Saturday 3 October 2020

மொஸாட் - என். சொக்கன்

Whatsapp ல் வரும் பெரிய பதிவுகளை அசராமல் படிப்பவரா நீங்கள்?! உங்களுக்கானது தான் இந்த புத்தகம். 

கிழக்கு பதிப்பகத்தின் அபுனைவு நூல்களின் வெற்றி இப்படி நூல்களை பதிப்பிக்கும் பதிப்பகங்களின் எண்ணிக்கையை அதிகம் ஆக்கியிருக்கிறது என்று நினைக்கிறேன். ஒரு புத்தக கண்காட்சிக்கு சென்றால் அங்கே இது போன்ற நூல்களை கிட்ட தட்ட அனைத்து பதிப்பகங்களும், புத்தகம் வாங்கி விற்கும் கடைகளும் விற்பதை காணலாம். 

படிப்பதற்கு மிக எளிதானது. தினத்தந்தி தவிர, ஏன் தமிழில் வேறு எதையுமே வாசித்திருக்காதவர் கூட எளிதில் வாசிக்கும் படியான ஒரு மொழியில், நடையில் எழுதப்பட்ட புத்தகம். ஒவ்வொரு பத்தியும் மூன்றிலிருந்து ஐந்து வரிகள் தான். 

நான் நாவல்கள், சிறுகதைகள் தான் வாங்குவேன். இலக்கிய எழுத்தாளரின் கட்டுரை, அபுனைவு வாங்குவேன். Mossad போன்ற புத்தகம் ஒரு முறைக்கு மேல் வாசிக்க தேவையிருக்காது என்பதால் தவிர்த்து விடுவேன். மேலும் இப்படி புத்தகங்கள் சினிமா பார்த்து, ஆவண படங்கள் பார்த்து எழுதப்பட்டது போல் இருக்கும். 

Mossad வாசிக்கும் போது அங்கங்கே சுஜாதா வாடை அடித்தது. முதல் சில அத்தியாயங்கள் 1972ம் ஆண்டு ஒலிம்பிக்கின் போது கொல்லப்பட்ட இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களுக்காக இஸ்ரேல் எப்படி பழி வாங்கியது என்பதை பற்றியது. இந்த சம்பவங்களை வைத்து Steven Speilberg Munich என்றொரு சினிமா எடுத்திருக்கிறார். அற்புதமான படமது. 

பிறகு Mossad எப்படி உருவானது?, அதற்கான வரலாற்று காரணங்கள், யூதர்கள் காலம் நெடுகிலும் அனுபவித்த துன்பங்கள், Mossad ன் சாகசங்கள் என்று இது Mossad ன் புகழ் பாடும் ஒரு புத்தகம். 

இதை ஒரு மாணவ நண்பர் எனக்கு வாசிக்க அளித்தார். அவர் ஒரு நண்பரின் வீட்டில் இருந்த புத்தக அலமாரியில் இதைக்கண்டு ஆர்வமாக வாசிக்க எடுத்து வந்திருக்கிறார். அடுத்த சில மணிநேரங்களில் வாசித்து முடித்து விட்டார். என்னிடம் வாசித்து பாருங்கள் என்று கொடுத்தார் நான் நாளுக்கு கொஞ்சமாக 4 நாளில் வாசித்தேன். 

முதல் முதலாக வாசிக்க வருபவர்கள் இப்படி நூல்களை வாசிப்பது வாசிப்பின் மீதான ஆர்வத்தை வளர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை. வாசிப்பு என்பது கடினமானது அல்ல, பரீட்சைக்கு படிப்பது போல அல்ல சுவாரசியமான ஒன்று என்கிற எண்ணத்தை அது வளர்க்கும். மேலும் reading for pleasure எனப்படும் வாசிப்பின்பம் கிடைக்க பெறுபவர்கள் தொடர்ந்து வாசிப்பார்கள். தமிழில் வாசித்தால் தமிழ் எழுத்துலகமும் வாழும். 

மதி நிலையம் வெளியிட்டிருக்கும் இந்நூலின் விலை 150 ரூபாய். 

