இரு சக்கர வாகனங்கள் மீது மோகம் இல்லாத இளைஞன் உலகில் உண்டா? இரு சக்கர வாகனத்தில் நெடும்பயணம் போக வேண்டும் என்று ஒவ்வொரு இளைஞனும் தனது வாழ்வில் ஒரு முறையாவது நினைத்திருப்பான். அப்படி தன் நண்பனுடன் மேற்கொண்ட பயணத்தின் விளைவாக தான் Ernesto Guevara "Che" Guevara வாக பரிணமிக்கிறார். அவருடைய லத்தீன் அமெரிக்க பயணம் The Motorcycle Diaries எனும் நூலாக வெளிவந்து இன்றும் அதிகம் வாசிக்கப்படும், விற்கப்படும் புத்தகங்களில் ஒன்றாக உள்ளது.
Motorcycle பயணம் பற்றிய மற்றுமொரு மிகப்பிரபலமான புத்தகம் Zen and The Art of Motorcycle Maintenance. உலகெங்கும் நெடிய Motorcycle பயணம் செய்யும் கலாச்சாரம் இந்த புத்தகத்தால் உருவானது தான்.
இந்த புத்தகத்தை எழுதிய Robert M. Pirsig சொல்கிறார் "In a car you’re always in a compartment, and because you’re used to it you don’t realize that through that car window everything you see is just more TV. You’re a passive observer and it is all moving by you boringly in a frame.
On a cycle the frame is gone. You’re completely in contact with it all. You’re in the scene, not just watching it anymore, and the sense of presence is overwhelming.”
Motorcycle பயணம் ஒரு ஆன்மீகமான அனுபவத்தை தரவல்லது என்பது அவருடைய துணிபு. ஆனால் இந்த பின்புல வாசிப்பு எதுவும் இல்லாமல் காட்சி ஊடகம் வழியாக அறிந்தவற்றை கொண்டு அதை போலி செய்யும் வகையில் bike ஓட்டுபவர்களை என்ன செய்வது? இவர்களில் சிலர் லடாக் மாதிரியான இடங்களுக்கு கூட பயணம் செய்து வருகின்றனர். பயணத்தின் போதே புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் தங்களை விளம்பரம் செய்து கொண்டு செல்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் சந்தையில் வாகனம் விற்கும் வேகமும், வாகனத்தின் வேகமும் பல மடங்கு அதிகரித்துள்ளது. 2010ம் ஆண்டு 100cc திறன் கொண்ட Splendor வாங்க வேண்டும் என்றால் நீங்கள் 2 மாதம் காத்திருக்க வேண்டும். ஆனால் இன்று எண்ணற்ற வாகனங்கள் சந்தையில் உள்ளன. 2010ல் 50ஆயிரம் ரூபாய்க்கு விற்ற வண்டி இன்று 1 லட்சம் ரூபாய்க்கு மேல் விலை வைத்து விற்கப்படுகிறது.
இன்று சராசரியாக 150cc திறன் கொண்ட வண்டிகளையே மாணவர்கள், இளைஞர்கள் அதிகம் வாங்குகிறார்கள். 250cc, 350cc வாங்குபவர்கள் எண்ணிக்கை மிகவிரைவாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அது போலவே விபத்துகளும்.
தூத்துக்குடி போன்ற ஒரு மாநகரத்தில் தோண்டப்படாத ஒரு அங்குல இடம் கூட மிச்சம் இல்லை. கடந்த 50 ஆண்டுகளாக இந்த ஊரில் எங்கேனும் தோண்டிக்கொண்டு தான் இருக்கிறார்களாம். பத்திரிக்கையில் மின் பராமரிப்பு பணிக்காக மின் வெட்டு குறித்த அறிவிப்பு வருவது போல சாலை எங்கே தோண்டப்பட்டு கொண்டிருக்கிறது என்கிற அறிவிப்பு வெளியிட வேண்டும் என்கிற அளவில் நிலைமை மோசமாக உள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் வாகன எண்ணிக்கை உயர்ந்த அளவிற்கு சாலை வசதிகள் சீரமைக்க படவில்லை. சாலைகள் பெரிதாக வில்லை, புதிய வேகத்தடைகளும், அதிகமான போக்குவரத்து siganalகளுமே உருவாகி உள்ளன. முக்கியமாக இரு சக்கர வாகனங்களுக்கு தனி lane அமைக்கப்படவில்லை. இருக்கும் ஒரே சாலையில் அனைத்து வாகனங்களும் போட்டி போட்டு, முட்டி மோதி சென்று கொண்டிருக்கின்றன.
