Saturday 20 August 2016

எந்திரமாதல்!!!



எந்திரமயம் இல்ல எந்திரமாதல்.

'இராணுவ ஒழுங்கு' என்கிற பதம் பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. இவர்கள் தான் சர்வாதிகார ஆட்சி வர வேண்டும், புரட்சி வர வேண்டும், Hitler பெருமைகள் எல்லாம் பேசுபவர்கள்.

இராணுவத்தில் பணிபுரிபவர்கள் விடுமுறையில் வரும் போது 'bottle' கேட்டு முதல் ஆளாக நின்று தேச பக்தியை 'prove' செய்வார்கள்.

இது BJP அரசாங்கம் வந்த பிறகு என்று அல்ல எப்போதும் மக்கள் மனதில் இந்த சர்வாதிகார ஆசை ஊறிக்கொண்டே தான் இருக்கிறது.

ஒவ்வொரு வீட்டிலும் சர்வாதிகாரம் இருக்கிறது. 'அப்பாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா' என்று அம்மாக்கள் பூச்சாண்டி காட்டி கொண்டிருப்பார்கள். இப்படி வீடுகளில் உள்ள பையன், பெண்கள் தான் மிக எளிதாக திசை மாறி விடுவார்கள்.

பள்ளிகளில் பையன முட்டிக்கு கீழ அடிங்க ஆனா படிக்க வச்சிருங்க என்று சொல்வார்கள். கல்லூரியில் CCTV இருக்கு, பையன்களுடன் பேச விட மாட்டார்கள், பெண்களுக்கு தனி பேருந்து என்று கல்லூரி செல்லும் மகள் மீது நம்பிக்கை இல்லாமல் இந்த வெளி பூச்சு மீது நம்பிக்கை வைத்து கல்லூரிக்கு அனுப்புவார்கள்.

கல்லூரியோ 15 லட்சத்துக்கு CCTV வசதி செய்து இருக்கோம், 2 கோடி ரூபாய்க்கு compound wall அமைத்து இருக்கிறோம் என்று சொல்லி விட்டு, கூடிய சீக்கிரம் Watchman போட போகிறோம் என்பார்கள்.

ஆனால் படிப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்பது போல் ஒரு கோவிலை கட்டி விட்டு அதுக்கு ஒரு பிள்ளையார் அவரை குளிப்பாட்ட ஒரு பூசாரியை வேலைக்கு வைப்பார்கள். கும்பாபிஷேகம் என்று லட்சக்கணக்கில் செலவு செய்வார்கள்.

படிக்க வரும் மாணவர்களிடம் இந்த மாதிரி சட்டை, கால் சட்டை தான் போடணும், Jeans Pant போட கூடாது, சட்டைல design, embroidery இருக்க கூடாது என்று ஆயிரம் condition போடுவார்கள்.

பின்னர் இந்த formal உடை அணிவதை தான் coporate companyகள் விரும்புகின்றன என்று தாங்கள் உருவாக்கிய அசட்டு சட்ட திட்டங்களுக்கு நியாயம் கற்பிப்பார்கள்.

பெண்கள் உடை விசயத்தில் இவர்கள் போடும் conditionயை வைத்து தனி புத்தகம் எழுதலாம். இத்தனைக்கும் Costume துறை ஒன்று கல்லூரியில் இருக்கும். அதன் துறைத்தலைவர் எந்த ரசனையும், சுய சிந்தனையும் இல்லாத அசட்டு பிறவியாக நிர்வாகத்துக்கு சாமரம் வீசி கொண்டிருப்பார்.

From 9am to 4 pm

1. கல்லூரிக்குள் நுழைந்த உடன் பையன் அடையாள அட்டையை அணிய வேண்டும்.

2. அணிகிறான் என்பதை உறுதி செய்ய 2 பேராசிரியர்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள்.

3. பையன் சட்டைல எல்லா பித்தானும் போட்டு இருக்கான?! கால் சட்டைல் zip இழுத்து விட்டிருக்கானா என்று check செய்வார்கள்.

4. இவர்கள் check செய்கிறார்கள் என்பதை check செய்ய சில அடிபொடிகளும், அதற்கு ஒரு தலைமையும் உண்டு. அவர் CCTV மூலம் கல்லூரியை மேய்த்து கொண்டு இருப்பார்.

