ஷெல்லி, கீட்ஸ் போன்ற ஆங்கில கவிஞர்கள் மிக இளம் வயதிலேயே மரணம் அடைந்து விட்டனர். கீட்ஸ் TB காரணமாக மிக அவதிப்பட்டு இறந்து போனார். ஆனால் கீட்ஸ் எழுதிய கவிதைகள் காலத்தின் முன் அழியாது நிற்கின்றன. ஒரு மனிதனுக்கு தான் விரைவில் இறந்து விடுவோம் என்று தெரிந்த பிறகு அவனுடைய வாழ்க்கை அவனுக்கு மேலும் அர்த்தமுடையது ஆகிவிடுகிறது. மரணிப்பதற்கு முன் தன்னுடைய முத்திரையை இந்த உலகில் விட்டு விட்டு போக எத்தனிக்கிறான். அவனுடைய படைப்பு நிலை உச்ச கட்டத்தை அடைந்து விடுகிறது. பாரதியோ, கணித மேதை ராமனுஜனோ மிக குறைவான நாட்களே வாழ்ந்து தங்களுடைய பிறவியின் உச்ச பட்ச சாத்தியங்களை நிகழ்த்தி விட்டு போனவர்கள் தான் இல்லையா?
இங்கே குரோசோவா இயக்கிய Ikiru திரைப்படத்தின் முதல் காட்சியில் கதா நாயகனின் X Ray செய்யப்பட்ட வயிறு காண்பிக்க படுகிறது. அதிக பட்சம் 6 மாதம் அல்லது ஒரு வருடம் என்று சொல்லி தான் படம் துவங்குகிறது. Ikiru என்றால் To Live என்று அர்த்தம்.
கதா நாயகன் Watanabe ஒரு பொதுத்துறை ஊழியர். அதில் தலைமை பொறுப்பில் இருக்கிறார். விரைவில் பணி ஓய்வு பெறப்போகிறார். 29 வருடம் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் வேலை செய்த ஊழியர் அவர்.
அரசாங்க வேலையின் சுருதி மாறாத அன்றாடத்தன்மை திரையில் விரிகிறது. அரசாங்க ஊழியர்களுக்கு அத்தனையும் பேப்பரில் உள்ள கணக்கு வழக்குகள் தாம். பேப்பரில் உள்ள விசயம் உண்மையில் இருக்க வேண்டும் என்பது இல்லை. பேப்பர் இருக்கிறது என்றால் அதில் உள்ள விசயம் இருக்கிறது என்றே வாதிடுபவர்கள். இப்படி பேப்பரில் எழுதிய கணக்கு வழக்குகளை வைத்து தான் நாங்கள் வல்லரசு ஆகிவிட்டோம், கருப்பு பணத்தை ஒழித்து விட்டோம், இந்தியாவை சுத்த படுத்தி விட்டோம் என்று நம் அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் கதை விடுகின்றனர். அது பேப்பரில் உள்ள உண்மை. நடைமுறை உண்மை மக்களுக்கு தெரியும் தானே?
இப்படி தனக்கு முன்னால் இருக்கும் பேப்பர்களில் தன்னுடைய முத்திரையை பதித்து அடுத்த இடத்திற்கு அனுப்ப வேண்டியது மட்டுமே Watanabe அவர்களின் வேலை. இந்த குமாஸ்தா தனம் அவர் வாழ்க்கையில் எந்த சுவராசியமும் இல்லாமல் செய்து விட்டது. சக ஊழியர்கள் Mummy என்று பட்ட பெயர் வைக்கும் படி தான் அவரும் நடந்து கொள்கிறார்.
இந்நிலையில் தனக்கு Cancer என்பதை கண்டு அதிர்ந்து போகிறார். மீதமிருக்கும் நாட்களை என்ன செய்வது என்று யோசிக்கிறார். தனக்கென்று தான் எதுவும் செய்து கொள்ளவில்லை என்று உணறுகிறார். ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் 29 வருடம் வேலை செய்ததை எண்ணி கூசுகிறார்.
மனிதன் இதை செய்து தான் மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று நம்பப்படும் விஷயங்களை முயற்சித்து பார்க்கிறார். 50000 yen பணத்தை எடுத்து கொண்டு Club, Strip Tease என்று வலம் வருகிறார். தான் தேடுவது இது அல்ல என்று அவருக்கு புரிகிறது.
இதற்கிடையில் மகனுக்கு தந்தையின் ஓய்வு பணத்தில் தனியாக வீடு கட்ட வேண்டும் என்ற நினைப்பு இருக்கிறது. அலுவலகத்தில் வேலையில் இருக்கும் இளம் பெண் ஒருத்தி Watanabe வை தேடி வருகிறாள். அந்த வேலை பிடிக்கவில்லை என்றும் அதை விட்டு வெளியேற அவருடைய கையெழுத்து தேவை என்றும் கூறுகிறாள்.
