறார்.

ராஜனின் தம்பியான தம்பியண்ணன் அண்ணனை கொல்லும் போது தடுக்காமல் விட்டோமே என்கிற குற்ற உணர்ச்சியிலேயே வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார். காவி உடை, தாடி, ஊர் மற்றும் கோவில் காரியங்கள் என்று தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ள முயற்சிக்கிறார்.

செந்தில் ராஜனை வீழ்த்திய தன்னை வீழ்த்த ஆள் இல்லை என்கிற மிதப்பில் இருக்கிறார்.  ஆனால் ராஜனை அவர் முதுகில் தான் குத்தினார் நெஞ்சில் அல்ல. செந்திலும் முதுகில் குத்துப்பட்டே முடமாகிறார். செந்திலிடம் பழகிய பின் குணாவை விட செந்தில் நல்லவன் என்றே அன்பு சொல்கிறான். முடமான பின் தன் சொல் இனி செல்லுபடியாகாது என்று புரிந்து கொள்கிறார். அன்புவை மீண்டும் சந்திக்கும் போது Carrom விளையாட முடியவில்லை என்கிறார். இனி அதிகார அரசியலில் அவரால் பங்கேற்க முடியாது என்பதைத் தான் அப்படி சொல்கிறார் என்றே நாம் எடுத்துக்கொள்ளலாம்.

குணாவிற்கு குற்ற உணர்ச்சி என்பது எந்த அளவிற்கு இருக்கிறது என்பது சந்தேகம் தான்.  குற்ற உணர்ச்சி என்ற ஒன்று இருக்கிறதா என்பதே கேள்விக்குறி. ராஜனின் இடத்தை பிடிப்பது மட்டுமல்ல அவனது நோக்கம். ராஜனின் மனைவி சந்திராவையும் தனதாக்கி கொள்கிறான். ஆனால் சந்திராவின் சதிகள் எதையும் ஊகிக்க முடியாதவனாகவும் இருக்கிறான்.

ராஜனை மிக குறைவான நேரமே நாம் திரையில் காண்கிறோம். வெற்றி மாறன் பொல்லாதவனில் செல்வம் கதா பாத்திரத்தில் கிஷோர் அவர்களை அறிமுகப்படுத்தி அவரையே dubbingம் பேச வைத்திருக்கிறார். செல்வம் கொலை செய்யப்படும் காட்சியில் அது ரசிகர்களை அதிகமாக பாதித்தது என்றே சொல்லாம். செல்வம் கதா பாத்திரம் ஒரு வலுவான பாத்திரமாக கதையில் இடம் பெற்றதே அத்தகைய பாதிப்புக்கு காரணம்.

ஆடுகளம் படத்தில் ஈழக்கவிஞர் வ.ஜ.ச ஜெயபாலன் பேட்டைக்காரனாக நடிக்க வைத்தார். ஏற்கனவே புகழ்பெற்ற ஒரு நடிகர் பேட்டைக்காரனாக நடித்திருந்தால் அவர் செய்யும்  துரோகத்தை 'எதிர்பார்த்தது தான்' என்று ஊகித்துவிட்டிருக்க வாய்ப்பு உண்டு.

விசாரணையில் ஆந்திர Police அதிகாரி, தமிழ் நாட்டு police அதிகாரிகள் என்று 3 புது முகங்கள். அவர்கள் அத்தனை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

வட சென்னையில் ராஜன் பாத்திரம் பலர் கை மாறி பின்னர் அமீர் நடித்திருக்கிறார். பொல்லாதவன் செல்வம், ஆடுகளம் பேட்டைக்காரன் போன்ற கதா பாத்திரங்களின் screen time தான் அவற்றை மறக்க முடியாத கதா பாத்திரங்கள் ஆக்குகின்றன. அவை திரையில் evolve ஆவதை நாம் பார்க்கிறோம். இங்கே ராஜன் ஏன் ராஜனாக இருக்கிறான் என்பது நமக்கு காணக்கிடைக்கவில்லை.

வட சென்னைக்கு ஒரு prequel எடுத்து ராஜன் வகையறா என்று முன்கதையை சொல்லும் ஒரு திட்டமிருப்பதாகவும் வெற்றி மாறன் சொல்லுகிறார், பார்க்கலாம்.

ராஜன் ஊக்கெடுப்பவராக இருந்தாலும் ஊரில் உள்ள அடுத்த தலைமுறை படிப்பை மட்டும் நம்பாமல் பல தரப்பட்ட விளையாட்டுகளில் கலந்து கொண்டு அதன் மூலம் வேலைவாய்ப்பை பெற்று வாழ்க்கையில் மேலே செல்ல வேண்டும் என்கிறார். செய்வது கடத்தலாக இருந்தாலும் தெளிவான செயல் திட்டம் வைத்திருக்கிறார். ஒரு வகையில் பொல்லாதவன் செல்வத்துடன் நாம் ராஜனை ஒப்பிட முடியும். இருவரும் தம்பி மற்றும் தம்பி என்று நினைத்தவர்களின் சதிக்கு பலியாகிறார்கள்.

தான் ஒரு பேப்பர் ரவுடி இல்லை என்று சொல்லும் ராஜன் கொஞ்சம் கள்ளம் கபடம் இல்லாமல் இருக்கிறார். Police அதிகாரியை சந்திக்க செல்லும் போது கத்தியுடன் செல்லும் அவர் காலையில் ஊர் முன்னிலையில் தான் அடித்து திட்டியவர்களை சந்திக்க ஆயுதம் இல்லாமல் செல்கிறார். தான் சந்தித்து பேசினால் அவர்களுக்கு மனக்கஷ்டம் நீங்கி விடும் நிம்மதியாக இருப்பார்கள் என்று தனது மனைவியிடம் சொல்கிறார். அவர்களின் சதி தெரிந்த பிறகு தனது மனைவிக்கு தன்னை கொலை செய்தது யாரென்று தெரியக்கூடாது என்று சொல்லிவிட்டே இறக்கிறார்.

