Monday, 25 December 2023

The Element Chapter 7 - The Baby

The Element 


Chapter 7 - The Baby 


18ம் தேதி மீண்டும் பெருமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்தது. நான்கு மாவட்டங்களில் பெய்த மழையின் அளவு, கோவில்பட்டியில் 50cm மழை பெய்தது எல்லாம் தெரியவந்தது. தூத்துக்குடியில் அது வரை 36cm மழை. 


இதற்கு மேல் மழை பெய்து தண்ணீர் உயர்ந்தால் கீழ் தளத்தில் house owner வீட்டிற்குள் தண்ணீர் சென்று விடும். அவர்களுக்கு மாடியிலும் அறைகள் உள்ளதால் அங்கே சென்று விடுவோம் என்றனர். 


அப்போது எங்கள் எதிர் வலது புற வீட்டில் இருக்கும் 3 மாத குழந்தையையும் அம்மாவையும், துணைக்கு மேலும் ஒரு நபராக 3 பேரை ஓரிரவு எங்கள் வீட்டில் தங்க வைக்கலாமா என்று House Ownerன் மனைவி வழியாக கேட்டனர். அவர்கள் வீட்டில் தண்ணீர் நுழைவதற்கு அரை அடிக்கும் குறைவான உயரம் தான் இருந்தது. பகல் வெளிச்சம் இருக்கும் போதே கொஞ்சம் உயரமான, பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட வேண்டும் என்கிற தவிப்பு. 


என்னுடைய மனைவி இதென்ன கேள்வி கிளம்பி வர சொல்லுங்க என்று House Owner ன் மனைவியிடம் சொல்லி விட்டாள். House Owner வீட்டின் மாடியில் தொட்டில் கட்ட hook இல்லாததால் இங்கே வர சொல்லி விட்டேன் என்றாள். 


எனக்கு வேறெதையும் விட மேலே தொட்டியில் உள்ள தண்ணீர் சீக்கிரம் காலியாகி விடுமே என்கிற பயம். இரவு வெளிச்சம், காற்று இல்லாமல் குழந்தையின் அழுகுரலை கேட்டு கொண்டிருக்க போகிறோம் என்று  நினைத்தேன். 


குழந்தை பெரும்பாலும் தூங்கிக்கொண்டே இருந்தான். அழவே இல்லை. இவ்வளவு சமத்து குழந்தையா என்று மனைவியிடம் கேட்ட போது முதல் 3 மாசம் அப்படி தான் இருப்பாங்க. புரண்டு படுக்க ஆரம்பிச்ச பிறகு நாம கண்ண மூடி தூங்க முடியாது என்றாள். 


இந்த சூழ்நிலையில் அறிமுகம் ஆகி Ice break செய்து கொள்ள நேரம் இல்லை என்பதால் பெரும்பாலும் மிக அமைதியாக, கொஞ்சம் இறுக்கமாக அவரவர் cell phoneல் இருந்த கடைசி சொட்டு batteryஐ காலி  செய்யும் தீவிரத்தில் இருந்தோம். 


குழந்தைக்கு தொட்டில் கட்ட 5 plastic நாற்காலிகளை ஒன்றின் மீது ஒன்றாக போட்டு மேலே ஏறி hookல் கயிற்றை மாட்டிக்கொடுத்தேன். இருள் கவிந்து விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தலையை தொங்க போட்டு ஆளுக்கு ஒரு மூலையில் அமர்ந்திருந்தோம். அப்போதும் லேசான சாரல் விழுந்து கொண்டிருந்தது.

The Element Chapter 6 - The Water Tank

The Element 


Chapter 6 - The Water Tank


18ம் தேதி காலையில் மின் இணைப்பு வரவில்லை என்றவுடன் முதலில் உரைத்த விஷயம் நேத்து போட்ட 10 நிமிட motor எவ்வளவு தண்ணீரை தொட்டியில் சேர்ந்திருக்கும் என்பது தான்.


 கோவில்பட்டி என்றால் வீட்டில் குடம், அண்டா, drum என்று 500 லிட்டர் தண்ணீர் கொள்ளும் அளவுக்கு எல்லோர் வீட்டிலும் பாத்திரம் வைத்திருப்பார்கள். இந்த நவீன வாழ்க்கையில் குடத்திற்கே அவசியம் இல்லை. மேலே மழை கொட்டினாலும் ஒரு நாள் பயன்பாட்டிற்கு தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்ளும் அளவுக்கு கூட வீட்டில் பாத்திரங்கள் இல்லை. 


