Murder Mystery என்பது எப்போதுமே சலிக்காத ஒரு genre. ஆனால் சில படங்களை ஒரு தடவைக்கு மேல் பார்க்க முடியாது. ஏனென்றால் மர்மம் தான் விடு்பட்டுவிட்டதே?!?! Mystic River போன்ற படங்களை இரண்டாம் முறை பார்க்கும் போது நடிகர்களின் performance ஐ தான் கவனிப்போம்.
மாற்றாக Seven, Zodiac, Memories of Murder, Tell Me Something போன்ற படங்களில் மீண்டும் மீண்டும் பார்ப்பதற்கும், அடடே இதை முதல் தடவை பார்க்கும் போது எப்படி கவனிக்காமல் விட்டோம் என்று ஆச்சரியப்படுவதற்கும் நிறையவே காட்சிகள் இருக்கும்.
Black Coal, Thin Ice படமும் இப்படி ஒரு murder mystery தான். இப்படி மர்மப்படங்களை பற்றி எழுதும் போது மிக குறைவாக தான் சொல்ல வேண்டி இருக்கும். பின்னர் மர்மத்தை இங்கே அவிழ்த்து விட்டால் படம் அசுவாரஸ்யமாக மாறிவிடுமே!!
சீன நாட்டு திரைப்படம் என்றாலும் மேற்கூறிய ஆங்கில, கொரியா படங்களின் பாதிப்பு அனேகம் உண்டு.
படம் "Heilongjiang province in far northeast Manchuria"வில் நடக்கிறது. நாம் சீனா என்றாலே திரையில் பார்க்கும் Shanghai, Beijing, Macau, Hong Kong போன்ற நவீன நகரங்களில் இருந்து எந்த தொடர்பும் இல்லாத ஒரு small town.
Seven படம் எங்கே நடக்கிறது என்ற குறிப்பே படத்தில் இருக்காது. எப்போதும் மழை பெய்து கொண்டே இருக்கும். அதோடு படத்தின் மைய கதா பாத்திரங்கள் ஒரு புழுக்கம், படபடப்பு, பயம், எரிச்சல் கலந்த உணர்வோடு படம் முழுதும் வருவார்கள். இங்கே மழை என்பது உன்னதமான, காதலுக்குரிய பின்னணி என்பது போன்ற பிம்பங்கள் மாறி ஒரு மர்மத்தன்மை கொண்டதாக மாறி விடுகிறது.
அது போல Black Coal, Thin Ice படத்தில் 80 சதவிகித படம் முழுதும் பனி விழும் காலத்தில் நடக்கிறது. பனி விழுவது குற்றவாளியின் தடையத்தை மறைக்க ஏதுவானதாக உருக்கொள்கிறது.
முதல் இருபது நிமிடங்கள் என்னடா இது மிஷ்கின் படம் மாதிரி இருக்கு??!! Hollywood style 3 Act Structure follow பண்ற மாதிரி தெரியுது?! அப்டின்னு யோசிக்க வைக்கும் திரைக்கதை பின்னர் ஒரு police procedural என்று பொறுமையாக நகர்கிறது.
வருடம் 1999. நிலக்கரியை ஒரு பெரிய இரும்புக்கரம் அள்ளி லாரியில் போடுகிறது. அதில் ஒரு பொட்டலம் கிடக்கிறது. Cut to: ஒரு ஆணும் பெண்ணும் லாட்ஜ் என தோற்றமளிக்கும் இடத்தில சீட்டு விளையாடி கொண்டிருக்கிறார்கள். சட்டென காட்சி மாறி conveyor beltல் நகரும் நிலக்கரி நடுவில் ஒரு வெட்டப்பட்ட கை இருப்பதை காட்டுகிறது. மீண்டும் அறைக்கு திரும்பி இருவரின் கைகளும் பின்னி பிணைந்து முயங்குவதை தொடர்கிறது.
நாம் நிமிர்ந்து உட்கார்ந்தால் காட்சி மீண்டும் அந்த ஆணும் பெண்ணும் ஒரு ரயில் நிலையத்தில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு மல்லுக்கட்டி உருளுவதை காட்டி அவர்கள் கணவன் மனைவி என்றும் அவர்கள் உறவை முறித்து கொண்ட பின் நடந்த கடைசி சந்திப்பும் என்று தெரிகிறது.
பின்னர் காட்சி நிலக்கரி தொழிற்சாலைக்கு நகரும் போது வெட்டப்பட்ட கை குறித்து விசாரிக்க வரும் காவல் துறை அதிகாரி இதற்கு முந்திய காட்சியில் சீட்டு விளையாடிய, பொது இடம் என்றும் பாராமல் தனது முன்னாள் மனைவியுடன் சண்டையிட்ட நபர் என்று தெரிகிறது. அவரது பெயர் Zhang.
பல துண்டுகளாக வெட்டப்பட்ட உடல் பாகங்கள் அந்த பிராந்தியம் முழுவதும் கிடைக்க குழம்புகிறது போலீஸ். ஒரு உடல் தானா இல்லை ஒன்றிற்கும் மேற்பட்ட உடல்களா என்று தேடுகிறார்கள். பின்னர் இறந்தவர் பெயர் Liang என்றும் அவரது மனைவி Wu ஒரு Laundry கடையில் வேலை செய்வதும் தெரியவருகிறது. இறந்தது தனது கணவன் தான் என்று மனைவி உறுதி செய்ய, அடக்கம் செய்து சாம்பலை குடுக்கிறார்கள்.
