India is two countries in one: an India of Light, and an India of Darkness. The ocean brings light to my country. Every place on the map of India near the ocean is well off. But the river brings darkness to India—the black river.
- The White Tiger, Aravind Adiga
The White Tiger நாவலின் மைய கதா பாத்திரம் India of light and India of darkness என்று இரண்டு விதமான இந்தியாக்கள் இருப்பதாக அடிக்கடி சொல்லும். Article 15 படத்தின் முதல் பத்து நிமிடத்திலேயே இப்படம் அந்த இரண்டு விதமான இந்தியாக்களை பற்றியதாக தான் இருக்கப்போகிறது என்று ஒரு உள்ளுணர்வு.
படத்தின் முதல் காட்சியில் கிராமத்தினர் கூடி பாடிக்கொண்டிருக்கின்றனர். மழை பெய்து கொண்டிருக்கிறது. Rashomonனில் பெய்வது போன்ற மழை. பாடல் வரிகள் கூர்மையாக இருக்கின்றன. நான் உண்மையை சொல்வேன், சொன்னால் உனக்கு வலிக்கும் என்பதாக. பணக்காரர்கள் சுத்திகரிக்கப்பட்ட நீரை குடிக்கிறார்கள் நாங்கள் அசுத்தமான நீரை குடிக்கிறோம் என்று பாடலில் குடிதண்ணீரின் தரத்தில் இருக்கும் அரசியலை பாடுகிறார்கள். குடிசைகள், சகதி, பன்றிகள் என்று அவர்கள் வாழ்விடம், சுற்றுப்புறத்தை கேமரா சுற்றி வருகிறது.
முதல் காட்சியின் இடைவெட்டாக மழையின் ஊடே செல்லும் ஒரு வேனில் 3 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை சில நொடிகள் காட்டிவிட்டு மீண்டும் கிராமத்திற்கு திரும்பிவிடுகிறது.
இப்போது கதா நாயகன் அறிமுகம்.பின்னணியில் ஆங்கில பாடல் ஒன்று ஒலிக்கிறது. பறவைக்கோண காட்சியாக சுங்கம் வாங்கும் நவீன நாற்கர இந்திய சாலையில் வெள்ளை நிற Bolero கார் விரைகிறது. காரின் உள்ளே Ayan Ranjan. உத்திர பிரதேசத்தில் உள்ள Laalgaon மாவட்டத்திற்கு புதிய Additonal Commissioner ஆக பொறுப்பேற்க சென்று கொண்டிருக்கிறான். அவன் அருகே Nehru எழுதிய The Discovery of India புத்தகம்.
காரின் ஓட்டுனர் ராமர் பற்றிய ஒரு கதையை சொல்கிறார். ராமர் வனவாசம் முடிந்து திரும்பும் போது அனைத்து ஊர்களும் விளக்கேற்றி வைத்திருந்தன. ஆனால் ஒரு கிராமம் மட்டும் இருளில் இருந்தது. ராமர் அங்கு சென்று ஏன் இருளில் இருக்கிறீர்கள் என்று கேட்கிறார். அவர்கள் விளக்கேற்றி வைத்திருந்தாகவும் காற்றில் அணைந்து விட்டதாகவும் சொல்கின்றனர். அவர்கள் இருளில் இருக்கும் போது ராமரின் மாளிகை நன்றாக ஜொலிப்பதை காணமுடிவதால் மீண்டும் விளக்கேற்றவில்லை என்கின்றனர். India of light and India of Darkness.
