Sunday, 27 August 2017

Ulidavaru Kandante - Once Upon a Time in Udupi

இந்தியாவில் அதுவும் தமிழில் வெற்றியடையும் ஒரு சினிமா, அது போல கதை, பின்னணி உடைய சினிமா மற்ற மொழிகளில் உருவாக ஒரு தொடக்கமாக அமைந்து விடுவது உண்டு. இது பெரும்பாலும் வணிக வெற்றி படங்களுக்கே நடக்கும் (கஜினி, பொல்லாதவன், சிங்கம்) என்றாலும் சுப்ரமணியபுரம் போல ஒரு period film ஆக எடுக்க பட்டு அது வணிக வெற்றியும் அடையும் போது அது போலவும் முயற்சிகள் உறுதியாக நடக்கும்.

அனுராக் கஷ்யப் தன்னுடைய Gangs of Wasseypur படத்தை தமிழ் இயக்குனர்கள் பாலா, அமீர், சசிகுமார் போன்றவர்களுக்கு வணக்கம் வைத்தே ஆரம்பிக்கிறார். தெலுங்கில் ரத்த சரித்திரம், மலையாளத்தில் கம்மட்டிபாடம், அங்கமாலி டைரிஸ் கொஞ்சம் தேடினால் மராட்டி, வங்காளி என்று நிச்சியம் இது போல படங்கள் இருக்கும்.

இங்கே நாம் பார்க்க போகும் Ulidavaru Kandante ஒரு கன்னட Period Film. ஒரு noir, crime thriller என்றும் சொல்லலாம்.  சசிகுமார் போலவே தன்னுடைய முதல் படத்தை எழுதி, இயக்கி, நடித்தும் இருக்கிறார் ரக்ஷித் ஷெட்டி என்கிற 30 வயது இளைஞர்.

இதை தொடர்ந்து பேசுவதற்கு முன்...

Akira Kurosowa, Sergio Leone, Quentin Tarantino போன்ற இயக்குனர்களின் தாக்கத்தில் படம் எடுப்பவர்கள் பெரும்பாலும் சொதப்பி விடுகிறார்கள் அல்லது over do செய்து விடுகிறார்கள். Ulidavaru Kandante வில் மூன்று இயக்குனர்களின் பாதிப்பும் காட்சிக்கு காட்சி உண்டு ஆனாலும் படம் புதுமையானதாகவே இருக்கிறது.

குரோசோவாவின் Rashomon போல பல கதாபாத்திரங்களின் பார்வையில் திரைக்கதை விரிகிறது. இதற்கு Tarantino பாணி வசனங்கள், Leone பாணி காட்சியமைப்புகள் மற்றும் இசை என்று படம் பட்டாசாக இருக்கிறது.

சில படங்களை பார்ப்பதற்கு ஒரு முன் தயாரிப்பு வேண்டும். Ulidavaru Kandante அது போல ஒரு படம். Rashomon தொடங்கி, Once Upon a Time in the West, Scarface, Pulp Fiction என்று ஏகப்பட்ட படங்களின் reference இருப்பதால் இது பற்றி தெரியாத ஒரு நபர் படம் குழப்பமாக இருக்கிறது என்று சொல்லவே வாய்ப்பு அதிகம். Reference படங்களை ஏற்கனவே பார்திருந்தவர் Ulidavaru Kandante வை பார்க்கும் போது நிச்சியம் 'அட என்னமா எடுத்திருக்கான்' என்றே சொல்லுவார்.

படத்தில் மொத்தம் ஆறு அத்தியாயங்கள். உடுப்பி அருகே இருக்கும் கடற்கரை கிராமமான Malpeவில் ஒரு கொலை விழுகிறது. அதை பற்றி விசாரித்து எழுதும் பத்திரிகையாளர் அந்த கொலையுண்ட நபருடன் சம்மந்த பட்ட நபர்களை விசாரிக்கிறார் அதில் பல கிளைக்கதைகள் இருக்கவே ஒவ்வொரு கதையை தனித்தனி அத்தியாயமாக எழுதி அவை இறுதி அத்தியாயத்தில் வந்து முடியுமாறு எழுதுகிறார். அதையே நாம் திரையில் காண்கிறோம்.

இதற்கு மேல் வாசிக்கும் முன் படத்தின் ட்ரைலரை ஒரு முறை பாருங்கள்.

Trailer

https://m.youtube.com/watch?v=POJ_6EtGeMw

படத்தின் கதையை சுருக்கமாக சொல்வது என்பது கூட இந்த படத்தின் spirit ற்கு எதிராக திரும்ப வாய்பிருப்பதால் சிறப்பம்சங்களை மட்டும் இங்கே சொல்கிறேன்.