குற்றவாளி என்று சந்தேகத்தின் பேரில் லாரி ஓட்டுனர் அண்ணன் தம்பிகளை போலீஸ் பிடிக்கிறது. இங்கே Pulp Fiction படத்தை நியாபாக படுத்தும் ஒரு shoot out உடன் படத்தின் வேகம் ஒரு நிதானத்தை அடைந்து விடுகிறது. இந்த குறிப்பிட்ட காட்சியின் பின்புலம், நிறம், சதுரங்க பலகை போன்ற தரை என்று இந்த படத்திற்கான விசேஷமான காட்சி மொழி ஒன்று உருவாகிறது. படம் ஒரு வித மஞ்சள் நிறம் கொண்டு வசிகரிக்கவும், பதற வைக்கவும் செய்கிறது.
இந்த shoot outல் Zhang காயம்பட்டுவிடுகிறன். பின்னர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் காட்சி தொடங்குகிறது. இதற்கு அடுத்து வரும் ஒரு sequence அப்டியே நம்மை அசரடிக்கும். அந்த காட்சியோடு படம் 2004ம் வருடத்திற்கு தாவி விடுகிறது. இப்பொது Zhang ஒரு drunkard ஆக மாறி, காவல் துறையிலிருந்து விலகி ஒரு தனியார் நிறுவனத்தில் safety officer வேலையில் இருக்கிறான்.
தற்செயலாக தனது போலீஸ் அதிகாரி நண்பனை சந்திக்கும் Zhang, 1999ல் நடந்தது போல மேலும் நடந்த இரண்டு கொலைகள் பற்றி தெரிந்து கொள்கிறான். கொலையுண்ட மூன்று நபர்களுடன் தொடர்புடைய ஒரே பெண் Wu என்பது தற்செயலானது அல்ல என்ற முடிவிற்கு போலீஸ் வருகிறது.
Wu செல்லும் பாதையில் பயணித்து நோட்டமிடுகிறது போலீஸ். Wu விடம் உள்ள ஏதோ ஒன்று Zhang ஐ ஈர்க்க பேசி பழக முயற்சிக்கிறான். தனது உடை ஒன்றை dry cleaning குடுக்கிறான். கடையின் முதலாளி Wu விடம் தப்பாக நடக்க முயற்சிக்கிறார். Iron box கையில் பட்டு காயம் ஏற்பட Zhang மருந்து வாங்கி வந்து தருகிறான்.
பனி கொட்டும் இரவில் Wu வீடு செல்லும் வரை Zhang பின் தொடர்கிறான். இடையில் ஒரு முறை தனது வண்டியை நிறுத்தி விட்டு செல்ல அதை யாரோ சேதப்படுத்தியதை பனியில் இருக்கும் கால் தடத்தை வைத்து யூகிக்கிறான்.
Wuவிற்கு Ice Skating பிடிக்கும் என்று அறிந்து கொள்கிறான். அவளுடன் ice skating செல்கிறான். அவளை தனிமையில் நெருங்க முயற்சிக்கிறான். இதற்கிடையில் குற்றம் குறித்தும் துப்பு துலக்க உதவி செய்கிறான்.
ஒரு மணி நேரம் இருபது நிமிடம் இருக்கும் போது வெட்டப்பட்ட உடல் எப்படி வெவ்வேறு இடத்திற்கு சென்றது, குற்றவாளி யார் என்று துப்பு துலங்கி விட என்னடா இது இன்னும் அரை மணி நேரம் இருக்கு அப்போ என்னாகும் என்று யோசித்தால் கியரை மாற்றி திரை கதை மேலும் அடர்த்தி ஆகிறது.
இப்படி பனி பொழியும் பின்னணியில் காதல் படம், பாட்டு என்று தான் நமக்கு தோணும். ஆனால் இங்கே இதை ஒரு suspense thriller கான பின்னணியாக பயன்படுத்தியுள்ளார் இயக்குனர். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற தலைப்பில் உள்ள முரணை போல இங்கே Black Coal, Thin Ice என்றால் இது ஒரு நபருடன் பொருத்தி பார்க்க வேண்டிய அடையாளம் இல்லை என்பது படம் பார்க்கும் போது நமக்கு தெரிகிறது.
மனிதர்கள் குற்றங்களை தங்கள் நலன் கருதி திட்டமிட்டு செய்வதில்லை. சில சமயம் தங்கள் மரியாதையை காப்பாற்ற ஒரு குற்றத்தை புரிந்து விட்டு அதை மறைக்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் மறைக்க முயற்சிப்பது குற்றத்தை அல்ல அந்த குற்றம் வெளியே தெரியும் போது சமூகம் தங்கள் மீது கொண்டுள்ள மரியாதையும் போய் விடும் என்பதால் தான்.
எந்த மிகைப்படுத்தலும் இல்லாத நடிப்பு, அருமையான பின்னணி இசை, ஒளிப்பதிவு என்று எல்லாமும் யதார்த்தற்கு பக்கத்தில் இருக்கும் இந்த படம் ஒரு புதிய அனுபவத்தை அளிக்கும். ஒன்றிற்கும் மேற்பட்ட முறை பார்த்து ரசிக்க வேண்டிய படம்.
For More Details - http://www.imdb.com/title/tt3469910/?ref_=nv_sr_1