Tuesday, 29 May 2018

இணையம் இல்லாத நான்கு நாட்கள்


நான் திறன்பேசி (பயப்படாதீங்க, smartphone தான்) வாங்குவதை முடிந்த அளவு தள்ளி போட்டு என்னுடைய அப்பா "ரோட்ல போறவன் வாறவன்லாம் பத்தாயிரம் ரூபாய் phone வச்சிருக்கான் நீயென்ன ஒரு உப்புகல்லுக்கு பெறாத phone வச்சிருக்க" என்று கேட்டு...

பின்னர் நான் மிகவும் மதிக்கும் என் நண்பனின் அண்ணன் "கொஞ்சம் update ஆகுடா தம்பி, communicate பண்ண comfortable அ இருக்கும்ல"ன்னு சொல்லி பிறகு அவரே தேர்ந்தெடுத்து வாங்கியும் கொடுத்தார்.

அவர் வாங்கி கொடுத்தது nov2015ல். இன்றும் அதைத்தான் பயன்படுத்துகிறேன். நான் பயன்படுத்தும் விதத்திற்கு அது இன்னும் இரண்டு ஆண்டுகள் கூட வரும்.

பள்ளி நண்பர்கள் Whatsapp குழுவிற்கு இறுதியாக வந்து சேர்ந்தது நானே. அவர்கள் group ஆரம்பித்து, அரட்டை அடித்து ஓய்ந்த பிறகு தான் வந்து சேர்ந்தேன்.

என்னுடைய மாணவர்களுக்கும் நண்பர்களுக்கும் நான் என்ன பகிர்வேன் என்பது நன்றாக தெரியும். ஒரு பயலும் எதையும் படிக்க மாட்டானுக. ஆனாலும் smsல் இருந்து whatsapp என்பது சிக்கி முக்கி கல்லை வைத்து நெருப்பை உண்டு பண்ணிக்கொண்டிருந்தவர்கள் கையில் cigarette lighter கொடுத்தது போல தான். அதான் தினம் ஆயிரம் வதந்திகளை பற்ற வைக்கிறார்களே!!!

WhatsAppன் சாத்தியங்கள் தெரிந்து அதை நன்றாகவே உபயோகபடுத்தியிருக்கிறேன், பயன்படுத்தியிருக்கிறேன்.

இப்போது தீடிரென ஒரு மன விலக்கம். கொஞ்சம் பயன்படுத்தாமல் இருந்து பார்க்கலாம் என்றும் முயற்சி செய்தேன். அட்டவணை போட்டு அனுப்பி கொண்டிருந்த எந்த message ம் அனுப்பாமல் இருந்தேன்.

ஒரு கை விரல் எண்ணிக்கையை விட குறைவான நண்பர்கள் எங்கே message என்று உரிமையோடு கேட்டார்கள். ஏன் நான்கு நாட்களாக online வரவில்லை? என்று யாரெல்லாம் கேட்கிறார்கள் என்று பார்த்தேன். அப்படி ஒரு நண்பர் தான் கேட்டார். நான் இவர்கள் கேட்பார்கள் என்று எதிர்பார்த்தவர்கள் கேட்கவில்லை.  இந்த ஊடகம் மக்களுக்கு இதற்கு முன் இருந்ததை விட நெருக்கமான, மேம்பட்ட நட்புகளை,  உருவாக்கி தரவில்லை. இது மற்றுமொரு கேளிக்கை தளமாகவே எஞ்சுகிறது. 

இந்நிலையில் தூத்துக்குடியில் நடந்த கலவரத்தை தொடர்ந்து இணையத்தை துண்டிப்பது குறித்து தமிழக அரசு அறிவித்தது.

