Saturday, 27 May 2017

கங்காணி

'மிஸ்டர் ராஜா, இங்க வாங்க'

கல்லை கையில் வைத்திருப்பவனிடம் நாய் பம்முவதை போல கொஞ்சம் பம்மிய ராஜா 'சொல்லுங்க சார்'

'அப்புறம் கிளாஸ்லாம் எப்படி போகுது?'

'நல்லா போகுது சார், ஆனா எப்படியும் பாதிக்கு பாதி arrear வைக்க போறாங்க'

'என்ன ராஜா இப்படி சொல்றீங்க?! அவங்க arrear வச்சா மெமோ உங்களுக்கு தான்'

'ஆமா, சார்'

'Essay எல்லாம் குடுத்து மனப்பாடம் பண்ணி எழுத வைங்க'

'வச்சிட்டு தான் சார் இருக்கேன்'

'பசங்க கிட்ட ரெம்ப friendlyயா இருக்கீங்க போல?!'

'அப்படியெல்லாம் இல்லையே சார்!'

'ராஜா சார், இங்க உள்ள பசங்கள கிளாஸ்ல வச்சி அவமான படுத்தனும், அசிங்க படுத்தனும், அப்ப தான் அவன் ஒழுங்கா இருப்பான். பிள்ளைங்க முன்னாடி அசிங்க பட்ருவோம் அப்டின்னு ஒரு பயம் இருக்கும். அதே மாதிரி பிள்ளைங்களையும் நல்லா திட்டணும் அப்போ தான் சும்மா சும்மா பல்லை காட்டாமா ஒழுங்கா இருப்பாங்க.'

'அது, அது நான் திட்ட தான் செய்யிறேன் சார், ஆனா'

'ராஜா, பயப்படக்கூடாது, பயந்தா வேலை பார்க்க முடியாது'

இவருடன் பேசும் போதெல்லாம் மனுசனை கிறுக்காக்கிறார் என்று நினைத்து கொண்டு, வாறேன் சார் என்று நடையை கட்டினார் ராஜா. 

மேற்கண்ட உரையாடலில் நீங்க சந்தித்த அந்த மற்றுமொரு ஆளுமை,
மூக்கு தூக்கி. கூஜா தூக்கி தெரியும் அது என்ன மூக்கு தூக்கி?! ஐந்தரை அடி உயர போண்டாவை நினைவு படுத்தும் உருவத்தை உடைய மேதகு பேராசிரியர் பாண்டிக்குமார் அவர்களின் பட்டை பெயர்களில் ஒன்று தான் மூக்கு தூக்கி. குள்ள நரி, போண்டா, DSP, PPK, ஆட்டு உரல் போன்றவை வெவ்வேறு மாணவர்களால் வெவ்வேறு காலங்களில் சூட்டப்பட்ட பெயர்கள். இன்னும் பல உண்டு அவற்றை நீங்கள் யூகித்து கொள்ளவும்.

தீக்குச்சி முனையில் இருக்கும் மருந்து அளவுக்கு கூட மானம் அவமானம் இல்லாத ஒரு குணச்சித்திரம் பாண்டிக் குமாருடையது. அவரை போல நாலு பேரை சேர்த்தால் இதிகாசம் எழுதலாம் தான் ஆனால் இது Mr. மூக்கு தூக்கியை பற்றிய சிறு குறிப்பு மட்டுமே.

மாணவர்கள் வாயில் தண்ணீரை வைத்து கொப்பளித்து கொண்டு இருக்கும் போது வாய்க்குள் என்ன என்று கேட்பார். பல்வழியில் ஒரு பக்கம் வாய் வீங்கியவனை அழைத்து வீங்கிய இடத்தில் ஆள் காட்டி விரலை வைத்து அழுத்தி 'உள்ள போயலை வச்சிருக்கியா' என்பார். ஒழுக்கம் தான் ஒருவனை உயர்த்தும் என்று பேசி விட்டு டீக்கடை சந்தில் நின்று வெள்ளைப்பீடி குடிப்பார்.

வேலை செய்யும் கல்லூரியில் பல நூதனமான, மாணவர்கள் மொழியில் கேனைத்தனமான விதிமுறைகளை அமுல் படுத்துவதற்கு கண் அயராமல் உழைப்பவர். பேராசிரிய புள்ளிகளுக்கு Whatsapp group ஆரம்பித்து அதில் துறை தலைவர்களை மட்டும் admin ஆக்குவார். 'Hierarchy maintain' பண்ணனும் என்று சாணக்கியத்தனம் செய்வார். கல்லூரி முதல்வர், செயலர் என்று வெள்ளை சட்டையை பார்த்த உடன் தண்டால் எடுப்பார். அவர்களின் கார் டயருக்கு கீழ் எலுமிச்சைக்கு பதில் தன் தலையை வைக்க தயாராக இருப்பதாக (பொய் தான்) சொல்லி வைப்பார்.

சுற்றலா சென்ற இடத்தில் எடுத்த புகைப்படத்தை குரூப்பில் பகிர்ந்து விட்டு யாரெல்லாம் என்னலாம் பதில் போடுகிறார்கள் என்று பார்ப்பார். பின்னர் புகைப்படத்தை பார்த்தவர்கள் எத்தனை பேர் பதில் போட்டவர்கள் எத்தனை பேர் என்று புலன் விசாரணை செய்வார். எல்லா பிரச்சினைக்கும் தீர்வு வைத்திருப்பார். இல்லை தீர்வுகளை கைவசம் வைத்துக்கொண்டு பிரச்சினைகளை உருவாக்குவார்.

