30 வயதை தொடங்கி விட்டவர்களுக்கு தெரியும். நாம் பள்ளி, கல்லூரி காலங்களில் கண்ட கனவு போல வாழ்க்கை இருக்க போவதில்லை என்று. யதார்த்தம் கவிய வாழ்க்கைப்பாடுகளில் மூழ்க ஆரம்பிக்கும் வயது. சமூக ஊடகம் வழியாக பள்ளி, கல்லூரி நண்பர்களுடன் தொடர்பில் இருந்தாலும் நேரில் சந்திப்பது குறைந்து வருகிறது அல்லது நடப்பதேயில்லை.
திருமணம் ஆகிவிட்டவர்கள் மனைவியின் குடும்ப விசேஷ நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டும். இருவரும் சென்னையில் வேலை பார்க்கும் சூழ்நிலையில் மனைவியின் பெற்றோர் மதுரையிலும் கணவனின் சுற்றம் கோவையிலும் என்றால் அட்டவணை போட வேண்டி வரும். எங்கே எப்போது செல்வது என்று.
இந்நிலையில் நண்பர்கள் சந்தித்து கொள்ள நேரம் ஒதுக்குவது இயலாத காரியம். ஒரு மாநகரத்தில் வசித்துக்கொண்டு கடந்த 5 வருடங்களில் ஒரு முறை கூட சந்தித்துக்கொள்ளாத பள்ளி கால நண்பர்களை எனக்கு தெரியும். பார்க்க வேண்டாம், பேச வேண்டாம் என்று தவிர்ப்பதில்லை. பிறகு பார்க்கலாம் பிறகு பேசலாம் என்று நாளும் வருடமும் ஓடி விடும்.
நடைமுறை இப்படி இருக்கும் போது கடந்த மாதம் வெளிவந்த 96 திரைப்படம் இனிய கனவொன்று உயிர்பெற்றது போல் இருந்தது.
15 வயதில் நிச்சயம் பெண்கள் மேல் மையல் ஏற்படுவது இயல்பு, உறுதி என்றே சொல்லலாம். சிலருக்கு காதலாகவும் மாறலாம். 30 வயதில் யோசித்து பார்க்கும் போது அது எத்தனை innocent ஆன ஒரு காதல் என்று தான் தோன்றுகிறது. பெண்ணும் சம்மதம் சொன்னால் கேட்கவும் வேண்டுமா? பையன் றெக்கை கட்டி பறக்க மாட்டானா?
96 படத்தில் என்னை கவர்ந்த அம்சமே அதில் இருந்த innocence தான். Innocence க்கு இணையான தமிழ் வார்த்தை இருக்கும். ஆனாலும் இங்கே innocence தான் பொருத்தமாக இருக்கும். ஒரு கள்ளம் கபடமற்ற தன்மை என்றும் சொல்லலாம். மாநகரம் அல்லாத கிராமும் அல்லாத ஒரு small town நட்பு, மையல், காதல் கதை.
தமிழ் சினிமாவில் காதல், அதுவும் பள்ளி, கல்லூரி பருவ காதல் என்றால் அது வருவதற்கான காரணங்கள் அற்பமானவை. பின்னர் காதலர்கள் உடல் ரீதியாக அத்துமீறியாக வேண்டும். விரசமான பாடல்கள் வேறு. அலைகள் ஓய்வதில்லை தொடங்கி துள்ளுவதோ இளமை வரை பல படங்களை சொல்ல முடியும். சமீப காலங்களில் அப்படி பல விரசமான படங்களில் G.V. பிரகாஷ் நடித்திருக்கிறார். நம் இளைஞர்களின் பாலியல் வறுமையை துட்டாக மாற்றுவதில் இவர்கள் அவ்வப்போது வெற்றியும் பெற்று இருக்கிறார்கள்.
96 படத்தில் காதல் என்று ராம் உணர்வது ஜானு பள்ளிக்கு நான்கு நாட்கள் வராமல் போக அது அவனை என்னவோ செய்ய அவன் தண்ணீரை காணாத செடி மாதிரி ஆகிவிடுகிறான். ஜானு பள்ளிக்கு திரும்பி வந்த அன்று இனிமேல் பழைய மாதிரி அவளிடம் பேச முடியாது என்று அவனுக்கு புரிகிறது.
