Monday, 21 October 2019

Lady Bird - Girlhood

இன்னைக்கு பாக்க போற படத்தோட பேரு Lady Bird.

இது ஒரு coming of age film. இப்படி படங்கள் Higher Secondary படிக்கிற 15ல இருந்து 17, 18 வயசு பசங்க, பொண்ணுங்களை பத்தின கதையா இருக்கும். படத்தோட ஆரம்பத்துல ரெம்ப emotionalஅ எல்லாத்தையும் handle பண்ற characters படம் முடியும் போது ஒரு maturity க்கு வந்திருப்பாங்க.

நாம அவங்களோட emotional மற்றும் spiritual growthஅ தான் திரைல பாக்குறேம். Life of Pi, Dead Poets Society அப்புறம் 400 Blows (அப்பாவோட type writer அ திருடி விக்கிறதுக்கு கொண்டு போவானே?! அந்த படம்) Coming of age genreல வரும்.

Hollywoodல ஒவ்வொரு வருசமும் coming of age genre ல ஒரு 5 படமாவது வரும். தமிழ்ல துள்ளுவதோ இளமை அப்படி ஒரு படம். ஆனா தமிழ்ல higher secondary, college படிக்கிற பசங்களை வச்சு எடுக்கிற படம் பெரும்பாலும் சொதப்பிடும். எனக்கு வேற ஒரு தமிழ் படமும் நியாபகத்துல இல்ல.

இங்க Lady Bird படத்துல school முடிச்சு அடுத்து எந்த college க்கு படிக்க போறது அப்டிங்கிறத அம்மா, அப்பா கூட discuss பண்ணிட்டு இருக்கிற ஒரு பொண்ணு Christine. 14 வயசுல இருந்து college படிச்சு முடிக்கிற வரைக்கும் ரெம்ப உணர்ச்சிகரமா எல்லாத்தையும் பாக்க கூடிய வயசு. அந்த வயசுல அதுவும் school முடிக்க இன்னும் கொஞ்ச காலமே இருக்கும் சூழ்நிலைல Christine என்னலாம் பன்றாங்க அப்டிங்கிறத தான் படம்.

இந்த வயசுல தான் நமக்குன்னு ஒரு அடையாளம் தேவைப்படுது. வீட்டுல வச்ச பேரு போதாமல் நாமளே நமக்கு பேர் வைப்போம். இல்ல friends கூட சேர்ந்து seven stars, naughty, sweety girlsன்னு பேர் வச்சு பைத்தியம் மாதிரி ஏதாவது பண்ணிட்டு இருப்போம். இதெல்லாம் part of growing up.

இங்க Christine அவங்களுக்கு அவங்களே "Lady Bird" ன்னு பேர் வச்சுக்கிறாங்க. School election ல நிக்கிறாங்க, culturalsன்னு சொல்லி drama ல participate பன்றாங்க, friends கூட சண்டை போடுறாங்க, அப்புறம் சேர்ந்துகிறாங்க, harmless பொய்கள் சொல்றாங்க. எல்லாரும் அவங்களை Lady Bird னு தான் கூப்பிடனும்னு condition போடுறாங்க.

பொண்ணு இப்படி நடந்துகிடும் போது அந்த பொண்ணோட அம்மா அதை எப்படி handle பன்றாங்க, அவங்க அப்பா என்ன மாதிரி யோசனை சொல்றாங்க, அண்ணன் என்ன நினைக்கிறான், அப்புறம் தோழிகள் reaction என்னன்னு ஒரு perfect coming of age film.

இந்த படத்தோட director ஒரு பெண். பேரு Greta Gerwig. அவங்களோட சொந்த வாழ்க்கைல நடந்ததை கொஞ்சம் கற்பனை கலந்து எழுதி எடுத்திருக்காங்கன்னு படிச்சேன்.

இங்கே சொல்ற படத்தை எல்லாம் நீங்க பாக்க நேரம், சூழ்நிலை இருக்கான்னு தெரியலை. ஆனா நாம ஒரு படத்தை பத்தி கேள்விப்பட்டு அதை பாக்கணும்னு நினைச்சுட்டே இருந்தோம்னா கண்டிப்பா ஒரு நாள் பாத்திடுவோம்.

Okja - Broiler உலகம்

எப்போதும் சின்ன பிள்ளைங்களை வச்சு எடுக்கிற படங்கள்ல ஒன்னு அந்த குழந்தை தொலைஞ்சு போய்டும் இல்ல அந்த குழந்தைக்கு பிடிச்ச பொருள் தொலைஞ்சு போய்டும், அந்த குழந்தை அதோட உறவினர்கள், நண்பர்கள் கிட்ட இருந்து பிரிஞ்சு போய்டும் அப்புறம் ஒரு பெரிய சாகசத்துக்கு பிறகு திருப்பி எல்லாரும் ஒன்னு சேர்ந்திடுவாங்க.

யதார்த்தத்துக்கு பக்கத்துல இருந்தா அது Iran படாம இருக்கும். Children of Heaven, Where is My Friend's Home? The Song of Sparrows மாதிரி. Rabbit Proof Fence - 3 பிள்ளைங்க அடைச்சு வச்ச முகாம்ல இருந்து தப்பிச்சு நடந்தே ஊருக்கு வருவாங்களே?- மாதிரி உண்மை கதையையும் படமா எடுப்பாங்க.

