Thursday 14 November 2019

Parasite - பாதாள உலகம்

ஆய்த எழுத்து படத்தில் பாரதி ராஜா நடித்த அரசியல் வாதி கதா பாத்திரம் இந்தியா ஏன் வடக்கு பக்கம் வீங்கியும் தெற்கு பக்கம் சுருங்கியும் இருக்குன்னு தெரியுமா? என்று கேட்கும். அது வரை படத்தின் கோளாரோ பூகோள கோளாரோ அல்ல. பொருளாதார கோளாறு என்று ஒரு தர்க்கத்தை சொல்லும். 

ஆனால் கொஞ்சம் விவரம் அறிந்தவர்களுக்கு தெரியும். நான்கு தென்னக மாநிலங்களும் பல வகையிலும் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட பல மடங்கு சிறந்தவை என்று. இந்த நான்கு மாநிலங்கள் கட்டும் வரியில் பெரும்பகுதி வட இந்திய மாநிலங்கள் நலனுக்கு செலவிடப்படுகின்றன என்பதை பார்த்தால் அந்த அரசியல் வாதி கதா பாத்திரம் சொல்வது உண்மை தானோ என்றும் தோன்றும்!

2019ம் ஆண்டில் உலகமே பொருளாதார சரிவை சந்தித்துக்கொண்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன. திருப்பூர் பின்னலாடை, வாகன உற்பத்தி தொழில் நசிந்து விட்டதாக அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. அரசாங்கம் Reserve வங்கி பணத்தை எடுத்து செலவழிப்போம், முதலீடு செய்வோம் என்று சொல்கிறார்கள். விதை நெல்லை எடுத்து விதைக்கலாம், விற்று திங்கப்போகிறேன் என்றால் என்ன அர்த்தம்? என்று எந்த ஊடகமும் கேட்கவில்லை. 

வேலை இழந்தவனின் நிலை என்ன? அவனுடைய குடும்பத்தின் நிலை என்ன? அவர்கள் சேமிப்பு எத்தனை நாள் அவர்களை காப்பாற்றும்? இப்படி வேலையில்லாத ஒரு குடும்பத்தலைவர், அவருடைய குடும்பத்தை பற்றிய கதையே Parasite என்னும் South Korea திரைப்படம். 

 Snow Piercer, Okja என்று இரண்டு சர்வதேச படங்களை இயக்கி விட்டு மீண்டும் ஒரு முழுநீள Korean படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் Bong. இவருடைய Memories of Murder உலக பிரபலம். Hollywoodற்கு இரண்டு படங்களை எடுத்திருந்தாலும் அதில் அவர் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை. அதனாலேயே அந்த படங்கள் Studio முதலாளிகளால் பெரிய அளவிற்கு விளம்பரம் செய்யப்படவில்லை என்று நினைக்கிறேன். Netflix காக Okja எடுத்து Netflix Cinema  trendஐ தொடங்கியவரும் இவர் தான். 

Parasite என்பது இங்கே ஒன்று/ஒருமை அல்ல. ஒற்றை மைய கதா பாத்திரத்தை சுற்றி எடுக்க பட்ட படமல்ல. ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் அவர்கள் பிழைப்பிற்காக செய்யும் தகிடு தத்தங்கள் தான் படம். 

கொரியா அல்லது உலக அளவில் உள்ள சமூக ஏற்றத் தாழ்வு என்பது எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை படத்தில் காணும் நாம் கொஞ்சம் அரண்டு தான் போவோம். 

படத்தின் முதல் காட்சியில் wifi தேடி வீட்டின் மூலை முடுக்கெல்லாம் அலைகிறான் Kevin. அப்பா சொல்லும் யோசனையை தொடர்ந்து Toilet இருக்கும் அறையில் wifi கிடைப்பதை கண்டு பிடிக்கிறான். 

இந்தியாவில் data மிக மலிவாக கிடைப்பதாக பிரதான சேவகன் புருடா விட்டுக்கொண்டிருக்கிறார். அதற்கு பின்னால் உள்ள அரசியல் என்றாவது ஒரு நாள் வெளியே வரத்தான் போகிறது. Parasite படத்தில் எல்லோரும் நல்ல phone வைத்திருக்கிறார்கள் ஆனால் data card போட பணம் இல்லை அல்லது இருக்கும் பணத்தை அதற்கு செலவழிக்க முடியாது என்னும் நிலை. 

இப்படி பொருளாதார மந்த நிலை ஏற்படுவதற்கு காரணம் என்ன? அடித்தள மக்கள் மிக அதிக பட்ச உடல் உழைப்பை அளித்தும் ஏன் அவர்களின் பொருளாதார நிலை தலைமுறைகளாக மாற்றம் இல்லாமல் இருக்கிறது? அம்பானி, அதானி வாழும் இதே நாட்டில் தான் நாமும் வாழ்கிறோம் ஆனால் கடந்த 30 ஆண்டுகளில் அவர்களின் சொத்து மதிப்பு எத்தனை மடங்கு வளர்ந்திருக்கிறது நம்முடைய சொத்து மதிப்பு எத்தனை உயர்ந்திருக்கிறது? அப்படியென்றால் நாம் உழைக்க வில்லையா? பணம் வைத்திருப்பவரிடம் மேலும் பணம் சேரும் இந்த பொருளாதார அமைப்பு யாருடைய ஏற்பாடு? 