இத்தகைய சூழ்நிலையில் Gen Z தலைமுறையான ஈராயிர குழவிகள் (2k kids) சாலை சம்மந்தமான எந்த அறிதலும், சாலையில் பின்பற்ற வேண்டிய குறைந்த பட்ச விதிகள், நாகரீகம், கலாச்சாரம் எதுவும் தெரியாமல் மிக அதிகமான cc திறன் கொண்ட வண்டியை கொண்டு Circus கூண்டுக்குள், மரணக்கிணற்றுக்குள் ஓட்டுவது போல் நினைத்து வாகனத்தை செலுத்துகின்றனர்.
80களில் பிறந்த பலருக்கும் சொந்த இரு சக்கர வாகனம் என்பது ஒரு கனவு. அது வேலைக்கு சென்ற பின்பே 99 சதவீதம் பேருக்கு சாத்தியமானது. அன்றெல்லாம் வகுப்பிற்கு ஒரு மாணவரிடம் bike இருந்தால் அதிகம். அன்று எந்த பெற்றோரும் கடன் பெற்று வாகனம் வாங்கித்தர துணியவில்லை. மேலும் வாகனம் என்பது இடம் Aவில் இருந்து இடம் Bக்கு செல்வதற்கான ஒரு கருவி மட்டும் தான். அது அதிக mileage தர வேண்டும். எரிபொருள் சிக்கனம் அவசியம்.
இன்று நிலைமை தலைகீழ். Mileage இருக்காது என்கிற காரணத்தால் விற்காமல் கிடந்த Yamaha company வண்டிகள் இன்று அதிகம் விற்கின்றன. தீனி போட முடியாது என்று சொல்லப்பட்ட Royal Enfield வண்டிகள் புதிய வாகனங்களை 6 மாதத்திற்கு ஒரு முறை அறிமுகப்படுத்துகின்றன.
கடன் அன்பை முறிக்கும் என்பது சுலப தவணை என்பதாக மாறியிருக்கிறது. சராசரி ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு கீழே உள்ளவர்கள் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வண்டியை தம் பிள்ளைகளுக்கு வாங்கித் தருகிறார்கள். ஒரு 18 வயது பையன் அவன் வயது நண்பர்கள் மத்தியில் பந்தா செய்வதற்காக 2 லட்ச ரூபாய் கடனாளி ஆகிறான்.
இப்படி உருவான கடனை அடைப்பதற்கு பகுதி நேர வேலைக்கு செல்கின்றனர். அதில் வரும் வருமானம் காணாமல் போகவே மேலதிக வாய்ப்புகளை தேடுகின்றனர். இதன் கடைசி பகுதியாக படிப்பில் ஆர்வத்தை இழந்து நோக்கமில்லாமல் சுற்றித் திரிகின்றனர்.
Gig economy உருவாக்கும் வேலை வாய்ப்பு கானல் நீர் போன்றது. வெயில் இறங்கிய உடன் காணாமல் போய் விடும். இதன் உபவிளைவான நுகர்வு வெறி கடனாளிகள் எண்ணிக்கையை அதிகரித்து இருக்கும். 2020ம் ஆண்டு பொங்கலுக்கு வண்டி வாங்கிய பலர் அதை தீபாவளி வரை கூட பயன்படுத்த இயலாமல் வண்டி வாங்க கடன் கொடுத்த நிறுவனத்திடமே திரும்ப கொடுத்துவிட்டனர்.
மனிதன் நுகர்வால் ஒரு போதும் மன அமைதி அடைவதில்லை. இன்று நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் 6 மாதத்தில் பழையவை என்று சொல்லப்பட்டு அதன் அடுத்த வடிவம் (version) சந்தைக்கு வருகிறது. 2 லட்சம் ரூபாய்க்கு மேல் கொடுத்து bike வாங்கிய மறுநாள் அடுத்த version அறிமுகம் செய்யப்பட்டால் பழைய வண்டியை வாங்கிவிட்டதாக 2k kid நினைக்கிறார்.
2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வண்டியை 50 ஆயிரம் முன்பணம் கொடுத்து வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த முன்பணம் முழுவதும் வட்டி கணக்கில் வைக்கப்படும். அசல் தொகை 2 லட்சத்திற்கு அவர் மாதம் 5000 தவணை கட்ட வேண்டும் என்றால் அதுவே 40 மாதங்கள் வரும். இதற்குள் கல்லூரி படித்து முடித்திருப்பார். பட்டம் வாங்கியிருப்பாரா என்பது வேறு கட்டுரைக்கான கேள்வி.
