Saturday, 3 October 2020

மொஸாட் - என். சொக்கன்

Whatsapp ல் வரும் பெரிய பதிவுகளை அசராமல் படிப்பவரா நீங்கள்?! உங்களுக்கானது தான் இந்த புத்தகம். 

கிழக்கு பதிப்பகத்தின் அபுனைவு நூல்களின் வெற்றி இப்படி நூல்களை பதிப்பிக்கும் பதிப்பகங்களின் எண்ணிக்கையை அதிகம் ஆக்கியிருக்கிறது என்று நினைக்கிறேன். ஒரு புத்தக கண்காட்சிக்கு சென்றால் அங்கே இது போன்ற நூல்களை கிட்ட தட்ட அனைத்து பதிப்பகங்களும், புத்தகம் வாங்கி விற்கும் கடைகளும் விற்பதை காணலாம். 

படிப்பதற்கு மிக எளிதானது. தினத்தந்தி தவிர, ஏன் தமிழில் வேறு எதையுமே வாசித்திருக்காதவர் கூட எளிதில் வாசிக்கும் படியான ஒரு மொழியில், நடையில் எழுதப்பட்ட புத்தகம். ஒவ்வொரு பத்தியும் மூன்றிலிருந்து ஐந்து வரிகள் தான். 

நான் நாவல்கள், சிறுகதைகள் தான் வாங்குவேன். இலக்கிய எழுத்தாளரின் கட்டுரை, அபுனைவு வாங்குவேன். Mossad போன்ற புத்தகம் ஒரு முறைக்கு மேல் வாசிக்க தேவையிருக்காது என்பதால் தவிர்த்து விடுவேன். மேலும் இப்படி புத்தகங்கள் சினிமா பார்த்து, ஆவண படங்கள் பார்த்து எழுதப்பட்டது போல் இருக்கும். 

Mossad வாசிக்கும் போது அங்கங்கே சுஜாதா வாடை அடித்தது. முதல் சில அத்தியாயங்கள் 1972ம் ஆண்டு ஒலிம்பிக்கின் போது கொல்லப்பட்ட இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களுக்காக இஸ்ரேல் எப்படி பழி வாங்கியது என்பதை பற்றியது. இந்த சம்பவங்களை வைத்து Steven Speilberg Munich என்றொரு சினிமா எடுத்திருக்கிறார். அற்புதமான படமது. 

பிறகு Mossad எப்படி உருவானது?, அதற்கான வரலாற்று காரணங்கள், யூதர்கள் காலம் நெடுகிலும் அனுபவித்த துன்பங்கள், Mossad ன் சாகசங்கள் என்று இது Mossad ன் புகழ் பாடும் ஒரு புத்தகம். 

இதை ஒரு மாணவ நண்பர் எனக்கு வாசிக்க அளித்தார். அவர் ஒரு நண்பரின் வீட்டில் இருந்த புத்தக அலமாரியில் இதைக்கண்டு ஆர்வமாக வாசிக்க எடுத்து வந்திருக்கிறார். அடுத்த சில மணிநேரங்களில் வாசித்து முடித்து விட்டார். என்னிடம் வாசித்து பாருங்கள் என்று கொடுத்தார் நான் நாளுக்கு கொஞ்சமாக 4 நாளில் வாசித்தேன். 

முதல் முதலாக வாசிக்க வருபவர்கள் இப்படி நூல்களை வாசிப்பது வாசிப்பின் மீதான ஆர்வத்தை வளர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை. வாசிப்பு என்பது கடினமானது அல்ல, பரீட்சைக்கு படிப்பது போல அல்ல சுவாரசியமான ஒன்று என்கிற எண்ணத்தை அது வளர்க்கும். மேலும் reading for pleasure எனப்படும் வாசிப்பின்பம் கிடைக்க பெறுபவர்கள் தொடர்ந்து வாசிப்பார்கள். தமிழில் வாசித்தால் தமிழ் எழுத்துலகமும் வாழும். 

மதி நிலையம் வெளியிட்டிருக்கும் இந்நூலின் விலை 150 ரூபாய். 

சொல்ல மறந்துவிட்டேன். Mossad என்பது இஸ்ரேலிய உளவுத்துறையின் பெயர். 

(29 Feb 2020 எழுதப்பட்ட பதிவு)


No comments:

Post a Comment