Friday, 1 June 2018

தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், சமூக விரோதிகள்...

கடந்த நான்கு வருடங்களில் சில அரசியல் வாதிகள் தினம் பயன்படுத்திய வார்த்தைகளில் மேலே உள்ளவை அடங்கும். குழந்தையை கொஞ்சும் போது மானே தேனே என்பது போல இந்த வார்த்தைகளை தாராளமாக பயன்படுத்தாமல் அவர்களால் பேச முடியாது.

சந்தேகம் என்னவென்றால் ஒரே நபரை அல்லது ஒரு குழுவை சேர்ந்த நபர்களை தான் இவர்கள் வேறு வேறு பெயர்களில் அழைக்கிறார்களா? அல்லது ஒவ்வொரு பெயருக்கு பின்னும் வெவ்வேறு குணாதிசியங்கள், கொள்கைகள், லட்சியங்கள், ஆயுதம் தாங்கிய வெறி கொண்ட மனிதர்கள் இருக்கிறார்களா?

முதலில் இந்த வார்த்தைகளை பயன்படுத்துபவர்களிடம் "Definition" கேட்க வேண்டும்.

Define தீவிரவாதி

Define பயங்கரவாதி

Define சமூக விரோதி

இதற்கு தரும் பதில் திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில் அவர்களை எப்படி அடையாளம் காணுவது என்பதை குறித்தும் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.

பெரிய முன்னேற்றம் இல்லாமல் காலத்தில் உறைந்துவிட்ட எங்கள் கிராமத்தில் பங்காளி சண்டைகளில் குடும்பத்துக்கு ஒரு மகனை இழந்திருப்பார்கள், ஒரு மகன் பழிக்கு பழி வாங்கி ஆயுள் தண்டனை அனுபவித்து கொண்டிருப்பான். அவர்களுக்கு முந்திய தலைமுறையில் ஆயுள் அனுபவித்து திரும்பியவர்கள் இருப்பார்கள். இப்போது இவர்களை எப்படி Define பண்ணுவது? கொலைகாரர்கள் என்றா? ஆம்.

அவர்கள் கொலைகளை செய்வதற்கு முன்னர், மழை பெய்ய வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என்று சாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் தான். சினிமாவில் காட்டுவது போல முதுகுக்கு பின்னாடி அரிவாளை வைத்து கொண்டு அலைந்தவர்கள் அல்ல. காசு பணம் இல்லாவிட்டாலும் மானம் மரியாதைக்கு குறைவில்லை. அதனாலேயே அத்தனை துன்பமும்.

குடும்பத்தில் ஒருவர் கொலையுண்டாலோ, கொலை செய்தாலோ அந்த குடும்பம் மீண்டு எழ 30 வருடம் ஆகி விடும். நான் சொல்வது பொருளாதார ரீதியில். செத்தாலும் செஞ்சாலும் நட்டம் தான். இதில் லாபமென்று ஏதுமில்லை. ஆனால் ஊருக்குள் "பரவா இல்லை, பய பதிலுக்கு பதில் போட்டுட்டான்" என்று பெருசுகள் பேசிக்கொள்வார்கள். அந்த அங்கீகரிக்கும் பேச்சுக்காக தான் இத்தனை நஷ்டத்தையும் துன்பத்தையும் ஒரு குடும்பம் அனுபவிக்க துணிகிறது.

கிராமத்தில் இருந்து வெளியேறி புத்தியாய் பிழைத்து கொள்பவர்கள் உண்டு. அப்படி பிழைக்க கிளம்பியவர்கள் கொடுங்கனவுகளை சுமந்து கொண்டு அலைபவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆயுள் அனுபவித்து மீண்டவர்கள் தங்கள் வாழ்க்கையை வானம் தோண்டுவதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஊர் விலகி நிற்கும் முன்னே விலகிச்சென்று விடுவார்கள்.

இப்போது தீவிரவாதிக்கு வருவோம்...

எனக்கு தெரிந்து தமிழர்கள், இந்தியர்கள் தீவிரவாதியை திரைப்படங்களில் தான் அதிகம் பார்திருப்பார்கள். தமிழில் இதை மனி ரத்னம் தான் ஆரம்பித்து வைத்தார் என்று நினைக்கிறேன். அவருக்கு தீவிரவாதம் ஒரு கச்சா பொருள். ரோஜா, பம்பாய், உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால் என்று எல்லா கோணத்திலும் முயற்சித்து விட்டார். பின்னர் கேப்டன், பிறகு முருகதாஸ் தன் பங்கிற்கு செய்து விட்டார். கமலும் விஸ்வரூபம் எடுத்தார். நாம் தீவிரவாதத்தை சினிமாவில் தான் பார்த்திருக்கிறோம்.