சொல்ல மறந்துவிட்டேன். Mossad என்பது இஸ்ரேலிய உளவுத்துறையின் பெயர். 

(29 Feb 2020 எழுதப்பட்ட பதிவு)


Ash is Purest White - இவள்


ஒரு பெண்ணை முதன்மை கதா பாத்திரமாக கொண்ட ஒரு திரைப்படத்தை கடைசியாக எப்போது பார்த்தீர்கள்? அதாவது ஒரு கதா நாயகி நாயகனுக்கு இணையாக சண்டை காட்சிகளில் நடித்து, வசனம் பேசி நடிக்கும் படங்கள் அல்ல. கதையே பெண் எடுக்கும் முடிவுகளால் நகரும் திரைப்படம்? 

எனக்கு French படமான Amelie மற்றும் Almodavar எடுத்த All About My Mother என்று இரண்டு படங்கள் நினைவுக்கு வருகின்றன. 

Ash is Purest White சர்வதேச கவனம் பெற்ற சீன இயக்குனர் Jia Zhanke வின் படம். சமகால சீன மக்களின் வாழ்க்கையை மாற்றிய விஷயங்களை, அரசியலை சத்தமில்லாமல் சொல்பவர். 

சீனாவின் Shanxi என்கிற பகுதியில் கதை நடக்கிறது. Qiao என்னும் இளம் பெண் உள்ளூர் Gangster மற்றும் Night Club நடத்தும் Guo Bin உடன் காதலில் இருக்கிறாள். Qiaoவின் தந்தை அங்கே உள்ள நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்க்கிறார். 

ஆண்டு 2001. சீனா புதிய நூறாண்டின் புதிய பாய்ச்சலுக்கு தயராகிக்கொண்டிருக்கிறது. புதிய தொழில்கள், புதிய ஊர்கள் வளர்ச்சியடைகின்றன. Qiao வின் ஊரில் உள்ள சுரங்கம் மூடப்பட போவதாக வதந்தி பரவுகிறது. 

Qiao விரும்புவது எல்லாம் அங்கிருந்து கிளம்பி சென்று Bin னுடன் சேர்ந்து ஒரு புதிய, அமைதியான வாழ்க்கையை தான். ஆனால் Bin உள்ளூரில் ஒரு established ஆன ஆள். ஊருக்கு வெளியே அவன் செல்லாக்காசு, அதனால் அவன் தயங்குகிறான். 

இந்நிலையில் Binனின் குருநாதர் இடத்தில் இருக்கும் Real Estate அதிபரான Eryogan கொல்லப்படுகிறார். பின்னர் Binனும் தாக்க படுகிறான். 

Qiao விற்கு துப்பாக்கி சுட கற்றுத்தரும் Bin "Kill or get killed" இது தான் எங்கள் முன் இருக்கும் இரண்டே வாய்ப்புகள் என்கிறான். 

இதற்கு அடுத்த காட்சியில் Binனை உள்ளூர் சோட்டா Gangsterகள் சூழ்ந்து கொண்டு தாக்குகிறார்கள். Binனும் திருப்பி அடிக்கிறான். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் Qiao துப்பாக்கியுடன் காரிலிருந்து இறங்குகிறாள். 

Qiao நமக்கு அறிமுகம் ஆகும் போது Barbie பொம்மையை பிரதி செய்யும் ஒரு make upல் இருக்கிறாள். அது அவளுக்கு பொருந்தவில்லை. கொஞ்சம் அவலட்சணம் போலவும் தெரிகிறாள். ஆனால் அவள் புழங்கும் சூழலில் அப்படி ஒரு தேர்வு அவசியப்பட்டிருக்கும். அது ஒரு விதமான பாதுகாப்பு அம்சமாக கூட இருந்திருக்கும். எதற்கும் துணிந்தவள், ஒரு no nonsense person என்பதாக. 

