Wednesday, 7 February 2018

A Man Called Ove - ஆதிப்பண்பு


நீங்கள் Oscar Wilde எழுதிய The Selfish Giant என்ற சிறுகதையை பள்ளியிலோ, கல்லூரியிலோ படித்திருக்கிறீர்களா?

Clint Eastwood இயக்கி நடித்த Million Dollar Baby, Gran Torino போன்ற திரைப்படங்களை?

David Lynch இயக்கிய The Straight Story திரைப்படத்தை?

இந்த வரிசையில் குரோசோவா இயக்கிய Ikiru படத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

The Selfish Giant மற்றும் மேலே சொல்ல பட்ட திரைப்படங்களில் வரும் மைய கதாபாத்திரங்களுக்கு மிக நெருக்கமான குணாம்சமுடைய ஒரு கதாபாத்திரம் தான் A Man Called Ove படத்தில் வரும் Ove.

Clint Eastwood அவர்களை மனதில் வைத்து எழுதப்பட்ட கதா பாத்திரம் என்றே தோன்றும் அளவிற்கு Gran Torino படத்திற்கும் இதற்கும் அத்தனை ஒற்றுமை உண்டு.

Ove 60 வயதை நெருங்கி விட்ட ஒரு ரயில்வே ஊழியர். ஒரு perfectionist. சமரசம் என்ற வார்த்தைக்கு அவர் வாழ்க்கையில் இடமில்லை. கொஞ்சம் misanthrope போலவும் தெரிகிறார். அதாவது மனிதர்களையே அவருக்கு பிடிப்பதில்லை. மனைவியும் இறந்து விட தனிமையில் வசிக்கிறார்.

சாவி கொடுத்த கடிகாரம் போல சீராக ஓடிக்கொண்டிருக்கும் அவர் வாழ்க்கையில் ஒரு மாற்றம் வருகிறது. இந்த மாற்றத்தை விரும்பாத அவர் 'போதும்' என்ற முடிவை எடுக்கிறார். எடுத்த முடிவை செயல்படுத்தும் முயற்சியில் தனது பால்யம், பதின்பருவம், காதல் என்று அனைத்தையும் நினைத்து பார்க்கிறார்.

இந்நிலையில் வேண்டா வெறுப்பாக அருகே குடியேறியவர்களுக்கு சிறிய உதவிகளை செய்கிறார். ஈரான் நாட்டில் இருந்து வந்து குடியேறிய Lavandeh என்ற 30 வயது பெண் அவருடைய அத்தனை அரண்களையும் பொருட்படுத்தாமல் தனக்கு வேண்டிய உதவியை கேட்டு பெறுகிறாள். நிறை மாத கர்ப்பிணியான அவளது இரண்டு பெண் குழந்தைகள் Ove விடம் அன்பை கொட்டுகிறார்கள்.

ஒரு மனிதரை அவருடைய அத்தனை குறைகளுடன் ஏற்றுக்கொள்வது தான் அவரை நேசிப்பதற்கான தொடக்கம் என்று சொல்வார்கள். Lavandeh மற்றும் அவரது மொத்த குடும்பமும் Ove விடம் உள்ள அத்தனை obsession, பிடிவாதம், முரண்டு என்று எதையும் பொருட்படுத்தாமல் அன்பை காட்ட மனிதர் கொஞ்சம் இறங்கி வருகிறார்.

இதற்கிடையில் அவருடைய தினசரி கடமைகளை கிரமமாக செய்கிறார். மனைவின் கல்லறையில் பூச்செண்டு வைப்பது. அருகில் அமர்ந்து கொண்டோ அல்லது புல் தரையில் படுத்துக்கொண்டோ வாழ்க்கையில் நடப்பதை பேசுவது என்று கொஞ்சம் நேரம் செலவு செய்கிறார். அவரின் மனைவி  பள்ளி ஆசிரியராக இருந்தவர் என்பதால் அவர் முரண்படும் நபர்கள் அவரின் மனைவியிடம் படித்தவர்கள் என்று சொன்னால் தனது பிடிவாதத்தை கொஞ்சம் விட்டுக்கொடுக்கிறார்.

தேசப்பற்று மற்றும் கார்களை வைத்து மிக சுவாரசியமான பகுதி ஒன்றும் படத்தில் உண்டு.

மனிதர்கள் பிறக்கும் போதே உறுதி செய்யப்பட்ட குணங்களுடன் பிறப்பதில்லை. அவர்கள் வாழும் சூழல், சுற்றி இருக்கும் மனிதர்கள் ஒவ்வொரு மனிதனின் ஆளுமை உருவாக்கத்தில் பெரிய பாதிப்பை செலுத்துகிறார்கள். A man is a product of his environment என்று சொல்வார்களே! ஏதோ ஒரு அசம்பாவிதம் மனிதர்களை உள்ளுக்குள்ளே சுருங்க செய்து விடுகிறது. எதை பற்றியும் எதற்கு கவலை பட வேண்டும்? யாரையும் சாராமல் வாழ வேண்டும். தன்னை யாரும் எந்த தொந்திரவும் செய்ய கூடாது என்று இறுகி விடுகிறார்கள்.

பின்னர் புயல் மழை ஓய்ந்து வெயில் வருவது போன்ற ஒரு நாளில் சக மனிதர்கள் இல்லாமல் யாரும் வாழ்ந்து விட முடியாது என்று புரிய தங்களை கொஞ்சம் மாற்றி கொள்ள முன் வருகிறார்கள்.

உலகம் ஒரு கிராமமாக சுருங்கி விட்டது என்று பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். ஆனால் முன்னெப்போதும் விட இப்போது மனிதர்கள் தனிமையில் வாடுகிறார்கள். போர், பஞ்சம், வேலைவாய்ப்பு என்று நாடு விட்டு நாடு அகதியாக, ஊழியராக இடம் பெயருகிறார்கள்.

இந்நிலையில் கிணற்று தவளை குணம் மாறிவிடுவது இல்லை. எங்கே சென்றாலும் அங்கே ஒரு கிணற்றை வெட்டி 'என் மொழி, என் கலாச்சாரம், என் மக்கள்' என்று இருந்து விடுகிறார்கள். ஆனால் இந்த உலகம் கிராமமாக சுருங்கிய இந்த நூற்றாண்டில் நாம் மொழி, இனம், தேசம் கடந்து ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ கடமைப்பட்டிருக்கிறோம். அப்படி ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து, சார்ந்து வாழாவிட்டால் இந்த பூமியில் வாழவே முடியாது என்று அ. முத்துலிங்கம் அவர்களின் ஆதிப்பண்பு கதையில் வரும் Newfoundland, Canada வை சேர்ந்த பூர்வ குடிமகன் சொல்வார்.

A Man Called Ove படத்தில் அந்த ஆதிப்பண்பு Ove விடம் மீண்டும் உயிர்பெறுவதையே நாம் காண்கிறோம்.

பி.கு

திரைப்படங்களை பற்றி பேசும் போது அது புத்தகங்களை பற்றியும் மேலும் பல படங்களை பற்றியும் பேசுவதிலும் சென்றே முடிகிறது.

இங்கே அறிமுகப்படுத்தப்படும் படத்தை பற்றி முடிந்த அளவிற்கு spoilers இல்லாமலேயே சொல்ல முயற்சிக்கிறேன்.

படத்தை பார்த்துவிட்டு நீங்கள் மேலும் தேடி படத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்த அறிமுகங்களின் நோக்கம்.


No comments:

Post a Comment