Wednesday 27 December 2023

The Element Chapter 11 - The Significant Other

The Element 


Chapter 11 - The Significant Other


நான் ஏற்கனவே ஒரு தடவை வெள்ளத்தில் மாட்டிருக்கேன்னு சொன்னேனா என்று என் மனைவி கேட்டாள். ஆமாம் அந்த கதை ஜாதகபொருத்தம் பார்க்கும் போதுலாம் தெரியாதுல என்றேன். 


எங்களுக்கு திருமணம் ஆன நாளில் கோவில்பட்டியில் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது. எங்கள் மகன் பிறந்த மறு நாள் எலும்பு வரை மழையில் நனைந்து தான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினேன். 


ஆனால் இந்த நான்கு வருடத்தில் வீட்டை வெள்ளம் சூழ்ந்தது இதுவே முதல்முறை. இதுவே கடைசி என்று எந்த உத்திரவாதமும் இல்லை. 


UPS வாங்காமல் இருக்க ஏன் இவ்வளவு வியாக்கியானம்? ஒரு AC மாட்டி வச்சா என்ன குறைஞ்சிருவோம் என்று என் மேல் ஆயிரம் புகார்கள் இருக்கிறது. ஆனால் இந்த வெள்ளம் சூழ்ந்த நாளில் அது எதுவும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. மின்சாரம் இல்லாமல் என்ன இருந்து தான் என்ன? என்கிற நினைப்பு வந்திருக்கலாம். 


18ம் தேதி காலையில் தெருவோடு தண்ணீரை சோதித்து கொண்டிருந்த போது இவளும் மகனை தூக்கிக்கொண்டு house owner வீட்டிற்கு compoundற்கு உள்ளாகவே கால் கொலுசு நனையும் அளவு வரை கிடந்த தண்ணீரில் நடந்து சென்றாள். நான் எதுக்கு risk எடுக்கிறே என்றேன். மழைத்தண்ணி ஒன்னும் செய்யாது என்றாள். 


ரெம்ப பயப்படுறீங்க என்று என்னை சீண்டவும் நானும் நீரில் இறங்கி அவர்கள் வீட்டிற்கு சென்றேன். தண்ணீர் ஆற்று நீர் போல சில்லென்று இருந்தது. அவர்கள் வீட்டு வாசலை அடைந்ததும் ஒரு செவிட்டு பாம்பு என்று சொல்லப்படும் புழு நீரில் அடித்துவரப்பட்டு வீட்டிற்குள் ஏற முயற்சி செய்து கொண்டிருந்தது. அதை வெளியே தள்ளிவிட விளக்க மாற்றை எடுத்தால் என் கையில் ஏதோ ஊறி மேலே ஏறியது. கையை உதறினேன். அந்த மாறில் இருந்து டஜன் கரப்பான் பூச்சிகள் அனைத்து திசைகளிலும் பறந்தன. 


அப்போது House Owner வீட்டில் தான் இருந்தார். அவர் விரைவாக வந்து cement பூசும்  கரண்டியை எடுத்து செவிட்டு பூச்சியை நீரில் அமுக்கி பல துண்டுகளாக பிளந்தார். அதை முடித்துவிட்டு அவர் படியேறிய போது அரை அடி நீளத்தில் ஒரு பூரான் வந்தது. என்னடா இது video game மாதிரி level கூட கூட கஷ்டமான உயிரினங்களை கொல்ல வேண்டி வரும் போலையே என்று பார்த்துக்கொண்டிருக்கும் போதே அதையும் பல துண்டுகள் ஆக்கினார். அந்த துண்டுகள் நீரில் வெவ்வேறு திசையில் நீந்தி தன்னுடைய மீதி உடலை தேடின.  


நான் ஒரு நாளைக்கு இவ்ளோ போதும் என்று மனதில் நினைத்துவிட்டு அங்கிருந்து வீடு நோக்கி நடந்தேன். அதற்குள் தண்ணீரின் அளவு சற்று உயர்ந்தது போல் தெரிந்தது. அடுத்த அடி எடுத்து வைக்கும் போது சற்று முன் பார்த்த பூரானை விட கொஞ்சம் சிறியது வேகமாக என் கால் நோக்கி வந்தது. 


நான் அதை கொல்ல எந்த முயற்சியும் எடுத்து கடி வாங்க தயாராக இல்லாததால் அது வந்த திசையில் இருந்து விலகினேன் அது தண்ணீர் அலையில் வேகமாக முன்னே சென்றது. நான் திரும்பி மனைவியிடம் பார்த்து வா பூரான் நிறைய வரும் போல என்றேன். வீட்டிற்குள் நுழைந்தால் படம் ஆரம்பித்த theatre குள் நுழைந்தது போல் இருந்தது. 