நம் ஊரில் சட்டையை அரைக்கை வரை மடித்து விட்டால் ரவுடி என்பார்கள். கைக்குட்டையை கொஞ்ச நேரம் கையில் வைத்து கொண்டு நடந்தால் ரவுடி. தாடி மீசை கொஞ்சம் அதிகம் இருந்தால் ரவுடி. இப்படி பேசும் பொதுப்புத்தி எப்படி தீடிரென்று சமூக விரோதி, பயங்கர வாதி என்றெல்லாம் பேசுகிறது? அப்படி பேசினால் நாம் அதை சந்தேக பட வேண்டுமா, கூடாதா?

கொலைகாரர்கள், ரவுடிகள் நம்மூரில் உண்டு. அவர்களை நமக்கு தெரியும். நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அவர்களின் ஆயுதம் என்னவென்று நமக்கு தெரியும். தேவையென்றால் நம்மை காத்துக் கொள்ள அந்த ஆயுதத்தை தூக்க கூடியவர் தாம் நாம்.

ஆனால் தீவிரவாதிகள் அப்படியா?அவர்கள் யார்? அவர்களுடைய கொள்கைகள் என்ன? லட்சியம் என்ன? பக்கத்து நாட்டில் குண்டு வைப்பதால் என்ன லாபம்? மனிதர்களை கொல்வதால் எப்படி இவர்கள் லட்சியம் நிறைவேறும்? இப்படி கேள்விகள் கிளை பரப்பி விரிகின்றன.

அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு Al Qaeda மிக பிரபலமாகிவிட்டது. அது போல Mujahideen, Taliban தற்போது ISIS என்று கடந்த 30 வருடங்களில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு அமைப்புகள் அவர்கள் இயங்கிய பகுதியில் அமைதியை சீர் குலைத்து பேரழிவுகளை உருவாக்கினார்.

தீவிரவாதம் உலகளாவிய பிரச்சினை. ஒவ்வொரு நாடும் தீவிரவாதத்தை ஒடுக்க மிக பெரும் பணம் செலவழித்து ஆயுதம் வாங்குகிறது. அதே சமயம் தீவிரவாதிகளுக்கு ஆயுதம் விற்கும் நாடுகளும் இருக்கின்றன தானே? தீவிரவாதிகள் அரசின்மைவாதிகள் (anarchists) அல்ல. அவர்கள் விரும்புவது Chaos, Lawlessness. அவர்களின் குறி அரசாங்ககள், அரசின் நிறுவனங்கள். ஆனால் பலியாவது என்னமோ பொது மக்கள் தான். பின்னர் காவல் துறை மற்றும் ராணுவத்தினர்.

கடந்த 5 வருடங்களில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் நடந்த தீவிரவாத தாக்குதலில் அதிகம் இறந்தது அன்றாடம் உழைத்து சாப்பிட்டு கொண்டிருந்த பொது மக்கள் தான். பொது மக்கள் பெரிய லட்சியங்களும், கொள்கைகளும் இல்லாதவர்கள் தான் ஆனால் அதற்காக அவர்கள் உயிரை எடுக்க இந்த தீவிரவாதிகள் யார்? இந்த பொது மக்களை காக்கும் பொருட்டே அரசாங்கம் இருக்கிறது. அரசின் தலைலயாய கடமை அதன் மக்களை காப்பதே.

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களை கட் டதனொடு நேர் (குறள் 550)

அரசானது கொடியவர்களை களையெடுத்து மக்களை காக்க வேண்டும்.

ஆனால் நான் ஆயுதம் தாங்கியவனிடம் இருந்து தான் உன்னை காப்பேன், நோய் நொடியில் இருந்து உன்னை காக்க மாட்டேன் என்று அரசாங்கம் கைவிரிக்க முடியாது அல்லவா? பாதுகாப்பிற்கு பிறகு அரசாங்கம் அதிகம் முதலீடு செய்ய வேண்டியது தன் மக்களின் கல்வி, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்திற்கும் தானே?

இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஆலையால் சுகாதாரம், ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது என்று தானே மக்கள் அதை மூடச் சொல்லி போராடினார்கள்?

உலக நாடுகளுக்கு பயணம் செய்து தீவிர வாதத்திற்கு எதிராக கை கோர்ப்போம், இணைந்து போராடுவோம் என்று முஷ்டி முறுக்கும் பிரதமர் இதற்கு ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?

மக்களுக்காக தானே அரசாங்கம்? மக்கள் கேள்விகளுக்கு தெளிவான பதில் கிடைத்தால் அவர்கள் ஏன் தெருவுக்கு வருகிறார்கள்?  அவர்களை தெருவுக்கு வரவைத்து, உயிர்பலியும் வாங்கி விட்டு பயங்கரவாதிகள், சமூக விரோதிகள் போராட்டத்தை திசை திருப்பி விட்டார்கள் என்றால் என்ன அர்த்தம்?

இந்த பயங்கரவாதிகள், சமூக விரோதிகள் யார்? பார்ப்பதற்கு எப்படி இருப்பார்கள்? அவர்கள் இந்த போராட்டத்தை திசை திருப்புவதன் நோக்கம், லாபம் என்ன?

பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் திருடர்களின் mug shots படங்களை மாட்டி வைத்திருப்பார்கள். பொது மக்களை உஷார்படுத்துவதற்கு. ஒருவர் குற்ற செயலில் ஈடுபட்டு பிடிப்பட்டுவிட்டால் அவரை பற்றிய விவரங்கள் காவல் துறையிடம் பதிவாகி விடுகிறது. ஒருவர் மீண்டும் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடும் போது அவர் எளிதில் வெளிவர முடியாத சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து விடுவார்கள். குண்டர் தடுப்பு பிரிவு என்று சொல்வார்கள்.

அதாவது pick pocket ல் இருந்து 'மோசமானவர்களில் முக்கியமானவர்கள்' பற்றிய விவரங்கள் அரசிடம் இருக்கிறது. இவர்களை பற்றி பொது மக்களுக்கு தெரியப்படுத்தவும் செய்கிறது.

நிலைமை இப்படி இருக்கும் போது தீவிரவாதி, பயங்கரவாதி, சமூக விரோதி என்றால் ஆதாரத்தை காட்ட வேண்டியது தானே?! போதாக்குறைக்கு இந்திய மக்களின் அடையாள அட்டையான ஆதாரில் கை ரேகை வரை சேமித்து வைத்திருக்கிறார்கள்.

பல குற்ற செயல்களில் ஈடுபட்ட பிறகு தான் ஒருத்தர் மீது குண்டாஸ் வழக்கு பதிய முடியும். ஒருத்தரை பயங்கரவாதி, சமூக விரோதி என்றால் அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருக்க வேண்டுமல்லவா? அப்படியென்றால் அவரை பற்றிய விவரங்கள் அரசிடம் இருக்கும் தானே? பின்னர் மக்களிடம் அதை காட்டுவதில் என்ன பிரச்சினை?

இந்தியாவில் தமிழ் நாட்டில் தான் அதிகமான CCTV பயன்படுத்தப்படுகிறது என்பது தெளிவு. அப்படி எந்த CCTV யிலும் விழாமல் போக இந்த பயங்கர வாதிகள், சமூக விரோதிகள் என்ன மாய மனிதர்களா?

தீவிர வாதிகள், பயங்கரவாதிகள், சமூக விரோதிகள் அனைவருக்கும் easy target பொது மக்கள், பொது மக்களின் சொத்து தான். எந்த தீவிர வாதியும் பொது மக்களுடன் கை கோர்த்து தனியார் ஆலைக்கு எதிராக போராட மாட்டான். போலவே பயங்கரவாதிகளும், சமூக விரோதிகளும். அவர்களுக்கு பொது மக்கள் no risk targets. அவ்வளவே. குண்டு வைத்து விட்டு நாங்கள் தான் வைத்தோம் என்று அறிக்கை விடுபவர்கள் அவர்கள். இவர்கள் யாரும் தாக்கி அந்த போராட்டத்திற்கு வந்தவர்கள் உயிரிழக்க வில்லை. பின்னர் எப்படி 13 பேர் இறந்தார்கள்?

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின் (குறள் 560)

பி.கு

In war, truth is the first casualty - Aeschylus

No comments:

Post a Comment