மைக் கையில் கிடைத்தால், பாட்டு பாடுவது, சொற்பொழிவு, செய்தி வாசிப்பது, பிச்சை கேட்பது என்று குரலை ஏற்றி இறக்கி பேசுவார். ரத்த தானம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை தனது வாழ் நாள் லட்சியமாக கொண்டு செயல்பட்டு கொண்டிருப்பதாக காட்டிக்கொள்வார். ரத்தம் தேவை என்றால் தனது கிட்னியில் ஒன்றை கொடுத்தாவது நாம் கேட்ட ரத்த பிரிவை கொண்டு வந்துவிடுவார். இந்த ஒரு குணத்திற்காக இவருடைய பிற பாவங்கள் மன்னிக்கப்பட்டு சொர்க்கத்தில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

பெஞ்சில் சினிமா நடிகன், நடிகை பேருக்கு பதிலாக தங்களது அம்மா பெயரை மாணவர்கள் எழுத வேண்டும் என்று விபரீத யோசனைகள் சொல்வது இவருக்கு மூச்சு விடுவது போல மிக எளிதாக தோன்றக் கூடிய விசயங்கள். சினிமா, நெடுந்தொடர், பட்டி மன்றம், சூப்பர் சிங்கர் என்று அனைத்தையும் பார்ப்பதால் இவர் பேசும் போது ஏதோ டிவி நிகழ்ச்சியை பார்ப்பது போலவே இருக்கும். சில நிகழ்ச்சிகளில் பேச முயற்சி செய்ததாகவும் அங்கே இவரை விட மண்டை குறைந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க படுவதை கண்டு கொதித்தெழுந்து இனிமேல் இப்படி நிகழ்ச்சிகளுக்கு முயற்சி செய்வது இல்லை என்று முடிவு எடுத்ததாக அவருடைய நெருங்கிய நண்பர்கள் சொல்கின்றனர்.

மாணவர்கள் தன்னை எப்படி புகழ வேண்டும் என்று எதிர்பார்கிறாரோ அது போலவே கல்லூரியில் தனக்கு மேலே உள்ள புள்ளி ராஜாக்களை புகழ்ந்து பேசுவார். கல்லூரியின் நலனை காக்க ஒரு வித தற்கொலை தன்மையுடன் செயல் படுவார். இல்லை, அப்படி காட்டிக் கொள்வார். தன் அளவுக்கு கல்லூரியில் உள்ள மற்ற பேராசிரியர்கள் மாணவர்களை 'நல்வழி படுத்துவதில்' அக்கறை காட்டுவதில்லை என்று புறம் கூறுவார். நேரில் கூறி யாரும் மூக்கை உடைத்து விட்டால் என்ற முன் யோசனை தான்.

அப்படியே யாரேனும் மூக்கை உடைத்தால் கூட மறுநாள் பார்த்த உடன் ஒரு வணக்கம் சொல்வார். பணிந்து பணிந்து ஒருவனை ஒன்றும் இல்லாமல் ஆக்குவது அவருக்கு காலையில் இட்லி சாப்பிடுவது போல எளிதான ஒன்று.

மற்றவருடன் பேசுவாறே தவிர உரையாடல் என்பது பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது. அவருடைய பெற்றோர் பள்ளி ஆசிரியர்கள் என்பதற்கும் அவர் இப்படி ஆனதிற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா என்று யாராவது ஆராய்ச்சி செய்வது மனிதகுலத்திற்கு புதிய வகை சிந்தனையை உருவாக்க உதவியாக இருக்கும்.

தனக்கு தெரியாத விசயம் இல்லை, தான் பிடித்த நாய்க்கு ஐந்து கால் என்று கொள்கைப் பிடிப்பில் உறுதியாக இருப்பார். இந்த விசயத்தில் அவர் 'பால் வண்ணம் பிள்ளை'க்கு பங்காளி. நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு நான் சொல்வது மிகச்சரி என்று நிறுவிக்கொண்டே இருப்பார். மறுத்து பேசுபவர்களை, மாற்று கருத்து உடையவர்களை, சுயமாக சிந்திக்க கூடியவர்களை கண்டால் பருந்தை கண்ட காக்க கதறுவது போல கதறுவார். அப்படி சிந்திப்பவர்கள் கல்லூரியின் கலாச்சாரத்திற்கு ஊறு விளைவிப்பவர்கள் என்று கோட்பாடுகளை உருவாக்குவார்.

தன்னுடைய துறையில் தனக்கு கீழ் பணியாற்றும் பேராசிரியர் தன் சொல் கேட்டு நடக்கும் படி பார்த்துக்கொள்வார். அதாவது அந்த நபர் இவருக்கு தெரியாமல் ஒன்றுக்கு கூட போக முடியாது. அப்படி வளைந்து குடுக்க தெரியாத யாராவது வந்தால் 'உனக்கு இந்த கல்லூரியில் பேராசிரியர் ஆகும் தகுதி இல்லை' என்று தன்னம்பிக்கையை குலைக்கும் வேலையை பார்ப்பார். கீழ்ப்படிய கற்றுக்கொள் கட்டளையிடும் பதவி தேடி வரும் என்று விவேகானந்தர் சொன்னதாக மேற்கோள் காட்டி புத்தி ஜீவி வேசம் கட்டுவார்.

இவருக்கு கீழ் துறையில் இருக்கும் அனைவருக்கும் இவர் மீது கொலை வெறியில் இருந்தாலும் வேறு வழியில்லாமல் ஆமாம் போட்டு கொண்டு இருப்பார்கள். நிர்வாகத்துடன் தான் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக பிரமையை உருவாக்குவார். நிர்வாகம் என்பது தனக்கு துதி பாடும் நபர்களை அருகில் வைத்து கொண்டு செயல்படும் ஒரு அபத்த நாடக அமைப்பு. அதில் போண்டா போன்ற ஆட்களுக்கு குணச்சித்திர வேசம் என்பது ஒரு உலக உண்மை. கதா நாயகன் என்பவன் சினிமாவில் மட்டும் தான் இங்கே எல்லாரும் குணச்சித்திரம் தான்.

ஆண்கள் மட்டும் குழிமியிருக்கும் போது இவர் பேசுவதை பதிவு செய்து இவரது மனைவியிடம் காட்டினால் அவர் கேட்ட அடுத்த நொடி இவரை விவாகரத்து செய்ய விட முடிவு எடுத்து விடுவார். அப்படி செய்யவில்லை என்றால் மறுநாள் தினத்தந்தியில் மூன்றாம் பக்கத்தில் கலர் போட்டோவுடன் செய்தி எதிர்பார்க்கலாம்.  இவருடைய நண்பர்களின் பேச்சின் பதிவு அவர்களின்  மனைவியையும் அத்தகைய முடிவை எடுக்க வைக்கும்என்பதை இங்கே கூற தேவையில்லை. பிறகு தினத்தந்தி காட்டில் அடை மழை.