5. பையன் முதல் மணி அடிக்கும் முன் வகுப்பிற்குள் நுழைய கூடாது. ஏன்னா???? அது அப்படித்தான்!!!! பிள்ளைக கற்புக்கு பாதுகாப்பு உண்டுன்னு வேற வேற வார்த்தைல சொல்லி தான் ஆள் சேத்து இருக்கிறார்கள்.

5. வகுப்பில் attendance order படி தான் உக்கார வேண்டும்.

6. எந்த break ஆக இருந்தாலும் பையன் வகுப்புல இருக்க கூடாது.

7. தப்பி தவறி பிள்ளைக கிட்ட பேசிட்டா கட்டம் கட்டி, கவுண்டமணி பாத்துட்டான், பாத்துட்டான் என்று ரோட்டில் படுத்து உருளுவது போல உருண்டு ஒப்பாரி வைத்து, ஊரை கூட்டி, ஒழுங்கு நடவடிக்கை என்று ஒரு வாரம் பாடம் நடத்தாமல் சுத்தி கொண்டிருப்பார்கள்.

8. இதற்குள் சாதாரண பின் புலத்தில் இருந்து வரும் பையன்கள் நடை பிணம் போல ஆகி விடுவார்கள்.

9. அவர்களுடைய Confidence level, Personality எல்லாத்தையும் தவறானதாக சொல்லி உடைத்து விடுவார்கள்.

10. இன்னும் சிலர் அடிமை பயிற்சியை கச்சித்தமாக பெறுவார்கள்.

11. சிந்திப்பதற்கான பயிற்சி என்பதே இல்லை என்று ஆன பின் பையனனோ, பெண்ணோ 3 வருசத்துல என்ன படித்துவிடுவார்கள்??!!

12. பேராசிரிய பெருமாட்டிகள் பெரிதாக அலட்டி கொள்வதில்லை. 99% பேர் 'extra income' என்ற நோக்கத்தில் தான் வேலைக்கு வருகின்றனர். Makeup சாமான், சேலை வாங்க, hotel சென்று சாப்பிட என்று இந்த பணத்தை செலவு செய்வார்கள்.

13. நூலகம் என்ற ஒன்றை தான் வாழ்நாளில் பார்த்தே இருக்காத ஒரு நபர் தொலைக்கல்வியில் படித்த பட்டத்துடன் நூலகர் வேலை பார்ப்பார்.

14. மாணவர்களோட படிக்கிற ஆர்வத்துக்கு புத்தகத்திற்கும் இடையில் இவர் இருப்பார்.

15. நில்லுன்னா நிக்கணும், உக்காருணா உக்காரணும் இது தான் இங்கே கல்வி என்னும் பெயரில் கொடுக்கப்படும் பயிற்சி.

16. நாங்க நல்லா coaching, training கொடுப்போம் என்று Circus Company Owner மாதிரி அனைத்து பேராசிரியர்களும் ஒரே தொனியில் பேசுவர்.

17. ஒழுக்கம் தான் முக்கியம், படிப்பு ரெண்டாவது தான் என்பார்கள். Result வந்த பிறகு ஏன் 10 பேர் Arrear வச்சிருக்கான் என்பார்கள்.

18. எங்களுக்கு எண்ணிக்கை முக்கியம் இல்ல என்று சொல்லிவிட்டு பேரசிரியர்களிடம் Admission அதிகரிக்க என்ன பண்ணுனீங்க என்பார்கள்.

19. நான் தான் அடிமை number 1 என்பதை நிரூபிக்கும் விதமாக mike கையில் வந்த உடன், Sir சொன்னார், அய்யா சொன்னாங்க என்று ஒப்பாரி வைப்பார்கள்.

20. அய்யாக்கு தெரிஞ்சா வசவு உரிச்சிருவார் என்று மகிழ்ச்சியாக சொல்வார்கள்.

21. அய்யா வரும் போது யாரும் எதிர்ல போக கூடாது என்பார்கள். அய்யா என்பவர் வெள்ளுடை வேந்தான கல்லூரி முதலாளி, கல்வி வள்ளல் மற்றும் செயலர். (அவரு ரோட்ல போகும் போது எதிர்ல lorry வந்தா என்ன செய்வார்னு யாராவது கேட்டு சொன்னா நல்லா இருக்கும். :-D ;-))

22. கல்லூரி முதல்வர் செயலரின் official துதிபாடி என்பதை பெருமையாக மேடை கிடைக்கும் போது எல்லாம் நிரூபிப்பார்.

