Saturday 30 July 2016

எங்கே எனது இடம்?!!


'திரைகடல் ஓடியும் திரவியம் தேட' வேண்டிய 24 வயதில் வீடு திரும்புவது என்று முடிவு எடுத்த போது அது மிக சரியான முடிவு என்று ஒரு உள்ளுணர்வு. 4 வருடங்களுக்கு பின்னர் அந்த முடிவு சரிதானா என்ற குழப்பம் என்னை ஆட்டுவிக்கிறது.

Hostel, வேலை செய்யும் போது தங்கிய இடங்களில் தான் மிக்க மகிழ்ச்சியாக, சுதந்திரமாக இருந்திருக்கிறேன் என்று எனக்கு தெரியும். இருந்தாலும் வீட்டில் இருந்து வேலை செய்தால் என்ன குறைந்து விடுவோம்?! என்றும், நம்ம சொந்த ஊரில் இருப்பவன் எல்லாம் மனுசன் இல்லையா?!, எதுக்கு வாங்கும் சம்பளத்தில் நான்கில் ஒரு பகுதியை வாடகைக்கு குடுக்க வேண்டும்?! என்று யோசித்து வீட்டுக்கு வந்து விட்டேன்.

இப்பொது சொந்த ஊரில் நண்பர்கள் என்று சொல்லி கொள்ள யாரும் இல்லை. எல்லோரும் பொருள் தேடி பறந்து கொண்டிருக்கின்றனர். தீபாவளி, பொங்கல் என்று ஓரிரு நாள் வந்து விட்டு திரும்பி விடுகிறார்கள்.

கல்லூரி படிக்கும் போது நண்பர்கள் வீட்டில் அமர்ந்து மணிக்கணக்காக அரட்டை அடித்து மகிழ்ந்து இருந்தோம். இப்போது நண்பர்களின் வீட்டிற்கு போனால் அவர்களின் அம்மா, அப்பா கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி முடிவதில்லை.

 'தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சா?', 'உனக்கு இப்போ சம்பளம் எவ்ளோ தாராங்க?', 'வேற வேலைக்கு முயற்சி பண்ணலையா?', 'சென்னை, கோவைன்னு வேலைக்கு try பண்ண வேண்டியது தான?' 'Professor வேலைக்கு 30 லட்சம் கேக்குறானமே?', இது எல்லாம் தெரிந்த பிறகு இறுதி கேள்வி 'உனக்கு கல்யாணம் எப்போ?'

இப்படி கேள்விகளுக்கு பெரும்பாலும் 'ஆமாம்', 'ஹா ஹா,' என்று சிரித்து சமாளித்து விட்டு வர வேண்டி இருக்கும். கல்யாணத்தை பத்தி கேட்பவர்கள் ஒரு 20 லட்சம் பணம் குடுத்து முதலில் வேலை ஒன்றை விலைக்கு வாங்க உதவினால் நல்லா இருக்கும். இவிங்க கேக்குறாங்க அப்டின்னு கல்யாணம் பண்ணா அப்புறம் நம்ம லட்சியம் என்ன ஆகுறது?!:-D

பணம் சம்பாரிக்க ஆரம்பித்த பிறகு குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தண்ணி அடித்து கொண்டு பேசுவது தான் நல்லா இருக்கும் என்று bar பக்கம் வண்டியை விடுகின்றனர். என்னை போன்ற பச்சை மண்ணுகளெல்லாம் என்ன செய்வதென்று அறியாது விழி பிதுங்கி நிற்கிறோம்!!!

மெட்ராஸ், பெங்களூரு, கோவை, மதுரை போன்ற பெரிய ஊர்களில்,  கடற்கரை, பூங்கா, Mall என்று பொது இடங்கள் நிறைய இருக்கும். அங்கே உலாத்தி கொண்டே கதைக்கலாம். ஆனால் கோவில்பட்டி மாதிரி ஒரு ஊரில் பொது வெளி என்பதே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இருக்கும் ஒரு பூங்காவிலும் பாம்புகள் குடியேறி இருக்கும். பெருசுகள் கூடி காரசாரமாக மாலைமுரசு, தினத்தந்தி என்று அரசியல் பேசிக்கொண்டு இருபார்கள்.