நான் தூத்துக்குடிக்கு தினம் வேலைக்கு சென்று திரும்புகிறேன். வீடு கோவில்பட்டியில். தூத்துக்குடி மாவட்டத்திற்குள் தான் இருக்கிறது. இணையம் இல்லாதது  என் அன்றாட வாழ்க்கையை எந்த வகையிலும் பாதிக்காது. மேலும் நானும் சமீப காலமாக மிக குறைந்த அளவில் தான் இணையத்தை பயன்படுத்தி கொண்டிருந்தேன்.

இந்த நடுவண் அரசு புண்ணாக்கு மண்டையர்கள் Digital India என்று இந்த மக்களை இணைய பரிவர்த்தனை பக்கம் அடித்து இழுத்து சென்று விட்டு இப்படி 3 மாவட்டத்திற்கு இணையம் கிடையாது என்று மாநில அரசு அறிவித்தால் எத்தனை பொருளாதார பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் என்று கேட்க வேண்டாமா? இறந்தவர்கள் பற்றி கேட்கவிட்டாலும் பொருளாதாரம், வளர்ச்சி என்று ஒரு பாவனையாவது செய்வார்கள். இத்தனைக்கும் தூத்துக்குடி துறைமுக நகரம் வேறு. ஆனால் கேட்கவில்லை. எப்படி கேட்பார்கள்?! ஏன் கேட்கமாட்டார்கள் என்று உங்களுக்கு தெரியாதா?

என்னுடைய நண்பன் வெளிநாடு செல்வதற்கான பயணச்சீட்டு இணையம் மூலம் பதிவு செய்வதற்கு நாங்கள் கோவில்பட்டியில் இருந்து 8 kilometre bikeல் பயணம் செய்து விருதுநகர் மாவட்ட எல்லையை அடைந்து அங்கிருந்து பதிவு செய்து விட்டு திரும்பினோம்.

இணையத்தை துண்டித்தது குறித்து இனி வரும் நாட்களில் memes போட்டு பழி வாங்குவார்கள்.

என்னதான் இணையம் பல விசயங்களை சுலபமாக மாற்றியிருந்தாலும் நாம் அதன் மீது உரிமை கொண்டாட முடியாது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. சூரிய ஒளி, காற்று போல மனிதன் தடை போட முடியாத பொருள் அல்ல. நாம் இணையத்தை பயன்படுத்தும் ஒரு வாடிக்கையாளர், நுகர்வோர் மட்டுமே.

மக்கள் நீதி மன்ற வாசல் ஏறி நீதி பெற்று இணையம் மீண்டும் வந்துவிடும் தான். நமக்கு தான் Demonitization, ஊருக்குள் வெள்ளம் வருவது, GST, 14 மணி நேர மின்வெட்டு, கலவரம், துப்பாக்கி சூடு என்று இந்த அரசாங்கம் பல suruvival பயிற்சிகளை அளித்துக் கொண்டிருக்கிறதே!!

இணையம் இல்லாமல் வாழ மாட்டோமா என்ன?

Internet Service Provider கள் பெரும்பாலும் தனியார் தான் என்றாலும், அவர்கள் கட்சிகளுக்கு பெரும் நிதி கொடுக்கிறார்கள் என்றாலும், அவர்களின் பினாமிகள் மூலம் நாட்டை ஆள்கிறார்கள் என்றாலும் அரசாங்கம் இணையத்தை துண்டிக்க சொன்னால் அவர்கள் துண்டிக்க தயாராகவே இருக்கிறார்கள்.

இந்த இணையம் இல்லாத நாட்களில் கொஞ்சம் மனித உறவுகள் மேம்படலாம்! பல சாத்தியங்கள் உண்டு.

ஆனால் பாருங்கள் இந்த ரத்த மடையர்கள் தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகளை, செய்திகளை நிறுத்தவோ, துண்டிக்கவோ சொல்ல வில்லை.

இணையம் இல்லாவிட்டால் tv remote ற்கு சண்டை போட்டுகொண்டு சாவார்கள் என்று எதிர்பார்த்து இருப்பார்கள்.