காதல் விவகாரங்களை பஞ்சாயத்து செய்வது என்பது கரும்பு சாப்பிடுவது போல கடித்து, சுவைத்து, ரசித்து, ருசித்து செய்வார். எந்த பையானவது போன் கொண்டு வந்து மாட்டிக்கொண்டால் உடனே whatsapp, facebook எல்லாத்தையும் check செய்வார். சக மாணவியிடம் பையன் பேசினால் அவனுக்கு facebook account இருக்கிறதா என்று கேட்டு அதன் id மற்றும் password கேட்பார். அதற்கு அந்த பையன் இவரை என்ன மாதிரி கேள்வி கேட்டாலும் அசர மாட்டார்.

பையன் தன் சாதி என்றால் ஒரு மாதிரியும் பிற சாதி என்றால் வேறு மாதிரியும் நடத்துவார். கொஞ்சம் அரசியல் தொடர்புள்ள மாணவர்கள் என்றால் அப்படியே பம்முவார். டிவியில் வரும் சாதி சார்ந்த நிகழ்ச்சிகளில் தனது மாணவர்கள் படம் வந்தால் அறச்சீற்றம் கொள்வார். தனது ஏரியா கோயில் சமாச்சாரங்களில் தனது பங்களிப்பு இருப்பது எல்லாருக்கும் தெரியும் படி பார்த்துக் கொள்வார்.

மாணவிகளை அண்ணனோ, தம்பியோ அழைக்க வந்தால் 'நீ அண்ணன், தம்பிங்கிறது எங்களுக்கு எப்படி தெரியும்?!, அந்த பெண்ணை கூப்பிடுங்க ஒரு enquiry போட்டா தான் சரி வரும்' என்று ஊதி பெரிசாக்கி அவர்கள் 'நீ வெளிய வா உன்னை மாறு கால் மாறு கை வாங்குறோம்' என்று மிரட்டும் அளவுக்கு பெரிதாக்குவார்.

உடன் வேலை பார்க்கும் சக பேராசிரியர்கள் அது நடக்கும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு முறை இந்த போண்டா யாருடனாவது சிலுவை இழுக்கும் போது முதல் அடியை யாராவது அடிக்க மாட்டார்களா என்று மொத்த கல்லூரியும் எதிர் பார்க்கும்.

மாணவர்கள் footboard அடிப்பது பற்றி வாய் கிழிய பேசி அனைத்து பேராசிரியர்களும் footboard அடிக்கும் மாணவர்களை கையும் களவுமாக photo எடுத்து வர வேண்டும் என்று கல்லூரியில் இருக்கும் cctv யை பேராசிரியர்கள் வாங்கி வைத்திருக்கும் சீன போனுக்கும் extend பண்ணுவார். மாணவர்கள் படம் பிடிக்க பட்டது தெரிந்து உடனே சட்டையை பிற துறை மாணவருடன் மாற்றி விட்டு 'பாருங்க போட்டோல நான் இந்த சட்டையா போட்ருக்கேன்?!' என்று தப்புவார்கள்.

பேராசிரியர்களுடன் மாணவர்கள் நெருங்கி பழகினாலோ, காணும் போது எல்லாம் வணக்கம் சொன்னாலோ அந்த பேராசிரியர் மாணவர்களுக்கு அதிக இடம் தருவதாக கருத்து சொல்வார். இப்படி ஆசிரியர் மாணவருடன் பழகினால் 'discipline problem' வரும் என்று விளக்குவார்.

இப்படி பட்ட பாண்டிக்குமார் அன்று காலை மாணவர்களை மேய்க்கும் வேலையில் மும்முரமாக ஈடு பட்டிருந்தார். அப்போது முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்கும் Dany பைக்கில் இருந்து இறங்கி தன்னைப்போல வகுப்பை நோக்கி நடந்து கொண்டிருந்தான். பையன் கொஞ்சம் style பேர்வழி. கொஞ்சம் hippy போல தலை முடி வைத்து அரும்பு மீசையை முறுக்கி விட்ருந்தான். அது அவன் முகத்துக்கு ஒரு நகைச்சுவை தன்மையை கொடுத்தாலும் மிஸ்டர் மூக்கு தூக்கியின் கண்களுக்கு 'விதி மீறலாக' பட்டது.

Hitler போன்ற நபர்களை கொண்டாடும் இந்திய சமூகத்தில் பாண்டிக்குமார் போன்ற ஆட்கள் தாங்கள் செய்யும் செயல்களுக்கு நிர்வாக அளவில் முழு அங்கீகாரம் பெறுகின்றனர். 'அப்ப காந்தி' என்று உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை. ஒரு தனி நபரின் கெட்ட வார்த்தை இருப்பை கண்டு பிடிக்க நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அவரிடம் காந்தியை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்க வேண்டியது மட்டுமே.

இப்படி மயிர் விசயம் வரை கவனிக்கும் மூக்கு தூக்கி Dany யை நிப்பாட்டி விசாரிக்க தொடங்கினார்.

"இங்க வா, உன் பேர் என்ன?"

"Dany, சார்"

"இது என்ன முடி இவ்ளோ style அ இருக்கு?"

"வெட்டணும் சார்"

"அது என்ன முறுக்கு மீசை?"

இதற்குள் Dany முகமெல்லாம் படரும் சிரிப்பை மறைத்துக்கொண்டு, "எடுக்கணும் சார்"

"எந்த department?"

"MA English"

"உங்க departmentla இதெல்லாம் கேக்க மாட்டாங்களா?"

இலக்கியம் படிச்சவங்க இங்கிதம், நுண்ணுணர்வு உள்ளவங்க உன்னைய மாதிரியா மயிர் ஆராய்ச்சி பண்ணுவாங்க என்று நினைத்து கொண்டு "சொன்னாங்க சார், இந்த Sunday எடுத்திருவேன் சார்"

"திங்கள் கிழமை நான் வந்து பார்ப்பேன்"

"சரி, சார்"

Dany நடையை கட்ட, போண்டா நேராக அருகில் உள்ள நூலகத்தில் இருந்த intercom நோக்கி நடந்தார். ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை கண்டுபிடித்தவர் இப்படியெல்லாம் பயன்படுத்தப்படும் என்று தெரிந்திருந்தால் இதை நான் கண்டு பிடித்தே இருக்க மாட்டேன் என்று வருந்தும் அளவுக்கு இந்தியர்கள் அக்கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவதில் நிபுணர்கள்.

