Monday, 20 June 2016

Submarino - Road to Redemption



ஒரு திரைப்படம் பற்றி எதுவுமே தெரியாமல் பார்ப்பது தான் ஒரு திரைப்படத்தை எந்த முன்முடிவுகளும் இல்லாமல் ரசிக்க சிறந்த வழி.

அதனால் படத்தை பார்த்து விட்டு இந்த பதிவை படிப்பது படம் பற்றிய உங்கள் புரிதல், அனுபவத்தோடு என்னுடைய புரிதல் இணைந்து கொள்ள வசதியாக இருக்கும்.

Submarino என்பதற்கு அர்த்தம் அறிய அத்திரைப்படத்தின் imdb பக்கத்தில் உள்ள trivia sectionல் பார்க்கவும்.

Formative Years என்று கருதப்படும் teenage பருவம் ஒருவர் வாழ்க்கையில் என்னவாக போகிறார் என்பதை முடிவு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. Infact, முதல் 15 வருடங்களில் ஏற்படும் அனுபவங்கள் தான் அடுத்த 45 வருடங்கள் அந்த நபர் எப்படியான மனிதனாக இருக்க போகிறார் என்பதற்கு அடித்தளம் இடுகிறது.

சட்டென தமிழில் நாயகன், நந்தா, காதல் கொண்டேன் ஆகிய படங்கள், Hollywoodல் Clint Eastwood இயக்கிய Mystic River போன்ற படங்கள் நினைவுக்கு வருகின்றன. இப்படங்களில் teenage தொடங்கும் வயதில் இருக்கும் கதையின் நாயகனுக்கு ஏற்படும் அனுபவங்கள் அவன் ஏன் வாழ்க்கையில் அப்படி இருக்கிறான் என்பதற்கு பதிலாக இருக்கின்றன.

இங்கே Submarinoவில் அண்ணன், தம்பி, அவர்கள் தங்கள் குட்டி தம்பியை பார்த்து கொள்ள, பெயர் வைக்க, பசியாற்ற எடுக்கும் முயற்சிகள், போதையில் வரும் அம்மாவை சமாளிக்கும் விதம் என்று முதல் 10 நிமிடம் நகரும் படம் சட்டென பார்வையாளர்களை உறைய வைத்து கதையின் நாயகனின் 30+ வயது வாழ்க்கைக்கு வந்து விடுகிறது.

Scarred for life என்று ஆங்கிலத்தில் ஒரு பதம் உண்டு, இங்கே Nick ஆகிய மூத்த சகோதரனுக்கு நடந்தது அது தான். அவன் தன்னை அறியாமல் செய்த ஒரு பிழைக்கு அவனை அவன் மன்னிக்க தயாராக இல்லை.

கெட்ட குடியே கெடும் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக நகரும் திரைப்படத்தில், Nick சிறைக்கு சென்ற காரணம் கூட நினைவின்றி இருக்கிறான். உடற்பயிற்சி செய்வது, beer குடிப்பது, தொந்தரவு செய்யும் பக்கத்து அரை வாசியை மூர்க்கமாக தாக்குவது என்று ஒரு நோக்கமில்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.

படம் 45 நிமிடங்கள் கடந்த பிறகு தான் Nick ன் தம்பியும் அவனுடைய மகனும் வருகிறார்கள். இந்த திரைக்கதை அமைப்பு Babel படத்தை நினைவு படுத்துவதாக இருந்தது. நாவல்களில் இது போல கதை கூறும் முறை எனக்கு தெரிந்து Tolstoy காலத்திலேயே வந்து விட்டது.

Nick ன் தம்பி போதை அடிமையாக இருக்கிறான் அனால் மகனை விட்டு பிரிய மனமில்லாமல் இருக்கிறான். Social service அவனுக்கு வளர்ப்பு தந்தை, தாயை தர முன் வரும் போதும் தன்னால் மகனை பார்த்து கொள்ள முடியும் என்கிறான்.

இதன் பின்னர் அவன் போதை ஏற்றி விழுந்து கிடந்து, நினைவு திரும்பி மகனை வந்து பார்க்கும் காட்சிகள் எல்லாம் மனதை பிசைபவை.

குற்றவாளிகளின் உலகை ஜாலியாக, சாகசமாக காட்டும் Tarantino பாணியில் உலகமே படமெடுத்து கொண்டு இருக்கும் போது இங்கே Submarino அவர்கள் வாழ்க்கை செல்லும் திசையை எந்த தீர்ப்பும் சொல்லாமல், பரிதாப பட வைக்காமல் காட்சி படுத்துகிறது.

Nick ஏதோ அசம்பாவிதம் நடக்க இருப்பதை உணர்ந்து தான் தனது சகோதரனை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறான், பின்னர் பேச முடியாமல் விரக்தியில் தனது கையை phone booth மீது குத்தி காயப்படுத்தி கொள்கிறான்.

 இருவருக்கும் இடையில் இருக்கும் அந்த மௌனம் சிறு வயதில் நடந்து விட்ட அசம்பாவிதத்தால் ஏற்பட்டது. இருவரும் அது குறித்து பேச தயாராக இல்லை. அதை ஏற்றுக்கொண்டு Nick ன் சகோதரன் வாழ்ந்து கொண்டு இருக்கும் போது Nickற்கு அது சாத்தியமாவில்லை. அவன் அதை கடந்து போக முடியாமல் தவிக்கிறான். Nick ன் மௌனம், விரக்தி, கோபம், எல்லாத்துக்கும் பின்னால் அந்த இளவயது சம்பவமே காரணமாக இருக்கிறது.

