Sunday 18 February 2018

Marshland - சதுப்புவெளி புதிர்

நேர்த்தியான மர்மக்கதைகள் எப்போதும் பார்வையாளர்களை தன்னை நோக்கி இழுத்து விடும். 2014ம் ஆண்டு வெளியான Spain நாட்டு திரைப்படமான Marshland அப்படி ஒரு தனித்துவமான Crime, Thriller வகை படம்.

வருடம் 1980. Spain அப்போது தான் சர்வாதிகாரத்தில் இருந்து ஜனநாயகம் நோக்கி அடியெடுத்து வைக்கிறது. இந்த மாறுதல் காலத்தில் நிகழ்வது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

சில உதாரணங்களை சொல்கிறேன்.

சமீபத்தில் வெளியான Atomic Blonde என்ற Hollywood திரைப்படம் Berlin சுவர் இடிப்பை ஒட்டி நடைபெறுவது போல அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண கதைக்கு இப்படி வரலாற்று பின்புலம் அமையும் போது அது அக்கதைக்கு மேலும் அடர்த்தியையும் பல கோணங்களையும் கொண்டு வருகிறது.

Pan's Labyrinth என்கிற Spain நாட்டு Fantasy திரைப்படத்தின் கதை 1940களில் நடக்கிறது. அதன் இணைக்கோடாக ஒரு மாயாஜால கதையை பின்னி ஒரு மாய யதார்த்த படத்தை எடுத்திருந்தார் பிரபல இயக்குனர் Guillermo Del Toro.

Tarantinoவின் Kill Bill, Inglourious Basterds, Django Unchained படங்களை Revenge Action படங்கள் என்று சொல்லலாம். ஆனால் முறையே ஜப்பானிய தற்காப்புக்கலை, ஹிட்லரின் ஜெர்மனி மற்றும் 19ம் நூற்றாண்டு மேற்கு அமெரிக்கா என்று அத்திரைப்படங்களின் பின்னனி அவற்றை சிறப்பான படங்கள் ஆக்குகிறது தானே!

அது போலவே இங்கே Marshland படத்தின் பின்னணி குறித்து Spain நாட்டின் அன்றைய சமூக, அரசியல், பொருளாதார நிலைமையை தொட்டு அது எப்படி இக்கதை நிகழ்வதற்கான காரணிகளை வழங்குகிறது என்று விவாதிக்க முடியும்.

தென் கொரிய படமான Memories of Murder, David Fincher இயக்கிய Zodiac போன்ற படங்களுக்கு மிக நெருக்கமான படமாகவே Marshland இருக்கிறது. ஒரே இயக்குனர் இயக்கி இருந்தால் இது ஒரு Trilogy ஆகியிருக்கும்.

Spainல் உள்ள Andalucia பகுதியில் Carmen, Estrella என்ற இரண்டு இளம் பெண்கள் காணாமல் போக அதை விசாரிக்க Juan மற்றும் Pedro அங்கே வருகிறார்கள்.

Juan, வயது 45 மதிக்கலாம். சராசரிக்கும் கொஞ்சம் குறைவான உயரம். கூர்மையான பார்வை, அடித்து தான் விசாரிக்க வேண்டும் என்றால் அடித்து தான் விசாரிப்பார். Pedro, வயது 30 இருக்கலாம். கர்ப்பிணி மனைவியை மாட்ரிட் நகரில் விட்டுவிட்டு இங்கே வேலைக்கு வந்திருக்கிறார்.

Juan ஒரு சர்வாதிகார ஆதரவாளர். ஆனாலும் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார். இதை அவ்வப்போது Pedro விடம் சுட்டிக்காட்டுகிறார். Pedro ஒரு நவீன மற்றும் ஜனநாயக விரும்பி. ஆனாலும் நாட்டில் பெரிதாக ஒன்றும் மாறிவிடவில்லை என்பதை படம் முழுவதும் உணர்கிறார்.

காணாமல் போன Carmen மற்றும் Estrella வின் பெற்றோர், தோழிகள் என்று விசாரணையை தொடங்குகிறார்கள். ஊரில் உள்ள அத்தனை இளம் பெண்களும் அந்த சதுப்பு நிலத்தை விட்டு வெளியேறினால் போதும் என்று திரும்ப திரும்ப சொல்கின்றனர். அந்த ஊரின் மேயர் அறுவடை நெருங்குகிறது அதற்கு தொந்திரவு இல்லாமல் விசாரணையை முடியுங்கள் என்கிறார்.