இணையம் தகவல் பரிமாற்றம், தொழில் பரிவர்த்தனை மின்னல் வேகத்தில் நடைபெற உதவி செய்வது எல்லாம் உண்மை தான்.
ஆனால் ஜனநாயகம் தழைத்து வளர உதவி செய்கிறதா? இந்தியர்களாகிய நாம் இணையத்தின் சாத்தியத்தை எந்த அளவிற்கு பயன்படுத்தி கொண்டிருக்கிறோம்/பயன்படுத்துகிறோம்?

இங்கே கோவில்பட்டியில் இருந்து கொண்டு யாரை வேண்டுமானாலும் இணையத்தில் கேள்வி கேட்கலாம். ஆனால் இதெல்லாம் இயல்பு வாழ்க்கையில் சாத்தியம் ஆக இன்னும் 200 ஆண்டுகள் கூட ஆகலாம். அதாவது நீங்களோ, நானோ முதல்வர், பிரதமரை நேரில் சந்தித்து கேள்வி கேட்டு பதில் பெற. அவ்வளவு ஏன் குறைந்த பட்சம் ஒரு MLA, ஒரு தாசில்தார் மாதிரி ஆட்கள் ஒரு இரண்டு நிமிடம் நின்று, பேசி, நம் கேள்விக்கு பதில் சொல்வார்களா?

இணையம் அதிகார பரவலாக்கம் செய்ய உதவி இருக்கிறதா? அல்லது இந்த அரசாங்கம் அதை விரும்புகிறதா? சிலர் NEET மாதிரி தேர்வுகள் இணையம் மூலம் நடந்ததாது ஏன்? என்று கேட்கிறார்கள். NEET ஏன் நடத்துறான் என்பதில் இருந்து நம் கேள்வி இப்படி மாறியிருக்கிறது என்றால் இணையம் நம் சிந்தனையை சீர்செய்து கொள்ள உதவ வில்லை என்று தானே அர்த்தம்?

இந்த இணைய முடக்கம் எல்லாம் புதிதும் அல்ல. மன்மோகன் பிரதமராக இருக்கும் போது அவருடைய அரசுக்கு எதிரான வதந்தி பரவுவதை தடுக்க நாளொன்றுக்கு 5 sms என்று குறைத்தார். அப்போது தான் மக்கள் whatsapp ஐ கண்டு கொண்டனர்.

கருத்து சுதந்திரத்தை பல வகைகளில் இந்தியாவில் முடக்கி இருக்கிறார்கள். இங்கே இந்த இணைய முடக்கம் வதந்திகளுக்கு மத்தியில் தூத்துக்குடி மக்கள் மத்தியில் இருந்து உண்மை செய்திகள் வெளியே செல்ல கூடாது என்றும், அவர்கள் விரும்பிய வதந்திகள் மற்ற மாவட்ட மக்களை போய் சேர வேண்டும் என்னும் நோக்கத்தில் செய்யப்பட்டது போலவே உள்ளது.

அப்படி வதந்தி பரப்பி ஏதேனும் சாதிக்க முடியுமா? முடியும். அப்படி பிரதமர் ஆனவர் ஒருவர் இருக்கிறார். சினிமா பாட்டில் வருவது போல் உண்மை ஜெயிப்பதற்கு தான் ஆதாரம் தேவை, பொய் ஜெயிப்பதற்கு குழப்பமே போதும்.

இந்த இணையம் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த உதவியிருக்கிறதா? என்ற கேள்வியையும் நாம் கேட்க வேண்டும். சம்பிரதாய ஊடகங்கள் செயல்படாத, பேச விரும்பாத, செல்ல முடியாத இடத்தில் இருந்து நமக்கு செய்திகளை கொண்டு வருவது என்னவோ உண்மை தான் ஆனால் பெரும்பாலும் கேளிகைக்காக தானே இணையம் பயன்படுகிறது, பயன்படுத்தப்படுகிறது?!