நேராக சென்று பேசக்கூடிய அளவுக்கு இது ஒரு விஷயமல்ல என்று மிஸ்டர் போண்டாவிற்கு தெரியும் அதனால் தான் intercom. போனை எடுத்து ஆங்கில துறை நம்பரை அழுத்தினார். மறுமுனையில் ஆங்கில துறை பேராசிரியர் கருப்பசாமி பேசினார்.

தமிழ் நாட்டு அரசியல் வாதிகளின் குரலில் தேர்தல் நேர தீவிரத் தன்மை போல பாண்டிக்குமார் புகார் சொல்வதற்கு, புரணி பேசுவதற்கு, யாராவது அடிக்க வரும் போது சமாளிப்பதற்கு என்று வெவ்வேறு குரல் வைத்திருக்கிறார்.

இதில் முதல் வகை குரலோடு

"சார், நான் பாண்டிக்குமார் பேசுறேன்"

"சொல்லுங்க சார், நான் கருப்பசாமி"

"உங்க departmentல" என்று மொத்த கதையை மிக தீவிரமான ஒரு தொனியில் சொல்லி முடித்தார்.

"நான் சத்தம் போடுறேன், சார்" என்று கருப்பசாமி போனை வைத்தார்.

இப்ப அந்த பையன் முடியை எடுக்காட்டி நாளப்பின்ன நடக்கிற hod மீட்டிங்ல போண்டாவுக்கு பேசு பொருள் இது தான் என்று கருப்பசாமி யோசித்தார். சரி நாமளும் சொல்லிட்டு class incharge மதன் குமார் கிட்டயும் சொல்லி சொல்ல சொல்லுவோம் என்று முடிவு செய்து விட்டு வேலையில் மூழ்கினார்.

விசயம் கேள்விப்பட்ட மதன் "ஆமா பிள்ளைக ரெண்டு அடி நீளத்திற்கு முடி வளர்க்கும் போது நம்ம பய ரெண்டு இஞ்சு கூட வளர்த்தா என்ன?" என்று கடுப்பு காட்டினார். Dany யிடம் "அந்த ஆள் எப்ப கேட்டாலும் மொட்டை போட முடி வளர்க்கிறேன் அப்டின்னு சொல்லு, கேக்கும் போதெல்லாம் சொல்லு"
சரியென்று விட்டு Dany நகர்ந்தான்.

"ஏன் மதனு, இந்த 'ஆமை' மாதிரி ஆட்களை என்ன பண்றது?!"

"என்ன சிலையா வைப்பாங்க?!, என்னைக்காவது எந்த பையானவது கல்லைக்கொண்டி எறியப்போறான்"

"ஒரு உப்பு கல்லுக்கு பெறாத விசயம்"

"குறைகுடம் கூத்தாடும்னு நம்ம ஆட்கள் சும்மாவா சொல்லிட்டு போயிருக்காங்க"

"சரி நம்மள பத்தி இந்த மூக்கு தூக்கி என்னலாமோ சொல்லிட்டான், இதென்ன மயிர் விசயம்"

"ஆமா, விட்டுத்தள்ளுங்க"

இதற்கிடையில் போண்டா யாரையாவது ரெண்டு பேரை fine கட்ட வைக்கணும் என்று மாணவர்களின் கழுத்து, தலை, கை என்று 'ஒழுக்க விதிகளை மீறும்' கயிறு, செயின், மோதிரம் என்று துருவும் போது இரண்டு மாணவிகள் நூலகம் நோக்கி வருகின்றனர்.

"ஹல்லோ, இங்க வாங்க"

"குட் மார்னிங் சார்" என்று ஒரே குரலில் வணக்கம் செலுத்தினர்.

"ID கார்டை கொண்டங்க"

"எதுக்கு சார்?!"

"நீங்க dress code violation, நீங்க free hair அதுக்கு தான்"

"சார், நான் இப்ப rest room போய் shawl v shapela போட்டு pin குத்திடுவேன், சார்!!!"

"சார், தலை காயவும் ஜடை பின்னுடுவேன் சார்"

"அதெல்லாம் எனக்கு தெரியாது, ஒழுங்கா கார்டை கழட்டி குடுத்துட்டு போய் fine கட்டுங்க"

இப்படி ஒரு சந்தர்பத்திற்கு காத்திருந்தது போல மாணவிகளில் ஒருத்தி, "என் தலைல பேன் பாருங்க, நான் வேணா அதுக்கு சம்பளம் தாறேன்" என்று ஒரு வீசு வீசினாள்.

கண்கள் சிவக்க, காது, கன்னம் துடிக்க பாண்டிக்குமார், "ஏம்மா, ஒரு staff கிட்ட பேசுற மாதிரியா பேசுற???"

"நீங்க மட்டும் ஒரு ஸ்டுடன்ட்டை நடத்திற மாதிரியா நடத்துறீங்க"

"இதெல்லாம் சரி வராது, எந்த dept நீ?"

"எந்த department அ இருந்த என்ன?, அது என்ன பொம்பள பிள்ளைக shawl, தலை முடி பத்தி நீங்க கேக்குறது, எத்தன மேடம் இருக்காங்க அவங்க கிட்ட சொல்லி கேக்க வேண்டியது தான?"

"என்னமா ரெம்ப பேசுற? College rulesலாம் தெரியாத உனக்கு?"

"எல்லாம் எங்களுக்கு தெரியும், நீங்க முதல்ல ஒழுக்கமா நடந்துக்கோங்க"

"ஓ, ஒழுக்கத்தை பத்தி எனக்கு நீ சொல்லி தாரியா?!!!"

"நீங்க என்ன ஒழுக்கத்தை மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கீங்களா??!!"

"என்னமா" என்று போண்டா குரலை உயர்த்த அந்த பெண் குனிந்து ஒரு செருப்பை கழட்டுகிறார்.