Okja கொரியாவை சேர்ந்த இயக்குனர் எடுத்த Hollywood படம். படம் பாதிக்கு பாதி கொரியா மற்றும் USAல நடக்கிற மாதிரி கதை.

இப்போ நாம broiler கோழிக்கறி நிறைய சாப்பிடுறோம். இந்த பழக்கம் எப்படி இந்த சமூகத்துல உருவாச்சு? என்னைக்காவது கறி சாப்பிடுற பழக்கத்தை வார வாரம்னு மாத்தினதுல இந்த broiler கோழிக்கு முக்கிய பங்கு இருக்கு. Broiler கோழி யாரும் வீட்டுல வளர்க்கிறது கிடையாது. அதை தொழிற்சாலை மாதிரி வச்சு கறிக்காக மட்டுமே வளர்க்கிறாங்க. இந்தியா மாதிரி நாட்டுல broiler கோழினா வெளிநாடுகள்ல என்ன விலங்காக இருந்தாலும் சாப்பிடுவாங்க.

மக்கள்கிட்ட நீங்க சாப்பிடுறது ஆரோக்கியமான, செயற்கை உரம் எதுவும் கலக்காமல் விளைவிக்கப்பட்ட காய்கறினா வாங்குவார்கள் தானே?! அதே மாதிரி நாட்டுக்கோழி, மீன் வளர்ப்பு தொழில்லாம் நடக்குது. ஆனா வெள்ளைக்காரங்க கொஞ்ச விவகாரம் ஆனவங்க. பெரிய லாபம் பாக்க நினைக்கிற பேராசை பிடிச்சவங்க.

நீர் யானை, பன்றியோட gene, DNA லாம் கலந்து ஒரு புது வகையான பன்றியை உருவாக்குறாங்க. அப்படி உருவாக்கபட்ட 15 பன்றிகளை உலகத்துல 15 வேறு வேற நாட்டுல உள்ள குடும்பங்கள்கிட்ட குடுக்குறாங்க. அவங்க கிட்ட அந்த பன்றி 10 வருசம் இயற்கையான சூழ்நிலைல வளரும். அதுக்கு பிறகு அதுல best பன்றியை தேர்ந்தெடுத்து கறி போட்ருவாங்க.

இதுல ஒரு பன்றி கொரியால உள்ள ஒரு குடும்பத்துகிட்ட வருது. அங்க இருக்கிற ஒரு பாப்பா அந்த பன்றியை பாத்துக்கிறா. பன்றிக்கு Okja ன்னு பேர் வைக்குறா. இதுவும் கிட்ட தட்ட ET மாதிரி ஒரு கதை தான். ஆனா அந்த பாப்பாவுக்கு பன்றியை கறிக்கு கொண்டு போயிடுவாங்க அப்டிங்கிறது தெரியாது.

நம்ம ஊர்ல நடந்த ஈமு கோழி மோசடிலாம் நியாபகம் இருக்கா?! பிரபலமானவங்க பலர் ஈமு கோழி வியாபாரத்துக்கு விளம்பரம் பண்ணிருக்காங்க. இங்க அந்த மாதிரி பிரபலங்களை வச்சு 10 வருசம் ஒரு reality show மாதிரி இந்த பன்றிகளோட வளர்ச்சியை cover பண்ணி மக்கள் கிட்ட நீங்கள் சாப்பிட ஆரோக்கியமான கறி உருவாகுதுன்னு காட்டுறாங்க. ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குறாங்க.

ஆனா இப்படி விளம்பரத்துக்கு பின்னாடி யதார்த்தம் வேறயா தானா இருக்கும்? அந்த யதார்த்தம் என்ன? நாம நம்ம சாப்பாடு பத்தி எந்த அளவுக்கு அக்கரையோட இருக்கோம்? மனிதன் விலங்கு மேல வைக்குற அன்பு என்ன மாதிரி இருக்கும்?

ஒரு Typical Hollywood படம் மாதிரி இருந்தாலும் சுற்றுப்புறம் சார்ந்து கவனிக்கப்படாம போற விஷயங்களை இந்த படம் காட்டுது. கண்டிப்பா friends கூட உட்கார்ந்து theatre பாக்க வேண்டிய படம். ஆனா நமக்கு வேறென்ன மார்க்கம்? Computer ல பாக்க வேண்டியது தான்.

Sunday, 20 October 2019

Article 15 - இரண்டு இந்தியாக்கள்


India is two countries in one: an India of Light, and an India of Darkness. The ocean brings light to my country. Every place on the map of India near the ocean is well off. But the river brings darkness to India—the black river.

- The White Tiger, Aravind Adiga

The White Tiger நாவலின் மைய கதா பாத்திரம் India of light and India of darkness என்று இரண்டு விதமான இந்தியாக்கள் இருப்பதாக அடிக்கடி சொல்லும். Article 15 படத்தின் முதல் பத்து நிமிடத்திலேயே  இப்படம் அந்த இரண்டு விதமான இந்தியாக்களை பற்றியதாக தான் இருக்கப்போகிறது என்று ஒரு உள்ளுணர்வு.