ஒரு வாரத்திற்கு முன் தான் எங்கள் மகன் சாமிக்கு பொருத்தி வைத்த விளக்கில் பெருவிரலை சுட்டுக்கொண்டிருந்தான். அதனால் விளக்கு பொருத்தாமல் இருந்தோம். விளக்கை மூட்டை கட்டி எடுத்து வைத்து விடுவோமா என்று கேட்டதற்கு அப்படியே இருக்கட்டும், கொஞ்ச நாள் கழித்து எப்போதும் போல் பொருத்திக்கொள்வோம் என்று சொல்லியிருந்தேன்.  


18ம் தேதி காலையில் இருந்தே வீட்டிற்குள் விளக்கு எரிந்தே ஆகவேண்டிய அளவிற்கு இருள். மாத தொடக்கத்தில் charge போட்டு வைத்த torch light, ஒரே ஒரு பெரிய மெழுகுவர்த்தி தான் இருந்தது. காரத்திகைக்கு வாங்கி மீதியிருந்த விளக்குகளை பொருத்தி வைத்தாள். அகல் விளக்குகளை எடுத்து எண்ணெய் ஊற்றி வீட்டின் நான்கு முலைகளையும் பிரகாசம் ஆக்கினாள். இதனால் வீட்டிற்குள் குளிர் குறைந்தது. 


அந்த 3 மாத குழந்தையின் அம்மா நள்ளிரவில் ஒரு முறை சாப்பிடுவேன் என்று சொல்லியதும் இட்லி பாத்திரத்தை கழுவி மீண்டும் இட்லி அவித்து hot boxல் எடுத்து வைத்தாள். 


House Owner பால் பாக்கெட் கொண்டு வந்து கொடுத்த போது கைமாறு ஏதாவது செய்யவேண்டுமே என்று தோசை மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து அவரின் மனைவியிடம் கொடுத்தாள். 


18ம் தேதி இரவு மழை வெறித்த போது நாளை மாலைக்குள் வெள்ளம் வடிந்து விடும் என்றாள். அனுபவம் பேசுது என்று நினைத்துக்கொண்டேன். Signal கிடைக்கும் போதெல்லாம் அவள் அம்மாவிற்கும், அக்காவிற்கும், திருநெல்வேலியில் வெள்ளத்தில்  மாட்டிக்கொண்ட உறவினர்களும் பேசினாள். 


மறுநாள் காலை பொங்கலும் சாம்பாரும் செய்துவிட்டு அன்றிரவவோடு தோசை மாவு தீர்ந்து போகும் மறுநாள் காலையில் என்ன செய்வது என்று இருக்கும் பொருட்களை stock எடுத்தாள். Home Maker என்று சும்மாவா சொல்கிறார்கள்! 


பொங்கலும் சாம்பாரும் செய்த பின் குழந்தையின் வீட்டில் இருந்து எங்கள் ஐவருக்கும் சப்பாத்தி, கிழங்கு குருமா வர இன்று மதியத்துக்கு பொங்கல் தான் என்றாள். அப்பளம், வடகம் என்று பொரித்து வைத்தாள். வீட்டிற்கு புதிய ஆட்கள், உறவினர்கள், நண்பர்கள் வரும் போது மனைவியின் செயல்திறம் பலமடங்கு கூடுவதை ஒவ்வொரு முறையும் அவதானிக்கிறேன். 


19ம் தேதி மதியம் தண்ணீரின் அளவு கீழே போன போது குழந்தையின் தாத்தா அழைத்துப்போக வந்தார். எதுக்கு risk? இன்னைக்கும் இங்க இருக்கட்டும். தண்ணி வடிஞ்ச பிறகு கூட்டிட்டு போங்க என்றாள். 


குழந்தைக்கு எந்த மாசத்தில் எப்படி உணவளிக்க வேண்டும் என்கிற ஆலோசனைகளை அதன் அம்மாவிற்கு அள்ளி வழங்கினாள். 


20ம் தேதி காலை மாடிக்கு சென்று தொட்டியில் தண்ணீரின் அளவை பார்த்துவிட்டு நாளைக்கு வரை கூட சமாளிக்கலாம். இன்னைக்கு சாயங்காலம் current வந்திரும்னு சொல்றாங்க ஆனாலும் நாம sump clean பண்ணாம தண்ணி ஏத்த முடியாது என்ன பண்ணலாம் என்று கேட்டாள். 


அதை நாளைக்கு பாப்போம். இந்த நிமிசம் வரை current இல்லை, phone, internet இல்லைங்கிறது தவிர நாம நல்லா இருக்கோம். இருந்த வீட்டை விட்டுட்டு முகாம்ல நிறைய பேர் இருக்காங்களாம். நமக்கு ரெம்ப கம்மியான கஷ்டம் தான்னு நினைச்சுகிட வேண்டியது தான் என்று சமாளித்து வைத்தேன். 


No comments:

Post a Comment