Narcissistic personality disorder is named for Narcissus, from Greek mythology, who fell in love with his own reflection. Freud used the term to describe persons who were self-absorbed, and psychoanalysts have focused on the narcissist's need to bolster his or her self-esteem through grandiose fantasy, exaggerated ambition, exhibitionism, and feelings of entitlement.
― Donald W. Black
வரலாற்றில் மனிதர்கள் எப்போதும் தங்களை பற்றி புறவயமாக இத்தனை அக்கறையோடு இது வரை இருந்ததில்லை. அது சுத்தம் பற்றிய அக்கறையோ, உடை, அணிகலன்கள் பற்றிய அக்கறையோ மட்டும் அல்ல. தன்னுடைய உருவம், நடை, உடை, பாவனை மற்ற மனிதர்களில் என்ன மாதிரியான உணர்வை உருவாக்க வேண்டும் என்பது வரை அந்த கவனம் நீள்கிறது.
இணையம் வந்த பின்பு தன்னைத்தானே புகைப்படம் எடுத்து அதை இணையத்தில் பகிர்ந்து நாம் தினம் சந்திக்க வாய்ப்பில்லாத உறவினர்கள், நண்பர்கள் மற்றும் முன் பின் தெரியாத ஆட்கள் வரை நம் இருப்பை தெரியவைத்துக்கொண்டிருக்கிறோம். முகப்புத்தகத்தில் "people you may know" sectionல் வரும் முகங்கள் நம்மில் எழுப்பும் முதல் எதிர்வினை என்ன?
இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால் உங்களிடம் சொந்த புகைப்பட கருவி, படச்சுருள் வாங்க பணம் இல்லாத பட்சத்தில் நீங்கள் ஒரு புகைப்பட நிலையத்திற்கு சென்று தான் எடுக்க வேண்டும்.
புகைப்படம் என்பது விழா நிகழ்ச்சிகள் அன்று எடுக்கப்பட்டு, ஒரு தலைமுறை காலம் பாதுகாத்து, அவ்வப்போது எடுத்துப்பார்த்து, பழைய நினைவுகளில் மூழ்க வழிதரும் நினைவுச்சுரங்கமாக இருந்தது. இப்போது நடக்கும் திருமண நிகழ்ச்சிகளில் 5 பேர் 5 கோணத்தில், 5 கருவிகளில் படம் பிடித்து எந்த ஒழுங்கும் இல்லாத புகைப்பட தொகுப்பே எஞ்சுகிறது.
கைநிறைய இருக்கும் திறன் பேசி புகைப்படத்தை சல்லிசாக மாற்றி இருக்கிறது. நினைவுத்திறன் கொள்ளுமட்டும் புகைப்படம், காணொளி எடுக்கலாம், இணையத்தில் ஏற்றலாம், புகைப்படம் எடுத்த பின் மெருகேற்றலாம் இப்படி எண்ணிலடங்கா வசதிகள்.
இத்தனை புகைப்படம் எடுக்க கூடிய வசதி பல மனிதர்களை தங்களை தாங்களே காதலிக்க வைத்துள்ளது. ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் தங்கள் புகைப்படத்தை மெருகேற்றுகிறேன் என்று நாளெல்லாம் அதை பார்த்துக்கொண்டிருக்கும் பழக்கம் பலருக்கும் உருவாகியுள்ளது.
ஒரு காலத்தில் கண்ணாடியில் பார்த்துக்கொண்டார்கள் இப்போது புகைப்படமாக பார்க்கிறார்கள், பார்த்துவிட்டு போகட்டுமே என்று தோன்றலாம். அவர்கள் புகைப்படத்தை இணையத்தில் ஏற்றாத வரை அது அவரை தவிர யார் கண்ணிலும் படப்போவதில்லை தான். ஆனால் அவர்கள் நட்பு வட்டத்தில் வந்து விட்ட காரணத்திற்காக நாம் எத்தனை முறை பார்க்க முடியும்?