23. Committee மேல் committee அமைத்து நீ செய் நீ செய் என்று ஒரு வேலையும் உருப்படியாக செய்ய மாட்டார்கள்.

25. பொது வாசிப்புக்கு புத்தகம் வாங்குவோம் ஒரு 10000 கொடுங்கள் என்றால், பிறகு பார்த்து கொள்ளலாம் என்பார்கள்.

26. Senior faculty, Junior faculty என்று 10000 சம்பளம் வாங்கும் இந்த அல்லக்கை கூட்டம் போடும் நாடகம் அபத்த வகையை சேர்ந்தது.

27. UGC scale of pay வாங்கும் அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியரை கண்டால் 'அம்மாவ' பார்த்த MLA மாதிரி தண்டால் எடுப்பார்கள்.

28. சுயநிதி பிரிவுகள் இயக்குனர் அவரின் கீழ் இருக்கும் பேராசிரிய புண்ணாக்குகளிடம் அரசு உதவி பெறும் கல்லூரி பேரசிரியர்களிடம் பேசுவதோ, சேர்ந்து தேனீர் அருந்துவதோ, ஒன்றாக ஒண்ணுக்கு போவதோ கூடாது என்று சொல்லி விட்டு, அவர்களை காணும் போது பல்லைக்காட்டுவார்.

29. இயக்குனர் பொழுது போகவில்லை என்றால் 'meeting' போட்டு போன வருசம் போட்ட meetingல் சொன்னதை திரும்ப சொல்வார். அவர் இயக்குனர் ஆன காலத்தில் இருந்து இந்த பாட்டை தான் பாடுகிறார் என்று அவரது அடிப்பொடிகள் சொல்கிறார்கள்.

30. மாணவர் meetingiலும் இதே தான்.

31. இப்படி programme பண்ணி பண்ணி மாணவர்களை, வேலை பார்ப்பவர்களை ஒரு எந்திரமாக மாற்றுவார்கள்.

32. Japanகாரன் robot செய்ய கோடிக்கணக்கில் செலவு செஞ்சு ஆராய்ச்சி பண்ணும் போது இங்கே இந்தியாவில் மனிதர்களை robot ஆக்கும் வித்தையை குறைந்த செலவில் கல்வி நிறுவனங்களும், அதை நிறுவிய கல்வி தந்தைகளும் கண்டு பிடித்து உள்ளார்கள்.

நிற்க.

தன்னிடம் வேலை செய்பவன் எந்த வித மனித உணர்ச்சியில்லாத எந்திரமாக இருக்க வேண்டும் என்பதே முதல் தகுதியாக வைத்து நேர் காணல் நடை பெறும்.

கோபப்படுவது சாணக்கியத்தனம் இல்லை. ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்று சொல்லி வைப்பார்கள். ரௌத்திரம் பழகு என்பது என்றைக்கும் நினைவுக்கு வராது.

நகைச்சுவை உணர்வு என்பது செயலர், முதல்வர், இயக்குனர் சேர்ந்து சிரிக்கும் போது சிரித்து வைப்பது.

நல்ல வேளை இந்த 21ம் நூற்றாண்டு மாணவர்கள் அவர்களாகவே படித்து கொள்ள ஆயிரக்கணக்கான வழிகளை திறந்து விட்டுள்ளது, இல்லாட்டி பட்டம் வாங்குன எந்திரத்தை வச்சி என்ன பண்றது??!!

Saturday 13 August 2016

கதா நாயகனாக ஆவது எப்படி?!



கல்லூரி ஆசிரியராக பணியில் சேர்ந்து 5வது ஆண்டை துவக்கி விட்டேன். கடந்த நான்கு வருடத்தில் மாணவர்களுடன் பழகுவதில் இல்லாத அளவுக்கு ஒரு மனவிலக்கம் தற்போது உருவாகி உள்ளதாக உணர்கிறேன்.

நான் படிப்பதற்கு கல்லூரியில் சேர்ந்த போது எப்படி இருந்தேன் என்று யோசித்து பார்க்கிறேன்.

என்னுடைய பேராசிரியர்கள் என் வயதை அனுபவமாக கொண்டவர்கள். மெத்த படித்தவர்கள். உரையாற்றுவதில் மன்னாதி மன்னர்கள். திருத்தமாக உடை அணிந்து வருபவர்கள். மாணவர்களை கண்ணியமாக நடத்துபவர்கள். பெரும்பாலும் எந்த மாணவனும் அவர்களிடம் வம்பு வைத்து கொள்ள மாட்டான். வம்பு செய்பவனை கவனிக்கும் விதமாக கவனிப்பார்கள்.