 Nick ன் சகோதரன் இனிமேல் Nickயை சந்திக்க போவதில்லை என்பது போல அந்த அசம்பாவிதம் Nickன் கவனக்குறைவால் ஏற்படவில்லை என்று சொல்லி விட்டு சொல்கிறான்.

Nick ன் மனதிலிருக்கும் ரணத்தை உணர்த்தும் விதமாக அவனது கையில் உள்ள காயம் ஆறாமல் இருக்கிறது. அவன் அதற்காக மருத்துவரிடம் செல்வதில்லை. மருத்துவர் வரும் போது காலம் கடந்து விடுகிறது.

Nick சிறுவர்கள் அருகில் இருக்கும் போது மென்மையானவாக மாறி விடுகிறான், தனது நண்பனிடம் தானும் குடும்பம், குழந்தை என்று வாழ வேண்டும் என்று ஆசை பட்டதையும் கூறுகிறான்.

தனது அம்மா இறந்த பின் வந்த பணத்தை பங்கு போடாமல் தனது தம்பியிடம் குடுத்து அவனுடைய மகனை நன்றாக வளர்க்க வைத்துகொள் என்று கொடுக்கிறான்.

நண்பன் ஒருவன் குற்றம் இழைத்து விட்டு தப்பித்து விட அதை ஏற்று கொண்டு சிறை செல்கிறான்.

தனியாக வாழும் முதியவர்கள், மகனை பிரிந்து வாழும் போதைக்கு அடிமையான Nick ன் தோழி, தனது தாயை 10 வருடத்தில் பார்த்தே இருக்காதா நண்பன் என்று படத்தில் வரும் கதா பாத்திரங்கள் வாழ்க்கையில் மீட்சி இருப்பதாக தெரியவில்லை.

எப்போதும் பெய்து கொண்டிருக்கும் பனி, Nickன் சிகரெட்டில் இருந்து எழும் புகை என்று காட்சிகளும் இருன்மையாகவே இருக்கின்றன.

Nick ன் தம்பியின் மகன் Martin, Zorrow பற்றி பேசுகிறான், அவர்கள் வீட்டில் Manhattan Skyline படம் இருக்கிறது, Junk food சாப்பிட்டு coke குடிக்கிறார்கள்,  super marketல் வாங்கி fridgeயை நிரப்புகிறார்கள். இதெல்லாம் எதுவும் குறியீடா என்று தெரியவில்லை.

தமிழ் நாட்டில் மது விலக்கு எந்த அளவுக்கு சாத்தியமோ அந்த அளவுக்கு தான் வளர்ந்த அல்லது அப்படி சொல்லி கொள்ளும் நாடுகளில் போதை மருந்து தடுப்பு சாத்தியம் போல.

Welfare State என்று அறியப்படும் Denmark ல் இருந்து இப்படி ஒரு சினிமா என்றால் Truth is stranger than fiction theory படி உண்மை நிலவரம் என்ன என்று தெரியவில்லை.

படத்தில் Nick சிறையில் இருக்கும் போது வக்கீல் அவனை சந்தித்து பேசும் விதம் போதும் அந்த நாட்டில் அரசின் பிரதிநிதிகள் மக்களை எப்படி அணுகுகிறார்கள் என்று அறிந்த கொள்ள, ஆனாலும் Nick போன்ற fallen angels எங்கேயும் இருக்கவே செய்வார்கள்.

படம் துன்பியல் யுகமாக நீண்ட பின்னர் ஒரு ray of hope உடனே நிறைவு பெறுகிறது.

ஒரு நல்ல திரைப்படம் என்பது ஒரு நாளாவது உங்கள் தூக்கத்தை கெடுக்க வேண்டும், உங்களை தொந்தரவு செய்ய வேண்டும் அதுவே உங்கள் ரசனையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும். உங்களை பண்பட்டவர் ஆக்கும். Submarino பலருக்கும் அப்படி ஒரு அனுபவத்தை வழங்க கூடிய படமாக இருக்கும்.

இதே வருடத்தில் வெளியான Biutiful படமும் இதோடு இணைத்து பார்க்க வேண்டிய படமே. Redemption தான் இரண்டிற்கும் உள்ள பொதுவான மையம்.

Submarino இயக்குனரின் மற்றொரு படமான The Hunt சினிமா காதலர்கள் தவற விட கூடாத படம். The Hunt ஒரு மனிதனுக்கு benefit of doubt குடுக்க முடியாத அளவுக்கு ஒரு குற்றச்சாட்டுக்கு ஆளாகும் போது அவனுடைய சமூகம் அவனை எப்படி நடத்தும் என்று சொல்லும் படம்.

For More Details - http://www.imdb.com/title/tt1322385/?ref_=nv_sr_1

- Maruthu Pandian Prometheus

Friday, 17 July 2015

‘உனக்கு எவன்டா பாடம் சொல்லி கொடுத்தது?’

இந்த 27 வருசத்தில எனக்கு புரிஞ்சது என்னன்னா… பட்டப்படிப்புக்கும் பகுத்தறிவுக்கும் சம்மந்தம் இல்லை.!!! இங்கே பகுத்தறிவு என்பதை common sense, civic sense என்ற பொருளில் புரிந்து கொள்ளவும்.

ஆகவே தமிழினமே!

இனிமேல் எவனையும் பார்த்து

‘படிச்சிருக்கீலே அறிவு இல்ல?’

