முதலாமாண்டு படிக்கும் மூன்று வகுப்புகளை சேர்ந்த மாணவ, மாணவியரிடம் அவர்கள் அதிகம் பயன்படுத்தும் செயலிகள் (apps) குறித்தும் அதன் வழி அவர்கள் அடைந்தது என்ன? என்பது குறித்தும் தமிழில் எழுதுமாறு கேட்டுக்கொண்டேன். அதிகம் வேண்டாம், ஒரு 10 வரி எழுதுங்கள் என்பதே இறுதி வேண்டுகோளாக இருந்தது.
பல்வேறு கேள்விகள் முளைத்தன. Smart Phoneஐ தமிழில் எப்படி சொல்வது என்று தொடங்கி, appக்கான தமிழ் வார்த்தை என்ன? WhatsApp, Instagram போன்றவற்றை தமிழில் எப்படி அழைப்பது? அல்லது எழுதுவது? Televisionஐ தொலைக்காட்சி என்று அழைப்பது போல Youtubeற்கு ஏதேனும் வார்த்தை உள்ளதா?
அதன் பின்னர் அவர்கள் எழுதுவதை நான் மட்டும் வாசிப்பேனா? அல்லது வேறு பலருமா? என்று கேட்டனர். நான் வகுப்பிலே வாசித்து உடனே உங்கள் கைகளில் தந்து விடுவேன் என்று கூறினேன். மற்றவர்கள் கேட்கும்படி வாசிப்பீர்களா என்பது அடுத்த கேள்வி. இல்லை என்று பதில் அளித்தேன்.
வகுப்பில் மூன்றில் ஒரு பங்கு மாணவ, மாணவியர் ஒரு வரி கூட எழுதவில்லை. அவர்கள் எவரும் தங்கள் நோட்டுப்புத்தகத்தை கூட திறக்கவில்லை என்பது தான் அபத்த/அவல நகைச்சுவை. இதில் விதிவிலக்கில்லாமல் கடைசி இரு வரிசை மாணவ, மாணவியர் முன்னிலை வகித்தனர். இதில் மாணவர்கள் நோட்டு புத்தகங்கள் எதுவும் இன்றி கல்லூரிக்கு வந்துவிட்டு செல்கின்றனர்.
எழுதியவர்கள் பலரும், இதற்கு ஏதேனும் மதிப்பெண் உண்டா, இதை எழுதுவதால் எங்களுக்கு என்ன பயன் என்றெல்லாம் வினவினர். அவர்கள் அதிகமும் Youtube, Instagram, Sharechat போன்ற செயலிகளை பயன்படுத்துவதாகவும், அதனால் சில சமயம் தகவல்களை தெரிந்து கொள்வதாகவும் மற்றபடி பொழுதுபோக்கே பிரதானம் என்று தெரிவித்தனர்.
பின்னர் இந்த சோதனையை மேலும் சில வகுப்புகளுக்கு நீட்டித்தேன். சினிமா, பொழுதுபோக்கு என்று சூரியனுக்கு கீழே உள்ள எதை பற்றி வேண்டுமானாலும் எழுதுங்கள் என்று சொன்னேன்.
இது வரை இரண்டு மாணவர்கள் மட்டுமே சினிமாவை பற்றி எழுதினார்கள். சிலர் தோட்டம் வளர்ப்பதை பற்றி எழுதினர். சினிமா பாடல்களை தப்பும் தவறுமாக எழுதிய மாணவர்கள் சிலர். தங்களுடைய சிறு வயது அனுபவம், நாய் வளர்த்தது, பூனை மற்றும் அணில் வளர்த்தது என்று சிலர் எழுதினர். எழுதிய அனைவருமே பிழை விட்டனர். பிழையை பொருட்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.
ஒரு மாணவர் பிழை விடுவதில் என்ன பிழை இருக்கிறது என்கிற ரீதியில் கேட்டார். அவர் எழுதிய ஒரு வரி "எங்கள் குட்டுக்குடும்பத்தில் அனைவரும் என்னை நன்றாக பார்த்துக்கொல்வார்கள்."
மாணவர்களின் தமிழ் மொழி அறிவு கண்டு எனக்கு பெரிய அதிர்ச்சி. இவர்களிடம் இருமொழிக்கொள்கை, மும்மொழிக்கொள்கை என்று நடக்கும் அரசியலை எப்படி புரியவைப்பது? தாய் மொழியே இந்த அழகு என்றால் மற்ற மொழிக்கற்றல், பயன்பாடு எந்த அழகில் இருக்கும்?
பெருந்தொற்று காலத்தில் கற்றலின் தொடர்ச்சி அறுந்து போனதால் உருவான நிலைமையா இது? 2 வருடத்திற்கும் மேல் கற்றலில் ஏற்பட்ட தொடர்ச்சியின்மை, திரை வழி கற்றல், மெய் நிகர் வகுப்பறை, திறன் பேசி பெருக்கம் மாணவர்களை இவ்வாறு ஆக்கிவிட்டதா?
ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் அனைவரும் தங்களது திறன் பேசியில் கோலம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். அது Instagram, Whatsapp, Snap Chat, Youtube என்று பல செயலிகள் வழியாக அவர்களின் நேரத்தை 15 நொடிகளாக திருடிக்கொண்டிருக்கிறது.