சென்னை வெள்ளம், ஜல்லிக்கட்டு போராட்டம் போன்ற சமயங்களில் மக்களை ஒருங்கிணைக்க பெருமளவு இணையம் பயன்பட்டது. அதை கவனத்தில் கொண்டு தான் இந்த முறை இணையத்தில் கை வைத்து விட்டார்கள்.

இணையம் இல்லாமல் மொத்த தூத்துக்குடி மக்களும் கிளம்பி தெருவுக்கு வந்து விடுவார்கள் என்றே நினைத்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்க வில்லை. வெறுங்கையோடு வருபவனை தோட்டவால் துளைத்தால் அதில் என்ன வீரம் இருக்கிறது? எதிரி என்ன ஆயுதம் வைத்திருக்கிறான் என்று தெரியாமல் சண்டைக்கு போவதே நமக்கும் பழக்கமாக இருக்கிறது.

ஒரு பக்கம் இணையத்தில் அரசாங்கம் நடத்த விரும்பும் பிரதமர், இணையத்தில் கட்சியை, தன்னை பிரபலப்படுத்தி கொள்ள விரும்பும் அரசியல் தலைவர்கள் மறுபுறம் இணையத்திலும் அனைத்தையும் வேடிக்கையாக்கும் மக்கள் என்று இணையம் எந்த வகையிலும் மக்களுக்கும் ஆளுபவர்களுக்கும் இடையிலான உரையாடலை தொடங்கி வைக்க கூடிய புள்ளியாக இல்லை.

ஆனால் இங்கே சரியோ தவறோ அவர்கள் விரும்பியதை எழுதி பதிவு செய்யக்கூடிய சாத்தியம் இருக்கிறது. இது ஆள்பவர்களுக்கு எட்டி அவர்கள் தங்களை திருத்தி கொள்வார்கள் என்பதல்ல விஷயம். ஆனால் இதற்கு பயப்படுகிறார்கள் என்பது தெரிகிறது. துட்டை கொடுத்து தேர்தல்களை வெற்றி பெற முடியும் என்பதை தாண்டி அரசாங்கத்தை எதிர்த்து கருத்து பரவுவதை தடுக்க முயல்கிறார்கள்.

பணம் கொடுத்து வாக்குகளை வாங்க முடிந்தாலும் மக்கள் மத்தியில் நன்மதிப்பு இல்லாவிட்டால் தேர்தல்களை ஜெயிக்க முடியாமல் போகலாம் என்று பதறுகிறார்கள்.

வெற்றி பெற்று என்ன செய்வார்கள்? அவர்களுக்கு பெரும் பணம் செலவழிக்கும் பெரு முதலாளிகளுக்கு சாதகமான திட்டங்களுக்கு அனுமதி கொடுப்பார்கள், வங்கிகளில் இருந்து பொது மக்கள் பணத்தை எடுத்து அவர்களுக்கு கடன் கொடுப்பார்கள்.

மக்களும் எல்லாம் Illuminati களின் சதி என்று பேசிக்கொண்டு இருப்பார்கள். அந்நேரம் இவர்கள் துட்டு வாங்கி கொண்டு ஓட்டு போட்டதை வசதியாக மறந்து விடுவார்கள்.

"எல்லாம் Illuminati சதி" என்று  சொன்ன ஒருத்தரை என் நண்பன் "Whatsapp Victim" என்று சொன்னான். அது உண்மை தானே? மெய்ப்பொருள் காண்பது அறிவு. எதையும் தேடாமல், விசாரிக்காமல், corroborative evidence இல்லாமல் நம்புவது முட்டாள் தனம் இல்லையா?

ஒரு செருப்பு வாங்க ஒரு டஜன் கடை கூட ஏறி இறங்குவோம் இல்லையா? ஏன்? கால்கள் முக்கியம் அல்லவா! நிற்பதற்கும் நடப்பதற்கும் சௌகரியமாக இருக்க வேண்டும் அல்லவா? அப்படியென்றால் மூளைக்கு செல்லும் தகவல்கள், செய்திகள் சரியானவையாக இருக்க வேண்டாமா?