காதலை பல மாடிக்கட்டிடம் மீது ஏறி நின்றோ, கொலுசு வாங்கி கொடுத்தோ, ரத்தத்தில் கடிதம் எழுதியோ, சாலையின் நடுவில் நின்றோ அவன் ஊருக்கே கேட்கும் படியாக சொல்வதில்லை. அவன் காதலை ஜானுவிடம் கூட நேரடியாக சொல்வதில்லை. இதற்கு பிறகு வரும் காட்சிகளில் சினிமாவிற்கே உரிய பாவனை இருந்தாலும் ரசிக்கும் படியாகவே இருந்தது.
காதலிக்கும் பெண் கடைசியாக எப்போது online வந்தாள், யாரை tag செய்கிறாள், எதை like செய்கிறாள், என்ன status வைக்கிறாள் என்று பார்க்கும் இக்காலத்து பையனுக்கு ராமின் நிலைமை எப்படி விளங்கும் என்று தெரியவில்லை.
ராமின் குடும்ப நிலைமை நமக்கு ஒரே காட்சியில் சொல்லப்படுகிறது. 96ல் மேல் நடுத்தரவர்க மக்களிடம் தான் தொலைப்பேசி இருந்திருக்கும். 15 வயது பையன் தோழிக்கு/காதலிக்கு கடிதம் எழுதுவது எல்லாம் சாத்தியமே இல்லை. பேசி வைத்துக்கொண்டு சந்திக்க பொது வெளி என்பதே இல்லாத ஊரில் எப்படி சந்திப்பது? இந்நிலையில் விடுமுறை தொடங்கும் நாளில் ஒன்று போல் சைக்கிளில் போவதே அதிகபட்சம்.
நாலு நாள் பிரிவை தாங்காதவன் எப்படி 2 மாசத்தை பொறுப்பான் என்று நினைக்கும் போது ஜானு சைக்கிளில் திரும்பி வந்து ராம் மீது மையை தெளிக்கிறாள். நம்மூரில் அதிகபட்ச ஹோலியே இவ்வளவு தான். அவனுக்கு வண்ணம் சேர்க்க வந்தவள் திரும்பி செல்கிறாள்.
22 வருடங்கள் கழித்து 37 வயது ராம் ஜானுவை பார்க்க 15வயது பையன் மனநிலையிலேயே படப்படப்போடு இருக்கிறான். ஜானு முதலில் காண்பதும் 15வயதை ராமை தான். அவள் கடைசியாக பார்த்த போது அவன் அணிந்திருந்த அதே வெள்ளை சட்டையும் நீல நிற கால் சட்டையும் அணிந்த ராம். அவன் திரும்பும் போது முகம் முழுதும் தாடியால் மறைத்திருக்கும் 37 வயது ராமாக இருக்கிறான்.
இனிய கனவொன்று நனவானது போல என்று சொன்னேனே அது போல மிக இனிமையாக இருந்தது இதற்கடுத்த பகுதி. ஜானுவிற்கு உணவு எடுத்து வருவதும் அவள் உண்ட மீதியை இவன் ஆசையோடு சாப்பிடுவதும் தமிழ் மனதிற்கு தித்திப்பானதாகவே தோன்றியிருக்கும் என்றாலும் தமிழ் மனம் இப்படி யோசிக்கவும், பார்க்கவும் தானே பழகி இருக்கிறது?
ராம் என்ன வேலை செய்கிறான் என்று காட்டும் முதல் 10 நிமிடங்கள் ஒளிப்பதிவு, இசை என்று மிகத் தரமாக இருந்தது. ராம் தனியனாக ஊரைச்சுற்றி புகைப்படம் எடுக்கிறான். அவனுள் அந்த பதின் பருவத்து பையனின் குதூகலம் சற்றும் குறையாமல் இருக்கிறது. இந்தியநிலக்காட்சிகளை ஒரு குறுக்குவெட்டாக காட்டி விட்டு ராம் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் காட்சிக்கு வந்துவிடுகிறது.