முதலில் படத்தின் பின்புலம். கதை 1990களில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. மாநகரம், இயற்கை அழகு கொஞ்சம் இடம் என்றெல்லாம் இல்லாமல் ஒரு கடற்கரை கிராமம்/நகரத்தில் நடைபெறுகிறது. வள்ளம், தோணி கட்டும் தளம், மீன் சந்தை, என்று detailing பிரமிக்க வைக்கிறது. வட்டார மொழியில் தான் கதா பாத்திரங்கள் பேசிக்கொள்கிறார்கள். அங்கே உள்ள மொழி சிறுபான்மையினர் பேசிக்கொள்ளும் போது கன்னடத்தில் subtitle வருகிறது. கடற்கரை பகுதியை சேர்ந்தவர்கள் மலைப்பகுதியில் இருந்து அங்கே பிழைக்க வந்தவர்களை கேலி செய்கிறார்கள். இப்படி நுணுக்கமான விசயங்கள் தான் வழக்கமான மசாலா படங்களில் இருந்து இப்படத்தை கவனிக்க வேண்டிய படமாக மாற்றுகிறது.

இரண்டாவது நடிகர்கள். கிஷோர் பின்னர் மாற்றான் படத்தில் சூர்யாவிற்கு அம்மாவாக நடித்த நடிகை மட்டுமே நமக்கு தெரிந்த முகங்கள். அத்தனை பேரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். Democracy என்றொரு சிறுவன் கதாபாத்திரம். அவன் காந்திஜியின் மூன்று குரங்குகள் என்று விளக்கம் சொல்லும் காட்சிகள் அங்கத சரவெடி. கதாநாயகன் ரிச்சி யாக ரக்ஷித் ஷெட்டி. "As the Cuban kid always said, Here we meet once again" என்று கதாநாயக buildup கொடுத்து அறிமுகம் ஆகிறார். பின்னர் Lucia படத்தில் theatre owner ஆக நடித்த நடிகர்.

மூன்றாவதாக உள்ளூர் கலைகள். Yakshagaana, புலி ஆட்டம் அதற்கான தயாரிப்பு என்று மிக விரிவாகவே அவர்களை படம் பிடித்திருக்கிறார். Yakshagaana வில் சொல்லப்படும் கதைக்கும் படத்தின் மையதித்திற்கும் உள்ள தொடர்பை கவனியுங்கள். புலி ஆட்டக் காட்சிகள் புல்லரிக்க செய்யும். கதை உள்ளூரில் நடைபெறும் திருவிழா நாளில் நடப்பதால் இவையெல்லாம் இடம் பெற வேண்டும் என்று ரக்ஷித் ஷெட்டி முடிவு செய்தாராம்.

நான்காவதாக இசை. பாடல்கள், பின்னணி இசை இரண்டும் தமிழ், ஆங்கில படங்கள் மட்டுமே பார்க்கும் ரசிகர்களுக்கு புது விருந்தாக இருக்கும். சிறுவர்களின் ஜாலியான பாடல் ஒன்றும் உண்டு, மகன் வருகைக்காக காத்திருக்கும் அம்மா, காதலியை பின் தொடரும் நாயகன் என்று பின்னணியாக வரும் பாடல்களும் காட்சிகளை மெருகேற்றுகின்றன. இறுதியாக புலி ஆட்ட பாடலும், புலி வேடமிட்ட கலைஞர்களுடன் ரக்ஷித் ஷெட்டி ஆடுவதும் அதில் உள்ள பழங்குடி தன்மையும், அந்த மயக்கும் இசையும் இப்படியெல்லாம் இசை அமைக்க முடியுமா என்றே ஆச்சரியப்பட வைக்கும்.

ஒளிப்பதிவும் சிறப்பானதாகவே இருந்தது. படத்தில் குழப்பம் விளைவிப்பது journalist கதா பாத்திரம் தான். அவர் அத்தனை time line லும் வருகிறார். நல்ல வேளை இவருக்கு duet வைக்காமல் விட்டார்கள்.

இந்த படத்தை பார்ப்பதற்கு முன்னால் Pulp Fiction படத்தை மட்டுமாவது ஒரு முறை பாருங்கள். ஏன் என்று Ulidavaru Kandante பார்க்கும் போது புரியும்.