கால் காசு வருமானமாக இருந்தாலும் கவர்மெண்ட் காசு ஆக இருக்க வேண்டும் என்று ஒரு மக்கள் மொழி உண்டு. இந்தியா போன்ற நாட்டில் அரசு வேலைகளை மக்கள் பெரிதும் விரும்புவதற்கு காரணம் அதில் உள்ள உத்திரவாதம், சலுகைகள் தான். பணியின் போது உயிரை விட்டால் குடும்பத்தில் வேறொரு நபருக்கு பணி வழங்கப்படும். இது போல நிறைய. 

தனியார் துறையில் வேலைக்கு உத்திரவாதம் இல்லை. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டியது தான். இது எதுவும் இல்லாமல் கொத்த வேலை, சமையல் வேலை என்று இது போல ஆயிரக்கணக்கான வேலை செய்பவர்கள் வெறும் உதிரிகள் ஆக்கப்படுகிறார்கள். போதிய வருமானம், சேமிப்பு எதுவும் இல்லாமல் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக அவர்கள் வாழ்க்கை அமைந்து விடுகிறது. 

Parasite படத்தில் இப்படி வறுமையில் இருக்கும் குடும்பம் கிடைத்த வேலையை செய்துகொண்டு காலம் தள்ளிக்கொண்டிருக்கிறது. அதில் இளைய மகனுக்கு ஒரு பணக்கார வீட்டு பெண்ணிற்கு ஆங்கிலம் சொல்லித்தரும் வாய்ப்பு நண்பனின் மூலமாக கிடைக்கிறது. வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளும் Kevin அந்த வாய்ப்பை குடும்பத்தின் வாய்ப்பாக மாற்றுகிறான். 

இது போன்ற கதை தமிழ் சினிமாவில் கூட வந்திருக்கிறது. எனக்கு Borgman என்ற ஐரோப்பிய சினிமாவும் நினைவிற்கு வந்தது. Kevinனின் குடும்பம் பொய் சொல்லாமல், நேர்மையாக தான் வாழ வேண்டும் என்றால் பட்டினியால் தான் சாக வேண்டும். இங்கே அவர்கள் சில பொய்களை சொல்லி வருமானத்திற்கு வழி செய்கிறார்கள். சில சதிகளை செய்து வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள். 

நம்மூரில் Caste Conflict பற்றி மட்டுமே பேசுகிறோம். ஆனால் இப்போது அதை விடவும் Class Conflict தான் அதிகம். நம்புவதற்கு கொஞ்சம் கடினமாக தான் இருக்கும். ஒரு சூப்பர் மார்க்கெட், ஜவுளி கடை, தொழிற்சாலை வைத்திருக்கும் முதலாளி அவருடைய சாதி ஆட்களை வேலைக்கு வைப்பார் ஆனால் சமமாக மதிக்க மாட்டார். எக்காரணம் கொண்டும் அவருடைய பண வசதியை விட குறைவான வசதியுடைய தன்னுடைய சாதியில் திருமண உறவை ஏற்படுத்திக்கொள்ள மாட்டார். 

மேலே செல்ல செல்ல சாதி இல்லை என்பார்கள் ஆனால் நுட்பமாக இந்த class conflict இருந்து கொண்டு தான் இருக்கும். அது பல வகைகளில் வெளிப்படும். Parasite படத்தில் அது காணக்கிடைக்கிறது. பணக்கார வீட்டின் நால்வரும் Kevin வீட்டை சேர்ந்த நால்வருக்கும் இடையில் வரும் முரண்பாடுகள் அதை காட்டிக்கொண்டே இருக்கின்றன. 

Kevin வீட்டை சேர்ந்த நால்வரும் எத்தனை நடித்தாலும் அவர்களிடம் உள்ள சில விஷயங்களை மாற்ற முடியவில்லை. இதில் அதிகம் பாதிக்கப்படுவது Kevinனின் தந்தை தான். அவர் ஏழை தான் ஆனால் அவருக்கு இருக்கும் ஒரு fine sensibility தொடர்ந்து அவமதிக்கப்படும் போது அவர் தன்னிலையை இழந்து விடுகிறார். 

இந்த Class Conflict என்பது உணவு, பழக்க வழக்கம், ரசனை, பயன்படுத்தும் மொழி, ஏன் perfume வரை நீள்கிறது. இது ஒரு வகையான நவீன தீண்டாமை. Branded பொருட்கள் மட்டுமே பயன்படுத்துவோர் vs இந்த பொருளுக்கு இவ்வளவு தான் செலவு செய்ய முடியும், இந்த பொருளுக்கு பணம் செலவு செய்ய முடியாது என்று வாழ்வோர் என்று ஒப்பிட்டு பார்க்கலாம். 

Parasiteல் அவல நகைச்சுவை அல்லது அபத்த நகைச்சுவை காட்சிகள் அபாரமாக அமைந்துள்ளன. கரப்பான், எலி போன்ற உயிரினங்கள் மனிதர்கள் நடமாட்டம் குறைந்த உடன் சுதந்திரமாக தெருக்களில், வீடுகளில் வலம் வரும். அது போல Kevin குடும்பத்தை சேர்ந்த நால்வரும் ஒரு இரவில் கூடி அரட்டை அடிக்கும் போது அவர்களுடைய பகற்கனவுகள் என்னென்ன என்பதை பகிர்ந்து கொள்கிறார்கள். 

இப்படி சுதந்திரமாக உலாவும் கரப்பான், எலி போன்றவை மனித காலடி சத்தம் கேட்டவுடன் ஓடி ஒளிந்து கொள்ளும். அவற்றின் மறைவிடத்தை அத்தனை எளிதில் கண்டு பிடிக்க முடியாது. அது போன்ற ஒரு மறைவிடம் தான் Parasite படத்தின் இரண்டாம் பாதியை ஒரு surrealistic படமாக மாற்றுகிறது.