மாணவர்கள் துப்பாக்கி சத்தம் அதிகம் கேட்கும் வெவ்வேறு விளையாட்டுகளை நாளெல்லாம் ஆடுகின்றனர். உண்மையில் ஒரு துப்பாக்கியை கூட தொட்டு பார்த்திராத இவர்கள் பல துப்பாகிகளின் பெயர் சொல்கின்றனர். Video game விளையாடுவதையே செயற்கரிய காரியம் செய்து விட்டது போல் நம்பிக் கொண்டுள்ளனர். அதை விளையாடி மன நலம், உடல் நலம் அனைத்தையும் இழந்து கொண்டிருக்கின்றனர்.
அப்படியென்றால் 2K Kids மிக நவீனமான பாமரர்கள் மட்டும் தானா?
தொழில்நுட்பம் அன்றாட வாழ்கையில் வாசிக்க, எழுத வேண்டிய தேவை இல்லாமல் செய்து விட்டது. நீங்கள் யாருக்கும் கடிதம் எழுத வேண்டாம், யாரும் உங்களுக்கு எழுதிய கடிதத்தை வாசிக்கவும் வேண்டாம். Whatsappல் audio message அனுப்பினால் போதும்.
Voice command வழி எழுதும் செயலிகள் உள்ளன. Voice search வழி call செய்வது முதல் youtube video வரை தேடி எடுக்கலாம். இதை இன்று 5 வயது குழந்தை கூட செய்கிறது. இதனால் பரீட்சைக்கு வெளியே எழுத வேண்டிய தேவை இல்லாமல் ஆகிவிட்டது. இணைய வழி கொள்குறி வினா (Objective Type) முறைக்கு மாறி விட்டால் எழுதவும் தேவை இல்லாமல் ஆகும்.
எதையும் வாசிக்க வேண்டியதில்லை, அது அவசியமற்றது மற்றும் நேர விரயம் என்கிற ஆழமான (மூட)நம்பிக்கை தமிழ் சமூகத்தில் எப்போதும் உள்ளது. இவர்கள் Youtubeல் காணொளிகளை கண்டு அதில் சுருக்கமாக சொல்லப்படும் தகவல்களை வைத்து பரீட்சை எழுதிக் கொண்டிருக்கின்றனர்.
அப்படி எழுதி தேறினாலும், பட்டம் வாங்கிய உடன் என்ன ஆட்சியர் வேலையா கிடைத்துவிடும்? அவர்கள் ஆட்சியர் பணிக்கெல்லாம் கனவு காணவில்லை.
சொந்தமாக ஒரு வரி கூட எழுத படிக்க தெரியாத மாணவர் ஒருவர் தன்னம்பிக்கை மிளிர சொன்னார் "2 லட்சம் கொடுத்தா _______ factoryல வேலை வாங்கி தருவாங்க சார், அது central government factory சார்" அவர் தொடர்ந்தார் "3 லட்சம், 4 லட்சத்துக்குலாம் வேலை இருக்கு சார், அது எங்க ஊர்ல இருந்து ரெம்ப தள்ளி இருக்கிற இடங்கள்ல இருக்கு, அதனால இதை பேசி வச்சிருக்கோம். Degree pass பண்ணா போதும் சார்."
நான் கேட்டேன் "நீங்க ரெண்டு லட்சம் தரும் இடத்தில் வேறு ஒருத்தர் 2 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தால் வேலையை அவருக்கு கொடுத்து விடுவார்களே?"
"அப்படியெல்லாம் செய்ய மாட்டாங்க சார், ஒரு முக்கிய பிரமுகர் கூட மாமா touchல இருக்கார், இந்த வேலைகள் எங்க ஊருக்கு தான்னு fix பண்ணி வச்சிருக்காங்க"
"எல்லாம் சரி, நீங்க அதுக்கு degree pass பண்ணனுமே?"
"ஆமா, சார் எப்படியாவது pass பண்ணனும் சார்."
இப்படி தெளிவான திட்டம் வைத்திருக்கும் இந்த 2K kid வகுப்பிற்கு வெறுங்கையை வீசிக்கொண்டு வந்து விட்டு செல்கிறார்.
"தம்பி பெரிய பண்ணையாரா இருப்பீங்க போலையே? உங்க அப்பா என்ன செய்றாங்க?"
"அப்பா கிடையாது, சார்."
நான் அரண்டு விட்டேன். "என்ன தம்பி சொல்றீங்க, என்ன ஆச்சு?"
"எனக்கு ஒரு வயசா இருக்கும் போதே தவறிப்போய்ட்டார் சார், எனக்கு எதுவும் நியாபகம் இல்லை."
பையனின் அம்மா சத்துணவு கூடத்தில் சோறாக்கி போட்டு இவனை படிக்க வைக்கிறார். அவனுடைய அக்கா Nursing படித்து விட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றுகிறார். இவர் இதையெல்லாம் உணர்ந்து கொண்டு நடப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. நான் வழக்கமான ஆசிரியராக மாறி அடுத்த கேள்வியை கேட்டேன்.
"ஏம்பா, நீ இது எதை பத்தியும் கவலைப்படாம இப்படி இருக்கியே?" என்றேன்.
பையன் மந்தகாசமாக புன்னகைத்து கொண்டிருந்தான்.
***
No comments:
Post a Comment