8 தோட்டாக்கள் படத்தின் இறுதியில் filmography என்று ஒரு பட்டியல் இருக்கும். அதில் உள்ள எந்த படத்தை பார்க்காதவர்களுக்கும் 8 தோட்டாக்கள் பிடித்திருக்கவே செய்தது. அது போலவே Ulidavaru Kandante ஒரு must see film. இங்கே reference படங்களாக சொல்லப்பட்ட படங்களை பார்க்காமலும் நீங்கள் பார்க்கலாம். ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.

Friday, 30 June 2017

இட்லி என்ன விலை?!


வாரத்திற்கு இரண்டு நாட்களுக்கு மேல் வீட்டில் இட்லி சாப்பிட நேரும் போது 'நான் என்ன காய்ச்ச காரனா, எப்ப பாத்தாலும் இட்லி செஞ்சுக்கிட்டு' என்று மனது உறுமும். உண்மையில் உறுமினால் அந்த இட்லியும் கிடைக்காமல் போக வாய்ப்பு இருப்பதால் போட்டதை சாப்பிட்டு விட்டு இடத்தை காலி செய்ய வேண்டும்.

பிறந்ததில் இருந்து அதிகமாக சாப்பிட்ட உணவு வகை இட்லியாகதான் இருக்கும். அது என்னமோ கிராமத்தில் வாழ்க்கையின் முதல் முப்பது வருடங்கள் இருந்து விட்டு நகரத்திற்கு இடம் பெயர்ந்த என்னை பெற்ற அம்மாவிற்கு, பிள்ளைகளுக்கு இட்லியும் தோசையும் கொடுத்து வளர்க்க வேண்டும் என்று தோன்றியிருக்கும் போல. 1992ல் Grinder வாங்கிய பிறகு அப்படி தோன்றா விட்டால் தான் ஆச்சரியம். வளரும் பையனுக்கு மதியமும் இட்லி தோசையாக கொடுத்ததால் எனது வளர்ச்சி பாதிக்கப்பட்டது என்பது எனது கண்டு பிடிப்பு.

Fridge வந்த பிறகு வீட்டில் செய்யும் இட்லி தோசையின் சுவை குறைந்து விட்டது என்று என் நாக்கு சொல்கிறது. Grinder வந்த போதே அது போய் விட்டது என்று என் தந்தை சொல்லக்கூடும். மாதத்தில் ஒரு நாளோ இரண்டு நாளோ இட்லி நன்றாக சுவைப்பதும் உண்டு. ஆனால் இந்த தோசை தான் non stick tawa என்ற பெயரில் எண்ணெய் இல்லாமல் சுடலாம் என்று இன்னும் சுவையிழந்து விட்டது. வீட்டில் சுடும் தோசை நாம் கடையில் சாப்பிடும் தோசை போல சுருட்டி ஒரே வாயில் சாப்பிடலாம் என்பது போல இருப்பதில்லை. தோசை கல் மேல் இன்னொரு கல் வைத்த மாதிரி தான் இருக்கும். அந்த ஒரு தோசைக்கு செலவு செய்யப்பட்ட மாவில் கடையில் 'நாலு nice' சுடுவார்கள்.

எனினும் கடைகளில் சாப்பிட நேரும் போது இட்லிக்கு தான் முதல் சலுகை. கடைகளில், அதாவது "உயர் தர சுத்த சைவ" உணவகங்களில்.

புரோட்டா கடைகளிலும் இட்லி செய்வது உண்டு. ஆனால் அங்கே சென்று இட்லி சாப்பிட்டால் நம்மை கோட்டிக்காரன் என்று கடை நடத்துபவனும், சாப்பிட வருபவனும் நினைக்க கூடும். புரோட்டா கடை என்பதே ஊரில் உள்ளவர்களின் பற்களையும், வயிற்றையும் சோதிக்கும் பொருட்டு தொடங்க பட்டது தானே!!

இட்லிக்கு திரும்புவோம். சைவ கடைகளில் இட்லி சாப்பிட்டாலும் நம்மை கஞ்சன் என்று முடிவு செய்து விட்டு தான் பரிமாறுவார்கள். ஏனென்றால் விலை குறைவானது. நாலு இட்லிக்கு மேல் முயன்றாலும் சாப்பிட முடியாது. மேலும் பெரிய 'உயரதர சுத்த சைவ உணவகங்களில்' இட்லி எப்போதும் ஆறிப்போய் தான் இருக்கும். பரிசாராகர் நமக்கு ரெண்டு இட்லி வைத்து விட்டு கொஞ்சம் விலை கூடிய ஒரு மசாலா தோசை, ரவா தோசை என்று வேறெதாவது பதார்தத்தை நம்மை சாப்பிட வைப்பதில் குறியாக இருப்பார். வேண்டாம் என்றாலும், 'வெறும் இட்லி மட்டும் தானா?!' என்று நம்மை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குவார்.