Parasite என்று நாம் Kevin குடும்பத்தை மட்டும் அழைக்க முடியாது. அவர்கள் வேலை பார்க்கும் Park குடும்பமும் ஒரு வகையில் Parasite குடும்பம் தான். இவர்கள் எந்த அளவிற்கு அவர்களை சார்ந்து வாழ்கிறார்களோ அதே அளவிற்கு அவர்கள் இவர்களை அல்லது உழைக்கும் மக்களை சார்ந்து வாழ்கிறார்கள். 

கடன் வாங்கி திருப்பி செலுத்தாத நபர்களை Debtor's Prisonல் அடைத்ததாக British History படிக்கும் போது தெரிய வருகிறது. எனக்கு தெரிந்த யாரும் கடனை செலுத்தாமல் சிறைக்கு சென்றது இல்லை ஆனால் மல்லையா போன்ற நபர்கள் கடனை திருப்பி செலுத்தாமல் சொகுசு வாழ்க்கையில் நீடிக்கிறார்கள் என்பது கண்கூடு. 

Kevin குடும்பத்தின் ஆதார சிக்கல் Kevinன் தந்தை கடன் வாங்கி செய்த தொழில் தோற்று போனதில் தான் இருக்கிறது. ஆனால் அரசு மற்றும் வங்கிகள் இப்படி குருங்கடன் வாங்கியவர்களிடம் காட்டும் கண்டிப்பை பெருங்கடன் வாங்கியவர்களிடம் காட்டுவதில்லை. Reserve வங்கி பணத்தை எடுத்து மேலும் கடன் கொடுக்கவும் தயாராக உள்ளனர்.  

இப்படி பல விஷயங்களை விவாதிக்க இடைவெளி உள்ள படம் Parasite. இந்த அரசியல், பொருளாதார ஏற்றத்தாழ்வு, வர்க்க பேதம் என்று விவாதிக்க தெரியாத ஒரு சினிமா பிரியர்க்கு மிகவும் பிடித்த படமாக இருப்பதற்கான அத்தனை சுவாரசியமான அம்சங்களும் படத்தில் உள்ளன.

Thursday 24 October 2019

என்ன சத்தம் இந்த நேரம்?!

ஒரு மூன்று அல்லது நான்கு நாட்களாக எனது ஹோண்டா வண்டியில் இருந்து ஒரு கீச்சொலி சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. முதலில் மழையில் நனைந்த பிறகு disc brake உராயும் சத்தம் தான் என்று நினைத்தேன். ஆனால் வண்டி சும்மா நிற்கும் போதும் அந்த சத்தம் கேட்க ஆரம்பித்ததால் கொஞ்சம் கலவரமடைத்தேன்.

அன்டன் செக்கோவ் எழுதிய Gooseberries கதையின் இறுதியில் கதை சொல்லியின் நண்பன் சுருட்டில் இருந்து எழும் புகை தொந்திரவு செய்ய அந்த புகைமணம் எங்கே இருந்து வருகிறது என்று தெரியாமல் தூங்க முடியாமல் உழன்று கொண்டிருப்பான்.

என்னுடைய வண்டியில் இருந்து கேட்க ஆரம்பித்த அந்த கீச்சொலி நாலாவது நாளில் என் தூக்கத்தை கெடுக்க ஆரம்பித்திருந்தது.

முதலில் வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது தான் அந்த சத்தத்தை கவனித்தேன். நிச்சயம் disc brake எழுப்பும் ஒலி தான் என்று நினைத்தேன். ஏற்கனவே இது போல ஒரு முறை சத்தம் கேட்க அதை service centreக்கு எடுத்து சென்று சரி பார்த்திருந்தேன்.

மதியம் மொத்த ஊரும் அரை மயக்கத்தில் இருக்கும் போது வண்டியை வீட்டின் முன் நிறுத்தி விட்டு காலணிகளை கழட்டி கொண்டிருக்கும் போது அந்த சத்தம் மீண்டும் வந்தது. எப்போதும் என்ஜினை அணைத்த பிறகு நெருப்பின் மேல் அல்லது சூடாக இருக்கும் இரும்பின் மேல் நீர் சொட்டு தொடர்ந்து விழுந்தால் எழும் சத்தம் போல ஒரு சத்தம் வரும். அது என்ஜின் கொஞ்சம் கொஞ்சமாக தனது சூட்டினை இழக்கும் சத்தம்.

இந்த சத்தம் அதுவல்ல. மழையில் நனைந்த பிறகு வயரிங் பிரச்சினையில் வண்டி ஒலிப்பான் தான் அப்படி சத்தம் கொடுக்கிறதோ என்று யோசித்தேன்.

எதுவாக இருந்தாலும் உடனே பழுது பார்க்கும் இடத்திற்கு கொண்டு போக மனம் தயாராகவில்லை. ஒரு வேளை காட்டு பாட்ச்சா எனப்படும் கருப்பு நிற விட்டி அல்லது grass hopper வண்டியின் உள்ளே எங்கோ மாட்டிக்கொண்டு சத்தம் போட்டு கொண்டிருக்கிறது என்று நினைத்தேன்.