ஒரு 18 வயது பையன் மாதம் தவணை கட்டுவதற்கு 5000 ரூபாய் சமபாதிக்க வேண்டும் என்றால் அவருக்கு கல்வியில் கவனம் குவியுமா? உணவு, உறக்கம் மறந்து கல்வி கற்று அகவயமாக தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டிய வயதில் புறவயமான சுகங்களுக்காக தன்னுடைய நேரத்தை கொடுப்பார் என்றால் கல்வி கற்பதில் அவருடைய ஈடுபாடு எந்த அளவில் இருக்கும்?
அவர் வெற்றிகரமாக கல்வி கற்று வேலைக்கு சேர்ந்தாலும் ஒரு கலை, அறிவியல் பட்டதாரிக்கு அதிக பட்ச ஆரம்ப சம்பளம் மாதம் 15000ல் இருந்து தான் தொடங்கும். இந்த சம்பளத்தில் அவர் தவணை கட்டியது போக மீதியை குடும்பத்திற்கும், கொஞ்சம் சேமிப்பிற்கும் ஒதுக்குவார் என்றால் பிழைத்துக்கொள்வார். தான் ஏன் ஒரு i Phone வாங்கக்கூடாது? என்று நினைத்தால் அவர் காலத்துக்கும் உழைத்து EMI கட்டும் model வாழ்க்கைக்கு தன்னை ஒப்புக்கொடுகிறார்.
இது வரை வண்டியை வாங்காதவர்கள் வண்டி வாங்க முன்பணம் செலுத்த வேலைக்கு செல்கின்றனர். வண்டி வாங்க வேண்டும் என்கிற வெறியில் பணம் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வகுப்பிற்கு மட்டம் போடுகின்றனர். கல்வியில் இல்லாத peer pressure பொருட்களை அடைவதில் ஏற்பட்டிருக்கிறது.
வண்டியின் அடிப்படை தேவை இங்கே மறக்கப்பட்டு அது மிக நவீனமான, வேகமான கருவி என்பதாக மாறிவிடுகிறது. Petrol, maintenanceக்கு ஆகும் செலவு என எதையும் கணக்கிலெடுக்காமல் வண்டியை வாங்கிய அவர் ஓரிரு மாதங்களிலேயே விழி பிதுங்க ஆரம்பித்து விடுவார்.
எத்தனை வேகமாக செல்லக்கூடிய வண்டியாக இருந்தாலும் நாம் வாழும் ஊரில் அதில் அதிகபட்சம் 40ல் தான் செல்ல முடியும். 5 gear உள்ள வண்டியில் நகரத்திற்குள் நீங்கள் 4வது gearக்கு மேல் பயன்படுத்த தேவை இருக்காது. பின்னர் எதற்கு இத்தனை விலை கொடுத்து அதிகமான திறன் கொண்ட வண்டியை வாங்குகிறார்கள்?
2K kids வண்டியை சாலையில் வண்டியை செலுத்தும் விதம் பலரின் ஆழ்மனதில் புதைந்துள்ள கெட்ட வார்த்தைகளை வெளியே கொண்டு வரக்கூடியது.
ஒரு 2K Kid status வைக்கிறார்"ஒரு Bike இருந்தா பல பொண்ணு கிடைக்கும் ஆனா ஒரு பொண்ணு இருந்தா பல bike கிடைக்குமா?" எனக்கு தெரிந்து இந்த மாதிரி பையன்களை பெற்ற அம்மாக்களே அவன் பின்னால் வண்டியில் செல்ல துணிவதில்லை.
பொதுமைப்படுத்தி அனைவரையும் இப்படித்தான் என்று சொல்ல முடியுமா என்றால் இல்லை தான். ஆனால் இன்று ஊடகம் செயல்படும் விதம் மாணவர்கள் அனைவரையும் சராசரி ஆக்கி அவர்களை இந்த நுகர்வு சுழலுக்குள் சிக்க வைத்து விடும். இதிலிருந்து தப்பிப்பிழைப்பவர்கள் தான் இந்த புதிய நூற்றாண்டின் முன்னோடி மனிதர்கள் ஆகப்போகிறார்கள்.
***
No comments:
Post a Comment