‘படிச்சவனாயா நீ?’ என்றோ…

முக்கியமாக ‘உனக்கு எவன்டா பாடம் சொல்லி கொடுத்தது?’ என்ற கேள்வியை கேட்கவே கூடாது!!!

தலைக்கவசத்தை அணிந்து கொண்டு இரும்பு குதிரையை செலுத்தும்போது…

தலைக்கவசத்தை அணிந்து கொண்டு இரும்பு குதிரையை செலுத்தும்போது…

1. வலது பக்கம் விமானம் பறக்குற மாதிரி சத்தம் கேட்குது.

2. இடது பக்கம் ரெயில் வண்டி போற மாதிரி சத்தம் கேட்குது. (எங்க ஊர்ல காத்து காலம்)

3. மறந்து போய் ஏதாவது பாட்டு கீட்டு பாடிட்டா மண்டைக்குள்ளயே எதிரொலிக்குது!

4. பின்னாடி வர்ற மண் திருடுற லாரியோட ஆரன் சத்தம் பைக் சத்தம் மாதிரி கேட்குது. (சத்தம் இல்லாம தொழில் பண்றவங்க பாருங்க!!!)

5. என் வண்டி ஆரன் சத்தம் எனக்கே கேட்க மாட்டேங்கு. (இதுக்குள்ள எனக்கு காதுல ஏதோ பிரச்னைன்னு உங்களுக்கு தோணிருக்கணுமே?!)

6. வண்டிய உதைச்சு லேசா உறும விட்டாத்தான் வண்டிக்கு உயிர் வந்துச்சா இல்லையான்னு தெரியுது.

7. கவசத்தை கழட்டாம ஏதாவது கடைக்கு போனா கடைக்காரர் எனக்கு பிறவியிலேயே காது கேட்காது என்பது போல கத்தி பேசுகிறார்.

8. உடன் வேலை பார்ப்பவர்கள், பொண்டாட்டியிடம் தேங்காய்யை தட்டி பார்த்து வாங்கி வந்து சட்னி வைக்க படித்திருப்பதால் என்னுடைய தலைக்கவசத்தை தட்டி பார்க்கிறார்கள். (தேங்காய் மண்டையர்கள்)

9. பெண்கள் குழந்தைகளையும், தண்ணீர் குடத்தையும் இடுப்பில் லாவகமாக வைத்து கொண்டு செல்வது போல எங்கே போனாலும் கவசத்தை வைத்துக்கொண்டு அலைய வேண்டியிருக்கிறது.

10. கவசம் இல்லாமல் பின் இருக்கையில் அமர்பவர் காவல் துறையிடம் சிக்கினா அபராதம் நான் கட்டணுமா இல்லை அவர் கட்டணுமா என்று கேட்டு தெளிவு படுத்தி கொள்கிறார்.

11. ‘இணையத்தில் வாங்குனீங்களா?, எப்போ? இப்ப இதோட விலை ரெண்டு மடங்கு ஆயிருச்சு’ என்று இணையத்தை பயன் படுத்த தெரிந்திருந்தும் வாங்காமல் விட்ட ஒருவர் பெரு மூச்சு விடுகிறார்.

12. கலைஞ்ச தலைமுடிய எப்படி சீவினாலும் நாலு முடி புதுசா முளைச்ச புல்லு மாதிரி நேரா நிக்கிது.

13. வண்டில வர்ற நாய் புதுசா இருக்கேன்னு தெருவில் உள்ள நாயெல்லாம் லொள்ளுகின்றன.

14. எப்படியும் ஒரு வாரத்திற்குள் எல்லாம் பழையபடி திரும்பி விடும் என்று கவசம் வாங்காத ஒரு கூட்டம் இறுதிச்சிரிப்பு சிரிக்க காத்துக்கொண்டிருக்கிறது!!!

கிரிக்கெட்டும் இந்தியரும்

நான் கரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி 12 வருடங்களுக்கு மேலாகிறது. 2011 உலகக்கோப்பை போட்டியை அவ்வப்போது கவனித்ததோடு சரி. 2011ல் ஒவ்வொரு போட்டியை இந்தியா வென்ற போது சக மாணவர்கள் வெற்றியை கொண்டாடும் பொருட்டு செய்த கிறுக்கு தனங்கள் ஞாபகம் வருகின்றன. உச்ச கட்டமாக இறுதி போட்டியை பல்கலைக்கழக கலையரங்கத்தில் ஒளிபரப்ப நிர்வாகம் ஏற்பாடு செய்ய அன்று இந்தியா வென்றதால் கலையரங்கம் பிழைத்தது. ஆனாலும் செடி கொடிகளை சூரையாடி விட்டனர் நமது ரசிகர்கள்.

இலக்கியம், சினிமா என்று எனக்கு என்ன பிடிக்கும் என்ற ஒரு தெளிவு ஏற்பட கிரிக்கெட் ஒரு அபத்தமான விளையாட்டாக எனக்கு பட்டது. கிரிக்கெட் மட்டுமல்ல எந்த விளையாட்டையும் என்னால் ஒரு 10 நிமிடம் கூட பார்க்க முடிவதில்லை. ஆனாலும் நமது இன்றைய பேசு பொருள் கிரிக்கெட்டே. பேராசிரியராக ஆன பின் இந்த மூன்று வருடங்களில் கிரிக்கெட்டிற்கு எதிராக பேசிக்கொண்டே இருக்கிறேன். எனது மாணவர்களுக்கு நான் ஏன் இப்படி கிரிக்கெட்டை கரித்து கொட்டுகிறேன் என்ற கடுப்பு. ஏன் கிரிக்கெட் பார்கிறீர்கள் என்று கேட்டால் நான் ஆங்கில பேராசிரியராக இருப்பதால் எனது மாணவர்களுடைய பதில் “ கமெண்டரி கேட்டு என்னுடைய ஆங்கில அறிவை மேம்படுத்திக்கொள்ள” என்கிற ரீதியில் இருக்கும்.