ஒரு சிறு மழை பெய்து நின்றாலே எங்கள் வீட்டிற்கு மிகப்பெரிய அளவில் பூச்சி பட்டாளம் படையெடுத்து வரும். அதில் ஏதோ ஒன்று தன்னுடைய வழியில் இருந்து தவறி வண்டியினுள் ஏறி இப்போது வெளியேற வழி தெரியாமல் சத்தம் போட்டு உதவிக்கு ஆள் தேடுகிறது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

வேலைக்கு செல்லும் போது வண்டியை நிறுத்தி விட்டு போகும் இடத்தில் நிறைய மரங்கள் உண்டு. செடி செத்தைகள் முளைத்து கிடக்கும். அதில் இருந்து தேரை போன்ற உயிரினம் ஏதேனும் ஏறியிருக்க வாய்ப்பு உண்டு தான். தவளை எப்படி கத்தும் என்று நமக்கு தெரியும். ஆனால் தேரை இப்படி சத்தம் போட வாய்ப்பு உண்டு என்று நானே கற்பனை செய்தேன்.

மேலும் எங்கள் வீட்டில் ஒரு தேரை வாழ்கிறது. அது 9 மணிக்கு மேல் இரை தேட கிளம்பி தாவிப்பறந்து வீட்டின் பின்னால் இருக்கும் சிறிய அளவினால செடிகள், கறிவேப்பிலை மரம் இருக்கும் இடத்திற்கு செல்லும். காலையில் 5 மணிக்கு மீண்டும் தன்னுடைய பதுங்கு குழிக்கு அதாவது வராண்டாவில் போட்டு வைத்திருக்கும் பல அட்டை பெட்டிகளில் ஒன்றிற்க்கு திரும்பி விடும். அதை சமீபத்தில் கண்ணில் காணவில்லை. அதனால் அது தான் சத்தம் கொடுக்கிறது என்று சமாதானம் செய்து கொண்டேன்.

பாம்பு ராணி (இதற்கு ஆங்கிலத்தில் skink என்று பெயர்) எனப்படும் பல்லி வகை உயிரினம் ஒன்றும் எங்கள் வீட்டு முற்றத்தில் அடிக்கடி நடமாடும். வண்டியில் இருந்து எழும் சத்தம் உறுதியாக பாம்பு எழுப்பும் சத்தம் அல்ல என்று நன்றாக தெரியும். வாலில் இருந்து சத்தம் எழுப்பும் வகை பாம்புகள் இந்தியாவிலே அரிது. அதானால் பாம்பு எதுவும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் பாம்பு ராணி? அது நாக்கை நீட்டி கரப்பான் பூச்சியை பிடித்து சாப்பிடுவதை பார்த்து இருக்கிறேன். ஆனால் அது பல்லி போல சத்தம் எழுப்புமா? அது எழுப்பும் சத்தம் எப்படி இருக்கும்? தெரியாது.

எனது அப்பா ஒரு வாரத்திற்கு முன் தான் முற்றத்தை சுத்தம் செய்து எறும்பு, பூச்சிகள் வராமல் இருக்கு மருந்து பொடியை போட்டு வைத்தார். அதன் பிறகு தேரை, பாம்பு ராணி இரண்டும் கண்ணில் படவில்லை. மருந்து வாடை ஆகாமல் வேறு இடம் தேடி போயிருக்க வேண்டும். இரண்டில் ஏதோ ஒன்று எனது வண்டியினுள் ஏறி இருந்தால்?

இந்த வாரம் கொஞ்சம் வேலைப்பளு அதிகமாகிவிட்டது.  அப்படி என்ன வேலை என்று கேட்டால் அதற்கான பதிலில் அந்த வேலையினால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை என்பது தெளிவாகும்.

வேலையில் இருந்து திரும்பிய பிறகு வண்டியை மீண்டும் எடுத்துக்கொண்டு வெளியே செல்வது "லஜ்ஜை பிடிச்ச" வேலை. நான் வேலைக்கு சென்று வரும் நேரம் காக்கிகள் ஓய்வெடுக்கும் நேரம். அதனால் தலைக்கவசம் பற்றி கவலை இல்லாமல் சென்று வருவேன்.

மாலையில் கவசம் அணிந்து அந்த 150 கிலோ வண்டியில்  மார்கெட், பஜார் என்று எங்காவது சென்று வரவேண்டுமென்றால் அந்த நினைப்பே அயர்ச்சி தரக்கூடியது. வண்டியை நிறுத்துவதும், எடுப்பதும் கூட்டம் நிறைந்த இடத்தில் அத்தனை எளிதல்ல.

மழை பெய்து சாலையை மூடியிருந்ததால் மிக கவனமாக செல்ல வேண்டும். எங்கே எத்தனை பெரிய குழி தோண்டியிருக்கிறார்கள் என்று யாருக்கு தெரியும்.

மழைக்காலம் முடியவும் service விடும் போது பார்த்துக்கொள்ளலாம் என்று நாட்களை தள்ளிப்போட்டு கொண்டேஇருந்தேன். இப்படி சத்தம் எழுப்பும் உயிரினம் எத்தனை நாள் உணவில்லாமல் வாழும்? அதுவே உயிரை விடட்டும் என்று கூட நினைத்தேன். ஆனாலும் அந்த சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக என்னை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தது.

சனிக்கிழமை காலையில் அந்த சத்தத்தை எனது அப்பாவும் அம்மாவும் கேட்டனர். அப்போ இது பிரமை இல்லை. நானாக கற்பனை செய்து கொள்ளவில்லை. வீட்டில் உள்ளவர்களுக்கும் அந்த சத்தம் கேட்கிறது. எனது அப்பா வண்டியை அங்குமிங்கும் தட்டி விட்டு சீட்டின் கீழ் இருந்து தான் சத்தம் வருகிறது என்றார்.

