Thursday, 18 April 2019

மண்ணும் மனிதரும் - சிவராம காரந்த்


இந்திய பெருநாவல்கள் என்று ஜெயமோகன் பரிந்துரைத்த நாவல்களில் இதுவும் ஒன்று. கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு பிறகு இப்போது மறுபதிப்பு வந்துள்ளது. 2018 மதுரை புத்தக காட்சியில் சாகித்திய அகாதமி அரங்கில் இந்த புத்தகத்தை வாங்கினேன்.

தமிழில் நிலம் சார்ந்து வாழ்பவர்களை பற்றி கி.ரா அய்யா அளவிற்கு வேறெவரும் எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. மண்ணையும் மனிதர்களை பற்றி மட்டுமே எழுதியிருக்கிறார் என்று கூட கூறலாம். அவரது மொத்த எழுத்துமே கரிசல் எழுத்து என்கிற இலக்கிய வகைமை உருவாக காரணமாக இருந்திருக்கிறது.

மண்ணும் மனிதரும் நாவல் வாசிக்கையில் எனக்கு கி.ரா அய்யாவின் கோபல்ல கிராமம், அந்தமான் நாயகர் நாவல்கள் தொடங்கி அவருடைய பல சிறுகதைகள் நினைவுக்கு வந்தன. அவற்றில் கறிவேப்பிலைகள் என்கிற கதை முக்கியமானது. தனது மொத்த வாழ்க்கையையும் உழைப்பில் செலவழித்த பப்பு தாத்தா, பாட்டிக்கு மிச்சமென்று ஏதும் இல்லை. கறிவேப்பிலைகள் போல அவர்களின் பயன் முடிந்து விட்டது. நிலம் மற்றும் அதன் உடமையாளர்களுக்கு இனிமேல் பப்பு தாத்தா பாட்டியால் பயன் இல்லை.

மண்ணும் மனிதரும் நாவல் தென் கர்நாடக பகுதியில் நடைபெறுகிறது. அழகான கிராமம் என்று எளிதாக சொல்லிவிடலாம் ஆனால் அங்கே பிழைத்து கிடைப்பதற்கான உழைப்பென்பது ஆன்மாவை எழுதிக்கேட்பது.

ராம ஐதாளர் என்கிற வைதீகரின் குடும்பம் தான் நாவலின் மையம். ஐதாளர் வைதீக தொழில் செய்தாலும் மற்ற நேரங்களில் தன்னுடைய நிலத்தில் கடுமையாக உழைக்க கூடியவர். அவருடைய மனைவியும், விதவையாகிவிட்ட தங்கையும் உடன் இருக்கிறார்கள். அவர்களும் உழைப்பை தவிர வேறெதுவும் அறியாதவர்கள். மழை, வெயில் காலங்களை உத்தேசித்து நடவு நடுவது, நீர் பாய்ச்சுவது, களை பறிப்பது, விறகு சேர்ப்பது, ஊறுகாய் போடுவது, அப்பளம் இட்டு வைப்பது என்று ஓயாத வேலை. ஐதாளர் வீட்டு பெண்களின் கண்கள் எப்போது செம்பருத்தி நிறத்திலேயே இருக்கின்றன. விறகு புகையால். அவை ஒரு நாளும் மல்லிகை பூ நிறத்தில் இருந்ததில்லை என்று நாவலாசிரியர் சொல்கிறார்.

நாவலின் நிகழ்ச்சிகள் 1870களில் தொடங்கி 1930 கள் வரை நடைபெறுகிறது என்று உத்தேசிக்கலாம். ஐதாளர் அவரது வீட்டு சுவற்றில் ஓரிடத்தில் விக்டோரியா ராணி காலத்து பொன் காசுகளை பெட்டியில் போட்டு பதித்துவைத்திருக்கிறார். இதை பல வருடங்களுக்கு பிறகு அவருடைய மருமகள் நாக வேணி மழை பெய்து இடிந்து விட்ட சுவற்றில் இருந்து அதை கண்டெடுக்கிறார். அவர்களின் நிலத்தில் பாடுபடும் பிச்சி சொன்ன ஐதாளரின் புதையல் விஷயம் உண்மையாக இருக்குமோ என்று கூட நினைக்கிறாள்.

இந்த அறுபது எழுபது வருடங்களில் நாம் ஐதாளரின் வாழ்க்கை, அவரது இரண்டாவது திருமணம் அதன் மூலம் பிறகும் லச்சனின் வாழ்க்கை, லச்சனின் மனைவியும் மகன் ராமனும் படும் துயரங்கள் என்று ஒரு கிராமத்தில் வாழ்ந்த ஒரு குடும்பத்தின் 3 தலைமுறைகளை  காண்கிறோம்.