“சரி, எங்க ஒரு ஓவருக்கு கமெண்டரி கொடு பார்ப்போம்”

“சார்?!!!”

“மூணு மணி நேரமோ ஒரு நாள் முழுக்கவோ கிரிக்கெட் பார்க்கேல?”

“ஆமா சார்” ஏதோ குற்றம் புரிந்தவன் போல இந்நேரம் உடல் மொழி மாறியிருக்கும்.

“சரி ‘ஆங்கில அறிவை மேம்படுத்திக்கொள்ள’ நான்  ஆங்கில படம் ஆங்கில சப்டைட்டிலோட தர்றேன் பாக்குறியா?”

“சார்?!!!” தலையை சொறிந்து கொண்டே “சார், தமிழ்ல அந்த படம் கிடைக்காதா சார்?”

இதாவது பரவாயில்லை. ஆங்கில இந்துவில் வெளியான கிரிக்கெட் பற்றிய கட்டுரையை படிக்க கொடுத்தால் பையன் நம்முடன் பேசுவதையே நிறுத்தி விடுவான்.

Time is money ன்னு போறவன் வாரவன்லாம் சொல்றான். ‘என் வாழ்கையில ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானே செதுக்குனதுடா’ - நல்லாத்தான் இருக்கு. ஆனா வருசத்தில ரெண்டு மாசம் IPL மாதிரி பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு நடத்த படும் போட்டிகள் நமது இளைஞர்களின் நேரத்தை திருடுவது நமது இளைஞர்களுக்கு புரியவில்லையா?

“யோ லீவுல மனுசன் வேற என்ன பண்ணுவான்?”

“டிவில ஃப்ரீயாதான பாக்கோம்!”

“சார் சென்னை நம்ம ஊரு டீம் சார்”

ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் நம் வாழ் நாளிலிருந்து குடுத்ததற்கு இந்த பெருமை தான் மிச்சம்!

ஒரு விசயத்தில் நாம் தொடர்ந்து ஈடுபடும் போது அது ஏதோ வகையில் நம்முடைய சிந்தனையை, ஆளுமையை கட்டமைக்கிறது. இளைஞர்கள் நிரம்பிய இந்த தேசத்தில் என்னை போன்ற விதிவிலக்குகள் தவிர்த்து கிரிக்கெட்டை வழிபடுபவர்கள் தான் அதிகம். இத்தனை பேர் இதில் இவ்வுளவு நேரம் செலவளித்து என்ன முன்னேற்றத்தை தங்கள் வாழ்கையில் கண்டார்கள்? சராசரி பின்னணியிலிருந்து வந்த சச்சின், தோனியெல்லாம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில் சேர்ந்து விட்டார்கள். எப்படி? கிரிக்கெட் விளையாடி, விளம்பர தூதராக இருந்து என்று கணக்கு வழக்கில்லாமல் பணம் சேர்ந்து விட்டது. கிரிக்கெட்டை மேல் சொன்ன வீரர்கள் விளையாடிய காலம் முழுதும் கண் அயராமல் பார்த்த நம் இளைஞர்களுக்கு என்ன கிடைத்தது?

நல்லா விளையாடட்டும், விளையாடியதற்கு சம்பளம் வாங்கட்டும். நல்லா இருக்கட்டும். ஆனா இந்த இந்திய திரு நாட்டுல வேறெதவாது விளையாட்டு விளையாடியோ, இல்ல வேறெதாவது நேர்மையான தொழில் செஞ்சோ இவ்வளவு பணம் சேர்க்க முடியுமா? Behind Every Great Fortune There is a Crime   அப்படினு பால்சாக் (Balzac) என்கிற எழுத்தாளர் சொன்னது நினைவுக்கு வருகிறது.

இந்தியர்கள் பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று மட்டம் போட்டு மட்டை பந்து விளையாட்டை பார்த்து சில நூறு பணக்காரர்களை உருவாக்கியிருக்கிறார்கள். சுந்தர ராமசாமியின் அக்கரைச்சீமையில் என்கிற கதையில் வரும் ராஜூ என்கிற கதாபாத்திரம் ‘என்னோட 25 வருச உழைப்பு வெள்ளைக்காரன் பாக்கெட்ல பணமா இருக்கு சார்’ என்று கதாசிரியரிடம் சொல்வதும் இங்கே மேற்கோள் காட்டப்படவேண்டிய வரியே. Time is Money என்பதன் விளக்கம் இப்போது புரிகிறதா? Time உங்களுடையது Money அவர்களுடையது! Cricket is a rich man's game என்றொரு கருத்தும் உண்டு. இங்கே கிரிக்கெட்டில் நிலவும் சாதி அரசியலை வைத்து சினிமாவும் எடுத்தாயிற்று.