தொடர்ந்து மழை விழுந்து கொண்டிருந்ததால் மாடியில் சென்று தொட்டியில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்று பார்க்க முடியவில்லை. துணி மழைல கிடக்கட்டும்னு விடாம 17 night வேற one time rinse போட்டோமே, அதுக்கு எவ்வளவு தண்ணி போச்சுன்னு தெரியலையே என்று பொறுமிக்  கொண்டிருந்தேன். 


Kitchen sinkல் தண்ணீர் வந்த வேகத்தில் அரை தொட்டி இருக்கும் என்று கணித்தேன். 1000L தொட்டி அது. கொஞ்சம் நிதானம் வந்தது. சரி மின்சாரம் மீண்டு விடும் அது வரை கவலை இல்லை. அப்படி நினைக்கும் போது மழை நீரின் அளவு தரை தளத்தில் உள்ள sumpஐ நெருங்கி இருக்கவில்லை. 


மழை தூவானமாக மாறிய போது குடையை எடுத்து கொண்டு மாடிக்கு சென்று தொட்டியை பார்த்தேன். 5ல் 4 பகுதி இருந்தது. கிட்ட தட்ட 800L அல்லது அதற்கு கொஞ்சம் மேலாக இருக்கலாம். 


மூன்று நாள் மின் இணைப்பு வராவிட்டாலும் சமாளிக்கலாம் என்று தைரியம் வந்தது. இதற்குள் வெள்ள நீர் கீழே sump ஐ மூழ்கடித்து விட்டது. இனி மின் இணைப்பு வந்தாலும் sumpஐ சுத்தம் செய்யாமல் அந்த தண்ணீரை பயன்படுத்துவது பைத்தியகாரத்தனம். அடுத்த 3 நாட்கள் மின் இணைப்பு வரவில்லை தான். 


The Element Chapter 5 - The Mentor

The Element 


Chapter 5 - The Mentor 


அனைவருக்கும் வாழ்க்கையில் ஒரு Mentor வேண்டும். நம் வாழ்க்கையில் எதிர்பார்க்காத சிக்கல் வரும் போது பயபுள்ள மாட்டிக்கிட்டு திணறட்டும் என்று விடாமல் அதிலிருந்து மீள்வது எப்படி என்று ஆறுதல் சொல்லி நல்ல வழி காட்டும் ஒருவர். 


நம் ரத்த உறவுகள், உடன் பிறந்தவர்கள் இடையே இப்படி ஒரு குரு போன்ற உறவு அமைவது அரிது. நாம் எப்போதும் அவர்களை விட அதிகம் அறிந்தவர்கள் என்கிற நினைப்பு நம்மிடம் இருக்கும். போலவே நண்பர்கள் இடையேவும். ஓ எனக்கு தெரியாதது இந்த வெண்ணைக்கு தெரியுமோ என்கிற ஒரு அகராதித்தனம். 


பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுடன் மாணவர்கள் தொடர்ந்து தொடர்பில் இருப்பது அரிதினும் அரிது. அதில் ஒருவர் Mentorஆக கிடைப்பது அதை விட அரிது. பின்னர் எப்படி வாழ்க்கையில் ஒருவருக்கு Mentor கிடைப்பார்? அலுவலக சூழலில் அமையலாம், தொழில் நிமித்தம் சந்திக்கும் இடங்களில் கிடைக்கலாம். அப்படி ஒருவரை சந்திக்காமலும் போகலாம். 


என்னுடைய Mentorகளில் ஒருவர் எனது நண்பரின் தந்தை. 17ம் தேதி காலை மழை நிலவரத்தை பற்றி சொல்ல எனக்கு phone செய்தார். கோவில்பட்டி கிளம்பவில்லை தூத்துக்குடியில் தான் இருக்க போகிறேன் என்றதும் சரி வீடு முதல் மாடி தான பத்திரமா இரு என்று தைரியப்படுத்தினார்.


18ம் தேதி காலை பேசியபோது தரை தளத்தில் house owner வீட்டின் கடைசி படி வரை தண்ணீர் வந்துவிட்டது என்று சொன்ன போது அதுக்கு மேல வராது நீ அவசியம் இல்லாம வெளில இறங்காத, பையனுக்கு குளிர் அடிக்காம பாத்துக்கோ, மழைக்கு பூச்சி, பட்டை வரும் கதவை சாத்தி கீழே மிதியடியை திணித்து வை என்று பதட்டத்தில் மறந்து போகும் சின்ன விஷயங்களை பொறுமையாக நினைவு படுத்தினார்.