இந்நிலையில் காணாமல் போன இருவரின் சடலமும் சதுப்பு நிலத்தில் ஒதுங்கி கிடக்கிறது.  சித்திரவதை செய்யப்பட்டு கொடூரமான முறையில் உயிர் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டிருக்கிறது என்று post mortem அறிக்கை சொல்கிறது.

Juan, Pedro இருவரும் தடயங்களை வைத்து விசாரணையை தொடர்கிறார்கள். ஏற்கனவே இது போல மர்மமான முறையில் தன்னுடைய காதலி இறந்ததை Juan மற்றும் Pedro விடம் ஒருவன் சொல்கிறான். அதை மேலும் விசாரிக்கிறார்கள் சந்தேகத்திற்குரிய நபர்களை தொடர்கிறார்கள்.

இறந்து போன மற்றும் காணாமல் போன பெண்களுக்கு இடையில் இருக்கும் ஒற்றுமையை கவனிக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் ஊரில் உள்ள ஒரு இளைஞனின் காதல் வலையில் விழுந்தவர்கள் என்பது சந்தேகத்தை அவன் பக்கம் திருப்புகிறது.

ஆனாலும் உறுதியான ஆதாரம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க முடியாமல் மேலும் தேடுகிறார்கள்.

எத்தனை தொழில்நுட்ப சாதனங்கள் வந்தாலும், அறிவியல் வளர்ந்தாலும் அதை பயன்படுத்தி பெண்களை ஏமாற்ற, மிரட்ட என்று உலகம் முழுவதும் ஆட்கள் உண்டு என்பது இங்கே காட்சிப்படுத்தப்படுகிறது. வாழ்க்கையில் உழைத்து மேலே வர நினைக்கும் பெண்களை உதவும் இடத்தில் இருக்கிறேன் என்று காட்டிக்கொண்டு ஏமாற்றும் நயவஞ்சகர்கள் எங்கும் உண்டு.

காணாமல் போன, கொலை செய்யப்பட்ட பெண்களின் வீடு, அவர்களின் உறவினர்கள், அவர்களிடம் உள்ள அந்த பெண்களின் பொருட்கள் என அனைத்தையும் சேகரித்து எது இந்த பெண்களை இந்த ஊரை விட்டு போக தூண்டியது என்று கண்டு பிடிக்கிறார்கள்.

கிராமத்து பழங்குடி, நிலப்பிரபுத்துவ மனநிலையில் உள்ள பெற்றோர், சுற்றத்திடம் இருந்து விலகி சென்று ஒரு நவீன, ஜனநாயக தன்மை உடைய வாழ்க்கையை தேடிக்கொள்வதே இந்த பெண்களின் விருப்பம். அதை அவர்கள் அடையும் முயற்சியில் என்ன தவறு நிகழ்ந்தது என்பதையே நாம் திரையில் காண்கிறோம்.

படம் துவங்கியத்தில் இருந்து இருந்து இறுதிக்காட்சி வரை காட்சிகளின் துல்லியம் பிரமிக்க வைக்கிறது. Birds Eye View காட்சிகள் அனேகம் உண்டு. முதல் காட்சியில் மனிதனின் மூளை, கைரேகையை தான் காட்டுகிறார்கள் என்று யூகிக்க ஆரம்பிக்கும் போது அதன் மீது பறவைகள் பறந்து செல்ல பின்னர் தான் நிலக்காட்சியை தான் நாம் பார்த்து கொண்டிருக்கிறோம் என்கிற பிரமிப்பு ஏற்படுகிறது.

ஒரு பறவைக்கோண காட்சியில் நதியில் நங்கூரமிட்டிருக்கும் பெரிய படகில் இருந்து பிரிந்து ஒரு சிறிய படகு செல்கிறது. நீரின் மீது அனைத்தும் மீனாகி விட்ட அற்புதமான காட்சி அது.

நடிகர்களின் தேர்வும் கச்சிதம். இப்படம் Hollywood ல் எடுக்கப்பட்டால் Juan கதா பாத்திரத்திற்கு முதல் தேர்வு Al Pacino வாகவே இருக்க முடியும். Juan ன் நடிப்பு Al Pacino வை பிரதி எடுத்தது போல் இல்லாமல் அவரை நினைவு படுத்துவது போல் இருக்கிறது. இதில் Juanன் கடந்த காலம் அவருடைய நிகழ் காலத்தில் பாதிப்பு செலுத்துவதையும் நேர்த்தியாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்.