படத்தின் முதல் காட்சியில் கிராமத்தினர் கூடி பாடிக்கொண்டிருக்கின்றனர். மழை பெய்து கொண்டிருக்கிறது. Rashomonனில் பெய்வது போன்ற மழை. பாடல் வரிகள் கூர்மையாக இருக்கின்றன. நான் உண்மையை சொல்வேன், சொன்னால் உனக்கு வலிக்கும் என்பதாக. பணக்காரர்கள் சுத்திகரிக்கப்பட்ட நீரை குடிக்கிறார்கள் நாங்கள் அசுத்தமான நீரை குடிக்கிறோம் என்று பாடலில் குடிதண்ணீரின் தரத்தில் இருக்கும் அரசியலை பாடுகிறார்கள். குடிசைகள், சகதி, பன்றிகள் என்று அவர்கள் வாழ்விடம், சுற்றுப்புறத்தை கேமரா சுற்றி வருகிறது.

முதல் காட்சியின் இடைவெட்டாக மழையின் ஊடே செல்லும் ஒரு வேனில் 3 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை சில நொடிகள் காட்டிவிட்டு மீண்டும் கிராமத்திற்கு திரும்பிவிடுகிறது.

இப்போது கதா நாயகன் அறிமுகம்.பின்னணியில் ஆங்கில பாடல் ஒன்று ஒலிக்கிறது. பறவைக்கோண காட்சியாக சுங்கம் வாங்கும் நவீன நாற்கர இந்திய சாலையில் வெள்ளை நிற Bolero கார் விரைகிறது. காரின் உள்ளே Ayan Ranjan. உத்திர பிரதேசத்தில் உள்ள Laalgaon மாவட்டத்திற்கு புதிய Additonal Commissioner ஆக பொறுப்பேற்க சென்று கொண்டிருக்கிறான். அவன் அருகே Nehru எழுதிய The Discovery of India புத்தகம்.

காரின் ஓட்டுனர் ராமர் பற்றிய ஒரு கதையை சொல்கிறார். ராமர் வனவாசம் முடிந்து திரும்பும் போது அனைத்து ஊர்களும் விளக்கேற்றி வைத்திருந்தன. ஆனால் ஒரு கிராமம் மட்டும் இருளில் இருந்தது. ராமர் அங்கு சென்று ஏன் இருளில் இருக்கிறீர்கள் என்று கேட்கிறார். அவர்கள் விளக்கேற்றி வைத்திருந்தாகவும் காற்றில் அணைந்து விட்டதாகவும் சொல்கின்றனர். அவர்கள் இருளில் இருக்கும் போது ராமரின் மாளிகை நன்றாக ஜொலிப்பதை காணமுடிவதால் மீண்டும் விளக்கேற்றவில்லை என்கின்றனர். India of light and India of Darkness.

Ayan Ranjan காதலிக்கு கிராமப்புற இந்தியா அழகாக இருப்பதாக குறுந்செய்தி அனுப்புகிறான். தண்ணீர் வாங்க வண்டியை நிறுத்த சொல்கிறான். ஓட்டுனர் அது தாழ்த்த பட்ட மக்கள் வாழும் கிராமம் என்றும் அவர்களின் நிழல் கூட நம்மீது விழக்கூடாது என்றும் கூறுகிறார். அவர்கள் தொட்ட தண்ணீரை எப்படி குடிப்பது என்று கேட்கிறார். இதைப்பொருட்படுத்தாத Ranjan தண்ணீர் வாங்க சொல்லி பணத்தை கொடுத்து விட்டு வண்டியை விட்டு இறங்குகிறான். அங்கே கடைக்கு வெளியே சிலர் பெஞ்சில் அமர்ந்து இருக்கிறார்கள். சிலர் செருப்பை தனியே வைத்து விட்டு  குத்தவைத்து உட்கார்ந்து இருக்கிறார்கள். அவர்கள் தன்னை வெள்ளைக்கார துரை திரும்ப வந்து விட்டது போல் பார்க்கிறார்கள் என்று காதலிக்கு சொல்கிறான்.

அலுவலகத்தை நெருங்கும் போது ஒரு பெரிய கட்டிட வேலை நடப்பதை பார்க்கிறான். Multiplexஅ என்கிறான். இல்லை சாமியாரின் ஆசிரமம் என்று சொல்கிறார்கள்.

அலுவலகத்தை அடைந்த பின்னர் அங்கு உள்ள Inspector, சக அதிகாரி, ஊழியர்களை அறிமுக படுத்துகிறார். முதலில் தன்னுடைய முதல் பெயரை (First Name) சொல்லும் அவர் பின்னர் தன்னுடைய ஜாதியை குறிக்கும் பெயரை (Title Name) சேர்த்து சொல்கிறார்.

தமிழ் நாடு தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் இந்த பழக்கம் இருக்கிறது. Gowda, Rao, Thackeray, Gehlot, Modi, Banerjee, Sarkar, Shah, Sharma, Gupta என்பதெல்லாம் ஜாதிப்பெயர் அல்ல. அவை Title Name தான். ஆனால் அதைவைத்து அவர் இன்ன ஜாதி என்பதை எளிதாக யூகித்து கொள்ளலாம்.