கோவில்களில் உண்டியல்களின் எண்ணிக்கை தான் அதிகம் இருக்கிறது. சாமியை தேடத்தான் வேண்டும். இதையும் மீறிய பொது வெளி என்பது 'நவீன பார் வசதி' கொண்ட 'TASMAC' தான். சந்தேகம் இருந்தால் சாயங்காலம் உங்கள் ஊரை கிரிவலம் வாருங்கள். வண்டிகள் எங்கெங்கே அதிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது என்று கவனியுங்கள்.

உறவினர் வீடுகளுக்கு போனாலும் இடைவிடாமல் தொலைக்காட்சி கதறிக்கொண்டிருக்கும். நல்ல நாள் அதுவுமா எல்லா வீட்டிலும் எல்லா பயபுள்ளைகளும் டிவியே கதின்னு தான் கிடக்கிறார்கள்.

படித்த கல்லூரிக்கு போலாம்னா அவிங்க வாசல்ல நிறுத்தி ஆயிரம் கேள்வி கேக்குறாய்ங்க. Alumni meet இருக்கு வான்னு கூப்பிடுவாங்க. வடிவேலுவ ஒரு பொடியன் திட்டி ஓட விட்டு kidneyய எடுத்திட்டு விட்டது கண் முன்னாடி வந்து போகும். பள்ளிக்கூடம் பக்கம் போனால் உடனே donation குடுங்க என்று ஓடி வருவார்கள்.

நண்பனுக்கு கல்யாணம் என்று நண்பர்கள் ஒண்ணு கூடினாலும் முதல் நாள் தண்ணி போட்டு விட்டு ஒரு அணி மல்லாந்து விடும். மண்டபத்தில் loud speaker கதறும். அட அமத்தி போடுங்கன்னா கேக்க மாட்டாய்ங்க. இதுக்கு மேல photo எடுத்து, Selfie எடுத்து FB, Whatsapp group என்று பதிவேற்றுவதில் நேரம் போகும்.

அட படிக்கும் போது அர்த்தமே இல்லாம பேசி அரட்டை அடிச்ச மாதிரி இனிமே நடக்காது போல அப்டின்னு நினைச்சுகிட்டு வீட்டுக்கு கிளம்பிட வேண்டியது தான்.

வீட்டுக்கு வந்தா டிவில அன்னைக்கு பரபரப்பான விசயம், அப்டி எதுவும் இல்லாட்டினாலும் இவிங்களே பரபரப்பா ஆக்கி ஊளை விட்டு, பாருங்க மக்களே பாருங்க என்று ஒப்பாரி வைத்து கொண்டு இருப்பார்கள்.

இந்த டிவிஇறைச்சல் இல்லாம இருக்கிற வீடு எங்கையாவது இருக்கா?!! அப்டி இருந்தா அந்த வீடு வேண்டாம் அது பக்கத்துல உள்ள வீடு வாடகைக்கு கிடைச்சா போதும்.

வேலை பாக்குற இடத்தில தினமும் சொம்பைகளை சமாளித்து விட்டு வீட்டுக்கு வந்தால் டிவியில் வரும் பைத்தியங்கள் போலியாக வியந்து, சிரித்து, கோபப்பட்டு, நெகிழ்ந்து என்று வெறுப்பு ஏத்துவார்கள்.

எதனால தமிழ் சமூகம் இப்படி இறைச்சல் மிகுந்த சமூகமா இருக்கு?!

இதிலிருந்து எப்படி தப்பிப்பது?!!

எதிர்பார்க்கும் அமைதி வீட்டில் இல்லாவிட்டால் வேறு எங்கே போவது?!

ஜெயகாந்தன் எழுதின ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் படித்தது இல்லை ஆனா தலைப்பு மட்டுமே போதுமானதா இருக்கு. இந்த வீட்டிற்குள் உள்ள உலகம் நம் விருப்பப்படி, கனவுப்படி இல்லை என்று தெரிந்த பிறகு வீடு அந்நியமாக ஆகி விடுகிறது.