இது போக நிர்வாகத்திடம் இருந்து எந்த எடுபிடி வேலையும் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகதவர்கள். மாணவனை அரவணைத்து வழி காட்டியவர்கள். அவனுக்கு கட்டணம் கட்ட என்று வருடத்திற்கு ஆயிரக்கணக்கான பணத்தை இழந்தவர்கள். வேலை உத்திரவாதத்துடன் அரசாங்க சம்பளம் வாங்கியவர்கள் அதனாலேயே அவர்களால் உலகியல் கவலை இல்லாமல் மாணவர் நலம் கருதி செயல் பட முடிந்தது என்று நம்புகிறேன்.

அவர்கள் ஆசான்கள்.

இந்த 2016ம் ஆண்டில் கல்லூரிக்கு வரும் செம்மறி ஆட்டு கூட்டத்தில் ஒளிந்திருக்கும் வெள்ளாட்டை கண்டு பிடிப்பது சிரமமாக இருக்கிறது. சுயநிதி கல்லூரிகளின் பெருக்கத்திற்கு பிறகு கல்வி சீனாவில் தயாரான பொருள் போல எந்த தரமும், உறுதியும் இல்லாததாக ஆகிவிட்டது.

இங்கே பணியில் சேரும் ஆசிரியர்கள் பெரும்பாலும் இதே கிணற்றை சேர்ந்த தவளையாக இருப்பர். அல்லது இந்த கிணற்று நீரின் நிறம், மனம், சுவை கொண்ட வேறொரு கிணற்று தவளையாக இருப்பர். தப்பி தவறி சில கடல் மீன்கள் உள்ளே வந்து விட்டு முழிப்பதும் உண்டு - என்னைச் சொன்னேன்.

இப்படி கல்லூரிகளில் காசு இருந்தால் கல்வி. இருக்கும் இடங்களை நிரப்புவது ஒன்றே குறிக்கோள். அதுவே கல்லூரியின் வெற்றியின், வளர்ச்சியின் அளவுகோள். கல்லூரி முதலாளியின் கல்லாபெட்டியின் திறவுகோள்.

நன்றாக படிப்பவர்கள், படிக்க கூடியவர்கள், மதிப்பெண் அதிகம் பெற்று அரசு கல்லூரி, அரசு உதவி பெரும் கல்லூரி என்று சென்று விட இங்கே வருபவர்கள் பணம் உள்ள, படிப்பை பற்றி அக்கறை இல்லாத, தடித்தனம் மிகுந்த சில்லுண்டிகள். விதி விலக்குகள் இருக்கலாம் ஆனால் குடும்பத்தின் பொருளாதார நிலை அறிந்து நடந்து கொள்ளும் மாணவர்கள் விரல் விட்டு என்ன கூடிய அளவில் கூட இப்படி கல்லூரிகளில் இல்லை.

9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களை விளையாட்டு, வாசிப்பு, இசை, பயணம், என்று எதிலும் ஈடுபட விடாமல் செய்த பிறகு அவனுக்கு எஞ்சுவது தமிழ் சினிமா மட்டுமே. முடிவு - அசட்டு பிறவியாக கல்லூரியில் வந்து சேருகிறான். அவனை பொறுத்த வரை அவன் பார்த்த குப்பை படத்தில் வந்தது போல தான் கல்லூரி இருக்கும் என்று எண்ணி வருகிறான்.

ஆனால் இங்கே வந்தால் அவனை கதா நாயகனாக ஆக விடாமல் தடுக்க ஆயிரம் தடைகள்.

அவன் என்ன செய்வான்?!

அவனுக்கு வேண்டியது என்ன?!

கதா நாயகன் ஆக வேண்டும்.

அதற்கு என்ன செய்ய வேண்டும்?!

கோமாளித்தனம், ரவுடித்தனம் செய்ய வேண்டும்!!!

சினிமாவில் அப்படி தான செய்கிறார்கள்?!!

ஜெயமோகனே பெண்களுக்கு ரவுடிகளையும், கோமாளிகளையும் பிடிக்கும் என்று எழுதிய பிறகு மறுத்து பேச என்ன இருக்கிறது?!

கதா நாயக நோய் பீடிக்கப்பட்ட மாணவனை கண்டு பிடிப்பது எப்படி?!

