Monday 25 December 2023

The Element Chapter 5 - The Mentor

The Element 


Chapter 5 - The Mentor 


அனைவருக்கும் வாழ்க்கையில் ஒரு Mentor வேண்டும். நம் வாழ்க்கையில் எதிர்பார்க்காத சிக்கல் வரும் போது பயபுள்ள மாட்டிக்கிட்டு திணறட்டும் என்று விடாமல் அதிலிருந்து மீள்வது எப்படி என்று ஆறுதல் சொல்லி நல்ல வழி காட்டும் ஒருவர். 


நம் ரத்த உறவுகள், உடன் பிறந்தவர்கள் இடையே இப்படி ஒரு குரு போன்ற உறவு அமைவது அரிது. நாம் எப்போதும் அவர்களை விட அதிகம் அறிந்தவர்கள் என்கிற நினைப்பு நம்மிடம் இருக்கும். போலவே நண்பர்கள் இடையேவும். ஓ எனக்கு தெரியாதது இந்த வெண்ணைக்கு தெரியுமோ என்கிற ஒரு அகராதித்தனம். 


பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுடன் மாணவர்கள் தொடர்ந்து தொடர்பில் இருப்பது அரிதினும் அரிது. அதில் ஒருவர் Mentorஆக கிடைப்பது அதை விட அரிது. பின்னர் எப்படி வாழ்க்கையில் ஒருவருக்கு Mentor கிடைப்பார்? அலுவலக சூழலில் அமையலாம், தொழில் நிமித்தம் சந்திக்கும் இடங்களில் கிடைக்கலாம். அப்படி ஒருவரை சந்திக்காமலும் போகலாம். 


என்னுடைய Mentorகளில் ஒருவர் எனது நண்பரின் தந்தை. 17ம் தேதி காலை மழை நிலவரத்தை பற்றி சொல்ல எனக்கு phone செய்தார். கோவில்பட்டி கிளம்பவில்லை தூத்துக்குடியில் தான் இருக்க போகிறேன் என்றதும் சரி வீடு முதல் மாடி தான பத்திரமா இரு என்று தைரியப்படுத்தினார்.


18ம் தேதி காலை பேசியபோது தரை தளத்தில் house owner வீட்டின் கடைசி படி வரை தண்ணீர் வந்துவிட்டது என்று சொன்ன போது அதுக்கு மேல வராது நீ அவசியம் இல்லாம வெளில இறங்காத, பையனுக்கு குளிர் அடிக்காம பாத்துக்கோ, மழைக்கு பூச்சி, பட்டை வரும் கதவை சாத்தி கீழே மிதியடியை திணித்து வை என்று பதட்டத்தில் மறந்து போகும் சின்ன விஷயங்களை பொறுமையாக நினைவு படுத்தினார்.


மின்சாரம், இணையம் எல்லாம் செயல் இழந்த பிறகு சிக்னல் கிடைக்கும் போதெல்லாம் தொடர்பு கொண்டு விசாரித்தார். கடைசியில் மனம் ஆற்றாமல் நீ ஞாயிறு காலைல கிளம்பி வந்திருக்கலாம் என்றார். 


வியாழன் அவர் ஒரு வேலையாக தூத்துக்குடி வந்துவிட்டு திரும்பும் போது நாங்கள் குடும்பமாக சென்று சந்தித்து விட்டு பின்னர் கோவில்பட்டிக்கு bus ஏற்றி விட்டோம். அன்றே அப்படியே நாமும் சென்றிருக்கலாம் என்று தோன்றியது. 


சரி இனி இந்த தண்ணி சூழ்ந்த வீட்டின், ஊரின் உள்ளே இருப்பது எப்படி என்று தான் யோசிக்க வேண்டும் என்று மனதை திடப்படுத்திக்கொண்டேன். மேலும் மின் தொடர்பு, இணையம் இல்லாதது தவிர்த்து அந்நாள் மற்றுமொரு நாளாக தான் இருந்தது. என்ன வீட்டு வாசலை மிதிக்க முடியாத அளவிற்கு வெள்ளம் சூழ்ந்த ஒரு நாள். வெளியே எவ்வளவு தண்ணி இருந்தாலும் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் நீர் இருக்கும் வரை தான் அந்த வீட்டில் இருக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்ட ஒரு நாள். 

No comments:

Post a Comment