நான் அந்த சீட்டை கழட்டுவதே கிடையாது. Service விடும் நாட்களில் அவர்கள் கழட்டி சோதித்தால் தான் உண்டு. அதன் உள்ளே ஒன்றும் வைக்க முடியாது. வண்டியுடன் கொடுத்த spanner set, first aid kit இருக்கும். RC Book, Insurance Copyயை வைக்கலாம் தான். ஆனால் காக்கிகள் நிறுத்தி அந்த நேரத்தில் சீட்டை கழட்ட முடியவில்லை என்றால் அவர்கள் தரும் உபதேசத்தை கேட்க நேரும் என்பதால் அதை petrol tank கவரில் தான் வைத்திருக்கிறேன்.

இதற்கு மேல் காத்திருக்க கூடாது என்று வண்டியை எடுத்துக்கொண்டு பழுதுபார்க்கும் கடைக்கு சென்றேன். வழக்கம்போல பழுதுபார்க்கும் தம்பி கடையில் இல்லை. ஒரு scooty கிட்டதட்ட மொத்த வண்டியும் பிரிக்கப்பட்டு கிடந்தது. சரி சாயங்காலம் பார்ப்போம் என்று கிளம்பி வந்து விட்டேன்.

வீட்டிற்கு வந்த பிறகு நானே சாவியை சீட்டின் கீழ் உள்ள சாவி துவாரத்தில் செலுத்தி சீட்டை கழட்ட முயற்சி செய்தேன். பின்னர் திருப்பு உளி (screw driver தான்) கொண்டு இரண்டு screwஐ கழட்டினேன். அது சீட்டிற்கு கீழ் உள்ள battery guard பகுதி. அந்த screwவை எடுத்த பிறகும் battery guard பகுதியை தனியே எடுத்து சீட்டிற்கு கீழ் பார்க்க முடியவில்லை.

வீட்டின் அருகில் இருக்கும் அக்கா வீட்டிற்கு சென்று மச்சானிடம் விஷயத்தை சொன்னேன். அவர் Mechanical Engineering படித்தவர். இரு மாப்ள வாறேன் என்றவர் நீ இங்கே வண்டியை எடுத்துட்டு வாயேன் என்று சொல்லி விட்டார். வண்டியை எடுத்து கொண்டு அங்கே சென்றேன். அவரும் முயற்சி செய்து விட்டு பழுது பார்க்கும் கடைக்கு போவோம் என்று அழைத்துச்சென்றார்.

அங்கே சென்றவுடன் அந்த mechanic மச்சானிடம் வாங்க அண்ணே என்றார். வண்டியை காமித்து சத்தம் வருகிறது என்றவுடன் நீண்ட நாட்கள் ஒரே இடத்தில் நின்றதா என்றார். பின்னர் சாவியை சீட்டின் கீழே உள்ள துவாரத்தில் செலுத்தி திருக்கி சீட்டின் மேல் தனது பலம் அனைத்தும் திரட்டி ரெண்டு தட்டு தட்டினார். இடது கையில் கம்பு வைத்திருந்தார். பெருச்சாளி அல்லது எலி ஏதும் இருக்க வாய்ப்பு உண்டு என்றார்.

அவர் வளர்க்கும் இரண்டு நாய்கள் வண்டியை வட்டமிட ஆரம்பித்தன. ஏய் பொட்ட அங்கிட்டு போ என்று நாயை விரட்டினார். சீட்ட எடுக்கட்டுமா என்று நிமிர்த்தினார். உள்ளே மென்மையாக மாற்றப்பட்ட தேங்காய் நார் கொண்டு அணில் கூடு கட்டி வைத்திருந்தது. நான் திகைத்து விட்டேன். தினம் பயன்படுத்தும் வண்டி தானே?! ரெண்டு நாள் சும்மா நின்றாலே அதிகம்.

வெயில் நேரே விழவும் கூட்டின் உள்ளே இருந்து கீச்சொலி எழுந்தது. இந்த கீச்சொலி எத்தனை கற்பனை செய்ய வைத்தது! நாய் வண்டியை சுற்றியது. விரைவில் அப்புறப்படுத்தாவிட்டால் நாய் கவ்வி விடும் என்று அவர் சொன்னார். கூட்டின் உள்ளே மூன்று அணில் குஞ்சுகள் இருக்கிறது என்று மச்சான் சொன்னார்.

மச்சான் தன்னுடைய கையில்  அந்த கூட்டை மெல்ல எடுத்தார்.  அருகில் நின்றவர் ஒரு carry bag எடுத்து அதை கூட்டிற்கு அடியில் வைக்க சொல்லி பிடிக்க சொன்னார். மச்சான் அது போலவே செய்து இரண்டு கையில் கூட்டை ஏந்தியபடி நின்றார். வண்டியை தினம் நிறுத்துமிடத்திற்கு சென்று விட்டு விடலாம் என்று நான் சொன்னேன். பின்னர் வேண்டாம் காக்கிகள் நிறுத்தினால் கையில் licence கூட இல்லை என்று அருகில் ஏதாவது மரத்தில் வைப்போம் என்றேன்.

நானும் அவரும் அங்கே இருந்து கிளம்பினோம். எப்படி இது நடந்தது? இந்த கூட்டை அமைக்க அதற்கு எத்தனை நாள் ஆகியிருக்கும்? இந்தகுட்டிகளை ஈன்று விட்டு அது எங்கே சென்றது? நான் வண்டியை வீட்டிற்கு எடுத்து வந்த பின்னர் அது ஓடி ஓடித்தேடியிருக்கும் தானே? அங்கே எத்தனை வண்டிகள் தினம் நிற்கின்றன அது ஏன் என் வண்டியை தேர்ந்தெடுத்தது? இப்படி பல கேள்விகள். அனைத்திற்கும் பதில். தெரியாது!