வளர்ந்த நாடுகளில் உள்ள நடுத்தர குடும்பங்களின் வருமானமும் நமது நாட்டில் உள்ள உள்ள நடுத்தர குடும்பங்களின் வருமானமும் ஒன்று அல்ல. நம் குடும்பங்களிடமும் உள்ள சொத்து நம்முடைய நேரமே. அந்த நேரத்தில் ஊர் நாட்டுல வேற எந்த விசேசத்துக்கும் போகமல் வேலையே கதியென்று கிடந்து உழைத்து சேர்த்து பொருட்களை வாங்கி சேர்த்து நாம் வாழ்கையில் கரை சேர்ந்துவட்டதாக காட்டிக்கொள்கிறோம். இந்த கிரிக்கெட்டில் நாம் ஈடுபடுவதும் காட்டிக்கொள்வதற்காகவே.’ சென்னையில் இருப்பவர்களிடம் ஊர் நாட்டில் இருப்பவர்கள் ‘கடற்கரைக்கு போனியா?, மாலுக்கு போனியா?’ என்பதோடு இப்போது ‘IPL பார்க்க போனியா?’ என்று கேட்கிறார்கள். அதே சென்னையில் தான் கன்னிமாரா நூலகமும், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகமும் இருக்கிறது. பாவம் நம் இளைஞர்கள். அவர்களுக்கு இதையெல்லாம் சொல்லி தர ஆளில்லை. போக அங்கே சென்று தன்னை ஃபோட்டோ எடுத்து போட்டு கொள்வதில் கவர்ச்சி இல்லையே?!

நான் அடுக்கும் குறைகளுக்கு என்ன ஆதாரம்? சினிமாவில் இருந்தே உதாரணம் சொல்கிறேன். நம் இளைஞர்களுக்கு எல்லாமே எளிமையாக இருக்க வேண்டும். இங்கே நடிகர்களின் படங்கள் அடையும் வெற்றியில் பாதி கூட இயக்குனர்களின் படங்கள் அடைவதில்லை. அதாவது ரஜினி, விஜய், அஜீத், சல்மான், சாருக், அமீர் கான் பாணி படங்கள். அப்படங்களின் புரிந்து கொள்ள, விவாதிக்க எதுவுமேயில்லை. யார் இயக்கினாலும் அவர்களின் படங்களின் கதையிலோ எடுக்கப்பட்ட விதத்திலோ பெரிய வித்தியாசம் இருக்காது. மாற்றாக பாலா, மிஸ்கின், வெற்றிமாறன், அனுராக் கஸ்யப் போன்றவர்கள் எடுக்கும் படங்களை கேலி பேசுவதோடு ‘கிறுக்கன், சைக்கோ’ என்று பட்டப் பெயர் வைத்து கொண்டு இருப்போம். நம் இளைஞர்கள் கரும்பை சாறாக தான் குடிப்பார்கள். கடித்து திங்க திறானி காணாது. கடித்து தின்பது நேர விரயம் என்பார்கள். 5 நாள் போட்டியாக இருந்ததை குறைத்து, ஒரு நாளாக மாற்றி இப்போது 3 மணி நேரமாக சுருங்கி விட்டது. அதை விளையாடுபவருக்கும் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது.

எனது மாணவர்கள் பலருக்கு கிரிக்கெட் விளையாடுபவர்கள் தான் முன் மாதிரிகள். (Role Model) அப்துல் கலாமை முன் மாதிரியாக கொண்டு அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் நாலு நல்ல வார்த்தை சொல்லி பதில் போடுவார். அதை கிரிக்கெட் விளையாடுபவரிடம் எதிர்பார்க்கலாமா? உங்களை இளைஞனாக, மாணவராக காண்பவருக்கும், வெறும் விசிறியாக (fan) காண்பவருக்கும் வித்தியாசமில்லையா? பின்னர் நான் புரிந்து கொண்டது அவர்கள் முன்மாதிரி என்று சொல்வது அவருக்கு பிடித்த நபர் போல முடியை வெட்டிக் கொள்வது, உடையணிவது முடிந்தால் அவரை போல ஒரு உடல் மொழியை போலி செய்வது.

இந்த விளையாட்டை ஒரு 15 நாட்டுக்காரன தவிர வேறு யாராவது விளையாடுறானா? இதுக்கு உலக கோப்பை போட்டி நடத்துறத விட அபத்தமான விசயம் வேற ஏதாவது இருக்கா என்ன?

கிரிக்கெட் ரசிகனாக (பைத்தியமாக) இருப்பவர்கள் இதையே ஒரு தகுதியாக பெருமைக்குரிய விசயமாக நினைக்கிறார்கள். இவர்கள் யாரும் சச்சினின் சுயசரிதையையோ ராமச்சந்திரா குகா கிரிக்கெட் குறித்து எழுதிய புத்தகங்களையோ காசு குடுத்து வாங்க மாட்டார்கள் - வாங்கவே மாட்டார்கள் பிறகு எங்கு படிக்க?

சரி இவிங்கள திருத்தி எனக்கு என்ன ஆகப்போவுது. இந்த நாடும் நாட்டு மக்களும் கிரிக்கெட் பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கட்டும்.

http://www.flipkart.com/corner-foreign-field-indian-history-british-sport-english/p/itmeymydvzzrmy9h?pid=9780670086351&ref=L%3A1437178811153338052&srno=p_8&query=ramachandra+guha&otracker=from-search

http://www.flipkart.com/picador-book-cricket-english/p/itmczz22rttxnhe7?pid=9780330396134&ref=L%3A1437178811153338052&srno=p_10&query=ramachandra+guha&otracker=from-search

Wednesday, 20 May 2015

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!


