நீங்கள் தொடர்ந்து தமிழ் தினசரிகள் வாசிப்பவர்களாக இருந்தால் மோடி பற்றிய செய்தி வரும் போதெல்லாம் "பிரதமர் மோடி பெருமிதம்" என்ற உப தலைப்பை பார்க்கலாம்.
தமிழ் தினசரிகள் பயன்படுத்தும் தமிழ் வார்த்தைகளின் எண்ணிக்கை ஒரு ரெண்டாயிரம் இருந்தாலே ஆச்சரியம். அப்படியென்றால் அவர்களுக்கு பெருமிதத்திற்கு இணையான மாற்று சொல் தெரியவில்லை. இல்லையென்றால் பிரதமர் ஒரே பிட்டை தான் பிரதமர் ஆன நாளிலிருந்து ஓட்டிக் கொண்டிருக்கிறார். உங்களுக்கு உண்மை என்னவென்று தெரியும் என்று நம்புவோமாக.
நான்கு வருடத்தில் இவர்கள் மக்களை எத்தனை துயரங்களுக்கு ஆளாக்கினார்கள் என்று மக்களிடம் கேட்டால் சொல்வார்கள். செய்தி, இணைய ஊடகங்கள் உண்மையில் இருந்து விலகி இருந்து செயல்பட்டு கொண்டிருக்கின்றன.
கேள்வி என்னவென்றால் என்ன செய்து கிழித்து விட்டார் என்று இவர் பெருமிதப்பட்டுக்கொண்டே இருக்கிறார்?
ஊர்நாட்டில் கிழவிகள் எங்க தாத்தா, எங்க அப்பா, எங்க குடும்பம் என்று பழம் பெருமை பேசிக்கொண்டு இருப்பார்கள். அது போல தான். பேரு பெத்த பேரு குடிக்க நீலு லேது.
ஒரு ஏழாம் வகுப்பு மாணவனை போல யாரோ எழுதி கொடுத்த உரையை மனப்பாடம் செய்து, அதை நாடகத்தனமான உடல் மொழியுடன் பயிற்சி செய்து, ஏற்ற இறக்கங்கள் சேர்த்து இறுதியாக பேசும் இடத்திற்கு ஏற்றார் போல் ஒரு 'costume' அணிந்து கொண்டு ஒரு பட்டிமன்ற கேளிக்கை பேச்சாளர் போல தானே பிரதமர் நடந்து கொண்டிருக்கிறார்?!
தமிழ் நாட்டில் தான் 50 வருடங்களாக இதை பார்த்து கொண்டிருக்கிறோமே!! ஒரு நாட்டின் பிரதமர் ஒரு தொலைநோக்கு கொண்ட தலைவனாக இருக்க வேண்டும். இவரோ வந்ததில் இருந்து மாறு வேட போட்டிக்கு வந்தது போல கனைத்துக்கொண்டிருக்கிறார்.
எந்த நாட்டிலாவது தன்னுடைய பெயரை தன்னுடைய உடை முழுவதும் பொறித்து அணிந்து கொண்ட தலைவரை பார்த்திருக்கிறீர்களா? அப்படி அணிய வேண்டும் என்றால் ஒரு விளையாட்டு வீரர் அணிந்து கொள்ளும் jersey போதுமே!! அவர்கள் பணத்திற்காக விளையாடுவது போல இவர்_________ (கோடிட்ட இடங்களை நிரப்பி கொள்ளுங்கள்)
நன்றாக உடையணிந்து கொள்ளட்டும் அதில் என்ன பிழை இருக்கிறது? ஆனால் ஊரை ஏமாற்றும் நோக்கில் உடை அணிய கூடாது அல்லவா! வட கிழக்கு மாநிலத்தில் நின்று கொண்டு, பழங்குடி மக்கள் போல் உடையணிந்து கொண்டு, ஒன்றிரண்டு வார்த்தைகளை உள்ளூர் மொழியில் பேசி விட்டு மீதியை ஹிந்தியில் தொடருகிறார். இது பாவனை அல்லாமல் வேறென்ன?
வெளிநாட்டுக்கு சென்றாலும் ஹிந்தியில் தான் பேசுகிறார். சரி பேசட்டும். வெளிநாட்டு தலைவர்கள் இங்கே வரும் போது அவர்களுக்கு தெரிந்த மொழியில் தானே பேசுகிறார்கள். ஆனால் ஹிந்தியை தவிர வேறெந்த மொழியும் பிழைத்திருக்க கூடாது என்பது போல அவரும் அவருடைய அடிபொடிகளும் செய்யும் அட்டகாசங்களுக்கு பதில் என்ன?