பின்னர் நாம் சாப்பிட்ட இட்லிக்கு விலையுடன் சேர்ந்து tips குடுக்க வேண்டும் என்று எதிர்பார்பார். சரி அம்மா உணவகம் என்று சொன்னார்களே அங்கே செய்யப்படும் இட்லி எப்படி சுவைக்கிறது என்று பார்க்க ஒரு நாள் சென்றேன். நான் எத்தனை குறைவாக சொல்கிறேனோ அத்தனை நல்லது. இட்லி 1 ரூபாய்க்கு தருவதனால் அதில் எந்த தரமும் இருக்க கூடாது என்பது தான் கொள்கை முடிவு போல. ஆனாலும் அதை பாத்திரங்களில் வாங்கி செல்பவர்கள் அனேகம். 5 ரூபாய் குடுத்து 5 இட்லி வாங்கினேன். ஒரு இட்லியை கூட சாப்பிட முடியவில்லை. இதெல்லாம் சாப்பிட்டு இத்தனை பேர் உயிர் வாழ்கிறார்கள் என்று அங்கே சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை பார்த்தேன். மனதை அந்த இட்லியை போல கடினமானதாக மாற்றிக்கொண்டு பற்களால் அதை நொறுக்கி முழுங்கி விட்டு, மீதியை கொட்டி விட்டு அங்கிருந்து எடுத்தேன் ஓட்டம்.

இட்லி, இடியாப்பம் போன்றவை எல்லாம் நாளும் சாப்பிடுவதற்கான ஒரு தேவையும் நியாமும் இல்லை தான். வாரத்தில் நான்கு வேளை என்பது அதிக பட்சம். ஆனாலும் நம்மூரில் இவர்கள் hotel நடத்தும் லட்சணத்திற்கு இட்லியை தான் நம்பி சாப்பிட முடியும். அது ஏன் அப்படி என்றால்?! அந்த இட்லி குழந்தைகளுக்காக வாங்கப்படலாம் என்ற நம்பிக்கையில் கலப்படம் இல்லாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதை கடை சாம்பாருக்கு சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

புரோட்டா திண்பவன் இட்லி திண்பவனை ஏளனமாய் பார்க்க எல்லா நியாமும் இருக்கிறது. ஆனாலும் இட்லி போல வருமா?!

இந்த நல்ல இட்லி தேடும் பயணத்தில் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரு கடையில் இட்லி சாப்பிட வாய்த்தது. கடை என்று சொல்ல முடியாது. நடைபாதை மேல் ஒரு மர மேசை, அதன் மேல் ஒரு pump செய்யக்கூடிய மண்ணெண்னை அடுப்பு. காற்று நெருப்பை அணைக்காமல் இருக்க சுற்றிலும் காலண்டர் அட்டை கொண்டு ஏற்படுத்த பட்ட தட்டி, தட்டியை காற்று நகர்த்தாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பாக தகர தட்டி, அடுப்பின் மேல் இட்லி கொப்பரை மற்றும் தோசை கல்.

அந்த கடையை நடத்தும் அக்காவிற்கு 2 அல்லது 3 பிள்ளைகள் இருக்கலாம். கணவர் இல்லை என்பது அவரை பார்த்த உடன் தெரிந்து விடும். நான் தினம் அவர் கடையை தாண்டி தான் நடந்து செல்வேன். கடைக்கு வரும் ஆண்கள் அனைவரையும் 'அண்ணே' என்றே அழைப்பார். மனம் கோணாமல் சட்னி, சாம்பார் என்று அள்ளி வைப்பார். பெரிய கடைகளில் கூட ஒரு தடவை கேட்டால் கொஞ்சம் முறைத்து கொண்டு வந்து வைப்பார்கள். இங்கே தேங்காய், தக்காளி சட்னி மற்றும் ஆவி பறக்கும் சாம்பார் கேட்கும் போதெல்லாம் வழங்கப்படும்.

அந்த சாலையில் மட்டும் இது போல 4 இட்லி கடைகள். அதில் இரண்டு பாட்டிகள் நடத்துபவை. சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் சுத்தம் பார்த்து விட்டு தவிர்த்து விட்டேன். ஒரு நாள் மட்டும் பணியாரம் வாங்கினேன். அதற்குள் அந்த பாட்டி சொந்த பேரனிடம் பேசுவது போல 'என்னய்யா 5 ருவாய்க்கு போதுமா?' என்று அக்கறையாக கேட்டார்.

