Friday, 17 July 2015

தலைக்கவசத்தை அணிந்து கொண்டு இரும்பு குதிரையை செலுத்தும்போது…

தலைக்கவசத்தை அணிந்து கொண்டு இரும்பு குதிரையை செலுத்தும்போது…

1. வலது பக்கம் விமானம் பறக்குற மாதிரி சத்தம் கேட்குது.

2. இடது பக்கம் ரெயில் வண்டி போற மாதிரி சத்தம் கேட்குது. (எங்க ஊர்ல காத்து காலம்)

3. மறந்து போய் ஏதாவது பாட்டு கீட்டு பாடிட்டா மண்டைக்குள்ளயே எதிரொலிக்குது!

4. பின்னாடி வர்ற மண் திருடுற லாரியோட ஆரன் சத்தம் பைக் சத்தம் மாதிரி கேட்குது. (சத்தம் இல்லாம தொழில் பண்றவங்க பாருங்க!!!)

5. என் வண்டி ஆரன் சத்தம் எனக்கே கேட்க மாட்டேங்கு. (இதுக்குள்ள எனக்கு காதுல ஏதோ பிரச்னைன்னு உங்களுக்கு தோணிருக்கணுமே?!)

6. வண்டிய உதைச்சு லேசா உறும விட்டாத்தான் வண்டிக்கு உயிர் வந்துச்சா இல்லையான்னு தெரியுது.

7. கவசத்தை கழட்டாம ஏதாவது கடைக்கு போனா கடைக்காரர் எனக்கு பிறவியிலேயே காது கேட்காது என்பது போல கத்தி பேசுகிறார்.

8. உடன் வேலை பார்ப்பவர்கள், பொண்டாட்டியிடம் தேங்காய்யை தட்டி பார்த்து வாங்கி வந்து சட்னி வைக்க படித்திருப்பதால் என்னுடைய தலைக்கவசத்தை தட்டி பார்க்கிறார்கள். (தேங்காய் மண்டையர்கள்)

9. பெண்கள் குழந்தைகளையும், தண்ணீர் குடத்தையும் இடுப்பில் லாவகமாக வைத்து கொண்டு செல்வது போல எங்கே போனாலும் கவசத்தை வைத்துக்கொண்டு அலைய வேண்டியிருக்கிறது.

10. கவசம் இல்லாமல் பின் இருக்கையில் அமர்பவர் காவல் துறையிடம் சிக்கினா அபராதம் நான் கட்டணுமா இல்லை அவர் கட்டணுமா என்று கேட்டு தெளிவு படுத்தி கொள்கிறார்.

11. ‘இணையத்தில் வாங்குனீங்களா?, எப்போ? இப்ப இதோட விலை ரெண்டு மடங்கு ஆயிருச்சு’ என்று இணையத்தை பயன் படுத்த தெரிந்திருந்தும் வாங்காமல் விட்ட ஒருவர் பெரு மூச்சு விடுகிறார்.

12. கலைஞ்ச தலைமுடிய எப்படி சீவினாலும் நாலு முடி புதுசா முளைச்ச புல்லு மாதிரி நேரா நிக்கிது.

13. வண்டில வர்ற நாய் புதுசா இருக்கேன்னு தெருவில் உள்ள நாயெல்லாம் லொள்ளுகின்றன.

14. எப்படியும் ஒரு வாரத்திற்குள் எல்லாம் பழையபடி திரும்பி விடும் என்று கவசம் வாங்காத ஒரு கூட்டம் இறுதிச்சிரிப்பு சிரிக்க காத்துக்கொண்டிருக்கிறது!!!

2 comments:

  1. Chuckling throughout the reading.

    ReplyDelete
  2. All your writings are fantastic. Keep writing sir. Eagerly waiting to get a book that carries all your thought transformed words.

    ReplyDelete