நான் கரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி 12 வருடங்களுக்கு மேலாகிறது. 2011 உலகக்கோப்பை போட்டியை அவ்வப்போது கவனித்ததோடு சரி. 2011ல் ஒவ்வொரு போட்டியை இந்தியா வென்ற போது சக மாணவர்கள் வெற்றியை கொண்டாடும் பொருட்டு செய்த கிறுக்கு தனங்கள் ஞாபகம் வருகின்றன. உச்ச கட்டமாக இறுதி போட்டியை பல்கலைக்கழக கலையரங்கத்தில் ஒளிபரப்ப நிர்வாகம் ஏற்பாடு செய்ய அன்று இந்தியா வென்றதால் கலையரங்கம் பிழைத்தது. ஆனாலும் செடி கொடிகளை சூரையாடி விட்டனர் நமது ரசிகர்கள்.
இலக்கியம், சினிமா என்று எனக்கு என்ன பிடிக்கும் என்ற ஒரு தெளிவு ஏற்பட கிரிக்கெட் ஒரு அபத்தமான விளையாட்டாக எனக்கு பட்டது. கிரிக்கெட் மட்டுமல்ல எந்த விளையாட்டையும் என்னால் ஒரு 10 நிமிடம் கூட பார்க்க முடிவதில்லை. ஆனாலும் நமது இன்றைய பேசு பொருள் கிரிக்கெட்டே. பேராசிரியராக ஆன பின் இந்த மூன்று வருடங்களில் கிரிக்கெட்டிற்கு எதிராக பேசிக்கொண்டே இருக்கிறேன். எனது மாணவர்களுக்கு நான் ஏன் இப்படி கிரிக்கெட்டை கரித்து கொட்டுகிறேன் என்ற கடுப்பு. ஏன் கிரிக்கெட் பார்கிறீர்கள் என்று கேட்டால் நான் ஆங்கில பேராசிரியராக இருப்பதால் எனது மாணவர்களுடைய பதில் “ கமெண்டரி கேட்டு என்னுடைய ஆங்கில அறிவை மேம்படுத்திக்கொள்ள” என்கிற ரீதியில் இருக்கும்.
“சரி, எங்க ஒரு ஓவருக்கு கமெண்டரி கொடு பார்ப்போம்”
“சார்?!!!”
“மூணு மணி நேரமோ ஒரு நாள் முழுக்கவோ கிரிக்கெட் பார்க்கேல?”
“ஆமா சார்” ஏதோ குற்றம் புரிந்தவன் போல இந்நேரம் உடல் மொழி மாறியிருக்கும்.
“சரி ‘ஆங்கில அறிவை மேம்படுத்திக்கொள்ள’ நான் ஆங்கில படம் ஆங்கில சப்டைட்டிலோட தர்றேன் பாக்குறியா?”
“சார்?!!!” தலையை சொறிந்து கொண்டே “சார், தமிழ்ல அந்த படம் கிடைக்காதா சார்?”
இதாவது பரவாயில்லை. ஆங்கில இந்துவில் வெளியான கிரிக்கெட் பற்றிய கட்டுரையை படிக்க கொடுத்தால் பையன் நம்முடன் பேசுவதையே நிறுத்தி விடுவான்.
Time is money ன்னு போறவன் வாரவன்லாம் சொல்றான். ‘என் வாழ்கையில ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானே செதுக்குனதுடா’ - நல்லாத்தான் இருக்கு. ஆனா வருசத்தில ரெண்டு மாசம் IPL மாதிரி பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு நடத்த படும் போட்டிகள் நமது இளைஞர்களின் நேரத்தை திருடுவது நமது இளைஞர்களுக்கு புரியவில்லையா?
“யோ லீவுல மனுசன் வேற என்ன பண்ணுவான்?”
“டிவில ஃப்ரீயாதான பாக்கோம்!”
“சார் சென்னை நம்ம ஊரு டீம் சார்”
ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் நம் வாழ் நாளிலிருந்து குடுத்ததற்கு இந்த பெருமை தான் மிச்சம்!