ஐதாளர் வாரிசு இல்லாததால் சத்தியபாமா என்கிற பெண்ணை மறுமணம் செய்து கொள்கிறார். அதன் மூலம் ஒரு பையனும் பெண்ணும் பிறக்கிறார்கள். பையனை மாமனார், மைத்துனர் மற்றும் மனைவியின் விருப்பப்படி வைதீக கல்வியை தவிர்த்து பள்ளி கல்வி கற்க அனுப்புகிறார். இதற்கு அவருடைய ஊரான கோடியில் பலத்த எதிர்புகளுக்கும் கிண்டலுக்கும் ஆளாகிறார். அவருடைய தங்கை வைதீக தொழிலை யார் தொடர்வார்கள் என்கிறாள். வைதீக தொழிலில் மதிப்பு இல்லையென்றும் படித்து தாசில்தார் ஆனால் வரும்படியும் உண்டு மரியாதையும் உண்டு என்கிறார்.

இந்த காலங்களில் அவருடைய பெண்ணின் கல்வியை பற்றி எந்த பேச்சும் இல்லை. ஆனால் அவருடைய மகன் லச்சனுக்கு பார்க்கும் நாக வேணி மங்களூரில் வளர்ந்ததால் பள்ளி கல்வியை பெற்றிருக்கிறாள். மேலும் பெண் பிள்ளைகளை வயதுக்கு வருமுன்னே கட்டிக்கொடுக்கும் வழக்கமும் அந்த காலத்தில் அதிகம் என்கிறதும் தெரிகிறது.

நவீன கல்வி லச்சனை நவீன மனிதன் ஆக்காமல் அவனை இன்பங்களை நுகரும் ஒரு ஊதாரி ஆக்கிவிடுகிறது. ஐதாளர் மனம் நொந்து விடுகிறார். லச்சன் அப்பாவின் முன்னாள் நண்பரும் தற்போது நட்பு திரிந்துவிட்ட சீனமையரிடம் அடைக்கலம் ஆகிறான். அவருடைய மூன்றாவது மகன் ஓரட்டன் உடன் சேர்ந்து அவனுடைய வாழ்க்கையையும் சீரழித்து விடுகிறான்.

லச்சன் செய்த தவறுகள் அடுத்த 20, 25 ஆண்டுகள் அந்த குடும்பத்தில் என்னென்ன மாற்றங்களை நிகழ்த்துகின்றன என்று விரிந்து செல்லும் நாவல் காட்டுகிறது.

தகப்பன் இல்லாமல் ராமனை வளர்க்க நாகவேணி அரும்பாடு படுகிறாள். அவளுடைய தந்தை, சித்தப்பா மற்றும் இரண்டு சகோதரர்களின் உதவியுடன் அவன் பத்தாம் வகுப்பு வரை படிக்க வைக்கிறாள். ஐதாளரின் காலத்திற்கு பிறகு அவர் கடைசி காலத்தில் கட்டிய வீட்டை விட்டு போவதில்லை என்கிற முடிவுடன் இருக்கிறாள். ஐதாளர், அவருடைய முதல் மனைவி பார்வதி, இரண்டாவது மனைவி சத்தியபாமா, தங்கை சரசுவதி அந்த வீட்டில் இருந்து உழைத்ததை போல இவளும் உழைப்பை தொடருகிறாள். தன்னால் இப்படி உழைக்க முடியுமென்பதை அவள் உழைத்தே அறிந்து கொள்கிறாள்.

அவளுடைய மகன் ராமன் பதின் பருவம் எய்திய பிறகு மாமன் வீட்டில் அவன் இருப்பது அவனுடைய அத்தைக்கு பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து சென்னைக்கு சென்று மேற்படிப்பை தொடர செல்கிறான். அங்கே அவனுடைய சித்தப்பாவை தற்செயலாக சந்தித்து அவர்கள் வீட்டில் அடைக்கலம் ஆகிறான். டியூஷன் சொல்லிக்கொடுத்து அதில் வரும் பணத்தை தன்னுடைய சாப்பாட்டு செலவுக்கு வைத்து கொள்ள வேண்டும் என்று சித்தபாவிடம் கொடுக்கிறான். அவர்கள் வேண்டாம் என்றாலும் இவன் கேட்பதில்லை.

பின்னர் வயது வேகத்தில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறை செல்கிறான். இதனால் படிப்பு தடைபடுகிறது. பின்னர் ஒரு வருடத்திற்கு பின் படிப்பை முடித்து விட்டு வேலை தேடி அலைகிறான். சீனமையரின் மூத்த மகன் நடத்தும் பெங்களூர் உணவகத்தில் மானேஜர் வேலைக்கு செல்கிறான். அங்கிருப்பது பிடிக்காமல் இரண்டு வருடம் கழித்து மும்பை சென்று அங்கும் வேலை தேடி அலைந்து மீண்டும் கிராமத்திற்கு திரும்புகிறான்.