Pedro வாக நடித்திருக்கும்  நடிகர் ஒரு சாயலுக்கு Sean Penn போல இருக்கிறார். நடிப்பும் பிரமாதம். பின்னர் உள்ளூர் playboy கதா பாத்திரம், Juan மற்றும் Pedro விற்கு உதவும் Jesus, படகில் வைத்து குறி சொல்லும் பெண், லாட்ஜில் வேலை செய்யும் பெண், இறந்து போன பெண்களின் அம்மா மற்றும் தோழியின் கதா பாத்திரத்தில் நடித்திருக்கும் பெண்கள் என மிக சிறப்பான நடிகர் தேர்வும் இப்படத்திற்கு பெரிய பலம்.

படத்தின் சூழலுக்கு ஏற்ப பின்னணி இசை, கதை நிகழும் நிலத்தில் உள்ள பறவைகள், பூச்சிகளின் சத்தம் படம் முழுதும் நிரம்பியிருக்கிறது.

Marshland விருதுகளை குறி வைத்து எடுக்கப்பட்ட படமல்ல. வணிக லாபத்தை கணக்கில் வைத்து எடுக்கப்பட்ட பொழுதுபோக்கு, கேளிக்கை சினிமா தான். படத்தின் பின்புலமும் அதை திரையில் நிகழ்த்திகாட்டிய விதமுமே இதை ஒரு shelf life உள்ள படமாக மாற்றுகிறது.

Wednesday 7 February 2018

A Man Called Ove - ஆதிப்பண்பு


நீங்கள் Oscar Wilde எழுதிய The Selfish Giant என்ற சிறுகதையை பள்ளியிலோ, கல்லூரியிலோ படித்திருக்கிறீர்களா?

Clint Eastwood இயக்கி நடித்த Million Dollar Baby, Gran Torino போன்ற திரைப்படங்களை?

David Lynch இயக்கிய The Straight Story திரைப்படத்தை?

இந்த வரிசையில் குரோசோவா இயக்கிய Ikiru படத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

The Selfish Giant மற்றும் மேலே சொல்ல பட்ட திரைப்படங்களில் வரும் மைய கதாபாத்திரங்களுக்கு மிக நெருக்கமான குணாம்சமுடைய ஒரு கதாபாத்திரம் தான் A Man Called Ove படத்தில் வரும் Ove.

Clint Eastwood அவர்களை மனதில் வைத்து எழுதப்பட்ட கதா பாத்திரம் என்றே தோன்றும் அளவிற்கு Gran Torino படத்திற்கும் இதற்கும் அத்தனை ஒற்றுமை உண்டு.

Ove 60 வயதை நெருங்கி விட்ட ஒரு ரயில்வே ஊழியர். ஒரு perfectionist. சமரசம் என்ற வார்த்தைக்கு அவர் வாழ்க்கையில் இடமில்லை. கொஞ்சம் misanthrope போலவும் தெரிகிறார். அதாவது மனிதர்களையே அவருக்கு பிடிப்பதில்லை. மனைவியும் இறந்து விட தனிமையில் வசிக்கிறார்.

சாவி கொடுத்த கடிகாரம் போல சீராக ஓடிக்கொண்டிருக்கும் அவர் வாழ்க்கையில் ஒரு மாற்றம் வருகிறது. இந்த மாற்றத்தை விரும்பாத அவர் 'போதும்' என்ற முடிவை எடுக்கிறார். எடுத்த முடிவை செயல்படுத்தும் முயற்சியில் தனது பால்யம், பதின்பருவம், காதல் என்று அனைத்தையும் நினைத்து பார்க்கிறார்.

இந்நிலையில் வேண்டா வெறுப்பாக அருகே குடியேறியவர்களுக்கு சிறிய உதவிகளை செய்கிறார். ஈரான் நாட்டில் இருந்து வந்து குடியேறிய Lavandeh என்ற 30 வயது பெண் அவருடைய அத்தனை அரண்களையும் பொருட்படுத்தாமல் தனக்கு வேண்டிய உதவியை கேட்டு பெறுகிறாள். நிறை மாத கர்ப்பிணியான அவளது இரண்டு பெண் குழந்தைகள் Ove விடம் அன்பை கொட்டுகிறார்கள்.

