ஓநாயும் ஆட்டுக்குட்டியும் நண்பர்களாக இருக்க முடியுமா? அப்படி இருந்தால் அதில் ஏதோ தந்திரம் இருக்கிறது, அது ஆட்டுக்குட்டிக்கு நல்லதாக இருக்க முடியாது என்பதாக தானே கதை செல்ல முடியும்?
இரண்டு மனிதர்களுக்கு நடுவே இருக்க வேண்டியது மரியாதை மட்டுமே என்று காலம் சென்ற எழுத்தாளர் ஜி. நாகராஜன் சொல்லியிருக்கிறார். ஆரோக்கியமான மனித உறவுகள் நீடிக்க மரியாதை அவசியம். நீங்கள் காதலிக்கும் பெண்ணிற்கு மரியாதை தராவிட்டால் அவள் காதலை முறித்துக்கொண்டு போவதற்கான வாய்ப்பு அதிகம்.
Dogman படத்தில் Marcello என்கிற நாய் பராமரிப்பாளர் Simone என்கிற முரட்டு மூடனுடன் நட்பில் இருக்கிறார். அவன் உள்ளூர நல்லவன் என்று நினைக்கிறார். பத்து பேரை அடித்து துவைக்கும் பலசாலி என்று பெருமைப்படுகிறார். Marcello ரகசியமாக cocaine விற்கிறார். Drug Addict ஆன Simone Marcello விடம் இருந்து வாங்கும் cocaineற்கு பணம் கொடுப்பதில்லை. அவனுடைய கடையிலேயே cocaine பொடியை முகரவும் செய்கிறான்.
Marcello வாழ்க்கையில் இரண்டே இன்பங்கள் தான். ஒன்று தன்னிடம் வரும் நாய்களை பராமரிப்பது. இன்னொன்று தன் செல்ல மகளுடன் நேரத்தை செலவு செய்வது. மகளுடன் செலவு செய்யும் நேரத்திற்கு தேவையான பணத்தை ஈட்டவே அவர் cocaine விற்கவும் துணிகிறார்.
எத்தனை பெரிய வகை நாயாக இருந்தாலும் Marcello அதை சாந்தப்படுத்தி groom செய்கிறார். Marcello கதா நாயகனுக்குரிய எந்த லட்சணமும் உடைய நபர் அல்ல. சராசரியான உயரம் கூட இல்லை. ஓடிசலான தேகம். கால் பந்து விரும்பி விளையாடுகிறார்.
Simone மீது இருக்கும் பயமா, பற்றா, அன்பா, மரியாதையா, இரக்கமா? ஏதோ ஒன்று Marcelloவை Simoneடம் விசுவாசமாக இருக்க வைக்கிறது. Simone சொல்வதை பெரிய மறுப்பு இல்லாமல் செய்கிறார். திருடப்போகும் Simone Marcelloவை get away driverஆக பயன்படுத்துகிறார் ஆனால் பிச்சை காசு போடுவது போல கொள்ளையில் பங்கு கொடுக்கிறார்.
கொள்ளையடிக்கும் போது தொந்திரவு செய்த நாயை freezerல் வைத்து விட்டதாக Simoneனின் partner சொல்கிறான். இதை கேட்டு துயரப்படும் Marcello திரும்பி சென்று அந்த வீட்டினுள் ஏறி freezerல் கிட்ட தட்ட உறைந்து போகும் நிலையில் இருக்கும் நாயை காப்பாற்றுகிறார்.
உயிர்களிடத்தில் இத்தனை அன்பும் அக்கறையும் உடைய Marcello எந்த அடிப்படை அறமும், நீதி உணர்ச்சியும் இல்லாத Simoneடம் நட்பில் நீடிப்பது பெரிய புதிர் தான். Simone அவனுடைய குற்றங்களின் உச்சமாக Marcelloவை மிரட்டி அவனுடைய கடை சாவியை வாங்கி அவனுடைய கடை வழியாக துளை அமைத்து பக்கத்து கடையை கொள்ளையடிக்கிறான்.
போலீஸ் Marcelloவை கைது செய்து சிறையில் அடைக்கிறது. Simoneஐ காட்டி கொடுக்காமல் ஒரு வருடம் சிறை அனுபவித்து விட்டு வரும் Marcello வாழ்க்கையை மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும் என்பதை உணர்கிறார். மகளை சந்திக்கும் போது அன்பை பொழிகிறார். Simoneடம் சென்று கொள்ளையில் தன்னுடைய பங்கை தருமாறு கேட்கிறார். Simone தர முடியாது என்கிறான்.
இதன் பிறகு சராசரி மனிதனாக எதிர்வினையாற்றி அதற்கான காயத்தையும் பெறுகிறார். Simoneடம் நட்பு பாராட்டி அருகில் வாழ்ந்த, கடை வைத்திருந்த அத்தனை நபர்களையும் எதிரிகளாக்கிவிடுகிறார். யாருடைய ஆதரவும் இல்லாமல் போய் விடுகிறது.
Enough is Enough என்று முடிவு செய்யும் Marcello ஒரு தந்திரம் செய்கிறார்.
Cannes திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்ட இந்த Italy நாட்டு திரைப்படம் சிறந்த நடிகருக்கான பரிசு பெற்றதாக வாசித்தேன். படத்தின் பெரும் பகுதி ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஒரு கடற்புற நகரத்தில் நடக்கிறது. Marcello மகளுடன் செல்லும் சுற்றுப்பயணம் தவிர்த்து கதை நிகழும் இடங்களும், கதா பாத்திரங்களும் மிகக்குறைவே.
மெல்ல நகரும் ஒரு திரைப்படம் தான். பல வகையான நாய்களை காணும் நாம் அவற்றிடம் உள்ள அந்த வித்தியாசத்தை கண்டு துணுக்குறுவோம். மனிதர்களும் இத்தனை வித்தியாசமானவர்கள் தானே!