Ayan Ranjan காதலிக்கு கிராமப்புற இந்தியா அழகாக இருப்பதாக குறுந்செய்தி அனுப்புகிறான். தண்ணீர் வாங்க வண்டியை நிறுத்த சொல்கிறான். ஓட்டுனர் அது தாழ்த்த பட்ட மக்கள் வாழும் கிராமம் என்றும் அவர்களின் நிழல் கூட நம்மீது விழக்கூடாது என்றும் கூறுகிறார். அவர்கள் தொட்ட தண்ணீரை எப்படி குடிப்பது என்று கேட்கிறார். இதைப்பொருட்படுத்தாத Ranjan தண்ணீர் வாங்க சொல்லி பணத்தை கொடுத்து விட்டு வண்டியை விட்டு இறங்குகிறான். அங்கே கடைக்கு வெளியே சிலர் பெஞ்சில் அமர்ந்து இருக்கிறார்கள். சிலர் செருப்பை தனியே வைத்து விட்டு குத்தவைத்து உட்கார்ந்து இருக்கிறார்கள். அவர்கள் தன்னை வெள்ளைக்கார துரை திரும்ப வந்து விட்டது போல் பார்க்கிறார்கள் என்று காதலிக்கு சொல்கிறான்.
அலுவலகத்தை நெருங்கும் போது ஒரு பெரிய கட்டிட வேலை நடப்பதை பார்க்கிறான். Multiplexஅ என்கிறான். இல்லை சாமியாரின் ஆசிரமம் என்று சொல்கிறார்கள்.
அலுவலகத்தை அடைந்த பின்னர் அங்கு உள்ள Inspector, சக அதிகாரி, ஊழியர்களை அறிமுக படுத்துகிறார். முதலில் தன்னுடைய முதல் பெயரை (First Name) சொல்லும் அவர் பின்னர் தன்னுடைய ஜாதியை குறிக்கும் பெயரை (Title Name) சேர்த்து சொல்கிறார்.
தமிழ் நாடு தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் இந்த பழக்கம் இருக்கிறது. Gowda, Rao, Thackeray, Gehlot, Modi, Banerjee, Sarkar, Shah, Sharma, Gupta என்பதெல்லாம் ஜாதிப்பெயர் அல்ல. அவை Title Name தான். ஆனால் அதைவைத்து அவர் இன்ன ஜாதி என்பதை எளிதாக யூகித்து கொள்ளலாம்.
அலுவலகத்தில் உள்ள அனைவரும் Jai Hind என்று சொல்லி தான் வணக்கம் வைத்து தங்கள் பெயரை சொல்கின்றனர். Title Nameஉடன் சேர்த்து தான். அப்போது உள்ளூர் contractor Anshu Nagaria Ranjanனின் பின்னால் நின்று கொண்டே காலை தொட்டு கும்பிடுகிறான். Inspector Brahmadatt அவனை அறிமுக படுத்துகிறார். அதாவது 'யார் இங்கே வேலைக்கு வந்தாலும் எங்களை adjust செய்து கொண்டு தான் போக வேணும்' என்பதாக அவன் பார்வை இருக்கிறது.
அன்றிரவு ரஞ்சனை வரவேற்கும் விதமாக பார்ட்டி நடக்கிறது. அதில் ரஞ்சன் என்ன வகை மது அருந்துவான் என்று அவர்கள் facebook மற்றும் Instagram post மூலம் அறிந்து கொண்டதாக சொல்கிறார்கள். எதனால் Laalgaon posting என்று உயரதிகாரி கேட்க அது punishment posting என்று சொல்கிறான்.
பயிற்சி முடிந்து Home Ministerஉடன் நடந்த சந்திப்பில் ரஞ்சன் அமைச்சருடன் பேசும் போது Okay Sir, Yes, Sir என்று சொல்வதற்கு பதிலாக cool, sir என்று சொன்னதால் இங்கே அனுப்பி விட்டதாக சொல்கிறான்.