***முற்றும்***

பின் குறிப்பு: இக்கதையில் நீங்கள் படித்த யாவும் கற்பனையே. உயிருடனோ, ஆவியாகவோ, கொள்ளி வாய் பிசாசாகவோ இருக்கும் யாராவது உங்களுக்கு நினைவுக்கு வந்தால் அது உங்களுடைய கற்பனை தானேயன்றி எழுதியவர் உருவாக்கியது அல்ல. :) ;) :P :D

Tuesday, 14 February 2017

எலி வளை


நான் எதையெல்லாம் எவ்வளவு பணம் கொடுத்தாலும் செய்யக்கூடாது என்று முடிவு செய்து 2012 ஏப்ரல் மாதம் பெங்களூரை விட்டு கிளம்பி வந்தேனோ அதையெல்லாம் செய்ய வேண்டிய நிலைமைக்கு காலம் என்னை நகர்த்தி கொண்டு வந்திருக்கிறது.

நான் கல்வி கற்ற கல்லூரிகளும், பல்கலைக்கழகமும், அங்கே சந்தித்த நண்பர்களும், தொடர்ந்து வந்த வாசிப்பும் எனது மனநிலையை சராசரிக்கும் மேலானதாக மாற்றி விட்டது என்று நம்புகிறேன். நீங்கள் தாராளமாக அதிகப்பிரசங்கி என்று சொல்லலாம்.

உங்களுக்கு பிடித்த வேலை என்று ஒன்று இருக்கலாம். அந்த வேலையை செய்து வாழ்வை நகர்த்த அதனுடன் உங்களுக்கு பிடிக்காத ஓராயிரம் வேலைகளை செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகலாம்.

சரி என்று அப்படி ஒரு வேலையை பார்த்துக்கொண்டு, சொந்த ஊரில், வீட்டில் இருந்து கொண்டு இருக்கலாம் என்றால் நாம் வேலை பார்க்கும் இடத்தில் நமக்கு குடுக்கும் சம்பளம் வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு இருக்கும். நாம் வாங்கும் சம்பளத்தை விட அதிகமான தொகையை சென்னை போன்ற நகரில் இருக்கும் நண்பர்கள் வீட்டு வாடகையாக கொடுத்து கொண்டிருப்பார்கள்.  உறவுகள் நம்ம ஊர்ல நீ வாங்குறது அதிகம், சொந்த வீடு, வீட்டுச்சாப்பாடு என்று நம் மனதை தேற்றுவது போல ஒரு பாவனையை நிகழ்த்துவார்கள். இந்த சம்பளத்தை கண்டு பொறாமை படும் நண்பர்களை கண்டால் சிரிப்பு தான் வரும்.

உடன் வேலை பார்ப்பவர்கள் ஏன் பெங்களூரு போன்ற நகரத்தை விட்டு வந்தீர்கள் என்கிற ரீதியில் கேட்பார்கள்.

ஒரு சிறிய ஊரில் பிறந்து, வளர்ந்து, படித்து, வேலைக்காக  மாநகரத்திற்கு இடம் பெயருவது அவ்வளவு எளிதல்ல. 99% பேர் நண்பர்கள் அறையை நம்பி தான் ஊரில் இருந்து வேலை தேடி தினம் பேருந்து, ரயில் என்று ஏறிக்கொண்டிருக்கிறார்கள். அந்த அறையில் நண்பன் மட்டுமல்ல நண்பனின் தம்பி, தம்பியின் நண்பன், அந்த நண்பனின் அண்ணன் என்று ஒருத்தனை வைத்து ஒரு டஜன் பேர் வந்து சேர்ந்திருப்பார்கள்.

வேலை கிடைத்துவிட்டது என்றே வைத்து கொள்வோம். காலையில் குளித்து கிளம்புவதில் இருந்து வரிசை, தண்ணீர் காலியாகி விடுமோ என்ற பதட்டம், பேருந்தில் கூட்டம் சேர்ந்து விடுமோ, சாப்பாடு எங்கே சாப்பிடலாம்?! அப்படியே சாப்பிட்டாலும் அது சாப்பிட்ட மாதிரியே இருக்காது. மதியம் ஆனதும் பசிக்குமே, சாப்பிடும் இடத்தில் குடிக்கும் தண்ணீர் ஆரோக்கியமானது தானா?! என்று சோறு சார்ந்த பிரச்சினைகள் ஆயிரம் முளைக்கும். நீ செஞ்சு பழக வேண்டியது தான?! பசங்க ஆளுக்கு ஒரு வேலைய பார்த்தா நிம்மதியா வீட்டுல செஞ்சு சாப்பிடலாம் என்று ஆள் ஆளுக்கு யோசனை சொல்வார்கள். அவனவன் குளிச்சு கிளம்பவே நேரம் இல்லை இதில எங்க சோறு பொங்குறது?!

மெஸ் என்று பார்த்தாலும் ஒரே வாரத்தில் கசந்து விடும். இந்த சூழ்நிலையில் கல்யாணம் பண்ணிக்கோ என்று master plan போட்டு தருவார்கள். எனக்கு தெரிந்து கல்யாணம் பண்ணவன் எல்லாம் அட்டவணை போட்டு சோறு பொங்குறான், பாத்திரம் விளக்குறான். நாமளும் பழகி வைக்கணும் போல என்று நினைத்து கொள்ள வேண்டியது தான்.

மாநகரத்தில் ஈட்டியத்தில் பாதியை, சில சமயம் அதற்கும் மேலாக வீட்டு வாடகையும், சோற்றுகணக்கும் எடுத்துக்கொள்ள என்னடா வாழ்க்கை என்று ஆகிவிடும். இதில் ஓரு நல்ல நாள் என்றால் ஊருக்கு வர எதிலும் ticket கிடைப்பதில் சிரமம். வருவதற்கு கிடைத்தால் திரும்பி போவதில் சிரமம். இது எல்லாத்தையும் கூட்டி கழித்து சொந்த வீட்டில் இருந்து கிடைக்கிற வேலையை பார்த்துக்கொண்டு சந்தோசமா இருப்போம் என்றால், அரசாங்க வேலை என்னாச்சு என்று வாறவன் போறவன் எல்லாம் கேப்பான்.

நீங்கள் சென்னையிலோ, பெங்களூரு போன்ற ஊரில் வாடகைக்கு குடியிருந்திருக்கிறீர்களா?! எத்தனை மாதத்திற்கு ஒரு முறை அவர்கள் வாடகையை உயர்த்துவார்கள் என்று தெரியுமா?! தண்ணீர், மின்சாரம் என்று தனியாக வசூல் செய்வார்கள், தீடீர் என்று பத்தாயிரம் advance அதிகமாக வேணும் என்பார்கள். நம் சம்பளம் உயரும் வேகத்தை விட அந்த ஊரில் எல்லாம் விரைந்து கொண்டு இருக்கும்.