மின்சாரம், இணையம் எல்லாம் செயல் இழந்த பிறகு சிக்னல் கிடைக்கும் போதெல்லாம் தொடர்பு கொண்டு விசாரித்தார். கடைசியில் மனம் ஆற்றாமல் நீ ஞாயிறு காலைல கிளம்பி வந்திருக்கலாம் என்றார். 


வியாழன் அவர் ஒரு வேலையாக தூத்துக்குடி வந்துவிட்டு திரும்பும் போது நாங்கள் குடும்பமாக சென்று சந்தித்து விட்டு பின்னர் கோவில்பட்டிக்கு bus ஏற்றி விட்டோம். அன்றே அப்படியே நாமும் சென்றிருக்கலாம் என்று தோன்றியது. 


சரி இனி இந்த தண்ணி சூழ்ந்த வீட்டின், ஊரின் உள்ளே இருப்பது எப்படி என்று தான் யோசிக்க வேண்டும் என்று மனதை திடப்படுத்திக்கொண்டேன். மேலும் மின் தொடர்பு, இணையம் இல்லாதது தவிர்த்து அந்நாள் மற்றுமொரு நாளாக தான் இருந்தது. என்ன வீட்டு வாசலை மிதிக்க முடியாத அளவிற்கு வெள்ளம் சூழ்ந்த ஒரு நாள். வெளியே எவ்வளவு தண்ணி இருந்தாலும் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் நீர் இருக்கும் வரை தான் அந்த வீட்டில் இருக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்ட ஒரு நாள். 

The Element Chapter 4 - The Deluge

The Element


Chapter 4 - The Deluge 


தூங்கிய பின் எத்தனை முறை மின் வெட்டு ஏற்பட்டது என்று தெரியவில்லை. அல்லது வெட்டப்பட்ட இணைப்பு மீளவில்லையா என்றும் தெரியவில்லை. இரவில் முழிப்பு வந்த போது மழை ஒரே ராகத்தில் பாடிக்கொண்டிருந்தது. 


காலை 5 மணி அளவில் house owner கீழே ஏதோ பேசிக்கொண்டிருப்பது கேட்டது. அப்போதும் மழை பெய்துகொண்டிருந்தது. 


நான் கீழே சென்று பார்த்தேன். ஒரு மணி நேரத்திற்கு முன் இந்த கோட்டில் கிடந்தது இப்போது இந்த கோட்டில் கிடக்கிறது என்று மழை நீரின் அளவை காலை வைத்து தொட்டு காட்டினார். 


அடுத்த கோடு தாண்டினால் தண்ணீர் வண்டிகளை நிறுத்தி வைத்திருக்கும் இடத்திற்கு வந்து விடும். 18ம் தேதி காலையில் இருந்து மழை அருவி மாதிரி இறைந்து கொண்டிருந்தது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சென்று தண்ணீரின் அளவை பார்த்துவிட்டு வண்டிக்கு பிரச்சினை இல்லை என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிவிட்டு வீட்டிற்குள் வந்துவிடுவேன். 


Cricket Score, பங்குச்சந்தை நிலவரம் பார்ப்பது போல மழை அளவை குறித்து கொண்டிருந்தேன். 


குடை பிடித்துக்கொண்டு வீட்டின் மாடியில் இருந்து சுற்றி பார்த்தால் நீர் அனைத்து குழிகளையும் நிரப்பி சாலையை நிரப்பி வீடுகளை நிரப்பிக் கொண்டிருந்தது. 


சிறு துளி பெருவெள்ளம் என்பது இது தானா? என்று மண்டைக்குள் சிந்தனை வேறு ஓடிக்கொண்டிருந்தது. கடல் கிழக்கே இருக்கிறது. இந்த தண்ணீர் மேற்கில் இருந்து தானே வருகிறது. அப்படியென்றால் கடல் நீர் ஊருக்குள் வந்துவிடவில்லை. ஆனாலும் ஓரிரவில் பெய்த மழைக்கு இப்படி தாமிரபரணி தெருவில் ஓடும் என்பது நம்ப முடியாததாகவும் இருந்தது. 


கொரோனா காலத்தின் ஆரம்பத்தில் மக்கள் ஒரு வித  கொண்டாட்ட மனநிலையில் இருந்தனர். கறி சாப்பிட்டு, கதை பேசி, இணையத்தில் அளவளாவி என்று குஷியாக இருந்தனர். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கதி கலங்கிப்போய் கிடந்தனர். 