‘தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்’
‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’

என்றெல்லாம் வீர வசனம் பேசுபவர்களிடம் ‘எங்கே ஒரு ஐந்து சமகால தமிழ் எழுத்தாளர்களின் பெயரை சொல்லு’ என்றோ ‘கடைசியாக என்ன தமிழ் புத்தகம் படித்தாய்?’ என்றோ கேட்டால் ‘அதுக்கும் இதுக்கும் என்னையா சம்மந்தம்?’ என்று இடத்தை காலி செய்வார்கள்.

இங்கே தினம் ஒன்றாக தமிழின் சிறந்த சமகால படைப்பாளிகளின் வலைதளங்களை பகிர்கிறேன்.

ஏனென்றால் ஒரு மொழி வாழ்வதும், மேன்மையுறுவதும், நிலைத்து நிற்பதும் அம்மொழியில் படைக்கப்படும் இலக்கியங்களாலேதான்.

சங்க இலக்கியங்களையும், திருக்குறளையும் மேற்கோள் காட்டித்தானே எல்லா இனத்துக்கும் மூத்தவர் என்று பெருமைபட்டுக்கொள்கிறோம்?

இத்தளங்கள் எழுத்தாளரையும் அவருடைய படைப்புகளையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். விருப்பமுள்ளவர்கள் படிக்கலாம். தமிழையும் வாழ வைக்கலாம்!

சமகால தமிழ் எழுத்துக்குள் நுழைய கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பை சொடுக்கவும்.




http://www.amuttu.net/

Monday, 18 May 2015

பண்பாடு, கலாச்சாரம், மற்றும் பல கேள்விகள்…

விவசாயத்தை கைவிட்டு பிழைப்புக்காக நகரத்திற்கு வந்து அங்கேயே தங்கி விட்டவர்கள் தங்கள் சொந்த ஊரில் உள்ள கோயிலுக்கு வரி குடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழகத்தில் எந்த பகுதியில் இருந்தாலும் கோயில் கொடைக்கு ஊருக்கு வந்து விடுகிறார்கள். இவர்கள் குடிபெயர்ந்து வசிக்கும் ஊரில் உள்ள பெரிய கோயில் சாமிகளையும் விடுவதில்லை. தங்கள் பகுதியில் உள்ள குறு நில கடவுள்களையும் விடுவதில்லை.

30 வருடங்களுக்கு முன் இருந்ததை விட இன்று தமிழகத்தில் உள்ள மக்களிடம் நிச்சயம் அதிக பணம் புழங்குகிறது. அதனால் கோயில்களுக்கு பணம் செலவு செய்வதெல்லாம் இவர்களுக்கு ஒரு பெரிய விசயமாக தெரிவதில்லை. இவர்கள் உலகமெங்கும் இருந்து உழைத்து அனுப்பிய பணத்தில் அவர்கள் ஊரில் உள்ள சாமிகள் வசதியான கட்டிடங்களுக்கு இடம் பெயர்ந்து இருக்கிறது.

பண்பாடாக கலாச்சாரமாக இவையனைத்தையும் பார்த்தாலும் இந்த கொடைகள் எல்லாம் விவசாயத்தை கைவிட்டுவிட்ட மக்களின் கேளிக்கையாகவும் கொண்டாட்டாமாகவும் இன்று மாறிவிட்டன. என்னதான் மின்சார தட்டுபாடு இருந்தாலும் இவர்கள் ஜெனரேட்டரை வைத்து நாள் முழுவதும் ஒலிபெருக்கியில் காது செவிடாகும் சத்ததில் பக்தி பாடல்களை கதற விடுவார்கள். சீரியல் லைட், ஃபோக்கஸ் லைட் என்று அமர்களப்படுத்துவார்கள்.

இதையெல்லாம் முன்னின்று நடத்துவது யார்?  அந்தந்த ஊர்களில், பகுதிகளில் உள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கங்களும் அந்த நேரத்தில் எது ஆளும் கட்சியோ அதில் ஏதோ ஒரு துக்கடா பொறுப்பில் இருக்கும் உறுப்பினர்களும் தான். இவர்களை நம்பி 500 ரூபாயக்கு குறையாமல் வரி குடுத்து கொண்டிருப்பார்கள் மக்கள். ‘என்னடா இது எலக்சனுக்கு வாங்குனது இப்படி போயிருச்சே’ என்றெல்லாம் இவர்கள் நினைப்பதில்லை. ‘கோயில் காரியம்’ என்று தயங்காமல் செய்வார்கள். வசூல் செய்யப்பட்ட பணத்திற்கு கொடை முடிந்தவுடன் கணக்கு ’காட்டப்படும்’. இதன் உண்மைத்தன்மையை பெரும்பாலும் யாரும் கேள்வி கேட்பதில்லை. சாமி குத்தம் ஆகிவிடக்கூடாதில்லையா?!