அலுவலகத்தில் உள்ள அனைவரும் Jai Hind என்று சொல்லி தான் வணக்கம் வைத்து தங்கள் பெயரை சொல்கின்றனர். Title Nameஉடன் சேர்த்து தான். அப்போது உள்ளூர் contractor Anshu Nagaria Ranjanனின் பின்னால் நின்று கொண்டே காலை தொட்டு கும்பிடுகிறான். Inspector Brahmadatt அவனை அறிமுக படுத்துகிறார். அதாவது 'யார் இங்கே வேலைக்கு வந்தாலும் எங்களை adjust செய்து கொண்டு தான் போக வேணும்' என்பதாக அவன் பார்வை இருக்கிறது.

அன்றிரவு ரஞ்சனை வரவேற்கும் விதமாக பார்ட்டி நடக்கிறது. அதில் ரஞ்சன் என்ன வகை மது அருந்துவான் என்று அவர்கள் facebook மற்றும் Instagram post மூலம் அறிந்து கொண்டதாக சொல்கிறார்கள். எதனால் Laalgaon posting என்று உயரதிகாரி கேட்க அது punishment posting என்று சொல்கிறான்.

பயிற்சி முடிந்து Home Ministerஉடன் நடந்த சந்திப்பில் ரஞ்சன் அமைச்சருடன் பேசும் போது Okay Sir, Yes, Sir என்று சொல்வதற்கு பதிலாக cool, sir என்று சொன்னதால் இங்கே அனுப்பி விட்டதாக சொல்கிறான்.

மது அருந்தும் போது சக ஊழியர்கள் அவர்களுடைய தட்டில் இருந்து ரஞ்சன் எதையும் எடுக்க வேண்டாம் என்று புதிய தட்டு ஒன்றில் ரஞ்சனுக்கு பண்டங்களை எடுத்து வருகின்றனர். ரஞ்சன் உயர்குடி பிராமணன். அவர்கள் தாழ்த்த பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். அவர்கள் தட்டில் ரஞ்சன் எடுப்பது ரஞ்சனுக்கு கவுரவம் அல்ல என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

விருந்து நடக்கும் இடத்திற்கு  கிராமத்தினர் புகார் கொடுக்க வருகின்றனர். Inspector அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் நாளை பார்க்கலாம் என்று சொல்கிறார். மற்றுமொரு அதிகாரி அந்த கிராமத்தில் இது சகஜம் என்று சொல்கிறார். அது தோல் பதனிடும் தொழில் செய்யும் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் கிராமம். படத்தின் முதல் காட்சியில் வந்த கிராமம். அந்த கிராமத்தை சேர்ந்த மூன்று பெண்களை காணவில்லை. அந்த கிராமத்து பெண்கள், ஆண்கள் ஓடிப்போவது, திரும்ப வருவது எல்லாம் அன்றாடம் என்பதாக போலீசாரின் பார்வை இருக்கிறது.

தலித் தலைவர் ஆட்சியில் இருக்கும் போது அவருக்கு அவரே சிலை வைத்து கொள்வதில் நேரத்தையும், பணத்தையும் செலவு செய்து விட்டு போய் விட்டார். இப்போது ஆட்சியில் இல்லை என்றவுடன் தலித்துகள் ஒடுக்கப்படுவதாக ஒப்பாரி வைக்கிறார் என்று Inspector கிண்டல் செய்கிறார்.

தனது கல்லூரி கால நண்பன் தான் வேலைக்கு வந்த ஊரில் இருப்பதை காணும் ரஞ்சன் அவன் போதையில் இருப்பதைக் கண்டு அவனை வீட்டில் சென்று விடுவதாக அவனுடைய வண்டியை வாங்கி ஓட்டுகிறான். வழியில் கத்தியோடு ஒருவன் இன்னொருவனை துரத்தி வருவதை பார்க்கிறான். ரஞ்சனின் பாதுகாப்புக்கு வந்த கான்ஸ்டபிள் கத்தி வைத்திருந்தவனை கன்னத்தில் அடித்து உக்கி போட வைக்கிறார். மிட்டாய் கடைக்காரர் மகன் தான் என்று கத்தியை வாங்கி விட்டு அனுப்பி விடுகிறார்.

ரஞ்சனின் நண்பன் ரஞ்சனின் வாழ்க்கையை பற்றி கேட்கிறான். காதலியை பற்றி கேட்கிறான். அவளைப்போல் பெண் கிடைக்க மாட்டாள் அவளை இழந்து விடாதே என்கிறான். காதலி Gender Equality, Women Empowerment பற்றி எழுதுவதாகவும் தங்களுக்குள் உரையாடலை விட வாக்குவாதம் அதிகம் நடப்பதாக ரஞ்சன் சொல்கிறான்.

முதல் இருபது நிமிடத்திற்குள் இவ்வளவும் நடந்து முடிந்து விடுகிறது. மறுநாள் காலையில் காணாமல் போன மூன்று பெண்களில் இருவர் தூக்கில் தொங்குகின்றனர். ரஞ்சன் விசாரிக்கும் முன் சக அதிகாரிகள் அவர்கள் தன் பால் உறவில் இருந்ததால் அவர்களின் தந்தைகளே கொன்று தொங்க விட்டு விட்டனர் என்று சொல்கின்றனர்.