மற்ற கடைகள் சலித்து விட, college கேன்டீன் வெறுத்தே விட்டது. Plastic paper ல் வைத்து தந்தாலும் பரவா இல்லை என்று இந்த அக்காவின் கடைக்கு சாப்பிட போனேன்.

தட்டில் இருந்து சுட சுட எடுத்து தந்தார். பசியில் 5 இட்லி சாப்பிட்டேன். உயர் தர சைவ உணவகத்தில் செய்யும் இட்லியின் அளவை விட பெரிதாகவே இருந்தது. அங்கே ரெண்டு சாப்பிடவே கண்ணு முழி பெரிதாகும் போது இங்கே 5 சாப்பிட்டு விட்டேன்.

கையை கழுவி விட்டு எவ்ளோ என்று கேட்டேன். 15 ரூபாய் என்றார். நான் மீண்டும் எவ்ளோ என்று கேட்டேன். என்னால் நம்ப முடியவில்லை. இந்நேரம் கடை போட்டு இலையில் பரிமாறியிருந்தால் இட்லிக்கு 10 ரூபாய் தாராளமாக வாங்கலாம்.

ஒரு இட்லி 3 ரூபாய்க்கு கிடைக்கிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அத்தனை சுவையாக, சூடாக. Plastic paper ல் தருவது தான் ஒரே குறை. எந்த கலப்படமும் இருந்தது போல தெரியவில்லை. இது எப்படி சாத்தியம்?! இவருக்கு லாபம் என்று ஏதேனும் இருக்குமா? இவருடைய உழைப்புக்கு ஊதியம் என்று இதில் எடுத்து வைக்க இருக்குமா? என்றெல்லாம் மனதில் கேள்விகள்.

கடையில் அவருடைய பிள்ளைகள் கூட உதவிக்கு நிற்பது இல்லை. தனியாக பரிமாறுவது, parcel கட்டி தருவது என்று அனைத்து வேலைகளையும் செய்வார். இதில் யாராவது 5 இட்லி சாப்பிட்டு விட்டு 100 ரூபாய் கொடுத்தால் அதற்கு சில்லறை மாற்ற அவரே செல்வார். முட்டை தோசை கேட்டால் பக்கத்தில் உள்ள கடைக்கு சென்று ஒரு முட்டை மட்டும் வாங்கி வருவார்.

காலை, மாலை இரண்டு வேளையும் கடை இருக்கும். எப்போது மாவு அரைப்பார், சட்னி, சாம்பார் எப்போது தயார் செய்வார், கடை எடுத்து வைத்து பாத்திரம் எப்போது கழுவி வைப்பார், பிள்ளைகள் உதவி செய்வார்களா, அல்லது ஏய்த்து விடுவார்களா? இப்படி கேள்விகள் தினம் ஒன்றாக மனதில் உதித்து கொண்டே இருக்கும்.

அடுத்த நாளும் சென்றேன். நம் வீடுகளில் இட்லி தட்டை எடுத்து அதை கவிழ்த்து தண்ணியை கோரி ஊத்தி கொண்டிருப்பார்கள். துணியையும் இட்லியையும் பிரிப்பதற்கு. ஆனால் இவர் அப்படி ஒன்றும் செய்யவில்லை. தட்டை கவிழ்த்து தனியாக எடுத்து விட்டார். இட்லி துணியை பிரித்து எடுக்கும் போது இட்லிகள் தட்டில் ஆவி பறக்க சுற்றி இருப்பவர்களை பார்த்து கொண்டிருந்தன.

இது எப்படி சாத்தியம்? எந்த அளவில் எதை கலந்து மாவு அரைத்தால் இப்படி இட்லி சுடலாம்? இல்லை இது என்ன அரிசி, உளுந்தின் கலவை? இப்படி தினம் கேள்விகள்.

கேள்விகளை பின்னர் மூட்டை கட்டி வைத்து விட்டு இட்லிகளை ருசிக்க ஆரம்பித்தேன். Plastic தாளில் தொடர்ந்து சாப்பிடுவது உறுத்தவே வீட்டில் இருந்து ஒரு tiffin box எடுத்து செல்ல ஆரம்பித்தேன். வாரத்திற்கு எப்படியும் இரண்டு நாளாவது அங்கே சாப்பிடுகிறேன். பணம் மிச்சமாவது மட்டுமல்ல நிறைவாக சாப்பிட்ட உணர்வும் இருக்கும். சில நாட்கள் tiffin box சகிதமாக கடை வரை சென்ற பின் கடை இல்லை என்று தெரிய வரும் போது ஊருக்கு போகும் கடைசி பேருந்தை விட்டது போல இருக்கும். சரி நாளைக்கு வருவோம் என்று சமாதானம் செய்து கொண்டு திரும்புவேன்.