1. உடன் இருக்கும் நண்பர்களை மற்ற பையன்கள், குறிப்பாக பெண்கள் கேட்கும் விதமாக கிண்டல் செய்வான். சில சமயம் அடிப்பான். உடன் இருக்கும் மாணவர்கள் தன்னை சசி குமாராக நினைத்து கொண்டு விட்டது இது நீடிப்பதற்கு காரணம்.

2. எப்போதும் சத்தமாக பேசுவான். இப்போது கிசு கிசுவெனவும் பேசுகிறான். அசட்டுத்தனமாக சிரித்து கொண்டே இருப்பான். முட்டாள், முரட்டு மற்றும் டம்மி piece ஆக நடந்து கொள்வான்.

3. தல அல்லது தளபதியின் வெறியனாக காட்டிக்கொள்வான். இல்லாட்டி cricket பைத்தியம் ஆக இருப்பான்.

4. மலிவு விலை சங்கிலி, மோதிரம், கடிகாரம், கயிறு, (இப்போது இதில் ஜாதி கயிறும் சேர்த்தி) என்று accessories பயன் படுத்துவான்.

5. முகத்தில் முடி உள்ளவன் அதில் கோலம் போடுவான், இல்லாதவன் தலையில். பின்னாடி Ervamatin போன்றவை வெற்றி பெறுவதில் இவர்களின் பங்கு முக்கியமானது.

6. பல வண்ண சட்டை, கால் சட்டை, காலனி என்று அணிந்து வருவான். இவனை கட்டம் கட்ட கல்லூரியில் கைப்புள்ள பேராசிரியர்கள் கிளம்பி வருவார்கள்.

7. பேராசிரியை, அவர் அவன் அம்மா வயதை உடையவராக இருந்தாலும் சீண்டுவது போல பேசுவான். அக்கா வயது என்றால் பிரேமம் கோணத்தில் கற்பனை குதிரையை செலுத்துவான்.

8. இதற்கிடையில் வகுப்பில் இருப்பதிலேயே நிறமான பெண்ணை 'sincere'ஆக காதலிக்க தொடங்கி இருப்பான். இந்த பெண்ணின் கவனத்தை பெறுவதற்கு தலை கீழாக நடக்க கூட தயாராக இருப்பான். அவ்வப்போது நடந்தும் பார்ப்பான்.

9. ஆங்கிலம் அறிந்து கொள்ள கூடாது என்பதில் உறுதியாக இருப்பான். அதை விட இரண்டு மடங்கு உறுதியுடன் அவன் தமிழ் கற்றது தேர்வு முடிவுகள் வரும் போது தான் தெரியும்.

10. பீடி, சிகரெட், whisky, brandy, கள்ளச்சாராயம் என்று கிடைத்தவற்றை காலி செய்து அனைத்தையும் ஏற்று கொள்ளும் முற்போக்கு எண்ணம் உடைய புரட்சியாளன் என்று காட்டி கொள்வான்.

இந்த அசட்டு பிறவி கதா நாயக மாணவனிடம் ஏதாவது மாணவி் மயங்கினால் அதற்கு கல்லூரி நிர்வாகம் என்ன செய்யும் நியாயமாறே?!!

சரி, அப்போ படிக்கும் போதே கதா நாயகன் ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்?! அதற்குத்தானே இவ்ளோ நேரம், தூரம், இந்த கட்டுரையை நகர்த்தி கொண்டு வந்தேன்.

இதோ கதா நாயகன் ஆவதற்கு செய்ய வேண்டியவை...

1. வகுப்பு பிடிக்க வில்லை என்றால் நூலகம் செல்ல வேண்டும். நூலகம் பிடிக்க வில்லையா canteen. அங்கே எதுவும் வாங்கி சாப்பிட்டால் அப்புறம் எங்கே போக வேண்டும் என்பது அவனுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

2. தான் குடியிருக்கும் தெருவில் தெருவிளக்கு எரிய வில்லை என்றால் விரிவாக புகார்க்கடிதம் எழுதி உரிய ஆளிடம் சேர்பிக்க வேண்டும். சாக்கடை அடைத்து கொண்டால் குச்சி எடுத்து வந்து தள்ளி, polythene பையை இங்க போடாதீங்க அப்டின்னு advice பண்ணணும்.

3. பேருந்து நடத்துனர் சில்லறை இல்லை என்றாலோ, தர மறுத்தாலோ வண்டியை விட்டு இறங்கி சாலையில் அமர்ந்து போராட வேண்டும். படியில் தொங்குபவர்களை bus மேல் ஏறி பயணம் செய்ய சொல்ல வேண்டும்.