பின்னர் நாம் Qiao வை 2006ம் ஆண்டு சந்திக்கிறோம். இப்போது Qiao மாநகரத்தில் வாழும் ஒரு சாதாரண பெண் போல இருக்கிறாள். பணத்தை திருடுகொடுத்துவிட்டு தேடி அலைகிறாள். கல்யாண வீட்டில் gate crash செய்கிறாள். பணக்காரர்களிடம் வில்லங்கமாக பொய் பொய் சொல்லி பணம் பறிக்கிறாள். பின்னது இரண்டும் படத்தில் உள்ள கொஞ்சம் நகைச்சுவை கலந்த பகுதிகள். 

மீண்டும் 10 ஆண்டுகள் கழித்து நாம் Qiaoவை சந்திக்கிறோம். Coming of age Genre போல, ஒரு தனி நபரின் வளர்சிதை மாற்றத்தையே நாம் Qiaoவில் பார்க்கிறோம். இது ஒரு வகையான உருமாற்றம். இளம்பெண்ணாக அறிமுகம் ஆகும் Qiao தான் எடுத்த முடிவுகளால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு எழுந்து வரும் சித்திரமே Ash is Purest White.

துப்பாக்கி சுட பயிற்சி அளிக்கும் போது பின்னணியில் உள்ள எரிமலையை காட்டி Binனிடம் Qiao சொல்கிறாள். எரிமலை குழம்பில் இருந்து உருவாகும் சாம்பல் சுத்தமானதாக, தூய்மையானதாக இருக்கும் என்று. ஒரு மனிதன் பண்படுவதற்கு அத்தகைய கொதிநிலையை அடைந்து மீள வேண்டும் என்கிறாள். அதை சொல்லும் அவளுக்கு தெரியாது அது தனக்கே நடக்கும் என்று. 

சீனாவில் இருந்து வரும் அனைத்தும் low quality, cheap and duplicate அல்ல. இப்படி சிறந்த படங்களை அவர்கள் எடுக்கிறார்கள் என்பதே அவர்களின் படைப்பு திறனுக்கு சான்று. 

The Harmonium in My Memory - அழியாத கோலங்கள்


நீங்கள் கொரியன் படங்களை தொடர்ந்து பார்பவராக இருந்தால் நிச்சயம் thriller, murder mystery, serial killer, gangster வகை படங்களை பார்த்திருப்பீர்கள். அதீத வன்முறை காட்சிகள், உணர்ச்சி கொந்தளிப்பான நடிப்பு போன்றவையே கொரிய படங்கள் உலக அளவிலான கவனம் ஈர்ப்பதற்கு பிரதான காரணங்கள். 

அத்தகைய கொரிய சினிமாவில்  feel good படங்களும் அவ்வப்போது வருவதுண்டு. முதலில் நினைவுக்கு வருவது பாட்டிக்கும் பேரனுக்குமான உறவை சொல்லும் The Way Home படம் தான். 

மெல்லுணர்வு என்பது பெரும்பாலும் பதின் பருவத்தின் காதலை, மையலை சொல்லும் படமாக தானே இருக்க முடியும்?! The Harmonium in My Memory  அத்தகைய படம் தான். தமிழில் உடனே நினைவுக்கு வருவது பாலு மகேந்திராவின் அழியாத கோலங்கள். இது வரை பார்க்கவில்லை என்றால் படம் Youtubeல் இருக்கிறது பார்த்து விடுங்கள். 

படம் 70, 80களில் நடக்கிறது என்று யூகிக்கலாம். ஒரு கொரிய மலைக்கிராமம். அங்கே வரும் ஒரு இளம் பள்ளி ஆசிரியர். ஆசிரியராக அவருடைய முதல் பணியை அந்த பள்ளியில் தான் துவக்குகிறார். அவரின் பெயர் Mr. Kang.

கொரிய கிராமம் என்றாலும் அது தமிழக கிராமத்தை நினைவுபடுத்தும் கிராமம் போல தானிருக்கிறது. மேலும் ஆசிரியர் வந்து இறங்கும் காட்சியை கண்டவுடன் எனக்கு முந்தானை முடிச்சு படமும் நினைவிற்கு வந்தது. 

பள்ளியில் பல வித குணாம்சங்களுடன் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். Mr.Kang தான் அதில் இளையவர். அவர் வேலைக்கு சேரும் அன்றே Miss Yang என்ற இளம் பெண்ணும் ஆசிரியராக பணியில் சேர்கிறார். 