நான் வேறே எங்கே இட்லி சாப்பிட்டாலும் மனம் ஒரு முறை அந்த இட்லியை இந்த அக்கா கடை இட்லியுடன் ஒப்பிட்டு கொள்கிறது. இந்த இட்லி கடை அனுபவத்தை சமூக, பொருளாதார, அரசியல் பார்வைகளில் எல்லாம் ஆராய்ச்சி பண்னுவது எப்படி என்று தெரியவில்லை. கடை இருக்கும் வரை பலரின் பசியை ஆகக்குறைந்த விலைக்கு ஆற்றுவார் என்பது மட்டும் புரிகிறது.

இட்லி நல்லது.

Monday, 29 May 2017

The Show Must Go On - புலி வால்

Gangster பற்றிய படமென்றால் சுவாரசியத்துக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் நிதர்சனத்தில் ஒரு gangster நிம்மதியாக வாழ முடியுமா?! எப்போதும் போலீஸ் பயம். எதிர் அணி குறித்த அச்சம். கூடே இருப்பவர்கள் காட்டி குடுத்து விடலாம். முதுகில் குத்தி விடலாம். உயிருக்கு உத்திரவாதம் இல்லை.

படங்களில் ஒரு Gangster கதா நாயகனாக வரும் போது சில template விசயங்கள் இருக்கும். அதை தாண்டி படத்தில் என்ன இருக்கிறது என்பது தான் நினைவில் வைக்க வேண்டிய Gangster படமா இல்லையா என்பதை முடிவு செய்யும்.

The Show Must Go On நடுத்தர வயதை அடைந்து விட்ட ஒரு Gangster பற்றிய படம்.  குடும்பத்தை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும், பிள்ளைகளை கனடா அனுப்பி படிக்க வைக்க வேண்டும், தண்ணிர் தீடீர் என்று நின்று போகாத அளவுக்கு ஒரு வசதியான வீடு வேண்டும் என்று நாயகனுக்கு தேவைகள் எறும்புகள் போல வரிசை கட்டி வருகின்றன.

கதா நாயகன் In-goo தனது Boss உத்தரவின் பேரில் ஒரு கட்டிட காண்ட்ராக்ட் உரிமையை ஏலம் எடுத்தவரிடம் இருந்து அடித்து வாங்குகிறான். இதில் வரும் பணத்தில் நிம்மதியாக settle ஆவது திட்டம். ஆனால் அதில் ஆயிரம் பிரச்சினைகள் முளைக்கின்றன.

Boss ன் தம்பி In-goo விடம் பங்கு கேட்கிறான். வேலையும் தொடர்ந்து நடக்காமல் தொய்வடைகிறது. இதற்கிடையில் எதிர் அணியை சேர்ந்த ஆனால் In-goo வின் நெருங்கிய நண்பன் contract குறித்து In-goo விடம் விசாரிக்கிறான். தன்னோடு வந்து விடுமாறும் அழைக்கிறான்.

In-goo மீது ஒரு கொலை முயற்சி நடக்க வாழ்க்கை தலை கீழாக மாறி விடுகிறது. தன் மீது தனது மனைவி, மகள் கொண்டுள்ள நம்பிக்கை குறைந்து வருகிறது என்பதை உணர்கிறான். வயதாகி வருவதையும் இளம் வயதில் மல்லுகட்டி சண்டை போட்டது போல இப்போது முடியவில்லை என்பதையும் உணர்கிறான்.

In-goo தோன்றும் காட்சிகள் பெரும்பாலும் In-goo தூங்கி விழுவது போன்றே ஆரம்பிக்கின்றன. போதுமான ஓய்வு இல்லை, Boss, பணம், குடும்பத்தின் மீது இருக்கும் அக்கறை தன் மீது இல்லை. ஏன் தன்னுடைய Boss மீது அத்தனை விசுவாசம் என்பதை தனது நண்பனிடம் சொல்கிறான். ஆனால் விசுவாசத்திற்கு மதிப்பு இல்லை என்று உணரும் நாள் வரும் என்பதை In-goo அறிவதில்லை.