காய்ச்சல், மண்டையடி என்றால் கூட தீவில் மாட்டியது போல் இருக்கும். விசேச நாளுக்கு ஊருக்கு செல்ல முடியாவிட்டால், உங்களுக்கு சோறு பொங்கி சாப்பிடும் திராணி இல்லா விட்டால் - குறைந்தது இரண்டு நாள் bun, jam என்று வாழத் தெரிய வேண்டும்.

வேலைகள் மாநகரத்தில் குவியும் வண்ணம் செய்தது ஆட்சியாளர்களின் பிழை. சிறிய நகரங்களில் மாநகரத்திற்கு இணையான சம்பளம் இல்லாமல் செய்ததும் இவர்களின் கைவண்ணம் தான். தாராளமயம், உலக மயம் என்று சங்கம் வைத்து செயல்படும் ஆட்களை சோம்பேறி என்று கூறி உழைப்பவனை பாதுகாப்பற்ற ஆளாக மாற்றி விட்டார்கள்.

சென்னை போன்ற ஊருக்கு வருபவர்கள் அந்த ஊரின் மேல் உள்ள காதலாலோ, அன்பாலோ வரவில்லை. பிழைக்க மட்டுமே வருகின்றனர். இது ஒரு மாதிரி விட்டேத்தியான மனநிலையில் கொண்டு விடுகிறது. வேரும் இல்லாமல் விழுதும் இல்லாமல் ஓரு உயிரற்ற வாழ்க்கையை ஏற்று கொண்டு விடுகிறார்கள்.

இங்கே இவ்வளவு தூரம் தத்துவவிசாரம் செய்வது நான் 2017ம் ஆண்டின் முதல் நாள் நான் மீண்டும் வீட்டை விட்டு கிளம்ப வேண்டிய நிலைமை வந்ததால் தான்.

ஒரு சுயநிதி கலைக்கல்லூரியில் கூலிக்கு மாரடித்து கொண்டிருந்த போது கொஞ்சம் பிரபலமான பொறியியல் கல்லூரியில் நியாயமான சம்பளத்தில் வேலை கிடைக்க கலைக்கல்லூரிக்கு ரூபாய் 35052 தண்டமாக கட்டி வெளியே வந்துவிட்டேன்.

அந்த கல்லூரியில் வேலை பார்த்ததற்கு பணம், நேரம், நஷ்டமானது தான் மிச்சம். இத்தனைக்கும் அரசு உதவி பெறும் பிரிவுக்கு பணம் வாங்காமல் தான் நியமனம் செய்வோம் என் பத்தாண்டுகளாக கம்பு சுத்தி கொண்டிருப்பவர்கள் சுயநிதியில் கடலை மிட்டாய் வாங்க கூட வசதியில்லாத மாதிரி சம்பளத்தில் வேலை பார்த்தவனிடம் பணம் புடுங்குவது என்ன மாதிரியான கொள்கைச்செயல்பாடு என்று தெரியவில்லை.

'என்ன சார், பணம் கொஞ்சம் அதிகமாக இருக்கே, ஒரு மாசத்துக்கு அப்டின்னா குடுத்திடலாம்' என்று பேசினால், "அய்யாவை பத்தி எல்லாருக்கும் தெரியும், எல்லாருக்கும் ஓரே மாதிரி தான் வாங்குவோம், நீங்க நல்லா தான் work பண்ணுனீங்க, வேணும்னா Office சூப்பிரண்டு கிட்ட கேளுங்க" என்று இயக்குனர் நம் முகத்தை பார்த்து பேசாமல் டேபிள் மேல் இருக்கும் பேப்பர் வெயிட்டை உருட்டி கொண்டே பேசுவார். ஒரு நொடி கூட நம் கண் பார்வையை சந்திக்க மாட்டார். ஆபீஸில் கேட்டால் இயக்குனர் சொல்றது தாம் என்பார்கள். சரி போங்கடா என்று காசை விட்டெரிய வேண்டியது தான்.

இப்போது புதிய கல்லூரியில் வேலைக்கு சேர்ந்தாயிற்று. இந்தியாவில் கல்லூரிகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை என்று முதல் நாளிலேயே தெரிந்த நிமிடம் 'பணத்திற்காக தானே இந்த வேலையை ஒப்புக்கொண்டோம்' என்று சமாதானம் செய்து கொண்டு வீட்டில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த கல்லூரிக்கு தினம் வந்து போனால் ஒரு வாரத்தில் ICU வில் வைக்க வேண்டிய அளவுக்கு என் உடல் நிலை மோசமாகி விடும் என்று எனக்கே தெரியும். அதனால் கல்லூரியில் உள்ள விடுதி பற்றி தெரிந்து கொள்ளலாம் என்றால் அதே ஊரில் குடியிருக்கும் அருமை நண்பன் "ஹாஸ்டல் தலைவலி மாப்ள, நம்ம வீட்டுக்கு கீழ ஒரு room இருக்கு அத பாரு, பிடிக்காட்டி வேற பாத்துருவோம்" என்று என் வேலையை எளிதாக்கினான்.

அவன் வீட்டில் காலை சப்பாத்தி சாப்பிட்டு விட்டு அறையை சென்று பார்த்தால் அது அப்படி ஒன்றும் சிலாக்கியமாக இல்லை. நான் பெங்களூரில் தங்கியிருந்த அறையை 'hole in a wall' என்று கேலியாக சொல்வேன். இந்த அறை அதை விட சிறிது. எலி வளை என்று சொல்லலாம். அந்த அறைக்கு இரண்டு கதவுகள். ஒன்று வெளியில் இருந்து வீட்டிற்குள் நுழையும் கதவு. இன்னொன்று அறையில் இருந்து வீட்டு முதலாளியின் வீட்டிற்குள் நுழையும் கதவு. ஒரு அறைக்கு ரெண்டு சன்னல் இருக்கலாம் ஆனால் இரண்டு கதவு கூடாது என்று மனதில் நினைத்து கொண்டு வெளியே வந்து விட்டேன்.