மது அருந்தும் போது சக ஊழியர்கள் அவர்களுடைய தட்டில் இருந்து ரஞ்சன் எதையும் எடுக்க வேண்டாம் என்று புதிய தட்டு ஒன்றில் ரஞ்சனுக்கு பண்டங்களை எடுத்து வருகின்றனர். ரஞ்சன் உயர்குடி பிராமணன். அவர்கள் தாழ்த்த பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். அவர்கள் தட்டில் ரஞ்சன் எடுப்பது ரஞ்சனுக்கு கவுரவம் அல்ல என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
விருந்து நடக்கும் இடத்திற்கு கிராமத்தினர் புகார் கொடுக்க வருகின்றனர். Inspector அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் நாளை பார்க்கலாம் என்று சொல்கிறார். மற்றுமொரு அதிகாரி அந்த கிராமத்தில் இது சகஜம் என்று சொல்கிறார். அது தோல் பதனிடும் தொழில் செய்யும் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் கிராமம். படத்தின் முதல் காட்சியில் வந்த கிராமம். அந்த கிராமத்தை சேர்ந்த மூன்று பெண்களை காணவில்லை. அந்த கிராமத்து பெண்கள், ஆண்கள் ஓடிப்போவது, திரும்ப வருவது எல்லாம் அன்றாடம் என்பதாக போலீசாரின் பார்வை இருக்கிறது.
தலித் தலைவர் ஆட்சியில் இருக்கும் போது அவருக்கு அவரே சிலை வைத்து கொள்வதில் நேரத்தையும், பணத்தையும் செலவு செய்து விட்டு போய் விட்டார். இப்போது ஆட்சியில் இல்லை என்றவுடன் தலித்துகள் ஒடுக்கப்படுவதாக ஒப்பாரி வைக்கிறார் என்று Inspector கிண்டல் செய்கிறார்.
தனது கல்லூரி கால நண்பன் தான் வேலைக்கு வந்த ஊரில் இருப்பதை காணும் ரஞ்சன் அவன் போதையில் இருப்பதைக் கண்டு அவனை வீட்டில் சென்று விடுவதாக அவனுடைய வண்டியை வாங்கி ஓட்டுகிறான். வழியில் கத்தியோடு ஒருவன் இன்னொருவனை துரத்தி வருவதை பார்க்கிறான். ரஞ்சனின் பாதுகாப்புக்கு வந்த கான்ஸ்டபிள் கத்தி வைத்திருந்தவனை கன்னத்தில் அடித்து உக்கி போட வைக்கிறார். மிட்டாய் கடைக்காரர் மகன் தான் என்று கத்தியை வாங்கி விட்டு அனுப்பி விடுகிறார்.
ரஞ்சனின் நண்பன் ரஞ்சனின் வாழ்க்கையை பற்றி கேட்கிறான். காதலியை பற்றி கேட்கிறான். அவளைப்போல் பெண் கிடைக்க மாட்டாள் அவளை இழந்து விடாதே என்கிறான். காதலி Gender Equality, Women Empowerment பற்றி எழுதுவதாகவும் தங்களுக்குள் உரையாடலை விட வாக்குவாதம் அதிகம் நடப்பதாக ரஞ்சன் சொல்கிறான்.
முதல் இருபது நிமிடத்திற்குள் இவ்வளவும் நடந்து முடிந்து விடுகிறது. மறுநாள் காலையில் காணாமல் போன மூன்று பெண்களில் இருவர் தூக்கில் தொங்குகின்றனர். ரஞ்சன் விசாரிக்கும் முன் சக அதிகாரிகள் அவர்கள் தன் பால் உறவில் இருந்ததால் அவர்களின் தந்தைகளே கொன்று தொங்க விட்டு விட்டனர் என்று சொல்கின்றனர்.
ரஞ்சன் India of Lightல் இருந்து வந்தவன். கிராமிய இந்தியாவை புத்தகத்தின், செய்தி தாள்கள் வழி அறிந்தவன். ஆனால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் அல்லது கவுரவ கொலை செய்யப்பட்டார்கள் என்பதை நம்பும் அளவிற்கு முட்டாள் இல்லை. விசாரணையை தொடர சொல்கிறான்.