ஒரு மனிதரை அவருடைய அத்தனை குறைகளுடன் ஏற்றுக்கொள்வது தான் அவரை நேசிப்பதற்கான தொடக்கம் என்று சொல்வார்கள். Lavandeh மற்றும் அவரது மொத்த குடும்பமும் Ove விடம் உள்ள அத்தனை obsession, பிடிவாதம், முரண்டு என்று எதையும் பொருட்படுத்தாமல் அன்பை காட்ட மனிதர் கொஞ்சம் இறங்கி வருகிறார்.

இதற்கிடையில் அவருடைய தினசரி கடமைகளை கிரமமாக செய்கிறார். மனைவின் கல்லறையில் பூச்செண்டு வைப்பது. அருகில் அமர்ந்து கொண்டோ அல்லது புல் தரையில் படுத்துக்கொண்டோ வாழ்க்கையில் நடப்பதை பேசுவது என்று கொஞ்சம் நேரம் செலவு செய்கிறார். அவரின் மனைவி  பள்ளி ஆசிரியராக இருந்தவர் என்பதால் அவர் முரண்படும் நபர்கள் அவரின் மனைவியிடம் படித்தவர்கள் என்று சொன்னால் தனது பிடிவாதத்தை கொஞ்சம் விட்டுக்கொடுக்கிறார்.

தேசப்பற்று மற்றும் கார்களை வைத்து மிக சுவாரசியமான பகுதி ஒன்றும் படத்தில் உண்டு.

மனிதர்கள் பிறக்கும் போதே உறுதி செய்யப்பட்ட குணங்களுடன் பிறப்பதில்லை. அவர்கள் வாழும் சூழல், சுற்றி இருக்கும் மனிதர்கள் ஒவ்வொரு மனிதனின் ஆளுமை உருவாக்கத்தில் பெரிய பாதிப்பை செலுத்துகிறார்கள். A man is a product of his environment என்று சொல்வார்களே! ஏதோ ஒரு அசம்பாவிதம் மனிதர்களை உள்ளுக்குள்ளே சுருங்க செய்து விடுகிறது. எதை பற்றியும் எதற்கு கவலை பட வேண்டும்? யாரையும் சாராமல் வாழ வேண்டும். தன்னை யாரும் எந்த தொந்திரவும் செய்ய கூடாது என்று இறுகி விடுகிறார்கள்.

பின்னர் புயல் மழை ஓய்ந்து வெயில் வருவது போன்ற ஒரு நாளில் சக மனிதர்கள் இல்லாமல் யாரும் வாழ்ந்து விட முடியாது என்று புரிய தங்களை கொஞ்சம் மாற்றி கொள்ள முன் வருகிறார்கள்.

உலகம் ஒரு கிராமமாக சுருங்கி விட்டது என்று பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். ஆனால் முன்னெப்போதும் விட இப்போது மனிதர்கள் தனிமையில் வாடுகிறார்கள். போர், பஞ்சம், வேலைவாய்ப்பு என்று நாடு விட்டு நாடு அகதியாக, ஊழியராக இடம் பெயருகிறார்கள்.

இந்நிலையில் கிணற்று தவளை குணம் மாறிவிடுவது இல்லை. எங்கே சென்றாலும் அங்கே ஒரு கிணற்றை வெட்டி 'என் மொழி, என் கலாச்சாரம், என் மக்கள்' என்று இருந்து விடுகிறார்கள். ஆனால் இந்த உலகம் கிராமமாக சுருங்கிய இந்த நூற்றாண்டில் நாம் மொழி, இனம், தேசம் கடந்து ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ கடமைப்பட்டிருக்கிறோம். அப்படி ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து, சார்ந்து வாழாவிட்டால் இந்த பூமியில் வாழவே முடியாது என்று அ. முத்துலிங்கம் அவர்களின் ஆதிப்பண்பு கதையில் வரும் Newfoundland, Canada வை சேர்ந்த பூர்வ குடிமகன் சொல்வார்.

A Man Called Ove படத்தில் அந்த ஆதிப்பண்பு Ove விடம் மீண்டும் உயிர்பெறுவதையே நாம் காண்கிறோம்.

பி.கு

திரைப்படங்களை பற்றி பேசும் போது அது புத்தகங்களை பற்றியும் மேலும் பல படங்களை பற்றியும் பேசுவதிலும் சென்றே முடிகிறது.

இங்கே அறிமுகப்படுத்தப்படும் படத்தை பற்றி முடிந்த அளவிற்கு spoilers இல்லாமலேயே சொல்ல முயற்சிக்கிறேன்.

படத்தை பார்த்துவிட்டு நீங்கள் மேலும் தேடி படத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்த அறிமுகங்களின் நோக்கம்.