நாட்டின் தலை நகரில் இருந்து மிகவும் தள்ளி, அரசியல் அதிகாரம், பொருளாதார நலன்கள் என்று  எதுவும் வந்து சேர பல ஆண்டுகள் ஆகும் கிராமத்தில் மனிதர்கள் எப்படி இருப்பார்களோ அப்படி இருக்கிறார்கள். பெருநகரத்தில் நவீன கல்வி கற்று வந்த Kang மற்றும் Yangகிற்கு அங்கே உள்ள பல கட்டுப்பெட்டித்தனங்கள் பிடிக்கவில்லை எனினும் தங்கள் பணியை சிறப்பாக செய்கிறார்கள். 

சக ஆசிரியர் "அடிச்சு வளர்க்காத பிள்ளையும், ஒடிச்சு வளர்க்காத முருங்கையும்" என்கிற ரீதியில் மாணவர்களை அடிப்பதை பற்றி ஒரு பழமொழி சொல்ல Kang அது அவசியமற்றது என்றும் மாணவர்களை கண்ணியமாக நடத்தியே நல்வழிப்படுத்த முடியும் என்று சொல்கிறார். 

மாணவர்களின் வாசிப்பு, எழுதும் திறனை மேம்படுத்த தினம் ஒரு பக்கம் தங்கள் வாழ்க்கையில் நடப்பவவற்றை எழுத வேண்டும் என்று சொல்கிறார். முரண்டு பிடிக்கும் மாணவர்களை அன்பால் பணிய வைக்கிறார். 

மாநகரத்தில் இருந்த வந்த ஆசிரியர் மீது ஒரு கிராமத்து பள்ளி மாணவிக்கு மையல் இல்லாமலா இருக்கும்?! இருக்கிறது. அது தான் இந்த படத்தை ஒரு feel good படமாக ஆக்குகிறது. 

Hongyeon என்கிற அந்த மாணவி வயதிற்கு மீறிய உருவம் கொண்டவள். அல்லது சில ஆண்டுகள் தேர்வில் தோற்று ஒரே வகுப்பில் படிப்பவளாக கூட இருக்கலாம். ஆனால் குழந்தையும் அல்லாத இளம் பெண்ணும் அல்லாத ஒரு இரண்டும் கெட்டான் பருவத்தில் இருக்கிறாள். 

கிராமத்திற்கு வந்து இறங்கும் Kang முதலில் சந்திப்பது Hongyeon தான். பார்ப்பதற்கு பெரிய பெண் போல இருப்பதால் Miss என்று மரியாதையாக அழைக்க அது அவளுக்கு ஒரு குறுகுறுப்பான மகிழ்ச்சியை தருகிறது. அதிலிருந்தே அவளுடைய மையலும் துவங்குகிறது. 

Kangற்கு Miss Yangன் மீது மையல். இப்படி முக்கோண மையல் கதையில் ஒரு வருடத்திற்கு பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சிகளும் இணைந்து இதை ஒரு மறக்க முடியாத Campus cum coming of age film ஆக மாற்றுகின்றன. 

Hongyeon தனது மனவோட்டங்களை Kangற்கு தெரியப்படுத்திக்கொண்டே இருக்கிறாள். Kang தன்னுடைய பொறுப்பு, கடமை உணர்ந்து அதை எவ்வகையிலும் உடைத்து விடாமல் இருக்க கண்ணியமாக நடந்து கொள்கிறார். 

நாம் பெரும்பாலான உணர்ச்சிகளை, எண்ணங்களை வெளியே சொல்வதில்லை. பள்ளிப்பருவத்தில் நிச்சியம் நமக்கே உரிய மையல் கதைகள் இருக்கும். அவை இன்று நகைப்பிற்குரியனவாக நமக்கே தோன்றும் ஆனாலும் அது போன்ற உண்மையான உணர்ச்சிகளுக்கு நாம் மீண்டும் ஆளாகவே இல்லை என்றும் தோன்றும். அத்தகைய உணர்ச்சிகளை மிக யதார்த்தமாக சொல்லும் படம் தான் The Harmonium in My Memory.