அவர் Whatsappல் status வைப்பது முதல் facebook DP, Instagram DP வரை மாற்றி இணையத்தில் உலவும் மனிதர்களின் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கிறார். அவருடைய முகம் சலிப்பாகும் போது அவரை பின்தொடர்வதை நிறுத்தி விடுவார்கள் அல்லது mute போட்டு விடுவார்கள். அவர் ஒரு கேலி சித்திரமாக மாறியது தெரியாமல் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டே இருப்பார்.
புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறையும் என்கிற மூடநம்பிக்கை எல்லாம் மறைந்து திருப்திகரமான புகைப்படம் வரும் வரை எடுத்து, அத்தகைய புகைப்படம் அமையாமல் அதனால் மனம் நொந்து போகும் மனநிலைக்கு ஆளாகும் முரணான காலத்தில் வாழ்கிறோம்.
தன்னை அறிதல் என்பது இவ்வுலகத்தில் நம் இருப்பிற்கான அர்த்தத்தை அறிவது தான். நாம் இங்கே ஆற்ற வேண்டிய செயல் என்ன என்று உணர்வது தான். அகவயமாக தன்னை அறிய இன்று பெரும்தடையாக இருப்பது புறவயமாக நாம் மற்ற மனிதர்களின் கண்ணில் எப்படி தெரிகிறோம் என்ற சிந்தனையை கைவிடமுடியாமல் இருப்பது தான்.
புகைப்படத்திற்கான எதிர்வினை, விருப்பக்குறிகள், அதனின் எண்ணிக்கை எல்லாம் சேர்ந்து புகைப்படம் எடுப்பதற்கான சிரத்தையை அதிகரித்துள்ளது. சரியாக உறைந்த ஒரு நொடிப் பொழுதை படம்பிடிக்க கடிகாரம் பார்க்காமல் நேரத்தை செலவு செய்கிறார்கள்.
15 வருடங்களுக்கு முன் மதுரையை குலுங்க குலுங்க ஆட்சி செய்த அரசியல் பிரமுகரின் முகம் தாங்கிய பதாகையை நீங்கள் மதுரை எங்கும் காணலாம். அவரின் பிறந்த நாளின் போது உங்கள் முகம் உங்களுக்கு மறந்து போகும் அளவிற்கு அவருடைய முகத்தை பலவேறு பதாகைகளில் காண நேரிடும்.
அவரின் முகத்தை அச்சடித்து பணக்காரர்கள் ஆன அச்சக உரிமையாளர்கள் உண்டு. மனிதர்களிடம் உள்ள சுயமோகம் இதை எல்லாம் உள்ளூர ரசிக்கிறது. "பார் என் முகத்தை! என்னை தெரியாதவர்கள் இந்த ஊரில் இல்லை. நான் ஆண்டவனுக்கு நிகரானவன்." என்று தம்பட்டம் அடிக்கிறது.
இந்த பதாகையை வைப்பவர்கள் தங்களுடைய புகைப்படத்தை ஒரு ஓரமாக போட்டுக்கொள்வார்கள். அல்லது பெயரையாவது போட்டுக்கொள்வார்கள். இவர்களுக்கு புகைப்படத்தில் இருக்கும் அந்த பெரிய உருவம் ஒரு பொருட்டே அல்ல. இவர்களின் உளவியல் அந்த புகைப்படத்தில் தன்னையே காணும்.
பெரிய உருவமாக பதாகையில் இடம் பிடித்து கொண்டிருப்பவர்கள் காலம் சென்ற பிறகு வைக்கப்படும் பதாகையில் வலது அல்லது இடது மூலையில் தபால் தலை அளவு புகைப்படமாக சுருங்கி விடுவார்கள். அவர்களுடைய அரசியல் வாரிசோ, ரத்தத்தின் ரத்தமோ அந்த இடத்தை எடுத்துக்கொண்டு விடும். இது ஒரு சுழற்சி.
தன்னுடைய காலத்திற்கு பின் வரும் மனிதர்களின் மனதில் ஒரு தொன்மமாக எஞ்ச வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனில் இருக்கும் அந்தரங்க ஆசைகளில் ஒன்று. அந்த ஆசை செயலால் ஈடு செய்யப்படவில்லை என்றால் அந்த மனிதர் பகடிப் பொருளாகவே மதிப்பிடப்படுவார்.
