Saturday, 12 May 2018

In Bloom - முதல் காதல், முதல் சிகரெட், முதல் துப்பாக்கி

It was times like these when I thought my father, who hated guns and had never been to any wars, was the bravest man who ever lived. - Harper Lee, To Kill a Mockingbird

மனிதர்களுக்கு மகிழ்ச்சியே இல்லை. மகிழ்ச்சியாக இருக்க அவர்களுக்கு தெரியவில்லை. அடையாளங்களையும் துப்பாக்கிகளையும் வைத்திருப்பது வரை எவருமே உண்மையான மகிழ்ச்சியாக இருக்க முடியாது. -  ஜெயமோகன், கன்னிநிலம்

கிழக்கு ஐரோப்பாவில் உள்ள Georgia எனும் நாடு. சோவியத் உடைவுக்கு பிந்திய காலம். ரஷ்யாவுடன் போர் நடந்து கொண்டிருக்கின்றது. Tbilisi என்னும் நகரில் Eka, Katia என்ற  தோழிகள் இருவர். Eka வை விட Katia ஒன்றிரண்டு வயது மூத்திருக்கலாம் ஆனால் இருவர் வயதை கூட்டினாலும் 30 வருமா என்பது சந்தேகமே.

உலகத்தில் நடக்கும் அத்தனை அநீதியும், கொடுமையும் உற்சாகத்தை குறைக்காத வயது. முதலில் Eka வை தொடர்ந்து அவளுடைய குடும்பத்திற்குள் செல்லும் நாம் பின்னர் Katiaவின் கண்கள் வழியாக அவளுடைய குடும்பத்தை காண்கிறோம்.

Eka வயதிற்கு மீறிய பொறுப்புணர்வும், மன திடமும் உடைய பெண். சிறுமி என்று சொல்வது தான் சரியாக இருக்கும் என்றாலும் இங்கே Eka வின் மனமுதிர்ச்சி அவளை பெண்ணாக நினைக்க வைக்கிறது. 

Eka Ration கடையில் ரொட்டி வாங்குவதில் இருந்து அனைத்திலும் ஒரு திட்டமிடல், ஒரு தெளிவு, அதை செயல்படுத்தும் விதம் என்று புத்திசாலி நாயகி.

Katia வயதின் குறும்பும், அழகும், திமிரும், மிளிரும் பெண். Piano வகுப்புகளுக்கு செல்கிறாள். காதலன் என்று அவள் சொல்லாவிட்டாலும் அவளுக்கு ஒரு வாலிபன் மீது விருப்பம் இருக்கிறது. அவன் பெயர் Lado அவன் மாஸ்கோ செல்லவிருப்பதாக கூறிவிட்டு அவளுக்கு ஒரு கைத்துப்பாக்கியை கொடுத்துவிட்டு சொல்கிறான். திரும்பி வந்து திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் சொல்கிறான்.

Katia, Eka விடம் துப்பாக்கியை காட்டி என்ன அர்த்தம் என்று கேட்கிறாள். உன்னுடைய பாதுகாப்பை அவன் உறுதி செய்ய விரும்புகிறான் என்று Eka சொல்கிறாள்.

Eka மற்றும் Katia வின் உலகம் புற உலகின் பிரச்சினைகளை தாண்டி மகிழ்ச்சியானதாகவே இருக்கிறது. அவர்கள் உலகத்தில் ஆண்கள் இல்லை அப்படி இருந்தால் அவர்கள் பொறுப்பானவர்களாக இல்லை. Eka அவளுடைய அப்பாவை அவளுடைய அம்மாவின் அலமாரியில் தேடுகிறாள். அவர் எழுதிய கடிதங்களை படிக்காமல் அவர் விட்டு சென்ற சிகரெட் ஒன்றை எடுத்து நுகர்ந்து பார்க்கிறாள். அவளுடைய தந்தை எங்கே என்பது மர்மமாகவே உள்ளது. அவளிடம் வம்பு பண்ணும் பையன்களை பொறுத்துக்கொண்டு போகிறாள். ஒவ்வொரு நாளும்.

Katia வின் தந்தை ஒரு குடிகாரர். மீதியை சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். அவளுடைய வீட்டிற்குகீழ் கீழே வசிக்கும் Kota அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சொல்கிறான். அவனை முட்டாள் என்று சொல்லி Katia கடந்து செல்கிறாள்.