Olympics விளையாட்டுகளுக்கு Mascot ஒன்று எப்போதும் இருக்கும். அது விளையாட்டு நடக்கும் நாட்டின் கலாச்சார, பண்பாட்டு அடையாளங்களை பிரதிபலிப்பதாக இருக்கும். மோடி தற்கால இந்தியாவின் Mascot.
இந்தியாவின் என்பதை விட பன்முகத்தை விரும்பாத, ஜனநாயகத்தின் கழுத்தை நெறிக்கும், தொழில் அதிபர்களுக்கு துணை போகும், சாதி மதத்தின் பேரில் மக்களை பிளவு படுத்தும், போலி அறிவியல் பேசும், வதந்திகளை பரப்பி மக்களை பதட்டத்தில் வைக்கும் குறுகிய சிந்தனை, செயல், மனம் கொண்ட கும்பலின் Mascot.
இங்கே நடக்கும் அத்தனையும் அவர் பேரை சொல்லித்தான் நடக்கிறது. ஆனால் அவரோ என்ன ஏதென்று தெரியாமல் பெருமிதபட்டுக்கொண்டிருக்கிறார். இல்லை அவருக்கு தெரியும். வடிவேலுவின் கூட்டாளிகள் கடையில் திருடும் போது கடை முதலாளியை திசை திருப்ப வடிவேலு செய்யும் தகிடுதத்தங்களை போன்றவை தான் இந்த பிரதமரின் பெருமித நாடகங்கள்.
அமெரிக்காவில் அவர்களுடைய ஜனாதிபதியை கதா நாயகனாக பார்க்க கூடிய வழக்கம் இருக்கிறது. வருடத்திற்கு ஒரு சினிமாவாவது முன்னாள் ஜனாதிபதி குறித்தோ அல்லது ஜனாதிபதியே கடத்தல், தீவிரவாத தாக்குதல் போன்றவற்றை சமாளிப்பது போன்றோ படங்கள் எடுத்து வெளியிடுகிறார்கள்.
அங்கே உள்ள சிறுவர்களுக்கு Batman, Spider Man போல அவர்களின் ஜனாதிபதியும் ஒரு super hero தான். ஜனாதிபதியை சந்திப்பது, கை குலுக்குவது, புகைப்படம் எடுத்து கொள்வது எல்லாமே பெருமைக்குரிய விஷயங்கள்.
ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிடுவது என்று ஒருத்தர் அறிவித்ததில் இருந்தே அவரை ஒரு brand ஆக முன்னிறுத்த விளம்பர நிறுவனங்கள் தங்கள் வேலையை தொடங்கி விடுவார்கள். அப்படி நிறுவனங்கள் மோடி முதல் அன்பு மணி வரை இப்போது இந்தியாவிலும் வேலை செய்கிறார்கள்.
ஜனாதிபதி நாயுடன் விளையாடிய காட்சி, ராணுவத்தினரை உற்சாகப்படுத்திய காட்சி என்று அவ்வப்போது புகைப்படங்கள் வெளியாகும். நாம் பல காலமாக hollywood படங்களை சுட்டு சினிமா எடுத்து கொண்டிருக்கிறோம். இப்போது பிரதமர் அங்கே ஜனாதிபதி செய்வதை போல் இங்கே செய்கிறேன் என்று ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடிக்கொண்டிருக்கிறார். விடுமுறை எடுத்து கொள்வதில்லை, வாங்கும் சம்பளத்திற்கு மேல் வேலை செய்கிறேன் என்று விளம்பரம் வேறு.
Congress தன்னுடைய இரண்டாவது 5 வருட காலத்தில் ஏகத்திற்கும் சொதப்பி வைக்க மக்கள் கடுங்கோபத்தில் ஓட்டை மாற்றி குத்தி விட்டனர். மற்ற படி இவர் குஜராத்தில் "கிழித்த கிழிக்கி" ஒட்டு போட்டார்கள் என்பது எல்லாம் cock and bull story. இவர் குஜராத்தில் கிழித்தது போல் ஏன் பா ஜ க ஆளும் மற்ற மாநிலங்களில் கிழிக்க முடியவில்லை? இவர் யோசனை சொல்லியிருக்கலாமே?