கொஞ்சம் அதிகாரம், பண பலம் உள்ள, சுயமோகம் (narcissism) கொண்ட மனிதர்கள் தங்களை எப்போதும் வரலாறு சமைப்பவர்களாக எண்ணிக்கொள்கிறார்கள். அது பெரும்பாலும் அவர்களை ஒரு megalomaniac ஆக மாற்றி விடுகிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் Donald Trump ஒரு சுயமோகம் கொண்ட Megalomaniac. இப்போது இந்த வார்த்தைக்கு உதாரணமாக வாழும் ஒரு உள் நாட்டு அரசியல் வாதி ஒருவர் உங்கள் நினைவுக்கு வந்திருப்பார்.
The megalomaniac differs from the narcissist by the fact that he wishes to be powerful rather than charming, and seeks to be feared rather than loved. To this type belong many lunatics and most of the great men of history.
- Bertrand Russell
இத்தகைய தலைவர்களை நாம் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். அவர்கள் தங்களையே முன் வைக்கிறார்கள். கொள்கை, திட்டம், செயல், மக்கள் நலன் எல்லாம் இரண்டாவது தான். இவர்கள் முகங்கள் ரட்சிக்க வந்த மாமனிதன் என்பதாக ஊடகங்கள் வழி நமக்கு காட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
இவர்கள் பல "வேடிக்கை மனிதர்களை" தங்கள் பால் ஈர்த்து விடுகிறார்கள். மக்கள் இத்தகைய தனி மனித வழிபாட்டு மனநிலையால் தொடர்ந்து ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த வேடிக்கைகைக்கு விழாத கேளிக்கை மனிதர்கள் புகைப்படம் முதல் 15 நொடி காணொளி வரை தங்களை பல விதமாக வெளிப்படுத்தி இணையத்தில் ஏற்றுகிறார்கள். அவர்களை போன்ற பிற கேளிக்கை மனிதர்கள் அவர்களை ரசிக்கிறார்கள்.
இப்படி தங்களை தாங்களே பிரதி எடுத்து பார்த்துக்கொள்ளும் மனிதர்கள், சீமான் குரலுக்கு ஆவேசமாக Tik Tok, Insta Reelsல் போல நடிக்கும் நபர்கள் இயல்பில் அதிகமான கூச்ச சுபாவமும், யாரையும் கண் பார்த்து பேச முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள்.
இந்த புதிய காட்சி & கண்ணொளி மட்டும் ஊடகங்கள் மனிதர்கள் பலருக்கும் ஒரு தற்காலிக விடுதலையை அளிக்கிறது. அவர்களும் சன்னதம் வந்து ஆடுகிறார்கள், ஆனால் சன்னதம் இறங்கிய பின் அன்றாட கடமைகளை சரியாக கடைபிடிக்க முடியாத மனிதர்களாகவும் இருக்கிறார்கள்.
இப்படி தன்னோடு புறவயமாக நான், எனது மற்றும் என்னுடைய எனும் தன்முனைப்பில் நேரத்தை வீணடிப்பதால் ஆளுமை உருவாக்கம் நடக்காமல் போய்விடுகிறது. இதில் பிரபலமாகும் சிலர் இதன் வழி வருமானம் தேடிக்கொள்கிறார்கள். மற்றவர்கள் 'If you are not paying for it, you're not the customer; you're the product being sold.” என்ற உண்மையை உணர முடியாதவர்கள் அல்லது மறுக்கிறார்கள்.
புறவயமாக தங்களுடைய அகங்காரம் (ego) திருப்தி அடைய உழைத்து தன்னுடைய மனதில் உள்ள லட்சிய உருவத்தை ஒருவர் அடைந்து விடக்கூடும். இந்த முயற்சியில் உள்நோக்கி பார்க்கும் பழக்கம் அற்றுப் போவதால் உள்ளம் வளர்வது நின்று விடுகிறது. அகம்-புறம் சமநிலை பேணாத இத்தகைய மனிதர்கள் அதிகரிப்பது சமூக மற்றும் பொது வாழ்க்கையை சிக்கல் மிகுந்ததாக மாற்றி க்கொண்டிருக்கிறது.
***