மாணவர்களுக்கு ஒரு பயம் கலந்த மரியாதை ராமின் மீது இருக்கிறது. அவனும் அதை வெகுவாக ரசிக்கிறான் அவர்களின் அன்பை பெற்றுக்கொள்கிறான். குறிப்பாக வண்டியை நான் ஓட்டுகிறேன் என்று அந்த மாணவி சொல்லும் போது தந்தையின் கண்டிப்புடன் அவளை அனுமதிக்கிறான்.
ஆட்டோகிராப், பிரேமம் எல்லாம் பார்த்தாயிற்று. 96ல் புதுசாக என்ன சொல்ல முடியும்? அதற்கான பதிலாக 2ம் பாதி நீள்கிறது.
நட்பில் இருப்பவர்கள் காதலான பின்பு நண்பர்களை கழட்டி விட்டு விட்டு ஊர் சுற்ற விரும்புவார்கள். இங்கே ராமும் ஜானுவும் 22 வருடம் கழித்து அதை செய்ய குறுகுறுப்புடன் விழைகிறார்கள்.
இங்கே ஏதேனும் தப்பாக நடந்து விடுமோ என்ற அச்சம் ராம், ஜானுவின் நண்பர்களுடன் நமக்கு தோன்றுகிறது. But they just want to catch up with all those years.
ராம் மற்றும் ஜானு மட்டுமே இரண்டாம் பகுதி முழுவதும் வருகிறார்கள். இரண்டு குழந்தைகள் ஆளுக்கொரு புத்தகத்தை வைத்துக்கொண்டு இந்த படத்துக்கு நீயொரு படம் காட்டு என்று விளையாடுவது போல உரையாடல் நீள்கிறது. இவற்றின் வழியாக இடைப்பட்ட வருடங்களில் நடந்தவற்றை ஜானுவும் ராமும் தெரிந்து கொள்கிறார்கள்.
ஆண்கள் எப்போதும் ஒரு பெட்டிக்குள் பழைய காலத்தை, பால்யத்தை பூட்டி வைத்திருப்பார்கள். ராம் அது அத்தனையும் எடுத்து ஜானுவிடம் காட்டுகிறான்.
37 வயதில் பாதி வாழ்க்கை வாழ்ந்து முடித்து விட்ட பிறகு 15 வயதில் வந்த காதல் எத்தனை பரிசுத்தமானது என்று இருவரும் உணர்ந்து கொண்டு அந்த நினைவுகளை மீட்டிக்கொள்ளும் பொருட்டு எல்லோரும் உறங்க சென்று விட்ட இரவில் உரையாடிக்கொண்டே நகரை வலம் வருகிறார்கள். இந்த பகுதி Richard Linklater எடுத்த Before Series படங்களை நினைவு படுத்துவது போல இருந்தாலும் தனித்தன்மையாகவும் இருந்தது.
கோபம், சிரிப்பு, ஏக்கம், அழுகை என்று கலவையான உணர்ச்சிகளுக்கு இருவரும் ஆளாகிறார்கள். இந்த நாள் இன்னும் கொஞ்சம் நீளாதா என்று ஏங்குகிறார்கள்.
ஒரு வேளை ராம் திருமணம் செய்து கொண்டிருந்தால் இந்த சந்திப்பும், உரையாடலும் நடக்க சாத்தியம் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் ராம் தன்னுடைய மாணவர்களிடம் புகைப்படம் காலத்தை உறைய வைக்கும் என்று சொல்வது போல மனதளவில் அந்த பதின் பருவ காலத்திலேயே உறைந்து விட்டிருக்கிறான். அவனுடைய வாழ்வில் ஜானுவை அன்றி வேறு பெண் இல்லை. ஜானு இனிய நினைவாக அவனுள் இருக்கிறாள். அவள் நினைவாக அவன் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் பொருட்களை அவளுக்கு காட்டுகிறான்.