ரஞ்சன் India of Lightல் இருந்து வந்தவன். கிராமிய இந்தியாவை புத்தகத்தின், செய்தி தாள்கள் வழி அறிந்தவன். ஆனால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் அல்லது கவுரவ கொலை செய்யப்பட்டார்கள் என்பதை நம்பும் அளவிற்கு முட்டாள் இல்லை. விசாரணையை தொடர சொல்கிறான். 

விசாரிக்க செல்லும் அதிகாரிகளின் வாகனம் தாக்க படுகிறது. தாழ்த்த பட்ட மக்களின் சார்பாக போராடும் Nishad அவர்களை துப்புரவு பணிகளை புறக்கணிக்கும் படி சொல்லிவிடுகிறான். Swach Bharat சாக்கடையில் மூழ்குகிறது. Police Officer அலுவலகத்துக்கு சாக்கடையின் மேல் செங்கற்கள் அடுக்கி அதன் மேல் நடந்து செல்கிறார்கள்.

இந்த காட்சிகள் எப்படி இந்தியா எழுத்தில் ஒன்றாகவும் இயல்பில் வேறாகவும் இருக்கின்றன என்று காட்டுகின்றன. காணாமல் போன மூன்றாவது பெண்ணையும் தேடுகின்றனர். இறந்து போன இரண்டு பெண்களின் post mortem அறிக்கையில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்தார்கள் என்று எழுதச் சொல்லி Inspector சொல்கிறார்.

ரஞ்சன் காதலியிடம் அந்த பெண்கள் 3 ரூபாய் கூலி உயர்த்தி கேட்டதற்காக தாக்க பட்டிருக்கிறார்கள் என்று சொல்கிறான். மாநகரங்களில் பிறந்து வளர்ந்து, வெளிநாடுகளில் கல்வி கற்ற ரஞ்சனுக்கு அவன் வேலைக்கு வந்த ஊரில் நடப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த நாடு சாதி, மதம் என்று எத்தனை பின் தங்கியிருக்கிறது என்று.

காதலி யாருக்காகவும் காத்திருக்காதே குற்றவாளிகளை கண்டு பிடி என்கிறாள்.

முரண் என்னவென்றால் ரஞ்சனின் வீட்டில் வேலைக்கு இருக்கும் பெண் பதின் பருவம் தாண்டாதவள். அவள் பள்ளிக்கு செல்ல வேண்டிய வயதில் ஏன் வீட்டு வேலை செய்து கொண்டிருக்கிறாள் என்று ரஞ்சனோ அவனுடைய காதலியோ கேட்பதில்லை.

இதற்கு மேல் திரைக்கதையை அப்படியே எழுதாமல் மற்ற விஷயங்களை பற்றி பேசுவோம். இந்தப்படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் என்பது படத்தின் முன்னோட்டம் வெளியான போதே தெரிய வந்து விட்டது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இது போல பல சம்பவங்களை நடத்திய, நடப்பதற்கு காரணமாக இருந்த கட்சி தான் இன்னமும் ஆட்சியில் இருக்கிறது. அவர்களை நேரடியாகவோ, படத்தின் மூலமோ தாக்குவது, விமர்சிப்பது தனக்கு தானே மண்ணை வாரி போட்டுக்கொள்வது என்று படமெடுபவர்களுக்கு நன்றாக தெரியும். ஆனாலும் இத்தனை வெளிப்படையாக பேசியதே ஆதரிக்க வேண்டிய, பின்பற்ற பட வேண்டிய முயற்சி.

படத்தின் கதா நாயகன் உயர் குடியை சேர்ந்தவனாக, நீதியுணர்ச்சி உள்ளவனாக இருக்கிறான்.  இடைநிலை சாதியை சேர்ந்தவர்கள் "இங்கேயே வாழ வேண்டும். யாரையும் பகைத்துக் கொள்வதில்லை" என்று இருக்கிறார்கள். தாழ்த்தபட்ட மக்கள் விதியை நொந்து கொள்வதை தவிர வேறு என்ன வழி?

Post Mortem செய்யும் பெண் மருத்துவர் Quotaவில் படித்து வந்த தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். அவரை உண்மையான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டாம் என்று Inspector தடுக்கிறார். அவருடைய கோபத்தை facebookல் கவிதை எழுதி தீர்த்துக்கொள்ளுமாறு சொல்கிறார். வெளிய வந்து constableயிடம் இந்த டாக்டர் நாம் கட்டும் வரிப்பணத்தில் படித்தவள் என்கிறார்.

ஒரு வேளை அந்த Doctor இடத்தில் ரஞ்சனும், ரஞ்சன் இடத்தில் அந்த Doctorம் இருந்திருந்தால் இது மிக சவாலான ஒரு படமாக இருந்திருக்கும். ஆனால் வணிக வெற்றி கிட்டுமா? சர்ச்சை செய்து ஓட விடாமல் செய்யவே வாய்ப்பு அதிகம்.

படம் துவங்கிய போது இருந்த அந்த உத்வேகம் 30வது நிமிடத்தில் வடிய ஆரம்பித்து விடுகிறது. கண்டது, கேட்டது என்று அனைத்தையும் ஒரே படத்தில் சொல்ல விரும்பியதின் விளைவு. Social Media hype கொடுத்த அளவிற்கு படம் இல்லை. நிச்சயம் பரியேறும் பெருமாள் இதை விட better cinema தான். ஆனால் Article15 ற்கு கிடைக்கும் கவனம் அந்த படத்திற்கு கிடைக்காது.