நாய், காக்கா என்று எதுவும் அண்டாமல் மரத்தில் வைக்க வேண்டும். வீட்டின் அருகே இருக்கும் மாடன் கோவிலில் ஆல மரங்களுண்டு. அங்கே வண்டியை விட்டேன். அணில்கள் சத்தம் நிறைய கேட்டது. நான் குஞ்சு அணில்களை அதிகம் பார்த்தது இல்லை. மச்சானிடம் ஒரு முறை கையை தாழ்த்த சொல்லி நன்றாக பார்த்தேன். கண் திறக்காத 3 குஞ்சுகள். கீச்சொலி.

மச்சான் நல்ல உயரம். அவர் உயரம் எட்டும் இடத்தில் கூட்டை வைத்தார். கீழே விழுந்து விடாதே என்றேன். அதெல்லாம் விழாது மாப்ள என்றார். கூட்டை வைத்த கிளையில் இருந்து மேலே பிரிந்து செல்லும் இன்னொரு கிளையில் இருந்து ஒரு அணில் தலை கீழாக நின்றபடி என்னை பார்த்தது.

Tuesday 22 October 2019

நாடக மேடை


காட்சி 1

கல்லூரி இயக்குனரின் அறை/பகல்/உள்ளே
ஒரு சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய வருடம் தொடங்கி ஒரு வாரத்தில் இயக்குனர் அறையில் ஒரு கூட்டம்.
முதலாமாண்டு மாணவர்கள் கல்லூரியில் நடைமுறையில் இருக்கும் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்ற புகாரை முன்வைத்து இயக்குனரும் அனைத்து துறை தலைவர்களும் விவாதிக்கிறார்கள்.
இயக்குனரின் குளிரூட்ட பட்ட அறையில் அவர் rolling chairல் அமர்ந்து இருக்கிறார். அவருடைய மேசையை சுற்றி இதர துறைத் தலைவர்கள் அமர்ந்து இருக்கின்றனர். இயக்குனரின் வலது பக்கம் மடிக்கணினி ஒன்று இருக்கிறது. இயக்குனரக்கு எதிராக இடது மூலையில் கல்லூரியின் CCTV set up இருக்கிறது. 32 inch LCD TV, அதில் மொத்த கல்லூரியையும் இயக்குனர் கவனித்து கொண்டு இருக்கிறார்.

இயக்குனர்: இந்த HOD meeting எதுக்கு போட்டு இருக்கேனா, நேத்து நம்ம BBA Dept HOD சாக்ரடீஸ் கிட்ட பேசும் போது சொன்னப்பல இந்த மாதிரி IT Dept படிக்கிற பசங்க நாலு பேரு jeans pant போட்டு வந்தாங்களாம், சார் கூப்பிட்டு கேட்டதுக்கு எனக்கு அதை பத்தி ஒண்ணும் தெரியாது, எனக்கும் யாரும் சொல்லலை அப்டின்னு சொல்லிருக்காங்க. Handbookல உள்ள rules and regulations படிச்சு பாக்கலையா அப்டின்னு கேட்டதுக்கு அது Englishல இருக்கு ஒண்ணும் புரியலை அப்டின்னு சொல்லிட்டு போயிருக்காங்க.

அலங்காரநாயகி (ஆடை வடிவமைப்பு மற்றும் அலங்கார துறைத்தலைவி அதாவது Costume Designing and Fashion Technology): Sir, எங்க departmentla நம்ம college rulesஅ strictஅ implement பண்றோம் Sir. நேத்து அந்த நாலு பேருல ரெண்டு பேர் என் கண்ணுல பட்டாங்க, கையோட கூட்டிட்டு போய் officeல fine கட்ட வச்சிட்டேன்.

நல்லசிவம் (வணிகவியல் துறைத்தலைவர்): Sir, இப்ப வந்துட்டு பாத்தீங்கன்னா, Junior Staff எல்லாம் Senior Staffஐ கண்டா wish பண்றதே இல்லை. இந்த rules implement பண்றதுல senior staffக்கு help பண்றதும் இல்லை. Studentsகிட்ட strictஅ பேச பயப்படுறாங்க.

பாரதி தேவி (கணிப்பொறி அறிவியல் துறைத்தலைவி): எங்க departmentல நாங்க எல்லாரும் ladies staff அப்டிங்கிறதால நாங்க பொம்பள பிள்ளைங்க சுடிதார்  shawl 'V shape' வச்சி ஒழுங்கா மடிச்சி போடாட்டி fine வாங்கிட்டு ஒரு apology எழுதி வாங்கிருவோம்.

சகுந்தலா (புள்ளியியல் துறைத்தலைவி): எத்தன வாட்டி சொன்னாலும் lateஅ தான் வாறாங்க, Sir.

சங்கர் (மின்னணுவியல் துறைத்தலைவர்): எங்க departmentல தினம் 10 பேராவது apology எழுதி குடுத்திட்டு தான் இருக்கான்.

தமிழரசி(ஆங்கிலத்துறை தலைவி): நாங்க dress code follow பண்ணாதவங்க கிட்ட class incharge மூலம் fine வாங்குறோம்.

IT துறைத்தலைவி எதை பேசி இந்த பிரச்சினையை திசை திருப்பலாம் என்று அமைதியாக அறையில் உள்ளவர்கள் பேசுவதை நோட்டமிடுகிறார்.

காட்சி 2

கல்லூரி இயக்குனரின் அறை/பகல்/உள்ளே

அலங்கார: Sir, முன்னாடி மாதிரி இல்ல Sir, தினம் ஒரு styleல  முகத்துல தாடி வச்சிட்டு வாறான் Sir. தலைமுடில tail விட்டுட்டு அதை Shirt Collarல ஒளிச்சு வைக்கிறான்.