காதல் என்று தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்களை எடுத்து தள்ளியிருக்கிறார்கள். சமூகத்தில் காதலை வைத்து ஆயிரம் பிரச்சினைகள் நடக்கின்றன. தன்னை காதலிக்காத பெண்ணை கொலை செய்வதும் கடந்த சில வருடங்களில் நிறைய நடந்திருக்கிறது. காதலித்து விட்டு பிரிந்து சென்ற பெண்ணை பழி வாங்க அவள் வாழ்க்கையை சீரழிக்க என்று தன்னை சீரழித்துக்கொண்டவர்களும் உண்டு.
உச்சகட்ட வெறுப்பை தினம் கொட்டி கொண்டிருக்கும் சமூக ஊடக நிகர் உலகில் சக மனிதன் மீது அன்பு கொள்ள மறந்து போகிறோம். எல்லாவற்றையும் வரவு செலவு கணக்காக சுருக்கி கொண்டிருக்கிறோம்.
நடைமுறையில் சம வயது காதலர்கள் சந்திக்கும் துயரம் என்னவென்றால் அவனுக்கு வயதாகும் போது அவளுக்கும் வயதாகும் என்பது தான்.
பெரும்பாலும் பெண்ணுக்கு 24 வயதில் திருமணம் பேசி முடித்து விடுவார்கள்.
பையன் வேலைக்கு சென்று அக்கா, தங்கைகளுக்கு கடமையை முடித்து கொஞ்சம் finanacially sound ஆக ஆன பின் திருமணம் செய்து கொள்ளலாம் என்றால் அதற்காக அவன் காதலிக்கும் பெண் காத்திருக்க வேண்டும் என்றோ, அந்த பெண்ணின் குடும்பத்தார் இதை அனுமதிப்பார்கள் என்றோ எதிர்பார்ப்பது முறையல்ல.
இலக்கியம் என்பது நிகர்வாழ்க்கை என்பார் ஜெயமோகன். யதார்தத்தில் இணைய முடியாமல் போன ஜானுவும் ராமும் அனைத்தையும் பேசும் இரவில் ஜானு ஒரு கதையை ராமின் மாணவர்களுக்கு சொல்கிறாள். அது கதை என்பது நமக்கு தெரியும் ஆனால் அந்த மாணவர்களுக்கு அது உண்மை. இயல்பில் இணைய முடியாத காதலர்கள் அந்த கதையில் கணவன் மனைவியாக அந்த மாணவர்களின் உள்ளத்தில் படிந்து விடுகிறார்கள்.
படம் தெளிவாக ஒரு விஷயத்தை முன்வைக்கிறது. தான் காதலித்த ஆண்/பெண் எங்கே இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் மனதும், காதல் என்பது உடல் சார்ந்தது மட்டும் அல்ல என்கிற புரிதலுமே இன்று அவசியம். காதலித்த ஆண்/பெண் தனக்கு இல்லையென்று ஆன பிறகும் நட்பில் தொடருவதோ, அவன்/அவள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பதோ குற்றம் இல்லை. Infact அப்படி தான் இருக்கணும். அது தான் காதலுக்கு செய்யும் மரியாதை.
ஆண்கள் எப்போதும் ஒரு பெட்டிக்குள் பழைய காலத்தை, பால்யத்தை பூட்டி வைத்திருப்பார்கள். - I think it also suits for girls.
ReplyDeleteThe final para concluded with a philoshopical touch. Great.
சக மனித அன்புடன் காதல்! 96
ReplyDeleteஜெயமோகன் மேற்கோள்- தவிர்த்து இருக்கலாம்.
ReplyDeleteஏன் என்றால் அவரே கடந்த காலத்தில் வாழ்பவர் தான்.
ReplyDeleteதான் காதலித்த ஆண்/பெண் எங்கே இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் ,love is not an physical attraction which is beyond that is nice and 100% true.காதலித்தவர்கள் தனக்கு இல்லை எனத் தெரிந்த பின்பும் நட்பில் தொடர்வது நட்பாகவே இருந்தாலும் எனக்கு அது சரியாக தெரியவில்லை.
ReplyDelete