படத்தை Murder Mystery (Seven, Memories of Murder, ராட்சசன்) போன்ற படங்கள்அல்லது Police Procedural (Zodiac, தீரன் அதிகாரம் ஒன்று, 8 தோட்டாக்கள்) என்று  வகைப்படுத்தாமல், காட்சி ஒருங்கிணைவு இல்லாமல் செய்து விட்டனர். Ayushman இதை விட மற்ற அனைத்து படங்களிலும் சிறப்பாக நடித்திருந்தார். இதில் அவருக்கு பெரிய வேலை இல்லை என்றே படுகிறது.

நாசர் ஒரு கேலி சித்திரம் போல வந்து செல்கிறார். இவரை போன்று எத்தனை உயர் அதிகாரி பாத்திரங்களை எத்தனை படங்களில் பார்த்திருப்போம்? Inspector Brahmadatt மற்றும் அவருக்கு கீழ் வேலை பார்க்கும் SI ஆக நடித்திருக்கும் நடிகர்கள் இருவரும் மிக சிறப்பான பங்களிப்பை செய்திருக்கின்றனர். படத்தின் Outstanding Performance  அவர்கள் இருவருடையதே.

படத்தில் காவல் துறையினர் அனைவரும் தாங்கள் எந்த கட்சிக்கு வாக்களித்தார்கள் என்பதை கட்சியின் சின்னத்தை சொல்லி கேலி செய்து பேசிக்கொள்கிறார்கள். Cycle, கை, யானை, மலர் என்று உள்ளூர், தேசிய கட்சிகளை பகடி செய்கின்றனர். பகடி தானே எளியவர்களால் முடிந்தது?!

படத்தின் பின் பகுதியில் உறியடி இரண்டு பாகங்களில் இடம்பெற்ற மக்களை பிரிக்க உள்ளூர் அரசியல்வாதி செய்யும் சதிகளை போன்ற காட்சிகள் நிறைந்து கிடக்கின்றன. அவை எதுவும் புதுமையாக இல்லை.

Marshland என்கிற Spain நாட்டு திரைப்படம் காணாமல் போன பெண்களை பற்றி விசாரிக்க வரும் இரண்டு அதிகாரிகள், அவர்கள் கண்டு பிடிக்கும் உண்மைகள் என்று ஒரு Police Procedural come thriller படம். அந்த படம் நடக்கும் காலகட்டத்தில் நிலவிய அரசியல், சமூக, பொருளாதார சூழ்நிலையை பின்புலமாக கொண்டு ஒரு கதையை வலுவாக சொல்கிறது. அந்த வலு Article 15ல் இல்லை. 

Sunday, 25 August 2019

The Lives of Others - திரைகளுக்கு அப்பால்

நீங்கள் என்றாவது உங்கள் நண்பரின் முகப்புத்தக கணக்கு வழியாக உங்கள் முகப்புத்தக கணக்கை பார்த்து இருக்கிறீர்களா? ஒரு பொய் கணக்கை தொடங்கி அதன் வழியாக உங்கள் கணக்கை சென்று பார்த்து இருக்கிறீர்களா? அப்படி செய்வது ஒரு வகையான குறுகுறுப்பை அளிப்பதை உணர்ந்து இருக்கிறீர்களா?

மனிதர்களை வேடிக்கை பார்ப்பது, ஊன்றி கவனிப்பது எல்லாம் சுவாரசியமான பொழுது போக்குகள் தான். ஆனால் வேவு பார்ப்பது, அவர்கள் மீது சந்தேகம் கொண்டு அவர்களே அறியாமல் அவர்களை 24 மணி நேரமும் கண்காணிப்பது என்பது உச்சபட்ச வன்முறை.

சமூக ஊடக காலத்தில் நாமே நம்மை பற்றிய பல தகவல்களை இணையத்தில் ஏற்றி வைத்திருக்கிறோம். கடந்த ஒரு மாதத்தில் நீங்கள் எங்கே சென்றீர்கள், என்ன பொருள் வாங்கினீர்கள், எங்கே சாப்பிட்டீர்கள்? என்று உங்களை உங்கள் இணைய வாழ்க்கை, இணைய பயன்பாடு, இணைய பரிவர்த்தனை வழியே வேவு பார்க்க முடியும்.

BJP இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்த பிறகு மாணவர்களின் சமூக ஊடக கணக்கை கண்காணிக்க அவர்களை மனித வள மேம்பாட்டு துறை அமைச்சக இணையதளத்தோடு இணைக்க சொல்லி ஒரு செய்தி வந்தது.  எதிர்ப்பு வலுத்தவுடன் கட்டாயம் இல்லை என்று சொல்லி விட்டார்கள்.

அவர்களே 2014ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆதார் வாங்க சொல்லி கட்டாய படுத்தினார்கள். பின்னர் ஆதார் எண்ணை வங்கி, சமையல் ஏரி வாயு, வாகன பதிவு என்று அனைத்திலும் இணைக்க சொன்னார்கள். ஆதார் என்பது மக்களை கண்காணிக்க, அவர்களின் வரவு செலவு என்னவென்று பார்க்க அரசு பயன்படுத்துகிறது என்பது கண்கூடு.