ஒரு விசயத்தில் நாம் தொடர்ந்து ஈடுபடும் போது அது ஏதோ வகையில் நம்முடைய சிந்தனையை, ஆளுமையை கட்டமைக்கிறது. இளைஞர்கள் நிரம்பிய இந்த தேசத்தில் என்னை போன்ற விதிவிலக்குகள் தவிர்த்து கிரிக்கெட்டை வழிபடுபவர்கள் தான் அதிகம். இத்தனை பேர் இதில் இவ்வுளவு நேரம் செலவளித்து என்ன முன்னேற்றத்தை தங்கள் வாழ்கையில் கண்டார்கள்? சராசரி பின்னணியிலிருந்து வந்த சச்சின், தோனியெல்லாம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில் சேர்ந்து விட்டார்கள். எப்படி? கிரிக்கெட் விளையாடி, விளம்பர தூதராக இருந்து என்று கணக்கு வழக்கில்லாமல் பணம் சேர்ந்து விட்டது. கிரிக்கெட்டை மேல் சொன்ன வீரர்கள் விளையாடிய காலம் முழுதும் கண் அயராமல் பார்த்த நம் இளைஞர்களுக்கு என்ன கிடைத்தது?
நல்லா விளையாடட்டும், விளையாடியதற்கு சம்பளம் வாங்கட்டும். நல்லா இருக்கட்டும். ஆனா இந்த இந்திய திரு நாட்டுல வேறெதவாது விளையாட்டு விளையாடியோ, இல்ல வேறெதாவது நேர்மையான தொழில் செஞ்சோ இவ்வளவு பணம் சேர்க்க முடியுமா? Behind Every Great Fortune There is a Crime அப்படினு பால்சாக் (Balzac) என்கிற எழுத்தாளர் சொன்னது நினைவுக்கு வருகிறது.
இந்தியர்கள் பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று மட்டம் போட்டு மட்டை பந்து விளையாட்டை பார்த்து சில நூறு பணக்காரர்களை உருவாக்கியிருக்கிறார்கள். சுந்தர ராமசாமியின் அக்கரைச்சீமையில் என்கிற கதையில் வரும் ராஜூ என்கிற கதாபாத்திரம் ‘என்னோட 25 வருச உழைப்பு வெள்ளைக்காரன் பாக்கெட்ல பணமா இருக்கு சார்’ என்று கதாசிரியரிடம் சொல்வதும் இங்கே மேற்கோள் காட்டப்படவேண்டிய வரியே. Time is Money என்பதன் விளக்கம் இப்போது புரிகிறதா? Time உங்களுடையது Money அவர்களுடையது! Cricket is a rich man's game என்றொரு கருத்தும் உண்டு. இங்கே கிரிக்கெட்டில் நிலவும் சாதி அரசியலை வைத்து சினிமாவும் எடுத்தாயிற்று.
வளர்ந்த நாடுகளில் உள்ள நடுத்தர குடும்பங்களின் வருமானமும் நமது நாட்டில் உள்ள உள்ள நடுத்தர குடும்பங்களின் வருமானமும் ஒன்று அல்ல. நம் குடும்பங்களிடமும் உள்ள சொத்து நம்முடைய நேரமே. அந்த நேரத்தில் ஊர் நாட்டுல வேற எந்த விசேசத்துக்கும் போகமல் வேலையே கதியென்று கிடந்து உழைத்து சேர்த்து பொருட்களை வாங்கி சேர்த்து நாம் வாழ்கையில் கரை சேர்ந்துவட்டதாக காட்டிக்கொள்கிறோம். இந்த கிரிக்கெட்டில் நாம் ஈடுபடுவதும் காட்டிக்கொள்வதற்காகவே.’ சென்னையில் இருப்பவர்களிடம் ஊர் நாட்டில் இருப்பவர்கள் ‘கடற்கரைக்கு போனியா?, மாலுக்கு போனியா?’ என்பதோடு இப்போது ‘IPL பார்க்க போனியா?’ என்று கேட்கிறார்கள். அதே சென்னையில் தான் கன்னிமாரா நூலகமும், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகமும் இருக்கிறது. பாவம் நம் இளைஞர்கள். அவர்களுக்கு இதையெல்லாம் சொல்லி தர ஆளில்லை. போக அங்கே சென்று தன்னை ஃபோட்டோ எடுத்து போட்டு கொள்வதில் கவர்ச்சி இல்லையே?!