அவர் தன்னை விளம்பரம் செய்ய உதவியவர்களுக்கு சிறப்பாக அனைத்தையும் செய்து கொடுத்து விட்டார். மீண்டும் அவர்களுக்கு சேவை செய்ய தயாராக உள்ளதாக சொல்லிக்கொண்டு திரிகிறார்.
Petrol விலை குறையாமல் பார்த்து கொள்வது, அதையும் இதையும் சொல்லி மக்களின் பணத்தை புடுங்குவது, வங்கி குறைந்த பட்ச வைப்பு தொகையை அதிகரித்தது, GST மூலம் அரசு வருவாய் அதிகரித்திருக்கிறது என்று பெருமிதம் கொள்வது எல்லாம் எதற்கு? அத்தனையும் எடுத்து இவர் தேர்தல்களை ஜெயிக்க உதவிய தொழில் அதிபர்களுக்கு கடன் கொடுப்பதற்கு. திருப்பி செலுத்தினால் தானே கடன்? அதனால் அன்பளிப்பு செய்ய என்று திருத்தி வாசியுங்கள்.
கொஞ்ச நாட்களுக்கு முன்னால் அரசாங்கம் விரும்பினால் உங்கள் வங்கி சேமிப்பு பணத்தை எடுத்துக்கொள்ளும் என்று ஒரு வதந்தி வலம் வந்தது நினைவு இருக்கிறதா? அது ஒரு வேளை உண்மையானால் "தாய் நாட்டின் மீது அளப்பரிய அன்பும், பற்றும் உடையவர்கள் இந்தியர்கள் என்று மோடி பெருமிதம், புகழாரம்" என்று மறுநாள் செய்தி வரும்.
MGR ஆட்சியில் இருந்த போது கட்சி தொண்டர்கள் அவருடைய படத்தை கையில் பச்சை குத்தி கொள்ள வேண்டும் என்று ஒரு உத்தரவு இருந்ததாம். மோடி அதைத்தான் விரும்புகிறார். இல்லாவிடில் இவர் போகும் கூட்டங்களுக்கு இவரின் முகமூடி அணிவிக்கப்பட்டு பள்ளி பிள்ளைகள் அழைக்கப்பட்டு வருவதை ஏன் அனுமதிக்கிறார்? இதை Narcissim என்றும் அவரை ஒரு megalomaniac என்றும் சொல்லலாம்.
இவர் எந்தளவுக்கு பெருமித படுக்கிறாராரோ அதே அளவுக்கு 'கள்ள மௌனம்' சாதிக்கிறார். தமிழ் நாடு சார்ந்த விஷயங்களில் பேசும் திறனை இழந்து விடுகிறார்.
பிரச்சார மேடைகளில் மன்மோகனையோ அவருக்கு முந்திய பிரதமர்களையோ குறை சொல்வதை ஒரு fashion னாக செய்து வருகிறார். முன்னாள் பிரதமர்கள், காலம்சென்றவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. விமர்சனம் செய்யட்டும். ஆனால் இவருடைய கட்சி ஆட்கள் மேல் குவியும் புகார்கள் குறித்து என்றைக்காவது வாயை திறந்து பேசி இருப்பாரா? அல்லது அவர்களை கண்டித்து இருப்பாரா?
நூறு கோடிக்கும் மேற்பட்ட ஜனத்தொகை கொண்ட நம் நாட்டில் கேளிக்கைகளுக்கு பஞ்சம் இல்லை. சினிமா, 24 மணி நேர தொலைக்காட்சி, 100 நாள் IPL, Big Boss போக இணைய தொடர்கள் என்று 365 நாட்களும் தீபாவளி தான்.
தமிழ் நாட்டில் கேளிக்கை தொழிலான சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களில் மூவர் மிக பெரிய வெற்றியை பெற்று இருக்கிறார்கள். ஜெயலலிதா இறுதி காலம் வரை சினிமா காமிரா முன் நடிப்பது போலவே பேசிக்கொண்டும் இருந்தார். "செய்வீர்களா, நீங்கள் செய்வீர்களா" என்று.