ஆங்கிலத்தில் Vicarious Experience/pleasure என்று சொல்வார்கள். Second hand experience. புத்தக வாசிப்பு, சினிமா பார்ப்பது மூலம் நமக்கு கிடைப்பது அத்தகைய அனுபவம் தான். 2006 ஆண்டு வெளியான German நாட்டு திரைப்படமான The Lives of Others என்கிற இந்த படம் ஒரு அரசாங்கம் மக்களை வேவு பார்த்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை நமக்கு ஒரு second hand experienceஆக அளிக்கிறது.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் இரண்டாக உடைந்த Germanyயின் கிழக்கு பகுதி ரஷ்ய ஆதரவுடன் German Democratic Republic என்ற தனி நாடாக மலர்ந்தது. 1990ல் பெர்லின் சுவர் வீழும் வரை ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்தது என்றே சொல்லலாம். Hitlerன் Fascist Agendaவில் இருந்து தப்பித்து ரஷ்ய Socialist Agendaவில் சிக்கிக்கொண்ட மனிதர்களின் கதை.

1984ல் ஆரம்பிக்கும் கதை பெர்லின் சுவர் வீழ்ந்து ஜெர்மனி ஒரே நாடாக மாறிய பின் இரண்டு ஆண்டுகள் கழித்து நிறைவுபெறுகிறது. இந்தப் படத்தை புரிந்து கொள்ள, இதன் தீவிரத்தன்மையை உணர்ந்து கொள்ள கொஞ்சம் அரசியல், வரலாற்று அறிவும், உணர்வும் தேவை. நுண்ணுணர்வு உள்ளவர்கள், நல்ல சினிமா ரசிகர்கள் இதை அவசியம் காண வேண்டிய படமென்றே சொல்வார்கள்.

Weisler என்பவர் தனியாக வாழும் ஒரு நடுத்தர வயது ஆள். அவர் Stasi எனப்படும் போலீஸ் பிரிவில் விசாரணை செய்யும் அதிகாரியாக இருக்கிறார். இந்த பிரிவு  மக்களை வேவு பார்ப்பதையே முழு நேர வேலையாக கொண்டிருந்தது. அல்லது அதற்காகவே உருவாக்கப்பட்ட பிரிவு. Weisler விசாரணை செய்யும் காட்சியில் நமக்கு Inglourious Basterdsல் வரும் Hans Landaவை நியாபக படுத்துகிறார். ஆனால் இது 2006ல் வெளியான படம் என்பது குறிப்பிட தக்கது.   

Weislerக்கு உறவினர் என்று யாரும் இல்லை. இளமை வேகத்தில், கொள்கை மீது கொண்ட பற்று காரணமாக தனியாக இருந்து விட்டார் என்பதை நாம் படம் பார்க்கும் போது புரிந்து கொள்கிறோம். அவருக்கென்று பொழுதுபோக்குகள் எதுவும் இல்லை. அனைத்தையும், அனைவரையும் சந்தேக கண்கொண்டு பார்க்க அவருடைய வேலை அவரை பழக்கி விட்டது.

வகுப்பு தோழனும் இந்நாளில் அரசில் செயலர் பதவியில் இருக்கும் நண்பன் ஒருவர் Weislerஐ கொஞ்சம் சீண்டுகிறார். பின்னர் நாடகத்துக்கு அழைத்து செல்கிறார். நாடக ஆசிரியரை  Weisler சந்தேகிக்கிறார். கலாச்சார துறை அமைச்சருக்கு நாடக ஆசிரியரின் காதலி மீது ஒரு கண். ஆசிரியரை எதிலாவது சிக்க வைக்காமல் அவளை அடைய முடியாது என்று புரிந்து கொள்ளும் அமைச்சர் அவர்களுடைய வீட்டை 24 மணி நேரமும் கண்காணிக்க, ஒட்டு கேட்க உத்தரவிடுகிறார்.

மேலிடத்தில் இருந்து வரும் உத்தரவை திறம்பட நிறைவேற்றும் Weisler கச்சிதமாக ஒட்டு கேட்பு கருவிகளை நாடக ஆசிரியர் Georg வீட்டில் பொருத்தி விட்டு கண்காணிப்பை அவரே நேரடியாக செய்கிறார்.

எதன் மேலும் பற்றோ, பிடிப்போ இல்லாமல் வாழும் Weislerக்கு எழுத்தாளர் மற்றும் அவருடைய காதலி Maria விடம் உள்ள உயிர்ப்பு அதிசயமாக படுகிறது. அவர்களுடைய ரகசியங்களை தெரிந்து கொள்கிறார். Mariaவின் துரோகத்தை Georgக்கு காட்டிக்கொடுக்கிறார். அவர்களுடைய இடத்தில் இருந்து அவர்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கிறார். அவர்களுடைய இன்ப துன்பங்களை புரிந்து கொள்கிறார்.