சரி இப்படி வசூல் செய்யும் பணத்தில் அப்படி என்ன தான் செய்கிறார்கள்? ஊர் பெண்கள் விரும்பி கேட்டார்கள் என்று ஒன்றுக்கும் மேற்பட்ட முறை சினிமா பாட்டுக்கச்சேரி வைப்பார்கள். இதற்கு பெயர் ‘இன்னிசை நிகழ்ச்சி.’ நிதியைப்பொறுத்து ‘டிவிப்புகழ்’ என்றும் ‘சூப்பர் சிங்கர்’; என்று யாரையாவது பாட அழைத்து வருவார்கள். ஏரியாவில் உள்ள பெரிசுகளை பொறுத்து பழைய புரட்சி மற்றும் நடிகர் திலகங்களின் பாடல்கள் இடம்பெறும். பின்னர் அந்த பகுதியில் அதிகமாக வசிக்கும் சாதியின் புகழ் பாடும் சினிமா பாடல்கள் மற்றும் அந்த சாதியை சேர்ந்த நடிகர் நடித்த படங்களில் இருந்து பாடல்கள். இது போக மற்றவர்கள், குழந்தைகளை குசிப்படுத்த அந்த நேரத்தில் எந்த பாடல்கள் பிரலபமோ அந்த பாடல்கள். நம்முடையது சனநாயக நாடு பாருங்கள்!

முன்னர் திரை கட்டி படம் காட்டிக்கொண்டிருந்தனர் ஆனால் இன்றைய தேதியில் எந்த படமும் மூன்றே நாட்களில் பழசாகிவிடுவதால் மக்களுக்கு சலிப்பாகிவிட்டது போல. கரகாட்டம் போன்ற நிகழ்ச்சிகளை ஆடல் பாடல் கலைக்குழுக்கள் இல்லாமல் செய்ய, தோல், பாவை கூத்து, விடிய விடிய நடக்கும் நிகழ்த்து கலைகள் நாட்டார் கலைகள் பற்றி அய்யா நாஞ்சில் நாடன் மாதிரி யாராவது விகடனில் எழுதினால் தான் உண்டு. சினிமா நடிகனை தங்கள் இரட்சிப்பராக பார்ப்பவர்கள் பாரம்பரிய கலை நிகழ்த்துபவர்களை அச்சிட தரமற்ற வார்தைகளில் ஏசுகிறார்கள். பின்னர் எப்படி தமிழகத்தின் பாரம்பரிய கலைகள் வாழும்? சினிமாவில் இருந்து வந்து முதல்வர் ஆனவர்களுக்கு என்ன கவலை என்பதை நான் உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்.

தமிழக மக்கள் ஒரு வருடத்திற்கு கோயில் கொடைகென்று செலவு செய்யும் தொகையை கற்பனை செய்து பார்த்தால் எனக்கு மயக்கம் வரும் போல் இருக்கிறது. முதுகலை பொருளாதாரம் படித்த என் நண்பனொருவன் அழகிரி மதுரை குலுங்க பிறந்த நாள் கொண்டாடுவதை சரியென்பான். அது ஏன்டா சரியென்றால், அப்போதுதான் பயன்படுத்த படாமல் இருக்கும் பணம் வெளியே வரும், பேனர், போஸ்டர் அடிப்பவர் முதல் அதை ஒட்டுபவர் வரை பலருக்கும் வேலை கிடைக்கும், அவர்களிடம் பணம் புழங்கும் அவர்கள் அதை செலவு செய்வார்கள் என்று ஒரு கேயாஸ் தியரியை சொல்லி என் வாயை அடைப்பான்.

கோயில் கொடைகளுக்கு செலவு செய்யப்படும் பணத்தையும் இப்படி ஒரு கோட்பாடை கொண்டு நியாயப்படுத்த முடியவில்லை. கோயிலுக்கென்று பணம் வசூல் செய்ய வரும் கூட்டம் ஊரில் உள்ள வேறெந்த பிரச்சினைகளையும் கையில் எடுக்க மாட்டார்கள். சாலை வேண்டும், வாறுகால் வசதி வேண்டும் தண்ணீர் வேண்டும் என்று அந்தந்த பகுதி பெண்கள் வீதியில் உருண்டு, மறியில் செய்து அவற்றை பெற்றால் தான் உண்டு. தங்கள் ஊரில் தண்ணிப்பஞ்சம் தலைவிரித்தாடினாலும், நிலத்தடி நீர் வற்றிப்போனாலும் அது குறித்து எந்த கவலையும் இல்லாமல் தங்கள் சாதிப்பெருமையை காப்பாற்ற நீர் வரும் வழிகள் அடைக்கப்பட்டு காய்ந்து போன தெப்பக்குளத்தில் தெப்ப தேர் விழா நடத்த 2 லட்சம் செலவு செய்து பக்கத்து ஊர்களில் இருந்து தண்ணீரை லாரிகளில் கொண்டு வந்து அந்த பாடாவதி குளத்தில் நிரப்புவதை என் நண்பன் சொன்ன பொருளாதார தத்துவத்தின் கீழ் புரிந்து கொள்ள என் மனம் மறுக்கிறது.

தாங்கள் வசிக்கும் ஊரில் ஒரு நல்ல நூலகம் இல்லை, பேருந்து நிலையம் இல்லை, அங்கே நல்ல கழிப்பிட வசதியில்லை, ஊரை உரசிக்கொண்டு போகும் தேசிய நெடுஞ்சாலையின் தரம் ஊரில் உள்ள எந்த சாலையிலும் இல்லை. இது எதுவுமே இவர்கள் சிந்தனைக்கு செல்லாதா? இல்லை இவர்கள் இதெல்லாம் அரசாங்கத்தின் கடமை என்று நினைக்கிறார்களா? கல்வி, மருத்துவம், தண்ணீர் என்று எல்லாத்தையும் கை கழுவிக்கொண்டிருக்கும் அரசாங்கம் செயல் படும் விதம் இவர்களுக்கு ஏன் உறைக்கவில்லை? பிச்சையெடுத்து சேர்த்த பணத்தில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு குடி தண்ணீர் கிணறு வெட்டி வைத்தவர்கள் வாழ்ந்த நாடு இது. அவர்களின் மனதும் சிந்தனையும்; தண்ணீரை காசு குடுத்து வாங்கும் நமக்கு புரியப்போவதில்லை.