விசாரிக்க செல்லும் அதிகாரிகளின் வாகனம் தாக்க படுகிறது. தாழ்த்த பட்ட மக்களின் சார்பாக போராடும் Nishad அவர்களை துப்புரவு பணிகளை புறக்கணிக்கும் படி சொல்லிவிடுகிறான். Swach Bharat சாக்கடையில் மூழ்குகிறது. Police Officer அலுவலகத்துக்கு சாக்கடையின் மேல் செங்கற்கள் அடுக்கி அதன் மேல் நடந்து செல்கிறார்கள்.
இந்த காட்சிகள் எப்படி இந்தியா எழுத்தில் ஒன்றாகவும் இயல்பில் வேறாகவும் இருக்கின்றன என்று காட்டுகின்றன. காணாமல் போன மூன்றாவது பெண்ணையும் தேடுகின்றனர். இறந்து போன இரண்டு பெண்களின் post mortem அறிக்கையில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்தார்கள் என்று எழுதச் சொல்லி Inspector சொல்கிறார்.
ரஞ்சன் காதலியிடம் அந்த பெண்கள் 3 ரூபாய் கூலி உயர்த்தி கேட்டதற்காக தாக்க பட்டிருக்கிறார்கள் என்று சொல்கிறான். மாநகரங்களில் பிறந்து வளர்ந்து, வெளிநாடுகளில் கல்வி கற்ற ரஞ்சனுக்கு அவன் வேலைக்கு வந்த ஊரில் நடப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த நாடு சாதி, மதம் என்று எத்தனை பின் தங்கியிருக்கிறது என்று.
காதலி யாருக்காகவும் காத்திருக்காதே குற்றவாளிகளை கண்டு பிடி என்கிறாள்.
முரண் என்னவென்றால் ரஞ்சனின் வீட்டில் வேலைக்கு இருக்கும் பெண் பதின் பருவம் தாண்டாதவள். அவள் பள்ளிக்கு செல்ல வேண்டிய வயதில் ஏன் வீட்டு வேலை செய்து கொண்டிருக்கிறாள் என்று ரஞ்சனோ அவனுடைய காதலியோ கேட்பதில்லை.
இதற்கு மேல் திரைக்கதையை அப்படியே எழுதாமல் மற்ற விஷயங்களை பற்றி பேசுவோம். இந்தப்படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் என்பது படத்தின் முன்னோட்டம் வெளியான போதே தெரிய வந்து விட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இது போல பல சம்பவங்களை நடத்திய, நடப்பதற்கு காரணமாக இருந்த கட்சி தான் இன்னமும் ஆட்சியில் இருக்கிறது. அவர்களை நேரடியாகவோ, படத்தின் மூலமோ தாக்குவது, விமர்சிப்பது தனக்கு தானே மண்ணை வாரி போட்டுக்கொள்வது என்று படமெடுபவர்களுக்கு நன்றாக தெரியும். ஆனாலும் இத்தனை வெளிப்படையாக பேசியதே ஆதரிக்க வேண்டிய, பின்பற்ற பட வேண்டிய முயற்சி.
படத்தின் கதா நாயகன் உயர் குடியை சேர்ந்தவனாக, நீதியுணர்ச்சி உள்ளவனாக இருக்கிறான். இடைநிலை சாதியை சேர்ந்தவர்கள் "இங்கேயே வாழ வேண்டும். யாரையும் பகைத்துக் கொள்வதில்லை" என்று இருக்கிறார்கள். தாழ்த்தபட்ட மக்கள் விதியை நொந்து கொள்வதை தவிர வேறு என்ன வழி?
Post Mortem செய்யும் பெண் மருத்துவர் Quotaவில் படித்து வந்த தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். அவரை உண்மையான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டாம் என்று Inspector தடுக்கிறார். அவருடைய கோபத்தை facebookல் கவிதை எழுதி தீர்த்துக்கொள்ளுமாறு சொல்கிறார். வெளிய வந்து constableயிடம் இந்த டாக்டர் நாம் கட்டும் வரிப்பணத்தில் படித்தவள் என்கிறார்.