கொரியா படங்களில் சிறப்பம்சமான காட்சியமைப்பு இந்த படத்தின் பெரும்பலம். Action காட்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளன.

In-goo வாக நடித்திருக்கும் Sang Kang-ho தற்கால தென் கொரிய நடிகர்களில் மிக பிரபலமானவர். Gangster ஆக நடித்தாலும் பார்வையாளர்களை கண்ணில் நீர் வர சிரிக்க வைக்கும் காட்சிகளிலும் வெளுத்து வாங்குவார். குடும்ப தலைவனாக நம் கண்களை குளமாக்குவார்.

The Show Must Go On நிச்சயம் ஒரு தனித்துவமான Gangster படம். கதா நாயகன் In-gooவை சுற்றியே கதை நகர்கிறது. In-goo வின் செயல்களும் அதன் எதிர் வினைகளுமே படம். ஆனாலும் In-goo வின் மனைவி, மகள், நண்பன், Boss மற்றும் அவருடைய தம்பி என்று திரையில் தோன்றும் அனைவரும் அட்டகாசமான ஒரு performance குடுத்து விட்டு போகிறார்கள்.

புலிவாலை பிடித்தவன் அவ்வளவு எளிதாக அதை விட்டு விட முடியாது. ஒரு Gangster என்பவன் புலிவாலை பிடித்து கொண்டிருப்பவன். அமைதியாக வாழ வேண்டும் என்ற கனவு கானல் நீர் போல தோன்றி மறையும். இங்கே In-goo எதை இழந்து எதை பெற்றார் என்பதே The Show Must Go On.




Sunday, 28 May 2017

The Salesman - இன்னா செய்தாரை...


Revenge is a dish best served cold என்று Kill Bill படம் துவங்கும் போது ஒரு மேற்கோள் வரும். Tarantino பாணி என்று உலகம் முழுதும் படம் எடுக்கும் அளவுக்கு Tarantino வின் புகழ் நிலைத்து நிற்பதற்கு அந்த இரண்டு Kill Bill படங்களுக்கும் முக்கிய பங்குண்டு. ஆனால் அந்த படங்கள் நன்றாக திட்டமிட்டு எடுக்க பட்ட grand spectacle தானே தவிர்த்து அவற்றில் ஆன்மா இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இங்கே ஈரான் நாட்டு திரைப்படமான The Salesman ல் ஒரு பழி வாங்கும் கதை உள்ளது ஆனால் படத்தின் மையம் அதுவல்ல.

Rang De Basanti படத்தில் வரும் கதா பாத்திரங்கள் படத்திற்குள்ளே எடுக்கப்படும் படத்தில் மைய கதா பாத்திரங்களாக நடிக்க அது அவர்களின் வாழ்க்கையை மாற்றிவிடும். Birdman படத்திலும் மேடை நாடகமும் அதை இயக்கி நடிக்க நினைக்கும் நடிகரின் வாழ்க்கையும் பின்னி பிணைந்து நகரும்.

The Salesman படத்தில் America வாழ்க்கையை பிரதிபலிக்கும் Death of a Salesman என்ற மேடை நாடகத்தில் படத்தின் மைய கதா பாத்திரங்கள் நடிக்கின்றனர். மேடை நாடக காட்சிகளும் அவர்களின் வாழ்க்கையும் மாறி மாறி வருகின்றன.

கதா நாயகன் Emad கல்லூரி ஆசிரியர். நாடகத்தில் நடிப்பதை ஒரு hobby யாக செய்கிறார். அவரது மனைவிக்கும் நாடகத்தில் நடிப்பதில் விருப்பம் என்பதால் இருவரும் சேர்ந்து பங்கு கொள்கிறார்கள்.

மேல்நடுத்தர வகுப்பை சேர்ந்த அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வீடு அருகில் நடக்கும் கட்டிட வேலை காரணமாக அஸ்திவாரம் ஆட்டம் கண்டு விரிசல் விடுகிறது. நாடகக்குழு நண்பர் தன்னிடம் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீடு இருப்பதாக கூறி அவர்களை அங்கே குடியமர்த்துகிறார். அந்த வீட்டில் ஒரு அறை அடைத்து வைக்க பட்டிருக்கிறது. அதில் முன்னே இருந்தவரின் பொருள் இருப்பதாகவும் அவர் விரைவில் வந்து எடுத்து கொள்வார் என்றும் நண்பர் சொல்கிறார்.