சரி கோயில் கொடையாவது அந்த பணத்தில் உருப்படியாக நடக்கிறதா? பாரம்பரிய கலையை, கலையை நிகழ்த்தும் கலைஞர்களை வாழ வைக்கிறதா என்றால் அதற்கு பதிலாக வெறுமையே எஞ்சுகிறது. வீட்டுக்கு ஒரு ரத்தக்கொதிப்பு பாதிப்பு உள்ள நபர் இருக்கும் இந்நாளில் நாளெல்லாம் ஒரு வாரத்திற்கு ஒலிப்பெருக்கியில் உச்ச சத்ததில் பக்தி பாடல் இறைந்து கொண்டிருந்தால் பாதிக்கப்பட்டவருக்கு பக்தி எப்படி வரும்? கைக்குழந்தைகள், விளையாட்டு பிள்ளைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் போக அந்த பகுதியில் சுற்றுத்திரியும் வாயில்லா சீவன்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையாக இது யாருக்கும் தெரியவில்லையா? இந்த சத்தத்தில் எப்படி சாமி உறவினர்கள் உரையாடுவார்கள்?

ஆளுங்கட்சி அமைச்சர்கள், ச ம உக்கள் எதிர் கால அனுகூலம் கருதி காது குத்துலாம், காவடி எடுத்கலாம், மொட்டை போடலாம், மண் சோறு திங்கலாம், முளைப்பாரி சுமக்கலாம், பால் குடம் எடுக்கலாம், தீச்சட்டி தூக்கலாம், பூக்குழி இறங்கலாம், கோயில்ல உருளலாம் ஆனால் இதையெல்லாம் வருசம் தவறாமல் கோயில் கொடைகளில் செய்யும் மக்கள் வாழ்க்கையில் என்னத்தை கண்டார்கள்? நான் பெரியாரியம் எல்லாம் பேசவில்லை. இவ்விழாக்களை, கொடைகளை எளிமையாக மாற்றி அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பவர்கள் அதை முதலில் நிறைவேற்றிக்கொண்டால் என்ன? என்று தான் கேட்கிறேன். ஒரு வேளை ‘சாமிக்கு செய்தால் தனக்கு தன் குடும்பத்தாருக்கு திரும்பி வரும் ஊருக்கு செய்தால் என்ன கிடைக்கும்’ என்று நினைக்கிறார்களோ? இல்லை இது நடக்காது என்று சொல்வீர்களேயானால் ‘குடிக்கிறது கூழு வாய் கொப்பளிக்கிறது பன்னீரு’ என்ற பழமொழி; தோன்றியதற்கான பண்பாட்டுக் காரணங்களை புரிந்து கொண்டவன் ஆகிறேன்.

மேற்சொன்ன பழமொழி உதித்த பண்பாட்டில் இருந்து வந்தவர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மேற்கோளையும் புரிந்து கொள்வார்கள்.

ஏழைகளின் கோபத்திலிருந்து பணக்காரர்களை காப்பாற்றும் எளிய தந்திரத்தின் பெயர்தான் மதம்.
                                                                                    - ஆஸ்கார் ஒயில்ட்

Friday, 15 May 2015

விளையாட்டாக மாறுவது!

குழந்தைகள் கோயிலுக்கு சென்று வந்த உடன் பூசாரி வேடம் கட்டுகிறார்கள். ஒரு தட்டில் திருநீறு, குங்குமத்தை அள்ளிப்போட்டு வீட்டில் உள்ளவர்களை குனிந்து கும்பிடச்சொல்லி தங்களது பிஞ்சு விரல்களில் கொஞ்சமே கொஞ்சமாக திருநீறை எடுத்து குனிந்திருப்பவர்களின் தலை மேல் கொஞ்சம் தூவி மிச்சத்தை அவர்கள் நெற்றியில் ஒற்றியெடுக்கிறார்கள்.

குழந்தைகள் ஏன் சாமி வேசம் போடவில்லை என்று உங்களுக்கு கேள்வி எழுந்தால் நீங்கள் உங்களுக்குள் உள்ள குழந்தையை தொலைத்து விட்டீர்கள். கோயிலில் சாமி அசையாமல்ல இருக்கு? குட்டி பாப்பாவோ தம்பியோ எப்படி அசையாமல் இருப்பார்கள்?! அது போக சாமி வேசம் கட்ட ஊரில் நிறைய பேர் இருக்கிறார்கள். 

பள்ளிக்கு சென்று வந்த முதல் நாள் வீட்டில் உள்ளவர்களுக்கு பாடம் எடுக்கிறார்கள்.

பேருந்தில் சென்று வந்தால் பென்சிலை காதில் சொருகிகிகொண்டு, ஒரு நோட்டை கைக்கிடையில் வைத்து கொண்டு டிக்கெட் கொடுக்கிறார்கள்.

பெரியவர்கள் இந்த விளையாட்டில் பார்வையாளராகவோ பங்கு பெறுபவராகவோ இருக்க முடியுமே தவிர ஒரு போதும் விளையாட்டாக ஆக மாற முடிவதில்லை.