அது போல 18ம் தேதி காலை முதல் அக்கம் பக்கத்தினர் மழையில் நனைந்தபடி முழங்காலுக்கு மேலே ஓடிய தண்ணீரில் வடக்கு தெற்காக தெருவில் நடந்து கொண்டிருந்தனர். என்னது இவனுங்க theme park வந்த மாதிரி இவ்வளவு jollyயா இருக்காங்க என்று பயந்தபடி பார்த்துக்கொண்டிருந்தேன். 


The Element Chapter 3 - The Electricity

The Element 


Chapter 3 - The Electricity 


16/12/2023 அன்று காலை washing machine போட்டிருந்ததால் தொட்டி தண்ணீர் குறைவாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டு இருக்கும்போதே 17/12/2023 அன்று current போகவும் வரவுமாக இருந்தது. 


பரவா இல்லையே இந்த ஊரில் இப்போது current போனால் உடனே திரும்ப வருகிறதே, அதுவும் மழை பெய்யும் போது என்று ஒரு 10 நிமிடம் தண்ணீர் motorஐ ஓட விட்டேன்.  


பையன் பகல் தூக்கம் போட்டுக் கொண்டிருந்தான். Cell phoneல் charge இருந்தது. முதல் நாள் இரவு ஜிகர்தண்டா XX Netflixல் பார்க்க தொடங்கியிருந்தேன். அதை தொடர்ந்து பார்த்து முடித்தேன். முதல் ஜிகர்தண்டா விற்கு இது பல படி மேல். Head phoneஐ காதில் இருந்து எடுத்தால் வெளியில் மழை ஊற்றிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்கும். நம்ம பாக்காத மழையா என்று தொடர்ந்தேன். 


அன்று இரவு வரை மழை தொடர்ந்தது. 16 அன்றும் மழை விட்டு விட்டு பெய்திருந்ததால் துவைத்து போட்ட துணிகள் 2 நாட்கள் மழையில் கிடந்து ஊறிக்கொண்டிருந்தன. இனி விட்டால் அவை வீணாகி விடும் என்று one time rinse போட்டா ஓரளவு உலர்ந்து வந்து விடும்,  வீட்டிற்குள் காயப்போடலாம் என்று மீண்டும் washing machine ஐ ஓட விட்டேன். அதற்குள் இரண்டு முறை current போய் வந்தது. 


Phoneல் மீண்டும் charge போட்டு இரவு உணவை முடித்து விட்டு, கமலி from நடுக்காவேரி படம் பாதியோடு நிற்கிறதே. கொஞ்சம் நல்லா இருந்ததே, தூக்கம் வரும் வரை அதை பாப்போம் என்று அதை தொடர்ந்தேன். 


இதற்கிடையில் மின் இணைப்பு போகவும் வரவுமாக இருந்தது. வீட்டில் UPS கிடையாது. மழை பெய்து குளிர்ந்து விட்டதால் fan சுத்தினாலும் சுத்தா விட்டாலும் ஒன்றும் வித்தியாசம் தெரியவலில்லை. மனைவியும் மகனும் தூங்கி விட்டார்கள். 


11 மணிக்கு படம் முடிந்தது. இன்னும் 2 நாளில் college reopen ஆகப்போகுது, இந்த vacation இப்படி முடிந்தது என்று எண்ணிக்கொண்டே தூங்க சென்றேன். அப்போது மின் இணைப்பு மீண்டும் துண்டிக்கப்பட்டது.

The Element Chapter 2 - The Rains

The Element 


Chapter 2 - The Rains


10 வருடத்திற்கும் மேலாக ஞாயிறு காலை  எழுந்தவுடன் கறிக்கடை வாசலில் போய் நிற்பதை தவிர்த்து வருகிறேன். ஞாயிறு தவிர எந்த நாளில் அசைவம் சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறதோ அன்று வாங்கிக்கொள்வோம். 


ஒன்று கடையில் இருக்கும் எக்கச்சக்க கூட்டம். இன்னொன்று மற்ற நாளில் இருக்கும் பொறுமை கறி வெட்டுபவருக்கு இருக்காது. இதனால் ஏன் இன்னைக்கு போய் கறி வாங்கினோம் என்று நொந்து கொள்ள வேண்டியது இல்லை. 