ஆங்கிலத்தில் Pandora's Box என்று சொல்வார்கள். அந்த அறை Pandora's Box ஆக உருக்கொள்கிறது. அதாவது அதை திறக்க போக அதில் இருந்து பல பிரச்சினைகள் முளைக்கின்றன. அந்த அறையில் இருந்த பொருளை அப்புறப்படுத்தி இவர்கள் பொருட்களை அடுக்கி வைக்கிறார்கள்.

அடுத்த நாள் யாரும் எதிர்பார்க்காத அசம்பாவிதம் நடந்து விடுகிறது. கணவனும் மனைவியும் இதை யாருக்கும் தெரியாமல் மறைத்து விடுவதே சிறந்தது என்ற முடிவுக்கு வருகிறார்கள். ஆனாலும் கணவனால் அதை கடந்து போக முடியவில்லை.

அசம்பாவிதத்திற்கு காரணமான நபரை கண்டு பிடிக்க அத்தனை வழிகளிலும் முயற்சி செய்கிறான். இது அவர்கள் வாழ்க்கையில் குழப்பத்தை கொண்டு வருகிறது.

ஈரான் நாட்டு படங்கள் எப்போதும் இயல்பிற்கு பக்கத்திலேயே இருக்கும். The Salesman படமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் Death of a Salesman மேடை நாடகம், 3Act Structure என்று இருக்கும் reference மேற்குலக பார்வையாளர்களை மனதில் வைத்தே எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. குறிப்பாக Oscar விருதுகள். ஆனால் படத்தின் இயக்குனர் விருது வழங்கும் விழாவை புறக்கணிக்கும் அளவிற்கு அமெரிக்க அரசியல் மாறியது நகை முரண்.

படம் மெதுவாக நகர்ந்தாலும் இருக்கையின் நுனியில் அமரவைக்கும் காட்சிகளும், அவற்றில் நடிகர்களின் gripping performance ம் உண்டு. படத்தில் Emad ஆக நடித்திருக்கும் நடிகர், அவரின் மனைவி Rana வாக நடித்திருக்கும் நடிகையும் சமகால ஈரானிய சினிமாவின் பிரபல முகங்கள்.

இயக்குனர் Asghar Farhadi ஏற்கனவே தன்னுடைய A Separation படத்திற்காக Oscar விருது பெற்றவர். About Elly, The Past போன்றவை குறிப்பிட தகுந்த படங்கள். அனைத்தும் பெண்களின் துன்பங்களையே பேசுகின்றன. ஆனால் நம் நெடுந்தொடர் கொடுமையெல்லாம் இல்லை. தனக்கு நேர்ந்த அநீதியை வெளியில் சொல்ல தயங்கும் நிலையை உருவாக்கிய கலாச்சார வறுமையை அவை பதிவு செய்கின்றன. இது ஏன் இப்படி நடக்கிறது என்று நம்மை சிந்திக்க வைக்கின்றன.

The Salesman படத்தில் மௌனமான காட்சிகள் கதைகளை சொல்கின்றன. நடக்க போகும் நிகழ்வுகளை முன்னறிவிப்பதாக அவை வருகின்றன. வன்முறை நடந்து முடிந்த இடம் மட்டுமே நமக்கு காண்பிக்க படுகிறது. வன்முறை அல்ல.

The Salesman திரைப்படத்தோடு நம் நாட்டில் இருந்து விசாரணை படமும் போட்டி போட்டது. விசாரணை The Salesman படத்தோடு எந்த வகையிலும் குறைந்த படமில்லை என்றாலும் ஈரானிய படங்களுக்கு முன்னோடிகள் அமைத்து தந்த பாதை இருப்பதால் அவர்கள் வெற்றியை நோக்கி எளிதாக சென்று விடுகிறார்கள். மேலும் அவர்கள் அனைத்து வயது பார்வையாளர்களுக்கும் ஏற்ற மாதிரியும் படம் எடுக்கிறார்கள்.

Asghar Farhadi தற்கால ஈரானிய சமூகத்தில் கணவன் மனைவிக்கிடையே நிகளும் முரண்பாடுகள், அதனால் எழும் சிக்கல்கள், கருத்து வேறுபாடுகள், பெண்களின் மனப் போராட்டம் ஆகியவற்றையே படங்களாக எடுக்கிறார். குழந்தைகளை மைய கதா பாத்திரங்களாக வைத்து படங்கள் எடுத்து சர்வ தேச சமூகத்தை திரும்பி பார்க்க வைத்தவர்கள் இப்போது தங்களது சமூகத்தின் சிக்கலான பக்கங்களை படங்களாக எடுக்க ஆரம்பித்து விட்டனர்.