இந்த மைய கதாபாத்திரங்கள் தவிர்த்து பலர் திரையில் வருவதே ஒரு Menacing Presenceஐ உருவாக்குகிறது. குணாவுடன் இருக்கும் வேலு, செந்திலின் விசுவாசி தாஸ் என்று இருவருக்கும் வலுவான role என்றே சொல்லலாம். அதிலும் தாஸ் என்கிற கதா பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் புதுப்பேட்டை படத்தில் "மூணு வேளையும் பிரியாணி வாங்கி கொடுத்தாங்க" என்ற ஒரே வசனத்தை பேசும் வேடத்தில் நடித்திருந்தார். வட சென்னையில் அவருடைய இருப்பே மிரட்டலாக இருக்கிறது. மிரட்டலாக  என்றால் உடன் இருப்பவர்களை மிரட்டுவதில் அல்ல அவர் பேசும் விதமே அவர் வெறும் அல்லக்கை அல்ல விஷயம் தெரிந்தவர் ஆட்டுவிக்கும் இடத்திற்கு முன்னேற கூடியவர் என்பதாக உள்ளது.

வட சென்னை மக்களை பற்றிய படங்களில் அவர்களின் இருண்ட பக்கங்களை காட்டி அவர்கள் மேல் ஒரு stereotype image விழுந்து விட்டதாக குறைபடுபவர்கள் இருக்கிறார்கள். கதைகளில் நாம் காணும் கதா பாத்திரங்கள் அனைத்தும் காந்தி போல, ஏசு போல இருந்தால் கதை தொடங்கிய இடத்திலேயே நின்று விடும் இல்லையா?

பள்ளி, கல்லூரிகளில் நம்முடன் படித்த பொறுப்பான, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று இருந்த மாணவர்களை நாம் என்ன சொல்லி அழைத்தோம்? அவர்களை boring ஆன ஆட்களாக தானே நினைத்தோம்!! அவர்களை போன்ற கதா பாத்திரங்கள் ஒரு படமெல்லம் நிறைந்திருந்தால் என்ன ஆகும்?

அன்பு ஜாவா பழனியை குத்த கத்தியை உருவும் போது திரையரங்கில் ரசிகர்கள் விசிலடித்து, கைதட்டி ஆரவாரம் செய்தனர். பெண்கள் கூட ஹே என்று கூவினர். இயல்பு வாழ்க்கையில் நம்மில் எத்தனை பேர் நம்மை சீண்டும் ஒருவனை கொல்ல இப்படி கத்தியை தூக்குவோம்?! கொலை செய்தால் அதோடு நமது வாழ்க்கையும் முடிந்தது என்று நமக்கு தெரியும் தானே?

இலக்கியம், சினிமா எல்லாம் நாம் வாழ வாய்ப்பில்லாத ஒரு வாழ்க்கையை நமக்கு எழுத்தின் மூலமாவும், காட்சிகளின் வழியாகவும் அளிக்கிறது. ஒரு வகையான Vicarious Pleasure, Second hand experience. அவை ஒரு வகையில் நம்மை செழுமையடைய செய்கின்றன.

விருமாண்டி படத்தில் கமல் ஹாசன் "எங்க ஊர்ல வெட்டு விழுந்தா ரெண்டு காரணத்துக்காக தான். ஒன்னு மண்ணுக்காக, இன்னொன்னு பெண்ணுக்காக" என்று ஓரிடத்தில் சொல்வார். அனைத்து இதிகாசங்களும் மண்ணுக்கும், பெண்ணுக்கும் மனிதர்கள் அடித்து கொண்ட கதையையே சொல்கின்றன. வீரம், காதல் என்று அதை உன்னத்தப்படுத்துகின்றன. 

வடசென்னை மண்ணுக்காக நடக்கும் யுத்தத்தை சொல்லும் கதை.
வடசென்னை படத்தில் குறைகளே இல்லை என்று சொல்ல முடியாது ஆனால் படம் முன் வைக்கும் அரசியலை விவாதம் ஆக்காமல் சித்தரிக்கப்பட்ட விதத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தால் தமிழில் சினிமா எடுப்பதை நிறுத்தி விட்டு டப்பிங் படங்களை மட்டும் பார்த்து கொண்டிருக்க வேண்டியது தான். 

References:

1. https://www.imdb.com/title/tt0068646/?ref_=fn_al_tt_1

2. https://www.imdb.com/title/tt0087843/?ref_=fn_al_tt_1

3. https://www.imdb.com/title/tt0110912/?ref_=fn_al_tt_1

4. https://www.imdb.com/title/tt0245712/?ref_=nv_sr_1

5. https://www.imdb.com/title/tt1235166/?ref_=nv_sr_1

6. https://www.britannica.com/art/epic

7. https://www.britannica.com/art/in-medias-res-literature

8. https://www.youtube.com/watch?v=CZ8eWQVTJ_A

9. https://www.imdb.com/title/tt2802850/

10. https://www.imdb.com/title/tt1954470/?ref_=nv_sr_1


1 comment:

  1. ஒரு படத்தை இப்படியும் ஆழ்ந்த கண்ணோட்டத்துடன் பார்க்கலாமா ! அருமையான பதிவு.

    ReplyDelete