நல்லசிவம்: எங்க deptல நானே ரெண்டு பேருக்கு தலைல இருந்த tailஅ வெட்டி விட்ருக்கேன்.

சாக்ரடீஸ்: கைல கலர் கலரா band, கயிறு எல்லாம் கட்டிட்டு வாறாங்க. வளையம் போட்டுட்டு வாறாங்க. கழுத்துல வித விதமா சங்கிலி வேற, இதெல்லாம் ஏன் போட்ருக்கேன்னு கேட்டா இதுல என்ன Sir இருக்குன்னு திருப்பி கேள்வி கேக்குறான் Sir.

நல்லசிவம்: சட்டைல மேல உள்ள button கழட்டி விடுறான். ஒரு ஆள் பாத்து சொல்ற வரை அதை மாட்டுறதே இல்லை.

அலங்கார: நம்ம Uniform implement பண்ணலாம் Sir. Engineering, Polytechnic Colleges, ஏன் Govt Arts and Science College கூட Uniform follow பன்றாங்க Sir.

இயக்குனர் (இது வரை நாடியில் கீழ் இரண்டு கையை கோர்த்து அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த இயக்குனர், சிரித்து கொண்டே) : அது ரெம்ப சின்ன பிள்ளைத்தனமா இருக்கும் மேடம். அய்யாவுக்கு ஒரு விருப்பம் இருக்கு, அவரு Schoolக்கு Uniform supply பண்றவங்க நல்ல Professional Model uniform இருக்கு, Collegeக்கு பாக்கறீங்களா அப்டின்னு கேட்டாங்களாம், அய்யா இப்போதைக்கு வேண்டாம்னு சொல்லிட்டாங்க. Lady Staffக்கு Over Coat, Gent Staff எல்லாம் daily White Shirt போட்டா நல்லா இருக்கும்னு அய்யா நினைக்கிறாங்க.

நல்லசிவம்: Sir, பசங்க ஆளும் கட்சி MLA மாதிரி Transparentஅ சட்டை போட்டு வாறாங்க Sir. அவன் உள்ள போட்ருக்க பனியன் கலர் வெளிய தெரியுது. Pocketல கடன் வாங்கியாவது 500 ரூவா தாள் ஒண்ணு வச்சிட்டு வாறான்.

சங்கர்: மறுபடி ஒரு meeting போட்டு studentsக்கு மறுபடி rules and regulations பத்தி சொல்லணும் Sir.

சகுந்தலா: ஆமா Sir.

பாரதி தேவி: ஆமா Sir, Girlsக்கு தனியா, Boys க்கு தனியா meeting போடணும் Sir. First Year பொண்ணுங்க shawlஅ வித விதமா போட்டு வாறாங்க.

சாக்ரடீஸ்: எங்க deptல shawl ஒழுங்கா இல்லாட்டி நானே வெளிய அனுப்பி ஒழுங்கா V shapeல போட்டுட்டு வர சொல்வேன்.

தமிழரசி திரு திரு என்று முழித்து கொண்டு எதை பேசலாம் என்று யோசித்து கொண்டு இருக்கிறார். எதையாவது பேசி இயக்குனரிடம் பாராட்டு வாங்க வேண்டும் என்ற வெறியுடன் மூளையை கசக்கி கொண்டு இருக்கிறார்.

நல்லசிவம்: Sir, நாலு மணிக்கு college விட்டு வெளிய போன உடனே அவன் கைல phone இருக்கு, எப்படின்னு கேட்டா அண்ணன் வந்து குடுத்தார்னு சொல்றான்.

சாக்ரடீஸ்: வாரம் ஒரு தடவை Cell Phone check பண்ணணும் Sir.

தமிழரசி (பேச விசயம் கிடைத்த மகிழ்ச்சியில்): பொண்ணுங்களை தனியா கூட்டு போய் check பண்ணனும் Sir.

பாரதி தேவி, சகுந்தலா தலையை வேகமா மேலும் கீழுமாக அசைத்து ஆமோதிக்கிறார்கள். IT துறைத் தலைவி notepadல் எழுதுவது போல பாவனை செய்கிறார்.
காட்சி 3

கல்லூரி இயக்குனரின் அறை/பகல்/உள்ளே

சங்கர்: Gent Staffக்கு வேணா வாரத்துல ஒரு நாள் White and White வச்சிக்கலாம் Sir. Principal Sir தினமும் போட்டு வாறார். நாம ஒரு நாள் try பண்ணலாம். அய்யாவும் சந்தோச படுவாங்க.

இது வரை இப்படி ஒருவர் அறையில் இருக்கிறார் என்பது தெரியாத அளவுக்கு இருந்த தமிழ்த்துறை தலைவர் எட்வர்ட் நிமிர்ந்து பார்த்து மனதுக்குள் சிரித்து கொள்கிறார். கல்லூரியில் தமிழ் மொழிப்பாடம் மட்டுமே. இளங்கலை தமிழ் கிடையாது.

Principal மாதம் 1.25 லட்சம் சம்பளம் வாங்கி, driver போட்டு காரில் வந்து போகிறார், அவரு white and white போடலாம், அஞ்சுக்கும் பத்துக்கும் சொம்பு தட்டுற நமக்கு இது தேவையா??!!( சுயநிதி கல்லூரி தமிழ் ஆசிரியரின் Mind Voice)

சாக்ரடீஸ்: பசங்கள இப்பவே coach up பண்ணாட்டி பிறகு வேலைக்கு போற இடத்தில கஷ்டப்படுவான் Sir.