வீட்டு முதலாளி உடல் நலக்குறைவால் கை கால் நடுக்கத்துடன் குழறிக்குழறி பேசியபடி இருந்தார். அந்த அறையில் IT கம்பெனியில் வேலை பார்த்தவர் தங்கியிருந்தார் என்ற வரலாறு எனக்கு சொல்லப் பட்டது. 'அதனால அந்த அறை சிறப்பு மிக்கதாக ஆகி விடுமா?!' என்று நினைத்து கொண்டு அந்த அறையில் கிடந்த சாமான்களை நோட்டம் விட்டு விட்டு சத்தியமா இது தேறாது என்று மனதிற்குள் நினைத்து கொண்டேன்.

வேலைக்கு சேர்ந்த இடத்தில் துறை தலைவரிடம் இது குறித்து கேட்டால் "பழக்கடை பாண்டி நிறைய வீடு கட்டி வாடகைக்கு விட்டிருக்காறாம், கேட்டு பாருங்க" என்று பனங்காய் தலையை இடம் வலமாக ஆட்டியபடி பேசி விட்டு சென்றார்.

விடுதி காவலரிடம் பேச்சு குடுத்து அவர் என் சாதி வரை விசாரித்து, 'ஹாஸ்டல்ல இருந்தா 5000 ருவாய்க்கு மேல உங்களுக்கு மிச்சம் தான' என்று இலவச ஆலோசனை சொன்னார். இந்த உலகத்தில் இலவசமன்னு எதுவுமே இல்லை. இதை குடுத்திட்டு வேற வேலை நிச்சியம் வாங்குவாங்க என்று தெரியும்.

இப்ப என்ன?! புத்தகம் படிக்கவோ, சினிமா பார்க்கவோ, துணி துவைக்கவோ, நண்பர்கள் அழைத்தால் போகவோ முடியாது. ஒரு நாளைக்கு 5 மணி நேரத்திற்கும் மேலாக பயண நேரம். இரண்டு வேளை கடைச் சாப்பாடு. வீட்டில் இருந்து வந்துட்டு போனா என்ன?! கொஞ்சம் பைத்தியகரத்தனமாக தோன்றினாலும் நாஞ்சில் நாடனின் 'வீடென்பது ஒரு ஆசுவாசம் அல்லவா' என்ற வரி மனதில் அமர்ந்து விட்டது.

அருவியில் இருந்து நீர் ஆர்ப்பரித்து விழுவது போல மனதிற்குள் இந்த யோசனை வேகமாக விழுந்து கொண்டு இருந்தது. ஒரு வாரம் முயற்சி செய்து பார்த்தால் என்ன என்று ஒரு அசட்டுத்தனமான முடிவொன்றை எடுத்தும் விட்டேன். முதல் வேலை நாள் முடிந்து விரைவாக கல்லூரியை விட்டு பேருந்தை பிடிக்க ஓடிக்கொண்டிருந்தேன்.

யாரிடமாவது lift கேட்போம் என்று ஒருவரிடம் 'என்னை அங்க இறக்கி விட முடியுமா என்று கேட்டேன்' 'வாங்க வாங்க' என்று அவர் என்னை அழைத்து கொண்டார். பின்னால் அமர்ந்து அவரிடம், நான் வேலைக்கு சேர்ந்தது, தங்குவதற்கு இடம் தேடுவது என்று சகலத்தையும் சொன்னேன். அவர் 'அதெல்லாம் நிறைய நல்ல room கிடைக்கும், நான் வேணா காட்டுறேன்' என்று சொன்னார். வண்டியை பாலத்தின் மத்தியில் நிறுத்தி, தூரத்தில் கையை காட்டி, 'அந்த கட்டிடத்துல கேட்டு பாருங்க' என்றார். என்னை அங்கே கூப்பிட்டு போக முடியுமா என்று நான் கேட்க அங்கே அழைத்தும் சென்றார். கதவில் மாட்டப்பட்டிருந்த விளம்பரத்தில் உள்ள எண்ணை பார்த்து வீட்டின் முதலாளியை அழைத்தேன். அவர் ஐந்து நிமிடத்தில் வருவதாக கூறினார். என்னை அழைத்து வந்த அந்த நண்பர் அவருடைய தொடர்பு எண்ணை குடுத்து தெரிஞ்ச ஆள் பக்கத்துல யாரும் சொன்னா தான் தருவேன் அப்டின்னு சொன்னா எனக்கு கூப்பிடுங்க என்று சொல்லி விட்டு சென்றார்.

முதலாளி 65 வயது மதிக்கத்தக்க ஒரு நபர். வெளியே இரண்டு கடைகள், பெரிய கதவிற்கு பின்னால் Qualis வண்டி, ஒரு ஆள் மட்டுமே நடந்து செல்லும் அளவிற்கு இடம் மீதி இருந்தது. வீட்டிற்கு பின்புற கதவு வழியே இரு சக்கர வாகனத்தை கொண்டு வர இடம் இருந்தது. அவர் என்னை உள்ளே அழைத்து சென்றார்.

கிட்டத்தட்ட 1000 ரூபாய்க்கும் மேலாக அங்கே மருந்து கொண்டு வந்து தந்த நபரிடம் அவர் கொடுத்தார். ஒரு மாதத்திற்கு மொத்தமாக வாங்கி வைத்து கொள்வேன் என்றார். இரண்டு நாளுக்கு பின்னர் இவர் மருந்து கையாளும் துறையில் இருந்து ஓய்வு பெற்றவர் என்று எனக்கு தெரிய வரும்.

நான் கடவுள் படத்தில் உருப்படிகளை பாதாளத்தில் அடைத்து வைத்தது போல ஒரு இருட்டான பாதையில் மின் விளக்கை ஏற்றி வெளிச்சமாக்கி கொண்டு மாடிப்படி ஏறி சென்றார். செருப்பை கழட்டி விட சொன்னார். என்ன இந்த ஆள் செருப்பை கழட்ட சொல்றான், இது சரி வராது என்று நினைத்து கொண்டு தொடர்ந்தேன்.