4. நாட்டு நிலவரம் பற்றி ஆசிரியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கருத்து கேட்க வேண்டும் மேலும் கடைசியாக அவர் என்ன புத்தகம் படித்தார் என்று கேட்க வேண்டும்.

5. கதா நாயக நோய்க்கூறு உள்ள மாணவனை திருத்த முயல வேண்டும். அவன் கெட்ட வார்த்தை பேசினால் சிரித்து கொண்டு, நீ என்னைய தூக்கி போட்டு மிதிப்பேன்னு நினைச்சேன், உன் வீரம் இவ்ளோதான என்று சீண்ட வேண்டும்.

6. எல்லாரும் Hitler, Che என்று பேசும் போது புத்தர், இயேசு, காந்தி என்று பேச வேண்டும்.

7. பிறந்த நாள் வந்தால் கடலை மிட்டாய், கருப்பட்டி மிட்டாய், தேன் மிட்டாய், பொறி உருண்டை என்று புது விதமாக கொண்டாட வேண்டும்.

8. டிவியில் கூட யாரும் பார்க்காத படத்தை theater சென்று பார்த்த கதையை திரும்ப திரும்ப சொல்ல வேண்டும்.

9. அப்துல் கலாம் பிறந்த நாளுக்கு எல்லாரும் profile picture மாத்தும் போது கல்லூரிக்கு விடுமுறை எடுத்து அவர் எழுதிய புத்தகத்தை படிக்க வேண்டும்.

10. பீடி, வெள்ளை பீடி, குளிர் பானம், மது பானம் என்று அனைத்தையும் நிராகரிக்க வேண்டும்.

பெண்கள் முன்னவர்களை கிறுக்கன், பொறுக்கி, லூசு, அரைவெட்டு, வெத்து வேட்டு, மொக்கை pieceசு என்றும் பின்னவனை Psycho, பைத்தியம், அவன் கொஞ்சம் ஒரு மாதிரி  என்றும் விளிப்பார்கள்.

இது தெரியாம இந்த பசங்க வாழ்க்கைல 3 வருசத்தை செலவெழுதிட்டு சுத்திட்டு இருப்பான்.

இந்த பகடிகளுக்கு அப்பால்...

இப்போது உள்ள பேராசிரியர்களால் கல்லூரிக்கு புதிதாக வரும் மாணவர்களிடம் கனவுகளை, லட்சியங்களை, கொள்கைகளை, குறிக்கோள்களை விதைக்க முடிய வில்லை.

அவன் சட்டை, கால் சட்டை தலை மயிர் என்று அவனை ஆராய்ந்து விட்டு அவன் புத்தி, உள்ளம், கனவுகள் பற்றி எதுவும் அறிந்து கொள்ள விரும்பாமல் கடந்து சென்று விடுகிறார்கள்.

மாணவர்களுக்கும் முன் மாதிரியாக கொள்ள உதாரண பேராசிரியர்களும் இல்லை. பேராசிரிய புலிகளுக்கும் வேலை உத்திரவாதம், நிறைவான சம்பளம் என்று இல்லை என்று வரும் போது உலகியல் கவலையில் உழன்று கொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் சட்டைல பித்தான் இல்லாம வந்தான் என்று சிக்கும்  மாணவனை ஏதோ 9000 கோடி கடன் வாங்கி நாட்டை விட்டு ஓடுனவனை பிடிச்சிட்ட மாதிரி பெருமையாக கருதுகிறார்கள். இப்படி செய்வது தன்னுடைய வேலையை தக்க வைத்து கொள்ள உதவும் என்று நம்புகிறார்கள்.

அதாவது ஆசிரியராக, முன் மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் கலாச்சார காவலர் வேசம் கட்டி ஆடுகிறார்கள். நிலைமை இப்படி இருக்கும் போது எல்லாரும் கைப்பாவை தான் ஆக முடியும் கதா நாயகன் எப்படி ஆக முடியும் அய்யா?!!

என்ன இந்த கட்டுரையில் மாணவிகளை பற்றி ஒன்றும் சொல்லவில்லை?!! என்று நினைத்தால் விதிவிலக்குகள் தவிர்த்து அவர்களின் அசட்டுத்தனம் மாணவர்களுக்கு கொஞ்சமும் குறைந்தது இல்லை என்று சொல்லி முடித்து கொள்கிறேன்.