நான் அடுக்கும் குறைகளுக்கு என்ன ஆதாரம்? சினிமாவில் இருந்தே உதாரணம் சொல்கிறேன். நம் இளைஞர்களுக்கு எல்லாமே எளிமையாக இருக்க வேண்டும். இங்கே நடிகர்களின் படங்கள் அடையும் வெற்றியில் பாதி கூட இயக்குனர்களின் படங்கள் அடைவதில்லை. அதாவது ரஜினி, விஜய், அஜீத், சல்மான், சாருக், அமீர் கான் பாணி படங்கள். அப்படங்களின் புரிந்து கொள்ள, விவாதிக்க எதுவுமேயில்லை. யார் இயக்கினாலும் அவர்களின் படங்களின் கதையிலோ எடுக்கப்பட்ட விதத்திலோ பெரிய வித்தியாசம் இருக்காது. மாற்றாக பாலா, மிஸ்கின், வெற்றிமாறன், அனுராக் கஸ்யப் போன்றவர்கள் எடுக்கும் படங்களை கேலி பேசுவதோடு ‘கிறுக்கன், சைக்கோ’ என்று பட்டப் பெயர் வைத்து கொண்டு இருப்போம். நம் இளைஞர்கள் கரும்பை சாறாக தான் குடிப்பார்கள். கடித்து திங்க திறானி காணாது. கடித்து தின்பது நேர விரயம் என்பார்கள். 5 நாள் போட்டியாக இருந்ததை குறைத்து, ஒரு நாளாக மாற்றி இப்போது 3 மணி நேரமாக சுருங்கி விட்டது. அதை விளையாடுபவருக்கும் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது.
எனது மாணவர்கள் பலருக்கு கிரிக்கெட் விளையாடுபவர்கள் தான் முன் மாதிரிகள். (Role Model) அப்துல் கலாமை முன் மாதிரியாக கொண்டு அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் நாலு நல்ல வார்த்தை சொல்லி பதில் போடுவார். அதை கிரிக்கெட் விளையாடுபவரிடம் எதிர்பார்க்கலாமா? உங்களை இளைஞனாக, மாணவராக காண்பவருக்கும், வெறும் விசிறியாக (fan) காண்பவருக்கும் வித்தியாசமில்லையா? பின்னர் நான் புரிந்து கொண்டது அவர்கள் முன்மாதிரி என்று சொல்வது அவருக்கு பிடித்த நபர் போல முடியை வெட்டிக் கொள்வது, உடையணிவது முடிந்தால் அவரை போல ஒரு உடல் மொழியை போலி செய்வது.
இந்த விளையாட்டை ஒரு 15 நாட்டுக்காரன தவிர வேறு யாராவது விளையாடுறானா? இதுக்கு உலக கோப்பை போட்டி நடத்துறத விட அபத்தமான விசயம் வேற ஏதாவது இருக்கா என்ன?
கிரிக்கெட் ரசிகனாக (பைத்தியமாக) இருப்பவர்கள் இதையே ஒரு தகுதியாக பெருமைக்குரிய விசயமாக நினைக்கிறார்கள். இவர்கள் யாரும் சச்சினின் சுயசரிதையையோ ராமச்சந்திரா குகா கிரிக்கெட் குறித்து எழுதிய புத்தகங்களையோ காசு குடுத்து வாங்க மாட்டார்கள் - வாங்கவே மாட்டார்கள் பிறகு எங்கு படிக்க?
சரி இவிங்கள திருத்தி எனக்கு என்ன ஆகப்போவுது. இந்த நாடும் நாட்டு மக்களும் கிரிக்கெட் பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கட்டும்.
http://www.flipkart.com/corner-foreign-field-indian-history-british-sport-english/p/itmeymydvzzrmy9h?pid=9780670086351&ref=L%3A1437178811153338052&srno=p_8&query=ramachandra+guha&otracker=from-search
http://www.flipkart.com/picador-book-cricket-english/p/itmczz22rttxnhe7?pid=9780330396134&ref=L%3A1437178811153338052&srno=p_10&query=ramachandra+guha&otracker=from-search