ஒரு வேளை அந்த Doctor இடத்தில் ரஞ்சனும், ரஞ்சன் இடத்தில் அந்த Doctorம் இருந்திருந்தால் இது மிக சவாலான ஒரு படமாக இருந்திருக்கும். ஆனால் வணிக வெற்றி கிட்டுமா? சர்ச்சை செய்து ஓட விடாமல் செய்யவே வாய்ப்பு அதிகம்.
படம் துவங்கிய போது இருந்த அந்த உத்வேகம் 30வது நிமிடத்தில் வடிய ஆரம்பித்து விடுகிறது. கண்டது, கேட்டது என்று அனைத்தையும் ஒரே படத்தில் சொல்ல விரும்பியதின் விளைவு. Social Media hype கொடுத்த அளவிற்கு படம் இல்லை. நிச்சயம் பரியேறும் பெருமாள் இதை விட better cinema தான். ஆனால் Article15 ற்கு கிடைக்கும் கவனம் அந்த படத்திற்கு கிடைக்காது.
படத்தை Murder Mystery (Seven, Memories of Murder, ராட்சசன்) போன்ற படங்கள்அல்லது Police Procedural (Zodiac, தீரன் அதிகாரம் ஒன்று, 8 தோட்டாக்கள்) என்று வகைப்படுத்தாமல், காட்சி ஒருங்கிணைவு இல்லாமல் செய்து விட்டனர். Ayushman இதை விட மற்ற அனைத்து படங்களிலும் சிறப்பாக நடித்திருந்தார். இதில் அவருக்கு பெரிய வேலை இல்லை என்றே படுகிறது.
நாசர் ஒரு கேலி சித்திரம் போல வந்து செல்கிறார். இவரை போன்று எத்தனை உயர் அதிகாரி பாத்திரங்களை எத்தனை படங்களில் பார்த்திருப்போம்? Inspector Brahmadatt மற்றும் அவருக்கு கீழ் வேலை பார்க்கும் SI ஆக நடித்திருக்கும் நடிகர்கள் இருவரும் மிக சிறப்பான பங்களிப்பை செய்திருக்கின்றனர். படத்தின் Outstanding Performance அவர்கள் இருவருடையதே.
படத்தில் காவல் துறையினர் அனைவரும் தாங்கள் எந்த கட்சிக்கு வாக்களித்தார்கள் என்பதை கட்சியின் சின்னத்தை சொல்லி கேலி செய்து பேசிக்கொள்கிறார்கள். Cycle, கை, யானை, மலர் என்று உள்ளூர், தேசிய கட்சிகளை பகடி செய்கின்றனர். பகடி தானே எளியவர்களால் முடிந்தது?!
படத்தின் பின் பகுதியில் உறியடி இரண்டு பாகங்களில் இடம்பெற்ற மக்களை பிரிக்க உள்ளூர் அரசியல்வாதி செய்யும் சதிகளை போன்ற காட்சிகள் நிறைந்து கிடக்கின்றன. அவை எதுவும் புதுமையாக இல்லை.
Marshland என்கிற Spain நாட்டு திரைப்படம் காணாமல் போன பெண்களை பற்றி விசாரிக்க வரும் இரண்டு அதிகாரிகள், அவர்கள் கண்டு பிடிக்கும் உண்மைகள் என்று ஒரு Police Procedural come thriller படம். அந்த படம் நடக்கும் காலகட்டத்தில் நிலவிய அரசியல், சமூக, பொருளாதார சூழ்நிலையை பின்புலமாக கொண்டு ஒரு கதையை வலுவாக சொல்கிறது. அந்த வலு Article 15ல் இல்லை.
No comments:
Post a Comment