எலிகளை பார்த்து வீடுகளை கட்ட முடியும் என்று அவர் காட்டிய அறைகளை பார்த்தவுடன் மனதில் தோன்றியது. ஒருவர் தாராளமாக இருக்கலாம் என்பது மாதிரியான அறை. இன்னொருவர் வேண்டுமானாலும் தங்கி கொள்ளலாம் எக்ஸ்ட்ரா 300 ரூபாய் குடுத்திருங்க என்றார். ஒவ்வொரு அறைக்கும் தனியாக அதன் எதிரிலே குளியலறை. நீங்கள் சமைக்க வேண்டும் என்றால் என்று ஒரு அறையை காட்டினார். அதற்கும் குளியலரைக்கு பயன்படுத்திய பிளாஸ்டிக் கதவையே பயன்படுத்தியிருந்தார்.

இங்க tea போட்டுக்கலாம், காலைல breakfast கூட பண்ணிக்கலாம் என்று அடுக்கி கொண்டே போனார். உள்ளே gas stove வைக்கும் அளவுக்கு கூட அதன் மேடையின் நீளம் இல்லை. Induction stove வைத்து வெண்ணி வேணா வைக்கலாம் என்று நினைத்து கொண்டேன்.

எப்படி பார்த்தாலும் வேலை பார்க்கிற இடத்துக்கு பக்கத்துல. பல்லை கடிச்சுக்கொண்டு நாலு நாள் தூங்கி எந்திருச்சு வெள்ளி சாயங்காலம் ஊருக்கு ஓடிட வேண்டியது தான் என்று திட்டம் வகுத்து விட்டு ஞாயிறு மாலை வருவதாக சொல்லி விட்டு வந்தேன்.

மறுநாள் மீண்டும் வீட்டிற்கு வெளியே வாழ்வதற்காக என்னை தயார்படுத்திக் கொண்டிருந்தேன். எவ்ளோதான் முயன்றாலும் துக்கம் தொண்டையை இறுக்குவதை உணராமல் இல்லை. போன வாரம் வரை வீட்டில் உதிக்கும் முரண்பாடுகளுக்கெல்லாம் ஒரே தீர்வு வீட்டை விட்டு வெளியே சென்று தங்குவது தான் நினைத்து கொண்டிருந்த நான், அந்த வாய்ப்பு வந்த உடன் அதை தள்ளி போட முடியாதா என்று தான் யோசித்து கொண்டிருந்தேன்.

எனக்கு வேற வேலை கிடைக்கவும் இந்த வீட்டை விட்டு போய்டுவேன். அப்புறம் வரவே மாட்டேன் என்று பல முறை என் அப்பாவிடம் சொல்லி இருக்கிறேன். வெளிநாடு வாய்ப்பு வந்தால் அப்டியே போய் செட்டில் ஆகிடணும். இந்த நாடே வேண்டாம் என்றெல்லாம் கற்பனை செய்திருக்கிறேன்.

இப்பொது வீட்டை விட்டு மீண்டும் ஒரு முறை வெளியே சென்று வாழும் வாய்ப்பு தேடி வந்திருக்கிறது, ஆனால் மனசு அதை ஏற்றுக்கொள்ளாமல் தள்ளி போடுவதிலேயே குறியாக இருக்கிறது.

ஒரு வழியாக வேண்டியவற்றை மூட்டை கட்டி விட்டேன். 5 நாள் tour போற மாதிரி தான். Room காலி பண்ணுனா கைலையே எல்லாத்தையும் எடுத்துட்டு வார மாதிரி இருக்கணும் அப்டிங்கிறது முதல் விதி. தேவைக்கு அதிகமா எதையும் வச்சிருக்க கூடாது. ரெண்டு புத்தகம் போதும். Dictionary phone ல பாத்துக்கலாம்னு 5 நாளுக்கு தேவையான துணி மற்ற பொருட்களுடன் ஞாயிறு மதியம் அப்பாவை அழைத்து கொண்டு வண்டி ஏறி விட்டேன்.

தனியாக சென்று அறையை பேசி தங்கி விடலாம் என்று தான் முதலில் நினைத்தேன். இதை நண்பனிடம் சொன்ன போது. 'அப்பாவை கூட்டிட்டு போடா, எங்க தங்கி இருக்க அப்டின்னு வீட்டுல தெரியணும்ல' என்று சொன்னான். இது ஏன் எனக்கு தோணவில்லை என்று மனதில் ஓடியது. பிறகு அப்படியே செய்தேன்.

பேருந்தில் செல்லும் போது 'Leaving the comforts of home, Once again' என்று whatsapp status வைத்தேன். அந்த வரி சிந்தனையில் ஒட்டிக்கொண்டு கண்ணீரை இறைக்க முயன்று கொண்டு இருந்தது. நான் கட்டு படுத்திக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். அழுது விட்டால் எல்லாம் சரி ஆகி விடும் போல் இருந்தது.

அறை இருந்த இடத்தை அடைந்து முதலாளியிடம் முன்பணம் எல்லாம் குடுத்து அறையை அப்பா தூசி தட்ட ஆரம்பித்து விட்டார். நான் அமைதியாக நின்று கொண்டிருந்தேன். பின்னர் fan ல் இருந்த தூசியை துடைக்கிறேன் என்று கட்டில் மேல் ஒரு stool போட்டு அதை துடைத்தேன்.

இது முடியவும், நானும் வீட்டுக்கு திரும்பி வந்துட்டு நாளைக்கு காலைல college வந்திடுறேன் என்று அப்பாவிடம் சொல்ல, 'அதெல்லாம் வேண்டாம், சும்மா அலைய வேண்டாம், நல்லா தூங்கி எந்திருச்சு வேலைக்கு போ' என்று சொல்லி விட்டார்.

நான் பல்லைக் கடித்துக்கொண்டு துணி துவைக்கும் இடத்தை பார்த்து விட்டு வாறேன் என்று மாடிக்கு சென்றேன். எலி வளைக்கு மேலும் ஒரு வானம் உண்டு.  நாலரை வருடங்களாக வீட்டில் இருந்ததால் இல்லாமல் போய் விட்டதாக நான் நினைத்த சிறகு வானத்தை பார்த்த உடன் உயிர் பெற்று விட்டது. அருகே யானை சரிந்து படுத்திருப்பது போல ஒரு குன்று அமைதியாக மாலை வெயிலில் நனைந்து கொண்டு இருந்தது.