இது வரை குற்றம் செய்தவர்களையே விசாரித்த Weisler குற்றம் செய்வார்கள் என்கிற அனுமானத்தில் இவர்களை வேவு பார்க்க அது அவர்கள் மீது பரிவு ஏற்பட வழி வகுக்கிறது.

Ray Bradbury எழுதிய Fahrenheit451 என்கிற நாவலை மையமாக கொண்டு அதே தலைப்பில் Francious Truffaut இயக்கிய படத்தில் நாயகன் ஒரு வித்தியாசமான பணியில் இருக்கிறான். ஒரு Dystopian காலத்தில் நடக்கும் அந்த கதையில் புத்தகங்களை நெருப்பு வைத்து அழிக்கும் துறையில்  நாயகன் வேலையில் இருக்கிறான். தற்செயலாக ஒரு புத்தகம் அவனிடம் வந்து சேர அதை வாசித்து பார்த்து தான் மனித குலம் சேர்த்து வைத்த அறிவு செல்வத்தை அழிக்கும் மாபாதக செயலை  இத்தனை நாள் செய்ததை எண்ணி வருந்துகிறான்.

The Lives of Others படத்தில் இதே போல ஒரு புத்தகத்தை Weisler வாசிக்க நேர்கிறது. அது Georg வீட்டில் இல்லாத நேரத்தில் Weisler அங்கே சென்று திருடி வந்தது. Bertolt Brecht என்கிற கவிஞர், நாடக ஆசிரியரின் கவிதை புத்தகம் அது. அந்த புத்தகம் Weislerன் தன்னை சுற்றி ஏற்படுத்தி உள்ள கவசத்தில் உள்ள ஓட்டை வழியாக அவரின் இதயத்தை சென்று தொடுகிறது. Georg வாசிக்கும் இசை அவரை உன்னதமாக உணர வைக்கிறது.
ஓநாயாக இருந்தாலும் Weisler ஆட்டுக்குட்டியான Georg மற்றும் Mariaவின் நியாயத்தை புரிந்து கொள்கிறார். தன் அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை இரும்பு கரங்களில் இருந்து தப்பிக்க செய்கிறார்.

Weisler ஒரு Inspector Rankல் இருக்கும் அதிகாரி. அவருக்கு மேல் அதிகாரம் உள்ளவர்கள் ஆயிரம் பேர் இருக்கும் போது எத்தனை நாள் Georg மற்றும் Mariaவை காப்பாற்ற முடியும்? அவர்களை தண்டிக்க வேண்டும் என்கிற முடிவில் தானே அமைச்சர் வேவு பார்க்க உத்தரவிட்டார்? ஆதாரம் கிடைக்க விட்டால் போலியான ஆதாரம் கொண்டு வேண்டாதவர்களை முட்டி போட வைத்து விட மாட்டார்களா?!

இரண்டாம் உலக போரின் போது வதை முகாம்களில் அடைபட்டு சித்திரவதை அனுபவித்த யூதர்களை பற்றிய படங்கள் வருடத்திற்கு ஒன்றாவது வருகிறது. Schindler's List, Life is Beautiful, The Pianist, The Boy in the Striped Pajamas, The Counterfeiters, Son of Saul போன்ற படங்கள். இத்தகைய படங்கள் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு எத்தகைய தீங்கை செய்யவும் சாத்தியம் உள்ளது என்பதை நமக்கு நினைவு படுத்தி கொண்டே இருக்கின்றன. அதற்கு மதம், இனம், மொழி, அரசியல், கொள்கை என்று ஆயிரம் காரணம் கற்பிப்பார்கள் என்றும் சொல்கின்றன.

யூதர்கள் அனுபவித்த அவலத்தை சொல்லும் படங்கள் Holocaust Films என்று வகைப்படுத்த படுகின்றன. அது போல Communism, Socialism என்கிற பெயரில் அரசுகள் அதன் மக்களுக்கு செய்த துரோகங்கள் திரைப்படங்களாக, இலக்கியமாக வந்து கொண்டு இருக்கின்றன. The Lives of Others  அத்தகைய ஒரு படம் தான். 4 Months, 3 Weeks and 2 Days கிட்ட தட்ட The Lives of Others படம் அளிக்கும் உணர்வை அளிக்கும் மற்றொரு கிழக்கு ஐரோப்பிய படம்.

இன்று உலகம் வலது சாரிகளின் வசம் சென்று கொண்டு இருப்பதாக ஒரு உணர்வை அனைவரும் கொண்டிருக்கிறோம். இந்தியாவில் இன்னும் என்னவெல்லாம் காணப் போகிறோம் என்று தெரியவில்லை. சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி Communism, இடது சாரி தத்துவத்தின் மீது மக்கள் கொண்டிருந்த பற்றை சிதைத்து விட்டது. இடதோ, வலதோ  எதிர்தரப்பு இல்லாத, விரும்பாத அரசாங்கம் மக்களை கண்காணிப்பில் வைத்து, கொடுமை செய்து அதை அவர்கள் நல்லத்துக்கு செய்வதாக அவர்களையே நம்ப வைக்கும் என்பது தான் வரலாறு நமக்கு சொல்வது.

எந்த சாம்ராஜ்யமாக இருந்தாலும் அதுவும் ஒரு நாள் வீழும் என்பது வரலாறு நமக்கு அளிக்கும் ஆறுதல்.