அந்த பெண்ணிடம் உள்ள அந்த துடிப்பு Watanabe வை ஈர்க்க அவளை அழைத்து சென்று கேளிக்கையில் ஈடுபடுகிறார். அவளுக்கு stockings வாங்கி கொடுக்கிறார். உணவருந்த அழைத்து செல்கிறார். அந்த பெண் இரண்டாவது நாளில் இது தனக்கு பிடிக்கவில்லை என்று சொல்ல அவளிடம் உண்மையை சொல்லி அவளை போல் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்று கேட்கிறார். அவள் கூறும் பதில் அவருக்கு ஒரு கதவை திறந்து வைக்க அங்கிருந்து கிளம்புகிறார்.
2 மணி நேரம் 23 நிமிடம் ஓடும் இப்படத்தின் 1 மணி நேரம் 20வது நிமிடத்தில் Watanabe இறந்து அவருடைய ஈமச் சடங்குகள் காட்சி ஆரம்பிக்கிறது. இதன் பின் வரும் காட்சிகள் தான் ஏன் குரோசோவாவை உலகமெங்கும் உள்ள சினிமா காதலர்கள் கொண்டாடுகிறார்கள் என்பதை நியாயம் செய்யும் பகுதி.
இந்த பின்பாதி Rashomon படத்தின் பாணியில் அமைந்துள்ளது. Sidney Lumet இயக்கிய 12 Angry Men படத்தில் Ikiruவின் பாதிப்பு இருப்பதை இரண்டாம் பாதி முழுவதும் காணலாம்.
சராசரி மனிதர்கள் படிப்பிற்கு பின் வேலை, திருமணம், குழந்தை, பின்னர் அவர்களை வளர்த்து ஆளாக்கி விடுவது என்று வாழ்ந்து விட்டு போய் விடுகிறார்கள். அவர்களுக்கென்று பெரிய ஆசைகளோ, விருபங்களோ இருப்பதில்லை. இப்படி தனக்கென்று ஒரு passion, hobby இல்லாதவர்கள் பெரும் பணம் ஈட்டி ஓய்வு பெறும் போது சூன்யமும் வந்து சூழ்ந்து கொள்கிறது.
சம்பாதித்த காலத்தில் எந்த ஒரு அனுபவத்திற்கும், பயணத்திற்கும் பணம் செலவு செய்யாதவர்கள் அந்திம காலத்தில் எப்படி செய்வார்கள்? அப்படி பயணம் போனாலும் புண்ணியம் தேடி போறேன் என்று கோவில் கோவிலாக சுற்றுவார்கள். ஏற்கனவே மாசு பட்ட நதியில் இவர்களுடைய மாசுகளை சேர்த்து விட்டு வருவார்கள்.
அரசாங்கம் 58 வயதில் ஓய்வும் பென்சனும் கொடுத்து அனுப்புவது மீதி வாழ்க்கையை நிம்மதியாக வாழட்டும் என்று தான். ஆனால் பெரும்பாலானோருக்கு எந்த திட்டமிடலும் இருப்பதில்லை. TV பார்த்து கொண்டு, பூங்காக்களில் சக வயதினருடன் அரசியல், உடல் உபாதைகள் குறித்து பேசிக் கொண்டு, புலம்பிக்கொண்டு இருந்து விடுகிறார்கள். சிலர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர், சத் குரு ஜக்கி வாசு தேவ், ஓம் சக்தி, அம்மா, பிரம்ம குமாரிகள் என்று தங்கள் சக்திக்கு ஏற்ப ஏதோ ஒரு போலி அமைப்பிடம் மாட்டிக் கொள்கிறார்கள்.
தமிழ் இலக்கியத்தில் அகம், புறம் என்று பிரித்து வைத்திருக்கிறோம். புறவயமான விஷயங்களில் அதிக கவனம் செலுத்துகிறோம். ஆனால் அகவயமான வாழ்க்கை என்ற ஒன்றே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சட்டென வாழ்க்கை ஓடி விட பெரும் மன சுமையுடன் வாழ்ந்து விட்டு நீங்குகிறோம்.
Ikiru மனித வாழ்க்கையின் அர்த்தம் என்ன? என்ற ஆதாரமான கேள்வியை சுற்றியே உருவாக்கப்பட்டிருக்கிறது. Watanabe தனக்கு எது மகிழ்ச்சியளிக்கும் என்று கண்டு கொள்கிறார். அதை செய்து முடிக்க தனக்கு மீதமிருக்கும் வாழ்நாளை பயன்படுத்துகிறார்.
மனிதர்கள் மண்ணில் பிறப்பது மகிழ்ந்திருக்கவே. ஆனால் பொருள் தேடி அலையும் இவ்வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு அத்தனை பொருட்கள் தேவை இல்லை என்பதை மறந்து விடுகிறோம்.
நாம் சென்ற பிறகு நம்மை பற்றி நம் நண்பர்கள், உறவினர்கள் எப்படி பேசுகிறார்களோ அப்படித்தான் நாம் இந்த உலகத்தில் எஞ்ச போகிறோம் இல்லையா? அதை முற்றிலும் தீர்மானிக்க வேண்டியது நாம் தான். விதியின் வசம் விடலாகாது என்பதே Ikiru உணர்த்துவது.
No comments:
Post a Comment