சுதந்திரம் அடைவதற்கு முன்னர் கல்வி கற்ற இந்திய இளைஞர்கள் வேலை தேடி பட்ட கஷ்டத்தை இந்த 21ம் நூற்றாண்டு இளைஞர்களும் படுகிறார்கள் என்பது நகை முரண். தாத்தா மற்றும் தந்தையில் இருந்து மிகவும் மாறுபட்ட மனிதனாக ராமன் இருக்கிறான். அவனுக்கு இசை, ஓவியம் போன்ற கலைகள், இளைப்பாருதல் தேவை. வேலை ஆன்மாவை உரிஞ்சுவதை அவன் விரும்ப வில்லை.

வயது வேகத்தில் சுதந்திர போரில் பங்கு பெறுகிறேன் என்று பல காரியங்களை அவன் செய்கிறான். ஆனால் அவனே அவற்றை விலகி நின்று பார்க்க பம்பாய் வாழ்க்கையின் போது கற்றுக்கொள்கிறான்.

ஐதாளர் பிராமணர் என்றாலும் அவர் வீடு கடலுக்கு அருகில் இருக்கிறது. அவருடைய நிலத்தில் செம்படவ மக்கள் பாடுபடுகிறார்கள். பின்னர் ராமன் விவசாயம் செய்யும் போதும் மீன் கழிவுகளை கொட்டி உரமிடுகிறான். அவர்கள் வீட்டில் இருந்து எந்த புறம் சென்றாலும் கடல், ஆறு, ஏரி என்று நீர்நிலை இருக்கிறது. மலையடிவாரத்தில் விவசாயம் நடக்கிறது. ராமன் கடல் மீது பெருங்காதல் கொண்டிருக்கிறான். சென்னையின் கடற்கரையோ, பம்பாயின் கடற்கரையோ அவனுக்கு பிடிப்பதில்லை.

பிராமண குடும்பம் என்றால் கோவில் அருகில் உள்ள அக்கிரகாரத்தில் இருப்பார்கள், நிலம் வைத்திருந்தாலும் பாடு பட ஆட்கள் வைத்திருப்பார்கள் என்றே தமிழக சூழலில் அறிந்து வைத்திருக்கும் நாம் இங்கே ஐதாளர் குடும்பத்தில் பெண்கள் உட்பட அனைவரும் கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுவதை கண்டு ஆச்சரிய படாமல் இருக்க முடியவில்லை.

மாறும் காலத்திற்கேற்ப மாற வேண்டும் என்கிற கோட்பாட்டை அந்த கிராமத்தில் மூன்று குடும்பங்கள் பின் பற்றுகின்றன. அவற்றில் சீனமையர் பிள்ளைகள் உணவகத்தில் வேலைக்கு சென்று பின்னர் உணவகம் ஆரம்பித்து என்று பெரும் பணக்காரர்கள் ஆகிறார்கள்.

இன்னொரு குடும்பத்தின் மகனும் குந்தாபுரத்தில் உணவகம் வைக்கிறான். அவனும் சோடை போவதில்லை. ஐதாளரின் மகன் லச்சன் படிப்பில் தேறுகிறான் ஆனால் எந்த தர்மமும் இல்லாதவனாக இருக்கிறான். அவன் கற்ற ஆங்கில கல்வியால் அனைவரையும் துச்சமென நினைக்கிறான்.

ஐதாளர் அடித்து பிடித்து நிலமெல்லாம் சேர்த்து வைக்கிறார், வீடு கட்டி வைக்கிறார். போலவே சீனமையரும் செய்கிறார். அவருக்கு நான்கு மகன்கள் என்பதால் ஒருத்தன் அழித்தாலும் மற்றவர்கள் தாங்கி பிடிக்கிறார்கள்.ஆனால் ஐதாளருக்கு ஒரே வாரிசு அனைத்தையும் சூறையாடி விடுகிறான்.

நாவல் தமிழில் ஏற்கனவே வாசித்த பல படைப்புகளை நினைவு படுத்தியது. ந. சிதம்பர சுப்பிரமணியனின் மண்ணில் தெரியுது வானம் தொடங்கி தோப்பில் முஹம்மது மீரானின் ஒரு கிராமத்தின் கதை, சாய்வு நாற்காலி, ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் மற்றும் அவருடைய பல மும்பை கதைகள் பின்னர் பி.கே. கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை. 

மண்ணும் மனிதரும்  நாவல் அனைத்திற்கும் முன்னாலே எழுதப்பட்ட நாவல். நாவல் வெளியான போது நாஞ்சில் நாடனும், பி.கே கிருஷ்ணன் அவர்களும் பிறந்தே இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

கன்னட நாவல் என்றாலும் நிலம் சார்ந்து மக்கள் வாழ்ந்த வரை மொத்த இந்தியாவிலும் வாழ்க்கை கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருந்திருக்கும் என்றே நாவல் நினைக்க வைக்கிறது. தமிழில் சித்த லிங்கையா மொழி பெயர்திருக்கிறார். எந்த தொய்வும் இல்லாமல் மிக விரைவாக வாசித்து விடக்கூடிய நாவல். ஆழமான உணர்வுகளை கடத்தக்கூடிய நாவல்.