மொத்த இந்தியாவும் ஏமாந்து நிற்பது இங்கே தான். நம்மிடம் நல்ல நூலகங்கள் இல்லை. தேடி வாசித்து தெரிந்தும், அறிந்தும் கொள்வதற்கு. நாம் பெரிதும் இணையம் சார்ந்து இயங்கி கொண்டிருக்கிறோம். Corroborative evidence இல்லாமல் செய்தித்தாள்களும் செய்திகளை பிரசுரிகின்றன!

இணையத்தில் எதை அதிகமான நபர்கள் படித்தார்களோ அதுவே உங்களுக்கும் உடனே படிக்க கிடைக்கும். நீங்கள் கொஞ்சம் தேடவில்லை என்றால் நீங்களும் மற்றவர்களை போலவே சிந்திப்பீர்கள்.

இணையம் உங்களுக்கு தகவல்களை அளிக்கும். 20 வருடத்திற்கு முன் மனப்பாடம் செய்து வைத்த விஷயங்களை நொடிப்பொழுதில் தேடித்தரும். ஆனால் அந்த தகவல்களை வைத்து அறிவை பெருக்க முடியாது. ஏற்கனவே இணையத்தில் இருக்கும் தகவல்களை நீங்கள் மனப்பாடம் செய்வதால் யாருக்கு என்ன லாபம்?

இணையத்தால் உங்களுக்கு சிந்திக்க சொல்லி தர முடியாது. தீவிர வாசிப்பும், வாசிப்பவர்களுடனான உரையாடலுமே உங்கள் சிந்தனையை கூர் தீட்டி கொள்ள உதவும். ஆனால் அப்படி நபர்கள் இணையத்தில் இருந்து விலகியே இருக்கிறார்கள். நாம் தான் அவர்களை தேடிச்செல்லவேண்டும்.

சூழியல் செயல்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், சிந்தனையாளர்கள், தத்துவ ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள்  இது போன்ற துயர சம்பவங்களுக்கு எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்று கவனிக்க வேண்டும். லாப நஷ்டம் பார்க்காமல், பக்க சார்புகள் இல்லாமல் இவர்களாலேயே நேர்மையான கருத்துக்களை தெரிவிக்க முடியும்.

இவர்களை எப்படி கண்டுபிடிப்பது என்றால் தேடுபவன் கண்டடைவான் என்றே சொல்ல முடியும்.

இயல்பில் இருந்து விலகி இணையத்தில் வாழ்ந்தால் Inception படத்தில் வருவது போல limbo வில் மாட்டிக்கொள்ள நேரும். அப்படி மாட்டிக்கொண்டவர்கள் கண்களுக்கு தான் பிரதமர்அவதார புருசனாக தெரிகிறார். அந்த limbo விலும் எதிர்தரப்பு உண்டு. அவர்களும் சலிக்காமல் சண்டையிடுகிறார்கள்.

பூனை கண்ணைமூடிக்கொண்டு பாலை குடித்தால் உலகமே இருண்டது என்று நினைக்குமாம்.  இணையத்தில் வாழ்பவர்கள் அந்த பூனைகளை போல.

பி.கு

இதை எழுதி இணையம் மூலமே பலருக்கு கொண்டு சேர்க்கமுடியும் என்பது தான் நகைமுரண்.

1 comment:

  1. தீவிர வாசிப்பும், வாசிப்பவர்களுடனான உரையாடலுமே உங்கள் சிந்தனையை கூர் தீட்டி கொள்ள உதவும். ஆனால் அப்படி நபர்கள் இணையத்தில் இருந்து விலகியே இருக்கிறார்கள். It's true.
    இதை எழுதி இணையம் மூலமே பலருக்கு கொண்டு சேர்க்கமுடியும் என்பது தான் நகைமுரண்.
    Always the final lines of your essays enchants the reader. Thank you for unveiling some hidden truths.

    ReplyDelete