கையில் சுத்தியல் இருந்தால் எல்லாப் பிரச்சினையும் ஆணி போலவே தெரியும் என்று முத்துலிங்கம் ஒரு கதையில் எழுதி இருப்பார். இங்கே துப்பாக்கி வைத்திருக்கும் Katia, Eka விடம் வம்பு செய்யும் பையன்களை ஒரு கை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து துப்பாக்கியை Eka கையில் திணிக்கிறாள். அவர்களை மிரட்டு அது போதும் என்கிறாள். Eka அதை வைத்து என்ன செய்கிறாள் என்று திரையில் பாருங்கள்.

அரசியல் நிலையற்றதன்மை, உள் நாட்டு போர் நடக்கக்கூடிய நாட்டில் மக்கள் எந்த மாதிரி வாழ்கிறார்கள்?! படத்தில் நேரடி போர்க்காட்சிகள் இல்லாவிட்டாலும், போரை பற்றிய உரையாடல்கள் கதை நெடுக கேட்கிறது.

ஒரு காட்சியில் crossword puzzle நிரப்பும் பெண் கேட்கும் கேள்விக்கு ஒரு அமெரிக்கா மாகாணத்தின் பெயரை சரியாக சொல்லும் Eka Argentina கால்பந்து அணியின் பயிற்சியாளர் தெரியவில்லை என்று சொல்லிவிட்டு செல்கிறாள். அமெரிக்கா பற்றிய தகவல்கள் எப்படி நம்முடைய வாழ்வில் இரண்டற கலந்து விட்டன என்பதற்கான உதாரண காட்சி அது.

சமீபத்தில் வெளிவந்த coming of age படங்கள் மைய கதாபாத்திரங்களின் sexual orientation குறித்தே அதிகம் பேசியதாக தெரிகிறது. Blue is the Warmest Colour படத்தில் தொடங்கி Call me by Your Name, Princess Cyd வரை பல படங்களை நாம் சுட்டிக்காட்ட முடியும். அவை பெரும்பாலும் மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாட்டு படங்கள்.

பெற்றோர் இல்லாத வீட்டில் பையன்கள் கூடி பண்ணும் அட்டகாசங்கள் குறித்து போதுமான அளவு திரையில் பார்த்தாயிற்று. IN BLOOM ல் பதின் பருவத்து பெண்களை வைத்து ஒரு சுவாரசியமான காட்சி. Eka வின் வீட்டில் Eka மற்றும் அவளுடைய அக்காவின் தோழிகள் சேர்ந்து புகை பிடித்துக்கொண்டு, wine அருந்திக்கொண்டு அரட்டை அடித்து கொண்டிருக்கிறார்கள்.  படத்தின் மிக மகிழ்ச்சியான காட்சிகளில் ஒன்று. Piano இசை பின்னணியில் அத்தனை பெண்களும் ஒரு பாடலை பாடுகிறார்கள்.

In Bloom பார்க்கும் போது எனக்கு நினைவுக்கு வந்த மற்றொரு படம் 4 Months, 3 Weeks and 2 Days. ஆச்சரியம் என்னவென்றால் இரண்டிற்கும் ஒரே ஒளிப்பதிவாளர். இரண்டுமே கிழக்கு ஐரோப்பாவின் நிகழ்ந்த அரசியல், சமூக பிரச்சினைகளை பின்னணியாக கொண்ட படங்கள்.

In Bloom ஒரு coming age film ஆக மட்டும் இல்லாமல் ஒரு வரலாற்று ஆவணமாகவும் இருக்கிறது. 1992ல் Georgiaவில் வாழ்ந்த மக்களின் உளவியல் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது.

படமாக்கம் கிட்ட தட்ட ஈரான் நாட்டு சினிமா போலவே இருக்கிறது. யாரும் தொழில்முறை நடிகர்கள் போலவே இல்லை. வழமையான பதின் பருவத்தினர் பற்றிய படங்களில் இருந்து மாறுபட்ட படத்தை பார்க்க விரும்புவோர் முதலில் காண வேண்டிய படம். பதின் பருவத்து புலியாக Eka வும் தேவதையாக Katia வும் திரையில் இருந்து கண்ணை விலக்க முடியாத அளவிற்கு வசீகரிப்பார்கள்.


No comments:

Post a Comment