அது மட்டுமல்ல ஞாயிறு பொது இடங்களான கடற்கரை, பூங்கா, theatre, உணவகம் என்று எங்கே செல்வதையும் தவிர்த்து விடுவேன். எங்கு போனாலும் கூட்டம். Bike park பண்ணி எடுக்க முடியாது. Auto கிடைக்காது. பொது போக்குவரத்து பற்றி கேட்க வேண்டாம். இதையே திங்கள் மாலையோ, புதன் மாலையோ செய்தால் எந்த இடையூறும் இன்றி எளிதாக செய்து விடலாம். சந்தேகம் என்றால் ஒரு செவ்வாய் மாலை உங்கள் குழந்தையை அழைத்துக்கொண்டு கடற்கரை, பூங்கா என்று எங்காவது சென்று பாருங்கள். 


அது போல காய்கறி வாங்கவும் ஞாயிறு காலை 11 மணி அல்லது மதியம் 2 மணி வாக்கில் தான் செல்வேன். பையன் பிறப்பதற்கு முன் மனைவி காய்கறி பார்த்து வாங்கி விடுவார், நான் பையை சுமப்பேன். இப்போது 3 பேரும் கிளம்பி சென்று வந்தால் அரை நாள் ஆகும். அதுவும் பையனை வெயிலில் கூட்டி செல்ல முடியாது. மாலை தான் செல்ல முடியும். அதற்குள் காய்கறி கடைசி மிச்சம் தான் கிடைக்கும். அதனால் வெயில் என்று பாராமல் 11 மணிக்கு சென்று விடுவேன். 


17/12/2023 அன்று காய்கறி வாங்க கிளம்பும் போது மழை கொட்டியது. சரி மதியம் 2 மணிக்கு போவோம் என்று வீட்டில் இருந்து விட்டேன். மதியம் 2 மணிக்கும் மழை அடித்து விளாசியது. நாளைக்கு வாங்கிக்கொள்வோமா என்றேன். இருப்பதை வைத்து நாளை கூட சமாளிக்கலாம் என்று மறுமொழி கிடைத்தது. 


சரி ஒரு black teaய போடு என்று சொல்லி விட்டு ஜன்னலோரம் ஒரு Chairல் உட்கார்ந்து கொண்டு கால்களுக்கு ஒரு stoolஐ எடுத்துப்போட்டு நன்றாக நீட்டி உட்கார்ந்து கொண்டேன்.

The Element Chapter 1 - The Warning

The Element 


Chapter 1 - The Warning 


தூத்துக்குடியில் அந்த ஆலையை முடிய பிறகு நன்றாக மழை பெய்வதாக ஒரு நம்பிக்கை உள்ளது. மேலும் 2015 சென்னை வெள்ளத்துக்கு பின் "Red Alert" "Orange Alert" போன்ற சொற்கள் மக்கள் மொழியில் பரவலாக பயன்படுத்தப் படுகின்றன. 


இந்த ஆன்டு நவம்பரில் கண மழை என்று ஒரு அறிவிப்பு. அன்று வெயில் வெளுத்து வாங்கியது. அதே போல இந்த ஆண்டு ஏற்பட்ட சென்னை மழை வெள்ளத்துக்கு பிறகு அதை விட பெரிதாக ஒன்று தூத்துக்குடிக்கு வரப்போகிறது என்று ஒரு வானிலை அறிக்கை. நவம்பர் 11, 2023 அன்று இரவு 9 மணிக்கு மேல் இந்த கண மழை அறிவிப்பை என்னிடம் தெரிவிக்க எனது நண்பரின் தந்தை தொலை பேசினார். 


நான் அதெல்லாம் வராது என்று விட்டேத்தியாக பதில் சொல்ல வேண்டாம் என்று சரி அப்பா வேணும்கிற பொருள் வாங்கி வச்சுட்டு வீட்டுல safeஅ இருந்துக்கிறோம்ன்னு சொல்லிட்டேன். 


அன்று மழை பெய்யவில்லை. மேக மூட்டம் மட்டும் தான். அடுத்த இரண்டு நாட்கள் கழித்து அவரை நேரில் சந்தித்த போதும் அதை பற்றி வாய் திறக்கவில்லை. அவர் எனக்கு தகவல் சொன்னது நான் முன் தயரித்துக்கொள்ள தான். அதனால் நீங்கள் சொல்லி மழை வரலைன்னு சொன்னதாக இருக்க வேண்டாம் என்று அப்படியே விட்டு விட்டேன். 


கண மழை எச்சரிக்கை அனைத்தையும் மறந்து 6 நாட்கள் ஆகியிருந்தது. 17ம் தேதி எழுந்து இன்று செய்ய வேண்டிய வேலைகள் என்ன என்று யோசித்துக்  கொண்டிருந்தேன். அந்த மழை  அன்று காலை தொடங்கியது.