இவர்கள் ஏதோ புள்ளியில் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை தாண்டி அவர்களை மகிழ்விப்பது தான் பிரதானம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் போல. அதனாலேயே TV உட்பட இலவச பொருட்கள், Elite மது கடைகள் என்று வேறெங்கும் இல்லாத முன் மாதிரிகளை உண்டாக்கினார்கள்.
மோடி சினிமாவில் இருந்து வந்தவர் அல்ல. ஆனால் வியாபாரி. வியாபாரியின் மூல தனம் பணம், பொருட்கள் மட்டுமல்ல. பொய்களும் தான். கடைக்கு வந்த வாடிக்கையாளரிடம் அவர் தேடி வந்த பொருள் இல்லையென்று சொல்வது வியாபாரத்திற்கு நல்லது அல்ல. வந்துகொண்டிருக்கிறது, நாளைக்கு கிடைக்கும், அதற்கு பதிலாக இதை வாங்கி பாருங்கள் என்று எதை சொல்லியாவது வியாபாரத்தை நடத்த வேண்டும்.
"கருப்பு பணம் எங்கே என்றா கேட்டாய்? இந்தா demonitization"
"பொருளாதார வளர்ச்சி தானே? இந்தா GST"
"என்னய்யா பெரிய வேலைவாய்ப்பு? பக்கோடா கடை போடுங்க, Jack Ma வை பாருங்க"
"சுகாதாரம் இனி உங்கள் பொறுப்பு. ஸ்வச் பாரத். அனைவருக்கும் ஆரோக்கியம். எல்லாரும் யோகா செய்யுங்கள்"
"கடனை வசூல் செய்யாமல் என்ன செய்தோம் என்றா கேட்டாய், இனிமேல் குறைந்தபட்ச வைப்பு தொகை 3000, 5000"
என்று மக்கள் கேட்டது ஒன்று இவர்கள் செய்வது ஒன்று. அல்லது மக்களிடம் செய்வதாக சொன்னது ஒன்று செய்து கொண்டிருப்பது வேறொன்று.
இதை மக்கள் விரும்புகிறார்கள் என்று என்று இவர்களே முடிவு செய்து விட்டார்கள். யாரு பொண்டாட்டி பத்தினியோ அவன் கண்ணுக்கு தான் சாமி தெரியும் என்பது போல தேச பக்தி உள்ளவன் தான் உண்மை நோக்கத்தை புரிந்து கொள்வான் என்று வாயை அடைத்து விடுகிறார்கள்.
மோடி தாசன்களும் லாலே லா ல லாலா பாடிக்கொண்டு இருக்கிறார்கள். அதாவது மோடி எழுந்தா மலை போல, நடந்தா நதி போல என்று சம்பளம் வாங்காத அரசவை கவிஞர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் அ தி மு கவினர் ஜெயலலிதா காலில் விழுந்தது போல விழவும் செய்வார்கள்.
சினிமா நடிகர்களுக்கு, கிரிக்கெட் விளையாடும் பயல்களுக்கு ரசிக கூட்டம் போல ரசிக கூட்டம் வைத்திருக்கும் அரசியல் வாதியாக மோடி இருக்கிறார். Market இழக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது விரைவில் விளங்கும். அப்போது இந்த ரசிக கண்மணிகள் தங்களது fake account களை மூடிவிட்டு தலை மறைவாவர்கள்.
சூழ்நிலை இப்படி இருக்கும் போது யாரும் கேள்வி கேட்க போவதில்லை என்கிற தெனாவெட்டில் பொய்களை அள்ளி தெளிக்கிறார். ஊடகம் தான் உருப்படி இல்லையென்றால் எதிர்க்கட்சிகளும் எதிரியின் ஆயுதம் தீரும் வரை பதுங்கு குழியில் இருப்போம் என்கிற கொள்கைக்கு வந்திருக்கிறார்கள்.
மக்களிடம் செல்லாமல், ஆளுங்கட்சியின் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள இடைவெளியை சுட்டி காட்டாமல், தெருவில் இறங்கி போராடாமல், twitter, facebook என்று அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
காட்டில் புலிகள் இல்லையென்றால் மான் கூட்டம் மிகுந்து வனத்தை தின்று அழித்து தானும் அழிந்து போகும். இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது அது தான்.
மான் சைவ பட்சினி என்பதாலோ அது பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது என்பதாலோ அது செய்வது எல்லாம் சரியென்று ஆகிவிடுமா என்ன?
No comments:
Post a Comment