கூட்டுக்குடும்பம் என்கிற கோட்பாடு, வாழ்க்கை முறை விவசாயம், தொழில் என்று குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஏதாவது பொறுப்பு இருந்த போது செல்லுபடி ஆகி இருக்கலாம். அங்கே தனி மனிதன் என்பது இல்லை. குடும்பமாக இணைந்து தான் அனைத்தையும் செய்ய முடியும்.

ஆனால் இந்த 21ம் நூற்றாண்டில்... தனி மனிதன், அவனுடைய கொள்கைகள், லட்சியம், கனவு என்று திட்டமிடும் போது அது இயல்பாகவே குடும்பத்தில் முரண் பாடுகளை கொண்டு வருகிறது. கனவு கண்ட படி வாழ்க்கை வாழ சூழ்நிலை இடம் குடுக்க மறுக்கும் போது சமரசம் கசப்புகளை அளித்து வெறுமையால் உள்ளத்தை நிறப்புகிறது. பின்னர் கூட்டு குடும்பம் என்ன?! கணவன் மனைவி என்று சேர்ந்து வாழ்வதே பெரும்பாடாகி விடுகிறது.

இங்கே கனவு என்பது சிகப்பான மனைவி, குளிரூட்டப்பட்ட அறைகள் கொண்ட வீடு, கார் என்று செட்டில் ஆவது அல்ல.

எனக்கே எனக்கு என்று ஒரு அமைதியான இடம்!!! பக்கத்து வீட்டு டிவி சத்தம் கேக்காத, கோவில் திருவிழான்னு loud speaker கத்தாத, எனக்கு ஓட்டு போடுங்கன்னு சத்தமா பிச்சை கேக்காத, roadல போறவன் வாறவன் சும்மா horn அடிக்காத, பக்கத்துல நாலு மரம், செடின்னு உள்ள ஒரு அமைதியான இடம்.

நண்பர்கள் வந்தால் அமர்ந்து கதைப்பதற்கு, புத்தகம் படிப்பதற்கு, நல்ல திரைப்படத்தை பார்ப்பதற்கு, மென்மையான பாட்டு கேட்பதற்கு, நிம்மதியாக உறங்குவதற்கு, கொஞ்சம் சிந்திப்பதற்கு, கொஞ்சம் எழுதுவதற்கு, இதுக்கெல்லாம் ஒரு இடம்.

நான் கேட்பது அதிகப்பிரசங்கிதனமா இருக்கா?!

இந்த 21ம் நூற்றாண்டுல கூட ஒரு அமைதியான இடத்தை உருவாக்க வாய்ப்பு இல்லையா என்ன?!

எல்லாம் யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாய் முடியும் என்று தாயுமானவர் சொன்னதாக ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, மற்றும் கடலுக்கு அப்பால் நாவலில் வரும் கதா பாத்திரங்கள் மீண்டும் மீண்டும் சொல்கின்றன, அது உண்மை தான?!!

கீழ உள்ள மூணு வரி கவிதை மாதிரி தெரியுதா??!! நானே எழுதினேன். :-)

வழி தவறிய எறும்பை போல
நானும் தேடிக்கொண்டிருக்கிறேன்
எங்கே என் இடம் என்று!

பி.கு.

தேடுபவன் கண்டடைவான் அப்டின்னு ஜெயமோகன் சொல்லி இருக்கார்.

நல்லா படிங்க...

ஜெயகாந்தன் இல்ல ஜெயமோகன்... ;-)















1 comment:

  1. இவிங்க கேக்குறாங்க அப்டின்னு கல்யாணம் பண்ணா அப்புறம் நம்ம லட்சியம் என்ன ஆகுறது? Ella Ilaignargalin kathiyum ithae kathithaan. Enna seivathu????

    வழி தவறிய எறும்பை போல
    நானும் தேடிக்கொண்டிருக்கிறேன்
    எங்கே என் இடம் என்று!
    Nichaiyam intha kavithai eluthiya kavignarukku vazhi pulappadum.

    ReplyDelete