நல்ல சிவம்: சட்டைல pocket மேல, முதுகுல எல்லாம் என்னென்னமோ எழுதிருக்கு. ஒழுங்கா plain கலர் shirt and pant இல்லாட்டி decentஅ checked இந்த மாதிரி போட்டு வர சொல்லணும். Socrates sir சொல்ற மாதிரி இப்பவே training கொடுக்கணும். அப்போ தான் interviewக்கு போகும் போது ஒழுங்கா dress பண்ணிட்டு போவான்.

தமிழரசி: நாங்களும் final year studentsக்கு Spoken English training குடுத்திட்டு தான் Sir இருக்கோம்.

நல்லசிவம்: அப்புறம் யார் phone கொண்டு வந்து மாட்டுனாலும் முதல்ல அவன் FB, Whatsapp எல்லாத்தையும் check பண்ணனும் Sir.

பாரதி தேவி: அடுத்த தடவை handbookல நம்ம college students social networking use பண்ணக்கூடாதுன்னு ஒரு rule add பண்ணனும் Sir.

சாக்ரடீஸ்: CCTV cover பண்ணாத இடமா பார்த்து அங்க போய் வாயில hans வச்சிட்டு வாறான் அதனால பசங்க கூடுற எல்லா இடத்தையும் CCTV கண்காணிப்புல கொண்டு வரணும் Sir.

நல்லசிவம்: Bath roomல அசிங்க அசிங்கமா எழுதி வைக்கிறான், அங்க ஒரு camera சும்மா வச்சாலும் போதும் இதெல்லலாம் குறைஞ்சிரும் Sir.

சாக்ரடீஸ்: Classல கூட மாட்டலாம் Sir, benchல தல, தளபதின்னு எழுதி வைக்கிறான்.

பாரதி தேவி: பிள்ளைங்களும் எழுதுறாங்க.

சங்கர்: Students meeting போட்ட கையோட Junior Staffக்கு ஒரு meeting போட்டு management போடுற rulesக்கு co operate பண்ணி தான் ஆகணும் அப்டின்னு சொல்லணும்.

காட்சி 4

கல்லூரி இயக்குனரின் அறை/பகல்/உள்ளே

இயக்குனர்: இப்ப வார பசங்களுக்கு நம்ம college ஓட அருமை தெரியல. அவங்களுக்கு நீங்க எடுத்து சொல்லுங்க. நம்ம college ஓட பாரம்பரியம், நம்ம செயலர் அய்யா எவ்வளவு முக்கியமான ஆளு. அவரு எந்த அளவுக்கு punctual, disciplined அப்டின்னு அவங்களுக்கு சொல்லி புரிய வைங்க.

தமிழரசி: கண்டிப்பா Sir.

சகுந்தலா: அப்ப இன்னைக்கு மதியமே meeting போட்டு சொல்லிடலாமா Sir?!

இயக்குனர்: போட்டு சொல்லுங்க மேடம்.

நல்லசிவம்: பசங்களுக்கும் கையோட meeting போட்டு சொல்லிடுறோம் Sir.

இயக்குனர்: செய்ங்க சார்.

சாக்ரடீஸ்: Dress Code follow பண்ணாட்டி first time warning, second time fine, third time Suspend பண்ணுவோம்ன்னு சொல்லுறோம் Sir.

இயக்குனர்: பண்ணுங்க சார், நாளப்பின்ன வேலைக்கு போற இடத்துல எல்லாத்துக்கும் மண்டைய ஆட்டிட்டு வேலை பாக்க போறான், அத இப்ப இருந்து செய்யிறதுல என்ன பிரச்சினை?!! Management theoryல பாத்தீங்கன்னா எல்லாரையும் திருப்தி படுத்த முடியாதுன்னு சொல்வாங்க ஆனா முயற்சி பண்ணி பாக்குறதுல என்ன தப்பு?!! ஒரு complacency, satisfaction வந்திருச்சுன்னா அப்புறம் growth இருக்காது அதனால தொடர்ந்து Work பண்ணிக்கிட்டே இருக்கணும். கீழ்ப்படிய கற்றுக்கொள் தலைமைப்பதவி தேடி வரும்ன்னு விவேகானந்தர் சொல்லி இருக்கார். அதெல்லாம் இந்த பசங்களுக்கு புரிய வைக்கணும்.

எல்லோரும் தலையை மேலும் கீழுமாக அசைத்து ஆமோதிக்கிறார்கள்.

காட்சி 5

கல்லூரி இயக்குனரின் அறை/பகல்/உள்ளே

இயக்குனர்: நீங்க எதுவும் சொல்ல போறீங்களா, மாலதி மேடம்.

மாலதி (Office Superintendent aka கங்காணி): சார், நிறையா staff attendanceல மாத்தி மாத்தி கையெழுத்து போடுறாங்க, officeல இருந்து intercomல கூப்பிட்டு ஒரு வேலை சொன்னா response பண்ண நேரம் ஆகுது. Junior Staff ஒருத்தரும் ஒழுங்கா ஒரு வேலையும் செய்ய மாட்டேங்காங்க.

இயக்குனர்: இன்னைக்கு எல்லாத்துக்கும் meeting போட்டு ஒரு முடிவு பண்ணிடுங்க. அப்புறம் junior staff எல்லார்கிட்டயும் opposite gender  students கிட்ட  கொஞ்சம் பார்த்து பழக சொல்லுங்க. Classroom தவிர்த்து என்ன பேசனும்னாலும் துறையில வச்சி தான் பேசணும்னு சொல்லுங்க.

                    ***The End***